Thursday, December 30, 2010

பால்ய ஸ்னேகிதியும் சில மழை நாட்களும் ( புரை ஏறும் மனிதர்கள்-தொடர்ச்சி )

முந்தைய பாகம் 'இங்கு'

எந்தப் பயணமும் போல் இல்லாமல் இந்தப் பயணத்தில் எதிர்பார்ப்புகள் கூடி இருந்தன. மஹாவின் திருமணம் மட்டும் அன்று. பதிவுலகம் வந்த பிறகான முதல் பயணம்! எழுத்து மூலமாக தேடியடைந்த நண்பர்கள் சிலரின் முகம் பார்க்கப் போகிற ஆர்வம். எல்லோரையும் மஹாவின் திருமணத்தில் ஒரு சேர பார்த்துவிடவேணும் எனும் துடிப்பு. போக, லதா சொல்லிய பொய்யில் ( ப்ரபா லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன் ) தேங்கியிருந்த உண்மை எனும் அடி மண்டி.

வீடு சேர்ந்து ஐந்து நாள் வரையில் ப்ரபா கடிதம் குறித்து எந்தப் பேச்சும் எடுக்கவில்லை லதா. அவ்வப்போது கேட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. " அதான் கிழிச்சுப் போட்டேன்னு சொல்றேன்ல" என்பாள். பாவி, கடங்காரி என்று மனசுக்குள் சொன்னாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அப்படியெல்லாம் கிழித்து போடுபவள் இல்லை. மயில் தன் இறகை உருவிப் போடும் வரையில் எத்தனை பீடி குடிப்பது நான்? லதாவிடம் மிக உயர்ந்த குணம் (??) ஒன்று உண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பாக அவளை பெருமையாக பேசிவிட்டால் போதும், ஒற்றை ஆளாக ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடிவிடுவாள். பௌலிங்க் போட்ட கையோடு விக்கெட் கீப்பராகவும் பாய்வாள். "HOW IS THAT?" என்று கதறுகிற ஃபீல்டராகவும் மாறுவாள். "இல்லை" என்று தலையாட்டுகிற அம்ப்பயராகவும் நிற்பாள்! சரி..தற்சமயம் வீடு உள்ள சூழ்நிலையில் விருந்தினர்களுக்கு எங்கு போக?

வந்தான் மகராசன் செ. சரவணக் குமார். (ஊரில் இருந்த சரவணன் என்னை காண வந்திருந்தார்) லதாவின் கணித சாஸ்த்திரம் அறிந்திருந்த நான் கட்டையை உருட்ட தயாரானேன். (லதாவிற்கு கிரிக்கெட் எனில், நமக்கு, வை ராஜா வை! - லங்கர் கட்டை!) "சவுதியில் இருக்கும் போதே லதா சொல்லிட்டா சரவனா. லதா மட்டும் இல்லைன்னா ப்ரபாவை கண்டு பிடிக்க முடியுமா? லதா மட்டும் இல்லைன்னா இது சாத்தியமா?" இப்படி, லதா மட்டும், லதா மட்டும் என்று உருட்டிய உருட்டலில்...'கேப்டன்' கிளீன் போல்ட்!

கடிதம் கைக்கு வந்து விட்டது. வாங்கிப் பார்த்த போதுதான் தெரிந்தது, அது ஆனந்த விகடனில் இருந்து ரீ-டைரெக்ட் செய்யப்பட்ட கடிதம் என்று. (ஆனந்த விகடனுக்கு எப்படி போனாள் இவள்?) சரவணனுக்கு முன்பாக கடிதம் படிக்கிற திராணி கூட இல்லாமல் இருந்தது. சரவணனுக்கு கடிதத்தை படிக்க தந்துவிட்டு, சரவணன் போன பிறகு கடிதத்தை எடுத்துக் கொண்டு தனியனானேன்.

"நான் ப்ரபா. கோயம்பத்தூர். பதிமூன்று வருடங்கள் பின்பாக நகர்ந்தால் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்" என்பது மாதிரி என்னென்னவோ எழுதி இருந்தாள் லூசு. ஆம், பெண்கள் எல்லோருமே லூசுதான். அல்லது ஆண்கள் எல்லோரையும் லூசு என்று நினைக்கிற (லூசா இருந்தா தேவலை) என்று நினைக்கிற குழந்தைகள்! அல்லது லூசுக் குழந்தைகள்!

கடிதத்தில் அழை எண் இருந்தது. உடன் தொடர்பு கொண்டேன். "ஹல்லோ" என்ற ஒற்றைக் குரலில் என் டைம் மிஷின் பின்னோக்கி பாயத் தொடங்கியது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக...பதினான்கு வருடங்களுக்கு முன்பாக...பதினைந்து வருடங்களுக்கு முன்பாக...என தட்டி, தட்டி இறங்கியும் ஏறியுமாக இருந்து கொண்டிருந்தது. (பயல்கள் மூவரையும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விட்டது. ப்ரபாவை மட்டும் நேரில் பார்த்தது இல்லை. ஓரிருமுறை போனில் குரல் கேட்டதோடு சரி. பின்பெல்லாம் கடிதம் மட்டுமே.)

இன்னாரென்று சொன்னேன். ஒரு மூணு அல்லது நாலு செக்கேன்ட் பேரமைதி அந்தப் பக்கம். அவ்வளவுதான்!

இடையில் கிடந்த பதினேழு வருடங்களையும் மடியில் கட்டிக் கொண்டு ஒரே தாண்டாக தாண்டி இந்தப் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள் ப்ரபா. ஒரு களைப்பில்லை, ஒரு சலிப்பில்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பும் அப்பாவிடம் அன்றைய பொழுதை பேசுமே குழந்தை! அவ்வழகை தாண்டி ஒரு ஒரு பிசிறில்லை!

"நானும் தேடி தேடி பார்த்தேண்டா. என்னவோ பிரச்சினைன்னு மட்டும் தெரிஞ்சுது. என்னன்னு தெரியல. அட்ரஸ்தான் இருக்கே. ஊருக்கு கிளம்பி வந்து விசாரிப்போமான்னு கூட வந்தது. அவனே தேடல. அப்புறம் நான் என்னத்துக்கு தேடணும்ன்னு நினைச்சுக்குவேன். ஆனாலும் ஒன்னோட தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு போதும் தோணியதே இல்ல மக்கா. இன்னுமொரு இருபது வருடங்கள் கழிச்சு நீ கூப்பிட்டிருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என் மன நிலை!.. கல்யாணமா? என்னைக்குடா நான் அதை பத்தியெல்லாம் யோசிச்சிருக்கேன்? எப்பவோ எழுதி இருக்கேனே இதைப் பத்தியெல்லாம். உனக்கெங்கே இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது. இந்தாதான் நீ கிடைச்சுட்டியே. உன்னை வச்சு குமாரும் கிடைச்சுருவான். இனி உங்க குழந்தைகள்தாண்டா என் குழந்தைகளும். ஐயோ..மஹா குட்டிக்கா கல்யாணம்?" என்று கெக்களி போட்டு சிரிக்கிறாள்..

"திடீர்ன்னு பார்த்தா, நாகு வந்து சொல்றா மக்கா, (நாகு- ப்ரபாவின் தோழி!) உன் கவிதை விகடன்ல வந்திருக்குன்னு. ஆஃபீஸில் இருந்து நேரா நாகு வீட்டுக்குத்தான் போனேன். விகடனை வாங்கி உன் கவிதை பார்த்தேன். இனி எப்படியும் உன்னை புடிச்சிரலாம்ன்னு நம்பிக்கை வந்திருச்சு. விகடனுக்கு போன் பண்ணி கேட்டேன். அவுங்க, அட்ரசெல்லாம் தரமுடியாது. ஒண்ணு செய்ங்க, பா.ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒட்டி விகடனுக்கு ஒரு கவரிங் லெட்டர் வச்சு அனுப்பி வைங்க. அதை நாங்க அவர் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்ன்னாங்கடா. உடனே அனுப்பிட்டேன்.அனுப்பி ரெண்டு மூணு மாசம்தான் ஆகும் மக்கா. இது இவ்வளவு வொர்க்கவுட் ஆகுமாடா?...ஐயோ நம்பவே முடியல மக்கா!"

"ஒரு ஜிம்மி வளக்குறேன் மக்கா. ஃபீமேல் டாக். இதைத்தானே யாருமே வளக்க மாட்டாங்க. ஆஃபீஸில் இருந்து வந்துக்கிட்டு இருந்தேனா. நல்ல மழை. சாக்கடையெல்லாம் ரொம்பி ஓடுது. சாக்கடைக்குள்ள இருந்து ஒரு குட்டி நாய் சத்தம். பார்த்தா இந்த ஜிம்மிடா.. குட்டியூண்டு! சாக்கடைக்கு மேல மொகத்தை வச்சுக்கிட்டு மெதந்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கு மக்கா. வண்டியை நிறுத்தி, அதை தூக்கிட்டு வீட்டுக்கு வந்தனா. அம்மா கெடந்து கத்துது. குளிப்பாட்டி, கிளிப்பாட்டிப் பார்த்தா.. ஐயோ அவ்வளவு அழகுடா. நீ பார்க்கணுமே.. இப்ப நல்லா வளர்ந்துட்டாங்க" என்று சிரித்துக் கொண்டே இருந்தாள்.

இவள் சிரிக்க சிரிக்க எனக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. பார்வை கரைந்து நீராக இறங்கும் போது இருளத்தானே செய்யும்!..

அனாதரவான நெடுஞ்சாலையில் ஒரு மைல் கல் இருப்பது போலும், அக்கல்லில் மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பது போலும், போகிற வருகிற வாகனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டவே பிறவி எடுத்தது போலும், பிறகு அச்சிறுமியே மைல் கல்லாக சமைந்தது போலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் காட்சிகள் விரியத் தொடங்கியது- விழித்திருக்கும் போதே இழுத்துப் போகுமே கனவு.. அது போல!

காலங்காலமாய், அனாதரவான எல்லா மைல் கல்லிலும் ஏதாவது ஒரு சிறுமி அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளோ?

தொடரும்...

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A

Monday, December 27, 2010

புரை ஏறும் மனிதர்கள் - பதினொன்று

மஹா திருமணத்திற்காக நாடு திரும்ப ஒரு மாத காலம் இருந்த சமயம் அது. "ஏங்க..ப்ரபாவிடமிருந்து லெட்டர் வந்திருக்கு" என்றழைத்தாள் லதா ஒரு நாள். "என்ன புள்ள சொல்ற?" என்ற நான் ஆன்மா உதற எழுந்தமர்ந்தேன். ஒரு பெயரை கேட்டதும் ஆன்மா உதறுகிறது எனில், அது வெறும் பெயர் சம்பத்தப் பட்டது மட்டும்தானா? ஒரு பெயருக்கு பின்னால் எவ்வளவு, எவ்வளவு இருக்கிறது! எத்தனை வருடங்கள்! எவ்வளவு கடிதங்கள்! எத்தனையெத்தனை பரிமாற்றங்கள்!

கருவேலநிழல் என்னை கையில் எடுத்த புதிதில் 'ஜ்யோவ்ராம் சுந்தர்' என்ற பெயரில் எப்படி உதறி அடங்கினேன்! "மக்கா" என்ற ஒரு பின்னூட்டத்தில் தொலைந்த அத்தனை வருடங்களையும், அது சார்ந்த உணர்வுகளையும், குமார்ஜி-தெய்வாவையும், மீட்டெடுத்து விடவில்லையா? அப்படி எதுனா ஒரு சர்க்கஸ் நிகழ்ந்து விடாதா? இந்தப் புள்ளையை மட்டும்தானே இன்னும் காணோம்? என மறுகிக் கொண்டிருந்த பெயர் இல்லையா இந்த ப்ரபா!

(இங்கு, இந்த "ஐவரானோம்" என்கிற என் பழைய பதிவு ஒன்றை வாசித்து வருவீர்கள் எனில் இந்தப் பதிவு இன்னும் சுகப்படலாம். அட..சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லு மக்கா என்பவர்களுக்காக, இந்த 'புரை ஏறும் மனிதர்கள்' தொடரை என் அந்திம கால அசை போடலுக்கெனவே சேகரிக்கிறேன். என் சேர்மானத்தை உங்களிடம் பகிரும்போது என் பேச்சை கேட்டால்தான் என்ன மக்கா?)

ஆச்சா? லதா அழைத்தாளா?..

"லெட்டர்ல அட்ரஸ் இருக்கா? போன் நம்பர் இருக்கா?" என்றெல்லாம் லதாவிடம் படபடக்க தொடங்கினேன். "அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா சொன்னேன். கெடந்து பறக்காம ஒழுங்கா ஊர் வரப் பாருங்க" என்றும், என் அனத்தல் தாங்க மாட்டாது, "லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன்" என்றெல்லாம் லதா சொல்லியதை நம்ப மறுத்தது மனம். (பொய் சொல்வதில் என்னளவு கெட்டிக்காரியில்லை லதா, கேட்டீர்களா?)

புரண்டு ஓடும் மழை நீரில், தலையாட்டி, தலையாட்டி மிதந்து போகும் தீப்பெட்டி போல "ப்ரபா" மிதக்க தொடங்கினாள். பதினேழு வருடங்களுக்கு முன்பு புரண்ட மழை, அப்ப மிதந்த தீப்பெட்டி... இன்னும் நனையக் காணோம், இன்னும் ஊறக் காணோம், இன்னும் அமிழக் காணோம்!

பால்ய ஸ்னேகிதியும், சில மழை நாட்களும்

ப்ரபா எனக்கு அறிமுகமான போது எனக்கு 29 வயது. ப்ரபாவிற்கு 23! (பால்ய ஸ்னேகம் என்கிற பதத்தில் குழம்பலாம் நீங்கள். எனக்கு 300 வருடம் வாழப் ப்ரியம். அப்படியானால் என் 29 எனக்கு பால்யம்தானே?) மகாவிற்கு 6-ம், சசிக்கு 1 1/2 வயதுகளும். (இங்கு, இந்த மஹா என்பவளின் திருமணத்திற்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை தயவு கூர்ந்து என்னைப் போலவே நீங்களும் மறந்துவிடுங்கள்)

பேனா நண்பனாக முதலில் குமார்ஜிதான் அறிமுகமானான். பிறகு தெய்வாவும், சுந்தராவும். பிறகுதான் இந்த ப்ரபா. ப்ரபாவிற்கு கோவை சொந்த ஊர். குமார்ஜி, தெய்வா, சுந்தராவிடம் பகிரும் சகல விஷயங்களையும் என்னால் ப்ரபாவிடமும் பகிர முடிந்திருக்கிறது. பரஸ்பரம் அவளும்! நட்பில் ஏது பாலின வேறுபாடுகள்?

பெரும்பாலும் வாசித்த புஸ்தகங்கள், கவிதைகள், கதைகள் என இருந்தவை, பிறகு குடும்ப விஷயங்களுக்கும் என பரிணாமம் பெற்றது. இலக்கிய பரிமாற்றங்களை விட குடும்ப விஷயங்களை பரிமாறிக் கொண்டதில் இன்னும் பாந்தமாக, ஒட்டுதலாக இருந்தன. குடும்பத்திற்கு அப்புறம்தானே இலக்கியமும் கருமாதியும். குடும்ப நட்பானாள் மற்ற மூவரையும் போன்றே ப்ரபாவும்.

கடிதங்களில் இச் என்றால் தும்மிக் கொள்வதும் இம் என்றால் இருமிக் கொள்வதுமாக இருந்து வந்தோம். ஒவ்வொருவரிடமிருந்தும் வாரம் இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வந்துவிடும். அப்பெல்லாம் ஞாயிற்று கிழமைகள் எரிச்சல் தரக் கூடிய நாட்களாகவே இருந்ததுண்டு. பயல்கள் மூவரிடமிருந்தும் வரும் கடிதங்களை லதா பிரிக்காமலே வைத்திருப்பாள். ப்ரபாவின் கடிதம் மட்டும் பெரும்பாலும் பிரிந்தே வீட்டிலிருக்கும். மனைவி என்பவள் மனுஷி என்பதை விட மனைவி என்பதுதானே முதல்!

ஒளிக்க எங்களிடம் எதுவும் இல்லாமல் இருந்ததால் ப்ரபாவின் எந்த ஒரு கடிதமும் என்னிடமிருந்து ஒளிந்து கொண்டதே இல்லை. என்றாலும், "என்ன பழக்கம் இது. பொம்பளை புள்ளைக்கெல்லாம் லெட்டர் எழுதிக்கிட்டு?" என்பாள் லதா, எப்பவாவது.

இப்படியாக, சற்றேறக்குறைய ஐந்து வருடங்கள்!

நாட்கள், மாதங்கள், வருடங்கள்,நண்பர்கள், நான், நீங்கள் என்பதையெல்லாம் விட விதி வலியதன்றோ!(இங்கு, வி..த்..தி வ..ல்..லி..ய..த..ன்..றோ.. என வாசிப்பீர்கள் எனில் என் உணர்வை சரியாக புரிகிறீர்கள் என ஏற்கிறேன்)

கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில், மகன் சசி திறந்திருக்கும் கழிவு நீர் தொட்டியில் வீழ்கிறான். நாட்கள் தட்டாமாலை சுற்றுகிறது. மனசு முழுக்க நிரம்பி இருந்த நண்பர்கள் 'அந்தளை சிந்தளை' ஆகிறார்கள். எப்படி என அறிய விரும்புகிறீர்களா? வேறு வழி இல்லை உங்களுக்கு. 'ஐவரானோம்' நுழைந்து வந்தால்தான் முடியும்.

குளுமை கூடிய நாளொன்றின் அதே பின் மதியத்தில்தான் ப்ரபாவும் கிடைக்கிறாள்! பதினேழு வருடம் முன்பு அறிமுகமாகி, ஐந்து வருடங்களில் என் குடும்பத்தில் ஒருவளாகி, கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில் தொலைந்து போனாளே, அந்த ப்ரபா!

எப்படி?

தொடர்ச்சியில் பார்ப்போம்...

புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10

Friday, December 24, 2010

சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று

நல்லாருக்கீங்களா மக்கா எல்லோரும்?

நீர்க் காகம் போல, இங்கு முக்குளிச்சு அங்கு எழுந்து, மஹா திருமணம் முடித்து, அங்கு முக்குளிச்சு இங்கும் எழுந்தாச்சு. சும்மா 'ஞொய்ன்னு' காதடைக்கிற தனிமையும் தொடங்கியாச்சு.

இன்னதென்று அனுபவிக்க இயலாத அனுபவமாக அமைந்து விட்டது இந்தப் பயணம். புதிது புதிதாக எவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள் குரல்கள்! மனசு முழுக்க அமுக்கி அமுக்கி எடுத்து வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கிற போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருந்தாலே போதும். எதிர்படும் இந்த இரண்டு வருட சுமை தெரியாது போகலாம்.

சரி,..மஹா திருமணதிற்கு வருவோம்..

மொழு மொழுவென எண்ணெய் தடவிய உடலுடன், தொடையை தட்டியபடி நிற்கிற சாண்டோ சின்னப்பா தேவரின் முன்பு, தொள தொள டவுசருடன், கூட்டத்தினரால் தள்ளிவிடப்பட்ட நாகேஷ் நிற்கிற அனுபவமாக இருந்தது மஹாவின் திருமணம்.

பயில்வானான மஹாவின் திருமணத்திடமிருந்து, நாகேஷான நான், ஓடி, ஓடி, வளைந்து, நெளிந்து, தாவிக்குதித்து, தப்பியும் வந்துவிட்டேன். தற்காப்பு கலையில் மிக முக்கியமானது, கால் கிளப்பி ஓடி தப்பிப்பதுதானே!

மகளின் திருமணமென்பது எவ்வளவு சந்தோசம்,நெகிழ்வு, மிரட்சி, தேக்க நிலை, பிரச்சினை, தட்டுப்பாடு, கண்ணீர், அனுபவமின்மை, என்பதெல்லாம் அறிய நேர்ந்தன. இவ்வளவையும் எதிர்கொள்ள, கடக்க, என்னிடம் ஒரே ஒரு அஸ்த்திரமே இருந்தது. என் நண்பர்கள் என்கிற அஸ்திரம்!

ஆம்! நண்பர்கள் கூடி இழுத்த தேர்தான் மஹாவின் திருமணம்!

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன். உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்" என்று தழு தழுக்கிற அண்ணாத்துரை சித்தப்பாவின் பாடல்கள் கேட்காத எங்கள் இல்லத்திருமணம் இருந்ததில்லை மக்கா.

"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒண்ணாக" என்று கரைகிற/ கரைக்கிற காளியப்பன் அண்ணனின் பாடல் மிக பிரசித்தம் எங்கள் திருமணங்களில்.

ஆண்களும், பெண்களும் அணி அணியாக பிரிந்து கொண்டு 'பாட்டுக்கு பாட்டு' பாடி சிரித்த திருமணங்கள்தான் எத்தனை எத்தனை!

இவை அத்தனையும் மஹா திருமணத்தில் இல்லாமல் போயிற்று. எனக்கு விபரம் தெரிந்து, உறவுகள் சூழாத ஒரே திருமணம் நம் மஹாவின் திருமணமாகவே இருக்கும்.

ஏன்?

ஏன் என்றால் என்ன சொல்லட்டும் மக்கா? ஒன்றை இழந்து ஒன்றை பெறலாம். எல்லாவற்றையும் இழந்து ஒன்றை பெற்றால், அந்த ஒன்று என்ன என்பதுதானே முக்கியம்!

அந்த ஒன்றாக இருந்தது மஹாவின் திருமணம்!

"டேவுலேய், ராஜா பயலே..நாங்களா முக்கியம்? எங்க போய்ட்டோம் நாங்க? .. ந்தா இருக்கு மஹா வீடு. மக்கா நாளு போய் பார்த்துர மாட்டமா மஹாவை? போட்டு உழண்டுக்கிட்டு இருக்காம ஆக வேண்டியதை பாருடா" என்று 'வெளியில் இருந்து' ஆதரித்தது மொத்த குடும்பமும்.

இப்படி ஒரு பக்கமாக குடம் சாய்ந்திருந்த சூழலை ஓடி வந்து தூக்கி நேர் செய்து தந்தார்கள் நண்பர்கள். நண்பர்கள் உறவினர்களாக நின்றார்கள்! உறவினர்கள் நண்பர்களாக நின்றார்கள்!.. "ரெண்டும் ஒன்னுதாலே..க்காளி ஒழுங்கா வேலையை மட்டும் பாருலே" என்றார்கள் இருவரும்.

பிறகென்ன...

பயில்வானிடமிருந்து ஓடி தப்பித்து, தப்பித்து ஓடி வெற்றியையும், தோல்வியையும் ஒரு சேர பெற்றான் இந்த நாகேஷ் அப்பா! (இதெல்லாம் சரி.. இந்த வெற்றி தோல்வி என்றால் என்ன?)

இப்படி,..கூடவே நின்றும், இன்னும் முகம் கூட பார்க்காத உங்களில் பலர், குரல் வழியாக ஆறுதல் சொல்லியும், மின்னஞ்சல் வாயிலாகவும் மஹா திருமணத்தில் கை நனைத்த நீங்களெல்லாம் யார்? மனசையும் மனசையும் இணைக்கிற இந்த திருகானிக்கு பெயர் என்ன மக்கா?நட்பென்றால் நட்பு! உறவென்றால் உறவு! இல்லையா?

என்ன செய்யப் போகிறேன் உங்களுக்கெல்லாம்?

சரி.. இப்படி அழுதா முடிக்கிறது ஒரு பத்தியை? அதுவும் நம் மஹா திருமணம் குறித்த பத்தியை...காலத்திடம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறதாமே? அது எல்லாவற்றையும் சரி பண்ணி விடுமாமே?

**

இந்த மஹா குட்டி என்ன பண்ணா தெரியுமா மக்கா?

திருமணம் முடிந்து மூன்று நாள் இருக்கும்."என்னடா.. என்ன பண்ற?" என அழை பேசியில் அழைத்தேன்.

"அப்பா, இன்னைக்கு எங்க வீட்ல நாந்தான் சப்பாத்தி குருமா பண்ணேன்" என்றாள்.

"ஐயையோ" என்று சிரித்த எனக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. பிரமிளின் இந்த கவிதை முன்பு ஒரு அனுபவமாக இருந்தது. ஒரே கவிதை இரு வேறு அனுபவத்தை தருமா என்ன?

தந்ததே!

அந்தக் கவிதை..

"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."

செல்லட்டும்...செல்லத்தானே வேணும்!