Wednesday, January 18, 2012

இலையுதிரும் சத்தம்- ஐந்து

ஏழுகடைக் கதைகள்- நான்கு

ஏழுகடையில் செட்டி (எ) ஸ்ரீதர் எப்படி ஒதுங்கினான்?

யாருக்கும் தெரியாது. ஏழுகடையில் யார் எப்போ ஒதுங்கினார்கள் என்பதெல்லாம் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காத்துல பெறல்ற எல மாதிரி காத்தோட காத்தா வந்து ஒட்டுனதுதான் எல்லோருமே அங்க. இப்ப யோசிச்சு பாக்குறப்போ ஏழுகடை புள்ள புடிக்கியாத்தானே இருந்துருக்கு. புடிச்சு வச்சுக்கிட்டு, வாழ வச்சுக்கிட்டு, வாழ்ந்துக்கிட்டு, இழந்துக்கிட்டு ..

ஸ்ரீதருக்கு செட்டின்னு பேர் வந்ததுக்கு காரணம் அவனோட கால்குலேசன். ஒரு பாருக்கு போறோம்னா செட்டி கூட இருந்தா கணக்கு வழக்குப் பத்தி கவலைப் படமாட்டோம். இத்தனை தண்ணி பாக்கெட், இத்தனை ஆம்லட், இத்தனை சிகரெட், இத்தனை குடல் குந்தாணின்னு எழுதி வச்சுக்கிட்டே வருவான். தனியா சிகரெட் அட்டை போட்டு எழுத மாட்டான். மனசுக்குள்ளயே எழுதிக்கிட்டு வருவான்.

'ஹல்லோ தம்பி / அண்ணே காசு வேணும்ணா கேட்டு வாங்கு. கணக்குல எர்ரர் அடிக்காத' ன்னு செட்டி சொல்லிட்டான்னா அன்னைக்கு பஞ்சாயத்துதான். 'இத்தன தண்ணிப் பாக்கட்டா, இத்தனை இதுவா, இத்தனை அதுவா'ன்னு புட்டு புட்டு வைப்பான். காதுல பென்சில் சொறுகி வச்சுக்கிட்டு கைல சிகரெட் அட்டை வச்சுருக்கிற தம்பிக்கோ அண்ணனுக்கோ 'இவன் குடிச்சானா இல்லையா?'ன்னு டவுட் வந்துரும்.

'அவன் காசு நமக்கு எதுக்கு மாமா? நம்ம காசு என்ன மரத்துலயா காய்க்குது?' ன்னு பார விட்டு வரும்போது காலர தூக்கி விட்டுட்டு குனிஞ்சு அவன் நெஞ்சுலயே ஒரு ஊது ஊதிக்கிருவான்..'செரி விட்றா மாப்ள..'ன்னு அணைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி ஆயிரும்.

வெயிலுக்கு தகுந்த மாதிரி ஏழுகடையில் உக்காந்திருப்பான் செட்டி. ஏழாம் நம்பர் கடையில் செட்டி உக்காந்திருக்கான்னா ஒண்ணாம் நம்பர் கடையில் வெயில்ன்னு அர்த்தம். ஒண்ணாம் நம்பரில் ஒக்காந்திருந்தா வெயில் ஏழுல. வெயிலுக்கு தகுந்த மாதிரி நகந்துக்கிட்டே வருவான். வெயில் தொடங்கியதுல இருந்து, இருள் தொடங்குறது வரையில் ஒரு ஆளு ஒரு லெக்குலயேவா இருக்க முடியும்?

இருந்துருக்கானே செட்டி..

ஏழுகடையிலிருந்து சிரிப்பு சத்தம் அலையலையாக வந்து கொண்டிருந்தால் செட்டி ஸ்பாட்ல இருக்கான்னு அர்த்தம். யாரையும் விட்டு வைக்க மாட்டான். சூரி அண்ணன் தொடங்கி நண்டுசிண்டு வரைக்கும்.

'ராஜா மாமா என்ன ஒரு மாதிரி கெந்துற.. நைட்டு அய்த்த டாப்பு நீ டவுனாக்கும்'ம்பான் நடந்து வரும்போதே. 'என்ன எழவ சொல்லிட்டான்னு இவிங்க இந்தக் கொலவைய போடுறாய்ங்க?'ன்னு வரும். லேட்டாதான் புரியும்.

'சூரிமாமா சக்திசுகர்ல இருந்து வேன் வந்து வெய்ட்டிங்லயே இருந்துட்டு இப்பதான் போனாய்ங்க' என்பான் சூரி அண்ணன் வந்து இறங்கும் போதும்.

'என்னடா..எதுக்குடா?'

'ஏதோ டன்னுக்கு மூட கொறையுதாம். நம்ம ஃபேக்டரில கெடைக்குமான்னு கேட்டுதேன்'

'செருப்பு பிய்யப்போது பாரு' ( சூரி அண்ணனுக்கு சுகர் உண்டு)

'ஏழுகடைபக்கம் ஓட்டாம சுத்தி ஓட்டுங்க' ம்பா வண்டில ஒக்கார்றப்பல்லாம் லதா 'ஏம் புள்ள?' ன்னு கேட்டா செட்டிப்பய எதுனா கத்துவான்'ம்பாள். 'அரிசி மூட்டை நழுவுது மாமோய். அமுக்கி ஓட்டு'ன்னு குரல் விட்டான் ராஸ்கல் ஒரு தடவ. நாம மறந்துர்றோம். பொம்பள மறப்பாளா?.

'எங்கண்ணே சொந்த ஃபண்டுல இருந்து ஒரு சிகரெட் வாங்கிக் கொடுத்துருக்கே..இதக் குடிக்கிறதா வச்சு வச்சுப் பாக்குருதா ஆ டமுக்கு டப்பா ஆ டையா டப்பா' ன்னு ஓடி ஓடி ஒண்ணாம் நம்பர் கடையில் இருந்து ஏழாம் நம்பர் கடை வரையில் காட்டிக் காட்டி கெக்கு கெக்கு'ன்னு சிரித்துக் கொண்டு வந்தான் ஒருநாள்.

'கேவலப்பட்ட பய புள்ளை..கேவலப் படுத்துது பாரு மாமா' ன்னு முத்துராமலிங்கம் சொன்னப்போதான்..

'ஆ.. நீயா?'ன்னு நீயா பட ஸ்ரீப்ரியா மாதிரி கண்கள் மினுங்க முத்துராமலிங்கத்தைப் பார்த்தோம். அவனும் எங்கள் பார்வைத் தீண்டலில் இருந்து தப்பிக்க கட்டிலுக்கு மேலாகவும் கீழாகவும் நழுவிக் கொண்டிருந்தான்- கமல் போலவே. .

நீயா படம் மட்டும் பாக்காட்டி இவ்வளவு டாக்ட்டிஸ் வந்துருக்குமா முத்துக்கு?

நாங்க போக, போற வர்ற பொம்பளைப் புள்ளைகளையும் ஒரண்டை இழுத்து தொலைவான் செட்டி. எங்க பயலுக யார்ட்டையுமே இல்லாத பழக்கம் அது. லவ்லாம் பண்ணுவாய்ங்க. புடிச்சுப் போயி பின்னாடியேவும் சுத்துவாய்ங்க. 'அப்ஜக்சன் யுவர் ஆனர்' வந்துருச்சுன்னா தெறிச்சுருவாய்ங்க. ரெண்டு நாளைக்கு மொறட்டுத்தனமா தண்ணி அடிச்சுட்டு பூப்போல தெளிஞ்சு அடுத்த பூ பறிக்க போயிருவாய்ங்க.

'எங்கிருந்துடா வந்து தொலைச்ச.. யார்ட்டயாவது இந்தப் பழக்கம் இருக்காடா. மூஞ்சியும் மொகரையும் பாருன்னு திட்டிட்டுப் போகுது அந்தப் புள்ள...உன்னைய திட்டுதா என்னைய திட்டுதான்னு பாக்குறவய்ங்களுக்கு தெரியுமாடா?'ன்னு கேட்டா..

கெக்கெக்ன்னு சிரிச்சுக்கிட்டே, 'பாத்துட்டியா?'ம்பான். 'இனிமே எங்கயும் எங்களோட வராத. இவன தொலைச்சு தல முழுகிட்டுதாண்டா கெளம்பனும் நம்ம' ன்னு பயலுகள்ட்ட சொன்னாலும், 'சரி மூடு ஓன் நயங் கோமணத்தை' ன்னு திருப்பியும் கெக்கு கெக்கு போடுவான்.

ரெண்டு வகையான பிசினஸ் பண்ணி அதில்தான் பசியாறி வந்தான் செட்டி. சீட்டுக் கச்சேரி மெயினு. கபடி சைடுல. சிவகங்கை சுத்துப்புறத்துல செட்டிய தெரியாத கபடி க்ளப் இருக்காது. வந்து தூக்கிட்டுப் போயிருவாய்ங்க. அடிச்சிட்டு வந்தான்னா அப்படி ஒரு நுரை பொங்கும் அவன் முகத்துல. இதர டிட்டெர்ஜன்ட், வில்லை, பார், எதனையும் மிஞ்சும் வெண்மை அந்த நுரை.

அப்புறமெல்லாம் சீட்டுக்கு கிளம்பிருவான். விவரம் தெரிஞ்ச ஏழுகடைப் பசங்க செட்டி ஒக்காந்திருக்கிற சபைல ஒக்கார மாட்டாய்ங்க. தெரிஞ்சுக்கிட்டாய்ங்கள்ல அப்புறம் ஒக்கார லூசா?

எனக்கென்னவோ இந்த சீட்டு மட்டும் வரவே இல்லை. அதிர்ஷட்டம் மற்றும் மூளை உபயோகிக்கிற மேட்டர்னால கூட இருக்கலாம். அதுனாலதான் பெரும்பாலும் இந்த ரெண்டும் தேவை இல்லாத அம்மாப்பா விளையாட்டோடவே நின்னுக்குவேன்.

ஆனா இவய்ங்க கச்சேரி நடத்துற இடத்துக்கு போறது உண்டு. ஆளரவம் இல்லாம ஏகாந்தமா இருக்கும். ஒரு குவாட்டற மட்டும் கைல புடுச்சிட்டு போய்ட்டோம்ன்னு வைங்க அன்னக்கி சும்மா அன்னக்கிதான்.

இப்படியே போயிட்டிருந்த செட்டி எங்க எல்லாத்தையும் ஒரு திருப்புமுனைக்கு தள்ளினான்...

கடைக்கு வந்தேன். கொஞ்சம் இனிஷியல் ஒர்க்லாம் பாத்துட்டு முத்து கடைக்கு வந்து, 'எங்கடா இவன்?' ன்னு கடைல இருந்த செந்தியிடம் கேட்டேன். 'செட்டி அண்ணே ஒரு அக்காவ கூட்டிட்டு வந்துருச்சுண்ணே. ரெண்டு பேரையும் ஒளிச்சு வைக்க அண்ணே எங்கயோ போயிருச்சு' ன்னு சொன்னான்.

'இழுத்துட்டாய்ங்களா?' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு தம்ம பத்த வச்சேன். சாயந்திரமா வந்தான் முத்து..

'என்னடா?'

'இவந்தேன். ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வய்யின்னு நிக்கிறான் மாமா. இந்தப் புள்ள தொண்டி போல. போன்லயே புடிச்சிருக்கான். கொஞ்ச நாளா போன்லயே பேசிக்கிட்டு திரின்ஜ்சான்ல. அவய்ங்க மீன் பறவாஸ் மாமா. வெட்டி கடலுக்குள்ள போட்ருவாய்ங்க. நீயும் இல்ல சூரி மாமாவும் இல்ல. டக்குன்னு வெக்கேட் பண்ணி கல்லல்ல நம்ம சொந்தக்காரய்ங்க தோப்புல விட்டுட்டு வந்துருக்கேன்'

'என்னடா சொல்ற? இவன நம்பி எப்டிடா கல்யாணம் பண்ணி வைக்கிறது?'

'என்ன பண்ணச் சொல்ற? இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'

'இவனுக்கே நம்மல்லடா சோறு போட்டுக்கிட்டு இருக்கோம்'

'நீ எங்க போட்ட? நால்ல போட்டுட்டு இருக்கேன். இதுல இந்தப் புள்ளையவும் கொண்டுபோய் அடைச்சா என்னைய வெறட்டி விட்ருவாய்ங்க மாமா'

'சரிடா..அவன தனியாவா விட்டுட்டு வந்த? அவம்பாட்டுக்கு பொலிச்சல போட்டுறப்போறான்டா'

'அதுலாம் ஆளுப்பேரு இருக்காய்ங்க சுத்தி. இப்ப மேட்டர் என்னன்னா சூரி மாமாட்ட நீதான் பேசுற'

'டேய்..இவர்ட்ட ஓத்தாமட்டை வாங்க முடியாதடா?'

'போ..அப்ப நம்மளே கொண்ணுருவோமா செட்டியவும் அந்தப் புள்ளையவும்?'

'இவன் யார்றா இவன்..அதுக்கா சொல்றேன்?'

'இதுலாம் புதுசா மாமா..நீ தான் சரியா மண்டய கழுவி பேசுவ'

'இப்டியே ஏம்மண்டய கழுவுங்கடா'

செட்டிக்கு திருமணம் முடிந்தது.

மத்த வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இதே வேலையா இருந்து ரெண்டு அழகழகான பெண் குழைந்தைகளை பெற்றெடுத்தான். துயரம் என்னன்னா..

இவ்வளவுக்கு அப்புறமும் செட்டி அப்படியேதான் இருக்கிறான். இந்த டைரிக் குறிப்பிற்காகவே இன்னைக்கு முத்துக்கு போன் பண்ணி 'செட்டி எப்டிடா இருக்கான்?'ன்னு கேட்டேன்.

'காளையர்கோயில்ல திரியிறான்னு கேள்வி மாமா'ன்னு சொன்னான்.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4


10 comments:

Mahi_Granny said...

ஏழுகடைக்குஅடிக்கடி வந்து எட்டி பார்த்து விட்டு போனேன், இன்னைக்கு தான் ஆளைப் பிடிக்க முடிஞ்சுது.அழகழகாய் தலைப்புக்கள் வைத்துக் கொண்டு எழுதவே முடியாதென்றால் எப்படி .. பஸ்தான் இல்லையே . இங்கு வரலாமில்லையா .அடிக்கடி எழுதுங்க

சுசி said...

அவ்வ்வ்வவ்ளோ நல்லாருக்குங்க பா ரா :)

சிநேகிதன் அக்பர் said...

லைஃப்ல ’செட்டி’லாயிட்டாருன்னு சொல்லுங்க :)))

ரொம்ப நல்லாயிருக்குண்ணே!

ஓலை said...

Niraya varattum unga kitternthu pa.ra.

ரிஷபன் said...

என்ன பண்ணச் சொல்ற? இந்த மொகற இல்லைன்னா அந்த மொகற செத்துப் போவேங்குது. அந்த மொகற இல்லைன்னா இந்த மொகற செத்துப் போவேங்குது'

ரொம்ப யதார்த்தம்.

பா.ராஜாராம் said...

மஹிக்கா..நல்லாருக்கீங்களா? நீங்க எதுக்கு அலையுறீங்க.. உங்களுக்காகவாவது இனி வாரம் ஒரு போஸ்ட்டாவது போட்டுர்றேன். சரியா? நன்றிக்கா!

நன்றி சுசி!

அக்பர், சேது, ரிஷபன் நன்றிகள்!

அன்புடன் அருணா said...

ம்ம் கேக்குது கேக்குது ....இலையுதிரும் சத்தம்தான்!

Ashok D said...

’செட்டி’ ஒரு ஜிப்ஸி போல.. சுகமாயிருக்கட்டும்... நான்கூட அவரு வேலைக்கெல்லாம் போயி செட்டிலாகிட்டார்ன்னு எழுதிடுவீங்களோன்னு நெனச்சிட்டேன்...

சித்தப்பு.. இப்ப online சீட்டு வெலயாடலாம்... site address வேணுமா? ;)

வழக்கம்போல சுவையான வேகமா நகரவைக்கற writeup

பா.ராஜாராம் said...

நன்றி டீச்சர்!

மகன் அசோக், செட்டி வேலைக்குப் போய் செட்டில் ஆகணும்ன்னு விருப்பம் / வேண்டுதல் இருக்கு. இந்த டைரிக்குறிப்பிற்கு இன்று வரையில் அது லிபிக்கவில்லை. லிபிக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை //ஆன் லைன் சீட்டு// யோவ் :-)) நன்றி மகன்ஸ்!

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.