எந்தப் பயணமும் போல் இல்லாமல் இந்தப் பயணத்தில் எதிர்பார்ப்புகள் கூடி இருந்தன. மஹாவின் திருமணம் மட்டும் அன்று. பதிவுலகம் வந்த பிறகான முதல் பயணம்! எழுத்து மூலமாக தேடியடைந்த நண்பர்கள் சிலரின் முகம் பார்க்கப் போகிற ஆர்வம். எல்லோரையும் மஹாவின் திருமணத்தில் ஒரு சேர பார்த்துவிடவேணும் எனும் துடிப்பு. போக, லதா சொல்லிய பொய்யில் ( ப்ரபா லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன் ) தேங்கியிருந்த உண்மை எனும் அடி மண்டி.
வீடு சேர்ந்து ஐந்து நாள் வரையில் ப்ரபா கடிதம் குறித்து எந்தப் பேச்சும் எடுக்கவில்லை லதா. அவ்வப்போது கேட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. " அதான் கிழிச்சுப் போட்டேன்னு சொல்றேன்ல" என்பாள். பாவி, கடங்காரி என்று மனசுக்குள் சொன்னாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அப்படியெல்லாம் கிழித்து போடுபவள் இல்லை. மயில் தன் இறகை உருவிப் போடும் வரையில் எத்தனை பீடி குடிப்பது நான்? லதாவிடம் மிக உயர்ந்த குணம் (??) ஒன்று உண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பாக அவளை பெருமையாக பேசிவிட்டால் போதும், ஒற்றை ஆளாக ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடிவிடுவாள். பௌலிங்க் போட்ட கையோடு விக்கெட் கீப்பராகவும் பாய்வாள். "HOW IS THAT?" என்று கதறுகிற ஃபீல்டராகவும் மாறுவாள். "இல்லை" என்று தலையாட்டுகிற அம்ப்பயராகவும் நிற்பாள்! சரி..தற்சமயம் வீடு உள்ள சூழ்நிலையில் விருந்தினர்களுக்கு எங்கு போக?
வந்தான் மகராசன் செ. சரவணக் குமார். (ஊரில் இருந்த சரவணன் என்னை காண வந்திருந்தார்) லதாவின் கணித சாஸ்த்திரம் அறிந்திருந்த நான் கட்டையை உருட்ட தயாரானேன். (லதாவிற்கு கிரிக்கெட் எனில், நமக்கு, வை ராஜா வை! - லங்கர் கட்டை!) "சவுதியில் இருக்கும் போதே லதா சொல்லிட்டா சரவனா. லதா மட்டும் இல்லைன்னா ப்ரபாவை கண்டு பிடிக்க முடியுமா? லதா மட்டும் இல்லைன்னா இது சாத்தியமா?" இப்படி, லதா மட்டும், லதா மட்டும் என்று உருட்டிய உருட்டலில்...'கேப்டன்' கிளீன் போல்ட்!
கடிதம் கைக்கு வந்து விட்டது. வாங்கிப் பார்த்த போதுதான் தெரிந்தது, அது ஆனந்த விகடனில் இருந்து ரீ-டைரெக்ட் செய்யப்பட்ட கடிதம் என்று. (ஆனந்த விகடனுக்கு எப்படி போனாள் இவள்?) சரவணனுக்கு முன்பாக கடிதம் படிக்கிற திராணி கூட இல்லாமல் இருந்தது. சரவணனுக்கு கடிதத்தை படிக்க தந்துவிட்டு, சரவணன் போன பிறகு கடிதத்தை எடுத்துக் கொண்டு தனியனானேன்.
"நான் ப்ரபா. கோயம்பத்தூர். பதிமூன்று வருடங்கள் பின்பாக நகர்ந்தால் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்" என்பது மாதிரி என்னென்னவோ எழுதி இருந்தாள் லூசு. ஆம், பெண்கள் எல்லோருமே லூசுதான். அல்லது ஆண்கள் எல்லோரையும் லூசு என்று நினைக்கிற (லூசா இருந்தா தேவலை) என்று நினைக்கிற குழந்தைகள்! அல்லது லூசுக் குழந்தைகள்!
கடிதத்தில் அழை எண் இருந்தது. உடன் தொடர்பு கொண்டேன். "ஹல்லோ" என்ற ஒற்றைக் குரலில் என் டைம் மிஷின் பின்னோக்கி பாயத் தொடங்கியது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக...பதினான்கு வருடங்களுக்கு முன்பாக...பதினைந்து வருடங்களுக்கு முன்பாக...என தட்டி, தட்டி இறங்கியும் ஏறியுமாக இருந்து கொண்டிருந்தது. (பயல்கள் மூவரையும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விட்டது. ப்ரபாவை மட்டும் நேரில் பார்த்தது இல்லை. ஓரிருமுறை போனில் குரல் கேட்டதோடு சரி. பின்பெல்லாம் கடிதம் மட்டுமே.)
இன்னாரென்று சொன்னேன். ஒரு மூணு அல்லது நாலு செக்கேன்ட் பேரமைதி அந்தப் பக்கம். அவ்வளவுதான்!
இடையில் கிடந்த பதினேழு வருடங்களையும் மடியில் கட்டிக் கொண்டு ஒரே தாண்டாக தாண்டி இந்தப் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள் ப்ரபா. ஒரு களைப்பில்லை, ஒரு சலிப்பில்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பும் அப்பாவிடம் அன்றைய பொழுதை பேசுமே குழந்தை! அவ்வழகை தாண்டி ஒரு ஒரு பிசிறில்லை!
"நானும் தேடி தேடி பார்த்தேண்டா. என்னவோ பிரச்சினைன்னு மட்டும் தெரிஞ்சுது. என்னன்னு தெரியல. அட்ரஸ்தான் இருக்கே. ஊருக்கு கிளம்பி வந்து விசாரிப்போமான்னு கூட வந்தது. அவனே தேடல. அப்புறம் நான் என்னத்துக்கு தேடணும்ன்னு நினைச்சுக்குவேன். ஆனாலும் ஒன்னோட தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு போதும் தோணியதே இல்ல மக்கா. இன்னுமொரு இருபது வருடங்கள் கழிச்சு நீ கூப்பிட்டிருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என் மன நிலை!.. கல்யாணமா? என்னைக்குடா நான் அதை பத்தியெல்லாம் யோசிச்சிருக்கேன்? எப்பவோ எழுதி இருக்கேனே இதைப் பத்தியெல்லாம். உனக்கெங்கே இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது. இந்தாதான் நீ கிடைச்சுட்டியே. உன்னை வச்சு குமாரும் கிடைச்சுருவான். இனி உங்க குழந்தைகள்தாண்டா என் குழந்தைகளும். ஐயோ..மஹா குட்டிக்கா கல்யாணம்?" என்று கெக்களி போட்டு சிரிக்கிறாள்..
"திடீர்ன்னு பார்த்தா, நாகு வந்து சொல்றா மக்கா, (நாகு- ப்ரபாவின் தோழி!) உன் கவிதை விகடன்ல வந்திருக்குன்னு. ஆஃபீஸில் இருந்து நேரா நாகு வீட்டுக்குத்தான் போனேன். விகடனை வாங்கி உன் கவிதை பார்த்தேன். இனி எப்படியும் உன்னை புடிச்சிரலாம்ன்னு நம்பிக்கை வந்திருச்சு. விகடனுக்கு போன் பண்ணி கேட்டேன். அவுங்க, அட்ரசெல்லாம் தரமுடியாது. ஒண்ணு செய்ங்க, பா.ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒட்டி விகடனுக்கு ஒரு கவரிங் லெட்டர் வச்சு அனுப்பி வைங்க. அதை நாங்க அவர் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்ன்னாங்கடா. உடனே அனுப்பிட்டேன்.அனுப்பி ரெண்டு மூணு மாசம்தான் ஆகும் மக்கா. இது இவ்வளவு வொர்க்கவுட் ஆகுமாடா?...ஐயோ நம்பவே முடியல மக்கா!"
"ஒரு ஜிம்மி வளக்குறேன் மக்கா. ஃபீமேல் டாக். இதைத்தானே யாருமே வளக்க மாட்டாங்க. ஆஃபீஸில் இருந்து வந்துக்கிட்டு இருந்தேனா. நல்ல மழை. சாக்கடையெல்லாம் ரொம்பி ஓடுது. சாக்கடைக்குள்ள இருந்து ஒரு குட்டி நாய் சத்தம். பார்த்தா இந்த ஜிம்மிடா.. குட்டியூண்டு! சாக்கடைக்கு மேல மொகத்தை வச்சுக்கிட்டு மெதந்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கு மக்கா. வண்டியை நிறுத்தி, அதை தூக்கிட்டு வீட்டுக்கு வந்தனா. அம்மா கெடந்து கத்துது. குளிப்பாட்டி, கிளிப்பாட்டிப் பார்த்தா.. ஐயோ அவ்வளவு அழகுடா. நீ பார்க்கணுமே.. இப்ப நல்லா வளர்ந்துட்டாங்க" என்று சிரித்துக் கொண்டே இருந்தாள்.
இவள் சிரிக்க சிரிக்க எனக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. பார்வை கரைந்து நீராக இறங்கும் போது இருளத்தானே செய்யும்!..
அனாதரவான நெடுஞ்சாலையில் ஒரு மைல் கல் இருப்பது போலும், அக்கல்லில் மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பது போலும், போகிற வருகிற வாகனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டவே பிறவி எடுத்தது போலும், பிறகு அச்சிறுமியே மைல் கல்லாக சமைந்தது போலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் காட்சிகள் விரியத் தொடங்கியது- விழித்திருக்கும் போதே இழுத்துப் போகுமே கனவு.. அது போல!
காலங்காலமாய், அனாதரவான எல்லா மைல் கல்லிலும் ஏதாவது ஒரு சிறுமி அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளோ?
தொடரும்...
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A