பதின்ம வயதுகளில் பெருபாலும் நான் பழைய டைரிகளையே பார்க்க நேர்ந்திருக்கிறது. அதுவும் வண்ணான் கணக்கு எழுதுகிற அம்மாவின் டைரியாக இருக்கும். ஒரே ஒரு சிவப்பு நிற டைரி மட்டும் புதுசு. என்னவோ, எதுவுமே எழுத தோணலை அதில்..ரொம்ப நாட்கள் பத்திரமாக வைத்திருந்த டைரி அது. மனிதர்களே தொலைகிறபோது டைரி எம்மாத்திரம்?
என்றாலும்
முல்லையின் இந்த தொடர் விளையாட்டும், இந்த தலைப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கடந்த வாரம் முழுக்க வேலைகளுக்கிடையே இந்த நினைப்பாகவே ஊறிக் கொண்டிருந்தேன். டைரி தொலைந்தால், பதின்ம வயது நினைவும், கிளர்வும் தொலையுமா என்ன? எல்லோரையும் போல் என்னையும் திரும்பி பார்க்க வைத்த
முல்லைக்கு வந்தனம். அழைத்த
ராகவனுக்கு நன்றி.
ஊர்ல உள்ள வெயிலெல்லாம் எம்புள்ளை தலையில்தான்" என்று தலையை தொட்டு பார்க்கிற அம்மாவின் கைகள் ஓய்ந்திருந்தது. அப்பாவிடம்,"நானே குளிசுக்கிறேன்ப்பா"என்று தொடங்கியிருந்தேன். பெயர் சொல்லி அழைக்கிற நண்பர்களை எல்லாம் "மாப்ள" போட தொடங்கி இருந்தேன். மாப்ளைகளும், "மாப்ள"எனும் போது பெருமையாக உணர்ந்தேன். இரண்டு அக்கா, இரண்டு தங்கைகள். ஒண்ணு, மண்ணா தூங்கிய காலங்கள் முடிவிற்கு வந்திருந்தது.
அக்காக்கள் இருவரும் குசு,குசுவென பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் போனதும் நிறுத்திவிடுவார்கள். சோமு மாமா வங்கித் தந்த மர்பி ரேடியோவில் இருந்து "கோயில் மணி ஓசை தன்னை செய்ததாரோ" பாட்டு வந்ததும் அடுப்படியில் இருந்து குடுகுடுவென ஓடி வருகிற அக்காக்களை பார்க்கையில் எரிச்சலாக வரும்.
அக்காக்கள் செய்கிற எரிச்சல்களை எல்லாம் மட்டுப் படுத்தியது மீனாக்காதான். "மாப்ள" சீனிவாசனின் அக்காதான் மீனாக்கா. சீனு போலவே நானும் மீனாக்கா என்றாலும் எனக்கு தனி வெளிச்சமாக இருந்தார்கள். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் மீனாக்கா. அவ்வளவு பெரிய நெற்றியில் பொட்டு எங்கு வைத்தாலும் நேர்த்தியாகவே இருக்கும்.
புருவ மத்தி, மூக்கு தொடங்கும் இடம் என எப்படித்தான் அளக்கிறார்களோ என்று இருக்கும்.
காத்தோட்டமான வெளித் திண்ணையில் வந்தாலும் சரி, பெருமாள் உற்சவ கூட்டத்தில் அக்கா நெருங்கினாலும் சரி, சொல்லி வைத்தது போல் மருதாணி வாசனை வரும். இப்பவும் மருதாணி வாசனை எங்கிருந்து வந்தாலும், "மீனாக்கா" என்றழைக்க முடியும். சதா நேரமும் மீனாக்கா வீட்டிலேயே கிடப்பேன். ராம்நகர் தெருவிற்கும் ரெட்டை அக்ரஹாரத்திற்கும் தூரம்தான். ஆனாலும் எட்டி நடக்க மீனாக்காதான் காரணம்.சீனுவை விட.
சீனு இப்பவும் என் நண்பன். மாப்ள. போன பயணத்தில் இருவருமாக தண்ணி அடித்த போது சீனுவின் முகத்தில் மீனாக்காவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சரி. விலக வேண்டாம்..
மீனாக்காவும் சீனுவைவிட என் மேல் ப்ரியமாய் இருப்பார்கள். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம் இருக்கு...
என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து, முகவரி கொடுத்து சேர்க்க சொன்னார்கள். அப்போ செல் போன் இல்லாத காலங்கள். லெட்டரை கொடுத்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து போகும். ஆளை எங்கு சந்திப்பது, எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதெல்லாம் சொல்லி தந்திருந்தார்கள்.
முகவரி, நாட்டரசன்கோட்டை. சிவகங்கையில் இருந்து சற்றேறக்குறைய ஏழு கி.மீ. வாடகை சைக்கிள் எடுத்துப் போய் தனியாக அவரை பார்த்தேன். இதை அந்த வயதில் எழுதி இருந்தால் அவனை பார்த்தேன் என்று எழுதி இருக்கலாம் நான். அவ்வளவு பிடிக்காத கண் கொண்டுதான் பார்த்தேன் அவரை. நெடு,நெடுவென சிகரெட் போல இருந்தாலும் குழந்தை முகம். (அப்ப பிடிக்காமல் இருந்தது. யோசிக்கையில் இப்ப பிடிச்சிருக்கு).
கடிதத்தை நேர்மையாக சேர்த்த பிறகு அக்கா மிக நெருங்கினார்கள். "உனக்கு பிடிசிருக்காடா?" என்று கேட்டபோது, "சூப்பரா இருக்கார்க்கா" என்று சொன்னது அப்ப பிடிக்காமல் இருந்தது. இப்ப பிடிச்சிருக்கு.
அக்கா வீடு, தலை வாசல் ஒரு தெருவில் இருக்கும். பின் வாசல் மற்றொரு தெருவில் இருக்கும். கொல்லையில்,கிணறை ஒட்டிய துவைக்கிற கல்லில்அக்காஅமர்ந்த படி,"டேய்..குட்டை" (என்னை,நண்பர்கள் அழைக்கிற பெயர்) என்று தொடங்கி "சிகரெட்" பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். என்னவோ எரிச்சலாக இருக்கும். என்னவோ சந்தோசமாகவும் இருக்கும்.
குட்டையா, வரலையா? பெருமாள் கோயில் பொட்டலுக்கு கிரிக்கெட் விளையாட போறோம்"என்று வருகிற சீனுவைக் கூட. "போடா", அவன் வரமாட்டான், அவனாவது படிக்கட்டும்" என்று இறுத்தி கொள்வார்கள்.
கொல்லையில் ஒரு சிறிய அறை இருக்கும். கட்டை, கட்டையான பைண்ட் செய்யப்பட்ட கதை புத்தகங்களுடன் அக்கா அங்கு அமர்ந்திருப்பார்கள். அறை வாசலில் ஒரு உலக்கை குறுக்க கிடக்கும். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் அக்கா என்று முன்பே சொல்லி இருக்கேன் இல்லையா? அது இந்த அறையில் அக்காவை பார்க்கிற போதுதான் ரொம்ப தோன்றும். அந்த அறை கற்ப கிரகம் போலவும், அக்கா தெய்வம் போலவும் இருப்பார்கள். என்னை பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.
பார்த்ததும் கேட்பார்கள்,"அம்மா எதுனா சொன்னாளா?"
சொன்னாங்கக்கா. போமான்னு வந்துட்டேன்" என்பேன். அறை எதிரே உள்ள கல் திறுக்கையில் அமர்வேன். காப்பி ஆத்திகொண்டே வருகிற அம்மா, "சொன்னா கேட்க்கிறானாடி.கடங்காரன்" என்பார்கள். எல்லாத்துக்கும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள் மீனாக்கா. அம்மாவிடமிருது காப்பி டவராவை வாங்கி, ரெண்டு ஆத்து ஆத்தி டம்ளரை அக்கா எடுத்துக் கொண்டு டவராவை எனெக்கென அறை வாசலில் வைப்பார்கள்.
சீனு சட்டை, சீனு மாமாவோட பேன்ட் எல்லாம் போட்டு, திருப்பி திருப்பி காட்டி, "நல்லாருக்காடா குட்டையா?" என்று மீனாக்கா என்னிடம் விசாரிக்கிற தருணம் பெரும்பாலும் அந்த அறையில் இருக்கும் போதாகத்தான் இருக்கும். சிகரெட் பற்றி அதிகம் பேசுவதும் அப்பவே. மீனாக்கா பற்றி பேசுவது என்றால் பேசிக் கொண்டே இருப்பேன்.
காலம் ஒரே மாதிரியாகவா போகிறது?
வேறொரு மனுஷனை திருமணம் செய்து கொண்டு மீனாக்கா சந்தோசமாகவே இருக்கிறாள். கடைசியாக மீனாக்காவை பார்த்தது போன வருடத்து தேர் திருவிழாவில்தான். அப்பா இறந்ததால் "வருடம் திரும்பாமல் வடம் பிடிக்க கூடாது" என்று சொல்லி அனுப்பிய மனுஷிக்காக நானும், சசியும் தெரு ஓரத்தில் ஒதுங்கி இருந்தோம்.
குட்டையா" என்கிற பழைய கூவலில் விழித்துக் கொண்டு, "அக்கா" என்றேன். வெகுவாக மாறி இருந்தார்கள். கையில் மகள் வயிற்றுப் பேரன். சந்தோஷ்டா, புவனா பையன்" என்றார்கள். சந்தோசின் கை பற்றினேன். சின்ன சின்னதாக, பிஞ்சு பிஞ்சாக இருந்தது.
ராகவன், இந்த தொடரை எழுத சொல்லி கூப்பிட்டப்போ, மீனாக்காதான் கதவு தட்டினார்கள். இப்ப திறந்திருக்கிற இந்த கதவை...
இன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. டைரியில் எல்லாம் எழுதலை. தொலைஞ்சும் போகலை. சிவப்பு டைரி தொலைஞ்சு போச்சு. ஆனா,தொலைஞ்சா போச்சு? அது போல.
இத்தொடரை தொடர இவர்களை அழைக்க விரும்புகிறேன்.
1.
வித்யா2.
விக்னேஸ்வரி3.
பத்மா4.
பாலா சார் 5.
அ.மு.செய்யது6.
ப்ரியமுடன் வசந்த்