Monday, February 27, 2012

இலையுதிரும் சத்தம் - எட்டு

ஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 2

குண்டுக்கார்த்தியும், நானுமா சரக்கப் பிடிச்சுக்கிட்டு புதூர் கம்மாக்கரை மாமரத்துக்கு போய்ட்டோம். இந்த மாமரம் பேசாதவனைக் கூட மடில கிடத்திக்கிட்டு 'உங்கு சொல்லு..உங்கு சொல்லு' ன்னு பேச வச்சுப்புடும் பாத்துக்கிடுங்க.(இந்த மாமரம் குறித்து ஒரு புரை ஏறும் மனிதர்களில் கூட பேசியிருப்பேன்..என் வாழ்க்கையோட ரொம்ப நெருக்கமான ஒரு உயிர்ன்னு இப்போதைக்கு எடுங்களேன்)

மாமரத்தின் நிழலில் 'வாங்கடா வாங்கடா..நீங்க உக்காரலைன்னா நான் எதுக்குடா?' ங்கிறது போலவே எந்த நேரமும் குளிர்ச்சியா ஒரு மடை இருக்கும். அதுல உக்காந்துக்கிட்டு கொண்டு போன சரக்கு சங்கதிகளை ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்தேன்.

கார்த்தி நின்ன வாக்குலையே பாட்ல திறந்து மட்ட மல்லாக்க சரக்க கவுத்துனான். 'ஏண்டா பறக்குற?..என்னத்துக்குடா ஆகுறது தண்ணி கலக்காம அடிச்சா? ன்னேன். 'ஆமா இதை தண்ணி வேற ஊத்தி அடிப்பாக' ன்னு நெளிஞ்சு கொடுத்தான். 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது' போல முதல் ரவுண்ட முடிச்சிட்டு அவனே பேசட்டும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்...

'அண்ணே நம்ம மாடி வீட்ல ஒரு ஐயர் வீடு குடி வந்தாய்ங்கண்ணே.'
(கார்த்தி அம்மாவுக்கு ஏழெட்டு வீடுகள் சொந்தமா உண்டு. அப்பவே பத்தாயிரத்திற்கு மேலாக வாடகை வந்து கொண்டிருந்தது. ஒரே பய இவன். கார்த்தி அக்காவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க அம்மா. தங்கச்சி வீட்ல இருக்கு. இவன் செருப்பு கூட போடாம சிவகங்கை ரோடு பூராமா திரிஞ்சான்)

'சரி'

'ஐயருக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைகண்ணே. மூத்தத கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு. ரெண்டாவது புள்ள ப்ளஸ் டூ
பெயிலாகி தையலுக்கு போய்ட்டுருந்துச்சு'

'சரி'

'அது நம்மள கொஞ்சம் ட்ரான்சாக்சன் பண்ணுச்சு'

'ட்ரான்சாக்சன்னா?'

'அதாண்ணே..பார்வைய போட்டுச்சு'

'ஓ.. சரி. மூத்ததா ரெண்டாவதாடா?'

'ரெண்டாவதுண்ணே. மூத்ததுதேன் கல்யாணம் பண்ணி போயிருச்சுல்ல. சீரியஸா பேசும்போது கூறுகெட்டதனமா எதாவது கேப்ப' ன்னு லைட்டா சிரிச்சுக்கிட்டான்.

'ஓஹோ.. சரி சரி சொல்லு சொல்லு'

'என்னையதேன் உனக்கு தெரியும்ல.நமக்கு புள்ளைகன்னாலே ஆகாது. என்னவோ இந்தப் புள்ளைய மட்டும் கொஞ்சம் புடிச்சுப் போச்சுண்ணே'

கார்த்தியோட முகத்தை இவ்வளவு அழகா வேறெப்பவும் பார்த்ததே இல்லை நான். பேச்சுக்கு பேச்சு நெளிந்தான். குழைந்தான். காலரை தூக்கி விட்டான். சின்ன சின்னதா சிரிச்சுக்கிட்டான். சிரிப்பது நினைவு வந்தது போல நிறுத்திக்கிட்டான். திருப்பியும் சிரிச்சான்.

'அட இஞ்ச பார்றா காலத்துக்கு வந்த கோலத்த' ன்னு நினைச்சுக்கிட்டே அவன் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்.

'ஆளு அம்சமா இருக்கும்ண்ணே' ன்னு திடீர்ன்னு சொன்னான். சொன்ன போது லேசா கண் கலங்கியிருந்தான்.

'சரிடா.. மேட்டருக்கு வா'

'அது மாடில நின்னுக்கிட்டு பார்வைய போடும். நான் நம்ம வீட்டு வாசப்படில உக்காந்துக்கிட்டு பார்வைய போடுவேன். வெளிய அலையிறது குறைஞ்சு போயி வாசப்படிலேயே இருந்தனா, அம்மா போட்டுக்கிருச்சு போல. உள்ள பாவம் பத்தாதுன்னு ஐயர் வீட்டுப் பாவம் வேறயான்னு சாடைய போட்டுச்சு. அப்புறம் அங்க உக்கார்றத விட்டுட்டு அந்தப் புள்ள தையலுக்கு போற வர்ற வழில நின்னு பாத்துக்கிட்டு திரிஞ்சேன்'

'சரிடா..புடிச்சிருக்குன்னு அதுட்ட சொல்லிட்டியா இல்லையா?'

'சும்மாருண்ணே ..நீபாட்டுக்கு அசால்ட்டா கேக்குற. அந்தப் புள்ள பாக்கும் போதே உள்ள எனக்கு டவுசர் கழண்டு போகும்ண்ணே. எங்கிட்டுப் போயி புடிச்சுப் போச்சுன்னு சொல்லச் சொல்ற?'

'ஆமடா..பயப்பட வேண்டியதுக்கல்லாம் பயப்படாதீக '

'நீயும் சாடையப் போடாம செத்த நான் சொல்றத மட்டும் கேட்டுக்கிட்டே வா. நான் இந்த கேஸ் விஷயமா உள்ள போய்ட்டு வந்தனா? வந்து பாத்தா வீட காலி பண்ணிப் போய்ட்டாய்ங்கண்ணே'

'எங்க போய்ட்டாங்கடா?'

'அதான் தெர்லண்ணே. ஐயர் வீடு எங்கன்னு அம்மாட்ட கேட்டேன். காலி பண்ணி போய்ட்டாங்கன்னு சொன்னுச்சு. காலி பண்ணி?ன்னு கேட்டேன். காலி பண்றவங்கல்லாம் சொல்லிட்டா காலி பண்றாங்கன்னு சொல்லிருச்சு. அம்மாவுக்கு தெரியாம இருக்காதுண்ணே. ஐயர்ட்ட ஜோசியம்லாம் இது பாத்துக்கிட்டு திரிஞ்சிச்சு. கொஞ்சம் அம்மாவை கரெக்ட் பண்ணி பேசி எங்க போயிருக்காய்ங்க என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ண்ணே. நீன்னா கொடைஞ்சு விசாரிச்சுருவ' ன்னான்.

'போடாப் போடா..இதைப் போயி எப்டிடா நான் அம்மாட்ட கேக்குறது?'

'அண்ணே உனக்கு பேசத் தெரியும்ண்ணே. அந்தப் புள்ளைய மறக்க முடியலண்ணே. உன்னால முடியும்ண்ணே' ன்னு சொன்னப்போ ரொம்பக் கலங்கலா இருந்தான்.

'விட்றா நம்ம வேற வகைல விசாரிக்கலாம்'ன்னு சொல்லிட்டு இந்த மேட்டரையே மறந்துட்டேன். அடுத்தவன் பிரச்சினை நமக்கு எப்பவும் சல்லி மேட்டர்தானே...

காலம் ஆடிய பாப்பா நொண்டியில் சவுதிப் பக்கம் ஒதுங்குனனா..
பயலுகள் எல்லோரும் மிஸ்கால் பண்ணுவாய்ங்க. நாங்கூப்புடுவேன். 'செட்டுக பூராம் சேந்துருக்கோம் மாமா. ஓங்குரல் கேக்கணும் போல இருந்துச்சு' ம்பாய்ங்க. ஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்துருவேன்.

ஆனா இவன் மட்டும் அப்படி இல்லை.(மொபைல் வசதி எல்லோருக்கும் வந்தது மாதிரி கார்த்தி வரைக்கும் கூட வந்திருந்தது) இவன் நேரடியா கூப்பிடுவான். நாந்தான் கட் பண்ணி கூப்புடுவேன். 'ஏண்ணே நீங் கூப்புடுற.எனட்டதான் காசு இருக்குல்ல. இல்லாட்டி கூப்டுவனா?'ம்பான்.

'சரிடா என்ன விஷயம்?'ன்னு கேட்டா

'தேனில திரியுறேன்ண்ணே. ஐயர் வீடு இங்க மாறி வந்துட்டதாக கௌரிப் பிள்ளையார் ஜோஸ்யர்ட்ட துப்பு வெட்டுனேன். இதோட நாலஞ்சுவாட்டி வந்துட்டேண்ணே. கங்கு கங்கா தேடிக்கிட்டு இருக்கேன். கண்டுபுடிச்சுப்புடுவேண்ணே 'ம்பான்.

'ஓ.. மாமர மேட்டரா' ன்னு நினைவு வந்து, 'சரி கார்த்தி. பாத்துட்டா கூப்டு' ன்னு முடிச்சுருவேன்.

ரெண்டு வருஷம்ங்கிறது எத்தனையோ நாட்கள்தானே. அதுக்குள்ள எவ்வளவோ நடக்கும்தானே. அதுல ஒரு நாள்ல கார்த்தி தங்கச்சி திருமணம் முடிந்தது. மற்றொரு நாள்ல கார்த்தி அம்மா இறந்து போய்ட்டாங்க...

குண்டுக்கார்த்தி அம்மா இறந்து போனது, தங்கச்சிக்கு கல்யாணம் நடந்தது எல்லாம் அப்படியே இருக்கட்டும். நம்ம கொஞ்சம் முன்னால போய்ட்டு வருவோமே... ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சு. ( அம்மா இறப்பு, தங்கச்சி கல்யாணத்திற்கு முந்திய காலம்)
சவுதியிலிருந்து ஊருக்கு பயணம் வைக்கிறப்போல்லாம் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. வீடு சேர்ந்த மறுநாள் காலைலேயே வண்டிய தட்டுவேன். பயலுக எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஃப்ளையிங் விசிட்.

பயலுகளை ஏழுகடையில் பிடிச்சுப்பிடலாம். பயலுகளோட மனுஷங்கள, புள்ளைகள, குழந்தைகள, பாக்கணும்ன்னா வீடு போய் பாத்தால்தானே?. ரெண்டு வருசமா கொக்கா?' ங்றத காட்டித் தரும் பாருங்க இந்தக் காலம். முக்கியமா குழந்தைகளிடம் தாண்டவம் ஆடி வைத்திருக்கும். நம்பவே முடியாம வரும். குழந்தைகள்'ன்னா அதுக்கும் தொக்கு போல.

சூரி அண்ணன் வீட்டிலிருந்து தொடங்குவேன்.

போய் இறங்கியதுமே, 'என்ன கொழந்தனாரே நீங்க எப்ப வந்தீங்க?..நீங்களும் வந்து விழுந்துட்டீங்களா.. இனி ஊரு ரெண்டு பட்டுப் போகுமே' ன்னு சுந்தரி அத்தாச்சி (சூரி அண்ணன் வீட்ல ) சிரிக்கும்போது ஆட்டமேட்டிக்கா எனக்கும் சிரிப்பு வந்துரும்.
ரெண்டு வருசமா கேக்காத குரல். பாக்காத சிரிப்பு. சிரிப்புக்குல்லாம் சுச்சா வைக்க முடியும்? தானா பொரிந்து தள்ளிவிடும். இல்லையா?

'நைட்டு வந்தேன் அத்தாச்சி. இதென்ன ரெண்டு வருஷத்துக்குள்ள பயலுகள்லாம் வளந்து மனுஷங்களாகி நிக்கிறாய்ங்க? ன்னு சிரிப்பேன். ( சூரி அண்ணனுக்கு பெரியமருது, சின்னமருதுன்னு ஒரு ரெட்டையர்கள். வாஞ்சிநாதன் மூணாவது. வாஞ்சி சசி கிளாஸ்மேட்)

'அண்ணே எங்கத்தாச்சி?

'அங்கிட்டுதானே வந்தாக கடையப்பக்கம். ஆமா நீங்க என்ன மெலிஞ்சு வந்திருக்கீங்க கொழுந்தனாரே? என்றோ 'செத்த கலரா வந்துருக்கீங்க இந்தத் தடவ' என்றோ அத்தாச்சி கண் மூலமாக என்னைப் பாக்க வைப்பாங்க- கண்ணாடி காட்டாத என்னை..

'அட நம்மளும் குழந்தைதான் போல' ன்னு ஒரு துள்ளல் பிறக்கும்.

'வீட்லருந்து வர்றேன் அத்தாச்சி இன்னும் கடையப் பக்கம் போகல..அண்ணே எப்டி இருக்காரு?'

'என்னத்தப் போங்க கொழந்தனாரே.. ஒரு காலத்துல அப்டி இருந்தோம் ஒரு காலத்துல திருந்துனோம்ன்னு இல்லாம அப்டியேதான் இருக்காக. சுகர வச்சுக்கிட்டு குடிக்கலாமா கொழந்தனாரே.. தனக்கா தெரியவேணாம்?' ன்னு ஒரு பாட்ட எடுத்து விடுவாங்க.

'ஆளுகன்னா அப்டியேதான் இருக்கணும் அத்தாச்சி. பொட்டல்கதான் வீடு வாசலுமா வச்சுக்கிட்டு பழைய அடையாளத்த காட்டாம கெடக்குதுக. மனுஷய்ங்கள பாத்தது மாதிரியே பாத்தாத்தானே நல்லாருக்கும்'

'ஒங்கட்டப் போயி சொல்றேன் பாருங்க. சேந்ததுபூராம் சிவலிங்கம்' ன்னு சிரிப்பாங்க சுந்தரி அத்தாச்சி.

அந்த சிரிப்போடையே அடுத்து முத்துராமலிங்கம் வீடு.

'அய்யோ..அண்ணே வந்துட்டீங்களா? ன்னு பாத்ததும் நெஞ்சுல கைய வச்சுக்கும் மீனா (முத்துராமலிங்கம் வீட்ல)

'என்னத்தா சந்தோஷப்பட்றியா ஷாக் ஆகுறியா?'

'சந்தோஷமாவும் இருக்குண்ணே ..இனி இவுக மாமா வாங்கிக்கொடுத்துச்சு மாமா வாங்கிக் கொடுத்துச்சுன்னு டெய்லி குடிச்சிட்டு வருவாகளேன்னு ஷாக்காவும் இருக்குண்ணே' ன்னு கெடந்து சிரிக்கும்.

'இப்டி வேற போட்டு வச்சுருக்கானா..டெய்லி வாங்கிக்கொடுக்க எவன் வீட்டுக்குத்தா போறது? போயி அவனை கடைல வச்சுக்கிறேன்' ன்னு சொல்லிட்டு வருவேன்.

ஆக, எல்லா வீட்லயும் ஒரே பாட்டுதான். ஒரே பாட்ட வேற வேற மெட்ல கேக்குறது நல்லாத்தான் இருக்கும். சிப்பு சிப்பாக்கூட வரும். அப்படி,. ஒரு பயணத்துல குண்டுக்கார்த்தி வீட்டுக்கு போயிருந்தேன். அம்மா கட்டில்ல படுத்திருந்தாங்க. 'என்னம்மா முடியலையா?" ன்னு பக்கத்துல உக்காந்தேன். கொஞ்ச நேரம் முகத்தையே தேடிக் கொண்டிருந்தாங்க.

'ராஜால்லம்மா' ன்னு சொல்ல சங்கட்டமாகத்தான் இருந்தது. சொன்னேன். 'டேய்..நீ எப்ப வந்தே?ன்னு எந்திரிச்சு உக்காந்து கைகளைப் பிடிச்சுக்கிட்டாங்க. எத்தனையோ தடவ கைகளை பிடிச்சுக்கிட்ட கைகள். 'நீ சொன்னா கேப்பாண்டா' ன்னு கன்னங்களை வருடிய கைகளும் கூட. அந்தக்கைக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. கொஞ்சம் அதை இதை பேசிட்டு, 'இவன எங்கம்மா?' என்றேன்.
'
சாப்ட்டு போயிருக்காரு துரை. இனி மத்தியான சாப்பாட்டுக்குத்தானே வருவாரு. ஸ்டாண்ட்ல கெடப்பாரு. ஆளப் பாத்தியா?'

'இல்லம்மா'

'ஆளப்பாத்தா அரண்டு போவடா. குடிதாண்டா இவனை திங்குது. ஏதோ ட்ரீட்மெண்டு க்ரீட்மெண்டுங்கிறாய்ங்களே..காசு போனாலும் போய்ட்டுப்போது, அப்டி எதுனா செஞ்சு நீ வந்ததோட சரி பண்ணிட்டுப் போடா'

'அடப் போங்கம்மா.. ட்ரீட்மென்ட்லாம் எடுத்தா அப்புறம் குடிச்சான்னா பெரிய ரிஸ்க். வேறமாதிரி இவனை நிறுத்த வச்சுப்புடுவோம். பேசாம இருங்க' ன்னு ஆறுதல் சொல்லிட்டு ( ஆறுதல்லாம் நல்லாத்தான் சொல்வேன். காரியம் பாக்கத்தான் கடுப்பா இருக்கும்) நேர பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனேன். பயலக் காணோம்.
புதுப் புது ஆட்டோ டிரைவர்கள் வேற. 'குண்டுக்கார்த்தி' ன்னு பேச்செடுத்தேன் ஒரு டிரைவரிடம்..

'பார்ல பாருங்க சார். செத்த முன்னாடி உள்ள போனாப்ல' ன்னு சொன்னார். பார்ல தேடினேன். காணோம். 'பீச் வரையில் வந்துட்டு காத்து வாங்காமல் போனால் நம்ம சமுதாயம் மதிக்காதே' ன்னு ஒரு நினைப்பு வந்து மத்தியான ஓட்டத்துக்கு ஒரு குவாட்டரை பிடிச்சுக்கிட்டு ஏழுகடை வந்துட்டேன்.

வந்து ஒரு கட்டிங் போட்டிருப்பேன்..

வேகு வேகுன்னு லுங்கில வந்தான் கார்த்தி...

ஒரு முழு மனுஷன தண்ணி இவ்வளவு தின்னுருமா என்ன?..

வந்த குண்டுக் கார்த்தி கைகளைப் பிடிச்சுக்கிட்டான். முதல் தடவ பாக்குற போது பயல்கள் எல்லாம் 'மாமோய்' ன்னு ஒரு சவுண்டு விட்டு கட்டி இறுக்கி, தூக்கி, ஒரு குலுக்கிக் குலுக்கி, நிலத்தில் குத்துவாய்ங்க. இந்தப் பக்கிக்கு அதுலாம் தெரியாது. பெரிய வெண்ண மாதிரி கையக் கொடுப்பான். நாமாக கட்டி இறுக்கிக் கொண்டால்தான் உண்டு.
அப்படி கட்டிக் கொள்ளும் போதும் அவன் வாசனைய நாம குடிச்சாலும் குடிச்சுப் புடுவோம' ங்கறது போலவே வழுக்கிக் கொண்டும் நழுவிக் கொண்டும் இருப்பான். இந்தத் தடவையும் அப்படித்தான் இருந்தான். நழுவி.. விட்ட கையை மீண்டும் எடுத்து கைகளுக்குள் வச்சுக்கிட்டு, 'எப்பண்ணே வந்த?..என்னண்ணே நீ கூட சொல்லல அண்ணே வரப்போதுன்னு?' ன்னு முத்துராமலிங்கத்தைப் பாத்தான்.

'எங்கடா நீ ஏழுகடைப் பக்கம் வந்த? உன்னையப் பாத்தே நாலஞ்சு மாசம் இருக்குமா? நீ வந்தா இங்கிட்டு வர்றதுதான் மாமா. போய்ட்டேன்னு வைய்யி.. பய ஆட்டோ ஸ்டேண்டுக்கு போயிருவாரு. அப்புறம் என்ன மயித்த சொல்லச் சொல்ற?'

'சரி என்னடா கார்த்தி இப்டி மெலிஞ்சு போய்ட்ட? குண்டுக்கார்த்திங்கற பேர காப்பாத்தவாவது சேமா இருக்குறது இல்லையா?..என்ன புள்ள போ'

'இதாண்ணே நடக்க வைக்க நல்லாருக்கு'

'தம்பி டெய்லி ஜாக்கிங் போறாப்ல மாமா. வாக்கிங் கூட இல்ல. ஜாக்கிங். உடம்ப கண்ட்ரோல்ல வைக்கணும்ல'- முத்துராமலிங்கம்.

'நம்ம ஒண்ணு பேசுனோம்ன்னா இது ஒண்ணு பேசும்'ன்னு சிரித்தான் கார்த்தி. சிரிப்பும் கூட மெலிஞ்சு போய்தான் இருந்தது.

'காலைலயே ஊத்திர்றான்ன்னு கேள்வி மாமா. நம்மல்லாம் சந்தோசத்துக்குத்தானே குடிக்கிறோம். இவன் சரக்கப் போட்டுட்டு புடிக்காத முகமா தேடி அலையிரானாம் மாமா. நீ இங்க வர்லன்னாலும் உன் சங்கதியெல்லாம் வாங்கிதாண்டி வச்சுருக்கேன்'- முத்து.

'வந்தோன்னையே பத்த வைக்குது பாருண்ணே. தெரியாமையா ஏழுகடைக்காரய்ன்ங்க இதுக்கு பரட்டைன்னு பேர் வச்சாய்ங்க'
'
கட்டிங் இருக்குடா..போட்றியா?'

'போட்ருக்கேண்ணே. நீ சாப்டு..வீட்டுக்கு வந்து கைலிக்கு மாறிக்கிட்டு இருந்தேன். அம்மா சொன்னுச்சு நீ வந்திருக்கன்னு. அப்டியே கெளம்பி வந்துட்டேன். சாப்ட்டு போடான்னு கத்துச்சு. ந்தா வந்துர்றேன்'த்தான்னு வந்தேன். வீட்ல சாப்டுவோமாண்ணே. அம்மா வச்ச மீன் குழம்பு இருக்கு. நேத்துக் குழம்புண்ணே'

'இல்லடா கார்த்தி. நேத்துதானே வந்தேன். வீட்டுக்கு சாப்டப் போகலைன்னா லதா கத்துவா. இவளும் எதுனா கவுச்சி கிவுச்சி எடுத்துத்தாண்டா வச்சுருப்பா. நீ வாயேன் நம்ம வீட்டுக்கு. பேசிக்கிட்டே சாப்டுவோம்'

'சரக்குல இருக்கும்போது என்னைக்குண்ணே வீட்டுக்குல்லாம் வந்திருக்கேன். நீ சாப்ட்டு வா. சாயந்திரம் பாப்போம்'

மிச்ச கட்டிங்கையும் போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டேன்.

சாயந்திரமா ஏழுகடை..நைட்டு ஓட்டம்.

'எங்கடா இந்தக் கார்த்திப் பயலக் காணோம்.?

'வருவான் வருவான். நீ ஸ்டார்ட் பண்ணு. நான் கடையல்லாம் எடுத்து வச்சுட்டு வர்றேன்..கொஞ்சப் பயலுகள் உன்னை தேடி வந்துட்டுப் போனாய்ங்க. மாமா' ன்னு முத்து சொன்னான்.

'நாளைக்கு பயலுகளுக்கு நம்ம பார்ட்டிய வச்சுவிட்ரணும்டா மாப்ள'

(ஊருக்கு போய்ட்டு ஒரு நாள், ஒரே ஒரு நாள், எல்லாப் பயலுகளுக்கும் சரக்கு வாங்கித் தருகிற பழக்கத்தையும் கடைப் பிடித்து வருகிறேன். 'இங்க பாருங்கடா..குவாட்டர்தான் கணக்கு. குவாட்டர்க்கு மேல போச்சுன்னா அவன் அவன் பாடு. குவாட்டர்க்குள்ள எவ்வளவு குடிச்சிக்கிற முடியுமோ குடிச்சிக்கிருங்க. அதுவும் இன்னைக்கு மட்டும்தான்' ன்னு அனவுன்ஸ் பண்ணிதான் கூட்டிட்டுப் போவேன்)

' இதுக்குப் பேரு பார்ட்டின்னு வெக்கமில்லாம சொல்லிக்க. குவாட்டர் வாங்கித் தரப் போறேன்னு சொல்லு'- முத்து

'அட வெண்ணைகளா..சீச்சியோட (ஸ்நாக்ஸ்) நம்ம செட்ல யாருடா சரக்கு வாங்கிக் கொடுத்துருக்கீங்க? ஒன்லி ராஜாராம். தி கிரேட் ராஜாராம்டா'

தும்முவான் முத்து. தெறிக்கும் எச்சில்.

வீட்டுக்கு கிளம்புற நேரமா ஆட்டோவுல வந்திறங்கினான் கார்த்தி. டைட்டா இருந்தான். தலை தொங்கி முகம் வேர்த்திருந்தான். 'என்னடா வரும்போதே போட்டுட்டு வந்துட்ட..இங்க வந்து போட்ட்ருக்கலாம்ல?' ன்னு கேட்டேன்.

சட்டைய தூக்கி, பேண்ட்டில் சொறுகி இருந்த ஒரு ஹாஃப் நெப்போலியனை உருவி' ஓம் பிராண்டுதாண்ணே சாப்டு' ன்னு கொடுத்தான்.

'நான் ஏற்கனவே ஆறப் போட்டுட்டனடா கார்த்தி ..உனக்குத்தான் தெரியும்ல ஆறுக்கு மேல போய்ட்டா அண்ணனுக்கு வாயக் கட்டிரும்ல'

'அதுலாம் ஒண்ணும் நொட்டாது. போடு சும்மா'

'டேய் ஏற்கனவே மாமா ஆறப் போட்ருச்சு. கூடப் போட்டுச்சுன்னா பல்லு வாயில்லாம் கட்டி சிரிச்சுக்கிட்டே இருக்கும். அது அப்டியே இருக்கட்டும் நாளைக்கு போட்டுக்குவோம். மாமா நீ வீட்டுக்கு கெளம்பு.

'இந்தா, ஒனட்டப் பேசுனனா.. சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற..ஒடைச்சு ரெண்டு பேருக்குமா ஊத்து. அண்ணனோட ஒரு சிப் அடிக்கணும்'

'போடுன்னா போட்றா..சும்மா பேசிக்கிட்டே இருக்க?' - நான்

'அண்ணே இந்த லந்தல்லாம் கொடுக்காத. எனக்கு நீ என்ன பேசுறன்னு தெரியும்..ரெண்டு க்ளாஸ்ல போடச் சொன்னா மூணு க்ளாஸ்ல போடுது பாரு. எப்டி ஆளுன்ற அண்ணன்?' ன்னு சிரித்தான் கார்த்தி.

க்ளாசில் இருந்ததை கல்ஃபா ஏத்தினேன்.

கொஞ்ச நேரம் கடலை உடைத்துக் கொண்டிருந்த நினைவு. பிறகு 'வீடு வீடு வீடு' ன்னு ஒரு தேவை தொடங்கிருச்சு. கெளம்புறதுக்கு முன்னால கார்த்தியிடம் கேட்டேன், 'கார்த்தி உனட்ட என்னைக்காவது உதவின்னு கேட்டுருக்கனா கார்த்தி?'

'இல்லையேண்ணே.. ஏண்ணே?'

'ஒரு உதவி கேக்கட்டுமா கார்த்தி?'

'கேளுண்ணே'

'நாளைக்கு கேக்குறண்டா. ரெண்டு பேருமே டைட்டா இருக்கோம். இப்பக் கேட்டா தைக்காது'
'அட சொல்லுண்ணே..எனக்குத் தூக்கம் வராது. இப்டில்லாம் கேட்டது இல்லையண்ணே நீய்யி. யாரையும் தூக்கணுமா?

'ஆமடா.தூக்கி.. என்னைய சவுதி போகவிடாம இங்கிய செம்முங்க. புள்ள குட்டில்லாம் தெருவுல நிக்கட்டும்'
'
என்னண்ணே சொல்லுது இது?' ன்னு முத்துவிடம் கேட்டான்.

'நாந்தேன் முன்னாடியே சொன்னேன்ல.. இனி நீதான் தூக்கி சுமக்கணும்'

'போங்கடா புழுத்திகளா.யாரை யாரு தூக்கி சுமக்குறது?' ன்னு கிளம்பினேன்.

'இந்தா அடங்கு. இப்டியே போனா அய்த்தை நாளைக்கு என்னையதேன் செருப்பக் கழட்டி அடிக்கும். உனக்கென்னங்கறது போல நீயும் சிரிப்ப. கார்த்தி, வாழைப்பழம் வெத்தலைசெட்டு கேட்டுட்டு இருந்துச்சு மாமா. அந்த நேரத்துல நீ வந்து இறங்கிட்டியா..அப்படியே ரெண்டு புரட்டாவ பிச்சுப் போட்டு சால்னா ஊத்தி கட்டி வாங்கிக்க..இப்டியே இது வீட்டுக்கு போச்சுன்னா ஊரக் கூட்டிரும்' ன்னு சொல்லி அவன் வண்டிச் சாவியை நீட்டினான்.

'கார்த்தி நாலு வெத்தலை செட்டு' - நான்

'நாலு செட்டு யாருக்கு மாமா?'-

'என்னிடம் இரண்டு குழந்தைகள் உண்டு மிஸ்ட்டர் முத்துராமலிங்கம்'

'புள்ளைகளுக்கும் வெத்தலை போட்டுப் பழக்கிட்டியா?'

'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி தொடைல தடவனும் மாப்ள. புரட்டிப் போட்டு வகுடெடுத்தது போல காம்பு கிழிக்கணும். இந்தா இத்தினிக்கூண்டு சுண்ணாம்ப எடுத்து..புள்ளைகளுக்குதானே அந்த லெவல் போதும்.. பட்டும் படாம ரெண்டு இழு இழுத்து கிரேன் பாக்க ஓடைச்சுக் கொட்டி, பீடா மாதிரி சுருட்டி, புள்ளைக வாய்ல வச்சு விடணும். ரெண்டு மெல்லுல வாயெல்லாம் செவப்பா புள்ளைக சிரிக்குங்க பாரு. ச்.. ச்..ச்..அது ஒரு தனி குவாட்டர்டா மாப்ள .வாழப் பழகுங்குடா வீணாப் போனவய்ங்களா'

'சரித்தேன்'ன்னு அதிசயமாய் கொஞ்சம் மலர்ந்து சிரிச்சுட்டு வண்டிய எடுத்துட்டுப் போனான் கார்த்தி.

'ஆமா அவன்ட்ட என்னமோ உதவி கிதவின்னு கேட்டுட்டு திரிஞ்ச. நிதானதுலதான் இருக்கியா?'

'நாளைக்கு கேக்குறேன்னு சொன்னேன்ல. உனக்கு தனியா சொல்லணுமா ?

'சரிங்க எசமான்'

கார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்து என்னையவும் விட்டுட்டு வண்டியவும் உள்ள தூக்கி வச்சுட்டுப் போனாய்ங்க.

'வாங்க..வாங்க என் செல்லக் கன்னுக்குட்டிகளா' ன்னு ரெண்டு கைகளையும் நீட்டி வீடேறினேன்.

'எறுவமாடு..எறுவமாடு வர்ற வரத்தைப் பாரு' என்றாள் லதா.

'சத்தியம் நீயே தர்ர்ர்ரர்ருமத் தாயே குழந்தை வடிவே தெய்வமகளே' ன்னு கூடுமான வரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராமல் பாடிக் காட்டினேன்.

'ஓம்சக்தி தாயே இன்னும் எம்பத்தெட்டு நாளைக்கு இந்தக் கொடுமையெல்லாம் பாக்கணுமே'

'நம் குழந்தைகளும் கூட வளர்ந்து விட்டார்களே.. என்ன உரமிட்டீர்கள் காரியதர்சி?

'செருப்பும் வெளக்கமாரும்'

'ஆமாவா என் அன்புச்செல்வங்களே?' என குழந்தைகளிடம் கேட்டேன்.

'செம்ம போர்'ப்பா என்பது போல மஹா வலது கை கட்டை விரலை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வது போல சைகை செய்தாள். சசி கெக்களி போட்டுக் கொண்டிருந்தான்.

'தாய்த்திருநாட்டில் தமிழ் பேசி எவ்வளவு காலமாயிற்று. ஊறு செய்யும் இந்த குட்டிச் சாத்தான்களை மன்னியும் நன்னரே'

நாளை வந்தது. ஏழுகடை களை கட்டியிருந்தது..

-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6,7


Sunday, February 5, 2012

இலையுதிரும் சத்தம் - ஏழு

ஏழுகடைக் கதைகள்- ஐந்தின் தொடர்ச்சி -1

கார்த்தியோட சேர்ந்து எட்டுப் பத்து பயலுகள் உள்ள போய்ட்டாங்க. இதுல சித்தப்பா ராமச்சந்திரத்தேவர் அடக்கம். (ராமச்சந்திர தேவர் - முத்து, கார்த்தி சித்தப்பா) பீஸ் புடுங்குனது போல ஆகிப் போச்சு.

p.c ரவி அண்ணே வேற சர்ர்ரக்குன்னு ஜீப்ப ப்ரேக் அடிச்சு, 'டேய்..ஸ்டேசன்ல நோட்டட் பாய்ன்ட் ஏழுகடை இப்ப. எந்த நேரமும் வருவாய்ங்கடி.. முங்கி நடந்துக்குங்க' ன்னு சொல்லிட்டுப் போனாரு. ரவி அண்ணே சொன்னது மாதிரிதான் நடந்துச்சு. ஆஊ ன்னா வண்டி வந்து நிக்கும். 'என்ன இங்க கூட்டம்? எதுக்கு உக்காந்திருக்க? நீ கடக்காரனா? ன்னு ஜீப்ல உக்காந்துக்கிட்டே எஸ்.ஐ. பேசுவாப்ல. பயலுகள் டக்குன்னு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.

தலவாசல்ல நாங்கபாட்டுக்கு சரக்கடிச்சிட்டு இருப்போம். மாறி, ஏழுகடைக்குப் பின்னாடி, வேலிக்கருவைக்கு நடுவுல ஒரு எலெக்ட்ரிக் போஸ்ட் சாஞ்சு கிடக்கும். எலக்ட்ரிக் வயர்ல உக்காந்திருக்கிற சிட்டுக்குருவிகள் மாதிரி அதுல உக்காந்து சரக்கத் தொடங்க ஆரம்பிச்சிருந்தாய்ங்க பயலுகள். 'இப்டி வெளிச்சத்த சாச்சுப்ட்டானே கார்த்தி' ன்னு தோணும். 'வா மாமா' ன்னு வேற கூப்டுவாய்ங்க.

'இல்லடா. நான் தண்ணிய விட்டுட்டேன்' ன்னு வீட்டுக்குப் போறது போல சூ காட்டிட்டு சந்துக்குள்ள விழுந்து தொண்டி ரோடப் பிடிப்பேன்.

பிடிச்சு.. ஒரு முறுக்கு முறுக்கி பஸ் ஸ்டாண்ட் ஒயின்ஸ் ஷாப். ஒரு குவாட்டர வாங்கி பேண்ட் பாக்கட்ல போட்டுக்கிட்டு நேர லதாமங்கேஷ்கர் வீடு . (லதா மங்கேஷ்கர் -நம்ம லதாதான். லதாவின் முழுப் பெயர் அரியநாச்சி (எ) லதாமங்கேஷ்கர். ஹிந்திப் பாட்ல மயங்கக் கூடாதாங்க என் மாமனார்?)

'ஆத்தாடி.. ஏம் புள்ள இன்னைக்கு சீக்கிரம் வந்துருச்சே. சுத்தி வைக்கணும்'ன்னு லந்தக் கொடுப்பாள் லதா.( நம்ம டர்ர்ரு மேட்டர பொண்டாட்டிட்ட காட்ட முடியுமா..காட்டுனா கிரீடம் இறங்கிறாது?) 'இவனைப் போன்ற நல்லார் ஊரில் யாரும் இல்லார்' ரேஞ்சில் லதா முட்டைப் பொரியலோ, உப்புக்கண்டம் வறுவலோ சைடுக்காக அளித்து, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவாள்.

வீட்டில், மொட்டை மாடிதான் சரக்கடிக்கிற ஸ்பாட். அடிச்சிட்டு, குண்டா எதுனா நட்சத்திரம் தெரியுதான்னு மல்லாந்து தேடிக்கிட்டு இருப்பேன்.

திருச்சி ஜெயிலில் இருந்தான் கார்த்தி.

'வாய்தாவுக்கு கூட்டிட்டு வர்றாய்ங்க மாமா கார்த்திய. பாக்க வர்றியா?' ன்னு ஊடால கேப்பாய்ங்க. 'இல்லடா' ன்னு சொல்லிருவேன். போய்ட்டு வந்து, 'ஒன்னத்தான் மாமா கேக்குறான். வந்துருக்லாம்ல' ம்பாய்ங்க. ரெண்டு வாய்தாவுக்கு பல்லக் கடிச்சிக்கிட்டுப் பாக்க போகாமத்தான் இருந்தேன். மூணாவது வாய்தாவுக்கு கார்த்தி அம்மா கூப்ட்டு விட்டாங்க. கார்த்தி உள்ள போனதுக்கு அப்புறம் வீட்டுப்பக்கம் கூட எட்டிப் பாக்கல. சும்மாவே, 'நீ சொல்லக் கூடாதாடா..திருந்த மாட்டேங்கிறானடா' ன்னு சொல்லிட்டே இருப்பாங்க.' இந்த டயத்துல போயி எப்டி அம்மாவப் பாக்க?'ன்னு போகாம இருந்ததுதான்.

கூப்ட்டுட்டா போகாம இருக்க முடியாதுல்ல?.. போனேன்.

கண்றாவியா இருந்தாங்க அம்மா. 'நாளைக்கு வாய்தாவுக்கு வர்றானாம்லடா. என்னையும் கூட்டிட்டுப் போங்கடா' ன்னு கன்னத்தைப் பிடிச்சிக்கிட்டு கெஞ்சுனாங்க. 'என்ன கொடுமடா?' ன்னு இருந்தது அந்த நேரத்தில் அந்த முகம். 'சரி கெளம்பி இருங்கம்மா. 'வண்டிக்கு சொல்லிறட்டா' ன்னு கேட்டேன். (அம்மாவால ஸ்லாங்கமா நடக்க முடியாது)

'சொல்லிரு. சமைச்சு எடுத்துக்கிறவாடா.. சாப்ட விடுவாங்களா கோர்ட்ல?' ன்னு கேட்டாங்க. அதுலாம் விடுவாங்கம்மா. நீங்க எடுத்துக்குங்க'ன்னு சொல்லிட்டு, அன்றிரவு டைட்டா சரக்கப் போட்டுக்கிட்டேன்.

சிவகங்கை கோர்ட்ல,'பயபுள்ளைகள் எம்புட்டு நேரம் உக்காந்திறப் போறாய்ங்க'ங்கிற மாதிரி ஆல மரம் நல்லா விரிஞ்சு கிடக்கும். செத்த நேரத்துக்கு நாங்களும் உக்காந்திருந்தோம். வேனுக்குள்ள அம்மா தங்கச்சிகள் இருந்தாங்க. கங்கு கங்கா பயலுகள் சிகரெட் குடிச்சிட்டு நின்னாய்ங்க. ஆட்டோ ஸ்டாண்டுலருந்து வேற கெடைப் பயலுகள் வந்துருந்தாய்ங்க.

தாடி கீடில்லாம் வச்சு கார்த்தி மொறட்டு ஆளா வந்திறங்கினான். பார்த்ததும்,'அண்ணே' ன்னு கையப் பிடிச்சுக்கிட்டான். கையப் பிடிச்சுக்கிட்டே சுத்திமுத்தி பார்வைய வீசி பயலுகளுக்கும் கைய தூக்கி காட்டிட்டு இருந்தான்.

'அம்மா தங்கச்சிகள்ல்லாம் வந்திருக்காங்கடா..வேன்ல உக்காந்திருக்காங்க' ன்னு வேனக் காட்டினேன். படக்குன்னு வேன திரும்பிப் பார்த்தவன்'அவய்ங்கலல்லாம் எதுக்குண்ணே கூட்டிட்டு வர்றே. ஒப்பாரி வப்பாய்ங்களேண்ணே' ன்னு சொன்னான். சொன்னாலும், மினுங்குச்சு முகம்.

'நா எங்கடா கூட்டிட்டு வந்தேன்?' ன்னு சொல்லிட்டு வேனுக்கு நகர்ந்தோம்.

'ஓந் தல எழுத்தாடா?..இப்டி ஒருத்தனா பெறந்து, போகாத இடத்துக்கு போயி செய்யாத காரியமெல்லாம் செஞ்சு..இந்தக் கொடுமையெல்லாம் என்னப் பாக்க வச்சுட்டு எனக்கென்னன்னு போய் கிடக்கானே அந்த மனுஷன் ' ( கார்த்தி அப்பா மலேசியாவில் இருக்கிறார்ன்னு கேள்விப் பட்டிருந்தேன்) ன்னு வாய்ல புடவ தலைப்ப வச்சுக்கிட்டு அழுதாங்க.

'சொன்னேன்ல' ன்னு என்னை திரும்பிப் பார்த்தான் கார்த்தி. 'சரிம்மா. அவனுக்கு சாப்பாடப் போடுங்க. மத்தவங்களையும் கூப்டுடா' ன்னு கார்த்திட்ட சொன்னேன். எல்லாரு வீட்லருந்தும் சாப்பாடு வந்திருக்கும்ண்ணே.ஆத்தா.. நீ ஓன் சங்க நிறுத்திட்டு சாப்பாடப் போடுறியா . கூப்ட்ருவாய்ங்க'

மீன் குழம்பு.

பெரிய பெரிய உருண்டையா உருட்டி வாய்ல வச்சுக்கிட்டே, 'நாக்கு செத்துப்போயி கெடந்துச்சுண்ணே'ன்னு லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சான். அவனோட பெஸ்டு சிரிப்பு எதுன்னு எனட்ட கேட்டா அதத்தான் சொல்லுவேன். மயிரு..சிரிக்கும் போது கண்ணு கலங்க எங்க எந்த மயிராய்ங்களால முடிஞ்சிருக்கு? சூடு தாங்க முடியாம முகத்த திருப்பிக்கிட்டேன்.

நூத்தி சொச்ச நாளாச்சு கார்த்திக்கு ஜாமின் கிடைக்க..

ஏழுகடைல பட்டுத் திருந்துனவனும் இருந்தாய்ங்க. பாத்துத் திருந்துனவனும் இருந்தாய்ங்களா... அப்படித்தானே இருக்கணும் இவனும். சொல்லப் போனால் இவன் ஏழுகடைக்காரனே இல்லையோன்னு தோணியிருக்கு நிறையத் தடவ.

இங்கிட்டு (சவுதி) வந்தப்புறம் பயலுகள்ட்ட பேசும் போதெல்லாம்,' ஸ்டாண்டுலதான் மாமா கெடக்கான். என்னத்த அவன் திருந்தி?..'ன்னு மகாத்மா கணக்கா ஸ்டேட்மெண்ட் கொடுப்பாய்ங்க.

'கேஸ் என்னடா ஆச்சு?'

'ட்ரையல் போயிட்டிருக்கு மாமா'

முதல் பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

ரெண்டாவது பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

'நீங்கதாண்டா அவன சரியாத் தூக்கல.. இப்ப மட்டும் எப்டி வர்றான்..இங்கயே கிடக்கான்? இதுக்குதானடா அலையிறான்' ன்னு மப்பு கூடுன ஒரு டயத்துல பயலுகள்ட்ட காரசாரம் பண்ணேன்.

'இதுக்குன்னு எதை சொல்ற?' ன்னு கேட்டாய்ங்க.

'இந்த இதுதாண்டா'ன்னு எதையோ தேடுனேன். ஒண்ணும் கிடைக்கல.. 'போங்கடா நீங்களும் ஒங்க ஏழு கடையும்' ன்னு தள்ளாடி நடந்து வீட்டுக்கு போயிட்டேன். போயும் விடலயே, 'இந்தப் பயலுக சரியில்ல புள்ள' ன்னு லதாட்ட தொடங்குனனா..'சாப்ட்டு வந்துட்டீகளா..சாப்டணுமா?' ன்னு சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமில்லாத கேள்வியக் கேட்டாள். 'அய்யய்யே.. வீட்டுக்கு வந்துட்டமா?' ன்னு தெளிஞ்சுட்டேன்.


ரெண்டாவது பயணத்தப்போ 'அவுட்டர்ல போயி தண்ணி அடிச்சுட்டு வருவோமாண்ணே?' ன்னு கார்த்தி ஒரு நாள் கூப்ட்டான். 'ஏண்டா?' ன்னு கேட்டதுக்கு, 'கொஞ்சம் பேசணும்ண்ணே'ன்னு சொன்னான்.

நம்புவீங்களா.. இந்தக் கார்த்தி காதல் வயப்படுவான்னு?

-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6