நண்பர்
மணிஜியிடமிருந்து அழை எண் பெற்று
கேபில்ஜியை தொடர்பு கொண்டேன்.
"
உடம்புக்கு சரி இல்லைன்னு விஷயம் கேள்வி பட்டுதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக கார எடுத்துட்டு போறேன் தல. சட்டையை போட்டவர் சோபாவில் உட்கார்ந்தார். அப்படியே collapse ஆய்ட்டார். சகோதரி கணவர் கூட காலையில்தான் துபாய் போறார். பிறகு விஷயம் கேள்வி பட்டு உடனே திரும்புற மாதிரி ஆயிருச்சு. மருமகன்னா உயிர் இவருக்கும். எண்பது, நூறு பேரு இருக்கும் தல. நம்மாளுங்க. வந்து நின்னு, எல்லாவேலைகளையும் இழுத்து போட்டு பார்த்தாங்க. யாருன்னே தெரியாது. முகம் கூட பார்த்தது இல்லை. எங்கிங்கிருந்தோ எவ்வளவோ போன் கால்கள். என்ன செய்ய போறேன் தல, இவுங்களுக்கெல்லாம்?" என்று தத்தி,தத்தி,வெயிலிலும் மழையிலும் அமர்ந்து கொண்டு இருந்தது அவர் குரல். முதல் முறை கேட்க்கிற குரல். சம்பவமும், சூழலும் அடைத்து, அப்பா மேலான பிரியம் மட்டும் ஒழுகி கொண்டே இருந்தது அவர் குரலில்.
அப்பா என்பவர் அப்பா மட்டும்தானா? எவ்வளவு நிகழ்வு, எத்தனை நாள், எவ்வளவு இரவு, எத்தனை பிணி, எவ்வளவு சந்தோசம், போதனை, கல்வி, சிரமங்கள், எவ்வளவு மீசை குத்திய முத்தங்கள், இன்னும் எவ்வளவு எவ்வளவு இந்த அப்பா? போனை வைத்ததும் சொல்லொண்ணா அடர்த்தி கவ்வி கொள்கிறது. ஒரு சரித்திரம் ஒரு நொடியில், ஒரே ஒரு நொடியில் முடிந்து போய் விட முடியுமா? கேபில்ஜியின் முகம் பார்க்காத அப்பாவிடமிருந்து நினைவு தப்பி அப்பாவிடம் வருகிறது...
அப்பா என்றொரு மக்கா.கோவையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தோம் அப்பாவும், நானும். ஆரப்பாளையம் இறங்கி, அண்ணா பஸ்ஸ்டாண்ட் வந்துதான் சிவகங்கை பஸ் மாறனும், அப்போ. அண்ணா பஸ் ஸ்டாண்ட் வந்ததும் அப்பா கேட்டார்,
"
தம்பி அம்பது ரூபா வச்சுருக்கியாடா?" (ரொம்ப rare-ஆதான், இந்த"தம்பி"யை யூஸ் பண்ணுவார் அப்பா)
"
இருக்குப்பா. என்னப்பா?" என்றேன்.
"
தா"என்று வாங்கி கொண்டு நடந்தவர் நாலு அடி நடந்திருப்பார். திரும்பி என்னை பார்த்தவர் "வாடா"என்றார். பின்னாலேயே நானும் போனேன்.
அருகில் உள்ள ஒயின்ஸ் சாப்பிற்குள் அப்பா நுழைவதை பார்த்ததும் நின்றுவிட்டேன். உண்மையில் நான் உணவருந்த போகிறார் போல என்பதாகத்தான் பின் தொடர்ந்தது. "சரிதான்" என சிரித்துகொண்டு, அருகில் ஒரு மரியாதை நிழல் இருந்தது. வேம்புக்கெனவே வாய்க்கிற மரியாதை நிழல்! நிழலில் நின்று கொண்டேன் நான். அப்படி நிற்கிற என் மரியாதையும் பிடித்திருந்தது.
ஒயின் சாப்பில் ஒரு குவாட்டரை பிடித்துகொண்டு, பக்கத்தில் உள்ள பாருக்குள் நுழைந்தார் அப்பா. இரண்டு நிமிடத்திற்கும் குறைவில் பாரில் இருந்து வெளிப்பட்டார். வாயை துடைத்து கொண்டே வந்தவரின் கையில் உரித்த வாழை பழம் ஒன்று இருந்தது. பாதியை வாயில் போட்டுக்கொண்டு மீதியை என்னிடம் நீட்டினார்.
"
எனக்கு வேணாம்ப்பா நீங்க சாப்பிடுங்க" என்றேன்.
"
முண்டை, புடி. பாருக்குள்ளே போயி ரைட்ல திரும்பு. பாதி வச்சுட்டு வந்திருக்கேன். பார் பயல்ட்ட உன்னை காமிச்சு சொல்லிட்டு வந்திருக்கேன்." என்றவர் என் முகத்தை கூட பார்க்காமல், விடு, விடுவென பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க தொடங்கி விட்டார்.
எனக்கு பெரிய அதிர்ச்சி. நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் அப்பா இல்லையா? தண்ணியில் இருக்கும் போது அப்பாவை பார்த்ததும் தெறிப்பதும், புகைத்து கொண்டு இருக்கும் போது, அப்பா வந்து விட்டால்,சிகரெட்டை எறிவதும் பயமோ, மரியாதையோ சம்பந்த பட்டது மட்டுமில்லை. இப்படியெல்லாம் இருக்க பிடித்தும்தானே வருகிறது.
"
என்ன வெயில்டா.." என்று நண்பனுடன் பேசி கொண்டே சட்டை பட்டனை தளர்த்துகிற போது, கையிலிருக்கிற தினசரி கொண்டு நமக்கும் சேர்த்து விசிறுகிற நண்பனை போல், சுளுவாய் அப்பா மற்றொரு கதவை திறந்து தந்தார். அப்பாவிற்கும் எனக்குமான நீர்பாசன கதவை!
ஊர் வந்ததும் நண்பர்களிடம் சொல்லி சிரித்தேன். பிறகு வந்த காலங்களில் ஒரு சிப் உள்ளிறங்கியதும், tvs-50 சாவியை நண்பர்கள் யாரிடமாவது கொடுத்து "அப்பாவை போய் கூட்டிட்டு வாங்கடா" என்பேன். அப்பா வந்ததும் ரெண்டாவது ரவுண்டு தொடங்கும். நண்பர்கள் எல்லோரையும் அப்பா "சித்தப்பு" என்றுதான் அழைப்பார். (மகன்,அசோக்..உங்களிடம் மிக நெருங்கியதற்கு மன ரீதியான இவ்விளிப்பே காரணமாய் இருக்கலாம் எனக்கு). பசங்கள் எல்லோரும் "அப்பா" என்றழைப்பார்கள்.
எல்லா கிளாசையும் வட்டமாக அடுக்கி நிரவி ஊற்றுவது அப்பாவாகவே இருக்கும் பெரும்பாலும். நண்பர்களில் சூரி அண்ணனும், முத்துராமலிங்கமும் அப்பாவிற்கு மிக நெருக்கம். நண்பர்கள் எல்லோரும் ரவுண்டு கட்டி அமர்ந்து தண்ணி அடித்தாலும், நான் மட்டும் அப்பாவின் "முன்பாக" என அருந்துவது இல்லை. மூர்த்தி கடையில் ஒரு திரை இருக்கும். திறந்து மூடவென. திரையை இழுத்துவிட்டு பின்புறமாக நின்று கொள்வேன். முத்துராமலிங்கம் என் கிளாசை கொண்டுவந்து திரைக்குள் தருவான். சத்தம் பறியாமல் உறிஞ்சி கொள்வேன்.
"
நீ தண்ணி அடிக்கிறேன்னு தெரியும். இங்க அடிச்சா என்ன. திரைக்கு பின்னால் அடிச்சால் என்னா, உக்காந்து அடிடா முண்டைக்கு மாரடிச்ச்சவனே" என்பார் அப்பா.
நான் சிரித்த படியே வெளியே தம் அடிக்க இறங்கி விடுவேன். ஒருமுறை தம் முடிச்சு சபைக்குள் நுழைய அப்பா எதிரில் உட்க்கார்ந்திருக்கிற முத்துராமலிங்கம் கையில் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. எனக்கு சுரீர் என்றது. அவன் கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியில் எரிந்து விட்டு வெளியில் வந்து விட்டேன்.
பின்னாடியே வந்த முத்துராமலிங்கம் "என்ன மாமா?" என்றான்." என்ன, நொண்ண மாமா? ஒங்கூட உட்கார்ந்து தண்ணி அடிக்கிறார் என்பதற்காக அவரோடு உட்கார்ந்து தம் அடிப்பியா?" என்று கடித்து வைத்தேன். இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும்.
அப்பாவிற்கு எல்லாம் ஒண்ணுதான். முன்னாடி, பின்னாடி எல்லாம்!
ராஜா, சூரிஅண்ணன், pcரவி அண்ணன், முத்துராமலிங்கம், மகந்தா, மதி, மூர்த்தி, அமரன்கார்த்தி, குண்டுகார்த்தி, டூல்ஸ்முத்து, நாகேந்திரன், செட்டி, ஜெயா, காலீஸ், எல்லாம்!!
விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.
உறவினர்கள் யாராவது அம்மாவிற்கு இதை வாசித்து காட்ட கூடும். "அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ.
இருக்கட்டும் அம்மா. இந்த முகம் நீ பார்க்கலைதானே? பார்த்துக்கோ!
இது எல்லாம் சேர்த்துதான் அப்பா, அம்மா.
அப்பா என்றொரு மக்கா, அம்மா!
புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று