இது நம்ம ஜெஸ்வந்தி மேடம் பார்த்த வேலை. நாலும் நம்ம கூடத்தான் இருக்கு. இதை பத்தி எழுதுவதற்காக யோசிக்கிற தருணம் இப்பவே வாய்க்குது... எழுதுவதற்கு இதில் ஒண்ணுமே இல்லை போல ரொம்ப வெறிச்சோடி வருது. எப்பவும் நாம் நம்மையே நினைத்து கொண்டிருப்பதில்லை, அது போல. "ராஜா உன்னை பத்தி ஒரு கட்டுரை எழுது" என யாராவது சொன்னால் மலைப்பேனே.. அது போல.
"தலை உரலுக்குள்ள இனி தப்ப ஏலாது மாப்ள" என்று சிரிக்கிறார்கள் ஜெஸ்!... ஜெஸ், நமக்கு ரொம்ப புடிக்கும் மக்கா, அவுங்களுக்காக ஏதாவது செய்யத்தான் வேணும். அதுனால முதல்ல கடவுள எடுக்கலாம். அதுதான் ஈசி சப்ஜக்ட் . இந்த நாலுகூடவும் என்னை பொறுத்திக்கிறேன் ஜெஸ்...அவ்வளவுதான்.
கடவுள்
ரொம்ப புடிக்கும் ஜெஸ்! நட்புல ரொம்ப நம்பிக்கை இருக்கு. அது போலதான் கடவுளும்! யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிறதைத்தான் செய்வேன். நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன். இது வேணும் அது வேணுமுன்னு எப்படி நண்பர்கள்ட்ட கேட்க முடியாதோ அப்படி அவன்ட்டையும் கேட்க்கிரதில்லை. நண்பர்கள் தர்றது எதையும் மறுக்கிரதில்லை. மறுத்தால் அவன் கஷ்ட்ட படுவானே என்கிற காரணமில்லை. எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கான். எப்புடி மாட்டேன்னு சொல்ல முடியும்? அப்புடி!.. நல்லது, கெட்டது எல்லாம் கேக்குறதுக்கு அவன் தயார். அப்புறம், சொல்றதுக்கு எனக்கென்ன கஷ்ட்டம்? இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல்லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்!
பணம்
எனக்கென்னவோ இதை எழுதுற அளவுக்கு பெரிய விஷயமாய் தோணலை ஜெஸ். எனக்கிட்ட இதெல்லாம் எழுதுடான்னு கேட்டுருக்கீங்க எனக்கென்ன தோணுதோ அதுதான் எழுத முடியும். சரியா? இது எனக்கிட்ட இல்லாத போது யார்க்கிட்டயாவது கேக்குறேன். கிடச்சுருது. சில நேரம் கிடைக்காமையும் போயிருது. கிடைக்கிற வரைக்கும் அலையறேன். கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால், சில நேரம் ஆப்ட்டுக்குறேன். திட்ட மிடாத சிக்கல் இது. அல்லது, சக்தியை மீறிய சிக்கலாவும் இருக்கு. கொஞ்சம் திட்டமிடலும், செயல் படுத்தலும் இருந்தால், இந்த "சக்தியை மீறிய" என்பதை சந்திக்க உதவியாக இருக்கும்.
அழகு
சிவகங்கையில் இருந்து 13 கி.மீ. கண்டுப்பட்டி காளி கோயில். அங்கு நடந்து வருவதாக ஒரு நேர்த்தி இருந்தது. அதி காலை நாலு மணிக்கெல்லாம் நடையை கட்டினோம். நாட்டரசன் கோட்டை ரயில்வே கேட்ட கடந்ததும் ஒரு சின்ன குடிசை வீடு. சின்னதுன்னா, ரொம்ப சின்ன! குடிசை வீட்டுக்குள்ள, ஒரு என்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த அதி காலையில் சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்தார். நியுஸ் பேப்பரில் நாலைந்து சப்பாத்தி தேய்த்து கிடக்கு.சிம்மினி விளக்கொளி இருக்கு. அருகே, அந்த மூதாட்டி சுள்ளிகளை கொண்டு அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தாள். அந்த காட்சி என்னை மேற்க்கொண்டு நடக்க அனுமதிக்கவில்லை. குடிசையின் முன்னாள் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டேன். "அய்யா,கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?" என்று பேச்சை தொடங்கினேன். பேச்சு, நூல் பிடித்து, நூல் பிடித்து சப்பாத்தியில் வந்து நின்றது.
"ரெண்டு நாளாய் சப்பாத்தி வேணுமுன்னு அடம் பண்றாப்பூ" என்றார்.இருவருக்கும் பல் அறவே காணோம். வயசானதுனால செமிக்க சிரமமாகுமே என்பது போல நான் கேட்க...
"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட!
காதல்
இது அழகான சப்ஜக்ட் மக்கா! இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம்! மத்ததெல்லாம், உன்வரைக்கும் பேசீனியல்ல அது மாதிரி இதையும் பேசேன் என்று கேட்கிற ஜெஸ்... கடவுள், காசு, அழகு மாதிரி இதை பொதுவா பேச ஏலலை. அது அவ்வளவு புனிதமாக இருக்கலாம். அல்லது அந்த புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம். அதுனால... இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது. போலாம் ரைட்ஸ்ஸ்ஸ்ஸ்!
நன்றியும் அன்பும் ஜெஸ்!
அன்புடன்,
பாரா