ஏழுகடைக் கதைகள்- ஒன்று
என் வாழ்வின் பிரதானமான ஒரு இடம் என்று இந்த ஏழுகடையை ஏற்கனவே நான் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். இந்த ஏழுகடையையும் என் சிவகங்கை நினைவுகளையும் கூகுல் பஸ்ஸில் விளையாட்டுப் போக்காக 'டைரிக் குறிப்புகள்' எனத் தொடங்கி குறித்து வைத்துக் கொண்டு வருகிறேன். அவற்றைப் பத்திரப் படுத்தும் பொருட்டும், அங்கு வாசிக்காதவர்களுக்கு எனவும் இலையுதிரும் சத்தத்தில் பகிர விரும்புகிறேன். ( சும்மாவே கடையைப் போட்டு வச்சுருக்கான். இப்படி ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு குட்டியைத் தூக்கி ஆட்டிலும் போட்டு வைக்கிறானே' ன்னு நீங்கள் சைலண்ட் டைரிக் குறிப்புலாம் எழுதப்படாது... அழுதுருவேன்)
போக, இலையுதிர்ந்த சத்தம்தானே டைரிக்குறிப்பும்..
##
ஏழுகடையில் நாலாம் நம்பர் கடையில் முத்துராமலிங்கம் ' எலக்ட்ரானிக்ஸ் & இஞ்சினியரிங்ஸ்'ங்கற மாதிரி ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு கடை வச்சுருந்தான். அதை நாங்க 'டி.வி ரிப்பேர் கடை' ன்னு எடுத்துக் கொண்டோம். ( இப்ப அதை வீடியோ கேம்ஸ் கடையா மாத்திட்டான்) திடீர்னு ஒரு நாள் வந்து 'மாமா அந்தப் புள்ள இந்த வாரத்துக்குள்ள வந்து கூட்டிட்டுப் போகலைன்னா செத்துப் போயிருவேன்னு சொல்லுது மாமா' என்றான்.
'எந்தப் புள்ளடா?'
'மீனா மாமா'
'போட்றா ஸ்கெட்ச்ச தூக்குடா வண்டிய' ன்னு மூணு டாக்சியில் கிளம்பிட்டோம். அப்ப மொபைல் போன் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத காலம். மூணு பணக்கார நண்பர்களிடமிருந்து கை மாத்தா வாங்கிக் கொண்டோம். ஒரு வண்டிக்கு ஒரு மொபைல்.
மீனாவ, மதுரை தாண்டி ஒரு கிராமத்தில், சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்தார்கள். காதல்தான் எல்லாத்தையும் கொடஞ்சுருமே அப்படி,' றெக்கையை' (தூதர்) பிடிச்சு ஏற்கெனவே கடிதப் போக்குவரத்துகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் காதலர்கள்.
அதே றெக்கை மூலமாகவே ஸ்கெட்ச்சை அனுப்பினோம். அப்படி, அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அன்று மீனா வரவேண்டியது. நாங்க போய் கொத்திட்டு வந்துற வேண்டியதுன்னு சிம்பிள் ஸ்கெட்ச்சாதான் இருந்தது. சிவகங்கையில் இருந்து கிளம்பும் வரையில். மதுரையை தாண்டியதும் கொஞ்சம் ட்விஸ்ட் வந்தது. இப்படி..'அந்த கிராமத்திற்கு 10 கி.மீ முன்பாக ஒரு வண்டி நிக்க வேண்டியது. 5 கி.மீ முன்பாக ஒரு வண்டி. மூணாவது வண்டி மட்டும் ஊருக்குள்ள போறது. அதில் சூரி அண்ணனும், நானும் கூட ரெண்டு பேரும். அவுட்டர்ல ஒரு பாலம் இருக்கும். அங்க நானும் சூரி அண்ணனும் இறங்கி ஊருக்குள் போக வேண்டியது. காரை திருப்பி நிறுத்தி பேனட்ட தூக்கி விட்டுட்டு வெய்ட் பண்ண வேண்டியது. கோயிலுக்குப் போக ரெண்டு வழிகள் உண்டு. ஒரு வழியில் சூரி அண்ணனும் ஒரு வழியில் நானும். கோயில் வாசல்ல மீனா வெய்ட் பண்ணும். மொபைல், நபர் உபயோகத்திற்கு அல்ல. காருக்கு மட்டும்'.
'ஏண்டா கொஞ்சம் மோட்டாவான ஆளா கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?'
'இல்ல மாமா. நீதான் கரக்ட். அப்பாவி லுக்கு. கல்யாணம் காட்சி, புள்ள குட்டிகள்லாம் வேற பாத்துட்ட' டென்சன் ஒரு பக்கம் என்றாலும் இதையும் ஒரு பக்கம் நடத்துனாய்ங்க. பிளான் படியே நானும் சூரி அண்ணனும் இரண்டு வழிகளில் பிரிந்தோம். 'அண்ணே' ன்னு சூரி அண்ணன ஒரு தடவ கூப்புட தோணுச்சு. 'டேய் நடடான்னு' அதட்டி என்னை நடக்க வச்சுட்டேன்.
கோயிலுக்கு வந்தா வாசல்ல மீனாவக் காணோம். உள்ளகிள்ள இருக்கோன்னு கோயிலுக்குள்ளயும் அலசிட்டு வாசலுக்கு வந்தா வாசல்லையும் இல்ல. இன்னொரு வழியாக வந்த சூரி அண்ணனையும் காணோம். ஒரு பத்து நிமிஷம் போல வெய்ட் பண்ணிப் பார்த்தேன். புறப்பட்டு சூரி அண்ணன் வரவேண்டிய வழியில் நடையைக் கட்டினேன். ரோட்டடைந்தேன். ரோட்லயும் சூரி அண்ணனைக் காணோம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்னுக்கிட்டிருந்த காரையும் காணோம்.
'ஒரு சிகரெட் வாங்கி பத்த வச்சா என்ன?'ன்னு தோணுச்சு. ஒண்ணும் வழி இல்லாம போறப்பல்லாம் டக்கு டக்குன்னு இப்படி ஒரு ஐடியா வரும் எனக்கு. வாங்கி பத்த வச்சுக்கிட்டு இருக்கும் போது அந்தக் கடைக்கு ஒரு ஆளு ஓடி வந்தாம் பாருங்க, 'அண்ணே, அம்பளம் தம்பி மகள கார்ல தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்கண்ணே'
'தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களா..அப்ப நானு?' ன்னு நினைச்ச நொடில எனக்கு வயித்துல பந்து போல ஒண்ணு மிதக்கத் தொடங்குச்சு. 'என்னடா சொல்ற?" என்று பதறிய பெட்டிக் கடைக்காரர் கடைக்கு வெளிய வந்து,' ஏ அம்பலம் தம்பி மகள தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களாம்பா ..ய்ட்டான்களாம்பா..பா..பா' ன்னு எக்கோ விட்டார். விட்ட கையோட சர சரன்னு ஷட்டர இழுத்தார். இருந்த நாலஞ்சு கடைக்காரர்களும் ஷட்டர இழுத்தார்கள்.
'டேய் என்னங்கடா இதுக்குலாம் போயி ஷட்டர இழுக்குறீங்க?...அட அவசரத்துக்கு பிறந்தவன்களா' ன்னு நினைக்கும் போதே வயித்துல மிதந்த பந்து கொஞ்சம் வீங்கி மூத்திரப் பையை நெருக்கியது. ரெண்டும் பக்கத்து பக்கத்துலதாம் போல. 'யேய்..அம்பலத்துக்கு ஆள் விடுங்கப்பா' ன்னு ஒரு ஆள் எக்கோ விட்டாப்ல 'ராசாராமா கைய ஊண்டி கர்ணம் பாயி. இல்லாட்டி செத்தடி' ன்னு அலர்ட் ஆனேன்.
'மதுரை போற வண்டி எங்கப்பு நிக்கும்?' ன்னு ஒரு பெரியவர்ட்ட கேட்டேன். (அவர்தான் அந்த இடத்துலேயே சாந்தமா இருந்தார்) 'இந்த இடத்துலதான் நிக்கும்ப்பு' ன்னாரு. 'இந்த இடத்துலேயே ஒண்ணுக்கும் போலாமாப்பு?' ன்னு கேக்க நினைச்சேன். ஆனா கேக்கல. அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமா ஆளுக ஓடிக்கிட்டு இருந்தாங்க.
'புத்திர் பலம் யசோ தைரியம் நிற் பயத்துவம் அரோகதம் அஜாட்யம் வாக் படுத் வம்ச அனுமத் ஸ்மரநாத் பவேத்' ங்கிற ஆஞ்சநேயர் சுலோகத்த திருப்பித் திருப்பி சொல்ல ஆரம்பிச்சேன். நாலஞ்சு நிமிஷத்துலல்லாம் 'பெரியார் நிலையம்' போர்டு போட்ட பஸ் வந்து நின்னுச்சு. ஸ்லோகத்துக்கும் பெரியாருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு நினைச்சுக்கிட்டே தாவி பஸ்ல ஏறினேன்.
அந்த ஊர் வைகை ஆற்றோரமாக அமைந்த ஊர். (திருவேடகம்) நாலைஞ்சு கிலோமீட்டர் போனதும் பஸ் கண்ணாடி வழியாக பார்த்தேன், ஆற்றுக்குள் சட்டைய கழட்டி தோளில் போட்டுக் கொண்டு ஒரு ஆள் தொங்கு ஓட்டமா ஓடிக்கொண்டிருந்தார்.'எங்கயோ பாத்துருக்கமே இவர?' ன்னு யோசிச்ச செகண்ட்ல மின்னல் வெட்டியது..'அட.. நம்ம சூரி அண்ணே.. நம்ம பொழப்பு பரவால்ல போலயே பஸ்ல போயிட்டிருக்கோம்' ன்னு தோணினாலும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிட்டேன்.
இறங்கி, ஆற்றுக்குள் இறங்கினேன். அஸ் புஸ்ன்னு வந்து சேர்ந்தார் அண்ணே.,'என்னண்ணே ஆச்சு?'
'அட ஏன் கேக்குறீக ராஜா..சின்னப் புள்ளைக காரியம்ங்கிறது சரியாத்தானே இருக்கு. ( சூரி அண்ணன் வக்கீல். அப்ப ம.தி.மு.க. நகரச் செயலாளர். இப்ப தி.மு.க.வில் இருக்கிறார். போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என எங்களை எடுக்க கொடுக்க இருந்தவர். கிட்டத் தட்ட எங்க காட்ஃபாதர். இதெல்லாம் விட ஏழு கடையின் ஒண்ணாம் நம்பர் கடைக்காரர்)
'கோயிலுக்குப் போய்ட்ருக்கேன் எதுத்தாப்ல ஒரு சின்னப் பையன் கையப் பிடிச்சுக்கிட்டு மீனா வந்துட்ருக்கு. முன்னாடி போத்தான்னு சொல்லிட்டு ஒரு 50 அடி விட்டு பின்னாடி வந்துட்ருந்தேன். காருக்கு 20 அடி இருக்கும். பையன் கைய அத்து விட்டுட்டு ஓடிப் போயி கார்ல ஏறிருச்சு. இந்தப் பய ரோட்ல நின்னு அழுறான். பாலத்துல உக்காந்து இருந்த ரெண்டு பேரு எந்திருச்சு பயக்கிட்ட வந்தாய்ங்களா வண்டிய தூக்கிட்டாய்ங்க ராஜா. ஒரு முப்பது நாப்பது அடிதான் இருக்கும் காருக்கும் எனக்கும் .அப்படியே நைசா ஆத்துக்குள்ள எறங்கி ஓட ஆரம்பிச்சிட்டேன்'
'சரி ரோட்டுக்கு ஏறுவோம்ண்ணே இவய்ங்க திரும்பி வந்தாலும் தெரியாது' என்றேன். 'சரி.. சட்டையை கழட்டி தலப்பாவா சுத்துங்க' ன்னாரு. எனக்கு ஒன் பாத்ரூம் கண்டிசன்ல இருந்தது, டூ க்கு மாறிருச்சு. ரோடு ஏறி ரெண்டு மூணு நிமிசத்துலல்லாம் பயலுக வந்துட்டாய்ங்க ரெண்டு வண்டில.
'மீனா எங்கடா?' - சூரி அண்ணன்
'அதக் கொண்டு போயி ரெண்டாவது வண்டில மாத்திவிட்டுட்டு, ரெண்டாவது வண்டி போய் மொத வண்டில மாத்தி விட்டுட்டு, அதுல இருந்த பயலுகளையும், பொருள்களையும் லாவிக்கிட்டு வர்றோம் மாமா'
'நல்லா லாவுனிகடா. மீனா கூட யார்டா போறது?' -சூரி அண்ணன்
'செட்டி போறான். நீயென்ன வாசல்ல மீனா இல்லைன்னா திரும்புவியா கோயிலுக்குள்ள போய் கும்பாபிஷேகம் நடத்திக்கிட்டு இருக்க?'- ன்னு காருக்குள்ள பின்னாடி உக்காந்திருந்த என்னைப் பாத்து கேட்டான் முத்துராமலிங்கம். 'நாம் பரவால்லடி. தொங்கு ஓட்டமா வந்த பெருசு பாடுதான் அந்தரம்'ன்னு காருக்குள்ள சொல்லல. பிறகு சொன்னேன்.
அன்றிரவு மீனாவை மதுரையில் சுந்தர் ( சூரி அண்ணன் மச்சினன்) வீட்டில் தங்க வைத்தோம். சரக்கப் போட்டுட்டு காவலுக்கு இருந்தோம். 'நீ ஏண்டா இன்னைக்கு தண்ணி அடிக்கிற. போய் மீனாட்ட பேசிட்டு இருக்க வேண்டியதுதானே?' ன்னு கேட்டப்போ ரெண்டு கன்னத்தையும் பிடிச்சுக்கிட்டு சொன்னான்,' நாளைல இருந்து பேசத்தானே போறேன் மாமா. நீ பத்ரமா வரணும்ன்னு கண்டுபட்டி காளிக்கு மணி வாங்கி கட்றதா வேண்டுதல் வச்சுருக்கேன் மாமா'
'சரக்கப் போட்டா ஒங்க தொல்ல தாங்க முடியாதுடா'
ஆச்சு. மறுநாள் திருப்புவனத்தில் வைத்து மேரேஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணினோம். இப்ப ரெண்டு குழந்தைகள் முத்துராமலிங்கத்துக்கு. மூத்தவன் ரித்திக். சின்னவன் ராம். ஊடால, என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு மணி வாங்கினான். அதுல ராஜாராம்'ன்னு பேர் எழுதினான். அப்படியே கண்டுப்பட்டி காளி கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் 'கட்டு மாமா' என்றான். பிறகொருநாள், லதாவும் நானும் கண்டுப்பட்டி கோயில் போனப்போ அந்த மணியவும் அதில் எழுதி இருந்த பேரையும் காட்டி இந்தக் கதையையும் சொன்னேன்.
'ஒங்க மணி தப்பிச்சா இந்த மணி வாங்கி கட்றதா வேண்டிக்கிருச்சாக்கும் முத்துராமலிங்கம்' ன்னு லதா சொன்னது வழக்கம் போல கால் மணி நேரம் கழித்தே எனக்குப் புரிந்தது.
Tuesday, September 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
சினிமா படம் மாதிரி இருக்கு!
Nice.
மத்தவங்கள சந்தோசபடுத்தி பாக்கறது எவ்வளவ்வு பெரிய சந்தோசம் மாம்ஸ். எத்தன தடவ படிச்சாலும் மனசு குஷியாயிருது மாம்ஸ்... இன்னும் இன்னும் நிறைய எழுதிகிட்டே இருங்க மாம்ஸ்....
நல்லாயிருக்கு .
சித்தப்பு...
ஒரு படம் பார்ப்பது போன்று காட்சிகளை கண் முன்னே விரித்துச் செல்கிறது உங்கள் எழுத்து நடை.
கண்டுப்பட்டி காளி கோவிலில் அம்மா சொன்னதை படித்த போது வந்த சிரிப்பு பின்னூட்டம் போட்டும் அடங்கவில்லை...
Arumai pa.ra.
சுவாரஸ்யம்... செம...
செம ரென்சன்ல இருந்தேனப்பு கண்ணுல தண்ணி வர சிரிக்க வெச்சுபுட்டீக :)))
வலசைக்கு நன்றிண்ணே :)
"அலோ யாருப்பா அது ராஜாராமா? பேர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கே. ஓ ரொம்ப நாள் முன்னாடி ப்ளாக் எழுதினவரா? இப்ப பஸ் மட்டும் ஓட்டுறார் போல.."
என்ன தாத்தா சார். மேலே உள்ள மாதிரி எங்களை சொல்ல வச்சிடாதீங்க. அடிக்கடி இங்கேயும் எழுதுங்க :))
//பல்பு வாங்கின அனுபவம் மாமாவிடம் நிறைய இருக்கும் போல தெரியுதே!
”நான் மணியச்” சொன்னேன், மாமா.
ஒரு படம் பார்த்த எஃபெக்ட்.. பாட்டு மட்டும்தான் மிஸ்ஸிங்.. சிரிச்சு முடியல..
எதையாச்சும் ஒத்தை வரியை எடுத்துக் காட்டி சபாஷ் போடலாம்னு பார்த்தா மொத்தமுமே வரிசை கட்டி நிக்குது.
பரபரப்பு கடைசி வரை..
எதையாச்சும் ஒத்தை வரியை எடுத்துக் காட்டி சபாஷ் போடலாம்னு பார்த்தா மொத்தமுமே வரிசை கட்டி நிக்குது.
பரபரப்பு கடைசி வரை..
நல்லாத்தான் இருக்கு
ரசித்தேன் பாரா.
i repeat rishaban. paa. raa. rocks
nanbenda...!
:)
Super . . Super
ஆஞ்சநேயரை வேண்டப் பெரியார் வந்த காட்சி; பெரியவுக சின்னதுக வேக வித்தியாசம் - சிரிச்சு முடியலை!
உங்க சரித்திரத்துல இருந்துதானா பொண்ணெத் தூக்குறது புள்ளெயெத் தூக்குறது எல்லாம் தமிழு, தெலுங்குப் படங்கள்ல வருது?
பாரா. முதல் கமன்ட் படிக்காமலே போட்டுட்டு போய்ட்டேன். இப்போ தான் பதிவை படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். நீர் பெரிய எழுத்தாளரா ஆகியே தீரனும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். இதே காமெடி ஸ்டைலில் நிறைய எழுதும் ஓய்.. சுஜாதா போன பிறகு அந்த சீட் காலியா தான் இருக்கு Come on!!
விறு விறு சுறு சுறு பதிவு! காமெடி சூப்பர்!
Post a Comment