Tuesday, August 31, 2010

ரெண்டுங்கெட்ட கவிதைகள்

ஒன்று


(Picture by cc licence, Thanks Christian Haugen)

வளும் இவளும் வழியில்
அவனும் இவனும் எதிரில்.

டந்த பிறகு,
அவள் சொல்வாள் இவளிடம்
மெதுவா திரும்பிப் பாரேன்
திரும்பிப் பார்ப்பான் பாரு.

வன் கேட்பான் இவனிடம்
டக்குன்னு திரும்பிப்பார் மாப்ள
பார்க்கிறாளான்னு?

க,

வளும் அவனும் பார்க்கவில்லை
இவனும் இவளும் பார்க்கிறார்கள்

னி,

வர்களுக்காக அவர்கள்
திரும்பித் தொலைப்பார்கள்.

***

இரண்டு



(Picture by cc licence, Thanks Abhisek Sarda)

முப்பிரி சனலை மூட்டி
ரயில் வண்டி ஓட்டிய அனுபவம்
தந்ததோ என்னவோ
ரயில் டிரைவர் ஆசையை.

பை நிறைய முருக்கு அதிரசம்
வாங்கி வருகிற D.முருகன் அப்பாவை
பார்த்த பிறகு ரோடு ரோலர் ஓட்டுனராக
பிரியம் கொண்டிருந்தேன்.

மெய்யரக்கா மகன் பழனி மாதிரி
பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்
என்ற நினைவிற்கு ராமலிங்க வாத்தியாரின்
புளியங்குச்சிதான் காரணமானது.

முப்பிரி சனல்
முருக்கு அதிரசம்
புளியங்குச்சி மாதிரியே
மஞ்சள் பத்திரிக்கையும்
காரணமாச்சு ஒரு நாள்,

லேடீஸ் டைலராக
விரும்பிய கனவிற்கு.

***


Monday, August 30, 2010

பா. ராஜாராம் கவிதைகள் - ஏழு

ஒன்று



(Picture by cc licence, Thanks Horia Varlan )

கேள்விக் குறியும்
ஆச்சரியக் குறியும்
கோட்டோவியமே.
சற்று
கூன் மட்டும் கூடுதல்
கேள்விக் குறியிடம்.

இரண்டு


(Picture by cc licence, Thanks Silent shot)

திருமண கொட்டகையில்
கொட்டுகிறது மழை
மேலாக.

கீழாக
கலர் கலராய்
சொட்டுகிறது.

மூன்று


(Picture by cc licence, Thanks Hunter Jumper)

லையில்
அடித்துக் கொண்டிருந்தது
மரத்தை வெயில்.
தாங்கிக் கொண்டிருந்தது
நிழல்.

நான்கு


(Picture by cc licence, Thanks Mrs. Gemstone)

புழுவை கொத்தியது கொக்கி.
தன் பங்கிற்கு
மீனையும் கொத்தியது புழு.

ஐந்து


(Picture by cc licence, Thanks Runran)

பித்தின் நிகழ் வாசலில்
வெட்டப் படுகிறது எப்போதும்
ஆட்டுக் குட்டியைப் போன்றே
காதலும்.

ஆறு


(Picture by cc licence, Thanks Mary Jane watson )

ண்ணெய் தேய்த்து
குளித்த பிறகு தூங்கும்
சனிக் கிழமையை

பொன் கிடைத்தாலும்
கிடைக்காத புதன் கிழமையை

னங்கிழங்கு கிடைக்கும்
திங்கள் சந்தையை

ண்புழு தடமூறிய
மழை நாளை

பிழைக்க வரும் போதே
தொலைத்தும் வர வேண்டியதாகிறது.

***
-----------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் - 1, 2, 3, 4, 5, 6
------------------------------------------------


Sunday, August 29, 2010

புரை ஏறும் மனிதர்கள் - பத்து

அப்பாவை தத்தெடுத்த மகன்கள்

கமலேஷ் மற்றும் ஸ்ரீதர்தான் அந்த மகன்கள். அந்த அப்பா அடியேன்தான்.

இதுதான் நிகழும் என அருதியிடாத தருணங்கள்தான் எவ்வளவு அற்புதமானவை! அப்படி, எவ்வளவு அற்புதங்கள் வலை உலகம் வந்த பிறகு. d.r. அசோக் என நினைவு, முதன் முதலாக சித்தப்பு என்று அழைத்தது. அப்புறம் பூராம் வரிசையாக அண்ணா, அண்ணே, மாம்ஸ், சித்தப்பூஸ்தான். ஏன், சாரும் கூட உண்டு. விளக்கமாருக்கு பட்டுக் குஞ்சம் போல.

வீட்டில் மின்சாரம் போய்விடும். விளக்கு பொருத்தவென தீக்குச்சி உரசுகிற மனுஷி / மகளின் முகத்தை புதிதாக பார்ப்பது உண்டு. "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என்று மிதக்க எது காரணமாகிறது? இருளா? குறைந்த ஒளியா? இரண்டுமேவா?

ஊரில், காலத்தை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரிந்தவனை, சவுதியில் கொண்டு வந்து அடைத்தது வயிறுகள் சார்ந்த வாழ்வு. மின்சாரம் போனது போலான இருள். "அட, நம்ம பக்கிகள்தானா இது?" என அவ்வப்போது தீக்குச்சி உரசி முகம் காட்டுகிறார்கள் கருவேல நிழல் பெற்ற மக்கள்..

அண்ணா, அண்ணே, சித்தப்பு, மாம்ஸ், தோழர், சார், எல்லாம் கூட சரிதான். அப்பா என்பவன் எங்கிருந்து குதிக்கிறான் இதற்குள்? இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய் என்னையும் பெற்ற என் கருவேல நிழலே?

சரி. கமலேஷ் ஸ்ரீதரை பார்ப்போம்.

ஓரிரு மெயில் செய்து, அழை எண் பெற்று, முதல் விளிப்பிலேயே அப்பா என்றான் கமலேஷ். குலுங்கினேன். 29 வயதுக்காரனான ஒருவன் 45 வயதுக் காரனான ஒருவனை அப்பா என்கிறான். வயசெல்லாம் zoom out ஆகி பச்சை வாசனையுடன் மகனே என மனசில் ஏந்துகிறான் அப்பன் காரனும்.

போக, மனசும் அடி வயிறும் சுண்டியது. பிரசவ காலங்களில் சுண்டுமாமே பெண்களுக்கு. அப்படி. இன்பத்தில் சுரந்தால்தான் என்ன? கண்களில் சுரந்துவிட்டால் அதன் பெயர் கண்ணீர்தானே எப்பவும்.

சந்திப்பதாக பேசிக் கொண்டோம். பேசிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்திருப்போம் போல. எல்லாம் வேகு வேகுன்னு கூடி வந்தது. எனக்கும் கமலேஷிற்குமான தூரம் சற்றேறக்குறைய 200 கிலோ மீட்டர்கள். றெக்கையடிப்பிற்குள் மடங்குமா கிலோ மீட்டர்கள்? கண் மூடி திறப்பதற்குள் எதிரில் நின்றார்கள் கமலேஷும் ஸ்ரீதரும். இங்கு யார் ஸ்ரீதர் என வருகிறது இல்லையா? எனக்கும் அதேதான்.

"அப்பா, கிளம்பிட்டோம்" என்று கமலேஷ் அழைத்த போதுதான், கூட ஒருவர் வருகிறார் போல என தட்டியது. "சரி..வாங்கடா" என்ற என்னால் வழி சொல்லத் தெரியல. இந்த ஒன்பது வருடமாக எனக்கு என் முதலாளி அரண்மனை தெரியும். சம்பளம் அன்று அல்ராஜி பேங்க் தெரியும். மதினா ஹோட்டல் தெரியும். தோசை தெரியும். மீண்டும் அரண்மனை வரத் தெரியும். குதிரை வண்டியில் பொருந்திய, குதிரையின் கண்களில் பொருத்திய, தகரத்தின் பெயர் குடும்பம் எனலாம், இங்கு. கழுதையாக கூட பிறந்து தொலைத்திருக்கலாம்தான். பொதி சுமந்தாலும் பார்வையை மறைக்காத கழுதையாக. சரி, பிறப்பென்ன நம் கையிலா இருக்கிறது? அறை நண்பர் குமார் சேட்டா உதவினார் அவர்களுக்கு.

ஆச்சா? எதிரில் நின்றார்களா?

டோசரி டவர் வாசலில் சிரித்துக் கொண்டே எனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இருவர். இந்த இருவரில் யார் கமலேஷ்? தடக், தடக் தடக்,தடக்... தடக்,தடக்...தடக்,தடக்,. பறவையாக இருந்து, குதிரைக்கு மாறி, கழுதையாகி விரும்பி, புகை வண்டியாகவும் மாறிக் கொண்டிருந்தேன்.

தோராயமாக "கமலேஷ்" என கை பற்றினேன் ஸ்ரீதரை.

"நான் ஸ்ரீதர்ப்பா. இது கமலேஷ்" என்றான் ஸ்ரீதர். இருவரிடமும் அப்படி ஒரு ரகசிய சிரிப்பு. அதுசரி! ஸ்ரீதருக்கும் அப்பாவா? மீண்டுமொருமுறை சுண்டி அடங்கியது அடிவயிறு. என்னங்கடா நினைச்சுக் கிட்டு இருக்கீங்க பயல்களா?

எனக்கும் கமலேஷிற்கும் என்னவோ இருக்கு. ஸ்ரீதர்க்கும் எனக்கும் என்ன? ஏன் இந்த ராஸ்க்களும் அப்பா என்கிறான்? அறை நண்பனான கமேலேஷை நண்பனுக்கும் மேலாக வைத்திருப்பான் போல ஸ்ரீதர். அவன் இவனாகவும், இவன் அவனாகவும் மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பங்கிற்கும்.

பேசிக் கொண்டே ஸ்ரீதர் காரில் ஏறி ஆலமரம் வந்தோம். "கோடிப் பழங்களில் எதை வேணுமானாலும் கொத்திக் கோயேன் பறவை" என்கிற ஆலமரம். அல்லது கோல்டன் ஜூஸ் கார்னர்.

என்னென்னவோ பேசி தீர்த்துக் கொண்டிருந்தோம் மக்கா.

ரொம்ப நேரமாக தூக்கி வைத்திருந்த இந்த அப்பா பாரத்தை இளக்க விரும்பி, பேச்சின் ஊடாகவே, சிகரெட் பாக்கெட்டை இருவரிடமும் நீட்டினேன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள்.

" நீ அப்பாட்ட பேசிட்டே இரு. தம் அடிக்கனும்ன்னு தோணுறப்போ, ந்தா வர்றேன்ப்பான்னு போவேன். நா வந்த பிறகு நீ போய்ட்டு வான்னு சொல்லி வச்சிருந்தான்ப்பா கமலேஷ். நீங்க சிகரெட் பாக்கெட்டை நீட்டுறீங்க" என்று வெடித்து சிரித்தான் ஸ்ரீதர். "இருக்குப்பா" என்றான். பற்ற வைத்துக் கொண்டோம். விரும்பியது போலவே அப்பா பாரமும் இளக தொடங்கியது.

மகன்களை பார்த்த குஷியில் மகளையும் தேட வேண்டிய தேவை வந்தது எனக்கு. அத்தேவையை ஏற்படுத்தினார்கள் இம்மகன்கள். "என்னடா வாங்கிட்டு போறது அப்பாவுக்குன்னு கேட்டுகிட்டே வந்தான்ப்பா கமலேஷ். அப்பாட்டயே கேட்டு வாங்கிக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்" என்றான் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில்.

"ஐயோ. இதுவே தாங்க முடியாமல் வருகிறது. இவ்வளவு செலவு செய்து பார்க்கணுமுன்னு வர்றீங்களே. இது போதாதா?" என்றாலும் விடவில்லை.

"என்னப்பா இது. தங்கச்சிக்கு கல்யாணம் வருதுல்ல. அண்ணன்களா நாங்க எதுனா செய்ய வேணாமா. எங்க தங்கச்சிப்பா. உங்கட்ட என்ன கேக்குறது. நீ ஏண்டா இவர்ட்ட போய் இதை சொல்ற" என்றான் கமலேஷ்.

சரி. தங்கச்சிட்டியே கேட்கலாமேன்னு மகாவை அழைத்தேன். ரிங் போய் எடுக்கும் போது கட்டாச்சு. அவள் மொபைல் அப்படி. பேட்டரிக்கு மூட் இருந்தால் மட்டுமே பேச அனுமதிக்கும். சிரித்து, இவன்களிடம் விபரம் சொல்லி, சார்ஜரில் போட்டுட்டு மிஸ்கால் பண்ணுவாள்" என்றேன்.

சற்று நேரத்தில் மகா மிஸ் கால் செய்தாள். மகன்களை அறிமுகம் செய்து போனை இவன்களிடமும் கொடுத்தேன். அடேங்கப்பா! தங்கச்சியை கொண்டாட தொடங்கி விட்டார்கள் இருவரும். பேசி, பேசி கரைத்து பார்த்திருப்பான்ங்க போல. அவளும் கரையல போல. "தங்கச்சி உங்கட்ட பேசணுமாம்ப்பா" என்று போனை என்னிடம் கொடுத்தார்கள்.

"என்னப்பா என்னை மாட்டி விட்டுட்டீங்க?" என்றாள். சிரித்து, "என்ன செய்ய சொல்ற? என்றேன் அவளிடம். அதேதான் உங்களிடமும் கேட்கிறேன், "என்ன செய்ய சொல்றீங்க மக்கா?"

என்னை அறையில் விடுவதாக கூட்டிட்டு போய், LULU மார்க்கட்டில் e-63 மொபைல் வாங்கினார்கள். 740 ரியால் என்ற நினைவு. சற்றேறக்குறைய பத்தாயிரம் ரூபாய் நம் காசிற்கு. "சிம்ப்ளா பாருங்கடா" என்றாலும் கேட்கல. தோளுக்கு வளர்ந்து விட்டால் நம் பேச்சையா கேட்கிரான்கள் மகன்கள்? கூடவே சிகரெட் வேறு குடிக்கிற மகன்கள்.

அறை வந்து மகளை அழைத்து, " சூப்பர் மொபைல்டா. என் சிம்மை கழட்டி அதில் போட்டிருக்கான்கள். உனக்கு கத்து தரனும்ல. அதுனால பழகிட்டு இருக்கேன்" என்றேன்.

"அதுலாம் நான் கத்துக்குவேன்ப்பா. நீங்க சிம்ம கழட்டி உங்க மொபைல்ல போட்டுக்குங்க. அண்ணன்கள் வாங்கி தந்ததாக்கும்" என்றாள்.

"சர்தான் தாயி" என்றேன். சிரித்தாள்.

இந்த மகன்களையும், மகள்களையும் தோளுக்கு வளர விடாமல் செய்டா கடவுள்.

***

இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவர் வாய்ப்பிற்கு மிகுந்த நன்றி தமிழ்மணம்!


புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9


Thursday, August 26, 2010

அழகு


(Picture by cc licence, Thanks Mary Jane watson )

சாண வரட்டி
தட்டிக் கொண்டிருந்தாள்
சகுந்தலா சித்தி.

வீட்ல அடையாக்கும் என
விசாரித்தபடி போய்க் கொண்டிருந்தார்
பெருமாள் சித்தப்பா.

மா, சாப்பிட வந்துருங்க கொழுந்தனாரே
என சிரித்த சகுந்தலா சித்தி
அவ்வளவு அழகு.

தைவிட அழகு,
அத்தருணத்தில் மணிக்கட்டினால்
சித்தி முடி ஒதுக்கியது.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Thursday, August 12, 2010

வழுக்கி விழும் வீடு


(Picture by cc licence, Thanks Brad & Ying)

சிகரெட் பிடிக்கிற காசிற்கு
வாழைப் பழம் வாங்கி தின்னேண்டா
என்பாள் அம்மா.

சிகரெட் குடிச்ச காசை
சேர்த்து வைத்திருந்தால்
வீடு கட்டியிருக்கலாம்
என்கிறாள் மனைவி.

கொல்லையில்,
வாழை மரங்கள் வைத்த
வீடொன்றை நினைக்க
நல்லாத்தான் இருக்கிறது...

புகைக்கிற போதெல்லாம்.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Saturday, August 7, 2010

பதிவுலகம் - இப்படிக்கு நான்

நண்பர் ஸ்டார்ஜன் அழைத்த தொடர் பதிவு இது. நன்றி ஸ்டார்ஜன்!

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பா. ராஜாராம்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பா. ராஜாராம், பெயர்.

பா.ரா:- "ஒரு போட்டோ அனுப்புங்க, ப்ளாக்ல போட" என்று தம்பியின் நண்பர் மெயில் செய்த போது, வேண்டாம் என்றேன். பிறகு இந்த பா.ரா. லோகோ அனுப்பி, பிடிச்சிருக்கா? என்றார். பிடிச்சிருந்தது. அப்படி பாராவும் வந்தது. நண்பர்களும் அழைக்கத் தொடங்கினர்.

பிறகொருநாள், கூகுல் தேடலில், இன்னொரு பாரா என்றொரு தேடல் பார்த்தேன். க்ளிக் பண்ணி பார்த்த போது, அந்த இன்னொரு பாரா thaan நான் என அறிந்தேன். முன்பே எழுத்தாளர் பா. ராகவனை பாரா என்றழைக்கிற விபரம் அன்றுதான் தெரிய வந்தது. சற்று வருத்தமாக இருந்தது. சரி, நம்ம எழுத்தாளர் இல்லைதானே, ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போவோம் என என்னை சமாதானம் செய்து கொண்டேன். கொள்கிறேன். இப்பல்லாம், மகளுக்கு அழை பேசும் போது, "என்ன பாரா, போனையே காணோம் என்கிறாள்?" சந்தோசமாகத்தான் இருக்கிறது. பெயர் சொல்லத்தானே பிள்ளைகள்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தம்பியும், நண்பரும் தொடங்கித் தந்தார்கள். எழுதுவதை ஆவணப் படுத்துவதே என் முயற்சி, ஆசை. எதிர்பாரா விதமாக உறவுகள் / நண்பர்கள் சம்பாதித்தது, அதிர்ஷ்ட்டம், சொல்லொண்ணா மகிழ்ச்சி.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் எப்பவும் இலக்கில்லை. வாழ்க்கையிலேயே இலக்கில்லாமல் பயணிக்க ரொம்ப பிடிக்கும். அப்படியான ஒரு பயணமாகத்தான் இதுவும். வணக்கத்திற்கு, பதில் வணக்கம் போல், பின்னூட்டங்களுக்கு( நேரம் இருக்கிற போது) பதில். பிடித்த பதிவென்றால் யோசிக்காமல் பின்னூட்டம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய! ஏன் என்றால் பிடிச்சிருக்கு. பிடிச்சதை செய்ய என்ன பெரிய தயக்கம்? விளைவு என்னன்னா, என்னன்னு சொல்றது மக்கா? சந்தோசமா, விடுதலையாய் இருக்கு. வீட்ல கோபம்னா, சகோதரிகள் / நண்பர்கள் வீட்ல போய் சாப்பிடுவேன். வீட்ல பிரச்சினைடா என்பேன். "போடா லூசு பக்கி" என சாப்பாடும் போட்டு வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். முழுக்க, என் சுயநலம் கருதியே பகிர்கிறேன். விடுதலை என்கிற சுயநலம்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

விரும்பியே எழுதுகிறேன். பொழுதும் போகிறது. எழுதியெல்லாம் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்ற அளவிலேயே என் எழுத்தை புரிந்து வைத்திருக்கிறேன். அதற்காக, சம்பாதிக்க இயலும் எனில், வேண்டாம் என்பவனும் இல்லை. உதாரணத்திற்கு, விகடனில் கவிதை பிரசுரமாகிற போது ஒரு விகடனும் பரிசுத் தொகையும் அனுப்புகிறார்கள். விகடன் மட்டும் போதும் என்றால், மனைவி பிடரியில் அடிப்பாள். 'என்னவோல்ல இவன்ட்டையும் இருந்திருக்கு' என்று மனைவின் பிடரியில் அடிக்க பரிசுத் தொகை உதவியாக இருக்கிறது.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்- ஏற்பட்டது உண்டு. பின்னூட்டத்தில் இறக்கி வைத்து விடுவதும் உண்டு. தூக்கிக் கொண்டு அலைய கோபம் என்ன குழந்தையா?

பொறாமை - "என்னய்யா இந்த போடு போடுகிறார்கள்?" என்ற நினைப்பிற்கு பெயர் பொறாமை எனில், நிறைய உண்டு. கவிதைகளில், பெயர்கள் குறிப்பிட்டால் பத்தி பெரிசாகும். சிறுகதையில், மாதவராஜ், காமராஜ், அமித்தம்மா, விதூஸ், ஆடுமாடு, மணிஜி, செ. சரவணக்குமார் என்று சொல்லலாம். நகைச்சுவை பத்தி எழுத்துகளில், அனுஜன்யா, ஜெகநாதன், ஆதி, வித்யா(scribblings), நர்சிம், நசரேயன், கார்க்கி, என்று உடன் நினைவு வருகிறார்கள். இன்னும் கூட நிறைய! பெயரை பார்த்ததும் போய் வாசிக்கிறது உண்டு. வாசிக்கிற பட்டியலுக்கு போய் மூளையை இவ்வளவு சுரண்டனுமான்னு வருது. ஏற்கனவே, கரண்டி பாத்திரத்தை சுரண்டும் சத்தம்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

பின்னூட்டத்தில், கோ.வி. கண்ணன் சார்.

அழை பேசியில், ஜ்யோவ்ராம் சுந்தர். அது, "இந்தப்" பதிவில்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

விருப்பம் என்று வற்புறுத்தி கேட்பதால், அக்டோபரில் மகளின் திருமணம். மகளின் திருமணத்திற்காகவே என் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறேன்.

அழைக்க விரும்புவர்கள்:

1. நர்சிம்

2. d.r. அசோக்

3. கமலேஷ்

4. வேல்கண்ணன்

5. ரவிச்சந்திரன் & Mrs.கீதா ரவிச்சந்திரன்

(இதில் யார் யார் எழுதியது என தெரியவில்லை. எழுதாதவர்கள் எழுதுங்களேன் மக்களே)

***

Tuesday, August 3, 2010

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்பது

சார் என்ற அண்ணன் ராஜசுந்தரராஜன்

காளீஸ்வரன் வாத்தியாரை பார்க்கிற போதெல்லாம், பயல்கள் ஆன நாங்கள், தொப் தொப் என சைக்கிளில் இருந்து குதிப்போம். வணக்கம் வைப்போம். "விழுந்து வச்சுராதடா முண்ட" என்பார் சாரும்.

வாத்தியார் வாயில் இருந்து புறப்படுகிற இந்த முண்ட எவ்வளவு வசீகரமாக இருக்கும் தெரியுமா?

ஏனெனில், சார் வாத்தியாராக இருந்ததில்லை. சிவகங்கையாக இருந்தார். ப்ரியங்களில் நிறைந்த என் சிவகங்கையாக.

சிவகங்கை மக்களின் பிரதானமான வார்த்தை இந்த முண்ட. அம்மா அப்பா தொட்டு அனேகமாக அனைவர் வாயிலும் நிறைந்து தவழும் வார்த்தை. அன்பானாலும், கோபமானாலும், குஷியானாலும்.

"வாத்தியார்னா, வாத்தியார் மாதிரியா இருக்கணும்?" என்றிருப்பவர் காளீஸ்வரன் சார்.

நடந்து போய்க் கொண்டிருப்போம். சாரை பார்த்துருவோம். அனிச்சையாக சட்டையின் மேல் பட்டனை மூட்டும் கைகள். வணக்கம் வைக்கிற சந்தோசத்தில் மறந்தும் போயிருவோம்.

"அப்பா நல்லாருக்காராடா ராஜாராமா?" என்று நம்மிடம் பேசிக் கொண்டே நம் சட்டையின் மேல் பட்டனை பொருத்திக் கொண்டிருப்பார் காளீஸ்வரன் சார்.

திருமணமாகி, tvs-50 -யில் மகாவை முன்னிருக்கையில் அமர்த்தி, லதாவை பின்னிருக்கையில் அமர்த்தி, போய்க் கொண்டிருந்த காலத்திலும் கூட,

சாரை பார்த்ததும், "சார்" என்று சடன் பிரேக் போட்டு நின்று பேசிய நாளில், "என்னடா, வண்டிலாம் வாங்கிட்ட போல, கெட்ட பயமா இவன், பத்திரமா பார்த்துக்க" என்று லதாவிடம் பேசிக் கொண்டே, என் மேல் சட்டை பட்டனையும் மாட்டிக் கொண்டிருந்தார். மகா, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுக்குன்னே தெரியாமல், எல்லாமே இருப்பது போல், ஏதாவது இருந்து கொண்டிருக்கும், யாரிடமாவது. இல்லையா?

அப்படி,

முன்பே, மனசில் எவ்வளவோ இருந்த ஒருவரை, நர்சிம் தளத்தில் கண்டேன். எல்லோரும் கவிஞர் ராஜசுந்தரராஜன் என்றாலும் அண்ணே என்பதில் நிறைகிறேன். முண்ட மட்டும் தெரிஞ்சவனுக்கு அவ்வளவுதான் தெரியும்.

சுந்தரிடம் விசாரித்து, சிவராமனிடம் அழை எண் பெற்று, சுந்தர் அனுப்பி, அழைத்த போது அண்ணன் திரை அரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

" அதெல்லாம் இல்ல தம்பி உங்களை விடவா படம் பெரிசு எனக்கு?" என்ற குரல்,

நீண்டு
நீண்டு நீண்டு
நீநீநீண்டு
என் சட்டையின்
மேல் பட்டனை மாட்டியது.

பிறகு அண்ணனின் பின்னூட்டம் எங்கு பார்த்தாலும் சைக்கிளில் இருந்து தொப்பென குதிக்கிறேன். வணக்கம் வைக்கிறேன்.

மனைவி குழந்தையுடன் போய்க் கொண்டிருந்த நாள் ஒன்றில் பார்க்க கிடைத்த ப்ரிய வாத்தியார் மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது நேசன் தளத்தில்.

பதிவர் தமிழ்நதி, ராஜசுந்தரராஜனும், ராஜாராமும் ஒருவர்தானா? என்கிற கேள்வியை வைத்தார்கள் "பின்னூட்டத்தில்" அதற்கு அண்ணனின் பதில் என்ன தெரியுமா?

"பா.ராஜாராம், ராஜசுந்தரராஜன் ஒருவர் அல்லர். அண்ணன் தம்பிகள். பா.ரா. சிவகங்கையில் பிறந்தார். அல்லது பிழைத்தார். அல்லது இரண்டும். ராஜசுந்தரராஜன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் puc படித்தார். அவ்வளவு நெருக்கம்"

கேட்கவா வேணும்?...புர்ர்ர்ர் என்று பின்னூட்டத்தில் சந்தோசமாய் நெட்டி முறித்தேன்.

"முண்ட, முண்ட.. பட்டன போடு" என்றது அண்ணனின் பதில் குரல். சாரி, சாரி,..அண்ணன் சாரின் குரல். அது இது.

அன்புத் தம்பி,

யார் யாரோ விளையாட்டு வீரர்கள் பேரெல்லாம் சொல்லி அவங்க செட்டான்னு கேட்டிருக்கீங்க. நான் என்னத்தை விளையாட்டைக் கண்டேன். ஒரு பொண்ணெத் தினம்தினம் பஸ்ஸ்டாண்டு வரை கொண்டுபோயி மேலூர் பஸ்ல ஏத்தி அனுப்ச்சிட்டு வருவேன். ஒருதலை. அவ மேலூர்ல இருந்து வந்துபோய்க்கிட்டு இருந்தா. வகுப்புத் தோழிதான். அவ பிறகு டாக்டருக்குப் படிக்கப் போயிட்டான்னு கேள்வி. நான் ஃபெயிலாயிட்டேன். பாஸாகி இருந்தா நானும் டாக்டர் ஆகி இருப்பேன். லாங்வேஜ் ரெண்டுலயும் கூட A+. மற்ற பாடங்கள்ல எல்லாம் D, D+ தான். கெமிஸ்ட்ரில மாத்ரம் F.

விஸ்வநாதன்னு ஒரு கெமிஸ்ட்ரி லெக்சரர் இருந்தாரு. நல்லாத்தான் நடத்துவாரு, ஆனா அடிக்கடி ஜோக்கு அடிப்பாரு. நான் சிரிச்சுக்கிட்டே மிதந்திட்டேன்.

அண்ணன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ். படிச்சிக்கிட்டு இருந்தாரு. பள்ளிக்கூடத்துல அவரு கூடப் படிச்சவரு, 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி' ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தாரு. இவரு அவர்ட்டச் சொல்லி அவரு கையில இருந்த ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வச்சாரு. அப்படித்தான் கெமிக்கல் டெக்னாலஜியில டிப்ளமாப் படிச்சேன். ஸ்பிக்ல வேலை கிடைச்சது. அங்கெ போனதுக்கு அப்புறமா எஞ்ஜினியர் ஆனேன். கெமிஸ்ட்ரியில ஃபெயிலாப் போனவன் கெமிக்கல் எஞ்ஜினியர் ஆன கதை இது.

சரி, நம்ம காலேஜுக்கு வருவோம். நான் PUC படிச்ச வருஷம் கண்ணப்பன் (பின்னர் சுகன்யா புகழ்) BA இரண்டாம் ஆண்டோ மூன்றாம் ஆண்டோ படிச்சிக்கிட்டிருந்தாரு. அந்த வருஷம் அவரு காலேஜ் எலெக்ஷன்ல செக்கரட்ரிக்கு நின்னு தோத்துப் போனாரு. அவரும் பிறகு என்னெ மாதிரியே தோத்த பாடத்துல ஜெயிச்சு மந்திரி வரைக்கும் ஆனார்ங்கிறதுனால அவரெ மறக்காம இருக்கேன்.

அந்த வருஷக் கடைசியில கவிஞர் மீரா என்னெக் கூப்பிட்டு விட்டிருந்தாரு. அவர் அப்பப் ப்ரின்ஸ்பல் ஆகலை. தமிழ்த்துறைத் தலைவரா இருந்தாரு. நமக்குத்தான் அவரு வகுப்பு எடுக்குறதில்லையே என்னத்துக்குக் கூப்பிட்டு விட்டிருக்காருன்னு குழம்பிப் போயி, மாடியில இருந்த அவர் அறைக்குப் போனேன். நல்லா ஞாபகம் இருக்கு. அது வசந்தகாலம். அவர் அறைச் சன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரம் கொழுந்துவிட்டு, இந்தா தொட்டுத் தடவுன்னு சன்னலுக்குள்ள எட்டிப் பார்த்திச்சு. என்னெ உட்காரச் சொன்ன மீரா, 'தாமரை' பத்திரிக்கை நடுபக்கத்தைப் பிரிச்சு, "இது என் முதல் வசன கவிதை. எப்படி வந்திருக்கு?"ன்னு கேட்டார். 'நான் ஒரு மலைப்பாதை போகிறேன். கல் கிடக்கிறது. முள் கிடக்கிறது. இடறினாலும் தைத்தாலும் பொருட்டில்லை. நான் மலைப்பாதை போகிறேன்.' இப்படி இதுமாதிரியே அடுக்கடுக்கா இடைஞ்சலும் அதைப் பொருட்படுதாமையுமா அந்தக் கவிதை இருந்திச்சு. நானும் அதையே, "இடைஞ்சல்களைப் பொருட்படுத்தாமை ஒரு கொள்கை வீரனுக்கு அவசியம்ங்கிறது கவிதையில சிறப்பா வந்திருக்கு"ன்னேன். "நம்ம கல்லூரி மலருக்கு நீங்க ஏன் ஒரு கவிதை எழுதித் தரக் கூடாது?"ன்னார். "அய்யோ, எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே"ன்னேன். அவரு ஒரு பேப்பரெ என் முன்னால் எடுத்துப் போட்டார். அது கண்ணப்பனை ஜெயிச்சு செக்கரெட்டரி ஆன முத்துக்கிருஷ்ணனுக்கு நான் எழுதிகொடுத்த கவிதை: 'விருந்தினரும் வறியவரும் தாமே யுண்ண மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போல...'ங்கிற கலிங்கத்துப் பரணிப் பாட்டுல தொடங்கி, அதே தாழிசை இலக்கணத்துல, ‘என் முன்னோர்கள் அப்படி இருந்தாங்க; எனக்கும் அப்படி இருக்கத்தான் ஆசை. ஆனா பாரு கஞ்சிக்கு வழி இல்லாமச் செத்துக்கிட்டு இருக்கேன். நீயோ யாழ்மீட்டி வர்ற இரவலன் போல பாடிக்கிட்டு வர்றே, என்கிட்ட உனக்குக் கொடுக்க ஒருசொட்டு ரத்தம் கூட இல்லையே, என்ன செய்வேன், கொசுவே,’ன்னு முடிச்சிருப்பேன். “இது நான் எழுதுனது இல்லை, ஸார்”ன்னேன். ஒரு கட்டுரை நோட்டை எடுத்துப் போட்டு வாசிக்கச் சொன்னார். அதுல எக்கச்சக்க எழுத்துப் பிழை. போதாததுக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் போட்டுக் குழப்பி இருந்தார். அது முத்துக்கிருஷ்ணன் கட்டுரை நோட்டு. “இவரா இந்தக் கவிதையை எழுதியிருக்க முடியும்?”ன்னார் மீரா. நான் சங்கடப்பட்டேன். “நீங்கதான் எழுதிக் கொடுத்தீங்கன்னு அவரே ஒத்துக்கிட்டார். இதை அவரு பேர்லயே போடுவோம். உங்க பேர்ல ஒரு கவிதை எழுதிக் கொடுங்க”ன்னார். அப்பொ நான் ஒரு கம்யூனிஸ்ட்டு. ‘அது எந்நாளோ இது எந்நாளோ’ன்னு அந்நாள்ல ஒன்னை எழுதிக் கொடுத்தேன். மீரா அதை நல்லாவே இல்லைன்னுட்டார். ஆனாலும் என் படத்தையும் போட்டு அந்தக் கவிதையையும் மலர்ல வெளியிட்டார்.

பதினாலு வருஷத்துக்கு அப்புறம் மீராவும் அவரு மனைவியும் தூத்துக்குடி ஸ்பிக்நகர்ல நானிருந்த வீட்டுக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு என் மனைவி சுட்டுக் கொடுத்த வடையோட பக்குவத்தெப் பத்தி வருஷங்களுக்கு அப்புறமும் (கதிரோட கல்யாணத்துலன்னு நினைக்கிறேன்) அந்த அம்மா மறக்காமப் பாராட்டுனாங்க.

மீராவும் போயிட்டாரு. என் மனைவியும் என்னெ விட்டுப் போயி அப்புறமும் தினம்தினம் பார்த்துக்கிறோம் பேசிக்கிறோம். கமுதிக்குப் பக்கத்துல செங்கோட்டைப்பட்டிங்கிறது நான் பொறந்த ஊரு. ஊருக்குப் போறப்போ சிவகங்கை வழியாப் போனா, ‘மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி’யெக் கையெடுத்துக் கும்பிடாமக் கடக்கிறது இல்ல, இப்பவும்.

அன்போடு
ராஜசுந்தரராஜன்

***

மழெ இல்லே தண்ணி இல்லே
ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே
அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

-- ராஜசுந்தரராஜன்


புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8

Sunday, August 1, 2010

பத்திரிக்கை வைக்க வருபவர்க்கு


(Picture by cc licence, Thanks Col_ford)

செட்டியார் கடை ஸ்டாப்ன்ணு
டிரைவர்ட்ட சொல்லி வைக்கணும்
அப்பதான் நிறுத்துவாரு.

றங்கி செட்டியார்ட்ட கேட்டா
காட்டுவாரு நாவித மரத்தை.

முந்தில்லாம்
சின்னக்கண்ணு அண்ணன்
அந்த மரத்தடியில்தான்
எல்லோருக்கும்
கட்டிங், சேவிங் பண்ணுவாரு.

சின்னக்கண்ணு அண்ணன்
நாவிதர் ஆனபோது
மரமும் நாவித மரமாயிருச்சு.

நாவித மரத்திற்கு நேர் எதிரில்
ஆறுமுகம் சேர்வை சந்து.
ஆறுமுகம் மாமா வீடு இருந்ததால
இப்ப அது ஆறுமுகம் சேர்வை சந்து.

புடிச்சு வந்தீங்கன்னா
வேப்ப மரம் வச்ச வீடு.

சிவசாமி பிள்ளை
வீடான்னு கேட்டுக்கிடுங்க.
சிவசாமி தாத்தா
வீடாத்தான் இருந்தது.

ப்பதான் எல்லாம்
மாறிப் போச்சே.

***