Thursday, June 11, 2009

பூச்சொரிதழ் விழா...

மனைவி குழந்தைகளுடன் பூச்சொரிதழ் விழாவிற்கு
வருகிறேன் நான்...
சின்னப்பன் மாமா வீட்டுவாசலில்
எப்பொழுதும்போல்
எல்லோருடனும் நிற்பேன்.
முன்பு நாம் பார்த்த திருவிழா வியாபாரிகளின்
மகன்கள் வியாபாரிகளாகி நிற்பார்கள்
குழப்பத்தில் திசை மாறாது வா..
ஒவ்வொரு மண்டகப்படியும் எதை எதையோ
நினைவு படுத்தி எங்கெங்கோ
கொண்டு செல்லலாம் உனை.
குழந்தைகளோ குழந்தைகள்தான் எப்பவும்.
எதையும் குறை வைக்காது எல்லாம்
தருவித்து மெல்ல நடந்து முன்னேறு.
முதன் முதலில் வாங்கி தந்த கண்டனிசெட்டியார்
வளையல் கடையில் மகளுக்கும் வளையல்
வாங்கி கொடு மறக்காமல்.
பலா கடை சண்முகத்தின் மகன்
சாயல் மாறாது கடை போட்டிருப்பான்
தெப்பக்குள வடபுறம் தவறவிடாதே.
காந்தி பூங்காவை கடக்கிறபோது அந்த
மருதாணி வாசனையை மீண்டும் நீ உணர்ந்தால்
மிகுதி சந்தோசம் எனக்கு!
நாம் கேட்ட வரம் தராத "கேட்ட வரம் தரும்"
கௌரி விநாயகர் நீ பார்க்கவென காத்திருக்கும்,
ஒரு பார்வை பார்த்துவிடு.
பிழைத்து போகட்டும்!
காலத்தின் மேல் நடந்து வந்த
களைப்போடு உனை எதிர்பார்த்து
காத்து நிற்பேன்.
கணவன், குழந்தைகள், உறவுகள்,
யாரும் அறியாதபடிக்கு
நகரும் பேருந்தில் தவறவிடும்
காணிக்கை காசாக ஒரே ஒரு பார்வையை
வீசி எரிந்து போ!
கவனம் தோழி...
வீசி எறிவது ஒரு நொடி காரியம்
வாழ்வோ யாவையும் மீறிய வீரியம்
வருடா வருடம்தான் வரப்போகிறது..
வந்து வந்து போன பூச்சொரிதழ் விழா!....