Friday, August 14, 2009

அனுபவ நீதிக்கதை

முக ஒப்பனை களிம்புகளோடு, புத்திசாலிதனத்தையும் கலந்து முகத்தில் பூசியிருந்தது போல் இருந்தாள் அந்த அம்மணி. முக ஒப்பனை களிம்புகள் குறித்து எனக்கு கவலை இல்லை. அது அவளின் சுதந்திரம். புத்திசாலித்தனம் கலந்ததுதான் எனக்கு எதிரான சதியோ என கலங்கினேன்.

"ஸ்" என அவள் எழுந்து எங்கள் மூவரின் கை பற்றி குலுக்கிய அந்த தருணத்தை அப்படியே ப்ரீஸ் (freeze) செய்து விடுங்கள். பிறகு பின்புறமாக ஒரு மாதகாலம் வரவேணும் நீங்கள். பின்புறம் என்றால் முதுகு முன்னால் வருவதுபோல் பின்புறமாக நடந்து வருவது அல்ல. ஒரு மாத காலத்தை பின்புறமாக நகர்த்துவது. பிளாஷ்பாக்!.. இங்கு நீங்கள் "இச்" கொட்டுவது அனாவசியம். இது பாம்பு-கீரி கதை இல்லை. இடையில் விலகினால் ரத்த வாந்தி பயமில்லை. விலக விரும்புகிறவர்கள் இங்கு விலகலாம். (விலக இந்த சுட்டியை அழுத்துக). ஆனால் ஒன்று, ஒரு பேரனுபவத்தை, வாழ்வில் எதிர்படும் முட்டுச்சுவற்றை எப்படி நீங்கள் கடக்க போகிறீர்களோ என உங்களை பார்த்து நான் பரிதாப பட வேண்டியிருக்கும். கூட வர சம்மதமெனில் இந்த இச் கொட்டுற பிசினசெல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாய் நான் சொல்லுவதை கேளுங்கள். ஆச்சா... வந்துட்டிங்களா.. இனி கேளுங்கள்.

து சுவராசியம் கலந்த ஒரு திரு நாள். மனைவி, சிரித்த முகத்துடன், "ஏங்க உங்களை பாஸ்போர்ட்டை எடுத்து கொண்டு மதுரை வர சொல்லி போன் பண்ணினாள் அனிதா" என்று சொன்னாள். மதுரை போவது சுவராசியம் இல்லை. மனைவியின் சிரித்த முகம் சுவராசியம். பேருந்தில், "கை கொட்டி சிரிப்பார்கள்... ஊரார் சிரிப்பார்கள்..." என எம்.எஸ்.வி. கதறியது ஒரு குறியீடாகவோ, சகுன கேடாகவோ எடுக்கிற மன நிலையில் இல்லை அப்போது. மனைவியின் சிரித்த முகத்திற்கு முன்பாக சகுனகேடோ, குறியீடோ தட்டுபடுவதில்லைதானே.

(Photo by CC licence Thanks #)

"ராஜா அத்தான் சவூதி போறீங்களா? ஒரு பேலசில் வெயிட்டர் வேலை. ஷாமினி அப்பா மாலத்தீவில் இருந்து போன் பண்ணாரு. அங்க ஒரு பிரின்சஸ் வந்து தங்கி இருக்காங்களாம். இவர் செய்யிற ஸ்வீட் பிடிச்சு, இவரை அந்த பேலசுக்கு வேலைக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல. இவருக்கு அங்க போக விருப்பம் இல்லை. ஆனாலும் நயந்து பேசி மூணு விசாவுக்கு சொல்லி இருக்காரு. அவங்களும் சரின்னுட்டாங்கள் போல. பக்கத்தில கபிலன்னு ஒரு பையன், கேட்டரிங் முடிச்சுட்டு இருக்கான். அண்ணன்ட்ட சொல்லி வேலை எதுனா வாங்கி தாங்கக்கான்னு சொல்லிகிட்டே இருந்தான். இவர் பிரண்டோட பேமிலி பிரண்ட் ஒரு பையன், அவனும் கேட்டரிங் முடிச்சிருப்பான் போல... உங்களையும் சேர்த்தா மூணு பேரு... இங்கிலீஸ் பேசுவீங்கள்ள" என்று நிறுத்தியது அனிதா.

து அநியாயமாகபட்டது எனக்கு. முனியாண்டி விலாஸ், கருப்பையா மெஸ் தாண்டி உணவருந்துவதில் அசவுகர்யம் கொள்பவன் நான். வசந்தபவன் மாதிரியான உணவகங்களுக்கு செல்ல நேரிடுகிற சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்திருந்தாலும், அந்த சீருடை வெயிட்டர்கள், எனக்கு அவர்களும் அவர்களுக்கு நானும் முன் பகை இருப்பது மாதிரியான ஒரு உணர்வை அனுபவிப்பவன். மேலும் வடை விள்ள உபோயோகபடுத்தும் கொலை கருவிகளை சட்ட திட்டங்களுக்குட்பட்டு உபயோகித்தறியாதவன் நான்.

வேறு நபர் எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி இருப்பேன். அனிதா, மனைவியின் தங்கை. கொழுந்தியாள்களின் முன் எந்த அத்தான்கள் தோல்வியை ஒப்பு கொள்ள இயலும். என்றாலும்... "அது இல்லை அனிதா, இங்கிலீஸ் பேசிரலாம். அந்த ரெண்டு பசங்களும் கேட்டரிங் படிச்சிருக்காங்கன்னு சொல்றே.. எனக்கு இது பத்தி ஒன்னும் தெரியாதே... என்னை எப்படி இதுல சேர்த்த" என்றேன் அப்பாவியாய்.

"மா, இப்படியே பேசிக்கிட்டு இருங்கத்தான். பொம்பளை புள்ளையை வச்சிருக்கோம்.. ஊரை சுத்தி கடன் இருக்கேன்னு நினைங்க.. எல்லாம் தானா வரும். புகழ் அத்தான் ஹோட்டல்ல இருந்து ஒரு லெட்டர் பேட் தாள் கிழிச்சு அனுப்ப சொல்லியிருக்கேன். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகட்டை அதில் டைப் செஞ்சுக்கலாம். மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். தயவு செஞ்சு நீங்கள் இன்டர்வியு மட்டும் நல்லா பண்ணுங்க" என்ற அனிதாவின் முகம் சற்றேறக்குறைய மனைவியை காட்டியது. நாக்கு துருத்தல் மட்டும் இல்லை.

" ன்டெர்வியுவா?"என்றேன். வீதியில் கிடக்கிற ஐந்து வயது சிறுவனின் மலத்தை மிதித்தது போல.
(Photo by CC licence Thanks #)

"போன்லதான்த்தான். ரெண்டு நாளுக்குள்ள அப்துல் ரஹ்மானுன்னு ஒருத்தர் கூப்பிடுவாரு. வேலை பாக்குறது பைவ் ஸ்டார் ஹோட்டல்லதான். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. பேசாம இங்க தங்குரீங்களா, அவரை இங்கு பேச சொல்லலாம்" என்று கேட்டது அனிதா.

"வேண்டாம், வேண்டாம். கொடுத்தபடியே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்" என்று மறுத்தேன் அவசரமாய். மனைவியின் சிரித்த முக ரகசியம் அம்பலமான வலியோடு ஊர் திரும்பினேன்.

ரண்டு நாள் முன்பான தீபாவளி சிறுவனை போல போனுக்கு குதுகலமாக காத்திருக்க தொடங்கினேன். இந்த குதூகலத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று, மனைவிக்கு முன்பாக ஆங்கிலம் பேசுவது. மற்றொன்று, மனைவிக்கு அறவே ஆங்கிலம் தெரியாது என்பது. மனைவியும் , அனிதாவும் பின்னிய மாய வலையை அறுத்தெறியும் சூட்சுமம் என் கையில் இருக்கிற சுதந்திரத்தை நான் வெகுவாக ரசித்தேன்.

போனும் வந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி இருக்கலாம் நான். சந்தர்ப்பத்தை நழுவ விட நான் தயாரில்லை. "is, was, and, the, right turn, left turn, attention, right about turn, moove to the right in threes" போன்ற முழு, முழு வார்த்தைகளோடு, "a,e,i,o,u," என்கிற வவ்வல்ஸ் தூவி, ஒரு மாதிரியான வாக்கிய தோரணம் அமைத்து, கடலுக்கு அப்புறமாக இருக்கிற அப்துல் ரஹ்மானுக்கு மாலையாக அணிவித்தேன். அப்துல் ரஹ்மானின் முகம் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது. மாறாக.. வலது புருவத்தை உயர்த்தி சற்று அசால்ட்டாக மனைவியை பார்த்தேன். குலசாமியை கண்ட களையில் இருந்தாள் அவள். வழக்கம் போல குடித்துவிட்டு வந்த அன்றிரவுகூட ஒரு வார்த்தை பேசவில்லை அவள். மாறாக, எனக்கு பிடித்த கோழி கறி, சப்பாத்தி செய்து வைத்திருந்தாள். அன்னிய மொழி வலிதுதான் போல....

"ரு அப்பா-அம்மாவிற்கு பிறந்திருந்தால், அந்த அப்துல் ரஹ்மான் இனி ஆங்கிலம் பேச மாட்டாண்டா" என நான் நண்பர்களுடன் பேசி சிரித்ததெல்லாம் வீணாக போயிற்று. ஆம்!.. மீண்டும் ஒரு போன் வந்தது "கேஸ் சிலிண்டெர் ரெடியா இருக்கு வந்து தூக்கிட்டு போங்க... பலசரக்கு பாக்கி எப்ப வரும்" என்பது மாதிரியான போன் மட்டும் பெரும்பாலும் வருவதால், போன் எடுப்பதில் எனக்கும் மனைவிக்கும் மறைமுக போட்டி இருக்கும். போன் மணியை கேட்க்காதது போல இருப்பதில் மறைமுக போட்டி!.. இந்த மாதிரி போட்டியில் பெரும்பாலும் நானே வெற்றி பெறுவது உண்டு. வலிந்து போர்த்திக்கொண்ட எருமை தோல்...

"ப்படியா...அப்படியா" என மனைவி உற்சாகமாய் கேட்டுகொண்டிருந்தது வழமைக்கு மாறாக இருந்தது... பெப்சி உமா இவளை பாட சொல்கிறார்களோ என்கிற பதட்டம் வேறு இருந்துகொண்டிருந்தது. போனை வைத்ததும், "ஏங்க, எந்திரிங்க.. அனிதாதான் பேசினாள். நீங்க இண்டேர்வியுவுல பாசாம். நாளைக்கு பாம்பே போகனுமாம்... விசா அங்க ரெடியா இருக்காம். ஒரு வாரத்திற்குள் நீங்க சவூதி வரணுமாம்"

யோசியுங்கள் அன்பர்களே. என் இடத்தில் நீங்கள் இருந்தாலும் இதையேதான் யோசிப்பீர்கள். "மனைவி,அனிதா,அப்துல் ரஹ்மான் எல்லோரும் கூட்டோ?"... அதையேதான் நானும் யோசித்தேன். கூடுதலாக, மற்றொரு யோசனையும் இருந்தது. இன்டெர்வியுவில் நான் பேசிய ஆங்கிலத்திற்காக "கை எட்டும் தூரத்திற்கு வரட்டும் அவன்" என்று அப்துல் ரஹ்மான் விரும்புகிறாரோ என்று பலவாறு யோசித்து கொண்டிருக்கும் போதே, சவூதி வந்து விட்டது.

(Photo by CC licence Thanks #)

மும்பை போகிற வழியில், திரும்புகிற வழியில், ஏர்போர்ட்டில், விமானத்தில் என நேரம் கிடைக்கிற போதெல்லாம் பொடியன்கள் இருவரிடமிருந்தும் கேட்டரிங் மொத்தத்தையும் கிரகித்து விட முயற்ச்சி செய்து கொண்டே இருந்தேன். அனிதாவும் "டேய்.. அவருக்கு எதுவும் தெரியாதுடா... எல்லாம் சொல்லி கொடுங்கள்" என்று கேட்டிருந்தது. பொடியன்கள் என்றால் பாம் பொடியன்கள். கல்லூரி முடித்த கையோடு வந்திருப்பான்கள் போல. பிரபலமான பாட்ஸ் மேன்களுக்கு பின்னால் கிட்பேக் தூக்கிக்கொண்டு வருகிற தாத்தாபோல வந்து கொண்டிருந்தேன் அவர்களோடு. ஒரு கட்டத்திற்கு மேல் பொடியன்கள் சொல்லித்தருவதில் சுணக்கம் காட்டுவது போல உணர்ந்தேன். கையூட்டு கொடுத்து, சீட் வாங்கி, மூன்று வருட படிப்பெல்லாம் மூன்றே நாளில் என் சாக்கு பைக்குள் திணிக்க திணர்கிரார்களோ என்கிற "ஆசிரிய சந்தேகமும்" இருந்தது. மேலும் சக பயணியிடம் நான் வெறும் சாக்கு பை மட்டும் இல்லை என்கிற கௌரவ பிரச்சினையும் குறுக்கிட்டதால் கெத்தாக இருந்துவிட தீர்மானித்தேன்.

வுதியில், குளிர் ஊட்டப்பட்ட அறை.. குளிர் சாதன பெட்டி.. தனி தனி கட்டில்.. டிவி.. இவை எல்லாம் பார்த்த சந்தோசத்திலும், காஸ் சிலிண்டெர், மளிகை பாக்கி போன் கால்கள் இல்லாத சவுக்கர்யத்திலும் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. கடந்த மூன்று நாளில் ஒரே ஒரு அசம்பாவிதம் மட்டுமே நிகழ்ந்தது. இன்டெர்வியு செய்த அப்துல் ரஹ்மானுக்கு (அனிதா சொல்லியதால்) ஆளுக்கு ரெவ்வண்டு லுங்கியும், கொஞ்சம் லாலா கடை அல்வாவும் வாங்கி வந்திருந்தோம். அன்று மாலை அதை வாங்க வந்திருந்த அப்துல் ரஹ்மான் மேற்படி சாமான்களை பெற்று கொண்டு சும்மா போயிருந்திருக்கலாம். "மூன்று பேரில் யார் ராஜாராம் என்று கேட்டார்" இதில், பொடியன்களுக்கு என்மேல் வருத்தம்போல் தெரிந்தது. பொடியன்களை விட இதில் நான் வருந்தினேன் என்பதை பொடியன்களிடம் காட்டவில்லை. சகபயணி, சாக்குப்பை விஷயத்தில் சுதாரித்துவிட்டேன் என்று சொல்லி இருந்தேன்தானே.

று நாள் ஒரு தையற்காரர் வந்து அளவெடுத்து போனார். மூன்றாம் நாள் மாலையில் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை, கழுத்தில் அணிய கருப்பு வவ்வால் மாதிரியான ஒரு சாதனம் கொண்டு வந்து தந்த மனிதரை நான் எங்கியோ பார்த்தது போல இருந்தது.

ரு திரைப்படத்தில் புரட்சி தலைவர் பெரிய மீசை வைத்து கன்னத்தில் மருவெல்லாம் ஒட்டி மாறுவேடத்தில் இருப்பார். மற்றொரு நபர், தலையில் வெள்ளை துண்டு போட்டு,மாட்டின் கருப்பு மூக்கணங்கயிற்றை துண்டு விழுந்துவிட கூடாது போல மூன்று சுற்று சுற்றி, புரட்சி தலைவரிடம் வந்து கை குலுக்கி, "வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்" என்று கேட்பார். அதற்க்கு புரட்சி தலைவர் கூட, "அவை யாவும் நமக்கே சொந்தம்" என்பார். பதிலில் திருப்தியுற்ற அந்த மூக்கணாங்கயிற்று மனிதர் கையிலிருக்கிற அந்த சின்ன பெட்டியை புரட்சி தலைவரிடம் தருவார்... கொஞ்சம் சிரமப்பட்டால் அந்த மனிதரை மீட்டெடுத்துவிட முடியும் ... முயற்ச்சி செய்யுங்கள்..

ச்சசல் அந்த மூக்கணாங்கயிற்று மனிதர்தான் மறுநாளும் வந்து பிரின்சசின் காரியதரிசி மோனாவிடம் அழைத்து போனார்.

மோனாதான் அந்த அம்மணி, முக களிம்பில் புத்திசாலித்தனம் கலந்து பூசிய அம்மணி!

(Photo by CC licence Thanks #)
--தொடரும்

24 comments:

na.jothi said...

சிறுகதை எழுதியிருக்கேன் சொல்லிட்டு
அனுபவத்தொடர் எழுதரிங்க
வலியை இப்படியும் சொல்லலாமா!
அடுத்த இடுகைக்காக வெய்ட்டிங்

மண்குதிரை said...

suvarashyama irukku sir :-)

kaththirukkiren

S.A. நவாஸுதீன் said...

நண்பா! போட்டோவை பார்த்தால் நீங்க ரியாத்ல இருக்க மாதிரி தெரியுது. நான் அங்கே 7 வருஷம் இருந்தேன். இப்போ ஜித்தாவில் இருக்கிறேன்

துபாய் ராஜா said...

அனுபவ பகிர்வுகள் தொடரட்டும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கதை! அனுபவம் பேசுவது நன்றாக இருக்கிறது. அனிதாவுக்கும் உங்கள் மனைவிக்கும் உள்ள வேறுபாடு சொன்ன இடம்' டாப்.'
எப்போ தொடரும்?

ஹேமா said...

தொடரும்...பாத்திட்டு இருக்கோம்.

உண்மையில் கற்பனையைவிட அனுபவக் குறிப்புக்கள் இயல்பாய் வெளிவரும்.

பா.ராஜாராம் said...

ஜோதி
======
மிகுந்த அன்பும் நன்றியும் ஜோதி.வலிதான் ஜோதி ஆனால் இப்ப சிரித்து யோசிக்க வாய்த்திருக்கிறது.

மண்குதிரை
============
நன்றி மண்குதிரை.அன்பு நிறைய.

S.A.நவாஷுதீன்.
================
அப்புடி போடுங்க.நான் al-khobar ரில் இருக்கேன் நண்பா. அன்பு நண்பர்கள் ரவுத்திரன்,அழகன் கறுப்பி எல்லோரின் குரல் கேட்டாச்சு.அடுத்து உங்கள் குரலும் கேட்க்கனும்.என் மின் முகவரி"தொடக்க பள்ளி"கவிதையின் முன்னுரையில் இருக்கு நவாஸ்.அலை எண் குறிப்பிட முடியுமா.தொடர்பு கொள்கிறேன்.ஜமாலன் கூட ரியாத்தில் இருப்பதாக கேள்விபட்டேன்.கை இணைத்து கொள்ள வேணும்.நிறைய அன்பும் நன்றியும் மக்கா..

பா.ராஜாராம் said...

துபாய் ராஜா
============
வணக்கம் ராஜா..நல்லா இருக்கீங்களா?உங்களின் தொடர் வருகை மிகுந்த சிலிர்ப்பும் நன்றியும் மக்கா...பழைய கவிதைகளுக்கு கூட பின்னூட்டம் இட்டுருக்கிரீகள்,நீங்களும் சேரலும்... இனிதான் பதில் எழுத வேணும் ராஜா.வேலை தொடங்கியாச்சு. அதான் தாமதம்.நிறைய நன்றியும் அன்பும் மக்கா.

ஜெஸ்வந்தி
============
ஆமாம் ஜெஸ்..."கருவேலநிழல்" என்றாலே"அழுகாச்சி" வீடு போல் இருக்கு என நண்பர்களும் சொல்கிறார்கள்.நானும் உணர்கிறேன்.சரி..."வாய்த்ததை சிரித்து பேசுவோமே"என்று தோன்றியது...என்ன ஒன்று இதில் புனைவு அதிகம்.மற்றபடி எப்பவும் போலான அன்பும் நன்றியும் தோழி.

ஹேமா
=======
அது சேரி...ஹேமா,நான் மாட்டி கொண்டு விழிப்பதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு.இது,அனுபவ குறிப்பும்,அனு"பாவ"குறிப்பும் தான்.ஒரு அனுபவத்தை நண்பர் ஜெகநாதன் மொழியில் பேசி பார்ப்போமே(நன்றி..ஜெகா).உங்களுக்கு என வைத்திருக்கும் அன்பையும் நன்றியையும் உங்களுக்கு தானே தர இயலும்.

நட்புடன் ஜமால் said...

யப்பா எம்மாம் பெருசு.

நவாஸு, ஷஃபி, தமிழ் பிரியன் இன்னும் பல பேர் இருக்காங்க சவுதியில் இணையுங்கள்

----------------

அனுபவத்தை நீங்கள் தொடராக தந்து உங்கள் எழுத்து வழி உங்கள் அனுபங்களையும் எங்களை தொடர செய்வித்து விட்டீர்கள் ...

ரௌத்ரன் said...

அலுவலகத்தில் ஏற்கெனவே நம்மள ஒரு மார்க்கமா தான் பாக்குறாய்ங்க...போதாக்குறைக்கு இந்த இடுகைய காலையில படிச்சு அடக்க மாட்டாம கெக்கெ பிக்கெ னு தனியா சிரிச்சு வேற வச்சுட்டேன்..இந்நேரம் confirm பண்ணியிருப்பாய்ங்க :)

அடுத்த மேட்டரயும் போடுங்க...

பா.ராஜாராம் said...

நட்புடன் ஜமால்
================
ஆமாம்தான் ஜமால் பெருசுதான்...இல்ல.இன்னும் ஒரு பதிவு மட்டும் இது போல.அப்புறம் குறைச்சிரலாம்.பேரு வச்சாச்சு பிடிக்கிலைன்னாலும் இந்த ஒரு முறை கூப்பிட்டுகிருங்க ...சமர்தில்லையா நம்ம ஜமால்....இன்று நம் நண்பர் நவாசுடன் பேசினேன்.பிடித்த உலகம் கைக்கெட்டும் தூரத்தில் ஜமால்..சந்தோசமாக இருக்கிறது.

ரௌத்ரன்
==========
பாருங்கள் ராஜேஷ்...ஜமால் அடிக்க வர்றார்.மிகுந்த அன்பும் நன்றியும் ரௌத்ரன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நகைச்சுவையினூடே உங்கள் வலியும் இருக்கிறது

சொந்தக்கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்ததை எதிர்பார்த்து...

Nathanjagk said...

ஆஹா.. எத்துணை அருமை! ஒரு நாவலை குறுகத்தரித்து விட்டீர்கள் ராஜா! எப்போதுமில்லாத ஒரு கேலி, ​நையாண்டி, துள்ளல் காண்கிறேன்! ரத்த வாந்தி ​மோடி-மஸ்தான் பயங்காட்டினாலும் பாதியில் கதையை நிறுத்த மனமிராது - யாருக்கும்! //வடை விள்ள உபோயோகபடுத்தும் கொலை கருவிகளை// ​வெஜ்ஜில் ஒரு நான்-வெஜ் ஒளிந்திருப்பதை இன்று உணர்ந்தேன்! //எனக்கு பிடித்த கோழி கறி, சப்பாத்தி செய்து வைத்திருந்தாள். அன்னிய மொழி வலிதுதான் போல....// ​ரசித்தேன்! கதையோடு புகைப்படமும் நடந்து வருகிறதே? அருமையான பகிர்வு! ​தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Unknown said...

Nanba....,

I have really enjoyed it...,

Super...expecting more...,

Now a days...elakuvana ethupondru stories padikkathan romba pudikkuthu...compare to tough kavithai...

Kavithai..oru kalathil thriumpa thriumpa padippanee...,

Eppa irrukurra arasal purasal valkaiyil..this is much relief for time passing....

go ahead anna...and provide more,

yours
mathi

Unknown said...

in continuation with earlier email...,

namma valkiyilae...egapatta kutu vettu...

athula..ukka makaa...on sokathiyum padichu enna panna poram chollu...,


athukku sugama ippidi elluthu..sirichittu povam jollyaaa...

பா.ராஜாராம் said...

அமிர்தவர்ஷிணி அம்மா
========================
ஆகட்டும் அமித்து அம்மா."அமித்து அப்டேட்ஸ்" beutiful! keep going...பழைய அப்டேட்ஸ்-சும் வாசிக்க வைக்கும் "குழந்தை நடை"அபாரம்!..வருவேன்,ஒழிந்த நேரமாய்.நன்றியும் அன்பும் அமித்தம்மா.

பா.ராஜாராம் said...

gayathri
=======
மதி!..ரொம்ப சந்தோசம்டா.இப்படி,இதை எழுதியதிற்கு மிக முக்கிய காரணம் நீயும்.ஆகட்டும்டா மதி..இனி இதையும் தொடரலாம்.மிகுந்த அன்பும் நன்றியும்டா பயலே.

பா.ராஜாராம் said...

ஜெகநாதன்
===========
இந்த மொழி உங்களிடமிருந்து திருடியதுதான் ஜெகா.திருட்டு ராஸ்கல் இந்த ராஜா.நல்ல வந்திருக்கா... அப்ப நானும் வச்சுக்கிரட்டா?..புகை படத்திற்கான சிலாகிப்பை வழக்கம் போல் நண்பருக்கும் சகோதரனுக்கும் தருகிறேன்(சந்தோசத்தை பகிர்ந்து தர சந்தோசம் இரட்டிப்பாகிறது) மற்றபடி, மிகுந்த அன்பும் நன்றியும் ஜெகா.

இரசிகை said...

niraya sirichchutten...........saththama.

yellaarum oru maathiri paarkkuraanga:))

பா.ராஜாராம் said...

ஆஹா...நமுட்டு சிரிப்பு ரசிகை சத்தமா சிரிச்சுருக்காங்க...எவ்வளவு சந்தோசம்!..நன்றியும் அன்பும் ரசிகை.

Nathanjagk said...

//இந்த மொழி உங்களிடமிருந்து திருடியதுதான் // இது அடுக்குமா? இப்படி திருடு கொடுத்ததற்கு மிகவும் சந்தோஷமாகிறேன்! ஆனால் நான்தான் உங்களிடமிருந்து நிறைய திருட ​வேண்டும் போல! உதியமரத்தின் வாசனை என்னை எப்போதோ திருடனாக்கிவிட்டது - ​தெரியுமா? அனுபவ நீதிக்கதை என்னைக் ​கொள்ளைக்காரன் ஆக்கிவிடும் ​போலிருக்கிறதே!

பா.ராஜாராம் said...

ஆகட்டும் ஜெகா,மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா..ரமதான் வேலைகள் தொடங்கியதால் நேரம் வாய்க்க காணோம்..பிறகு மெதுவாக பேசுவோம்.

sriramsharma said...

what a write up.....!!!!!!
vaangaiyya engaiyaala orunaal umakku samaichu podanum...!

Kumky said...

இன்னைக்குத்தான் இந்தப்பக்கம் வர முடிஞ்சது....இப்படியே அடிக்கடி வந்துகிட்டிருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்....

"மூன்று பேரில் யார் ராஜாராம் என்று கேட்டார்" இதில், பொடியன்களுக்கு என்மேல் வருத்தம்போல் தெரிந்தது. பொடியன்களை விட இதில் நான் வருந்தினேன் என்பதை பொடியன்களிடம் காட்டவில்லை. சகபயணி, சாக்குப்பை விஷயத்தில் சுதாரித்துவிட்டேன் என்று சொல்லி இருந்தேன்தானே.

எவ்வளவு நுண்ணிய விவரிப்பு...

தொடருக்கு ஆவலாக வெயிட்டிங் தோழர்..