"கண்ணா தமிலிசில் ஓட்டு போட சொல்லி கொடுடா"
கண்ணனை உங்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு, பெரியப்பா மகன்,கனடாவில் இருக்கிறான். என்னை தெரியும் உங்களுக்கு. தெரியாதவர்களுக்கு,நான் சவுதியில் இருக்கிறேன். நல்ல மூட்ல இருந்திருப்பான் போல கண்ணன்.
"சரி,ஆன்லைனுக்கு வா"
"லைன்லதாண்டா இருக்கேன்"
"ஆன் லைனுக்கு வாடான்னா."
"ஆன் லைனுலதாண்டா இருக்கேன்.இன்விசிப்ல இருக்கேன்." (இவன்லாம் இஞ்சினியர்??)
இங்கு கண்ணனை சொல்லியாகனும். என்னை விட நாலு வயது சிறியவன். மனநிலைக்கு தகுந்தாற் போல அண்ணன் எனவும் வாடா போடா எனவும் அழைப்பான். குடும்பத்தின் கடைக்குட்டி. வாய் துடுக்கு. காப்பியும் கெட்ட வார்த்தையும் ரொம்ப பிடிக்கும். கெட்டவார்த்தை என்பது குடும்ப கெட்டவார்த்தைதான். தாவில் தொடங்கும். 'லி' யில் முடியும். நேரம் வா(ய்)க்கிறபோது ஆ(ய்)சுவாசமாக யோசியுங்கள். ரொம்ப குழப்பிட்டேனோ?. இந்த பதிவிற்கு முக்கியமான வார்த்தை. அதை அப்படியே பிரயோகிக்க விருப்பம். பொண்டு பொருசு அலையிற வீடுன்னு சூசகமாய் சொன்னேன்.
கணினி மூலமாக தொடர்பு முயன்று,வீண்...அழை பேசினான்.
"நம்ம தளம் வேணாம். ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு. சித்தப்பா தளம் வாங்கண்ணே."
"வந்துட்டேன்."
"கவிதைக்கு கீழ ஓட்டு இருக்கு பாருங்க அதுல குத்துங்க."
"குத்துங்களா?.. குத்துங்க எசமான் குத்துங்களா?"
"டேய்...(கெட்ட வார்த்தை)கேபிள் சங்கர் தளம் போயிட்டியா?"
"இல்லைடா, சும்மா. உனக்கு மூடை கிரியேட் பண்றேன்."
"(கெட்ட வார்த்தை) ஐ.எஸ்.டி.பேசிக்கிட்டு இருக்கேன்"
"சரி சரி சொல்லு"
"குத்திட்டியா?"
"குத்திட்டேன்"
"பக்கத்துல ஒரு விண்டோ ஓப்பன் ஆகுதா"
"ஆமா ஆகுது"
"லாக் இன்ல யூசர்நேம் பாஸ் வேர்ட் அடி"
"அப்படி எதுவும் இல்லையேடா"
"இருக்கும். கீழ இருக்கும் பாரு. தேடு"
"கமென்ட் இருக்கு.ஹூ வோட்டடெட் இருக்கு, ரிலேட்டட் இருக்கு."
"கீழ இருக்கும் பாருடா"
ஒரு சிகரெட் பற்ற வைத்து கொள்கிறேன்..
"ம்ம்..இருக்குடா.லாகின்டூ கமெண்டுன்னு இருக்கு"
"லாகின்-ஐ மட்டும் குத்து. கமெண்ட்டை குத்தாத"
ரெண்டு சேர்ந்தே இருக்கு என சொல்ல விரும்பினேன். ஆனால் சொல்லவில்லை. குத்தினேன்.
"ம்ம்..இப்ப வந்திருச்சுடா"
"யூசர்நேம் பாஸ்வேர்ட் அடி."
"அடிச்சிட்டேன்"
"என்டர் கோடு"
"கொடுத்துட்டேன்"
"இப்ப பக்கத்துல ஓப்பன் ஆகுற விண்டோல ஓட்டு கூடியிருக்கா?"
"இல்லையேடா. அதே ஓட்டுதான் வந்திருக்கு. திருப்பியும் கீழ கமென்ட்,ஹூ ஓட்டட்,ரிலேட்டட் வந்திருக்கு."
"(கெட்ட வார்த்தை)என்னடா செஞ்சு தொலைச்ச?"
"நீ சொன்னதுதாண்டா செஞ்சேன்"
மற்றொரு சிகரெட் பற்ற வைக்கிறேன்..
"அப்புறம் ஏண்டா வரலை?"
"............"
"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா அடிச்சியா?"
"அடிச்சேண்டா"
"சொல்லு"
சொன்னேன்.
"சரி மேல என்ன இருக்கு"
"தலைப்புலையா?"
"ம்ம்"
"தமிலிசுன்னு இருக்கு"
"ஆப்போசீட்ல என்னடா இருக்கு?"
"கருவேலநிழல்ன்னு இருக்கு"
"(கெட்டவார்த்தை)ஒன்தளம் போயிட்டியா?
"கருவேலநிழல் பார் ஹோம் பார் ப்ரோபைல்ன்னு இருக்குடா"
"சரிதான். அப்பா ஏண்டா போலிங் ஆக மாட்டேங்குது?"
"இரு நான் செக் பண்றேன்"
(அவனுக்கும் யூசர் நேம் பாஸ்வேர்ட் தெரியும்)
கொஞ்ச நேரம் அமைதி.
"(கெட்டவார்த்தை) இந்தாத்தான் அழகு போல ஆகுதடா. இப்ப கட்டத்துல பாரு. கூடியிருக்கா?"
"ஆமாடா.கூடியிருக்கு?"
"அப்புறம் ஏண்டா உனக்கு மட்டும் ஆகல"
"........................."
"ஓட்டுலதான குத்துன?"
"ஓட்டுலதாண்டா குத்துனேன்"
"(கெட்டவார்த்தை)கம்ப்யூட்டரை எதுவும் பண்ணி தொலைச்சிட்டியா?"
மூன்றாவது சிகரட்டை பற்ற வைக்கிறேன்...
"சரி இனி சித்தப்பா தளத்துல ஓட்டு போட முடியாது. வேற எதாவது ஒரு தளம் சொல்லு அதுக்கு போகலாம்"
"நவாஸ் தளம் வா.அவர்தான் மைனஸ் ஓட்டு போட்டாலும் மைனஸ் ஓட்டு மிக அருமைன்னு பின்னூட்டம் போடுவாரு"
இங்கு அவன் சிரித்திருந்தால் ஆசுவாசமாக இருந்திருக்கும். இல்லை.
நவாஸ் தளத்தில் meendum தொடங்கியது...
"வந்துட்டியா?"
"குத்திட்டியா?"
"ஓப்பனா?"
"லாக்கின்னா?"
"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா?"
"ஓப்பனா?"
"கூடியிருக்கா?"
"இல்-லை-யே-டா"
மீண்டும்..
"மயிறு என்னடா பண்ணி தொலைச்ச கம்ப்யூட்டரை?"
"கம்ப்யூட்டரை என்ன பண்றாக வெண்ணை? உனக்கு ஒழுங்கா சொல்லித்தர தெரியலை"
எத்தனை கெட்ட வார்த்தையத்தான் நானும் பொறுக்குறது..குடும்ப கெட்ட வார்த்தையாகவே இருந்தாலும்..
"சரி போனை வை.முக்கா மணிநேரம் ஆகிப்போச்சு. இன்னொரு தடவை பார்க்கலாம்.கூமுட்டை கூமுட்டை."
வைத்து விட்டான்.
புதிதாக ஒரு சிகரட்டை பற்றவைத்துக்கொண்டேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டேன்.ஓட்டு பட்டையவே கூர்ந்து பார்த்து கொண்டிருந்தேன். நான் குத்திய ஓட்டுக்கு பக்கத்திலேயே எழுத்தால் ஆன vote இருந்தது.
"பயபுள்ளை ஒருவேளை இதை குத்த சொல்லி இருப்பானோ?"
குத்தினேன்.
ஓப்பன் ஆச்சு. ஓட்டும் கூடியது.
கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வர தொடங்கியது
"சிங்கம்டா மக்கா..நீ!"
இந்த முறை நான் போன் பண்ணினேன்.
"டேய் ஆகுதுடா.கம்ப்யூட்டர் சரியாயிருச்சு போல"
"சரி.சந்தோசம்.வய்யி."
"கண்ணா..மைனஸ் ஓட்டு எப்படிடா போடுறது?"
"வைடா தாய்லி."