Friday, November 25, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பத்தொன்பது

தேவதைகள் வாழும் வீட்டிற்குப் போயிருந்தேன்...

லயா பிறந்த நேரத்தில் சென்னையில் மணிஜி ஆஃபிசில் வைத்து ராஜாவை (கே.வி.ஆர்) முதல் முறையாக பார்த்தது. 'என்ன ராஜா நீங்க எப்போ வந்தீங்க?' ன்னு கேட்ட போது, 'ரெண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கு சார். வைஃப்ப டிஸ்சார்ஜ் பண்ணி இப்பதான் வீட்ல விட்டுட்டு வர்றேன்' ன்னு சொன்ன நினைவு. சொடுக்கலில் பதினோரு மாதம் ஓடி விடுகிறது.

ரொம்ப நாளாகவே நிலா, லயா பார்த்து வரணும் என்று நினைத்துக் கொண்டிருந்தது, இந்த ரியாத் பயணத்தில் வாய்த்து விட்டது. இந்தப் பத்து வருஷத்தில் ரியாத் பேலசை விட்டு முதல் முறையாக வெளியில் வருகிறேன். ரியாத் பேலஸில் இருக்கும் சலாலுதின் சேட்டா, பண்டா என்கிற அங்காடி வளாகத்தின் முன்பாக ராஜாவிடம் என்னை ஒப்படைத்தார்.

நிலாவும் வந்திருந்தாங்க தாத்தாவைக் கூட்டிப் போக..புதுசாக ஒரு ஆளைப் பார்த்தால், எல்லாக் குழந்தைகளும் வைத்திருக்கிற முகத்தையே வைத்திருந்தாங்க நிலா. 'என்னடா பாக்குற?..மாமாடா என்று சற்று தடுமாறி , பிறகு ' தாத்தாடா' என்று நிதானித்தேன். (பழைய நினைப்பு போக இன்னும் கொஞ்சம் நாளாகும் போல). 'தாத்தான்னு சொல்லிட்டீங்களா? நான் அங்கிள்ன்னு சொல்லி கூட்டி வந்தேன்' என்று ராஜா சிரித்தார் .

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்..

பிறகு நிலா பேச்சுல புடிச்சாங்க பாருங்க ஒரு பிடி..

ரியாத் தெருவில் உள்ள கட்டிடங்களையெல்லாம் இது இந்த கட்டிடமாம். அது அந்த பில்டிங்காம். இதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். அதுல அந்த அங்கிள் வேலை பார்க்கிறாராம். இவுங்க ப்ரீ கேஜி படிக்கிறாங்களாம். ராஜாப்பாதான் ஸ்கூல்ல கொண்டு போய் விடுவாங்களாம். அப்பாவை பெயர் சொல்லி ஒட்டினாற்போல ஒரு 'ப்பா' சேர்த்து குழந்தை அழைப்பது எவ்வளவு அழகாய் இருக்கு தெரியுமா?

வீடு போய் சேரும் வரையில் வாய் ஓயவில்லை.

வீடிறங்கி மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கும் போதே பிரியாணி வாசனை தூக்கியது. 'ராசாராமா அடிச்சடா லக்கிப் ப்ரைஸ்' ன்னு வயிறை தடவிக் கொடுத்துக் கொண்டேன். 'பொறு பங்காளி வரும்ல..எதுக்கு பொங்குற?' ன்னு அவ்வபோது என் வயிறை தடவித் தரவேணும். பாடி லாங்க்வேஜ் புரிஞ்சிக்கிட்டு அதுவும் படுத்துக்கிரும். எல்லாம் நம்ம பழகித் தர்றதுலதானே இருக்கு.

ரொம்ப நாள் பழகியவர்கள் போலான வாஞ்சையுடன் சிரித்து வரவேற்றார்கள் நிலா அம்மா. நிலா அம்மாவைப் பார்க்கையில் எனக்கு மஹாவைப் பார்ப்பது போலதான் இருந்தது. என்ன.. நிலா அப்பாவை நிலா ராஜாப்பா என்கிறாள். மஹா அப்பாவை மஹா வெறும் அப்பா என்றுதான் அழைக்கிறாள். மகள்கள் எப்படி அழைத்தால்தான் என்ன? அல்லது சிரித்து வரவேற்றால்தான் என்ன..

இரண்டாவது நிலா அம்மாவை சந்திக்கிறேன். முதல் நிலா அம்மா மணிஜி வீட்டில். அவுங்க பெரிய நிலா. அதுனால பெரிய நிலாம்மா. இவுங்க சின்ன நிலா. அதுனால சின்ன நிலாம்மா.

பதிவ நண்பர்களுக்கு நிறைய நிலாக் குழந்தைகள் இருந்து, 'மீடியம் நிலாம்மா, நடுசென்டர் நிலாம்மா, ஒண்ணு விட்ட நிலாம்மா' என்று நிறைய நிலா அம்மாக்கள் இருந்தாலும் இன்னும் நல்லாத்தான் இருக்கும்.

'இவன் யார்றா இவன். இவம் பாட்டுக்கு ஏறி உள்ள வர்றான்' என்பது போல லயாக்குட்டி பாத்தாங்க. 'ஆத்தாடி.. இவுங்க யாரு?' ன்னு நானும் சிரித்து வைத்தேன். ரெண்டு குழந்தைகளும் ரொம்ப ஃபிரெண்ட்லி. கூப்பிட்டதும் ' பச்சக்' ன்னு ஒட்டிக்கிறாங்க. வாக்கரை நகர்த்தி தானும் நகர்ந்து கொண்டிருந்தாங்க லயா குட்டி. (இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்- நன்றி குமார்ஜி)

வீடு பூராம் நிலா கிறுக்கிய ஓவியங்கள்தாம். அது என்ன இது என்ன என கொஞ்ச நேரம் ஓவியங்களை எல்லாம் காட்டித் தந்து கொண்டிருந்தாங்க நிலா. தாத்தாவுக்கும் பேத்திக்குமான உலகை விரித்து விரித்துக் காட்டிக் கொண்டிருந்தாங்க. 'அப்படி இழுத்து, இப்படி வளைத்து இப்படி கோடு போட்டால் ரெண்டு' என எண் இரண்டை வரைந்தது குறித்து விளக்கிக் காட்டின்னாங்க. 'ஆமாவா?'எனத் தெளிந்து கொண்டேன்.

பஃக்ருதீன் சார், இரண்டு வருடங்கள் முன்பாகவே கருவேலநிழல் கவிதைகள் வாசித்தது குறித்து மெயில் செய்திருந்தார். அவருக்கு ஒரு பதில் மெயில் கூட செய்யவில்லை நான். அவரை ராஜா வீட்டில் சந்தித்த போது சொல்லொண்ணா குற்றவுணர்ச்சி துருத்தியது. 'அட..விடுங்க சார்' என்பது போல சாதாரணமா கட்டி, சாதாரணமா அணைத்து, சாதாரணமா சிரித்து, சாதாரணமாக பேசினார். அசாதாரணமான தருணங்களை தர சாதாரண மனிதர்களால்தான் முடியும் போல. - நன்றி பஃக்ருதீன் சார்!

ராஜா வீட்டில் மற்றொரு சுவராசியமான மனிதரையும் சந்தித்தேன். லக்கி ஷாஜஹான் சார்! 'உங்களுக்கும் சேர்த்து சமைச்சுட்டேன் ஷாஜஹான். நீங்க வராட்டி பார்சல் கட்டி பஃக்ருதீன்ட்டயாவது கொடுத்தனுப்புவேன். அதுனால நீங்களே வந்துருங்க. இது ரெக்வஸ்ட் இல்ல. ஆர்டர்' என்று ராஜா அவரை கூப்பிட்ட போது கூடிய சுவராசியம், வந்து, அவ்வபோது அண்ணாந்து சிரித்து, சோபாவில் கால் மடக்கி அமர்ந்து, ரெண்டு மூணு தடவையாக பிரியாணி கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டு, 'இப்டி சாப்புடுற ஆளுகதான் சமைக்கிறவனை சந்தோசப் படுத்துறாங்க' என ராஜா வாயாலயே சொல்ல வைத்து..இதை ஒருவேளை ஷாஜஹான் சார் வாசித்தால் எப்படி அண்ணாந்து சிரிப்பார் என்பது வரையில் மனசில் சம்மணம் கூட்டி அமர்ந்திருக்கிறார். - ஷாஜஹான் சார், உங்களுக்கு என் அன்பு!

உண்மையில் மிக அருமையாக பிரியாணி, மட்டன் குழம்பு செய்திருந்தார் ராஜா. ஸ்பாட்லயே டைட்டா கட்டிக்கிட்டு, ஸ்லாங்கமா பார்சலும் கட்டிக்கிட்டேன். கிளம்பிய தருணம் நிலா முகம் வாடிட்டாங்க..'ஏண்டா.. தாத்தா நாளைக்கு வர்றண்டா' ன்னு சொன்னேன். மஹா, மாடியில் இருந்து கீழிறங்கி, காம்பவுண்டு கதவு திறந்து, முகத்தையும் வெளியில் நீட்டி, போறது வரையில் பாத்துக்கிட்டு நின்னாங்க. மஹான்னா சொன்னேன் நிலா அம்மாவை?.. இனி மஹாவைப் போயி நிலா அம்மான்னு சொல்றனோ என்னவோ?

எனக்கு ஒரு தம் அடிச்சா தேவலாம் போல இருந்தது. கூட வர்ற நிலா கண்ணைக் கட்டி, ஒரு மர மறைவில் நின்று, தம் கட்டி ஆசுவாசமானேன்...

நிலா, ராஜா, பஃக்ருதீன் சார், ஷாஜஹான் சார் எல்லோருமா வந்து பேலஸ் வாசலில் இறக்கி விட்டுப் போனார்கள். என் இளவரசரின் அரண்மனைக்குள் ஒரு ராஜாவைப் போல நுழைந்தேன்.

பாவம் என் முதலாளி. வெறும் இளவரசர்தான்.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18


Saturday, October 22, 2011

இலையுதிரும் சத்தம் - நான்கு

ஏழுகடைக் கதைகள்

லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்
ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில்,'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுருந்தோம் நானும் நன்பன் மதியும் சேர்ந்து' ன்னு முன்பே சொல்லியிருக்கிறேன் இல்லையா? அவன் மனைவியின் பெயரும் லதா என்பதால் அந்தப் பெயர்.

'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுறோம். பேசாம மடத்துக்கு மனைவிகள் பேரே வச்சுட்டா என்ன?' ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சே அந்தப் பெயர் வச்சோம்.

நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. 'லெஃபட் ரைட் லெஃபட் ரைட்' ன்னு. ஆச்சா? அப்புறம் குண்டக்க மண்டக்க ஆகிப் போச்சு எல்லாம். நான் இங்க வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள் கழிச்சு லதாவிடம் பேசும்போது சொன்னாள், 'ஏங்க ரெத்தினம்ன்னு ஒருத்தர் உங்கள தேடித்தேடி வந்துட்டுருக்கார். என்னவோ கல்யாண நெகட்டிவ் வேணுமாம்'

'மதிய பாக்கச் சொல்லு புள்ள. நம்ம வீட்ல ஒரு நெகட்டிவும் இல்ல'

'பாத்துட்டாராம். மதிதான் இங்க போகச் சொன்னுச்சாம்'

'அப்படியா? அப்ப நெகட்டிவ் பழுத்து பாசிட்டிவ் ஆயிருச்சுன்னு சொல்லிரு'

'எல்லாம் பேசுவீக அங்க இருந்துக்கிட்டு'

##

P. சேவுகமூர்த்தி டீ- ஸ்டால்

ஏழு கடையில் அஞ்சாம் நம்பர் கடையில் மூர்த்தி டீக்கடை வச்சுருந்தான். ரெண்டு பென்ச் வெளியில் போட்ருப்பான். கொஞ்சப் பேர் அதுல உக்காந்துக்கிட்டு மிச்சப் பேர் நின்னுட்டு இருப்போம்.

'டேய்...நீங்களே உக்காந்துக்கிட்டா வர்ற கஸ்டமர் எப்படிடா உக்காருவாங்க?' என்றான் மூர்த்தி ஒரு நாள்.
'கஸ்டமர் வந்தாத்தான் எந்திருச்சுருவோம்ல' - செட்டி.
'பெஞ்சு ஃபுல்லா இருந்தா உக்காந்து டீ குடிக்கிறவன் வரமாட்டாண்டா'
'ஆமா இந்த டீயை உக்காந்து வேற குடிக்கணுமாக்கும் - மணி (எ) கிண்ணி மண்ட
'மண்டக் கர்வமா பேசாதீகடா. அழிஞ்சு போவீக'
'இப்ப என்ன உனக்கு? இதுல இருந்து எந்திரிக்கணும். அம்புட்டுத்தானே? எந்திரிச்சாச்சு. அய்யா கஸ்டமரு, ஆத்தா கஸ்டமரு, வாங்க வாங்க வாங்க உக்காருங்க. டீ குடிங்க பேப்பர் படிங்க ஒரு வடை எடுத்து கடிங்க. வாங்க வாங்க வாங்க' - முத்துராமலிங்கம்
இப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும். பால் மஞ்சள் தட்டிவிடும் .
'மஞ்சப் பால்ல இருந்து ஒரு டீ போடு மூர்த்தி அண்ணே' - அமரன் கார்த்தி .
'காச வைங்க வெண்ணைகளா'
'மூர்த்தி அண்ணே, கடைய பாத்துக்குறோம் நீ போய் ஒரு டீ சாப்ட்டு வா'- குண்டு கார்த்தி
அடிக்க விரட்டி, கு. கார்த்தியும் ஓடி, கழுத்துப் பிடியா கொண்டுவந்து 'என்ன சொன்ன..என்ன சொன்ன?' என்றான் மூர்த்தி.
'கழுத்த விடுண்ணே. வலிக்குது. ஓங் கடைய விட்டா நாதி இருக்காண்ணே எங்களுக்கு' . நெருக்கிப் பிடிச்சு கேட்டா நெஞ்சுல விழுந்து நக்கிர்றீகளடா ' என்ற மூர்த்தி இப்போ மலேசியாவில் இருக்கிறான். கிண்ணி மண்ட, அமரன் கார்த்தி துபாயில். முத்துராமலிங்கம், செட்டி சிவகங்கையில். நான் இங்க வந்தாச்சு. குண்டு கார்த்தி செத்துப் போனான்.
நெஞ்சுல விழுந்து நக்க இப்ப ஆள் இருக்கா என்னன்னு தெரியல ஏழுகடைல.
##

மணி அத்தானின் மல்ட்டி ஹோட்டல் சென்ட்டர்

ஏழாம் நம்பர் கடையில் சுப்பிரமணி அத்தான் ஹோட்டல் வச்சுருந்தார். ஹோட்டல்னா ஹோட்டலேவா? ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதா என்ன ஒரு ஹோட்டல்?. நாலு பசங்க, கலா அக்கா, அத்தான் எல்லோரும் ஹோட்டல்லயேதான் கிடப்பாங்க. கலா அக்காவ அக்கான்னு கூப்பிடும் போது சுப்பிரமணி அத்தானை அத்தான்னுதானே கூப்பிட முடியும். ஹோட்டல் எப்படி ஹோட்டல் மாதிரியோ அப்படித்தான் சுப்பிரமணி அத்தானும் அத்தான் மாதிரி. சொந்த அத்தானைத்தான் அத்தான்னு கூப்பிடனும்'ன்னு என்ன சட்டமா இருக்கு?ஹோட்டல்பாட்டுக்கு ஹோட்டல் இருக்கும். சீசனுக்கு தகுந்த மாதிரி சீசன் பிசினசும் பண்ணுவார் சுனா பானா அய்த்தான். இளநி கிடைக்குதா இளநி. கரும்பு கிடைச்சா கரும்பு. பிசினஸ் பியூப்பில்'ட்ட அவர் டீலிங் ஏரியாவே கலங்கிப் போகும். ரெண்டு உதாரணம் மட்டும் இங்க சொல்லலாம்.
'என்ன தண்ணியே இல்ல எளனியில?' -கஸ்டமர்
'ம்ம்ம்..நீரோட்டம் பாத்து இனிமேதான் கிணறு வெட்டணும் எளனிக்குள்ள'
'தடியாவே இல்ல கரும்பு?'- கஸ்டமர்
'இதை விட தடியா வேணுமா? அப்ப மரக்கடைக்குப் போ'

##

முத்து டூ வீலர் வொர்க் ஷாப்

ஏழுகடையில் ஆறாம் நம்பர் கடையில் டூ வீலர் வொர்க் ஷாப். வச்சிருந்தான் டூல்ஸ்முத்து. வரும்போது வெறும் முத்துதான். ஏழுகடையில் எல்லோருக்கும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பேரு வந்துரும். அப்படித்தான் இவன் டூல்ஸ்முத்து ஆனதும். ஒரு நாள் ஏழுகடை வந்து வண்டிய நிறுத்துறேன். டூல்ஸ்முத்து மனைவி கடை வாசல்ல நிக்கிறாங்க. 'என்னத்தா இப்படி நிக்கிறீங்க?' ன்னு கேட்டேன்.

'இவுங்கள பாக்க வந்தேன். காணோம்ண்ணே' என்றார்கள். 'ஸ்க்ரூட்ரைவரு (டூல்ஸ்முத்து ஹெல்பருக்கு வந்த பெயர்) எங்கடா இவன்?' 'எங்கன்னு சொல்லலண்ணே. இங்கிட்டு வண்டில போனாக' ன்னு திசையைக் காட்டினான். பிறகு முத்துராமலிங்கத்திடம் வந்து விசாரித்தேன்.
'எங்கடா போயிருக்கான் இவன். பாவம் அது வந்து நின்னுட்டு இருக்கு?'
'மாமா திட்டாத. ரெண்டு பேரும்தான் சரக்க ஸ்டார்ட் பண்ணோம். இவன் மட்டையாய்ட்டான். ஏங்கடைல படுக்க வச்சுருக்கேன்'

'வேலை டயத்துல அடிக்காதீகடான்னா கேக்குறீகளாடா?' ன்னு ஒரு அட்வைச பிச்சு எறிஞ்சுட்டு ( நான் அட்வைஸ் பண்றதுக்கும் உலகத்துல இருக்கிற ஒரே இடம் ஏழுகடைதான் என்பதாலோ என்னவோ ரொம்ப பிடிக்கும் இந்த இடத்த) 'எதுவும் அவசரமாத்தா.. இவன் வர லேட்டாகும் போலயே' ன்னு கேட்டேன் டூல்ஸ்முத்து மனைவியிடம்.

'அரிசி பருப்பு ஒண்ணு இல்லைண்ணே வீட்ல. இந்தா வர்றேன்னு வந்தாக அதான் தேடி வந்தேன்' . தூக்கி எறிந்தது அந்த முகம். பிறகு முத்துராமலிங்கம் என்னிடம் இருந்த காசை கொஞ்சம் பொறுக்கி 'இதக் கொண்டு போத்தா. வந்தோன்ன வரச் சொல்றேன்' என்றேன். 'இல்லண்ணே திட்டுவாக அவுக' ன்னு வாங்காமையே போயிருச்சு.

இந்தப் பயணத்தில் நானும் லதாவும் ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு நம்ம குடும்ப வண்டி டி.வி.எஸ்-50 ல் போனோம்.போற வழியில் இடைய மேலூரில் நிக்க வேண்டியது வந்தது. நின்ன இடம், 'ஸ்ரீ விநாயகா ஆட்டோ ஒர்க்ஸ்'

'அண்ணே' எனக் கூவினான் டூல்ஸ்.

'வா, டீ சாப்டு' ன்னு கூட்டிட்டுப் போனான். பேச்சு அப்டி இப்டி போய்ட்டு அதில் வந்து நின்றது. 'ரெண்டு வருஷம் ஆயிருச்சுண்ணே தண்ணிலாம் விட்டு. ஒத்திக்கு வீடு பிடிச்சு இங்க வந்துட்டேன்' என்றான். நெற்றியில் பட்டையெல்லாம் அடிச்சு சும்மா கும்'ன்னு இருந்தான் டூல்ஸ். .

'ஏழுகடைய விட்டுப் போனாத்தான் எல்லாத்துக்கும் விமோச்சனம்' என்றாள் லதா டீ சாப்பிட்டுக் கொண்டே.

'சும்மாருக்கா. அதுலாம் ஒரு லைஃப். என்னண்ணே?' என்றான் டூல்சும் டீ சாப்பிட்டுக் கொண்டே.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3

Sunday, October 16, 2011

என மற்றும் என்


(Picture by cc licence, Thanks Madaboutasia )

வரை எனக்குத் தெரியும்
உங்களுக்கும் தெரியும்
யாருக்குமே தெரியும் அவரை
அவருக்குத்தான் தெரியாது
நமக்கெல்லாம் அவரைத் தெரிகிறதென
அவர் யார்?

ன என என
விடுகதை விடுகிறாள் மகள்.

னக்கு விடை தெரிகிறது என்பது
ஒரு சந்தோசம்.

தை விட சந்தோசம்

ன் என் என் மகளை
எனக்குத் தெரிகிறது என்பது.


நன்றி பண்புடன்


Saturday, September 17, 2011

சுவர் ஏறிக் குதிக்கும் மானஸ்தன்


(Picture by cc licence, Thanks Llimllib)

ருத்தனுக்குப் பிறந்திருந்தா
தொடக்கூடாது ஆமா சொல்லிட்டேன்
என்றெல்லாம் காச்மூச்சென்று கத்தியவள்
தூங்கத் தொடங்கிவிட்டாள்.

திறந்திருந்த மேற் ஜன்னல் வழியாக
தெரு விளக்கொளி கசிந்து
சேலை விலகிய வயிற்றில்
விழுந்து கொண்டிருக்கிறது.

மூச்சுக்கு தக்கவாறு
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது
ஜன்னல் கம்பி.

கை நிழல் கொண்டு
கம்பி நிழல் பற்றி
விளையாடிக்கொண்டிருக்கிறான்
ஒருத்தனுக்குப் பிறந்தவன்.

நன்றி பண்புடன்


Wednesday, September 14, 2011

கோயில் வீடும் ரேசன் கார்டும்


(Picture by cc licence, Thanks Entrelec)

ண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

டப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.

***

நன்றி அதீதம்


Friday, September 9, 2011

இலையுதிரும் சத்தம் - மூன்று

ஏழுகடைக் கதைகள் - இரண்டு

நானும் நம்ம பார்ட்னர் மதியும் ஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில் 'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்னு ஒரு கடை வச்சுக்கிட்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தோம். நம்ம பார்ட்னர் மதி பயங்கர பிரில்லியண்ட். 'ஏ இப்படியே இருந்தா காலம் ஓடி அடியாதுய்யா. ஒரு ஜெராக்சையும் சேர்த்துப் போடுவோம். கடை வாடகைக்காவது கட்டி வரும்' ன்னு ஒரு ஐடியாவ தட்டி விட்டாப்ல

குட் ஐடியா. போட்டோ இருக்கு. வீடியோ இருக்கு. ஜெராக்சையும் சேர்த்துக்கிட்டு பேசாம பிசினஸ் மேக்னட் ஆய்ட்டா என்னன்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆசை அதுபாட்டுக்கு வரும் போகும். காசு வேணும்லன்னு யோசிச்சப்போ, 'காரைக்குடி பாவா (மதி தங்கச்சி மாப்ள) ஒரு மெஷின் வச்சுருக்கார்யா. கொடுக்கப் போறாரு. பெறட்டி உருட்டி ஒரு பார்ட் அமவுண்ட்ட கொடுப்போம். பார்ட் அமவுண்ட்ட பின்னாடி செட்டில் பண்ணுவோம்' என்றார்.

'அட இஞ்ச பார்யா'ன்னு மதிய ரொம்பப் பிடிச்சுப் போச்சு. போய் மெஷினைப் பார்த்தோம். தேங்காய் எண்ணெய் வாசனையுடன் சிவனேன்னு இருந்தது. தூக்குடான்னு ஒரு வேன் வச்சு தூக்கிட்டு வந்துட்டோம். எதுத்தாப்ல எல்.ஐ.சி. ஆஃபீசு. சைட்ல ஆர்.டி.ஓ ஆஃபீசு. பிசினசு பிரிச்சுப்புடும் பிரிச்சுன்னு ஒரு ஃபீல் வந்து அன்னைக்கு ராத்திரி தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணுச்சு. மதி அன்னைக்கு ராத்திரி தூங்குனாரா என்னன்னு கேக்காம விட்டுட்டமேன்னு இப்பதான் ஞாபகம் வருது.

'ஜெராக்ஸ்'ன்னு கொட்டை எழுத்துல போர்டு எழுதி கடை வாசல்ல நடு சென்ட்டரா பார்த்து நட்டு வச்சுருந்தோம். இந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி அந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சரி 'ஜெராக்ஸ்' சும்மா கூவும்ல.

ஆச்சா... பத்துப் பதினஞ்சு நாள் எடுக்கக் கொடுக்க இருந்தோம். தேங்காய் எண்ணெய் தீந்துருச்சு போல. ஒரு நாள் டக்குன்னு மெஷின் ஸ்ட்ரக் ஆயிருச்சு. ஜப்பான் பெண்கள் கையில் வச்சுருக்கிற விசிறி மாதிரி பேப்பரை அழகழகா மடிச்சு தள்ளிக் கொண்டிருந்தது.

'என்னய்யா இப்புடி விசிறி விசிறியா வருது?'ன்னு ஷாக் ஆயிட்டாப்ள பார்ட்னர் மதி. 'என்னய்யா எனக்ட்டப் போயி கேக்குற?' ன்னு நானும் கொஞ்சம் பேக்கு ஆயிட்டேன். ஷாக்கும் பேக்குமா சேர்ந்து கோர்ட்டு வாசல்ல இருக்குற பிஸ்மி ஜெராக்ஸ் காரர்ட்ட போனோம். அவர்தான் கதிரேசன் இஞ்சினியரை பாக்கச் சொன்னார்.

இஞ்சினியர்னா சொட்ட கிட்ட விழுந்து டோப்பா இருப்பார்ன்னு பார்த்தா, சூட்கேசும் கையுமா டையெல்லாம் கட்டி மெடிக்கல் ரெப் மாதிரி சும்மா டாப்பா இருந்தாப்ல கதிரேசன் சார். 'அய்யய்யே இவரப் போயி எப்புடி இஞ்சினியர்ன்னு நம்புறது?ன்னு லைட்டா டவுட் வந்துச்சு

'ஒரு காலுக்கு ஐநூறுபாய் ஆகும்'ன்னு ஸ்டார்ட்டிங்லயே பிட்ட போட்டாரா...'நீ தாண்டா இன்ஜினியர்'ன்னு லபக்குன்னு தூக்கிட்டுப் போயி கடைல அடைச்சிட்டோம். அன்னம் தண்ணி புழங்காம கிட்டத்தட்ட மெஷினே கதியா ஒரு முக்கா நாள் மெஷினை கழட்டி மாட்டிக்கிட்டு இருந்தாப்ல

மெடிக்கல் ரெப் மாதிரி வந்தவரு, ராஜாஸ் ஸ்கூல் வாசல்ல நெல்லிக்கா விக்கிற சிங்கு தாத்தா மாதிரியும், ரைஸ் மில்லுல வேலை பாக்குற வெங்கிடு மாதிரியும் டர்ட்டி & டர்ட்டியா மணிக்கு மணி மாறிக்கிட்டு இருந்தாரு. 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' ன்னு சொல்ல தோணுச்சு. நாக்க நாலஞ்சா மடிச்சு பீடா போல வச்சுக்கிட்டேன்.

ஒரு மாதிரி தட்டி ஒட்டி பிரிண்ட் எடுத்து காமிச்சாரு. சூப்பரா இருந்தாப்ல, நியுஸ் பேப்பரில் இருந்த நரசிம்மராவ். 'தி மோஸ்ட் ஹான்சம் ப்ரைம் மினிஸ்ட்டர்' ன்னு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுற அளவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. அவருக்கு ஒதடும் நமக்கு ஆங்கிலமும் சரியா இருக்காது என்பதால் ஆசையெல்லாம் அப்பப்ப ஷட் டவுன் பண்ணி லெதர் பேக்குக்குள்ள போட்ருவேன்...

கதிரேசன் சார் இருக்கிற வரையில் மிசின் பம்பரமா ரெங்கும். ஐநூறு ரூபாயை வாங்கிட்டு இந்தா இங்கிட்டுதான் போயிருப்பாரு திருப்பி விசிறி செய்ய ஆரம்பிச்சிரும். நாங்களும் அசராமல் வண்டியப் போட்டுக்கிட்டு கதிரேசன் சாரைப் பாக்கப் போயிருவோம்.

'நேத்துதானே சார் பாத்துக் கொடுத்தீங்க. திருப்பியும் பிரச்சினை பண்ணினா நீங்கதானே பாத்துக் கொடுக்கணும்.தெனம் ஐநூறு ரூபா கொடுக்க முடியுமா?'ன்னு ஒரு ரீசனபில் ஆர்க்கியுமெண்ட்டை வைப்போம். அவரும் நியாயமாத்தானே பேசுறாய்ங்க'ன்னு கவுந்து சட்டையை மாட்டி டை கட்டிட்டு வந்துருவாரு. திருப்பி மொதல்ல இருந்து கழட்ட ஆரம்பிப்பாரு.

இதுக்குள்ள கஸ்டமர்கள் 'என்னண்ணே மெஷின் ரிப்பேரா?'ன்னு ஒரு பேப்பரை கைல வச்சுக்கிட்டு கடை வாசல்ல நிப்பாய்ங்க. 'இவய்ங்க தொல்ல தாங்க முடியலைடா'ன்னு நெனைச்சுக்கிட்டே 'ஆமாண்ணே கொஞ்சம் லேட்டாகும்'ன்னு சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லுவோம். என்னைய விட பார்ட்னர் மதி அருமையா சிரிப்பாப்ல. சில நேரங்கள்ல குண்டு பல்ப்ப கழட்டி மாட்டுற சைசில் சைகைலையே 'இல்லை'ன்னு சொல்லி கஸ்டமர்களை கடை வரையில் நடக்க விடாமல் சகாயமும் செய்வார்.

எரிச்சல் என்னன்னா ஏழுகடைக்காரன்களை மாதிரி இம்சை அரசன்களை ஒலகத்துலயே பாக்க முடியாது. மூக்கு வேர்த்து' என்னாச்சு மாமா?' ன்னு அசால்ட்டா வர்ற மாதிரி வந்து மேட்டரை கலக்ட் பண்ணிட்டு அன்னைக்கு பூராம் பேசி சிரிப்பாய்ங்க.

'இன்னொரு சின்ன போர்டுதான் செலவு. இந்த ஜெராக்ஸ் போர்டு பக்கத்துலயே எடுக்கப்படமாட்டாது ன்னு எழுதி வச்சுரு மாமா'ன்னு ஒருத்தனும், 'எடுக்க நேரே செல்கன்னு போட்டு ஒரு அம்புக்குறி..என்ன சொல்ற?'ன்னு ஒருத்தனும், 'அவ்வளவு எதுக்கு? இந்த ஜெராக்ஸ் போர்டுலயே செவப்பு இங்க்ல ரெண்டு கிராஸ்ஸை போட்டு வையி..ஹாஜிமூசாக்காரய்ங்க ஜவுளிக் கடைங்கிறதை க்ராஸ் பண்ணி கடல்ன்னு போட்டு வச்சுருப்பாய்ங்கள்ல'ன்னு ஒருத்தனும் ரவுண்டு கட்டி அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க.

இந்த டயத்துலதான் பவானி சீனுக்கு வர்றாங்க. ஏழுகடைல முதல் பொம்பளை வரத்துனா அது பவானிதான். 'எதுனா வேலை இருக்குமாண்ணே?, ஜெராக்ஸ்ல்லாம் எடுக்கத் தெரியும். வசந்தம் ஜெராக்ஸ்ல வேலை பாத்துருக்கேன்'ன்னு வந்தாங்க. நம்மளையும் நம்பி ஒரு ஆளு வேலை கேட்டு வருதுன்னா அவுங்களுக்கு வேலை தராம என்ன பெரிய வேலை எங்களுக்கு இருந்துறப்போது?

வந்த ஒரு வாரத்துலல்லாம் கடைய தலை கீழா மாத்திட்டாங்க பவானி. கடை வாசல்ல தண்ணி தெளிச்சு கோலம்லாம் போட்டு வச்சுருப்பாங்க. வாசல் குண்டும் குழியுமாத்தான் இருக்கும். அதுக்குள்ளையே அட்ஜஸ்ட் பண்ணி கோலம் போட எப்படியோ கத்துருந்தாங்க. முருகன், சரஸ்வதி, விநாயகர் மற்றும் பலரை போட்டோ மாட்டி ஊதுபத்தி சொறுகி கடை சும்மா கமாலிக்க தொடங்குச்சு.

ஆறேழு மாசமா கதிரேசன் சாரின் வரத்தும் குறைஞ்சு போயிருந்தது. 'எதுக்குண்ணே இதுக்குலாம் போயி இஞ்சினியரை கூப்பிடனும்? நானே பாத்துருவேன்னு அசால்ட்டா சிலிண்டரை கழட்டி மாட்டுவாங்க. டோனர், பேப்பர் வாங்கிக் கொடுக்குறது மாதிரி சில்லரை வேலைகள்தான் எங்களுக்கு இருந்தது.

திடீர்ன்னு ஒருநாள் சொன்னாங்க,' சூரி அண்ணன்ட்ட சொல்லி ஏம் மகளை தூக்கி தர்றீங்களாண்ணே? வீட்டுக்காரர் வேற மேரேஜ் பண்ணிக்கிட்டாரு. அவுங்களுக்கும் ரெண்டு குழந்தை ஆயிருச்சு. மகளைப் பாக்கக் கூட விட மாட்டேங்குறாங்கண்ணே. ஸ்கூல்ல போயி தெரியாமப் பாத்துக்கிட்டு இருக்கேன்'ன்னு சொல்லும் போதே அழுக வேற செஞ்சாங்க.

சட்டப்படி பிரிஞ்சிட்டீங்களா?'ன்னு கேட்டப்போ,' இல்லைண்ணே. கிராமத்துப் பஞ்சாயத்துல பேசி எழுதி வாங்கிட்டாங்க. எனட்ட ஒரு காப்பி இருக்கு. அவர்ட்ட ஒரு காப்பி வச்சுருக்காரு'ன்னு ஜெராக்ஸ் மேட்டரப் போலவே வாழ்க்கையைப் பேசுனாங்க. 'அப்படில்லாம் செய்ய முடியாது பவானி. நீங்க கேசே போடலாம். எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணினாரு?'ன்னு பேசிப் பார்த்தோம். 'இல்லைண்ணே இனி அவரோட வாழ முடியாது. மகளை மட்டும் தூக்கிக் கொடுத்தாப் போதும்'ன்னு கட்டன் ரைட்டா சொல்லிட்டாங்க.

சூரி அண்ணன்ட்ட விஷயத்தை கொண்டு போனோம்.' மகளுக்கு என்ன வயசு? நீ போய் கூப்ட்டா வந்துருமா மகள்'ன்னு ஸ்ட்ரைட்டா கேட்டாரு. 'எட்டு வயசுண்ணே. கண்டிப்பா வந்துரும்'ன்னு சொன்னாங்க. பவானி மகளை தூக்குறதுக்கான நாளை ஒரு திங்கக்கிழமையாப் பார்த்து குறிச்சோம்..

சொல்லி வச்சாப்ல அந்த திங்கக்கிழமையும் வந்தது...

பவானி அந்த ஊரப் பத்தி கொஞ்சம் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துருந்தாங்க. பரமக்குடி தாண்டி பதினஞ்சு கிலோமீட்டர்ல ஊரு. (மஞ்சூருன்னு நினைவு) இந்த மஞ்சூர்லதான் பவானி மகள் அனிதா படிக்கிற ஸ்கூல். வீடு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அனிதா படிக்கிற ஸ்கூல தாண்டித்தான் அனிதா அப்பா வீடு இருக்கு.

அனிதா நாலஞ்சு புள்ளைங்களோட நடந்து ஸ்கூலுக்கு வரும். ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் நடுவுல ஒரு குளம் இருக்கும். எட்டு டூ எட்டரைக்குள்ள அனிதா அந்த குளத்தை கடக்கும். நம்ம அந்தக் குளக் கரையில வண்டியப் போட்டுட்டு வெயிட் பண்ண வேண்டியது. அனிதா வந்தோன்ன லாவிக்கிட்டு வந்துற வேண்டியதுன்னு ப்ரோக்ராம்.

'நம்ம லொடுக்கு பாண்டிட்ட வண்டிக்கு சொல்லிருக்கேன் ராஜா. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ஏழுகடைக்கு வந்துருவான். நா, நீங்க பவானி, மூணு பேரும் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு. 'என்னண்ணே பசங்க வேணாமா?'ன்னு சூரி அண்ணன்ட்ட கேட்டேன்.
எதுக்குங்க ஊரக் கூட்டுறீங்க? நலுக்குப்படாம போப்போறோம். தூக்கப் போறோம். வரப் போறோம். இதுக்கு எதுக்கு பசங்களும் பங்காளிகளும்' ன்னு சூரி அண்ணே சொல்லிட்டாரு.

எனக்கு பசங்க இல்லைன்னா சைக்காலிஜிக்கலா கொஞ்சம் டர்ர் ஆவேன். ஆனாலும் நம்ம சைக்காலஜியா இங்க ப்ராப்ளம். கெளம்பிட்டோம். பளபளன்னு விடியிறப்போல்லாம் பரமக்குடிய தாண்டிட்டோம். 'இதுதாண்ணே அனிதா படிக்கிற ஸ்கூலு' ன்னு பவானி ஒரு ஸ்கூலக் காட்டினாங்க. இத்தினிக்கூண்டு ஊரு. அதுல இம்மினிக்கூண்டு ஸ்கூலா இருந்துச்சு. அந்த ஸ்கூலத் தாண்டி பவானி சொன்ன குளமும் வந்துச்சு. குளக்கரைல வண்டியப் போட்டுட்டு காத்திருக்க ஆரம்பிச்சோம்.

பவானிய, 'வண்டிய விட்டு இறங்கவேணாம். மகளைப் பார்த்தோன்ன இறங்கினாப் போதும். குளத்துல துண்ட நனைச்சு வண்டில நம்பர மறைச்சு காயப் போடுடா' ன்னு லொடக்குகிட்ட சொன்னாரு சூரி அண்ணே. அப்படியே செஞ்சிட்டு முடியக் கோதிக்கிட்டே நின்னான் லொடக்கும். பேக் சீட்ல தலைய மட்டும் சீட்டுக்கு மேல நீட்டிக்கிட்டு போற வர்ற ஆளுகளுக்கு தகுந்த மாதிரி சீட்டுக்குள்ளயே படுத்துக்கிட்டும் இருந்தாங்க பவானி.

'என்ன ஒரு கண்றாவிப் பொழப்பு இது? பத்து மாசம் தூக்கி சுமந்துட்டு இப்படி பாம்பு மாதிரி தலைய மட்டும் கார் சீட்டுக்கு மேல தூக்கி வச்சுக்கிட்டு, மகளுக்காக ஒரு அம்மா காத்திருக்கிறதுன்னு?' தோணுச்சு. சூரி அண்ணன்கிட்டயும் பவானியக் காட்டி சொன்னேன். 'நீங்க வந்த காரியத்தை மட்டும் பாருங்க''ன்னு தம் அடிச்சுக்கிட்டே சூரி அண்ணே சொன்னாரு. நானும் தம் அடிச்சுக்கிட்டே வந்த காரியத்துக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.

திடீர்ன்னு ஒரு பெரியவரைப் பார்த்து சீட்டுக்குள்ள பம்முனாங்க பவானி. பெரியவரும் பக்கத்துல வந்து 'என்னப்பூ இப்படி நிக்கிறீங்க?'ன்னு லொடக்குகிட்ட விசாரிச்சார். 'சும்மா குளிக்கிறதுக்காக இறங்கினோம்ப்பூ'ன்னு லொடக்கும் சொன்னான். பெரியவர் அங்கிட்டுப் போனதுக்கு அப்புறம் 'இவர்தேன் என் மாமனார்ண்ணே'ன்னு பவானி சொன்னாங்க. எனக்கு பதக்குன்னு ஆச்சு.

நண்டுஞ் ஜிண்டுமா ஸ்கூல் போற புள்ளைகள்லாம் பைக்கட்ட தூக்கிக்கிட்டு வரத்தொடங்கி இருந்தாங்க. 'அந்தா வர்றா பாருங்க அனிதா'ன்னு பவானி சொல்லிக்கிட்டே வண்டிய விட்டு இறங்கப் பார்த்தாங்க. 'உள்ளதானா இரு. பக்கத்துல வந்தோன்ன இறங்கினாப் போதும்'ன்னு சூரி அண்ணே சொன்னாரு.

ஒரு நாலஞ்சு புள்ளைங்களோட புள்ளையா ஊதா ஸ்கெர்ட் வெள்ளைச்சட்டையில் அனிதா வந்து கொண்டிருந்தது. முதல்ல வேறொரு புள்ளைதான்,'ஏ ஒங்க அம்மா புள்ள' ன்னு அனிதாட்ட சொன்னது. பவானியப் பார்த்தோன்ன அனிதா ஜெர்க் ஆகி நின்னது. 'என்னடி நிக்கிற வா'ன்னு பவானி அனிதாவ நோக்கி நகர்ந்தாங்க. அனிதா தயங்கி பிறகு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் தொடங்கியது. பிறகு ஓடிப் போய்தான் அனிதாவப் புடிச்சாங்க பவானி. அது கீழ உக்காந்துக்கிட்டு அழத் தொடங்கிச்சு. 'வா..அம்மா கடைக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்து ஸ்கூல்ல விட்டுர்றேன்'ன்னு அனிதா தலைய தடவிக் கொடுத்துட்டு நின்னாங்க பவானி.' அனிதா'வேண்டாம்'ன்னு தலைய ஆட்டிக்கிட்டே உக்காந்து இருந்துச்சு.

'தூக்கி உள்ள போடு. என்னமோ கதை வசனம் பேசிக்கிட்டு இருக்க' ன்னு சூரி அண்ணே குரல் விட்டாரு. குண்டுக்கட்டா அனிதாவ தூக்கிட்டு காருக்குள்ள உக்காந்தாங்க பவானி. வண்டி அனிதா ஸ்கூலத் தாண்டும்போது டீக்கடைல நின்னுக்கிட்டு இருந்த நாலஞ்சு பேரப் பாத்து 'தாத்தா..'ன்னு கூவ வேற செஞ்சது அனிதா.' என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி' அந்த நாலஞ்சு பேர்ல ஒரு ஆளா நின்னுக்கிட்டு இருந்துருக்கலாம். இல்லாட்டி சும்மா கூவுமா குயிலு?

ஒரு மாதிரி மல்லுக்கட்டான மனநிலையா இருந்தது. கெரகத்ததானே இழுத்துக்கிட்டு வர்றீங்க எப்பப் பாத்தாலும் நீங்க'ன்னு என்னைய வேற சவுண்டு விட்டாரு சூரி அண்ணே. 'வெறட்டி ஓட்டுறா லொடக்கு. வந்த வழில போக வேணாம். காளையார்கோயில் வழியாப் போ. ஒரு போலீஸ் ஸ்டேசன்தான் க்ராஸ் ஆகுது. தாண்டிட்டா நம்மள ஒன்னும் செய்ய முடியாது' ன்னு லொடக்குகிட்ட டிக்டேட் பண்ணுனாரு.

'இதென்னடா இது.. நல்லாத்தானே வந்தோம் போம்போது மட்டும் ஏன் புழுதி பறக்குது?' ன்னு தோணுச்சு. கர்ச்சீப்ப ஒதறி முகத்துல போட்டுக்கிட்டு தூங்குறது மாதிரி சாஞ்சு உக்காந்தேன். தோணுறத வெளிய சொல்ல முடியாத காலகட்டத்துல வேறென்ன செய்ய முடியும்? லொடக்கு வண்டிய வெரட்டிக்கிட்டு இருந்தான்..

காளையார்கோயில தாண்டின பின்னாடிதான் சொந்த மூச்சையே பிடிச்ச மூச்சாக விட முடிஞ்சது. 'மொதல்ல பிள்ளைய சரி பண்ணு. இல்லாட்டி எல்லாரும் உள்ள போக வேண்டியதுதான்'ன்னு பவானிட்ட சூரி அண்ணே சொன்னாரு. அம்மாவையும் மகளையும் வீட்ல சேர்த்துட்டு கெளம்பும் போது 'பாத்துக்கிட்டு வந்தாப் போதும் பவானி. கடைய நாங்க பாத்துக்கிறோம். நீங்க அனிதாவ சரி பண்ணுங்க' ன்னு ஒரு கடை ஓனர் கணக்கா சொல்லிட்டு திரும்பினேன். குடுகுடுன்னு ஓடி வந்த பவானி 'அண்ணே இதுல ஆயிரம் ரூபா இருக்கு. காருக்கு கொடுத்துருங்க'ன்னு சொன்னாங்க.

'அட..ஏங்கழுத நான் கொடுக்க மாட்டனா?' ன்னு சொல்லிக்கிட்டே வாங்கிக்கிட்டேன். லோடக்குக்கிட்ட வாடைகைய செட்டில் பண்ணும் போது,'அண்ணே எதுவும் பிரச்சினை வராதுல்ல? ஓனர் திட்டுவார்ண்ணே' ன்னு கேட்டான். 'இவன் யார்றா இவன்...யாருக்குடா தெரியும்?' ன்னு நினைச்சுக்கிட்டே 'அதுலாம் ஒண்ணும் வராது பாண்டியா. நீ கெளம்பு' ன்னு சொல்லிட்டு நானும் கிளம்பினேன்.

மதியம் ரெண்டு மணிவாக்குல லொடக்கு வந்து,'ஸ்டாண்டுல எந்த வண்டிடா பரமக்குடி போச்சுன்னு போலீஸ் வந்து விசாரிச்சுருக்காங்கண்ணே'ன்னு என்கிட்டே சொன்னான். 'நீ என்ன சொன்ன?' ன்னு கேட்டுக்கிட்டே நான் அப்படியே சூரி அண்ணன் கடைக்கு தவ்வுனேன். ஒண்ணாம் நம்பர் கடைதானே சூரி அண்ணன் கடை. ரெண்டா நம்பருக்கும் ஒண்ணாம் நம்பருக்கும் தவ்வ எம்புட்டு நேரம் ஆயிறப்போது?

'நான் மேலூருக்கு சவாரி போயிருந்தேன். வந்தோன்ன பயலுகள் சொன்னாய்ங்க. அதேன் ஓடியாந்தேன்' ன்னு சொல்லிட்டு இருந்தான். 'குட் ஃபெல்லோ' ன்னு நெனைச்சுக்கிட்டே சூரி அண்ணன் முகத்தப் பாத்தேன். ரிஜிட்டா இருந்துச்சு. இதுக்குள்ள பவானி ஓட்டமும் நடையுமா கடைக்கு வந்தாங்க. 'போலீஸ் வந்துருக்குண்ணே. வந்து ஸ்டேசனுக்கு கூப்புடுறாங்க. வரும் போதுதான் பாத்தேன். தெரு முக்குல அனிதா அப்பா நின்னுக்கிட்டு இருந்தாரு'ன்னு சொன்னாங்க.

'சரி மக எப்படி இருக்கு?ன்னு சூரி அண்ணே பவானிட்ட கேட்டாரு. 'அவ நல்லா சந்தோசமாத்தான் இருக்கா. ராதா (பவானி தங்கச்சி) அவ்வா (பவானி அம்மா)ல்லாம் பாத்தோன்ன சந்தோஷமா ஆயிட்டா' ன்னு சொன்னாங்க. 'நீ வீட்டுக்குப் போ நாங்க வண்டில வர்றோம். வண்டிய எடுங்க ராஜா' ன்னு எனட்ட சொன்னாரு. m-80 வச்சுருந்தாரு சூரி அண்ணே. m-80 ல்லாம் நான் சூப்பரா ஓட்டுவேன்.(தகவலுக்காக சபைல வைக்கிறேன்)

பவானி வீட்டுக்கு போற வழிலயே கட்டுக் குட்டுன்னு ஒரு ஆள் கைல மஞ்சப் பைய வச்சுக்கிட்டு பூட்ஸ் போடாம செருப்பு போட்டுருந்த போலீஸ்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.மஞ்சப்பை பார்ட்டிதான் அனிதா அப்பாவா இருக்கும்'ன்னு உள் மனசு கெத்கெத்ன்னு கவுளி தட்டியது. பவானி வீட்டுக்குப் போனா டவுன் ஸ்டேசன் காசி ஏட்டையா அனிதா அவ்வா கொடுத்த தண்ணி செம்ப கைல வச்சுக்கிட்டே திண்டுல உக்காந்து இருந்தாரு.

'என்ன ஏட்டையா? ன்னு சூரி அண்ணே இறங்குனாரு. 'சூரியா.. பரமக்குடி ஸ்டேசன்ல இருந்து ஆளு வந்துருக்கு சூரி. புள்ளைய தூக்கிட்டு வந்துட்டாங்க போல. எஸ்.ஐ ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாரு'ன்னு சொன்னாரு. 'சரி போங்க ஏட்டையா. எந்தப் புள்ள என்னன்னு தெரியல. இனிமேதான் விசாரிக்கணும் உங்களப் பாத்தோன்ன இவுங்க திடுத்திடுன்னு கடைக்கு ஓடியாந்துட்டாங்க. நம்ம கடைல வேலை பாக்குறவுங்க.'ன்னு சொன்னாரு.

'இல்ல சூரி கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு எஸ்.ஐ' ன்னு காசி ஏட்டையா சொன்னாரு. 'அதேன் ஏட்டையா. போங்க வர்றோம். சூரில்ல சொல்றேன்' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. சொன்னது மாதிரியே ஸ்டேசன் போனோம். எஸ்.ஐ இல்ல. சாயந்திரமாத்தான் வருவார்ன்னு சொன்னாங்க. வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அனிதா அப்பாவும் அவரோட அப்பாவும்( என்னப்பூ இப்படி நிக்கிறீங்க பார்ட்டி) ஸ்டேசனுக்கு ரைட்ல உள்ள டீக் கடைல டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க.

'ராஜா போறது மாதிரி போயி ஒரசிப் பாருங்க' ன்னு சூரி அண்ணே சொன்னாரு. ஒரு டீ'ய ஆர்டர போட்டுட்டு மஞ்சப்பைகளோட மஞ்சப் பையா ஒதுங்கி நின்னேன். அவுங்களாவே வாயக் கொடுத்தாங்க.

'யாருப்பு அவரு?'

'யாரு?'

'ஒங்களோட வண்டில வந்தவரு'

'சூரிங்க. ம.தி.மு.க. நகரச் செயலாளர். வக்கீலா இருக்காரு. என்ன விஷயம்?'

'பேத்திய தூக்கிட்டு வந்துட்டாய்ங்கப்பூ. மூணு பேரு வந்துருந்தாய்ங்க.. என்ன இப்படி நிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு குளிக்க நிக்கிறோம்ன்னு சொன்னாய்ங்க.அவய்ங்க மொகரையைப் பாத்தா கண்டு பிடிச்சிருவேன்'ன்னு பெரியவர் பீடிய பத்த வச்சுக்கிட்டே சொன்னாரு.

'அப்படியா.. இவர் அப்படி ஆள் இல்லையேங்க'

'இவர் இல்லைங்க. நான் வந்தவய்ங்கள சொல்றேன்'

ஒரு 'ஓஹொ' போட்டுட்டு சூரி அண்ணன்ட்ட வந்து 'பெரிசுக்கு அடையாளம் தெரியல'ன்னு சொன்னேன்.'சரி ஃபைல க்ளோஸ் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே ஒரு தம்ம பத்த வச்சாரு.

எஸ்.ஐ வந்தாரு. அனிதா அப்பா, பூட்ஸ் போடாத போலீஸ்காரர், பவானி, அவ்வா, அவ்வா மடில இருந்த அனிதா எல்லோரையும் கூப்டாரு.'ஏத்தா நீ அப்பாட்டப் போறியா அம்மாட்ட இருக்கியா?' ன்னு கேட்டாரு. செவுலச்சேத்து அறைஞ்சது மாதிரி இருந்தது. சைலண்ட் இப்படியா அறையும்! கொஞ்ச நேரம் ங்கொய்ன்னு இருந்தது.

தலையைக் குனிஞ்சுக்கிட்டே இருந்த அனிதா கையை நீட்டி பவானியக் காட்டியது. சேம் செகண்ட்ல அனிதா அப்பா முகம் பார்த்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத முகம் அது.

அனிதா வளர்ந்தாள். மஹா க்ளாஸ்மேட் மற்றும் நெருங்கிய தோழி ஆனாள். வீட்டுக்கு வரப்போக இருக்கும் போது என்னைய மாமான்னு கூப்ட்டுக்கிட்டு அதே வாயால லதாவை அம்மான்னு கூப்ட்டுக்கிட்டும் இருந்தாள். எப்பப் பாத்தாலும் நான் அனிதாவிடம் 'ஒன்னைய ஒன் அப்பாட்டயே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். இனியும் கூட சொல்லுவேன்.

ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு?

மஹா கல்யாணத்தில் ஆஷ் கலர் சுடிதாரிலும் பொங்கிய சிரிப்போடும் அனிதாவைப் பார்த்தேன். 'என்ன புள்ள இவ்வளவு அழகா வந்துட்ட?'ன்னு கேட்டேன். 'போங்க மாமா. நீங்கதேன் கெழவனா ஆயிட்டீங்க' ன்னு சொன்னாள். நானும் விடலையே..

'ஒன்னைய ஒன் அப்பாட்டையே விட்டுட்டு வந்துருக்கணும் புள்ள' ன்னு சொல்லத்தான் செஞ்சேன்.

*******

இலையுதிரும் சத்தம் 1, 2


Tuesday, September 6, 2011

இலையுதிரும் சத்தம் - இரண்டு

ஏழுகடைக் கதைகள்- ஒன்று

என் வாழ்வின் பிரதானமான ஒரு இடம் என்று இந்த ஏழுகடையை ஏற்கனவே நான் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். இந்த ஏழுகடையையும் என் சிவகங்கை நினைவுகளையும் கூகுல் பஸ்ஸில் விளையாட்டுப் போக்காக 'டைரிக் குறிப்புகள்' எனத் தொடங்கி குறித்து வைத்துக் கொண்டு வருகிறேன். அவற்றைப் பத்திரப் படுத்தும் பொருட்டும், அங்கு வாசிக்காதவர்களுக்கு எனவும் இலையுதிரும் சத்தத்தில் பகிர விரும்புகிறேன். ( சும்மாவே கடையைப் போட்டு வச்சுருக்கான். இப்படி ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு குட்டியைத் தூக்கி ஆட்டிலும் போட்டு வைக்கிறானே' ன்னு நீங்கள் சைலண்ட் டைரிக் குறிப்புலாம் எழுதப்படாது... அழுதுருவேன்)

போக, இலையுதிர்ந்த சத்தம்தானே டைரிக்குறிப்பும்..

##

ஏழுகடையில் நாலாம் நம்பர் கடையில் முத்துராமலிங்கம் ' எலக்ட்ரானிக்ஸ் & இஞ்சினியரிங்ஸ்'ங்கற மாதிரி ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு கடை வச்சுருந்தான். அதை நாங்க 'டி.வி ரிப்பேர் கடை' ன்னு எடுத்துக் கொண்டோம். ( இப்ப அதை வீடியோ கேம்ஸ் கடையா மாத்திட்டான்) திடீர்னு ஒரு நாள் வந்து 'மாமா அந்தப் புள்ள இந்த வாரத்துக்குள்ள வந்து கூட்டிட்டுப் போகலைன்னா செத்துப் போயிருவேன்னு சொல்லுது மாமா' என்றான்.

'எந்தப் புள்ளடா?'

'மீனா மாமா'

'போட்றா ஸ்கெட்ச்ச தூக்குடா வண்டிய' ன்னு மூணு டாக்சியில் கிளம்பிட்டோம். அப்ப மொபைல் போன் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத காலம். மூணு பணக்கார நண்பர்களிடமிருந்து கை மாத்தா வாங்கிக் கொண்டோம். ஒரு வண்டிக்கு ஒரு மொபைல்.

மீனாவ, மதுரை தாண்டி ஒரு கிராமத்தில், சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்தார்கள். காதல்தான் எல்லாத்தையும் கொடஞ்சுருமே அப்படி,' றெக்கையை' (தூதர்) பிடிச்சு ஏற்கெனவே கடிதப் போக்குவரத்துகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் காதலர்கள்.

அதே றெக்கை மூலமாகவே ஸ்கெட்ச்சை அனுப்பினோம். அப்படி, அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அன்று மீனா வரவேண்டியது. நாங்க போய் கொத்திட்டு வந்துற வேண்டியதுன்னு சிம்பிள் ஸ்கெட்ச்சாதான் இருந்தது. சிவகங்கையில் இருந்து கிளம்பும் வரையில். மதுரையை தாண்டியதும் கொஞ்சம் ட்விஸ்ட் வந்தது. இப்படி..'அந்த கிராமத்திற்கு 10 கி.மீ முன்பாக ஒரு வண்டி நிக்க வேண்டியது. 5 கி.மீ முன்பாக ஒரு வண்டி. மூணாவது வண்டி மட்டும் ஊருக்குள்ள போறது. அதில் சூரி அண்ணனும், நானும் கூட ரெண்டு பேரும். அவுட்டர்ல ஒரு பாலம் இருக்கும். அங்க நானும் சூரி அண்ணனும் இறங்கி ஊருக்குள் போக வேண்டியது. காரை திருப்பி நிறுத்தி பேனட்ட தூக்கி விட்டுட்டு வெய்ட் பண்ண வேண்டியது. கோயிலுக்குப் போக ரெண்டு வழிகள் உண்டு. ஒரு வழியில் சூரி அண்ணனும் ஒரு வழியில் நானும். கோயில் வாசல்ல மீனா வெய்ட் பண்ணும். மொபைல், நபர் உபயோகத்திற்கு அல்ல. காருக்கு மட்டும்'.

'ஏண்டா கொஞ்சம் மோட்டாவான ஆளா கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?'

'இல்ல மாமா. நீதான் கரக்ட். அப்பாவி லுக்கு. கல்யாணம் காட்சி, புள்ள குட்டிகள்லாம் வேற பாத்துட்ட' டென்சன் ஒரு பக்கம் என்றாலும் இதையும் ஒரு பக்கம் நடத்துனாய்ங்க. பிளான் படியே நானும் சூரி அண்ணனும் இரண்டு வழிகளில் பிரிந்தோம். 'அண்ணே' ன்னு சூரி அண்ணன ஒரு தடவ கூப்புட தோணுச்சு. 'டேய் நடடான்னு' அதட்டி என்னை நடக்க வச்சுட்டேன்.

கோயிலுக்கு வந்தா வாசல்ல மீனாவக் காணோம். உள்ளகிள்ள இருக்கோன்னு கோயிலுக்குள்ளயும் அலசிட்டு வாசலுக்கு வந்தா வாசல்லையும் இல்ல. இன்னொரு வழியாக வந்த சூரி அண்ணனையும் காணோம். ஒரு பத்து நிமிஷம் போல வெய்ட் பண்ணிப் பார்த்தேன். புறப்பட்டு சூரி அண்ணன் வரவேண்டிய வழியில் நடையைக் கட்டினேன். ரோட்டடைந்தேன். ரோட்லயும் சூரி அண்ணனைக் காணோம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்னுக்கிட்டிருந்த காரையும் காணோம்.

'ஒரு சிகரெட் வாங்கி பத்த வச்சா என்ன?'ன்னு தோணுச்சு. ஒண்ணும் வழி இல்லாம போறப்பல்லாம் டக்கு டக்குன்னு இப்படி ஒரு ஐடியா வரும் எனக்கு. வாங்கி பத்த வச்சுக்கிட்டு இருக்கும் போது அந்தக் கடைக்கு ஒரு ஆளு ஓடி வந்தாம் பாருங்க, 'அண்ணே, அம்பளம் தம்பி மகள கார்ல தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்கண்ணே'

'தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களா..அப்ப நானு?' ன்னு நினைச்ச நொடில எனக்கு வயித்துல பந்து போல ஒண்ணு மிதக்கத் தொடங்குச்சு. 'என்னடா சொல்ற?" என்று பதறிய பெட்டிக் கடைக்காரர் கடைக்கு வெளிய வந்து,' ஏ அம்பலம் தம்பி மகள தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்களாம்பா ..ய்ட்டான்களாம்பா..பா..பா' ன்னு எக்கோ விட்டார். விட்ட கையோட சர சரன்னு ஷட்டர இழுத்தார். இருந்த நாலஞ்சு கடைக்காரர்களும் ஷட்டர இழுத்தார்கள்.

'டேய் என்னங்கடா இதுக்குலாம் போயி ஷட்டர இழுக்குறீங்க?...அட அவசரத்துக்கு பிறந்தவன்களா' ன்னு நினைக்கும் போதே வயித்துல மிதந்த பந்து கொஞ்சம் வீங்கி மூத்திரப் பையை நெருக்கியது. ரெண்டும் பக்கத்து பக்கத்துலதாம் போல. 'யேய்..அம்பலத்துக்கு ஆள் விடுங்கப்பா' ன்னு ஒரு ஆள் எக்கோ விட்டாப்ல 'ராசாராமா கைய ஊண்டி கர்ணம் பாயி. இல்லாட்டி செத்தடி' ன்னு அலர்ட் ஆனேன்.

'மதுரை போற வண்டி எங்கப்பு நிக்கும்?' ன்னு ஒரு பெரியவர்ட்ட கேட்டேன். (அவர்தான் அந்த இடத்துலேயே சாந்தமா இருந்தார்) 'இந்த இடத்துலதான் நிக்கும்ப்பு' ன்னாரு. 'இந்த இடத்துலேயே ஒண்ணுக்கும் போலாமாப்பு?' ன்னு கேக்க நினைச்சேன். ஆனா கேக்கல. அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமா ஆளுக ஓடிக்கிட்டு இருந்தாங்க.

'புத்திர் பலம் யசோ தைரியம் நிற் பயத்துவம் அரோகதம் அஜாட்யம் வாக் படுத் வம்ச அனுமத் ஸ்மரநாத் பவேத்' ங்கிற ஆஞ்சநேயர் சுலோகத்த திருப்பித் திருப்பி சொல்ல ஆரம்பிச்சேன். நாலஞ்சு நிமிஷத்துலல்லாம் 'பெரியார் நிலையம்' போர்டு போட்ட பஸ் வந்து நின்னுச்சு. ஸ்லோகத்துக்கும் பெரியாருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு நினைச்சுக்கிட்டே தாவி பஸ்ல ஏறினேன்.

அந்த ஊர் வைகை ஆற்றோரமாக அமைந்த ஊர். (திருவேடகம்) நாலைஞ்சு கிலோமீட்டர் போனதும் பஸ் கண்ணாடி வழியாக பார்த்தேன், ஆற்றுக்குள் சட்டைய கழட்டி தோளில் போட்டுக் கொண்டு ஒரு ஆள் தொங்கு ஓட்டமா ஓடிக்கொண்டிருந்தார்.'எங்கயோ பாத்துருக்கமே இவர?' ன்னு யோசிச்ச செகண்ட்ல மின்னல் வெட்டியது..'அட.. நம்ம சூரி அண்ணே.. நம்ம பொழப்பு பரவால்ல போலயே பஸ்ல போயிட்டிருக்கோம்' ன்னு தோணினாலும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிட்டேன்.

இறங்கி, ஆற்றுக்குள் இறங்கினேன். அஸ் புஸ்ன்னு வந்து சேர்ந்தார் அண்ணே.,'என்னண்ணே ஆச்சு?'

'அட ஏன் கேக்குறீக ராஜா..சின்னப் புள்ளைக காரியம்ங்கிறது சரியாத்தானே இருக்கு. ( சூரி அண்ணன் வக்கீல். அப்ப ம.தி.மு.க. நகரச் செயலாளர். இப்ப தி.மு.க.வில் இருக்கிறார். போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என எங்களை எடுக்க கொடுக்க இருந்தவர். கிட்டத் தட்ட எங்க காட்ஃபாதர். இதெல்லாம் விட ஏழு கடையின் ஒண்ணாம் நம்பர் கடைக்காரர்)

'கோயிலுக்குப் போய்ட்ருக்கேன் எதுத்தாப்ல ஒரு சின்னப் பையன் கையப் பிடிச்சுக்கிட்டு மீனா வந்துட்ருக்கு. முன்னாடி போத்தான்னு சொல்லிட்டு ஒரு 50 அடி விட்டு பின்னாடி வந்துட்ருந்தேன். காருக்கு 20 அடி இருக்கும். பையன் கைய அத்து விட்டுட்டு ஓடிப் போயி கார்ல ஏறிருச்சு. இந்தப் பய ரோட்ல நின்னு அழுறான். பாலத்துல உக்காந்து இருந்த ரெண்டு பேரு எந்திருச்சு பயக்கிட்ட வந்தாய்ங்களா வண்டிய தூக்கிட்டாய்ங்க ராஜா. ஒரு முப்பது நாப்பது அடிதான் இருக்கும் காருக்கும் எனக்கும் .அப்படியே நைசா ஆத்துக்குள்ள எறங்கி ஓட ஆரம்பிச்சிட்டேன்'

'சரி ரோட்டுக்கு ஏறுவோம்ண்ணே இவய்ங்க திரும்பி வந்தாலும் தெரியாது' என்றேன். 'சரி.. சட்டையை கழட்டி தலப்பாவா சுத்துங்க' ன்னாரு. எனக்கு ஒன் பாத்ரூம் கண்டிசன்ல இருந்தது, டூ க்கு மாறிருச்சு. ரோடு ஏறி ரெண்டு மூணு நிமிசத்துலல்லாம் பயலுக வந்துட்டாய்ங்க ரெண்டு வண்டில.

'மீனா எங்கடா?' - சூரி அண்ணன்

'அதக் கொண்டு போயி ரெண்டாவது வண்டில மாத்திவிட்டுட்டு, ரெண்டாவது வண்டி போய் மொத வண்டில மாத்தி விட்டுட்டு, அதுல இருந்த பயலுகளையும், பொருள்களையும் லாவிக்கிட்டு வர்றோம் மாமா'

'நல்லா லாவுனிகடா. மீனா கூட யார்டா போறது?' -சூரி அண்ணன்

'செட்டி போறான். நீயென்ன வாசல்ல மீனா இல்லைன்னா திரும்புவியா கோயிலுக்குள்ள போய் கும்பாபிஷேகம் நடத்திக்கிட்டு இருக்க?'- ன்னு காருக்குள்ள பின்னாடி உக்காந்திருந்த என்னைப் பாத்து கேட்டான் முத்துராமலிங்கம். 'நாம் பரவால்லடி. தொங்கு ஓட்டமா வந்த பெருசு பாடுதான் அந்தரம்'ன்னு காருக்குள்ள சொல்லல. பிறகு சொன்னேன்.

அன்றிரவு மீனாவை மதுரையில் சுந்தர் ( சூரி அண்ணன் மச்சினன்) வீட்டில் தங்க வைத்தோம். சரக்கப் போட்டுட்டு காவலுக்கு இருந்தோம். 'நீ ஏண்டா இன்னைக்கு தண்ணி அடிக்கிற. போய் மீனாட்ட பேசிட்டு இருக்க வேண்டியதுதானே?' ன்னு கேட்டப்போ ரெண்டு கன்னத்தையும் பிடிச்சுக்கிட்டு சொன்னான்,' நாளைல இருந்து பேசத்தானே போறேன் மாமா. நீ பத்ரமா வரணும்ன்னு கண்டுபட்டி காளிக்கு மணி வாங்கி கட்றதா வேண்டுதல் வச்சுருக்கேன் மாமா'

'சரக்கப் போட்டா ஒங்க தொல்ல தாங்க முடியாதுடா'

ஆச்சு. மறுநாள் திருப்புவனத்தில் வைத்து மேரேஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணினோம். இப்ப ரெண்டு குழந்தைகள் முத்துராமலிங்கத்துக்கு. மூத்தவன் ரித்திக். சின்னவன் ராம். ஊடால, என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு மணி வாங்கினான். அதுல ராஜாராம்'ன்னு பேர் எழுதினான். அப்படியே கண்டுப்பட்டி காளி கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் 'கட்டு மாமா' என்றான். பிறகொருநாள், லதாவும் நானும் கண்டுப்பட்டி கோயில் போனப்போ அந்த மணியவும் அதில் எழுதி இருந்த பேரையும் காட்டி இந்தக் கதையையும் சொன்னேன்.
'ஒங்க மணி தப்பிச்சா இந்த மணி வாங்கி கட்றதா வேண்டிக்கிருச்சாக்கும் முத்துராமலிங்கம்' ன்னு லதா சொன்னது வழக்கம் போல கால் மணி நேரம் கழித்தே எனக்குப் புரிந்தது.Sunday, August 14, 2011

ரௌத்ரம்(Picture by cc licence, Thanks Mckaysavage)

டக்க முடியாத காரணம் காட்டி
கோவில் திருமணம் காரியத்திற்கு
வீட்டிலேயே விட்டுப் போய் விடுகிறார்கள்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ள
என் கிழவியும் வேணும் போல.

சாப்பாட்டிற்கு
கட்டி வைத்த இட்லி துவையல்.

பேச்சுத் துணைக்கு
பேப்பரும் அணிலும்
மைனாவும் குருவியும்.

பின் மதியத்தில் மட்டும்
அடங்காத ஒரு சுவராசியம்.

புறக்கணிப்பும் உதாசினமும்
குளிரக் குளிர..

திண்ணையில் நின்றபடி
சிறுநீர் கழிக்கலாம்.

***

நன்றி அதீதம்Monday, August 8, 2011

சரித்திரம்


(Picture by cc licence, Thanks Ahmed Al.Badawy)

ல்லாவற்றையும் இழக்க
ஒரு மனசு வேணும்.

ழங்கவும்.

ம்மனசிடம் ஒரு குரல் உண்டு
கரகரவென்கிற உப்புக் குரல்.

கேட்க விருப்பமா?

ழுந்து நடங்கள்.

ளரவமற்ற பாலத்தை
தேர்வு செய்யவும்.

டர் நிசியெனில் நல்லது.

புகைவண்டி நேரங்களை
குறித்து வைத்திருப்பீர்கள் எனில்
உத்தமம்.

பாலத்தில் ஏறி நின்று
புகை வண்டி வருகிறதா எனப் பார்க்கவும்.
போதும்.

வ்வும் முன்பு கேட்டீர்களா?

ங்கள் தலையை வாங்கிய தாதிப் பெண்
வெளியில் ஓடிச் சொன்னாள்
நீங்கள் ஆண் எனவோ பெண் எனவோ.

குதூகலமாக
கரகரவென்கிற உப்புக் குரலில்.Tuesday, August 2, 2011

நீ


(Picture by cc licence mckaysavage)

ரு காற்று போல
வீச்சு போல
இன்னெதென்று சொல்ல முடியாத
ஒன்று போல
கடந்தாய் நீ.

குறிக்கிறேன்,

லிரில் சோப்பு, சாம்பார்
சைக்கிள் பால்ரஸ்
எலக்ட்ரிக் வயரில் சிக்கிய பட்டம்
கொஞ்சூண்டு ஆணியில்
சுத்தும் பம்பரக் கயிறு
பாம்பு கொத்திய புளிய முத்து,

சாம்பார்
லிரில் சோப்பு சாம்பார்.


Thursday, July 7, 2011

கிரிக்கெட் கவிதைகள்

1. பெவிலியனுக்கு திரும்பாதவர்

இழுத்துக் கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து மாமா
அத்தையை சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்து விட்டார்.

இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


2. ஆல் - அவுட்

மேலிருந்த
கண்ணீர் அஞ்சலிக்காரனை
எட்டவில்லை போல.

கீழிருந்த
குடும்பத்தார்களை
கழுதை மென்று கொண்டிருந்தது.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


3. நாட்- அவுட்

கொண்டோடி மாடு
என அழைப்போம்
செத்துப் போகும் முன்பு வரையில்
சுந்தரை.

அப்புறமெல்லாம்
சுந்தர்தான்.
Saturday, July 2, 2011

ரகசியம்யாரிடமும் சொல்ல முடியாத
ஒன்றை என்னிடம்
சொல்லப் போவதாக சொன்னாள்.

என்ன வென்பதையும்.

யாரிடமும் சொல்ல முடியாததாக
இதில் என்னவிருக்கிறது
எனத் தோன்றியது.

கேட்கவில்லை​.

என்னிடமும் இருந்தால்தான் என்ன
யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று?

##

டிஸ்கி : கூகுள் பஸ்'சில் இந்தக் கவிதைக்கான தலைப்பை வைத்தவர் நம் தினேஷ்குமார்(முகிலன்), முகிலன், நன்றி!

Wednesday, June 22, 2011

இலையுதிரும் சத்தம் - ஒன்று


இந்த ஜூன் 11-ல் தளம் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஜெத்தா, ரியாத் பயணங்களில் இந்தப் பதிவு தாமதமாகி விட்டது.

'இல்லாவிட்டாலும் நேரத்திற்கு எதையும் செய்பவன்தான் நீ' என நீங்கள் புலம்புவது கேட்கிறது. (ப்ளீஸ் மெதுவாகப் புலம்பவும்)

ஆம்! 'இலையுதிரும் சத்தம்'

இந்தத் தலைப்பின் கீழ் இனி ரெகுலரா புலம்பத்தான் போறேன். புரை ஏறும் மனிதர்கள் அப்படியே கிடக்கிறது இதில் புதுசா ஒரு தொடரா? 'நாய் வாய் வைத்தது போல கொத்திக் கொதறி சாப்பிடாமல் ஒழுங்கா சாப்டுடா' என்பாள் அம்மா. அம்மா கிடக்காள். அப்ப உள்ளவன்தானே இப்பவும்?

##

பிரதி ஞாயிறு சவுதி நேரம் எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் கேபிள் சங்கரின் கொத்து புரட்டா வாசித்து விடுகிறேன்.

ஜாக்கி சேகர் இன்னும் ஒரு படி மேல். 'இரண்டு மணிநேரம், பத்து நிமிடம், நாப்பத்தைந்து செகெண்ட் தாமதமாகிவிட்டது இந்த மினி சான்ட்விஜ் & நான்வெஜ் வெளியிட' என தன் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்.

வாசகர்களும் அவரை மன்னித்து வாசித்து விடுகிறார்கள் / விடுகிறோம். 'எப்படி இப்படியெல்லாம் நேரத்திற்கு எதையும் செய்து விடுகிறார்கள்?' என்று பொறாமையாக வருகிறது.

'வியாழக்கிழமைன்னா விகடன் வரும்' என்கிற நினைப்பைத் தருவது எவ்வளவு உன்னதமோ அவ்வளவு உன்னதம் இந்த நேரந்தவறாமையும். இல்லையா? சரி..ஜெயிக்கப் பிறந்தவர்களோடு எதுக்கு எனக்குப் போட்டி?

என்னையும் நம்பி 397 பேர்கள் 2 வருஷமா பொறுமையாக காத்திருப்பதை நினைத்தால் ஒரு வசனம் நினைவு வருகிறது.

'பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ'.

சமர்த்து செல்லங்களா..நன்றி!

##

போன வருடம் இதே ஜூன் 11-ல் முதல் தொகுப்பு, 'கருவேலநிழல்' வந்து விட்டது. தளம் தொடங்கியதின் மஹா சாதனை இது. காரணம் நீங்கள்தான். 50, 60, கமெண்ட்ஸ்ல்லாம் தட்டி விட்டதில், 'இவன் கவிதைகளை தொகுப்பா போட்டா நல்லா விற்குமோ என்ற சிந்தனையை பதிப்பகத்தாருக்கு அளித்தீர்கள். பலன், 'கருவேல நிழல்' தொகுப்பாகி விட்டது.

மறு பக்கம், தொகுப்பு வெளியிட்ட வகையில் பதிப்பகத்தாரான வாசுவிற்கு 248 கோடி வருவாய் இழப்பு எனக் கேள்வி. (நஷ்ட்டத்தை இப்ப இப்படித்தான் பேசுறீங்களாமே தமிழ் நாட்ல?). வாசு என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் செய்த தவறுகளுக்கு நான் என்ன செய்வேன் மக்களே?

கொஞ்சம் வாசுவிடம் சொல்லுங்கள். மீறி, வாசு என்னை தண்டித்துதான் ஆகவேணும் என விரும்பினால், திகார் ஜெயிலுக்காவது பரிந்துரை செய்யவும். அங்குதான் அந்த மனுஷி இருக்கிறார்.

அவர் கண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேரில் அந்தக் கண்களைப் பார்த்து விட வேணும் என்பது என் வாழ்நாள் பிரார்த்தனை.

புரியாமல் உடன் பிறப்புகள் ஆட்டோ எடுக்க வேண்டாம். நான் சவுதியில் இருக்கிறேன். நேரம் மற்றும் பொருள் விரயம் . 'வீட்டுக்கு விட்ரா வண்டியை' என யோசிப்பீர்கள் எனில் அங்குதான் என் மனைவி இருக்கிறாள். அவள் ஒரு 'ஒன் உமன் ஆர்மி'

ஒருமுறை, கோபத்தில் இரண்டு நாட்களாக வீட்டில் சாப்பிடாமல் இருந்தேன். எவ்வளவு சின்னப் பிரச்சினை இது?. இதுக்குப் போய் கையை 360 டிகிரி வலமிருந்து இடமாக ஒரு முறையும், இடமிருந்து வலமாக ஒரு முறையுமாக முறுக்கி, முதுகில் ஒரு குத்து விட்டாள். சும்மா, 'டிங்கி டிங்கி டிங்கி டிங்கி டிங்கி' என்கிற சத்தத்துடன் கண்களில் பூச்சிகள் பறந்தன.

நாளைக்கு, 'சொல்லலையே பாசு?' ன்னு சொல்லக் கூடாது பாருங்க.

##

பதிவுகள் குறைந்து போனதற்கு கூகுள் பஸ் பிரதானமாகிறது. செம ஜாலியா இருக்கு மக்களே அங்கு. நான் இங்கு மாதிரி அங்கிருப்பதில்லை. சண்டையெல்லாம் போடுகிறேன். அவர்களும், 'சரி. போயி வீட்ல யாராவது பெரிய ஆள் இருந்தா வரச் சொல்லு' என்கிறார்கள். டொப்புன்னு படத்த கீழ போட்டுட்டு நலுக்குப் படாமல் ஓடியாந்துருவேன். மறு நாள் 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' எனக் கிளம்பி விடுவதும் உண்டு.

சரி இனி பஸ்'சை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு தளத்தில் பதிவெழுதலாம். நீங்களும் வழக்கம் போல 50, 60 கமெண்ட்டுகளைத் தட்டி விடவும்.

காரணம் இருக்கு. இந்தப் புத்தக சந்தைக்குள் இரண்டாவது கவிதை தொகுப்பையும், புரை ஏறும் மனிதர்களையும் புத்தகமாகப் பார்த்து விட தீர்மானம் இருக்கிறது. வாசு இல்லாவிட்டாலும் வேறு யாராவது ஏமாறாமலா போய் விடுவார்கள்?

இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கு, 'மண்டுகள் துப்பும் மொழி' என்பது தலைப்பு. நல்லாருக்கா மக்கா?

##

அப்புறம், இந்த போகன் ராஸ்கலின் கவிதையைப் பாருங்கள்..

குழித் துறையின்
குறுகலான இடுக்கில்
சைக்கிளைத் திருப்புகையில்
எதிர்பாராத விதமாய்
எதிரே வந்துவிட்டது ஒரு யானை.

ஆனையை அங்கு பார்த்ததும்
திடுக்கிட்டேன்
ஆனையும் என்னைக் கண்டு திடுக்கிட்டது

நான் சிறிய அளவில்
ஆனை பெரிய அளவில்

அவரவர் அளவுக்கேற்றார் போலதானே
திடுக்கிடவேண்டும்?

-போகன்

##

ஏழுகடை நண்பர்களில் ஆகச் சின்னவன் செந்தில்தான். 24 வயது. முத்துராமலிங்கம் கடையில் வேலைக்கு இருக்கிறான். செந்திலால் நடக்க இயலாது. ட்ரை சைக்கிளில் வீட்டில் இருந்து கடைக்கு வருவான். கடை வாசலில் சைக்கிளை நிறுத்தி தவழ்ந்து படியேறி கடையில் அமர்வான்.

கல்யாணம் காட்சிகளுக்கு அவனை பைக்கில் அமர்த்திக் கொண்டு போவோம். இறங்கி, குழந்தை போல நெஞ்சில் அவனை சுமந்து சென்று எங்கள் அருகில் அமரச் செய்வோம்.

இந்த செந்திலுக்கு திடீரென நடக்க ஆசை வந்து விட்டது போல. பேப்பரில் விளம்பரம் பார்த்து ஆந்திராவில் எங்கோ அறுவை சிகிச்சை மூலமாக நடக்கச் செய்வதாக எங்களிடம் கொண்டு வந்தான்.

எங்கள் என்கிற நாங்கள் ஒரு 40 பேர்கள் இருப்போம், 'ஏழு கடை நண்பர்கள்' எனச் சொல்லிக் கொண்டு. நாலஞ்சு பேர்கள் மட்டும் வெளி நாடுகளில் இருக்கிறோம் என்றாலும் எல்லோருமே அன்றாடங் காய்ச்சிகள்தான்.

செலவோ ரெண்டு லட்சத்துக்கு கிட்டக்க. ஆனாலும் முடிவு செய்தோம். நணபன் சரவணன் மட்டும் கப்பலில் கேப்டனாக இருக்கிறான். அவன் செலவில் பெரும் பகுதியை ஏற்றுக் கொண்டான். அறுவை சிகிச்சை முடிந்தது.

மஹா திருமணத்தில் வண்டியில் வந்திறங்கிய செந்திலைத் தூக்கி வரவில்லை. முத்துராமலிங்கம் கழுத்தில் கையை மாலை போல போட்டுக் கொண்டு 'நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து, நடந்து' வந்து இருக்கையில் அமர்ந்தான்.

மகள் திருமணத்திற்காக கண் கலங்கினேனா.. செந்தில் நடந்ததைக் கண்டு கண் கலங்கினேனா? தெரியல. ஆனால் செந்தில் நடந்தான். இப்பவும் நடக்கிறான்.

ஏழு கடை நண்பர்கள் போலவே கூகுள் பஸ்'சிலும் ஒரு இயக்கத்தைப் பார்க்கிறேன்.வெட்டி அரட்டை மட்டும் அங்கில்லை. கேவிஆர் ஒரு பஸ் விடுகிறார்.

 'ப்ளஸ் டூவில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. உதவி தேவை' என்பது போல. உடன் நண்பர்கள் இணைகிறோம். கிடு கிடுவென காரியம் ஆகிறது. ஆகிக் கொண்டே இருக்கிறது...

சீக்கிரம் படிக்கத் தொடங்கி விடுவாள் அந்த மாணவி. பிறகென்ன செய்வாள்? அவள் குழந்தை அல்லாத வேறு குழந்தைகளை படிக்க வைப்பாள்.

படிப்பு வாழ்க்கையையும் தருகிறது. படிக்கவும் வைக்கிறது. இல்லையா?

ஏழுகடை விரிந்து உலகம் ஆகி விட்டதா, உலகம் சுருங்கி ஏழு கடை ஆகி விட்டதா என்றிருக்கிறது எனக்கு.

இதை தளத்தில் வெளியிட விரும்பி குழுவில் கேட்டேன். 'க்ளோஸ்ட் சர்க்கிளா இருந்தா நல்லது பெரியப்பு' என அபிப்ராயப்பட்டார் முகிலன். என் க்ளோஸ்ட் சர்க்கிள் நீங்களும்தானே. எனவே வெளியில் சொல்ல வேண்டாம். முக்கியமா முகிலனுக்கு

.ஏழு கடை என்கிற இணய உலகில் இணைய விரும்பினால், நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும். கேட்டீங்களா? 'போறான் லூசு'ன்னு குழு அனுமதிக்கும் போது கூப்பிடுவேன் ..

##

அப்புறம், ஏழுகடை நண்பர்களிடம் இன்னொரு விசேஷம் உண்டு. ஏழுகடைக்காரனை சிவகங்கையில் யாரும் கை வைத்து விட முடியாது. இவன் மேலேயே தவறு இருந்தாலும் அடித்தவனை அடித்து விட்டுத்தான் எங்க ஆளை விசாரிப்போம். இதன் மார்க்கமாக 15 நாட்கள் ஜெயிலில் இருந்த அனுபவமெல்லாம் உண்டு.

போலீஸ் ஸ்டேசன் என்றாலே ஒண்ணுக்கு போகிற குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். (அப்ப 15 நாள் ஜெயிலில் இருந்தால் எவ்வளவு ஒண்ணுக்கு போயிருப்பார்கள் என்கிற கவலை இப்ப வரையில் இருக்கு)

இது வேறு. இதைப் பிறகு பேசுவோம். இவ்வளவு நாட்கள் இதைப் பேசாததற்கு மஹாவிற்கு மாப்பிள்ளை கிடைக்காதோ என்கிற பயம்தான்... இனி என்ன?

இதை எதுக்கு சொல்ல வர்றேனா,

நம் ஏழுகடைக்காரனான நம் (ரெண்டு நம் போடுறனோ. பரவால்ல இருக்கட்டும்) நேசமித்திரன் ஒரு உதவி கேட்டிருந்தான். இப்படி..

'எனது மரியாதைக்குரிய நாடகவியலாளர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை 10-06- 2011 முதல் துவங்கியது.மிக பிரம்மாதமான காட்சிவரிசை, மண் ஒட்டியிருக்கும் வசனங்கள் என பித்தனுபவமாய் இருக்கிறது.உதவிகள் வேண்டி தவிக்கிறது குழு'

என்னைக்குப் போய் வாய் விட்டு கேட்டிருக்கிறார்கள் நம்மாட்கள்? நாமளா நகர்ந்தாத்தான் உண்டு. நான் நகர்ந்து விட்டேன். விருப்பம் எனில் நீங்களும் நகரலாம்.

இது விபரம்,

S.Murugaboopathy
A/C No 31223125664
SBI,Thiruthangal Branch,code-12767

'என்னடாது காசு விஷயமாகவே கொண்டு வருகிறான்?' என்றால்..

வேறு யாரிடம் போவேன் மக்கா?

போக,

இலை உதிரும் சத்தம் நமக்கு கேட்டிருக்கா?

- தொடரும்Thursday, June 2, 2011

காப்பீட்டுக் குரல்


(Picture by cc licence GilbertoFilho)

மூன்றாவது மாடியிலிருந்து
தவறி விழுவதாக
ஒரு கனவு.

டக்கும் இரண்டாவது மாடியில்
எக்ஸ்கியுஸ் மீ
குரல் வேறு

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


Thursday, May 19, 2011

ரோட்டிலொரு நாடகம்


(Picture by cc licence, Thanks Melanie-m)

ம்மா விரலைப் பிடித்தபடி
நடந்து போய்க்கொண்டிருந்த
சிறுவனைப் பார்த்து
சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருக்கிறான்.

திருப்பித் திருப்பி
சிரிக்க வேண்டியிருக்கிறது!

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


Wednesday, May 4, 2011

புரை ஏறும் மனிதர்கள்- பதினெட்டு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை - ஏழு

ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு ,ஐந்து, ஆறு

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அறையின் ஜன்னலை திறக்கிற போதெல்லாம், இந்த வேப்பம்பூ வாசனை உள்ளேறி விடுகிறது. நான் வசிக்கும் அல்கோபார் மொத்தமும் இன்னும் ஒற்றை வேம்பு கண்ணில் தட்டியது இல்லை. பிறகெப்படி இந்த வாசனை மட்டும்?

வெயிலோடு வேப்பம்பூ வாசனையை பால்யத்திலேயே தைத்துக் கொண்டு விட்டேன் என்றே தோன்றுகிறது. மருதாணிப் பூ வாசனையை காந்திப் பூங்காவோடும்,வெற்றிலை வாசனையை முனியம்மாள் அக்காவோடும், திருநூறு வாசனையை வீராயி அம்மாச்சியோடும், கடுக்காப்பழ வாசனையை அப்பா தொலைத்த வயலோடும் தைத்துக் கொண்டதெல்லாம் பால்யத்தில் இருந்துதானே. முதன் முதலில் எதோடு எதை தைத்துக் கொள்கிறோமோ அதுதானே கடைசி வரையில்.

வாணியங்குடி வீட்டில் வைத்துத்தான் வெயில் அதன் வேப்பம்பூ வாசனையை எனக்குக் காட்டித் தந்தது. வீட்டிற்கு ரொம்ப பக்கமாத்தான் வெயில் நின்று கொண்டிருக்கும். வாசனையை மட்டும் உள் அனுப்பும். வாசலில் நிற்கிற வேம்பில் நனைந்து வருவதாலோ என்னவோ அவ்வாசனை பெரும்பாலும் வேப்பம்பூ வாசனையை ஒத்திருக்கும்.

ஊரில் பிறந்தாலும் உலகத்தில் பிறந்தாலும் வெயில் மட்டும் ஒரே வாசனையைத்தான் கொண்டிருக்கிறது. வேப்பம் பூ வாசனையை.

ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன மஹா திருமணம் முடிந்து. வெளியில் நின்று கொண்டு வாசனையை மட்டும் உள் அனுப்புகிற வெயில் மாதிரி மனிதர்களும், சம்பவங்களும், நிகழ்வுகளும் உள்ளேறி வருகின்றன. எனையறியாது செத்த தள்ளி அமர்கிறேன். நகர்ந்த தூசி வாசனையாய் புகைகிறது..

அக்டோபர் 21 திருமணம். 19 இரவு வந்துவிட்டார் சரவணன். சவுதிக்கு கிளம்பவேண்டிய பெட்டி படுக்கைகள் கைகளில். இரண்டு வருஷத்தைத் தாங்க வேண்டிய சிரிப்பு முகத்தில். பெட்டி படுக்கைகளை விட விடை பெற்று வந்த சிரிப்பு பளு நிறைந்ததாக இருந்தது. இப்படியான சிரிப்பை, பார்ப்பதை விடக் கடினம் உணர்வது.

'இத விடுங்கண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என்ற சரவணன் அசால்டான புன்னகைக்குள் இறங்கிக் கொண்டிருந்தார். அழுத்தங்களை மறைத்துக் கொண்டு சிரிக்கிற மனிதர்கள் அது ஒரு அழகாகத்தான் இருக்கிறார்கள். அடர் வேம்பின் நிழலில் புள்ளி புள்ளியாகப் பெய்து கொண்டிருக்கிற வெயில் மாதிரி.

நண்பர்களே பிரதான உறவுகள் நம் மஹா திருமணத்தில் என முன்பே சொல்லியிருந்தேன். இல்லையா? இதோ முதல் உறவு வந்தாச்சு. இனி தானாகவே வரும் திருமண வீட்டுக் களையும் என நானாகவே தயார் படுத்திக் கொண்டிருந்தேன் தகப்பன் மனசை. (ரொம்பத் தெரிஞ்சவன் மனசுங்க. கூட நிக்காட்டி எப்படி?) 'ஃப்ரெண்ட்ஸ்களை நான் பார்த்துக்கிறேண்ணே. ஆக வேண்டியதைப் பாருங்க' என வந்ததில் இருந்து வேறு வேறு மாதிரி சிரித்துக் காட்டினார் சரவணன்.

'ஆக வேண்டியதா? அப்படின்னா? ' எனத் தோன்றியது எனக்கு.

மஹா பிறந்தாள். வளர்ந்தாள். பள்ளி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்லூரி சென்றாள். மீண்டும் வளர்ந்தாள். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள்.

இதில் ஆக வேண்டியதாக என்ன செய்தேன் என்றால் எனக்குப் பிடித்த பெயரான மகாலக்ஷ்மியை என் மகளுக்கு வைத்தேன். நினைத்த போதெல்லாம் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். இது இவ்வளவு ஆகுமா என்ன?

சரவணனை அறையில் தங்க வைத்து, ரெண்டு மடக்கு நெப்போலியனை ஊற்றிக் கொண்டு, 'காலையில் வெள்ளனமா வர்றேன். தயாரா இருங்க சரவணா. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் நண்பர்கள் வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து கும்க்கி வருவதாக சொல்லியிருக்கிறார். சாத்தூரில் இருந்து மாது காமு வரலாம். d.r.அசோக் ஃபேமிலியோடு வருவார்ன்னு நினைக்கிறேன். எல்லோரையும் ரிசீவ் பண்ணனும்' என்றேன். அக்பரும் வருவதாக சொல்லியிருக்கிறார்ண்ணே. இதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்க' என்றார்.

அவ்வளவு ஹாயாகத் திருமணம் நடத்திய தகப்பன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன். அவ்வப் போது அண்ணாத்துரை சித்தப்பா, அண்ணன்கள் அழை பேசி , 'என்னடா செஞ்சு வச்சுருக்க?' என்பார்கள். 'எல்லாம் நல்லபடியா நடந்துக்கிட்டு இருக்கு சித்தப்பா. ஒரு ஆளாப் பாக்குறதுதான் கொஞ்சம் மலைப்பா இருக்கு' என்பேன்.

'ஒரு ஆளா பாக்கிறயா? அப்படி என்ன வேலை இருக்குன்னு பாக்கற? யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போறதில்ல. பத்திரிக்கை வைக்கிறதுதான் பெரிய வேலை. அதே இல்லை உனக்கு. பிறகு என்ன வேலை பாக்கற?' என்பார். வாஸ்தவமான கேள்விகளை நிறைய வைத்திருப்பார் சித்தப்பா. பதிலாக நான் சில சிரிப்புகளை வைத்திருப்பேன். பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம்.

சித்தப்பா சொன்னது போல் தான். மணமகன் வீட்டில் திருமணம். நாற்பது அம்பது நண்பர்கள் வருவார்கள் எங்க சார்பா' என்று சொல்லி வைத்திருந்தேன். பெண்ணழைத்துக் கொண்டு காலையில் போய் இறங்கினால் போதும். தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு வாங்கப் போகும் அலைச்சல்கள் மட்டுமே இருந்தன. அதற்கும் நண்பர்கள் இருந்தார்கள்.

நகண்டு நகண்டு தேர் ரத வீதிக்கு வந்து விட்டது.

இருபதாம் தேதி காலை. சிவகங்கையை நெருங்கி விட்டதாக தோழர் கும்க்கியிடமிருந்து sms வந்தது. நானும் முத்துராமலிங்கமும் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். கும்க்கி மட்டுமே பதிவுலகில் என்னை தோழர் என்றழைப்பவர். எல்லா விளிப்புகளுமே எனக்கு டொம்மா டொம்மான்னுதான் இருக்கும். அப்பாவின் முண்டா பனியனை போட்டு விளையாடும் ஐந்து வயது சிறுவனைப் போல்.

குழந்தைகள் அப்பா என்றழைப்பதையே எனக்கு பல சமயம் நம்ப முடியாமல்தான் வரும். குழந்தைகளின் அம்மாக்காரி மட்டும் நம்புகிறாளே என்கிற போட்டியில்தான் ஆரம்பத்தில் நம்பத் தொடங்கினேன். பிறகு அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டது. வம்படியா நம்புவதுதானே வாழ்க்கையும்.

தோளில் பையும் கையில் வாட்டர் பாட்டிலுமாக வந்திறங்கினார் தோழர் கும்க்கி. பின்னூட்டங்களில் அறிமுகமாகி அழை பேசியில் பேசி வந்திருக்கிறேன் கும்க்கியுடன். குரல் வரைந்து தந்திருந்த சித்திரத்துடன் நான் கும்க்கியை தேடிக் கொண்டிருந்தேன். 'உன் சித்திரமெல்லாம் உம்மட்ல. நான் கும்க்கியாக்கும்' என்பது போல புத்தம் புதுசாக நின்றார் கும்க்கி.

இரண்டு வருடங்களாக வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு முகம் சட்டென கலங்கி, உடைந்து, ஒழுகத் தொடங்கியது. என் சித்திரத்தில் அவருக்கு ஜீன்ஸ் பேன்ட், T-ஷர்ட் இல்லை. கன்னச் சுழிப்பு இல்லை. நெற்றிச் சுருக்கம் இல்லை. சொல்லப் போனால் எதிரில் நிற்கும் கும்க்கி என் கும்க்கியே இல்லை. யாரைக் கேட்டு இவ்வளவையும் வைத்துக் கொண்டு வந்து எதிரில் நிற்கிறார் என்று சற்று தடுமாற்றமாக இருந்தது.

நெற்றி சுருங்கி, 'பாரா?' என்று சிரித்தவரை நீங்க பாக்க முடியாமல் போச்சே மக்கா. சரி விடுங்க. நானும்தான் இனி பார்க்க முடியாது என் பழைய கும்க்கியை. ஒண்ணுக்கு ஒண்ணு சரியாப் போச்சு. சரியா? நொடி என உச்சரிக்கிற நொடியில் நொடி கடந்து விடுகிறது. பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. இல்லையா?

கும்க்கியை அழைத்துக்கொண்டு லாட்ஜ் போனோம். கும்க்கியும் சரவணனும் அறிமுகமாகிக் கொண்டார்கள். சரவணன் குறித்த சித்திரத்தை கும்க்கியும் கும்க்கி குறித்த சித்திரத்தை சரவணனும் ஒழுக விட்டிருக்கக் கூடும். பாவம், அவரவர்க்கு அவரவர் பாடு.

இந்த நேரத்தில் தெய்வாவிடமிருந்து அழைப்பு வந்தது. சிவகங்கையை நெருங்கி விட்டான். 'பேசிக்கிட்டிருங்க வந்துர்றோம்' எனக் கிளம்பினோம் நானும் முத்தும். பஸ் ஸ்டாண்ட் போவதற்கும் தெய்வா இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

லக்ஷிமியுடன் வந்திருந்தான் தெய்வா. ' என்னடே..அப்படியே இருக்க? மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறவன் மாதிரியா இருக்கான் பாரு?' என லக்ஷ்மியைப் பார்த்துச் சிரித்தான். மலர்ந்து சிரித்தார்கள் லக்ஷ்மி.

முகத்தைப் பார்த்து, பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான் தெய்வா. பதினைந்து வருடங்களாகத் தவற விட்ட சிரிப்பு. ரொம்பெல்லாம் பேச மாட்டான் தெய்வா. ஒரு சிரிப்பு. சிரிக்கும் போதே கை பற்றுவான். சகலத்தையும் திணித்து விடுவான். அப்படியேதான் இருந்தான் இப்பவும்.

'வீட்ல தங்கலாம்டா. ரூமும் இருக்கு. என்ன செய்ற?' என்றேன். 'எதுனாலும் சரிடா. ரூம்ல தங்கிட்டா அவுங்களுக்கு சிரமம் இருக்காது' என்றான். இப்படில்லாம் யோசிப்பான் தெய்வா கிறுக்கன்.

'மாப்ள லாட்ஜுக்கே போகலாம்' என்றேன் முத்துவிடம். வண்டியை நோக்கி நடந்து கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் என் கை பற்றினான் தெய்வா. கையை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வலது கையால் என் கையிலேயே அடித்துக் கொண்டிருந்தான். ஒரு குழந்தை மாதிரி.

'என்னடா?' எனச் சிரித்து அவன் முகம் பார்த்தேன். கண்களுக்கும் அவன் கண்ணாடிக்கும் நடுவில் விழப் போவது போல தொங்கிக் கொண்டிருந்தது அது. அதை நீர் என்றால் நீர். நட்பென்றால் நட்பு. 'லூசுப் பயலே' எனச் சிரித்து தோளுடன் இறுக்கிக் கொண்டேன். இந்த சிரிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும் உலகு?

தெய்வா லக்ஷ்மியை அறையில் சேர்த்துவிட்டு கும்க்கி சரவணனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேசன் கிளம்பினோம். சென்னையில் இருந்து வருவதாக சொன்ன நண்பர்களில் மணிஜி, வாசுவை முன்பே சந்தித்து விட்டேன். கூடுதலாக ராஜசுந்தரராஜன் அண்ணன், நர்சிம், வித்யா(விதூஸ்) வருவதாக சொல்லியிருந்தார்கள்.

நேரத்திற்கு வந்து விட்டது ட்ரெயின். இரண்டு தடம். கூடுதலாகப் போனால் மூணு ட்ரெயின். நேரத்திற்கு வராமால் போனால்தான் உதைப்போம். ராஜசுந்தரராஜன் அண்ணன், மணிஜி, வாசு வந்திறங்கினார்கள்.

புகைப் படத்தில் பார்த்ததுதான் ராஜசுந்தரராஜன் அண்ணனை. பார்த்து விடமாட்டோமா என தவமாக தவமிருந்த அண்ணனை. நண்பர்களும், அண்ணனும் பார்த்ததும் கை உயர்த்தினார்கள். சிரித்தார்கள். நெருங்கினார்கள்...

-தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17


Tuesday, April 26, 2011

காலம் வரையும் கடிதம்

'காலங்களை வரைந்த கடிதங்கள்' என்றுதான் இருக்க வேணும் இத்தலைப்பு. பொசுக்குன்னு என்னவோ போல முடிக்க விருப்பமில்லாமல் இருக்கிறது. மேலும், நான் இருக்கிறது வரையில் இந்த காலங்களும் என்னுடன் வரத்தான் போகிறது. . வேறு வேறு வயதில், வேறு வேறு தினுசில், வேறு வேறு அனுபவங்களுடன். முன்பு நான் எழுதிய கடிதங்களே இதோ இப்ப வேறொரு அனுபவமாக இருக்கிறதைப் போல.

இந்தப் பயணத்தில் என் சினேகிதி ப்ரபாவை சந்தித்த போது அவளுக்கு நான் எழுதிய கடிதங்களின் கோப்பை கொண்டு வந்து தந்தாள் என்று 'சொன்னேன்' இல்லையா? அக்கடிதங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மக்கா.

***

ப்ரபாவுடனான என் முதல் கடிதத்தை இப்படித்தான் தொடங்கியிருக்கிறேன்...

சிவகங்கை
07.06.'93

ப்ரபா.

வணக்கம். நான் ராஜாராம். சிவகங்கைக்காரன். என்னைப் பற்றி குமார் எதுவும் சொல்லியிருக்கிறானா என்று தெரியவில்லை. உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான்.

நலமா எல்லோரும்?

வெகு நாட்களாகவே உங்களுக்கு எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். முடியாமல் போய் விட்டது. முடியாமல் போய்விட்டது என்று கூட இல்லை. 'உங்களுக்கு சூழல் எப்படி உள்ளதோ?' என நினைத்து விட்டிருப்பேன் போல. குமாரிடம், ' ப்ரபாவிற்கு நான் எழுதட்டுமான்னு கேட்டுச் சொல்லுடா' எனக் கேட்டிருந்தேன். திருமண நெருக்கடிகளில் மறந்திருக்கவேணும் குமார். போக, உங்கள் அனுமதி இல்லாமல் எழுத யோசனையாக இருந்ததும்தான்.

குமார் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தோவாளையில் குமார் வீட்டு மொட்டை மாடியில், நான், குமார், தெய்வா மூவருமாக வெற்றுடம்புகளுடன் அண்ணாந்து கிடந்தோம். குமாரை நடுவில் கிடத்தி, நானும் தெய்வாவும் அவனைக் கேலி பண்ணி சிரித்துக் கொண்டிருந்தோம். அனேகமாய் மூன்று மணிக்கு மேல் இருக்கும். ஊர் அடங்கி விட்டது. விடிகிற இருட்டு. திடுமென குமார், 'நம்மைத் தவிர இன்னுமொரு ஒரு உயிரும் தூங்காம கெடக்கும்லே' என்றான்.

தெய்வா, 'ஜோதியா?' என்றான். 'அது ஏழு மணிக்கே தூங்கியிருக்கும். ப்ரபாடே' என்றான் குமார். அவன் கேட்கும் போதே எனக்கு பதில்
தெரிந்திருந்தது. அதை குமாரே சொல்லும் போது அழகாய் இருந்தது. பிறகு வெகு நேரம் வரையில் எதுவுமே பேசாமல் கிடந்தோம்.
குமார் ஒரு தனிமையான அன்பில் முழுமை அடைந்து கொண்டிருப்பதாகப் பட்டது எனக்கு. தெய்வாவிற்கு என்ன தோன்றியதோ?

சந்தோசமோ, துக்கமோ அடர்த்தியாய் நம் மீது படரும்போது மௌனமான இறுக்கம் நமை அறியாது தோன்றி விடுகிறது. அது புனிதமான இடம். உயர்வான பொழுது. நானும் தெய்வாவும் அதை கலைக்காமல் விட்டு விட்டோம். குமரன் கிடந்தான்.

அந்தக் கிடக்கைதான், 'ஊர் போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாய் ப்ரபாவை தொடர்பு படுத்திக் கொள்ள வேணும்' என்று தோன்றியது எனக்கு. தெய்வாவிடம் முகவரி வாங்கி உங்களுக்கு எழுதுகிறேன்.

குமார் ' ஜோதி' யில் ஐக்யமாகி விட்டதாக தெய்வா எழுதி இருந்தான். தெய்வாவிற்கும், லக்ஷ்மிம்மாவிற்கும் நீங்கள் எழுதிய கடிதம் குறித்தும் தெய்வா எழுதி இருந்தான். குமார் லெட்டர் எழுதினானா? தெய்வா, லக்ஷ்மி எழுதியதுகளா? புதுசா எதுவும் வாசித்தீர்களா?

சமீபமாய் மோகமுள் வாசித்து விட்டு எழ முடியாமல் இழுத்துக் கொண்டு கிடந்தேன்.

ஏதோ வெகு நாள் சிநேகிதம் போல் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமலே இந்தக் கடிதம் முடிவிற்கு வந்து விடுகிறது. என்னைப் பற்றிச் சொல்லவென என்ன இருக்கிறது என்றும் படுகிறது. என்றாலும் உள்ளதைச் சொல்லி தொடங்கலாம்.

நான்- ராஜாராம்

படிப்பு- b.sc.,phy

வேலை- எல்.ஐ.சி ஏஜன்ட்

லதா- wife

மஹா (மகாலக்ஷ்மி)- ஆறு வயது மகள்

சசி (சசிதரன்)- ஒண்ணரை வயது மகன்

பாலகிருஷ்ணன்- அப்பா

அசோக் குமாரி - அம்மா

அக்கா- இரண்டு பேர்

தங்கை- இரண்டு பேர்

எல்லோருக்கும் திருமணமாகி சிதறிக் கிடக்கிறார்கள்.

மற்றவை வெள்ளித் திரையில் காண்க.

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பின்குறிப்பு (அ) இன்று
---------------------------------

இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?

***

மெட்ராஸ் - சிவகங்கை
02.10.'96
இரவு 8.10

ப்ரியங்கள் நிறைந்த என் ப்ரபா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய மனப் பக்குவத்துடன் வாய்த்திருக்கிற பொழுதாகிறது இன்று.

ஓடித் தேய்ந்த தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது ரயில் வண்டி. இப்படி ரயில் வண்டி என்பது கூட பிடித்து வருகிறது. நிறைய காற்று மக்கா. மூச்சு நின்று விடும் போல் இருக்கிறது. நிற்கட்டும். கதவடைக்க முடியுமா அதுக்காக?

சிந்து மடியில் கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். குளிர்கிற காற்றாக தெரியக் காணோம். சற்றுக் கழித்து என் லுங்கியை எடுத்து போர்த்தி விடணும் சிந்துக்கு. ஆக்ரோஷமும் வேகமும் நிறைந்த இந்தக் காற்று தேவையாகிறது போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.

நேற்றைக்கு முந்தைய நாள் சென்னை புறப்பட்டு வந்தது. சிந்துவிற்கு சர்ஜரி முடிந்து, மூன்று மாதம் கழிந்த follow-up-க்காக. ஆப்பரேசன் நல்லபடியா முடிஞ்சாச்சு மக்கா. சர்ஜரி மாதிரி இல்ல. coil-embolization என என்னவோ சொல்கிறார்கள். சர்ஜரிக்கான தழும்பு எதுவும் இருக்காதாம். (பெண் குழந்தை இல்லையா?). அடுத்த செக்-அப் ஆறு மாதம் கழித்து. வரணும்.

சரி..நீ எப்படி இருக்க? அனேகமாக உன் கடிதம் வீட்டில் காத்துக் கொண்டிருக்கலாம். நாகு வந்துச்சா?

சேது எக்ஸ்பிரஸ் 5.55-க்கு சென்னையை விட்டுக் கிளம்பியது. ராமேஸ்வரம் ஸ்கூலில் இருந்து ஸ்கௌட் boys & girls 30-40 பேர்கள் இருக்கிறார்கள் பெட்டிக்குள். ஒரே ஆட்டமும் பாட்டமுமாக கம்பார்ட்மென்டே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுனில் & சுசிலா என்று இரண்டு take-carrer கள். இவ்வளவு நேரத்திற்குள் அறிமுகமாகி இட்லி புளியோதரை சாப்பிட்டாச்சு.

இருவரும் குழந்தைகளை தூங்கச் செய்துவிட்டு அருகமர்ந்து cards போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'வர்றீங்களா சார்? பயப்படாதீங்க. காசுவச்சு இல்ல' என்று சுசிலா அழைத்தார்கள். 'வேணாம் மேடம். நீங்க ஆடுங்க. எனக்கு கொஞ்சம் எழுதணும்' என்றுதான் இதை எழுத உட்கார்ந்தேன்.. திண்டிவனத்தைத் தாண்டி விட்டது வண்டி.

என்ன செய்து கொண்டிருப்பாய் நீ? சாந்திக்கா, நளினி, நீ, அம்மா, சக்திக் கண்ணம்மா எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். இப்படி நினைச்சுக்கப் பிடிச்சிருக்கு.

கும்மிருட்டு மக்கா வெளிய. கூடவே நெளிந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது ஜன்னல்லைட். ரயில்வே லைனை ஒட்டிய வயல்க்காரர்கள் எல்லோரும் சந்தோசமானவர்களாகத்தான் இருக்க முடியும். அதுவும் சற்று முன்பு ஒரு ஒற்றைக் குடிசையைக் கண்டேன். வயலின் நடுவே. உச்சியில் ஒரு குண்டு பல்ப். சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது குடிசை வீடும் எலெக்ட்ரிக் பல்பும்.

பின்னால ஒரு வயல் வாங்கணும் ப்ரபா. புள்ள குட்டியெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அந்த வயலுக்கு வந்து குடிசை போட்டுக்கிட்டு செட்டில் ஆயிரணும். மறக்காம ஒரு பல்பு போடணும் உச்சியில். மஹா, சசியோட குழந்தைகள் ஏன் உன்னோட குழந்தைகள் எல்லோருமாக, 'ராஜா தாத்தாவோட வயல் வீட்டுக்கு' லீவுக்கு வந்துரணும்

'அடுத்த வண்டி எப்போ தாத்தா? அடுத்த வண்டி எப்போ தாத்தா?' என்கிற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கணும். 'அடக் கிடுவுட்டிகளா...செத்த நேரத்துல வரும் பக்கிகளா' எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது வண்டி வந்து விடாதா என்ன?

சரி மக்கா..எல்லாம் எங்கே போய் விடப் போகிறது?

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பி.கு (அ) இன்று
================

சிந்து, சுதா மகள். சுதா லதாவின் தங்கை. (அப்ப லதா யாரு? என்று கேட்டால் உதை) இந்த சிந்துவை ஒரு மெடிக்கல் செக்- அப்-பிற்காக சென்னை அழைத்துப் போய் திரும்பும் போது இந்தக் கடிதம் புகை வண்டியில் எழுதி இருக்கிறேன். அப்ப ரயில் வண்டியாகத்தான் இருந்திருக்கிறது- இந்தப் புகை வண்டி. சிந்து தற்சமயம் திருமணத்திற்கு நிற்கிறாள்.

இன்னும் நான் வயல் வாங்க வில்லை. இப்போதைக்கு ஒரு பல்பு வாங்கிவிட முடியும். ஒவ்வொன்றாகத்தானே செய்ய முடியும் எதையும்?

***


சிவகங்கை
25.12.'96
இரவு 12.20

மக்கா,

என் லெட்டர் இன்று உனக்கு கிடைத்திருக்கலாம். இன்று ரொம்ப relaxed-ஆன நாள் போல இருக்கிறது. ஆனா எதுவும் எழுத ஓடலை. எப்பவும் போலான கிறிஸ்துமஸ்-சாய் இல்லாமல் போய் விட்டது- இந்த கிறிஸ்துமஸ். போன வருடம் மாதிரி, பீட்டர் வீடு, ஜோசப் அண்ணன் வீடு, விண்ணரசி வீடு, ஆல்ஃபிரட் சார் வீடு என எல்லோர் வீட்டின் விழாக்கால முகம் காண முடியாமல் போய் விட்டது.

போகாவிட்டாலும் வந்து கூட்டிச் செல்கிற ஜோசப் அண்ணனக் கூட ஏனோக் காணோம். யாரும் கூப்பிட முடியாத தூரத்திற்கு வந்து விட்டேனோ என்னவோ? வீட்டில் ஆள் இல்லாத தனிமை வேறு... m.c.விஸ்கி கால் போத்தல் வாங்கி வைத்துக் கொண்டு (சிறுகச் சிறுக எனத் தொடங்கி) உன் கடிதங்களை எல்லாம் முதலில் இருந்து தொடங்கி என வாசித்துக் கொண்டு இருந்தேன்.

அப்பா..

எவ்வளவு எழுதி இருக்கிறாய் மக்கா? எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமா ப்ரபா? நம் குழந்தைகள் காலம் வரையில் வச்சு இதையெல்லாம் காப்பாத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? 'தாத்தா அவர் ஃபிரெண்டுக்கு எழுதியது' என்று குழந்தைகளுக்கு, குழந்தைகள் காட்டும்படி நேர்ந்து விடாதா?

சரி..இதெல்லாம் எப்போ முடியும்? சரி..இதெல்லாம் எதுக்கு? சரி..இதில்தான் என்ன?சரி..இதில்தான் எவ்வளவு!

verygood! எல்லாமே very good தான் !

கெறக்கம் தொடங்கியாச்சு. (ஐயே..வா?) புரட்டா கட்டி எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்பிட வர்றியா மக்கா?
'துன்னுட்டு' முடிஞ்சா தொடர்வேன். உருண்டுட்டா நாளை.

***

பி.கு. (அ) இன்று
----------------------

உருண்டுட்டேன் போல. பிறகு தொடரக் காணோம். 'நிறைய அன்புடன்-பா.ராஜாராம்' என்பது கூட இல்லாமல் ஒரு கடிதம்.

பீட்டர் ஆக்சிடெண்டில் இறந்து போனான். சொல்லப் போனால் மறந்தும் போய் விட்டேன் பீட்டரை. எப்படி பீட்டர்? ஜோசப் அண்ணன் ஏன் அந்த வருடம் கூப்பிடக் காணோம்? கிறிஸ்துமஸ்க்கு இருதயராஜ் வீட்டிற்கும்தானே போயிருக்கிறேன். ஏன் எழுதல? விண்ணரசி எப்படி இருப்பாள் இப்போ? ஆல்ஃபிரட் சார் இப்போ எங்கே? காலச் சுழற்சியில் வரலாறுகள் மாறி விடுவது உண்டு. அப்படித்தான் மாறினேனா... m.c. விஸ்கியில் இருந்து நெப்போலியன் பிராந்திக்கு?

தெரியல.

- தொடரும்

***

Tuesday, April 19, 2011

சேது உங்களுக்காக

ஒன்று


(Picture by cc licence, Thanks Raphael Quin)

குழந்தை ஊதிய
காற்றைக் குடித்த சோப்புக் குமிழ்
சாஸ்வதத்தை தேடிச் சென்றது.

வாஸ்தவத்தில் அது
குமிழ் பிறப்பித்த
வாயில் அல்லவா இருக்கிறது?

இரண்டு


(Picture by cc licence, Thanks Karthick Makka )

ன்னை மட்டும் தனியாக
பார்க்கத் தெரிந்த அவளுக்கு

வளுக்கு மட்டும் தனியாக
சொல்ல முடிந்த என்னால்

ல்லோரும் கேட்கும்படி
சொல்ல நேர்கிற வார்த்தைகள்-இந்த
'என் தோழி!'

மூன்று


(Picture by cc licence, Thanks Karthick Makka)

லிக்கா வலிக்கா
எனக் கேட்டு கன்னத்தில்
அடித்துக் கொண்டிருந்தாள்
பப்லுக் குட்டி.

ச்சோ..தாத்தாக்கு வலிக்கி என
அவளாகவே முத்துகிறாள்
அடித்த இடத்தில்.

ரண்டுமே ஒரே
மாதிரிதான் வலிக்கிறது.

நான்கு


(Picture by cc licence, Thanks Sn.Ho)

மீனிற்குத்தான் பொரி தூவல்
கோவில் குளத்தில்.
மீனை விட அதிகம் கவ்வுகிறது
இந்த நிலா.


ஐந்து


(Picture by cc licence, Thanks Sn. Ho)

டவுள் தோன்றி
கடவுளான கதையைப் பற்றி
கூறிக் கொண்டிருந்தார்.

'ய்..உய்..உய்'

ழக்க தோஷத்தில்
விசில் பிரித்துக் கொண்டிருந்தேன்.

ந்த திரைக்குள் நுழைந்த கடவுள்
கடவுளர்களிடம் கேட்டார்

'னுஷனா இவன்?'

***

டிஸ்கி:

அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.

(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)

கேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு!

***

Monday, April 4, 2011

புரை ஏறும் மனிதர்கள் - பதினேழு

தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை- ஆறு

ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு
,ஐந்து

வீராவிற்கு பிறகு நாய்க் குட்டிகள் மேலான என் ஸ்நேகத்தை வெகுவாக குறைத்துக் கொண்டேன். அவைகள்தான் அவ்வப்போது கண்ணடித்து 'ஐ லவ் யூ' எனும். சற்று நோங்கினாலும், 'அப்படியா?' என்கிற ஒற்றைச் சொல்லோடு விலகி விடுவேன். அக்கம் பக்கமாக, உற்றார் உறவினர் இல்லையெனில், நின்று கூடுதலாக ரெண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு.

"நீ நல்லாருக்கியா? நான் நல்லாருக்கேன். நீ சாப்ட்டியா? நான் சாப்ட்டேன். நீ ரெண்டு நாளா சாப்பிடலையா? நான் ரெண்டு வருசமா சாப்பிடல. நீ சோத்துக்கு சிங்கி அடிக்கிறியா? நான் அதைவிட சிங்கு சிங்குன்னு அடிக்கிறேன்." என்ற அளவிலேயே பேச்சுகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். இவ்விஷயங்களை நான் லதாவிற்கோ, குலசாமிக்கோ கொண்டு செல்வதில்லை.

இப்படி ஆற்றிலும் விழுந்து விடாது சேற்றிலும் கால் பாவாது நூல் பிடித்தது போலான வாழ்வில்- திருப்தியாகவே வாழ்ந்து வந்தேன். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாதாமே? அப்படி ஒரு சுழல் காற்று அன்று விரட்டி வந்தது.

அன்று, ஏழு கிழமைக்குள் ஒரு கிழமை என நினைவு. ஏழுகடையில் அமந்திருந்தேன். இப்படி ஏழேழாக வரும் போதே நான் சுதாரித்திருந்திருக்கலாம்- அருகில்தானே அரையும் இருக்கிறான் என.

மழை பிரித்துக் கொண்டிருந்தது. நாலு மணி சுமார். டாஸ்மாக் போகிற ஜோலி இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு மேலாக இருக்கிறதே என சுணக்கமாக இருந்தேன். அப்பத்தான் இந்த நெப்போலியன் வந்தான். நெப்போலியனாக வரவில்லை. வெறும் நாய்க் குட்டியாகவே வந்தான். வெறும் என்றால் வெட்ட வெறும்.

பசி படத்தில் நடித்த ஷோபா மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, அரக்கிற்கும், அழுக்கிற்கும் மையமான ஒரு அட்டுக் கலரில், 'இப்படியெல்லாம்தான் கலர் இருக்கு' என்பது போல் கலர் களஞ்சியமாய் வந்தான்.

'எம்புட்டு பெரிய பல்லி' என்றுதான் முதலில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ' கோடுகள் தொலைத்த அணிலோ?' எனவும் யோசனை வந்தது. பிறகு, நாய்க் குட்டிகள் குறித்தான நாலெட்ஜ் சற்று ஒட்டி வந்ததால் 'அட, குட்டி நாய்க் குட்டி' எனப் புளகம்(நன்றி: நேசமித்திரன்) கொண்டேன்.

யோசியுங்கள் மக்களே...

ஏழுகிழமைகளில் ஒரு கிழமை, மனதிற்கு பிடித்த ஏழு கடை, ஏழு கலரிலும் அடங்காத ஒரு கலர், ஏழைப் பங்காளன் முகம், ஏகப்பட்ட நடுக்கம் கொண்ட ஒரு உடல் என ஒரு உயிர் வந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படித்தான் இருந்தது எனக்கும். சுடரும் உயிர் எப்படி இருந்தால்தான் என்ன? இல்லையா?

குனிந்து கையிலெடுத்தேன் நாய்க் குட்டியை. ' என்ன சொல்ல வர்றேன்னா..' என்பது போல குலசாமி நினைவில் குறுக்கிட்டார் . "அமுக்கிகிட்டு செத்த ஓரமா ஒக்காரும். நாந்தான் உம்மை சாமியா வச்சிருக்கேன். நீர் எனக்கு சாமியில்லை" என அதட்டுப் போட்டேன். கமல் மாதிரி புரியாமல் பேசினால் மனிதனே பயந்துவிடுகிறான். பிறகு சாமி எம்மாத்திரம்?

இப்படியான திடீர் தைரியத்திற்கு தூரத்தில் ஒரு பெண் காரணமாக இருந்தாள்.அதாவது 240 கி. மீ. தூரத்தில். (சிவகங்கை-கோவை தூரம்) ஆம். ப்ரபாவேதான்! ப்ரபாவை நம் நண்பர்கள் சிலர் அறிவர்.( ஒரு முப்பது பேர்?) அறியாதவர்கள் 'இந்த' பதிவு போய் திரும்புங்களேன்.

இந்தப் ப்ரபா, தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையைப் பேணுவது போல பேணுவாள் ஒரு ஜிம்மியை. "நேத்துல இருந்து ஜிம்மி கக்கிக்கிட்டே இருந்துச்சு மக்கா. வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனனா? நல்ல ஃபீவர்டா" என எப்ப அழை பேசினாலும் கொசுறாக இந்த மாதிரி தகவல்களை அளிப்பாள். மருந்துக்குக் கூட ஒரு நாய்க் குட்டி இல்லாதவன் இவன் என்கிற நினைப்பெல்லாம் வராதோ இவளுக்கு என எரிச்சலாக வரும். கூடவே லதாவின் நினைவும்.

"சசிப்பய மழைல நனைஞ்சிருக்கும் போல. நல்ல சளி. ராத்திரியெல்லாம் காய்ச்சல் வேற. பார்த்தேன், மிளகை தட்டிப் போட்டு ஒரு ரசம் வச்சுட்டேன்" என்பாள். "சரி. கெளப்பி விடு. டாக்டர்ட்ட போய்ட்டு வந்துரலாம்" என்றால், "அதான் ரசம் இருக்குல்ல" என்பாள். " சரி புள்ள. வெளியில் போறேன். எதுனா காய்கறி வாங்கணுமா மதியத்துக்கு ?" என்றாலும், "அதான் ரசம் இருக்குல்ல தான்.

சசிக்கு மருந்தும் ஆச்சு. பசிக்கு சாப்பாடும் ஆச்சு, ஒரு ரசமும், ஒரு லதாவும். ரசம் மேட்டரெல்லாம் ப்ரபாவிற்கு தெரியாது போல.

போக, சசியா ஜிம்மி?

குட்டியை எடுத்த கையோடு பெயரும் இட்டேன். " நீ நெப்போலியண்டா!" (டாஸ்மாக் நேரமும் நெருங்கி விட்டதில்லையா?) 'ஆகட்டும்' என்றான் நெப்போலியனும்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்தான், நாலாம் நம்பர் கடை ஓனரான முத்துராமலிங்கம். (முத்துவையும் அதே முப்பது நண்பர்கள் அறிவீர்கள்தான். அறியாதவர்களுக்கு 'இந்த' பதிவு) நெப்போலியனை அவனிடம் காட்டி லெஃப்ட் ஒதுக்கி சிரித்தேன்.

இப்படி லெஃப்ட் ஒதுங்கி சிரிக்கும் போதெல்லாம் அவனை உதாசீனப் படுத்துகிறேன் என அவன் புரிந்து வைத்திருந்தான். அல்லது அப்படி பழக்கியிருந்தேன். பரஸ்பரம் அவனும் அப்படித்தான் பழக்கியிருந்தான் என்னை. என்ன?..அவனுக்கு ரைட் ஒதுங்கும்.

என் சிரிப்பைப் பார்த்து,

"என்ன?" என்றான் ஒற்றைப்படையில்.

"வளக்கப் போறேன்" என்றேன் ரெட்டைப் படையில்.

"நீ திருந்தவே மாட்டியா?" என்றான் முப்படையில்.

விட்டால் அறுபடை வீடு வரையில் போய்த் திரும்புவானோ எனப் பயந்து இந்த 'வீடறிகிற' விளையாட்டை நிறுத்தி விட்டேன். இதே முத்துராமலிங்கம் ' மானிட்டர்' என்ற நாய்க் குட்டியை வளர்த்தவன்தான். நல்ல போதையில் சவுதிக்கு போன் பண்ணுவான். (போதை இல்லாவிட்டால் மிஸ் கால் மட்டுமே)

"மாமா ஒரு மானிட்டர் வளக்குறேன் மாமா. சரக்கடிக்கப் பழகிட்டான். சிகரெட்டை மட்டும் பழக்கித் தர முடியல. நம்ம செட்டிக்கு பிறந்திருப்பான் போல" (செட்டி என்ற ஸ்ரீதர் என்ன தண்ணி அடித்தாலும், புகைப்பது இல்லை) என்று பேசியவன்தான். ஒரு நாள் சரக்கடித்து விட்டு மானிட்டரை தலையணையாக வைத்துத் தூங்கியிருப்பான் போல. காலையில் காணாமல் போய் விட்டதாக செட்டி அழை பேசும் போது சொன்னான். வேறு வேறு மனிதர்கள். வேறு வேறு குலசாமிகள்.

பார்வையிலேயே என்னையும் நெப்போலியனையும் மாறி மாறி சாணை பிடித்துக் கொண்டிருந்தான் முத்து. 'அட..என் சாணைக்கு பிறந்த சோணை' என நெப்போலியனுக்கு குடில் செய்யத் தொடங்கினேன். குடிலுக்கு ஏற்ற இடமாக இருந்தது பழனி கடையின் டீ பட்டறை.

மாப்ள பழனி அஞ்சாம் நம்பர் கடைக்காரன். (டீக்கடை) பழனி போர் அடித்தால் மட்டுமே கடை திறப்பான். திறந்து சற்றைக்கெல்லாம், " க்காலி..திறந்தாலும் போர் அடிக்குது" எனப் பூட்டியும் போய் விடுவான். நல்லவன்தான். தலைச்சக்கரம் சற்று ஏற்ற இறக்கம்.

நெப்போலியன் வந்த பிறகு என் வாழ்வு முறை வெகுவாக மாறி விட்டது. விடிந்தும் விடியாமல் ஏழு கடைக்கு வந்து விடுவேன். வந்ததும் முழு நெப்போலியன் காலிக் குப்பியில் பால் வாங்கக் கிளம்பி விடுவேன்.

சம்பந்தமில்லாத குப்பியில் சம்பந்தமில்லாத திரவம் வாங்கிப் போவதை பாதசாரிகள் ஒரு மாதிரி கவனிக்க தொடங்கியிருந்தார்கள். "நெப்போலியனுக்குதான் நெப்போலியனில் பால்" எனக் கவிதை கலந்த என் சுய விளக்கம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை போல. ஜிப் சிக்கிக் கொண்ட பர்ஸ் மாதிரி திறந்து மூடி, திறந்து மூடி சிரித்துக் காட்டினார்கள்.

' நீ எத்தனை புயல்களை சந்திக்கிறாய் என்பதைப் பற்றி இந்த உலகம் கவலைப் படாது. கப்பலைக் கொண்டு போய் கரை சேர்க்கிறாயா என்று கவனிக்கும்' என்கிற தத்துவத்தின் பித்தன் நான். எனவே, ஜிப் / பர்ஸ் மனிதர்களை, 'ஜிப்ப போடு. முதல்ல ஜிப்ப போடு' எனக் கடக்கப் பழகிக் கொண்டேன்.

தீரத் தீரப் பால் குடிப்பது நெப்போலியனுக்கு ரொம்ப பிடித்து வந்தது. பால் தவிர்த்து, கடலை மிட்டாய், முருக்கு, சீடை, பட்டாணி, பொட்டுக் கடலை, விரலிமஞ்சள், கல்உப்பு, வெற்றிலைக் காம்பு, வாழைப்பழத் தோல், சீவு விளக்கமாற்றுக் குச்சி, தலை பெருத்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, சிகரெட் அட்டை (கோல்டு கிங்ஸ் அட்டை எனில் கூடுதல் சந்தோசம்), ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு, பொடி மட்டை, என எது கிடைத்தாலும் பசியாறிக் கொள்ளும் பக்குவம் பிறப்பிலேயே இருந்தது.

ஏழு கடை வந்த நான்கு நாட்களுக்குள் எல்லாம் நெப்போலியனின் புகழ் எட்டு கண்ணும் விட்டெரிந்தது. வருவோர் போவோரெல்லாம் "நெப்போலியா?" என்று அழைப்பதைக் கண்டு மீண்டும் புளகம் கொண்டேன். பழனி கடைக்கு பாத்திரம் விளக்க வருகிற பாட்டி கூட, "நெப்போலியனுக்கு பால் தீந்து போச்சுப்பு" என பாட்டிலை எடுத்து நீட்டத் தொடங்கியிருந்தாள்.

பாட்டி வாயிலேயே நெப்போலியன் நின்னு போன நெகிழ்விலும், நானும் நெப்போலியனில் இருந்த நிறைவிலும், நூறு நூபாயை பாட்டியிடம் நீட்டி "நெப்போலியன் வாங்கி சும்மா கும்முன்னு அடி பாட்டி" எனக் கொஞ்சி மிஞ்சினேன்.

ஒன்னும் புரியாத பாட்டியை, "செலவுக்கு வச்சுக்கிற சொல்றாரு" எனப் பூசி முழுகி ட்ரான்ஸ்லேட் பண்ணினான் முத்து. பொங்கி வரும் பாலில் குளிர் நீராகிக் குதிக்கும் கூதறை அவன். ஏழு கடை மனிதர்களில் ஒருவனாக மாறிக் கொண்டிருந்தான் நெப்போலியன்.

துக்கம் மற்றும் அதீத துக்கம், சந்தோசம் மற்றும் அதீத சந்தோசம், துக்கமின்மை மற்றும் சந்தோசமின்மை காரணங்களுக்காக மட்டுமே நான் முட்டக் குடிப்பது. மற்ற காரணங்களை அவ்வளவாக பொருட்படுத்தாது, அளவோடு குடித்து வீட்டிற்குப் போய்விடுவேன்.

அன்று முட்டக் குடித்திருந்தேன். காரணம் நெப்போலியன்தான். அன்று பால் கூடக் குடிக்காமல் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தான். நடுக்கம் என்றால் ஃபிட்ஸ் மாதிரியான நடுக்கம். மழை அல்லது குளிர் காரணமாக இருக்கலாம் என நண்பர்கள் சொன்னார்கள். மாலையில் நடுக்கம் தீவிரம் கொண்டது.

மறு நாள் வெட்னரி ஹாஸ்பிட்டல் கொண்டு போனேன். வயிற்றில் கொக்கிப்புழு இருந்தாலும் இப்படி ஃபிட்ஸ் வரலாம் என மருந்து கொடுத்தார் டாக்டர். ஒரு நாள் சற்று குணமாக இருந்தான். மீண்டும் ஃபிட்ஸ் வரத் தொடங்கியது.

அன்று தீபாவளி. காலையில் நெப்போலியனுக்கு பால் வைத்துவிட்டு அம்மா, சகோதரிகள், நண்பர்கள் வீட்டிற்குப் போய்விட்டு ஏழு கடை வந்தால் நெப்போலியனைக் காணோம். எங்கு தேடியும் காணோம். முன்பு ஒரு நாள் இப்படி தொலைந்து, பிறகு பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் வலிப்பு வந்தபடி கிடந்தான்.

ரொம்பக் கொடுமையான தருணம் அது. "நெப்போலியா?" என்கிற குரலுக்கு அவன் வாலாடுகிறது. அது அவன் ப்ரியம். உடம்பும் ஆடுகிறது. அது அவன் நோய். இரண்டையும் பிரிக்க முடியாது கையில் அவனை ஏந்திய போது, போதும் என்றாகிப் போனது.

"என்னடா நான் யாரை வளர்த்தாலும் அவுங்களுக்கு ஃபிட்ஸ் வருது?" என சிரித்தேன் முத்துவிடம். (நம் சசிக்கும் சிறு வயதில் இதே தொந்திரவுதான்) அது சிரிப்பில்லை என்பதை முத்து அறிந்திருக்க வேணும். " போப் போ மூதேவி. எந்திருச்சு வீட்டுக்குப் போ" என விரட்டினான்.

அப்படி ஒரு நம்பிக்கையில் கடவே அலசிவிட்டோம். சுத்தமாகக் காணோம். வரும் போதும் போகும் போதும் "நெப்போலியா?" என கூப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இருந்தோம். எப்படி இப்படி ஒரு உயிர் துடைத்துப் போட்டாற் போல காணாமல் போக முடியும்?

ப்ரபா கூட, " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்" என்றாள். தடுமாறித் திரியும்போது வார்த்தைகள் தரும் பிடிமானம் எவ்வளவு ஆறுதல்! சவுதி திரும்பும் நாள் வரையில் நெப்போலியன் திரும்பவே இல்லை.

இரயில்வே ஸ்டேசனில் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக கட்டி அணைத்து விடை தந்து கொண்டிருந்தார்கள். லதா, குழந்தைகள் கைகளைப் பற்றி, " அழாம அனுப்பித்தாங்க பக்கிகளா" என சிரித்து பெட்டிக்குள்ளும் ஏறிவிட்டேன்.

எப்பவும் பெட்டிக்குள் ஏறிய பிறகுதான் கடைசியாக கட்டிக் கொள்வான் முத்து. பெட்டியெல்லாம் ஒழுங்கு செய்து அடுக்கிய பிறகு, "போய்ட்டு வா" எனக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டு திரும்பிப் பார்க்காமல் இறங்கிப் போய்விட்டான். எனக்கு முத்துவிடம் ஒரு கேள்வி பாக்கி இருந்தது. அதை அப்போ கேட்க இயலவில்லை.

சவுதி வந்து அறை அடைந்து வீட்டிற்கெல்லாம் அழை பேசிய பிறகு முத்துவை அழைத்தேன். தொண்டையிலேயே அருவிக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"நெப்போலியனை எங்கடா கொண்டு போய் விட்ட?"

சத்தம் போட்டு சிரித்த முத்து, "லூசு மாமா நீ" என்றான்.

ப்ரபா சொன்னதும் ஏனோ நினைவிற்கு வந்தது. " தீபாவளியில்லையா? பட்டாசு சத்தத்துக்கு எங்கனா பயந்து போய் கெடக்கும்டா. வந்துரும் பாரேன்"

ஆறுதலாக இருந்தது.

-தொடரும்

***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16