எவ்வளவு சத்தியமான வார்த்தை!
கணையாழியில், ஆனந்த விகடனில் ஒரு கவிதை பிரசுரமானால் போதும். அப்பா, அந்த புத்தகத்தை ஒரு குழந்தையை போல இடுக்கி கொள்வார். உறவினர்கள் வீடெல்லாம் போய் திரும்பும் குழந்தை. ஒரு வாரம், பத்து நாள் வரையில் புத்தகத்தை திருப்பமாட்டார். திருப்பும் போது பத்து நூறு வருடம் வாழ்ந்தது போல் தளர்ந்திருக்கும், முன்பு பச்சை வாடை வீசும் குழந்தையாய் இருந்த புத்தகம். பச்சை வாசனை மறைந்து, அப்பா வாசனை, உறவுகள் வாசனை வரையில் புத்தகத்தின் பக்கங்களில் உணர வாய்க்கும்.
இன்று ஒரு முழு கவிதை தொகுப்பு! அப்பாவை காணோம்.
"எதையாவது இழந்து தாண்டா எதையாவது பெற முடியும்" என்று அப்பாதான் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார். அந்த அப்பாவிற்குத்தான் இந்த முதல் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அப்பாவை இழந்து பெற்ற முதல் தொகுப்பை.
அப்பா மாதிரி நிறைய மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு கூறவே இப்பதிவு.
"டேய் பழசெல்லாம் நினைவு படுத்தி எழுது. உனக்கு ஒரு பிளாக் திறக்கலாம்" என்று தொடங்கினான் கண்ணன்.
எழுதி அனுப்பிய முதல் கவிதையை பார்த்த நண்பர், " ரொம்ப நல்லா இருக்குங்க. பின்னால தொகுப்பாய் வர கூட வாய்ப்பிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்" என்று நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் வாய் வைத்தார். என் அண்ணன் மகள் கவிதாவும், நண்பர் அ.மு.செய்தும், "தொகுப்பு, தொகுப்பு" என்று தொண தொணத்து கொண்டு இருந்தார்கள். இந்த சமயத்தில் அவர்களையும் நினைத்து கொள்ள பிடிச்சிருக்கு. கவிதா என்ற தமிழ் என்ற உதிரா, மற்றும் என் செய்யது, இனி, தூங்குவீர்கள்தானே?
"அழுத்தமான கவிதை.பாராட்டுக்கள்!" என்று முதல் பின்னூட்டத்தை குழைத்து ஊட்டினார், கோவி.கண்ணன் சார்! கவனியுங்கள் அவர் வாழ்த்துக்கள் என்று சொல்லவில்லை. பாராட்டுகள் என்றார்!. அது ஒருவேளை நண்பருக்கும் கண்ணனுக்கும் பிடித்து பாரா-ட்டிவிட்டார்கள் போல..
இப்படியாக தத்தி, தத்தி போய் கொண்டிருந்த தளத்தின் ஓட்டத்தில் ஒருநாள் "நீங்கள் சிவகங்கை பா.ராஜாராமா?" என்று புயல் போல் நுழைந்தான் என் சுந்தரா என்ற உங்கள் ஜியோவ்ராம் சுந்தர். அன்று ஒரு நாள் மட்டும் கிட்ட தட்ட பதினைந்து பின்தொடர்பாளர்கள் சேர்ந்தார்கள். "எங்கிட்டு கிடக்கிறான்களோ" என்று நினைத்து கொண்டிருந்த பழைய உயிர் நண்பர்கள் மூன்று பேர், ஒரே நாளில் கிடைத்தார்கள்! உசும்பி உட்க்கார்ந்த மறக்க முடியாத நாள் அது!
சிறுக சிறுக பேச்சும், அரவமும், சிரிப்பும், சந்தோசமுமாக என் வீடு நிறைய தொடங்கியது. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ஒரு மனிதர்கள் எனவே உள் வாங்குகிறேன் எப்பவும். அப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் சேகரித்திருக்கிறேன் இப்போது!
பின்னூட்டமிட்டது ஒரு 10% மனிதர்கள் என அனுமானிக்கலாமா? என்று அறுதியிடும் இணையம் சம்பந்த பட்ட பார்வை என்னிடம் இல்லை. ஆனால்..
"எத்தனையோ ஆயிரம் கண்கள் என் கவிதையை வாசித்திருக்கும் என்றும் எத்தனையோ ஆயிரம் மனங்கள் என் கவிதையில் இடறி இருக்கும்" எனவும் நினைத்து கொள்ள பிடித்திருக்கிறது.
"ஒன்னுக்கு பத்தாக நினைத்து கொள்வதே இந்த பயலுக்கு பொழைப்பா போச்சு" என்று குறுக்கிடுகிற உங்கள் மன ஓட்டம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. எனினும், எனக்கு பிடித்த மாதிரி நினைத்து கொள்ளும் என மன ஓட்டத்தை பகிரத்தானே வேணும்.
பாருங்கள் பேச்சு சுவராஸ்யத்தில் நூலை விட்டு விட்டேன். ஆங்..இப்படியாக போய் கொண்டிருந்த ஒரு நிறை நாளில், உயிரோடை லாவண்யா ஒரு மின் மடல் பண்ணுகிறார்கள்,
"உங்கள் கவிதைகளை தொகுக்க விருப்பமா பா.ரா.?" என்று. நம்ப முடியாத திருப்பம் அது.
(கட்டு கட்டாக எழதிய கத்தைகளை" தேர்வு பெற்றால்..எங்கள் பதிப்பக செலவிலேயே தொகுப்பு வரும்" என்று விளம்பரம் செய்த சிந்து அறக்கட்டளை(என நினைவு)க்கு அனுப்பிய முயற்சியும்,.. பிறகு தெரிந்த ஒரு பதிப்பகத்தில் "பத்தாயிரம் இருந்தால் அச்சு கோர்த்துருவோம்" வார்த்தையை கேட்டு தொகுப்பு கனவை குழி தோண்டி புதைத்து, சம்மணம் கூட்டி மேலே உட்கார்ந்து கொண்டதும் நினைவாடுகிறது...இத்தருணத்தில்.)
லாவண்யாவிடம், "சரி" சொல்லி, நண்பர்களுக்கு அந்த மெயிலை பார்வர்ட் பண்ணி, இருவரும் தயார் ஆவதற்குள் லாவண்யாவே தளம் நுழைந்து, கவிதைகளை வாரி சுருட்டி கொண்டு போகிறார்கள்.
வீட்ல எந்த ஒரு நல்லது, கெட்டது என்றாலும் கௌரி, கவிதா, சீதா என்ற எதிர் வீட்டு மூன்று மருமகள்களும் இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள். "எதுக்குண்ணே சமையக்காரருக்கு கொண்டு போயி காசு கொடுக்கிறீக" என்று உரிமையாய் கடிவார்கள்.
அவர்களை பார்த்தது போல் இருந்தது சகோதரி லாவண்யா வருகை. லாவண்யா கொண்டு போன இடம் அகநாழிகை!
"அட, நம்ம வாசு!" என்று நிமிர்வதற்குள்,..
"உங்கள் கவிதைகள் அச்சுக்கு போயிருச்சு, அட்டை தயார், புத்தக சந்தைக்குள் வந்துவிடும்" என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டே இருப்பார் வாசு.
"சரி, எல்லாம் தயார். முன்னுரை எழத தொடங்குங்கள்" என்று வாசு சொன்ன போது துணுக்குற்றேன். நம்ம கவிதைக்கு நம்மளே என்னத்தை முன்னுரை எழதுவது என, "நண்பன் நேசனை விட்டு ஒரு விமர்சனம் போல் எழுத சொல்வோமா, வாசு?" என்று கேட்ட போது..
"சரி. ஆகட்டும். சீக்கிரம்.."என்றார்.
நேசனிடம் கொண்டு போனேன். "நட்பை விலக்கி விட்டு நேர்மையான விமர்சனமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்" என கேட்டுக்கொண்டேன்.
நேசனிடம் ஒரு அதீத குணம் உண்டு. கவிதைகளை சார்பற்று அணுகும் திறன்! குறையை நேர்மையாக உணர்த்தும் பக்குவம். என் தளத்தில் பின்னூட்டம் வாயிலாக சொல்லி சென்றதை விட, பிரதி மாதம் ஒரு குடும்பம் பிழைக்கிற அளவு தொலை பேசிக்கு செலவு செய்து பக்குவ படுத்துவது அதிகம். கோமணத்தை வரிந்து கட்டிக்கொண்டு உழுது தீர்த்து விட்டான் நண்பன்! என் அன்பும் விலகாத படிக்கு. அவன் நேர்மையும் பிசகாத படிக்கு.
ஆக, இந்த ஆறு மாத காலத்தில் ஒரு விஷயத்தை தீர்க்கமாக உணர்கிறேன். இந்த வலை உலகம் என்பது சற்றேறக்குறைய ஒரு முழு குடும்பமாக இயங்குகிறது என்பதே அது!
எந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை? அல்லது பிரச்சினைகள் இல்லாத குடும்பம், குடும்பமா என்ன?
உயிருக்கு போராடும் சக பயணிக்காக ஒன்று சேர்வது தொடங்கி, சக பதிவரின் குடும்பத்தில் ஒரு விலை மதிப்பற்ற உயிர் இழப்பு ஏற்படும்போது, அவரின் மனசிற்கு நெருக்கமாக தன்னை அர்பணித்து கொள்வது வரையில் என..
யோசியுங்களேன்..
எப்பேர்பட்ட குடும்பம் மக்கா, நம் குடும்பம்!அந்த குடும்பத்தில் இருந்து, இன்று ஐந்து புத்தகங்கள் வெளியீடு ஆகிறது. அடுத்த புத்தகை சந்தைக்கு இது ஐநூறு, ஐயாயிரமாக பெருகட்டும் என்பதே விருப்பம். வேண்டுதலும்.
லாவண்யா, வாசு, நேசா, மற்றும் என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி வரும் உங்கள் யாருக்கும் நன்றி சொல்ல போவதில்லை. யாருக்கு யார் நன்றி சொல்வது?
நினைவு கூர்கிறேன், அவ்வளவே!
வேலையோடு, வேலையாய் நம் விசேஷத்திற்கு ஒரு எட்டு போயிட்டு வந்திருங்க மக்கா...
நிறைய அன்பும், சந்தோசங்களும்!
76 comments:
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தொடர்ந்து அடுத்தடுத்த கவிதை தொகுப்புகள் வெளிவர வேண்டும் என்பதும் என் விருப்பம்..
வாழ்க நட்புடன் பாசத்துடன் வளமுடன்
முதலில் வாழ்த்துகள் நண்பரே..
அப்பா என்ற சொல்லே ஒரு அலாதி தான். அதற்கு ஈடு இணையே இல்லை. அவரின் ஆசிகளால் தான் இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது.
என்றும் உங்களுடன் உங்கள் கவிதையாய் உங்களுடன் இருந்து கொண்டு தான் இருப்பார்.
நீங்கள் சொல்வது போல் வலையுலக நட்பு மிகவும் நுட்பமானது. அதீத அன்பு சில சமயம் நம்மை திக்கு முக்காட வைக்கிறது.அது அளவில்லாத ஆனந்தம். என்றும் தொடரட்டும்.
மிக்க மகிழ்ச்சி. நாளை விழாவில் சந்திப்போம்.
அன்புடன்
சூர்யா
நெகிழ்வான பதிவு பா.ராஜாராம்.
இனி தூக்கமா ?? இனிமே தான் நிறைய இருக்கு..! ஒரு கவிதை தொகுப்போடு மனநிறைவு அடைந்து விட்டீர்களா ??
விடுவமா நாங்க ??
இன்னும் நிறைய எழுத வேண்டும் பா.ரா !!! கவிதை தொகுப்பு அடுத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, நாவல் வழி நீண்டு இறுதியில் மொழிபெயர்ப்பில் செட்டிலாக வேண்டாமா ?? கெளம்புங்க.!!
புத்தக வெளியீட்டிற்கு செல்ல முடியாமல் மிகவும் வருத்தமாக இருக்கிறது.வாசு மன்னிப்பாராக !!
manamaarntha vaazhthukkal Rajaaram. Manasukku pakkathula irukkum ungal ezhuthukkal en veetlayum varathula romba santhosam.
வாழ்த்துக்கள் அண்ணாச்சிக்கும், அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்....
மனமார்ந்த வாழ்த்துகள்..
:).. வாழ்த்துகள் பாரா...! திரைக்குப் பின்னால் பல சுவாரஸ்யங்கள்... நெகிழ்வான நினைவுகள்... பகிர்ந்தமைக்கு நன்றி..!
ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு பா. ரா. :-)
என் மனமார்ந்த வாழ்த்துகள்.. :-)
வாழ்த்துக்கள் ராஜாராம் !!
//அப்பாவை இழந்து பெற்ற முதல் தொகுப்பை//
:(((
//"எத்தனையோ ஆயிரம் கண்கள் என் கவிதையை வாசித்திருக்கும் என்றும் எத்தனையோ ஆயிரம் மனங்கள் என் கவிதையில் இடறி இருக்கும்" எனவும் நினைத்து கொள்ள பிடித்திருக்கிறது.//
நிச்சயமா ராஜாராம்.
மென்மேலும் உங்கள் எழுத்து சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மன நிறைவுடன்.
வாழ்த்துக்கள்
நல்லா அடிச்சி ஆடுங்க சித்தப்பு
முதலில் வாழ்த்துகள், நான் விழாவிற்கு செல்கிறேன. நான் கேட்டேன், அவர் இல்லாமயே அவர் புத்தகத்தை வெளியிடறீங்க ரொம்ப நல்ல விஷயம் னு, உங்களால் வர முடியாத சூழல். அகநாழிகைக்கு என் நன்றிகள்
அண்ணா உங்க எழுத்து இருக்கே, அப்படியே கரைய வச்சிடுது, இவ்வளவு நேசம் நிரம்பிய மனிதரை நான் இதுவரை பார்க்கக் கூட இல்லை னு அறுதியிட்டு சொல்ல முடியும் என்னால். இந்தப் பதிவில் நிரம்பி வழியும் நேசத்தை அதில் நான் கரைந்து போனதை எப்படி சொன்னாலும் என்னால் முழுமையாக சொல்லிவிட முடியாது.
என்னை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி சித்தப்பா. தாத்தாவின் பரிபூரண ஆசிர்வாதத்தால் 'முதல் புத்தகம்' வெளியிட்டுருக்கிறீர்கள். மிக்க சந்தோசம். வாழ்த்துக்கள். நல்ல விஷயங்கள் ஒருவருக்குள்ளே முடங்கிவிடாமல் இளைய தலைமுறைக்குச் செல்ல நல்லதோர் வாய்ப்பு. நல்ல அன்பையும், யதார்த்த வாழ்க்கை நடைமுறையையும் சித்தரிக்கும் உங்கள் கவிதைகள் படிப்பவர் அனைவர் மனத்திலும் நீங்காத ஒரு நெகிழ் உணர்வை ஏற்படுத்தும். தொடருங்கள் உங்கள் பயணத்தை............
அப்பத்தாவிற்கு புத்தகத்தை அனுப்புங்கள். ஆறுதலாய் இருப்பார்கள். அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்.
அண்ணா மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
once again !!
//நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.
தட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள் //
ஏனோ இப்பதிவை பார்த்ததும் உங்களின் இக்கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
தொகுப்பிற்கு வாழ்த்துகள்!!
புரியாத கவிதைகள் படிக்கிறப்போ எல்லாம் உங்க ஞாபகம் வரும். எல்லாரும் பயன்படுத்துற வார்த்தைகள சின்ன சின்ன பூக்களா எடுத்து அழகா ஒரு மாலையா தொடுக்க உங்கள மாதிரி ஒரு சிலரால தான் முடியுது!!
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!!
பா.ரா.ட்டுக்கள்!!
Naanbaaaa.....,
Sahothara.....,
Namba mudiyavillai....
Nambamalum irrukka mudiyavillai....
Un Elathai ethirparthu ethirparthu ....unathu site parthuvittuthan...andru vellai arambam...kumthuam...anathavikatan..appuramthan...
Great achievement buddy keep it up...
Yes...our uyirana nanbanukkuthan..intha thokkubu samarbanam...
Yours,
Mathi
வாழ்த்துகள்.
நட்பை நினைவு கூர்தலே அலாதி ப்ரியம் தான் மக்கா ...
உங்க பதிவைப் படிச்சுட்டு.... நெகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும், நண்பர்களுக்கும் :))))))))))))))))))))))))))))))))))
வாழ்த்துகள் பா.ரா. தங்களுக்கு மீண்டும் ஒரு “காலத்தின் வாசனை”?!!!
கண்டிப்பாக மேன்மேலும் புகழ் பெறுவீர்கள்.
உங்கள் எளிமைக்கு ஒரு வந்தனம்.
”கருவேல நிழல்” புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் ராஜாராம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைத்தளத்திற்கு இன்று வந்தேன். ஒரே மூச்சில் கவிதைகளை எல்லாம் படித்தேன். என்ன சொலவது? எப்படி உங்களை பாரட்டுவது?
ஒவ்வொரு கவிதையும் இதயத்தை உருக்கும் வரிகள்!
அப்படியே உங்களை கட்டித்தழுவி அணைத்து பாரட்ட வேண்டும் நண்பரே!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
\\அப்பா, அந்த புத்தகத்தை ஒரு குழந்தையை போல இடுக்கி கொள்வார். உறவினர்கள் வீடெல்லாம் போய் திரும்பும் குழந்தை. ஒரு வாரம், பத்து நாள் வரையில் புத்தகத்தை திருப்பமாட்டார். திருப்பும் போது பத்து நூறு வருடம் வாழ்ந்தது போல் தளர்ந்திருக்கும், முன்பு பச்சை வாடை வீசும் குழந்தையாய் இருந்த புத்தகம். பச்சை வாசனை மறைந்து, அப்பா வாசனை, உறவுகள் வாசனை வரையில் புத்தகத்தின் பக்கங்களில் உணர வாய்க்கும்.//
அழகா விவரிச்சிருக்கீங்க.. :)
மகாப்பா, முதலில் வாழ்த்துகளைப் பிடியுங்கள். நம் குடும்பத்தின் நம்பிக்கைகளில் உங்களையும் முன்னிருத்தியிருக்கும் இந்த புத்தகம், அகநாழிகை பொன் வாசுதேவனுக்கு என் நெஞ்சார்ந்த பா.ரா.ட்டுகள்.
தொடருங்கள், கருவேல நிழல்-பாகம் இரண்டுக்காக காத்திருக்கிறேன்.
வாழ்த்துகள் ராஜாராம்! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! தங்கள் தந்தையார் கண்டிப்பாக மகிழ்ச்சியில் புன்னகைத்துக்கொண்டிருப்பார். மிக நெகிழ்ச்சியான இடுகை!
Dear Pa.Ra,
Bear with my English fonts. Many congratulations to you!!
It is a great achievement i would say!
And many a thanks to Lavanya, Vasu and Nesamithran for their support and efforts, they would certainly feel happy to bring you to the lights.
I am in cloud nine as if its my release. Fortunate to be associated with you as a good friend.
Warmest Regards,
Ragavan
என் மனமார்ந்த வாழ்த்துகள்.. :-)
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் பா.ரா.
//இந்த வலை உலகம் என்பது சற்றேறக்குறைய ஒரு முழு குடும்பமாக இயங்குகிறது என்பதே அது!//
இது முற்றிலும் உண்மை.
ராஜாராம்: ஏற்கனவே சொன்னதுதான். நிச்சயம் ஒரு எட்டு போய் விட்டு வந்து விடுவது என்றுதான் உள்ளேன். :)
ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க.
--வித்யா
பா ரா ட்டுக்கள் பா ரா .......
//எதையாவது இழந்து தாண்டா எதையாவது பெற முடியும்" என்று அப்பாதான் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார். அந்த அப்பாவிற்குத்தான் இந்த முதல் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.//
நல்லது...
அடுத்த படைப்பிற்கு தயாராகுங்கள்...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே...
புத்தக வெளியிட்டு விழாவில் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்பட்டேன். ஊருக்கு வரும்போது நேரில் பேசலாம்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பா.ரா.
வார்த்தைகளால் அடித்து துவைத்து போட்டுவிடுகிறீர்கள. மனதுக்குள் ஊடுருவி விடுகிறீர்கள். உங்கள் ஜூபூம்பா கவிதைபடித்துவிட்டு என் அப்பா ஞாபகம் வந்து விழியோரம் கண்ணீர் துளிர்த்திருக்கிறேன். அது போல் இன்னும் நிறைய.
வேலையோடு, வேலையாய் நம் விசேஷத்திற்கு ஒரு எட்டு போயிட்டு வந்திருங்க மக்கா... //
கண்டிப்பா, இது நம்ம வீட்டு விசேஷமல்லோ. எங்க பா.ரா அண்ணனுக்காக நாங்க போகலைன்னா எப்படி? :)
நான் ஏற்கனவே சொன்னபடி...
வாழ்த்துக்கள் அண்ணே.
அன்பின் பா.ரா, அண்ணா. மிக நெகிழ்ச்சியான தருணமாக இதை உணர்கிறேன். வாழ்த்துக்களும் அன்பும்.
ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் உங்கள் தொகுதி வருவதாயிருந்தது - அது தொடர்பாக நீங்கள் என்னை மாலைக்கதிர் ரவியை (தானே?) சந்திக்கச் சொல்லி எழுதியிருந்தது எல்லாம் ஞாபகம் வருது.
சந்தோஷம் மக்கா. இன்று வெளியீட்டு விழாவிற்குச் செல்கிறேன். நாளை உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் பா. ரா.
என்னால் விழாவிற்கு போக முடியாத சுழ்நிலை. வாசு மன்னிப்பாராக
:)
ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா. சந்தோசத்தில என் கண்ணுல தண்ணி வந்தது இதுதான் முதல் முறை. வாழ்த்துகள் அண்ணா.
இவ்வளவு கவிதை எழுதி புத்தகம் போட்டு என்ன பிரயோஜனம்..ஒரு சின்ன விஷயம் உங்களுக்கு புரியலையே ?
//அப்பாவை காணோம்
உங்களை எழுத வைத்திருப்பது, எழுதிக்கொண்டிருக்க வைப்பது அவர் தான்னு உங்களுக்கு புரியலையா ??.
வாழ்த்துக்கள். சிகரம் தொடுங்கள்.
//எப்பேர்பட்ட குடும்பம் மக்கா, நம் குடும்பம்!அந்த குடும்பத்தில் இருந்து, இன்று ஐந்து புத்தகங்கள் வெளியீடு ஆகிறது. அடுத்த புத்தகை சந்தைக்கு இது ஐநூறு, ஐயாயிரமாக பெருகட்டும் என்பதே விருப்பம். வேண்டுதலும்.// .............. வெளியிடப்படும் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள். பெருமைக்குரிய விஷயம்.
\\எத்தனையோ ஆயிரம் கண்கள் என் கவிதையை வாசித்திருக்கும் என்றும் எத்தனையோ ஆயிரம் மனங்கள் என் கவிதையில் இடறி இருக்கும்" எனவும் நினைத்து கொள்ள பிடித்திருக்கிறது.//
அந்த ஆயிரம் கண்களில் என் கண்களும் கலந்துள்ளன,
ஆயிரம் மனங்களில் என்
மனமும் இருக்கிறது
என சொல்லிக் கொள்ளவே பெருமையாய் இருக்கிறது.
மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
மிகச் சிறந்த இடுகை ஸார் இது..
சித்தப்பா! என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய சிகரம் தொடணும்.
நெகிழ்வான பதிவு. உங்கள் தந்தையின் ஆசி இன்னும் பல தொகுப்புகள் வர வழி செய்யும் விரைவில். என் மனமார்ந்த வாழ்த்துகள் பா ரா.
//"எதையாவது இழந்து தாண்டா எதையாவது பெற முடியும்" என்று அப்பாதான் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார். அந்த அப்பாவிற்குத்தான் இந்த முதல் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அப்பாவை இழந்து பெற்ற முதல் தொகுப்பை.
//
சற்று கண்கலங்கி விட்டேன் ஐயா. மிக சிறந்த பதிவும் கூட.உங்களுடன் கவிதைகள் மட்டுமில்ல,மனிதமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீடுடி வாழ்க ஐயா.
தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்..:)
santhoshamaana vaazhththukal rajaram sir...:)
niraya yezhuthanum..
poruppukal koodip pochchu..ok-va?
innum innum ithey pol santhosamaana nigazhvukalai yethirpaarppom...!!
:)
ஆறு மாதத்துக்குப் பிறகு ஒரு புத்தக வெளியீடு மட்டுமல்ல ராஜா , ஒரு அருமையான மனதைத் தொடும் பதிவு வேறு. உங்கள் கனவு நனவாக உதவிய அத்தனை நண்பர்களுக்கும்சேர்த்து என் வாழ்த்துக்கள்.
இது ஒரு ஆரம்பம் தான். தொடரட்டும்.....
தங்களின் தொகுப்புகள் கண்டிப்பாக எங்களுக்கு வகுப்பெடுக்கும்.
முதல் படி வைத்துள்ளீர்கள் விண்ணேற ஆசை
நெஞ்சார்ந்த மனமார்ந்த் இன்னும் பல ந்த போடலாம் வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்வின் முக்கியமான, பெருமைப்பட வேண்டிய தருணங்களில் ஒன்று ராஜா. உங்கள் எழுத்துக்குக் கிடைக்கும் சரியான மரியாதை இது. இத்தனை பேரை உங்கள் எழுத்துகளில் கட்டிப் போடுவதென்பது சாமான்யமா? இன்னும் நிறைய சாதிக்கப் போவது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
லாவண்யா மற்றும் வாசுவுக்கும் நன்றிகள்.
அனுஜன்யா
இதோ இந்த ஜன்னல் வழி மேகம் ரியாத்தை கடந்து மதராஸ் பட்டினத்திற்கு போகுமா ...?
அட கண்டங்கடக்கும் இந்த ஹேர்பின் கழுத்துப் பறவை ?
நினைத்துக் கொள்ளத்தான் வாய்த்திருக்கிறது பா.ரா
சில புராணப் புனைவுகள் மிக பிடித்தமாகவும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கவும் தூண்டுவன
அகத்தியன் திருக்கல்யாணத்தின் போது பிரபஞ்சத்தின் சமனிலைக்கு ஒரு படிகல்லாய் தென் திசை வந்தபின் பிரத்தியேகமாக அதே
கோலத்தில் காட்சி அளித்ததான கற்பனை போல
மகா திருமணத்தின் போது இரண்டாம் பதிப்பின் வெளியீட்டில் கலந்து கொள்வதாக நினைத்துக் கொள்ளத்தான் வாய்த்திருக்கிறது பா.ரா
Rajaaaaaaaaaaaaaaaaaaaaa rempa santhosamai irrku
உங்க கவிதையை போலவே உங்க மனசு அழகா இருக்குன்னு சொல்லறதா
இல்ல உங்க மனசை போலவே உங்க கவிதை அழகா இருக்குனு சொல்றதா...
உவ்வொரு எழுத்தும் எதை எதையோ சொல்லி தந்துக்கிட்டே இருக்கு எனக்கு... பல நேரங்கள்ல வாழ்க்கையவே சொல்லி கொடுக்குது .....அரிதாக கிடைக்கும் ஒரு கவிஞர் நீங்கள்...இன்னைக்கு வெளி வரும் உங்க கவிதை தொகுப்பு கருவேழ நிழலுக்கு என்தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....
மேன்மேலும் கவிதைகள் எழுதி,
மேன்மேலும் புத்தகங்களை வெளியிட்டு,
மேன்மேலும் மெருகேற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!
-இன்றைய கவிதை நண்பர்கள்
நினைவு கூர்தல்:
இந்தத் தலைப்பில் நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கும் மூன்று பேரை உங்கள் தளத்தின்மூலம் சொல்ல ஆசைப்படுகிறேன் சித்தப்பா.
ரத்தினவள்ளி ஆச்சி அவர்கள்:
ஆச்சியின் முதல் பேத்தியாய் அத்தனை செல்லம் நான். அவர்களின் அன்பை வார்த்தையால் விவரிக்க இயலாது. என்னைத் தாலாட்டி சீராட்டியதுமுதல் நான் எனது முதல் குழந்தையை பிரசவித்ததுவரை எனக்கு தாதியாய் தாயாய் பார்த்த அன்பு தெய்வம். என் வாழ்நாளில் மறக்க இயலாத அன்பு தெய்வம்.
காந்திமதி அப்பத்தா அவர்கள்:
அப்பத்தா அவர்களின் கவிதைகளைக் கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நான் மூன்றாம் வகுப்பிலிருந்தபோது ரத்த சோகையினால் அவதிப்பட்டேன். அப்பொழுது எனது அப்பாவின் ரத்தத்தையே ஏற்றுவதாக முடிவு செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அப்பொழுது எதேச்சையாக காந்திமதி அப்பத்தா அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். நிலைமையை அறிந்து அவர்களும் எங்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ரத்தம் ஏற்றும்பொழுது ஊசி நழுவாமல் இருக்க என் கையைப் பிடித்துக் கொண்டவர்கள்தான் , முழு பாட்டிலும் ஏறும்வரை கை அசைந்து விடாமல் பிடித்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் வந்து சாயங்காலம் வீடு போகலாம் என்று சொல்லியதும் அப்பத்தா கிளம்பத் தயாரானார்கள். எனக்கு மிகவும் அழுகையாய் வந்தது.அப்பத்தாவை சாயங்காலம்வரை என்னுடன் இருக்குமாறு கேட்டேன். 'தமிழு,தமிழு' என்று அப்படியே என் கையைப் பிடித்து 'இருக்கிறேன்டா' என்று அமர்ந்தார்கள். சாயங்காலம் அவர்கள் கிளம்பியவுடன் மிகவும் அழுது கொண்டிருந்தேன். அந்த அன்பை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
முனியம்மாள் ஆச்சி அவர்கள்:
ஆச்சியின் அன்பு கிடைக்கப்பெற்ற அனைத்து சொந்தங்களில் நானும் ஒருத்தி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.கள்ளமிலாத அந்த அன்பு தெய்வம் காட்டிய அன்பும் ஆசிர்வாதமும் எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாதவை. முக்கியமாய் ஒன்றைச் சொல்ல வேண்டும், நாங்கள் இங்கு அமெரிக்கா வந்திறங்கிய முதல்நாள் இரவு என் கனவில்,"வந்துட்டியாடி என் ராசாத்தி " என்ற என் பிரிய ஆச்சியைப் பார்த்தேன். மிக சந்தோசமடைந்தேன்.
என் கணவர் வேலைநிமித்தம் மாற்றலாகி நாங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்திருக்கிறோம்.எங்கு சென்றாலும் எனக்கு பக்கத்துக்கு வீட்டு அல்லது எதிர் வீட்டுத் தோழியாய் அமைவது வயதான மூதாட்டிதான். இங்கு சிகாகோவிலும் எனது பக்கத்து வீட்டு தோழியின் வயது அறுபத்தி எட்டு. என் கணவர் கேலியாய் என்னிடம்,' அதெப்படி எங்கே போனாலும் உனக்கு உன் மாமியார் வயதிலேயே தோழி கிடைக்கிறாங்கன்னு' சொல்லுவாங்க. ஆனால் நான் இவங்களில் எல்லாம் பார்ப்பது என் பிரியமான ஆச்சிகளையும்,அப்பத்தாவையும்தான்.
---------கவிதாசிவகுமார்.
வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும மகிழ்ச்சியாக உணர்கிறேன்
உங்களுடைய பக்கதுக்கு வந்தாலே
உறவுகளுடன் அருகாமையில் இருப்பதான உணர்வு புத்தகம் வடிவிலும் கிடைப்பதில்
நன்றி உயிரோடை லாவாண்யா, அகநாழிகை பொன்.வாசுதேவன
நண்பர் பா.ராஜாராம்...
முதலில் முதல் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்து நல்ல வெளியீடுகள் வர வாழ்த்துக்கள்.
//என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி வரும் உங்கள் யாருக்கும் நன்றி சொல்ல போவதில்லை. யாருக்கு யார் நன்றி சொல்வது?
நினைவு கூர்கிறேன், அவ்வளவே!//
நமக்குள்ள எதுக்குங்க நன்றி..!
நட்புக்குள் நன்றி வந்தால் நட்பின் ஈரம் குறைந்து விடும்.
கருவேல மர நிழலுக்கு வாழ்த்துக்கள்..!
மக்கா விட்டகுறையோ தொட்டகுறையோ தெரியவில்லை
என்னை வீட்டு மனுஷி என்று கூறி விட்டுப் போனீர்களா
ஒரு வாரம் கூட இருக்காது
உங்க புத்தக வெளியீடு பற்றி வண்ணத்துப் பூச்சியார் ஒரு லிங்க் அனுப்பி இருந்தார் முகப் புத்தகத்தில்
அது நான்செல்லும் தூரத்திலேயே நடைபெறப்போகிறது என கேள்விப்பட்டு இன்று மாலை சென்றேன்
ஆனா பாருங்க பாரா ...
உங்களக் காணச் சென்ற நான் உங்க மகளையும் சித்தப்பாவையும் அவர் பையனையும் விழாவில் பார்த்துத் திரும்பினேன்
நீங்க வரல ..வீட்டுல அக்கா வரல ..ஆனா வீட்டு மனுஷிகளா நானும் உங்க மகளும் போய் கலந்துகிட்டு சந்தோஷப்பட்டோம்
உங்களப் பார்க்க முடியல என்கிற ஏமாற்றத்துல இருந்த நான் அவங்க பேரை கேட்காம என்வீட்டுக்கு வரச்சொல்லிகூட கூப்பிடத்தோணாம வந்துட்டேன் மக்கா
ஆனா பாருங்க உங்களுக்கு பதிலா நாங்க கலந்துகிட்டதே பெருமையா இருந்துச்சு
ஞானி., பாஸ்கர் சக்தி .,அஜயன்பாலா .,சாரு நிவேதிதா .,அகநாழிகை வாசு .,வண்ணத்துப்பூச்சி சூர்யா., வேடியப்பன் எல்லாரும் நம்ம மக்காதான்
ரொம்ப நல்லா நடந்துச்சு நிகழ்ச்சி மக்கா
என்னவோ நான் கலந்துக்கணும்னு இருந்துருக்கு
ஆறு மாதத்துலேயே இதுவிஸ்வரூபம்தான் மக்கா
வாழ்க வளமுடன்
நெகிழ்வான பதிவு..வாழ்த்துக்கள் ராஜா சார் :)
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அண்ணே, இன்னும் நிறைய சாதனைகள் படைக்க எமது பிராத்தணைகளும்.
சந்தோசம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கமுடியாத அளவுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
நெகிழ்ச்சியான இடுகை மக்கா.
வாழ்த்துக்கள்.. sorry.. பாராட்டுக்கள்.
மனம்நெகிழ்ந்த பாராட்டுகள்....
நெகிழ்வான அனுபவம். முதல் புத்தகம் எவ்வளவு சந்தோசம்!! கேபிள் சங்கர் blog-ல் படங்களுடன் வெளியிட்டுள்ளார். உங்கள் பெண் உங்கள் சார்பாக சென்றுள்ளார். வேலை நிமித்தம் என்னால் நேற்று போக முடியலை. மன்னிக்க. புத்தகம் பார்க்க மிக ஆவலாக உள்ளேன்.
உங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஆண்டு தான். எழுதும் ஒவ்வொருவரும் recognition-க்காகவே எழுதுகின்றனர். அது உங்களுக்கு சரியான படி கிடைக்க ஆரம்பித்தது இந்த வருடம் முதல் தான். மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் ஸார்..!
வாழ்த்துக்கள் ஸார்..!
நிரம்ப மகிழ்ச்சி மக்கா
கருவேழ நிழலில்
நாங்களும் இளைப்பாற
கிடைத்திருக்கின்றோம்
வார்த்தைகள் இல்லை
வணங்குகிறேன்....
வாழ்த்துகள் நண்பரே.
ராஜாராம்,
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இரு நாட்களாக உடல்நலக்குறைவு என்பதான் இன்றுதான் வாசித்தேன். தொலைபேசியில் அழைத்தேன் கிடைக்கவில்லை. நன்றி.
பொன்.வாசுதேவன்
ஆஹா...இது ஒரு புது உலகம் போல
இருக்கிறது!
@வசந்த்
மிக்க நன்றி வசந்த்!
@butterfly suryaa
வாங்க சூர்யா.நல்வரவாய் இருக்கட்டும்.மிக நெகிழ்வான பின்னூட்டம்.நன்றியும் அன்பும் சூர்யா.
@செய்யது
இப்படி அன்பை பொழியும் மனசை எங்கிருந்து எடுக்கிறீர்கள் செய்யது?முதலில் அதை சொல்லுங்கள்.கவிதை கிடக்கட்டும்.மிகுந்த நன்றி செய்யது!
@தோழி
வீட்டுக்கே வந்தது போல் இருக்கு.நன்றி அனு!
@துபாய் ராஜா
சகோதரா!நல்லா இருக்கீங்களா?ரொம்ப சந்தோசம் நன்றியும்!
@ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி
நல்வரவு ராஜலக்ஷ்மி!ரொம்ப நன்றிங்க.
@கலகலப்ரியா
நன்றிடா ப்ரியாகுட்டி!
@ராகவ்
ரொம்ப சந்தோசம் ராகவ்.மிக்க நன்றியும்!
@கதிரவன்
வாங்க கதிரவன்.ரொம்ப நன்றி மக்கா!
@சுசி
எவ்வளவு மனசு நிறைந்த ததும்பல்! நன்றி சுசி!
@ராஜவம்சம்
ஆகட்டும் மகனே.நீங்கல்லாம் இருக்கும் போது என்ன பயம்?ரொம்ப நன்றி மகனே!
@யாத்ரா
தம்பு!
என் மகனுக்கு அப்புறம் என் வாய் நிறைய தம்பு என அழைக்க விரும்புகிற செந்தி!திருமணத்தில் கூடமாட இருக்கமுடியாத குறை பெருசா இருக்கு யாத்ரா.நிரவிக்கொள்ளுங்கள் தம்பு.வாழ்த்துக்களும்,நன்றியும்!
@உதிரா
நன்றிடா கண்ணம்மா!அண்ணாதுரை சித்தப்பா எல்லோருக்கும் புத்தகங்கள் வாங்கி போயிருக்கிறார்.உனக்கும் சேரும்.நீயும் வாங்கு.ஒன்னுக்கு ரெண்டா இருக்கட்டும்.
நம் அன்பு போல...அப்பத்தா இனி அதில்தான் வசிப்பார்கள்.வசிக்கட்டும் ஆறுதலாக.நன்றிடா குட்டி!
@ஹேமா
வாழ்த்து கிடக்கட்டும் ஹேமா.உன் தொகுப்பு எப்போ?சீக்கிரம் வரட்டும்.நன்றிடா!
@டிவிஆர்
ரொம்ப நன்றி டிவிஆர்!
@செய்யது
மீண்டும் நன்றி மழை!
@செந்தில் நாதன்
நிறைவாய் இருக்கு செந்தில்.உங்கள் எதிர்பார்ப்பும்,அன்பும்.உரிமையும் கூட.ரொம்ப நன்றி மக்கா!
@மதி
நன்றிடா பயலே!என்னக்கும்தான் மதி.நம்பாமல்தான் வருது.நம்ப சொல்லுது நிகழ்!கிள்ளி பார்த்து வாழ்ந்து கொள்வோம் மக்கா!
@ஜமால்
மிக்க நன்றி மக்கா.உங்கள் தளத்தில் என்னால் பின்னூட்டம் போட இயலவில்லை ஜமால்.இதை நீங்கள் வாசித்தால் எனக்கு சொல்லி தாங்களேன்,ஜமால்.அன்பு நிறைய மக்கா!
@கௌரிப்ரியா
வாங்க கௌரி.ரொம்ப சந்தோசம்.ரொம்ப நன்றி மக்கா!
@ஷங்கி
தளம் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து அன்பு செய்து வருவதில் மிக முக்கியமான என் ஷங்கி மக்கா,மிக்க அன்பும் நன்றியும்!
@ரவிச்சந்திரன்
மிக நெகிழ்வு ரவி.தனி மடல் அனுப்பி இருக்கேன்.அழையுங்கள்.கட்டி இறுக்கி கொள்வோம்.நன்றி மக்கா!
@முத்துலெட்சுமி
ரொம்ப நன்றி முத்துலெட்சுமி!
@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி முரளி!மகாப்பா என விளிக்கும் முதல் ஆண் நண்பர்!ஆகட்டும் முரளி,உங்கள் அன்பில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.இரண்டாம் பாகமா குறை வைக்க போகிறது?உற்சாகம் முரளி!
@சந்தனமுல்லை
மிக நெகிழ்வான வாழ்த்து முல்லை.மிக்க நன்றி மக்கா!
@ராகவன்
நீங்கள் நிறையாவிடில் யார் நிறைவது ராகவன்!தளும்பலை அப்படியே உள் வாங்கி கொண்டேன்.அப்படியே திருப்பியும் தருகிறேன்.வந்துச்சா ராகவன்.நன்றி என் ராகவன்!
@ஜீவன்
ரொம்ப நன்றி ஜீவன்!
@ஈரோடு கதிர்
சந்தோசம் கதிர்!மிக்க நன்றியும்,மக்கா!
@வித்யா
ரொம்ப நன்றி வித்யா!நிறைவும்.
@ராஜன்
மிக்க நன்றி ராஜன்!தொடர்ந்து வருவது அவ்வளவு சந்தோசமும்,மக்கா!
@பாலாஜி
நன்றி பாலாஜி.திருப்பியும் வணங்குகிறேன்,வேறு வழி தெரியாமல்!
@விநாயகம்
பார்க்கவேணும் என விரும்பும் மனிதர் நீங்கள் விநாயகம்.ஊர் வரும் போது அவசியம் பார்ப்பேன்.உங்களுக்கும் வாழ்த்துக்கள் மக்கா!
@அமித்தம்மா
கௌரி,கவிதா,சீதா போல,இப்ப லாவண்யா போலவும் உணர்கிறேன் உங்களையும்அமித்தம்மா...செயல்களில் அன்பு செய்பவர்களுக்கு,திருப்பி தரவென என்னிடம் வெறும் வார்த்தை மட்டுமே இருக்கிற குறைதான்.அதையாவது தரத்தான் வேணும்.நன்றி அமித்தம்மா!
வாழ்த்துகள் பா.ரா
அடுத்த தொகுப்பு எப்போ.
@மண்குதிரை
ரொம்ப நன்றி மண்குதிரை!
@சரவணா
ஆம்,சரவனா.ரொம்ப நன்றி மக்கா!
@சுந்தரா
என்ன நினைவு திரண்டா!ரவியை மறந்துவிட்டேன்.தொடர்பு கொண்டதற்கு நன்றிடா பயலே.
@வேல்கண்ணா
நன்றி வேல்கண்ணா!
@அசோக்
புன்னகை மன்னா..நன்றி மகனே!
@கல்யாணி
சந்தோசம்டா கல்யாணி.அழுமூஞ்சி கல்யாணி.நன்றி மக்கா!
@பின்னோக்கி
அப்பா!..எவ்வளவு அன்பும் ஆறுதலும் பின்னோக்கி!ஆகட்டும் மக்கா.மிக்க நன்றி!
@சித்ரா
நல்வரவுங்க.மிக்க நன்றி சித்ரா!
@அம்பிகா
மூன்று கவிதைகளுக்கு முன்பாகவே உங்களை பார்த்துட்டேன் அம்பிகா.மொத்தமாக பதில் சொன்னதில் உங்களை கை பற்றமுடியாமல் போச்சு.மாதவன் நலமா?போராட்டங்களில் நாங்கள்தான் நிறைய மிஸ் பண்ணுகிறோம் மாதுவையும்,காமுவையும்.ரெண்டு போரையும் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க மக்கா.மிக்க அன்பும் நன்றியும் அம்பிகா!
@நர்சிம்
மிக்க நன்றி நர்சிம்!அந்த பீர் பாட்டிலை மறந்துராதீங்க..
@ரோஸ்விக்
மகனே..நல்லா இருக்கீங்களா?மிக்க நன்றிப்பு!
@ராமலக்ஷ்மி
ரொம்ப நன்றி சகா!மறக்க இயலாத வார்த்தைகள்.
@குன்றா
குன்றா,என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம்?உதை.நன்றி குன்றா!
@வினோ
மிக்க நன்றி வினோ!
@ரசிகை
ஆகட்டும் அப்பத்தா!:-)
அப்படியே கடவது.நெகிழ்வான பின்னூட்டம் ரசிகை.மிக்க நன்றி மக்கா!
@ஜெஸ்
சரிங்க இன்னொரு அப்பத்தா!ரொம்ப சந்தோஷபடுவீர்கள் என தெரியும்,ஜெஸ்.உடல் நலம் ஓகேவா?மிக்க நன்றி ஜெஸ்!
@விஜய்
ஹா.ஹா!
மிக்க நன்றி விஜய்!
@அனுஜன்யா
கண்கலங்கிவிட்டது அனு.ரொம்ப சந்தோசம் மக்கா.நன்றியும்!
@நேசன்
கூடவே இருக்கிற ஆள் இல்லையா?ரொம்ப நெகிழ்வும் சந்தோசமும்டா மக்கா!வேறு என்ன வேணும்?..நன்றிடா பயலே!
@காளியப்பன்
annaaaaaaaaaaaaaaaa ........போதும் அண்ணா!வாழ்ந்துட்டேன்!
@கமலேஷ்
இப்படி மனசில் இருந்து பேசும் மனிதர்களை சம்பாதித்தது கருவேலநிழலை விட சந்தோசம் கமலேஷ்!மிக்க நன்றி மக்கா!
@இன்றைய கவிதைகள்
நீங்க நாலு பேரும் வந்ததுக்கு பிறகே இப்பல்லாம் என் வீடு நிறைகிறது மக்காஸ்!சந்தோசம்.நன்றியும்!
@உதிரா
நீ எழுத தொடங்கவேணும் மக்கா..இப்படியெல்லாம் பகிரத்தான் இது மாதிரியான இடங்கள்.சீக்கிரம் தொடங்கேண்டா,கவிதும்மா.மிக நெகிழ்வான நம் மனிதர்கள்!அவர்களையும் இங்கு இணைத்ததில் இந்த வீட்டில் முகூர்த்த களை!
நன்றிடா பயலே.
@ஜோதி
மிக்க நன்றி ஜோதி!வாயாடி நலமா?
@சே.குமார்
ஆகட்டும் குமார்.மிக்க நன்றி மக்கா!
@தேனு
படம்,படமாக நிகழ்வை காட்டி தந்து விட்டீர்கள் தேனு!எனக்கு ஒரு தோழி இருக்கிறார்கள் சிவகங்கையில்.
அவர்கள் எழுதுகிற கடிதங்களில்தான் சிவகங்கை பூத்திருவிழாவை இங்கிருந்தபடியே பார்ப்பேன்.அப்படி இருந்தது வர்ணனைகள்..
மிக்க நன்றி மக்கா!கண்டிப்பா சந்திப்போம்.
@ரவுத்திரன்
ரொம்ப நன்றி ராஜேஷ்!
@சபிக்ஸ்
மிக்க நன்றி சபிக்ஸ்!தளம் வரமுடியாமல் இருக்கு மக்கா.வர்றேன்.
@நவாஸ்
கூடவே இருக்கும் மற்றொரு மக்கா!நீங்கதான் மக்கா,நான்!நன்றி ராஜா!
@ஜெகா
மிக்க நன்றி ஜெகா!
@சேகர்
ஆகட்டும் சேகர்.மிக்க நன்றி!
@மோகன்
ஆம்,மோகன்.மிக்க நன்றியும் அன்பும்!
@உண்மைத்தமிழன்
நல்வரவு மக்கா!ரொம்ப நன்றி!
@starjan
ரொம்ப சந்தோசம் தொடர் வருகை மக்கா.மிக்க நன்றியும்!
@சங்கர்
மக்கா,நலமா?மிக்க நன்றி சங்கர்!
@தியா
ஆகட்டும் தியா.மிக்க நன்றி!
@வாசு
மிக்க நன்றி வாசு!
@ஆரண்யநிவாஸ் ஆர்.மூர்த்தி.
ரொம்ப நன்றி மூர்த்தி!
@அக்பர்
சீக்கிரமா,அக்பர்.உற்சாகம்.நன்றியும் மக்கா!
Post a Comment