Thursday, June 11, 2009

காரணப்பெயர்

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது!
"பெரியனஞ்சை" என்று பெயர்!
பெரியனஞ்சைக்கு பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு.
கிணறு வெட்டி, கரும்புவளர்த்து,
கடலை நட்டு,கத்திரி பயரிட்டு,
தசை நார் தெறிக்கும் அப்பாவை
அறிவேன் வயலில்!
கொண்டுசெல்லும் கஞ்சி ஊறுகாயின்
மண்டிநீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க.
ஒரு நாள்,ஒரு பொழுது
மழை ஏமாற்றியதில்லை அப்பாவை.
மழையும் அப்பாவும் ஒன்றுதான்
விரும்பி ஏமாற்றுவதில்லை!
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சயை தோற்றார்
அப்பா ஒரு நாள்.
பிறகு....
அப்பா சாராயம் குடித்தார்,
வெங்காயகடை வைத்தார்,
திரையரங்கில் வேலை பார்த்தார்,
யார் அழைத்தாலும்
போய் உழைத்தார்...
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக்கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவிற்கு...
எங்கள் ஊரில்
நிலங்களுக்கு பெயர்
இருந்ததுபோல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது...
அது.....
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா!...

8 comments:

கோவி.கண்ணன் said...

அழுத்தமான கவிதை ! பாராட்டுகள் !

அண்ணாதுரை சிவசாமி said...

ella makankalaiym appakkalai ninaikkavaiththa
valimai mikka eluththukkal

பா.ராஜாராம் said...

திரு கோவி.கண்ணன் சார்,

உங்களது பாராட்டுகள் என்னை இன்னும் உத்வேக படுத்துகிறது. மிக்க நன்றி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெகு நாட்களுக்குப் பிறகு என்னைப் புலரிக்கச் செய்த கவிதை இது. சத்தியமாக......

-ப்ரியமுடன்
சேரல்

துபாய் ராஜா said...

நெகிழச் செய்த பதிவு.

கண்கள் கலங்கச்செய்தது காரணப்பெயர்.

கடைசி வரிகளில் பிள்ளைகள் பெயர்களைக்கூறி அப்பாக்கள் படும் கஷ்டத்தை வெளிப்படுத்தியமை அருமை.

பா.ராஜாராம் said...

சேரல்
======
ப்ரியங்கள் சேரல்.நன்றியும்.

பா.ராஜாராம் said...

மிகுந்த நெகிழ்வு துபாய் ராஜா.தீரா பிரியங்களும்...

க ரா said...

எப்பொழுதெல்லாம் எனக்கு என் பாட்டி நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த கவிதையும் நினைவுக்கு வரும். இந்த கவிதையின் வாழ்வில் பெரும் பகுதியை பாட்டியும் வாழ்ந்தாள்.. இன்று அவள் இல்லை மாம்ஸ். சற்று முன்னர் ...