பழம்பதி மாமாவிற்கு (அப்பாவின் சகோதரி கணவர்) 74 வயது. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பணத்திலிருந்து ஒரு நகை அடகுக்கடை வைத்தார். கடந்த 14 வருடங்களாக அந்தக் கடையே வாழ்வாக வாழ்ந்து வந்தார்.
நெத்தி நிறைய திருநூறு பூசி, செல்லமா ஒரு சந்தன தீற்றல். பத்தாததுக்கு நடுவாந்திரமா ஒரு குங்குமப்பொட்டு வைத்து ஜெகஜ்ஜோதியா m- 80 யில் கடைக்கு கிளம்பிப்போன மாமாவை முந்தைய பயணத்தில் பார்த்து வந்திருந்தேன்.
நான்கு குழந்தைகள் அவருக்கு. எல்லோரையும் செட்டில் செய்து பேரன் பேத்திகள் விரல்களைப் பிடித்தபடி மாமா நடந்து வரும் அழகு ஒரு அழகுதான்.நம் வாணியங்குடி வீட்டிற்கு எதிர்த்தாப்லதான் மாமா வீடு.
முந்தைய பயணத்தில் ஒரு நாளை இங்கு குறிக்க விருப்பமாக இருக்கிறது. அப்பா வாழ்ந்த வீடு என அம்மா மட்டும் வாணியங்குடி வீட்டிலேயே தங்கி விட்டார்கள். ஆகையால் அடிக்கடி அம்மாவைப் பார்க்க ஓடி விடுவேன். (மறக்காமல் ஒரு குவாட்டர் நெப்போலியனையும் தட்டிக்கொண்டு போவது உண்டு)
அப்படித்தான் அன்னைக்கும் போயிருந்தேன். அப்படி இப்படின்னு அம்மாட்டப் பேசிட்டே இருந்துட்டு பூ போட்ட கூடைச் சேரைத் தூக்கினேன். அதை தூக்கினேனா அம்மாவிற்கு நான் எங்க போவேன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். 'ஏண்டா மத்தியானத்துலையே' ன்னு கேட்டாங்க. 'சும்மா அப்படி காத்தாட ஒக்காந்திருக்கேன்ம்மா' ன்னுட்டு என் ஃபேவரைட் பிளேஸ்க்கு. வந்துட்டேன்.
நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ வாணியங்குடி வீட்டில் வலதும் இடதுமாக இரண்டு வேம்புகள் தலையை உரசிக் கொண்டு சும்மா கொள்ளுன்னு இருக்கும். ரெண்டும் சேர்ந்த நிழலில்தான் நாங்க நீஞ்சுறது வைக்கிறது. நாங்கன்னா நான், பெரியப்பா சித்தப்பா பசங்க, அத்தை மாமா பசங்க. இப்படி.
இப்ப எல்லோரும் அங்கிட்டு இங்கிட்டுமா கிடக்கிறோம். இப்பவும் இடது வேம்பு மட்டும் நகலாமல் அங்கனேயேதான் நிக்குது. வலது அவுட். வலது ஞாபகமாக அப்பா இறந்த பயணத்தில் ஒரு வாதா மரம் வைத்து வந்திருக்கிறேன். அதையும் நான் வலது வேம்புன்னுதான் அழைப்பேன்னு வைங்களேன்.
இப்ப என் ஃபேவரைட் பிளேஸ் உங்களால் உணர முடிகிறதுதானே. யெஸ்! இடது வேம்பு. அது சிந்தும் பால்ய நிழல். அம்மாவை பார்த்தது மாதிரியும் ஆச்சு. பால்ய நிழலில் ஒரு குவாட்டரை சாத்தியது மாதிரியும் ஆச்சு. இல்லையா?
கூடைச் சேர், சொம்புத் தண்ணி, டம்ளர் எல்லாம் செட்டாகி நிழலில் அமரும் போதுதான் கவனித்தேன் மாமா m-80 அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது.
'மதியச்சாப்பாட்டிற்கு வந்திருப்பாரா இருக்கும். பசிக்க மட்டும் இல்லைன்னா கடைய விட்டுட்டு வரமாட்டாரே மாமா' ன்னு நினைத்தபடியும் அம்மா வந்துராமன்னு நினைத்தபடியும் நெப்போலியனைத் தட்டித் திறந்தேன்.
கத்திரிக்காய் வதக்கியதையும், கொத்தவரங்காய் பொரியலையும் வெஞ்சனப் போணியில் வைத்துக் கொண்டு டால்ஃபின் போல நடந்து வந்தார்கள் அம்மா. ( அம்மாவிற்கு கால்வலி ) திறந்ததை மூடி மறைத்தபடி 'ஏம்மா?'என்றேன். 'சரி டக்குன்னு வாடா' ன்னுட்டு போய்ட்டாங்க.
ஒருபோதும் என் நெப்போலியனைப் பார்க்க அம்மாவை அனுமதித்ததில்லை. ஆனால் அம்மாவின் நெப்போலியனை அம்மாவிற்கு தெரியும் போல.
இந்த மனுஷன் வண்டி வேற நிக்குதே ( நம்ம வீட்டைத் தாண்டித்தான் இவர் கடைக்கு போற ரோடை பிடிக்கணும்) கெளம்பட்டும் ன்னு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். கதைக்காவல. வர்றது வரட்டும்ன்னு லைட்டா கொஞ்சம் போட்டுட்டு தெம்பா எந்திரிச்சு நின்னேன்.
வெள்ளையும் சள்ளையுமா மாமா வெளியில் வந்து m-80 சீட்டை ரெண்டு தட்டு தட்டிட்டு உக்காந்தார். கெளம்புடா கெளம்புடான்னு புத்தி சொல்லியது. கெளம்பி இடது வேம்பின் அடியில் நின்ற போர் பைப்பை ஸ்டார்ட் பண்ணி ஹோஸ் மூலமாக இளம் பிள்ளைகளாக நின்ற தென்னைகளுக்கும், கறிவேப்பிலை மரங்களுக்கும் (செடிதானே மரம்) நீர்பாய்ச்சத் தொடங்கினேன்.
டுபு டுபு ன்னு க்ராஸ் பண்ணிய மாமா சற்று நின்று, 'மாப்ள மத்யானத்துல தண்ணி அடிக்காதீங்க. செடிக பட்டுப் போகும்' என்றார்.
'சரிங்க மாமா' என்றாலும் மாமா யாரைச் சொல்றாருன்னு குழம்பி வந்தது.
அப்பாவுடன் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறேன். அம்மாவிற்கு தெரியும். இனி யாருக்கு நான் தண்ணி அடிக்கிற விஷயத்தில் பயப்படணும் அல்லது யோசிக்கணும்?
யோசனை என்பது நெற்றியில் பூசியிருக்கும் திருநூறு அன்ட் ஸோ அன்ட் ஸோ மூலமா வருது.? நடத்தையில் வருவதுதானே. மாமா அப்படி நடந்து காட்டினார். நான் மட்டுமில்லை. ஊரே அப்படித்தான் மாமாவைக் கண்டதும் எந்திருச்சு நிக்கும்.
ஒரு அக்கு இல்லை. ஒரு பிக்கு இல்லைன்னு வாழற ஆளுக்கு ஊர் கொடுக்கிற மரியாதையாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். நானும் அந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவன்தானே. எனக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கு?
இன்னைக்குப் பிறந்து இன்னைக்கே செத்துப் போகும் ஒரு ஈசலுக்குக் கூட தொந்திரவு நினைக்கக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டுகிற மனிதர்களின் மேல் எப்பவும் எனக்கு ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். பிறகு அது மரியாதையாகவும் பூத்து ஆடும். அந்த வரிசையில் பழம்பதி மாமாவை முதலாவதாக அடுக்குவேன்.
#
இந்த பழம்பதி மாமா எல்லாத்தையும் தொலைத்திருந்திருக்கிறார். இது எனக்கு சமீபகாகத்தான் தெரியவந்தது. கனடாவில் நிக்கிற தம்பி கண்ணன் போன் பண்ணி,
' டே நம்ம பழம்பதி மாமா கடைய கொள்ளயடிச்சிட்டாய்ங்ளாண்டா உனக்குத் தெரியுமா?' ன்னு கேட்டான்.
'என்னடா சொல்ற..எப்படா..ஏண்டா' ன்னு என்னென்னவோ கேட்டேன்.
'அது நடந்து ஆறேழு மாசம் ஆச்சு போல. நேத்து காளியப்பன் அண்ணன்ட்ட பேசும்போதுதான் சொன்னாரு. என்னண்ணே ஆறேழு மாசங்கிறீங்க. டெய்லிதானே போன் பண்றேன். ஒண்ணுமே சொல்லலையேண்ணேன்னு கேட்டதுக்கு என்னத்தடா சொல்லச்சொல்ற? நீங்க அங்கிட்டு கெடக்குறீங்க. எல்லாத்தையும் எதுக்கு கஷ்ட்டப் படுத்தணும்ன்னு விட்டதுதான். ஆயிரம் பவுனுக்கிட்ட இருக்குமாம். இப்ப ரொம்ப நெருக்கடியா இருக்குடா மாமாவுக்கு. என்ன வகையில் அவருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியலன்னு சொல்றாரு. போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்காராம். மிச்ச நேரம்லாம் நம்ம பிள்ளையார் கோயில்லயே கைலியக் கட்டிக்கிட்டு ஒரு துண்டையும் போத்திக்கிட்டு கெடக்குறாராம்டா. டெய்லி நூறு பேருக்கு மேல பதில் சொல்லிக்கிட்டு இருக்காராம். மாமாவுக்குலாம் இப்படி ஒரு சோதனை வரலாமாடா. பாவமா இருக்குடா மாமாவ நினைக்கும்போது. சிவாதேன் கெடந்து உருண்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான் போல. ( சிவா, மாமாவின் கடைசி மகன். சிவகங்கை ICICI வங்கியில் அப்ரேசராக இருக்கிறான். மூத்தவன் திருமுருகன். என் செட்டு. ஜெயவிலாசில் கண்டக்டராக இருக்கிறான். ரெண்டாவது மணிமேகலை. வாணியங்குடியிலேயே வாக்கப்பட்டிருக்கிறது. மூணாவது செல்வம். சென்னையில் ஏதோ ப்ரைவேட் கம்பனியில் இருக்கிறான்)
கண்ணன் பேசப் பேச ஐயோ.. ஐயோ.. ஐயோ.. என சொல்லிக்கொண்டிருந்தேன். ஐயோ'விற்கென தனியாக கண்கள் கலங்கும்போல. கண்களை மட்டும் கலக்கி விட்டுட்டு நம்ம வேலைகளை பாக்கப் போறது போலதானே இருக்கிறது நம்ம வேலைகளும்
ஆச்சா.
வேலையோடு வேலையாக சிவாவை அழைத்தேன். ( மாமாவை கூப்பிடறதுக்கு அவ்வளவு சக்தி இல்லை)
'அத்தான்' என்றான்
'இப்பதாண்டா தெரியும் சிவா. கண்ணன் சொன்னான்டா' ன்னு தொடங்கி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வைக்கும் போது,'சிவா உனக்கு ஒரு கதை சொல்லவா. அப்பா எனக்கு சொன்னதுடா' என்றேன்.
'சொல்லுங்க அத்தான்'
'ஒரு மன்னர் அல்லது சக்ரவர்த்தின்னு நெனைக்கிறேண்டா. நளனோ என்னவோ. அப்பா பேரோட சொல்லியிருந்தாரு இப்ப ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அவருக்கு கெட்டகாலம் தொடங்கியிருச்சாம். அதுனால ஒம்போது லெக்ஷ்மிக்களும் விடை பெற வந்திருக்காங்க. பார்ட்டி, சரிங்க போய்ட்டுவாங்க போய்ட்டுவாங்கன்னு ஒவ்வொரு லெக்ஷ்மிகளையும் உக்காந்து கொண்டே வழி அனுப்பி வைத்திருக்கிறார். கடைசியா தைரிய லக்ஷ்மி வந்தபோது எழுந்து நின்று கைகளை பிடித்துக் கொண்டு என்ன தாயீ நீங்களும் கெளம்புறீங்க. நீங்க ஒரு ஆளு மட்டும் நில்லுங்க. மத்த எட்டுப் பேர்களையும் திரும்பக் கொண்டு வர்றது என்னோட பொறுப்புன்னு சொன்னாராம். தைரியத்தை மட்டும் விட்டுறாத சிவா. சரியா. ' என்றேன்.
'சரிங்கத்தான்' என சிரித்தான். குரல் தழு தழுப்பாகவோ கரகரப்பாகவோ இருந்தது.
#
கம்ப்யூட்டர் பக்கம் வரமுடியாத வேலைகளில் இருந்தேன். வந்த போது தம்பி கண்ணனிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்து கிடந்தது.
Dear annath, hope you are doing fine. I got a call from Siva (our palampathy mama son), and he was enquired that shall we publish a letter in our friends circle and ask for help such as advice or highligt this prob. until now nothing is progressing and police are grabing money when ever they visit police station
Mama is almost mad since the people who gave the gold troubling him to retrun their part of their gold. Can you please write up small note about mama,incident and the current situation and send back to me? I will show it to siva mapla, and may be we can share with our friends in the blog. even though, if we didnt receive any help, the news may spread and may get a help from some where.
Can you please do this favour and reply back at your leisure
thanks annath
#
சிவாவை அழைத்தேன். 'என்ன மாதிரி உதவிகள் வேணும்டா சிவா' என்று கேட்டதுக்கு,'போலீஸ் ஸ்டேசனில் ரொம்ப புவர் ரெஸ்பான்ஸ்த்தான். ஏழு மாசம் முடியப்போது. 1500 கஸ்டமர்கள்த்தான் அப்பாவோட முதலீடு உழைப்பு எல்லாத்தையும் விடுங்க. பப்ளிக் ப்ராபர்ட்டிய ஒழுங்கா நம்ம செட்டில் பண்ணனும்ல. கிடைச்சதைல்லாம் வச்சு உள்ளுக்குள்ளயே உருட்டிக் கொண்டிருந்திருப்பார் போல அப்பா. லாபத்தை பிரிச்சு இடங்கிடம் வாங்கிப் போட்டிருந்தாலும் சொத்துகளை வித்தடிச்சு கொஞ்சம் சந்திக்க முடியும். இது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அத்தான். அப்பாவை இதிலிருந்து வெளியில் கொண்டுட்டு வரணும்ங்கிறது மட்டுமே தோணுது. கடைசி காலம் அத்தான். அவரை நிம்மதியா வச்சாப் போதும். அரசியல் லெவல்ல போலீஸ் உயரதிகாரிகள் லெவல்ல இந்த கேஸ் விஷயமாக பெர்சனல் இன்ட்ரெஸ்ட் எடுத்தால் நடக்கும்ன்னு தோணுதுத்தான்.
'சரி ஒண்ணு செய்யலாம் சிவா. விபரங்களை மெயில் செய். நான் கூகுள் ப்ளஸ்ன்னு ஒண்ணில் இருக்கிறேன். பெரிய உலகம் இது. அதில் அரசியல், பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஹைலைட் பண்ணப் பார்க்கலாம். ஆலோசனைகளை கேட்கலாம்' என சொன்னேன்.
#
இது என் மாமா கதை. இவருக்கு 1500 வாடிக்கையாளர்கள் எனில் அது 1500 குடும்பங்கள்தானே. என்ன தேவைகளுக்காக அவசர அவசரமாக இவரை அனுகியிருப்பார்கள். இந்த ஏழு மாதங்களில் எத்தனை குடும்பங்களின் சுப காரியங்கள் தள்ளிப் போயிற்றோ? மீட்க வரும்போது எப்பேர்ப்பட்ட மாமாவா இருந்தாலும் கைலியும் துண்டுமா பிள்ளையார் கோயிலில் கிடந்தால் பத்துமா?
இது மாப்ள சிவா கொடுத்த விபரங்கள்..
'எனது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது அவர் 74 வயதை கடந்துவிட்டார் . ஸ்ரீ காமாட்சி கார்பரேசன் என்ற நகை அடகு கடையை சிவகங்கையில் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வந்தார். கடந்த ஜனவரி 24 ந் தேதி கடையின் பூட்டு மற்றும் பாதுகாப்பு இயந்திரப் பெட்டகம் உடைக்கப் பெற்று வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மொத்த எடை 6891.100 கிராம். அதாவது சுமார் 7 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் 2. 00 கோடி. காவல்துறையில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சுமார் 1500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தகப்பனாரின் மேல் இருந்த நம்பிக்கையாலும் அவரது நேர்மையான செயலாலும் பொறுமை காத்து வந்த வாடிக்கையாளர்கள் மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது தினமும் எனது தந்தையாரை சந்தித்து நகைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு நூற்றுக் கணக்கானோர் வற்புறுத்துகின்றனர். இதனால் எனது தகப்பனார் மிகவும் மனம் உடைந்த நிலையிலும் வயது முதிர்ந்த காரணத்தினாலும் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியாமல் கடவுளையும் காவல் துறையையும் மட்டுமே முழுமையாக நம்பி நல்ல செய்தியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.'
#
மக்களே,
எனக்கும் ஒண்ணும் புரியலை. எனக்கு என் மாமா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார். எதையாவது நகட்டி மாமாவையும் கண்ணுக்கு தெரியாத 1500 குடும்பங்களையும் இதிலிருந்து விடுபட வைக்க முடிஞ்சுட்டா நான் எம்ஜியார்தான். வேறு வழியில்லாமல் உங்கட்ட கொண்டுட்டு வர்றேன். லேட்டஸ்ட்டா, போலீஸ் மெத்தனத்தை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் நம் ஊர்க்காரர்கள் பஸ் மறியலில் இறங்கியதாக கேள்விப்பட்டேன்.
அரசியலில், பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் இருக்கிற நண்பர்கள் இந்த விஷயத்தை ஃபிளாஷ் பண்ணினால், அழுத்தம் கூடி எங்கயோ இருக்கிற புரையோடிப் போயிருக்கிற சிவகங்கை போலீஸ் ஸ்டேசனின் பல் சக்கரங்கள் இயங்கலாம்.இயங்கி 1501 குடும்பங்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். அப்புறம் கடவுள் விட்ட வழி.
#
இது என் மொபைல் நம்பர் 00966502089705
மெயில் I.D rajaram.b.krishnan@gmail.com
சிவா மொபைல் நம்பர் 9865702140