Monday, April 4, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினேழு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை- ஆறு

ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு
,ஐந்து

வீராவிற்கு பிறகு நாய்க் குட்டிகள் மேலான என் ஸ்நேகத்தை வெகுவாக குறைத்துக் கொண்டேன். அவைகள்தான் அவ்வப்போது கண்ணடித்து 'ஐ லவ் யூ' எனும். சற்று நோங்கினாலும், 'அப்படியா?' என்கிற ஒற்றைச் சொல்லோடு விலகி விடுவேன். அக்கம் பக்கமாக, உற்றார் உறவினர் இல்லையெனில், நின்று கூடுதலாக ரெண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு.

"நீ நல்லாருக்கியா? நான் நல்லாருக்கேன். நீ சாப்ட்டியா? நான் சாப்ட்டேன். நீ ரெண்டு நாளா சாப்பிடலையா? நான் ரெண்டு வருசமா சாப்பிடல. நீ சோத்துக்கு சிங்கி அடிக்கிறியா? நான் அதைவிட சிங்கு சிங்குன்னு அடிக்கிறேன்." என்ற அளவிலேயே பேச்சுகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். இவ்விஷயங்களை நான் லதாவிற்கோ, குலசாமிக்கோ கொண்டு செல்வதில்லை.

இப்படி ஆற்றிலும் விழுந்து விடாது சேற்றிலும் கால் பாவாது நூல் பிடித்தது போலான வாழ்வில்- திருப்தியாகவே வாழ்ந்து வந்தேன். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாதாமே? அப்படி ஒரு சுழல் காற்று அன்று விரட்டி வந்தது.

அன்று, ஏழு கிழமைக்குள் ஒரு கிழமை என நினைவு. ஏழுகடையில் அமந்திருந்தேன். இப்படி ஏழேழாக வரும் போதே நான் சுதாரித்திருந்திருக்கலாம்- அருகில்தானே அரையும் இருக்கிறான் என.

மழை பிரித்துக் கொண்டிருந்தது. நாலு மணி சுமார். டாஸ்மாக் போகிற ஜோலி இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு மேலாக இருக்கிறதே என சுணக்கமாக இருந்தேன். அப்பத்தான் இந்த நெப்போலியன் வந்தான். நெப்போலியனாக வரவில்லை. வெறும் நாய்க் குட்டியாகவே வந்தான். வெறும் என்றால் வெட்ட வெறும்.

பசி படத்தில் நடித்த ஷோபா மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, அரக்கிற்கும், அழுக்கிற்கும் மையமான ஒரு அட்டுக் கலரில், 'இப்படியெல்லாம்தான் கலர் இருக்கு' என்பது போல் கலர் களஞ்சியமாய் வந்தான்.

'எம்புட்டு பெரிய பல்லி' என்றுதான் முதலில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ' கோடுகள் தொலைத்த அணிலோ?' எனவும் யோசனை வந்தது. பிறகு, நாய்க் குட்டிகள் குறித்தான நாலெட்ஜ் சற்று ஒட்டி வந்ததால் 'அட, குட்டி நாய்க் குட்டி' எனப் புளகம்(நன்றி: நேசமித்திரன்) கொண்டேன்.

யோசியுங்கள் மக்களே...

ஏழுகிழமைகளில் ஒரு கிழமை, மனதிற்கு பிடித்த ஏழு கடை, ஏழு கலரிலும் அடங்காத ஒரு கலர், ஏழைப் பங்காளன் முகம், ஏகப்பட்ட நடுக்கம் கொண்ட ஒரு உடல் என ஒரு உயிர் வந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படித்தான் இருந்தது எனக்கும். சுடரும் உயிர் எப்படி இருந்தால்தான் என்ன? இல்லையா?

குனிந்து கையிலெடுத்தேன் நாய்க் குட்டியை. ' என்ன சொல்ல வர்றேன்னா..' என்பது போல குலசாமி நினைவில் குறுக்கிட்டார் . "அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை சாமியா வச்சிருக்கேன். நீர் எனக்கு சாமியில்லை" என அதட்டுப் போட்டேன். கமல் மாதிரி புரியாமல் பேசினால் மனிதனே பயந்துவிடுகிறான். பிறகு சாமி எம்மாத்திரம்?

இப்படியான திடீர் தைரியத்திற்கு தூரத்தில் ஒரு பெண் காரணமாக இருந்தாள்.அதாவது 240 கி. மீ. தூரத்தில். (சிவகங்கை-கோவை தூரம்) ஆம். ப்ரபாவேதான்! ப்ரபாவை நம் நண்பர்கள் சிலர் அறிவர்.( ஒரு முப்பது பேர்?) அறியாதவர்கள் 'இந்த' பதிவு போய் திரும்புங்களேன்.

இந்தப் ப்ரபா, தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையைப் பேணுவது போல பேணுவாள் ஒரு ஜிம்மியை. "நேத்துல இருந்து ஜிம்மி கக்கிக்கிட்டே இருந்துச்சு மக்கா. வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனனா? நல்ல ஃபீவர்டா" என எப்ப அழை பேசினாலும் கொசுறாக இந்த மாதிரி தகவல்களை அளிப்பாள். மருந்துக்குக் கூட ஒரு நாய்க் குட்டி இல்லாதவன் இவன் என்கிற நினைப்பெல்லாம் வராதோ இவளுக்கு என எரிச்சலாக வரும். கூடவே லதாவின் நினைவும்.

"சசிப்பய மழைல நனைஞ்சிருக்கும் போல. நல்ல சளி. ராத்திரியெல்லாம் காய்ச்சல் வேற. பார்த்தேன், மிளகை தட்டிப் போட்டு ஒரு ரசம் வச்சுட்டேன்" என்பாள். "சரி. கெளப்பி விடு. டாக்டர்ட்ட போய்ட்டு வந்துரலாம்" என்றால், "அதான் ரசம் இருக்குல்ல" என்பாள். " சரி புள்ள. வெளியில் போறேன். எதுனா காய்கறி வாங்கணுமா மதியத்துக்கு ?" என்றாலும், "அதான் ரசம் இருக்குல்ல தான்.

சசிக்கு மருந்தும் ஆச்சு. பசிக்கு சாப்பாடும் ஆச்சு, ஒரு ரசமும், ஒரு லதாவும். ரசம் மேட்டரெல்லாம் ப்ரபாவிற்கு தெரியாது போல.

போக, சசியா ஜிம்மி?

குட்டியை எடுத்த கையோடு பெயரும் இட்டேன். " நீ நெப்போலியண்டா!" (டாஸ்மாக் நேரமும் நெருங்கி விட்டதில்லையா?) 'ஆகட்டும்' என்றான் நெப்போலியனும்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்தான், நாலாம் நம்பர் கடை ஓனரான முத்துராமலிங்கம். (முத்துவையும் அதே முப்பது நண்பர்கள் அறிவீர்கள்தான். அறியாதவர்களுக்கு 'இந்த' பதிவு) நெப்போலியனை அவனிடம் காட்டி லெஃப்ட் ஒதுக்கி சிரித்தேன்.

இப்படி லெஃப்ட் ஒதுங்கி சிரிக்கும் போதெல்லாம் அவனை உதாசீனப் படுத்துகிறேன் என அவன் புரிந்து வைத்திருந்தான். அல்லது அப்படி பழக்கியிருந்தேன். பரஸ்பரம் அவனும் அப்படித்தான் பழக்கியிருந்தான் என்னை. என்ன?..அவனுக்கு ரைட் ஒதுங்கும்.

என் சிரிப்பைப் பார்த்து,

"என்ன?" என்றான் ஒற்றைப்படையில்.

"வளக்கப் போறேன்" என்றேன் ரெட்டைப் படையில்.

"நீ திருந்தவே மாட்டியா?" என்றான் முப்படையில்.

விட்டால் அறுபடை வீடு வரையில் போய்த் திரும்புவானோ எனப் பயந்து இந்த 'வீடறிகிற' விளையாட்டை நிறுத்தி விட்டேன். இதே முத்துராமலிங்கம் ' மானிட்டர்' என்ற நாய்க் குட்டியை வளர்த்தவன்தான். நல்ல போதையில் சவுதிக்கு போன் பண்ணுவான். (போதை இல்லாவிட்டால் மிஸ் கால் மட்டுமே)

"மாமா ஒரு மானிட்டர் வளக்குறேன் மாமா. சரக்கடிக்கப் பழகிட்டான். சிகரெட்டை மட்டும் பழக்கித் தர முடியல. நம்ம செட்டிக்கு பிறந்திருப்பான் போல" (செட்டி என்ற ஸ்ரீதர் என்ன தண்ணி அடித்தாலும், புகைப்பது இல்லை) என்று பேசியவன்தான். ஒரு நாள் சரக்கடித்து விட்டு மானிட்டரை தலையணையாக வைத்துத் தூங்கியிருப்பான் போல. காலையில் காணாமல் போய் விட்டதாக செட்டி அழை பேசும் போது சொன்னான். வேறு வேறு மனிதர்கள். வேறு வேறு குலசாமிகள்.

பார்வையிலேயே என்னையும் நெப்போலியனையும் மாறி மாறி சாணை பிடித்துக் கொண்டிருந்தான் முத்து. 'அட..என் சாணைக்கு பிறந்த சோணை' என நெப்போலியனுக்கு குடில் செய்யத் தொடங்கினேன். குடிலுக்கு ஏற்ற இடமாக இருந்தது பழனி கடையின் டீ பட்டறை.

மாப்ள பழனி அஞ்சாம் நம்பர் கடைக்காரன். (டீக்கடை) பழனி போர் அடித்தால் மட்டுமே கடை திறப்பான். திறந்து சற்றைக்கெல்லாம், " க்காலி..திறந்தாலும் போர் அடிக்குது" எனப் பூட்டியும் போய் விடுவான். நல்லவன்தான். தலைச்சக்கரம் சற்று ஏற்ற இறக்கம்.

நெப்போலியன் வந்த பிறகு என் வாழ்வு முறை வெகுவாக மாறி விட்டது. விடிந்தும் விடியாமல் ஏழு கடைக்கு வந்து விடுவேன். வந்ததும் முழு நெப்போலியன் காலிக் குப்பியில் பால் வாங்கக் கிளம்பி விடுவேன்.

சம்பந்தமில்லாத குப்பியில் சம்பந்தமில்லாத திரவம் வாங்கிப் போவதை பாதசாரிகள் ஒரு மாதிரி கவனிக்க தொடங்கியிருந்தார்கள். "நெப்போலியனுக்குதான் நெப்போலியனில் பால்" எனக் கவிதை கலந்த என் சுய விளக்கம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை போல. ஜிப் சிக்கிக் கொண்ட பர்ஸ் மாதிரி திறந்து மூடி, திறந்து மூடி சிரித்துக் காட்டினார்கள்.

' நீ எத்தனை புயல்களை சந்திக்கிறாய் என்பதைப் பற்றி இந்த உலகம் கவலைப் படாது. கப்பலைக் கொண்டு போய் கரை சேர்க்கிறாயா என்று கவனிக்கும்' என்கிற தத்துவத்தின் பித்தன் நான். எனவே, ஜிப் / பர்ஸ் மனிதர்களை, 'ஜிப்ப போடு. முதல்ல ஜிப்ப போடு' எனக் கடக்கப் பழகிக் கொண்டேன்.

தீரத் தீரப் பால் குடிப்பது நெப்போலியனுக்கு ரொம்ப பிடித்து வந்தது. பால் தவிர்த்து, கடலை மிட்டாய், முருக்கு, சீடை, பட்டாணி, பொட்டுக் கடலை, விரலிமஞ்சள், கல்உப்பு, வெற்றிலைக் காம்பு, வாழைப்பழத் தோல், சீவு விளக்கமாற்றுக் குச்சி, தலை பெருத்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, சிகரெட் அட்டை (கோல்டு கிங்ஸ் அட்டை எனில் கூடுதல் சந்தோசம்), ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு, பொடி மட்டை, என எது கிடைத்தாலும் பசியாறிக் கொள்ளும் பக்குவம் பிறப்பிலேயே இருந்தது.

ஏழு கடை வந்த நான்கு நாட்களுக்குள் எல்லாம் நெப்போலியனின் புகழ் எட்டு கண்ணும் விட்டெரிந்தது. வருவோர் போவோரெல்லாம் "நெப்போலியா?" என்று அழைப்பதைக் கண்டு மீண்டும் புளகம் கொண்டேன். பழனி கடைக்கு பாத்திரம் விளக்க வருகிற பாட்டி கூட, "நெப்போலியனுக்கு பால் தீந்து போச்சுப்பு" என பாட்டிலை எடுத்து நீட்டத் தொடங்கியிருந்தாள்.

பாட்டி வாயிலேயே நெப்போலியன் நின்னு போன நெகிழ்விலும், நானும் நெப்போலியனில் இருந்த நிறைவிலும், நூறு நூபாயை பாட்டியிடம் நீட்டி "நெப்போலியன் வாங்கி சும்மா கும்முன்னு அடி பாட்டி" எனக் கொஞ்சி மிஞ்சினேன்.

ஒன்னும் புரியாத பாட்டியை, "செலவுக்கு வச்சுக்கிற சொல்றாரு" எனப் பூசி முழுகி ட்ரான்ஸ்லேட் பண்ணினான் முத்து. பொங்கி வரும் பாலில் குளிர் நீராகிக் குதிக்கும் கூதறை அவன். ஏழு கடை மனிதர்களில் ஒருவனாக மாறிக் கொண்டிருந்தான் நெப்போலியன்.

துக்கம் மற்றும் அதீத துக்கம், சந்தோசம் மற்றும் அதீத சந்தோசம், துக்கமின்மை மற்றும் சந்தோசமின்மை காரணங்களுக்காக மட்டுமே நான் முட்டக் குடிப்பது. மற்ற காரணங்களை அவ்வளவாக பொருட்படுத்தாது, அளவோடு குடித்து வீட்டிற்குப் போய்விடுவேன்.

அன்று முட்டக் குடித்திருந்தேன். காரணம் நெப்போலியன்தான். அன்று பால் கூடக் குடிக்காமல் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தான். நடுக்கம் என்றால் ஃபிட்ஸ் மாதிரியான நடுக்கம். மழை அல்லது குளிர் காரணமாக இருக்கலாம் என நண்பர்கள் சொன்னார்கள். மாலையில் நடுக்கம் தீவிரம் கொண்டது.

மறு நாள் வெட்னரி ஹாஸ்பிட்டல் கொண்டு போனேன். வயிற்றில் கொக்கிப்புழு இருந்தாலும் இப்படி ஃபிட்ஸ் வரலாம் என மருந்து கொடுத்தார் டாக்டர். ஒரு நாள் சற்று குணமாக இருந்தான். மீண்டும் ஃபிட்ஸ் வரத் தொடங்கியது.

அன்று தீபாவளி. காலையில் நெப்போலியனுக்கு பால் வைத்துவிட்டு அம்மா, சகோதரிகள், நண்பர்கள் வீட்டிற்குப் போய்விட்டு ஏழு கடை வந்தால் நெப்போலியனைக் காணோம். எங்கு தேடியும் காணோம். முன்பு ஒரு நாள் இப்படி தொலைந்து, பிறகு பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் வலிப்பு வந்தபடி கிடந்தான்.

ரொம்பக் கொடுமையான தருணம் அது. "நெப்போலியா?" என்கிற குரலுக்கு அவன் வாலாடுகிறது. அது அவன் ப்ரியம். உடம்பும் ஆடுகிறது. அது அவன் நோய். இரண்டையும் பிரிக்க முடியாது கையில் அவனை ஏந்திய போது, போதும் என்றாகிப் போனது.

"என்னடா நான் யாரை வளர்த்தாலும் அவுங்களுக்கு ஃபிட்ஸ் வருது?" என சிரித்தேன் முத்துவிடம். (நம் சசிக்கும் சிறு வயதில் இதே தொந்திரவுதான்) அது சிரிப்பில்லை என்பதை முத்து அறிந்திருக்க வேணும். " போப் போ மூதேவி. எந்திருச்சு வீட்டுக்குப் போ" என விரட்டினான்.

அப்படி ஒரு நம்பிக்கையில் கடவே அலசிவிட்டோம். சுத்தமாகக் காணோம். வரும் போதும் போகும் போதும் "நெப்போலியா?" என கூப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இருந்தோம். எப்படி இப்படி ஒரு உயிர் துடைத்துப் போட்டாற் போல காணாமல் போக முடியும்?

ப்ரபா கூட, " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்" என்றாள். தடுமாறித் திரியும்போது வார்த்தைகள் தரும் பிடிமானம் எவ்வளவு ஆறுதல்! சவுதி திரும்பும் நாள் வரையில் நெப்போலியன் திரும்பவே இல்லை.

இரயில்வே ஸ்டேசனில் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக கட்டி அணைத்து விடை தந்து கொண்டிருந்தார்கள். லதா, குழந்தைகள் கைகளைப் பற்றி, " அழாம அனுப்பித்தாங்க பக்கிகளா" என சிரித்து பெட்டிக்குள்ளும் ஏறிவிட்டேன்.

எப்பவும் பெட்டிக்குள் ஏறிய பிறகுதான் கடைசியாக கட்டிக் கொள்வான் முத்து. பெட்டியெல்லாம் ஒழுங்கு செய்து அடுக்கிய பிறகு, "போய்ட்டு வா" எனக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டு திரும்பிப் பார்க்காமல் இறங்கிப் போய்விட்டான். எனக்கு முத்துவிடம் ஒரு கேள்வி பாக்கி இருந்தது. அதை அப்போ கேட்க இயலவில்லை.

சவுதி வந்து அறை அடைந்து வீட்டிற்கெல்லாம் அழை பேசிய பிறகு முத்துவை அழைத்தேன். தொண்டையிலேயே அருவிக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"நெப்போலியனை எங்கடா கொண்டு போய் விட்ட?"

சத்தம் போட்டு சிரித்த முத்து, "லூசு மாமா நீ" என்றான்.

ப்ரபா சொன்னதும் ஏனோ நினைவிற்கு வந்தது. " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்"

ஆறுதலாக இருந்தது.

-தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16

27 comments:

க ரா said...

மொத மொய் நாந்தேன் இன்னிக்கு.. எப்படி மாமா இப்படில்லாம் எழுத வருது.. போன தடவை படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாச்சு.. இந்த தடவை சிரிக்க வெச்சு கடைசியா நானே நெப்போலியன தொலைச்ச மாதிரி தோணிப்போச்சு.. அடுத்தது ஒரு சிறுகதை தொகுப்போ இல்லேன்னா ஒரு நாவலோ கொண்டு வாங்க மாம்ஸ் :)

ஓலை said...

அருமையா இருக்கு நெப்போலியனை தொலைச்ச கதை.

நேசமித்ரன் said...

ரெண்டு பேருமா படிச்சு சிரிச்சி சிரிச்சி படிச்சு நல்லாருய்யா சாமி !



//ஒரு சிறுகதை தொகுப்போ இல்லேன்னா ஒரு நாவலோ//

ம்ம்... நானும் வருஷக் கணக்கா சொல்லித்தான் பாக்குறேன் கேட்டாத்தான... ?!

என்ன சொல்ல... க்ளாஸ் மக்கா !
வரமா வாங்கிட்டு வந்திருக்காய்ங்க எழுத்த ..

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே!

:))))))

வினோ said...

அப்பா இப்படி தான் தொலைந்து போகிறேன் உங்க எழுத்துக்களில்..

சிரிச்சு சிரிச்சு முடியல...

Mahi_Granny said...

அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை சாமியா வச்சிருக்கேன். நீர் எனக்கு சாமியில்லை" என அதட்டுப் போட்டேன்.குலசாமியாக்கும் கொஞ்சம் பார்த்து அதட்டுங்கள் . ஆமா எதுக்கு தொடரும் என்று போட்டு பொறுமையை சோதிச்சிகிட்டு

vasu balaji said...

:)). பேரு வைக்கிற பாங்கு இருக்கே:)). அட அட. papillon படத்துல ஸ்டீவ் மக்வீன் சிரிசிரின்னு சிரிச்சிட்டே அழுவான் ஒரு அழ. இதுக்கு முன்னாடி அது கொஞ்சம் மங்கல்தான்.

Chitra said...

இப்படி கலகலப்பாக எழுத உங்களால் மட்டும் தான் முடியும். சூப்பர்!

Unknown said...

கலக்கல்யா...உரைநடை சும்மா பின்னி பிணையுது.சாரையாட்டாம்..வாசு..ஒரு புக்கு பார்சல்

Unknown said...

நெப்போலியனை கேட்டதா சொல்லுங்கண்ணே...

Sugirtha said...

பா.ரா,

என்ன சொல்லணும் தெரியலே. புதிதாய் ஒட்டிக் கொண்டு பிறகு தொலைந்து போன நெப்போலியன், கூட தேடித் திரிந்த முத்து, ப்ரபாவின் ஆறுதல். எப்படி இப்படி கலவையான உணர்வுகளை ஒரே நேரத்தில் இத்தனை உணர்வுபூர்வமாக அதே சமயம் வெகு நேர்த்தியாக எழுத முடிகிறது?

//எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்// Hope is 'ALL' we have in life!! :)

சுசி said...

அப்பப்பா.. என்ன அருமையா எழுதி இருக்கீங்க.. ரொம்ப நன்றி :)

நான் அழுகையோட எங்க லஸிய தேடி அலைஞ்ச நாட்கள் நினைவு வந்துது.. ஒரு தடவை ஒரு வாரம் காணாம போய் நான்(ங்க) பட்ட வேதனையும் அவன் திரும்பி வந்ததும் நான் அழுததும்.. உஸ்ஸ்ஸ்..

காமராஜ் said...

சிலபேர் பேசும்போது நிப்பாட்டக்கூடாது பேசிக்கிட்டே இருக்கடும்னு தோனும்.
எங்க பாரா பேசினாலும் எழுதினாலும், மிதமான போதையில் கையைப்பிடித்துக்கொண்டாலும் சுகமாகவே இருக்கு.

பா.ராஜாராம் said...

இரா மாப்ள, இது ஜாலியா இருக்கு. கமிட் பண்ணிக் கொள்ளாமல், தோணியது போல எழுதிக் கொண்டு. தோணியது போல வாழ்வது மாதிரி. பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்! நன்றி மாப்ஸ்!

நன்றி சேது!

நேசா, பஸ்' சிலும் கொண்டு போய் சேர்த்துட்ட போல. நன்றி மக்கா!

ஆதவன், மிக்க நன்றி! :-)

நன்றிடா வினோ பயலே!

ஆமாவா மஹிக்கா? ஃபிரெண்டுதானக்கா சாமி? அல்லது சாமி ஃபிரெண்ட்! சரி, மஹிக்காவுக்காகவாவது sorry கேட்டுரலாம். sorry சாமி. sorry-க்காக, சாமி ஃபிரண்டு கோச்சுக்கிட்டா நீங்கதான் பொறுப்பு. :-) அன்பிற்கு நன்றிக்கா!

நன்றி பாலாண்ணா!

நன்றி சித்ரா!

நன்றி மணிஜி! :-)

செந்தி, நம்ம நெப்' சையா? :-) நன்றி செந்தில்!

சுகிர்தா, Hope is 'ALL' we have in life!- இல்லையா சுகிர்தா! நன்றி மக்கா!

சுசி, நீங்க இன்னொரு ப்ரபாவா / ராஜாவா? இல்லாத போதுதான் இருப்பு தெரிகிறது. இல்லையா சுசி? நன்றி மக்கா!

நன்றி காமு மக்கா! :-)

இரசிகை said...

neppoliyan manasil yeppavum nippaan.

vaazhthukal rajaram sir..:)

சிநேகிதன் அக்பர் said...

நெப்போலியன் ஊருல உங்களை தேடிட்டு இருக்கானாம் :)

அம்பிகா said...

சிரிப்போட ஆரம்பிச்சு சோகம முடிச்சிட்டீங்க.
என்னோட ஜானி, ( ஜானி மட்டுமே! வாக்கரில்லை.) நினைவு வந்தது. ஒன்றரை வருஷம் எங்களோடு இருந்தது. அதுக்கப்புறம் எந்த நாயும் வளர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

பா.ராஜாராம் said...

ரசிகை, எங்கங்க போனீங்க? தளத்திலும் காணோம்? லாட்டரி டிக்கட் மாதிரி, திம்ஃபு, பூட்டான் என என்னென்னவோ இருக்கு? :-)எவ்வளவு நாள்! நல்லாருக்கீங்களா மக்கா? நன்றியும்!

அக்பர்ஜி, நன்றி! :-)

அம்பிகா, //ஜானி மட்டுமே! வாக்கரில்லை// :-)) நன்றிடா!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நாய்களைப் போல் வேறெதுவும் வராது.

நாய்களோடு பழகுவதற்கும் அவற்றின் முடிவைச் சகிப்பதற்கும் தைரியம் வேண்டும் பா.ரா.

உங்கள் எழுத்தின் ஆன்மா கையைப் பிடித்துக் கூட்டிச்செல்கிறது தொலைதூரங்களுக்கு.

Kumky said...

சொல்ல எவ்வளவோ இருக்கு பா.ரா..

நாய்களை பற்றியும் ஃநாய்களை பற்றியும்..

இருந்தாலும் நாய்கள் மேல்தான்..பீமேலாக இருந்தாலுமே...

நாய்ப்பொழப்பு நன்றியாக இல்லாத நாய்களால் ...ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை...பிழைப்புக்கும் சேர்த்து...

நெப்போலியன்களால் தப்பிப்பிழைத்துக்கொண்டிருக்கினறன சில நாய்கள்...கிடக்கட்டும்...பேசுவோம்..

மறக்காத முத்தங்களுடன்
கும்க்கி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

''ஆமா எதுக்கு தொடரும் என்று போட்டு பொறுமையை சோதிச்சிகிட்டு''repeat.

பா.ராஜாராம் said...

நன்றி சுந்தர்ஜி! //அவற்றின் முடிவைச் சகிப்பதற்கும் தைரியம் வேண்டும்// ஆத்மார்த்தம் சுந்தர்ஜி!

நன்றி தோழர்!

மக்கா ஜெஸ், நன்றி!

அன்புடன் அருணா said...

ரொம்பத்தான் புரையேறிப் போகிறது!

சந்தான சங்கர் said...

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.

பா.ராஜாராம் said...

நன்றி டீச்சர்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும் சங்கர் மக்கா!

Mahi_Granny said...

சேதுவுக்காக கவிதை சரி. '' தொடரும் '' என்னாச்சு

Unknown said...

//கமிட் பண்ணிக் கொள்ளாமல், தோணியது போல எழுதிக் கொண்டு. தோணியது போல வாழ்வது மாதிரி. // வாழ்கையை அதன் போக்கில் ரசிக்கும் இந்த தன்மையே வாழ்க்கையை இன்னும் இனிமையாக்குகிறது.