Thursday, December 31, 2009

திரிசங்கு


(Picture by CC licence, Thanks indi.ca)

ங்கிருந்துதான்
போனோம்.

ங்கு இருந்தோம்
இல்லாமல்.

பிறகு,
இங்கு கொஞ்சம் வந்தோம்
அங்கு கொஞ்சம் விட்டு.

ங்கும்
இல்லாமல் இருக்கிறோம்.

னி,
எங்கு போக
என் செகத்தீரே?

Tuesday, December 29, 2009

புரை ஏறும் மனிதர்கள்-நான்கு

குரல் வழி சிற்பங்கள்-தொடர்ச்சி..

ராகவன்...

ராகவனுக்கு அப்புறம் மூன்று புள்ளிகள் வைத்திருக்கிறேன் கவனித்தீர்களா? ராகவனுக்கு தெரியும் அந்த மூன்று புள்ளிகளின் அர்த்தமும்.

போகட்டும்,

காந்தி பெரியம்மா என்கிற மனுஷிதான் எங்கள் எல்லோருக்கும் ரோல் மாடல். அன்பை எப்படி கொடுப்பது எப்படி வாங்குவது என எந்த திட்டமிடலும் அற்று, எந்த பிரதி பலன்களும் கருதாது தன்னிடமுள்ள பூ கொண்டு தேன் தயாரித்தார்கள் பெரியம்மா. தேனை, தேனீக்கு தந்தார்கள். தேனீ கூடு கட்டியது. தேன் சொரிந்தது. எட்டும்,அஞ்சும்,மூன்றும் பதினாறு குழைந்தைகள் நாங்கள். பெரியப்பா,அப்பா,சித்தப்பா என மூன்று அப்பாக்கள். வேறு வேறு அம்மாக்களின் கருவறை.

தீப்பெட்டிக்குள் அடைபட்ட குச்சி போல ஒரே மாதிரியாக உரசலில் பற்றி எறியும் அன்பிற்கு அந்த தேனம்மைதான் காரணம். "ராஜா செல்லம்" என்கிற குரலையும் ராகவனின், "எப்படி இருக்கீங்க பாரா?" என்கிற குரலையும் ஒன்றாகவே உணர வாய்க்கிறது என்னால். ஒரு மனுஷன்தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம்!

தண்டோரா

சேகர் அத்தானிடம் தண்ணி அடித்து சந்தோசமாக சிரித்தது போல் இப்பவரையில் வேறு மனிதர்கள் வாய்க்கவில்லை எனக்கு. சற்றேறக்குறைய சேகர் அத்தானிடம் சேர்க்கிறது இவர் குரல். தண்ணியின் ஆளுமையில் ப்ரிய மனிதர்களிடம் பேசுகிற தேவையும், தன்னையும் இளக்க தேவையான இவரின் தேடல், இவரிடமிருந்து அவரிடம் சேர்க்கிறது என்னை.

அப்பிரவாக பிடியில் சொக்கியபடி "மாப்ள" என்றோ "மாப்ள வெண்ணை" என்றோ அத்தான் அழைப்பது வழக்கம். போலவே,"தலைவரே" எனவும் "சொல்லுங்கண்ணே" என்கிற தடுமாற்றம் கூட காரணமாக இருக்கலாம். போக, எந்த பிடிமானங்களும் அற்று மிதப்பது போலான ஒரு அனுபவத்தை இவர் குரல் எழுதிக்கொண்டே போகும். புல்ஸ்டாப், கமா, ஆச்சர்யக் குறி, கேள்விக்குறி, இதெல்லாம் இல்லாது எழுதிக்கொண்டு போவது எவ்வளவு வசதியோ அவ்வளவு வசதியாக இருக்கிறது இவர் குரல். இப்போ சேகர் அத்தான் இல்லை. இவர் இருக்கிறார்.."சேகர் அத்தான் திரும்ப கிடைச்சாச்சு அக்கா" வென சுமதி அக்காவின் முன்பாக இவரை பார்க்கிற போது, கொண்டு போய் நிறுத்தவேணும். அக்கா கண் கலங்குவாள். கலங்கட்டும். கலங்கத்தானே கண்கள்.

அகநாழிகை வாசு

"எலக்கட்டு வந்துருச்சான்னு பாருங்கப்பா. தென்னங்குருத்து வெட்ட யார்ரா போயிருக்கா?சமையக்கட்டுல ஒரு ஆளு நில்லுங்கடா. பக்கிகளா சத்தம் போடாம வெளாடுங்க" என்று ஒரு கல்யாண மண்டபம் முழுக்க நிறைந்திருப்பார் ஞானமாமா. யாரும் அவரை கூப்பிடவேணாம். ஒரு குறையான பேச்சு உதிராது. முகூர்த்தக்கால் நட்டது தொட்டு வந்து வந்து பார்த்து போய் கொண்டிருப்பார். ஒவ்வொரு வருகையிலும் அக்கல்யானம் ஒரு அடி நகர்ந்திருக்கும். அதே ஞான மாமாதான் தன் ரெண்டு மகளுக்கும்,ரெண்டு மகனுக்கும் திருமணம் நடத்தினார். முழுக்க வேறு முகங்கள் வைத்திருந்தார் அது சமயம்."பார்த்து செய்ங்கடா எல்லாத்தையும் எனகிட்ட கேட்டுகிட்டு" என்று சிரித்தபடி அமர்ந்திருப்பார். நாங்கள் பத்து நூறு பேர் அவர் ஒரு ஆளுக்கு ஈடாகாது.

"சொல்லுங்க ராஜாராம்" என்ற வாசுவின் குரலை நான் முதன் முதலாக கேட்டபோது நான் சவுதியில் இருந்தேன். அவர் சென்னையில், எனக்கு மிகப்பிடித்த இடத்தில் இருந்தார். இருவருமாக இந்த ஞான மாமாவிடம் சேர்ந்தோம்.

அன்பு என்பது வார்த்தையல்ல அது ஒரு செயல் என்றுணர்த்துகிற ஞான மாமாவிடம்!

ரௌத்திரன்

இங்குதான் இருக்கிறார். ஆனால் இப்ப வரைக்கும் குரலில்தான் பார்த்து கொண்டிருக்கிறோம். "ராஜாராம் சார்" என்கிற ஒரு தூரமான குரலை,பேசி பேசி நெருக்கமாக மாற்றியது இவராகத்தான் இருக்கும். சார் என்பது ஒரு பெயர் மாதிரித்தான் போல என்றுணர்ந்த பிறகு இப்பல்லாம் நானும் கூட "வானம்பாடிகள் பாலா சார்" என்றழைக்க பழகி கொண்டேன். ஏனெனில் இந்த சார் என்பதில் அவ்வளவு உவப்பு இருந்ததில்லை எனக்கு எப்பவும். கல்வி எவ்வளவு உவப்பு இல்லையோ அவ்வளவு.

ஒரு கவிதை எழுதுபவன் அவன் குரலில் இருந்துதான் எடுக்கிறானோ அவன் கவிதையை என்று உணர வாய்க்கிறது இவர் குரல் எப்பவும்..என்னென்னவோ பேசி கொண்டு இருப்போம். எங்கே தொடங்கினோம்,எங்கே முடிப்பது என்றறியாமல். இரவு மூன்று மணி வரையில்,எழுகடை வாசலில் அமர்ந்தபடி தண்ணி அடித்து,உணவருந்தி,வெத்தலை பாக்கெல்லாம் போட்ட பிறகெல்லாம் கூட வீடு நகர எது அனுமதிக்கவில்லை என்பதை அறியோம் நானும் சூரி அண்ணனும். எனக்கென்னவோ சூரி அண்ணன்தான் ராஜேசோ என்றிருக்கு.

செ.சரவணகுமார்

செ புள்ளி சரவணக்குமாரை, சரவனா என்றழைக்க விரும்பியதற்கு என்ன பெரிய காரணங்கள் இருந்து விட முடியும். எழுத்தும் குரலும்தானே! போக இவரிடம் இன்னொரு நெருக்கமும் உண்டு எனக்கு. சாதிக் என்கிற என் நண்பனுக்கு அப்போ யாரும் இல்லை. யாரும் என்றால் அப்பா அம்மா முதற்கொண்டு. எங்காவது பற்றி கொள்ள மாட்டோமா என்றிருந்தவனுக்கு நான் கிடைத்திருந்தேன். வீட்டின் சோற்று பானை அறியாது நண்பர்களை கவ்வி கொண்டு போகிற பூனை நான். இவனோ சதா நேரமும் பசியில் இருப்பவன். திடீரென்று ஒரு நாள் வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான். எவ்வளவோ வற்புறுத்தியும் சாப்பிடுவதில்லை. இப்போ காரும் பங்களாவுமாக மலேசியாவில் இருக்கிறான். போன என் பயணத்தில் அவனும் வந்திருந்தான். மனைவி குழந்தைகளுடன் வீடு வந்திருந்தவன் எல்லோரையும் சாப்பிட பண்ணி இவன் சாப்பிடவில்லை.

என்னவோ இனம் புரியாத குற்ற உணர்ச்சி மட்டும் இருக்கிறது பரஸ்பரம், பழைய சாதிக்கிடமும் புதிய சரவனாவிடமும். ஏனெனில் எத்தனையோ முறை என்னை பார்க்க முயன்று, கடைசியாக டாக்ஸ்யில் பயணபட்டவரை திருப்பி அனுப்ப நேரிட்டது. இயலாததற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனாலும்,"என்னண்ணே" என்கிற குரலில் ஒடுங்கி போகிறேன் புதிய சரவனனிடமும் பழைய சாதிக்கிடமும்.

இன்னும் கூட சிலர் உண்டு. பார்க்கலாம் அடுத்த பதிவில்.

புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3

Sunday, December 27, 2009

சாயமழை


(Picture by CC licence, Thanks Greig)


ழை கசறி கொண்டிருந்தது.

சுடுகாட்டு கொட்டகையில்
ஒதுங்கி இருந்தான் மேய்ப்பன்.

டைவாயில் நுரை பறிய
ஊறிய புற்களை தின்றுகொண்டே
வால்களில் மழையையும்
விரட்டிக் கொண்டிருந்தன
எருமைகள்.

செவ்வந்தி பூ
பொதிந்து கிடந்த
பிளாஸ்டிக் பையிலிருந்து
ஒட்டாமல் இறங்கிகொண்டிருந்தது
சாயம் பாரித்த மழை.

ன்னவோ மேய்ப்பனுக்கு
நினைவு வந்தது.
நேற்றிரவு மனைவிமேல் வீசிய
முதலாளி வாசனை.

தை எதையும் அறியாது
எருமையின் கொம்பில்
வந்தமர்ந்தது
நனைந்த தேன் சிட்டொன்று.


Thursday, December 24, 2009

புரை ஏறும் மனிதர்கள் - மூன்று

"விதைல்லாம் எழுதி பேமஸ் ஆயிட்டியாமேடா? சித்தப்பா வந்து சொன்னுச்சு"என்று சமீபமாய் அம்மா, அழை பேசும்போது விசாரித்தாள். குடும்ப விஷயங்கள் எவ்வளவோ பேசினோம். ஆனால் அம்மா கேட்ட இந்த கேள்வி மட்டும் சுழன்று கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் முன் அம்மாவை அப்பா கேலி பேசும்போது அம்மா, காதோரத்தில் சுருண்டு தொங்கும் முடியை காது மடல் பின் புறமாக ஒதுக்கியபடி, புன்முறுவலுடன் உள் விரைவது நினைவு வந்தது. அந்த அம்மா போல இருக்க விரும்பினேன், அத்தருணம்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் குரல்தான் மக்கா, முன்ன பின்ன நகர்த்தும் ஆதார சுருதி. அம்மா, மனைவி, மகள், மகன், சகோதரிகள் அழைக்கிற குரல் அடையாளங்கள்தான் அன்றைய பொழுதின் வெளிச்சம் அல்லது இருட்டு.

ற்சமயம் குடும்பம் போலவே ஆகிப் போன நண்பர்களும் வலை உலக நண்பர்களும் உண்டு. அப்படி குரல்கள் மூலம் தேடி அடையும் நண்பர்கள் குறித்து பேச விருப்பம் இப்பதிவில்.

குரல் வழி சிற்பங்கள்

குமார்ஜி, தெய்வா, சுந்தரா

"ச்ச இடம் தெரியாமல் எடுத்த இடம் தெரியாமல்..." என்று லதாதான் அடிக்கடி என்னை திட்டிக்கொண்டே இருப்பாள். பொருள்களை போன்றே நான் மனிதர்களையும் தொலைத்தது உண்டு. மிக நெருக்கமாய் இருந்த நண்பர்களை, காலம் சுழட்டி எறிந்த ஒரு திருப்பத்தில் தொலைக்க நேரிட்டது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அவர்களை தேட இயலவில்லை. அவர்களும் கிடைத்தார்கள் என நிகழ வில்லை.

ளம் தொடங்கி தொலைத்த கவிதைகளை எல்லாம் நினைவு வழியாக மீட்டெடுத்து இதில் பதிய தொடங்கிய சில காலங்களில் சற்றும் எதிர பாராது மூன்று மனிதக் கவிதைகள் கை அடைந்தது. முன்பு கால திருப்பத்தில் தொலைத்ததாக சொன்னேனே அந்த நாலில் மூன்று..! மணிபர்சை தேடிக்கொண்டிருக்கிற போது முன்பு எப்பவோ தொலைத்த பேனா கிடைக்குமே அது போல! இன்னும் ஒரு கவிதை பாக்கி. ப்ரபா என்கிற பெண் கவிதை.

ப்ரபாவையும் தேட போவதில்லை. தேடியா கிடைத்தார்கள் இந்த மூன்று பேரும்? வழக்கம் போல தேவைக்கு தீப்பெட்டியை தேடினால் போதும், தொலைத்த பென்டார்ச் கிடைத்தாலும் கிடைக்கும். பார்க்கலாம்..

ப்படி கிடைத்த மூன்று பேர்தான் இந்த குமார்ஜி, தெய்வா, சுந்தரா.

குமார்ஜி

கிடைத்த குஷியில், "ஏலே ஒரு கடிதம் எழுதுலே.." என்று கேட்ட குமார்ஜியின் குரலில் பதினைந்து வருடமாய் கேட்க்காத மூப்பு தெரிய காணோம். எங்கு தொலைத்தேனோ அங்கிருந்தே எடுத்துதருகிறான் அவன் குரலை. கீதாஉபதேசம் போல..! கைக்குழந்தையாய் இருந்த குழந்தை குட்டி எல்லாம் கல்லூரிக்கு நடக்கிறார்கள் என்று அவன் குரலில் கேட்கிற போது "அடச்சே நரை கூடி போச்சேடா நமக்கும்" என்று உணர வாய்க்கிறது. அதே வெள்ளந்தியான மனசையும், குரலையும் அதே குரல்வழியாக அனுப்பி தருவதை பெறும் போது, என்ன பெரிய பதினைந்து வருடங்கள் என்று தோனுகிறது.

தெய்வா

ண்பர்கள் குடும்பத்தில் யார் பிறந்த நாளையும் மறப்பதில்லை இவன். மனைவி லக்ஷ்மியை கொண்டு அழகழகு வாழ்த்து அட்டைகளை வரைய வைத்து வீடு அனுப்பி தருவான். முதல் நாளோ, சரியாய் அன்றோ கை அடையும் வாழ்த்து அட்டைகள்! பதினைந்து வருடங்களுக்கு அப்புறமும் தேதிகளை நினைவில் வைத்திருக்கிறான். வாழ்த்து அட்டைகள் குறித்து தற்சமயம் இவனிடம் விசாரித்தேன். "இல்லைடா..எல்லாம் இப்ப போன் விசாரிப்புகளோடு முடிந்து போகிறது" என்றான். மழுக்கென, எதுவோ முறிந்தது போல் உணர்ந்தேன். எல்லா முறிவுகளையுமா தேடி பார்க்க தைரியம் வருகிறது?

சுந்தரா

புகைப்படங்கள் வாயிலாக இவனை பார்க்கவும் வாய்க்கிறது, தளங்களில். குரலையும், ஞாபக திறன்களையும் அப்படியே வைக்க தெரிந்த இவனால், தலை முடியை பத்திர படுத்த இயலாமல் போய் விட்டது போல. போகட்டும்டா சுந்தரா. நீ ஒரு நாள், கை மறதியாய் வைத்த டி.வி. ரிமோட்டை தேடு. ஒருவேளை தலை முடிகள் கிடைத்தாலும் கிடைக்கும். யாராவது ஒரு ஆள் வேணும்தானே... தொலைந்த பதினைந்து வருடங்களை காட்டித்தர.

நேசமித்திரன்

"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட.." என்கிற பாடலை இன்று நான் கேட்க்கிறபோதும் கண் கிறங்கி இன்னொரு உலகம் நகர்வது உண்டு. அங்குதான் நான் பிராயமாய் இருந்தேன். பெல்ஸ், ஸ்டெப்கட்டிங், அரும்புமீசை, மாமா என்றழைக்கிற அவளின் குரலுக்காக பைத்தியம் பிடித்து அலைந்த மனிதனென. அப்படியேயான அன்பும், உயிர் சுண்டலும் நேசன் அழைக்கும் "என்னண்ணே" என்கிற குரலில் கிடைக்கிறது எனக்கு.

தென்னைகள் சூழ்ந்த ஆற்றங்கரையோரத்து பழைய கோவில் ஒன்றிற்கு கை பிடித்தழைத்து கொண்டு செல்கிறது அது. தேங்காய் சாதமும் துவையலும் தருகிறது. தேங்காய் சாதத்தின் ருசி எனக்கு அங்கிருந்து கிடைத்ததே. துவையலை பாம்பு போல உருட்டி "பாதி பாம்பு உனக்கு பாதி பாம்பு எனக்கு" என்று கெக்கலித்து சிரித்து சாப்பிட்ட காலங்களோடு பொருத்துகிறது. ஆண் உணர்வு தாண்டி, குரல் செதுக்கும் சிற்ப்பங்களுக்கு கேள்வி, கேட்பாடு இல்லைதானே? ஒருவேளை இவன் கவிதைகள் என்னை எடுத்து சென்று அந்தரத்தில் விட்டு அழகு பார்க்கும் கோலம், காரணமோ என்னவோ?

ன்னும் சிலர் உண்டு அவர்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு
புரை ஏறும் மனிதர்கள்–ஒன்று

Tuesday, December 22, 2009

அவள்


(Picture by CC licence, Thanks Bradley )

தொல் பொருள்.
ஆராய விரயம்.
ஆயினும் செய்நேர்த்தி.

ட்டுச்சோறில்
புளிச்சாறு பிரியாணி.

யணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.

பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.

Sunday, December 20, 2009

ரிசல்ட்


(Picture by CC licence, thanks Tetsuro)

ஒன்று

ரி எண்ணையில் தொட்டு
வெறும் நம்பர் நம்பராக எழுதியிருந்தது
ஆஞ்சேநேயர் கோயில்
கல்மண்டபத்தில்.

பார்த்துக்கொண்டு
சும்மா போக மனசு வரவில்லை.

ம்பர்களைவிட
பிஞ்சு விரல்களை.

க்கரி எண்ணெய் தொட்டு
கடவுளாகி எழுதினேன்.

"ல்லோரும் பாஸ்"

ரெண்டு

ஜாதகம் பார்த்துட்டு
லெட்டர் போடுறோம் என்று
போனார்கள் வந்தவர்கள்.

ண்ணாடி பார்த்தபடி
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும்.

மூன்று

ரிசோதனையில்
பாசிட்டிவ் என்றார்கள்.
குழந்தையின் வாழ்வு
நெகட்டிவ் ஆனது.

Friday, December 18, 2009

விருது - சும்மா இல்லை




"ந்த நேரமும் மருந்தடிச்ச கொய்யா நாற்று போல திரிகிறானே"என்று பார்த்து கொண்டிருந்த அறை நண்பர்களுக்கு இந்த மாதிரியான விருதுதான் பதிலாகிறது. அறை நண்பர்கள் மலையாளிகள். தமிழ் வாசிக்க தெரியாத காரணம் கொண்டு, "எங்க அசோசியசனில் இருந்து கிடைச்ச அவார்டு" என்று காட்டிக்கொள்ள இதை தவிர வேறு வழியும் கிடைக்கவில்லை எனக்கு.

டம் பார்த்து பாகம் குறிக்க இது போதுமானதாகிறது இவர்களுக்கு. காலை எழுந்து கக்கூஸ் போகிற வழியில் இன்னும் விஷ் மட்டும்தான் பண்ணவில்லை. காரணம், ஸ்லைடு ஸ்லைடாக மாறும் நம் "அசோசியசேன் அவார்டுதான்!"

யாரையும் பாதிக்காத சிறு,சிறு பொய்கள்தான் எவ்வளவு உற்சாகமானது!

பொய் என்பது நான் பேசியது. உண்மையில் எவ்வளவு அர்த்தங்கள் நிரம்பியது இந்த அவார்டுகள்! அன்பை பிதுக்கி எறிய தெரியாமல்தானே இப்படி பகிர முயல்கிறோம்...

ந்த விருதை எனக்கு வழங்கியவர்கள் சரவணாவும், மலிக்காவும்.

முதலில் இவர்களை பார்போம்..

செ.சரவணகுமார்


வருக்கு வலை உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பது என் கணிப்பு. நல்ல வாசிப்பனுபவத்தை எதிரொலிக்கிறது இவரின் எழுத்துக்கள். "அப்படியா?" என்கிற கேள்வியோடு உள்ளே ஒரு நடை போயிட்டு வாங்க.

வந்து சொல்வீர்கள்"டேவுலே.. ராஜா மக்கா!"என.

மலிக்கா

இவர்களை மிக சிலவே வாசித்திருக்கிறேன். என் நேரமின்மை ஒரு காரணம். இவர்களை எங்கனையோ நான் தைச்சிருக்க வேணும். அதுகொண்டு, "பிடிச்சிருக்கு மக்கா. பிடியுங்கள்" என்று துணிந்திருப்பார்கள் போல. பத்திரபடுத்த வேணும் போலான அன்பு. நேரம் வாய்க்கிற போது போக வேண்டிய என் வீடு.

எறும்பூர்வது போல ஊரி, பின்னூட்டம் வழியாக நிறைய தளங்களை அறிமுக படுத்தி கொண்டேன். முன்பே, அவர்கள் ஜாம்பாவான்கள். எனக்கு புதுசாக இருக்கலாம். அவர்களுடன் இந்த விருதை பகிரலாம் மக்களே..

ராகவன்

எழுத்திலும்,பேச்சிலும் அன்பை மட்டுமே சுரக்கும் ராகவனுக்கு.

மோகன் குமார்

திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு.

ஜெனோவா

இயல்பு பாஸ்..இயல்பு!.

முரளிகுமார் பத்மநாபன்

மனசின் தாழ்வாரத்தை ஒரு கவிதை விளிப்பில் திறக்கிறார். போக, "மகாப்பா" என வேறு விளிக்கிறார். கவிதையையும், மனிதத்தையும் ஆத்மார்த்தமாக அனுகும் அவருக்கு ஒன்னு தரவில்லை எனில்,"என்னடா அப்பா நீ?"எனலாம் மகா.


பூங்குன்றன்

பக்கத்து வீட்டு மனிதர் மாதிரியான பரிச்சியமான எழுத்து. கூப்பிடவே வேணாம். "இந்தா வந்துட்டேன்ப்பு" என்று சிரிக்கிற மனிதன். கொஞ்சுங்களேன்.."குன்றா" என!

வினோத் கெளதம்

எதை சொன்னாலும் நறுக்கு தெறிக்கும் வினோத்திடம். பாருங்கள் தெரியும்.

சுசி

தளம் போய் பாருங்கள். அதகளம் பண்ணுகிறார்கள். பார்த்துட்டு வந்து, "ஏண்டா வெண்ணை முன்னாலேயே சொல்லலை?" என கேட்க்க கூடாது.

அனுராதா-தோழி

சமீபமாக தளம் போய் பிரமித்து போயிருக்கிறேன். நீஞ்ச தெரிஞ்சால், மகனே உன் சமர்த்து...காட்டாறு!


*********************************************************************************

போக, நிறைய பின்னூட்டம் வழியென ஊரி ஊரி பிடிச்சு வச்சிருக்கேன் மக்கா. எல்லோரையும் நானே எடுத்துக்கிட்டா "தூத்தெறி" என தெறிப்பீர்கள். அதனால் ஜகா வாங்கலாம்.

எல்லோருக்கும் பிதுக்கி எறிங்க மக்கா-அன்பை!

Wednesday, December 16, 2009

கவிதையும் பின்னூட்டமும்


(Picture by CC licence, thanks Sara Alfred)

"சி பிறந்த வீட்ல வாங்குன
பிளாஸ்க் ஒடைஞ்சு போச்சுங்க"

"ரவால்லை,வேறு வாங்கிக்கலாம்"

"வாசலில் வச்சுட்டு போன
தங்க அரளி பூத்திருக்குப்பா"

"ரவால்லை,வேறு பூத்துக்கலாம்"

பிளாஸ்க் உடைவதையும்
தங்க அரளி பூப்பதையும்
ஒரே கவிதையாய்
எழுதுபவளுக்கு...

வேறு என்ன பின்னூட்டம் போட?

Monday, December 14, 2009

பசி விருந்து


(Picture by CC licence, thanks sashafatcat)

னைவி குழந்தைகளுடன்
அமர்ந்து சாப்பிட்டு
கொண்டிருக்கிறீர்கள்.

ந்து விடுகிறேன் நான்.

சாப்பிட சொல்லாமல்
இருக்க முடியாது உங்களால்.

சொன்னதும் அமரவும்
முடியாது என்னால்.

ராத விருந்திற்க்கென
சோறுக்கும் குழம்பிற்கும்
கொல்லையில் ஓடும் குழந்தைகள்...

ன் வீட்டிலும் உண்டு.

********************************************************

சாப்பிடுடா எனவும்
எங்க வீட்டிலெல்லாம் சாப்பிடுவீங்களா?
எனவும் அடுத்தடுத்து
கேட்கிறாள் பெரியம்மா.

தில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு.

Thursday, December 10, 2009

கருவேல நிழல்-திரைக்கு பின்னால்



11-06-2009-யில் தளம் தொடங்கியது. 11-12-2009-யில் கருவேலநிழல் முதல் தொகுப்பு வெளியாகிறது. சரியாய் ஆறு மாதம் அதே தேதி. நம்ப இயலாமல் வருகிறது. நண்பர் மோகன் குமார் ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டார், "இந்த 2009-ன் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நிகழும், இவ்வளவு நண்பர்களை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று நினைத்திருப்பீர்களா?" என்று.

எவ்வளவு சத்தியமான வார்த்தை!

கணையாழியில், ஆனந்த விகடனில் ஒரு கவிதை பிரசுரமானால் போதும். அப்பா, அந்த புத்தகத்தை ஒரு குழந்தையை போல இடுக்கி கொள்வார். உறவினர்கள் வீடெல்லாம் போய் திரும்பும் குழந்தை. ஒரு வாரம், பத்து நாள் வரையில் புத்தகத்தை திருப்பமாட்டார். திருப்பும் போது பத்து நூறு வருடம் வாழ்ந்தது போல் தளர்ந்திருக்கும், முன்பு பச்சை வாடை வீசும் குழந்தையாய் இருந்த புத்தகம். பச்சை வாசனை மறைந்து, அப்பா வாசனை, உறவுகள் வாசனை வரையில் புத்தகத்தின் பக்கங்களில் உணர வாய்க்கும்.

இன்று ஒரு முழு கவிதை தொகுப்பு! அப்பாவை காணோம்.

"எதையாவது இழந்து தாண்டா எதையாவது பெற முடியும்" என்று அப்பாதான் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார். அந்த அப்பாவிற்குத்தான் இந்த முதல் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அப்பாவை இழந்து பெற்ற முதல் தொகுப்பை.

அப்பா மாதிரி நிறைய மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு கூறவே இப்பதிவு.

"டேய் பழசெல்லாம் நினைவு படுத்தி எழுது. உனக்கு ஒரு பிளாக் திறக்கலாம்" என்று தொடங்கினான் கண்ணன்.

எழுதி அனுப்பிய முதல் கவிதையை பார்த்த நண்பர், " ரொம்ப நல்லா இருக்குங்க. பின்னால தொகுப்பாய் வர கூட வாய்ப்பிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்" என்று நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் வாய் வைத்தார். என் அண்ணன் மகள் கவிதாவும், நண்பர் அ.மு.செய்தும், "தொகுப்பு, தொகுப்பு" என்று தொண தொணத்து கொண்டு இருந்தார்கள். இந்த சமயத்தில் அவர்களையும் நினைத்து கொள்ள பிடிச்சிருக்கு. கவிதா என்ற தமிழ் என்ற உதிரா, மற்றும் என் செய்யது, இனி, தூங்குவீர்கள்தானே?

"அழுத்தமான கவிதை.பாராட்டுக்கள்!" என்று முதல் பின்னூட்டத்தை குழைத்து ஊட்டினார், கோவி.கண்ணன் சார்! கவனியுங்கள் அவர் வாழ்த்துக்கள் என்று சொல்லவில்லை. பாராட்டுகள் என்றார்!. அது ஒருவேளை நண்பருக்கும் கண்ணனுக்கும் பிடித்து பாரா-ட்டிவிட்டார்கள் போல..

இப்படியாக தத்தி, தத்தி போய் கொண்டிருந்த தளத்தின் ஓட்டத்தில் ஒருநாள் "நீங்கள் சிவகங்கை பா.ராஜாராமா?" என்று புயல் போல் நுழைந்தான் என் சுந்தரா என்ற உங்கள் ஜியோவ்ராம் சுந்தர். அன்று ஒரு நாள் மட்டும் கிட்ட தட்ட பதினைந்து பின்தொடர்பாளர்கள் சேர்ந்தார்கள். "எங்கிட்டு கிடக்கிறான்களோ" என்று நினைத்து கொண்டிருந்த பழைய உயிர் நண்பர்கள் மூன்று பேர், ஒரே நாளில் கிடைத்தார்கள்! உசும்பி உட்க்கார்ந்த மறக்க முடியாத நாள் அது!

சிறுக சிறுக பேச்சும், அரவமும், சிரிப்பும், சந்தோசமுமாக என் வீடு நிறைய தொடங்கியது. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ஒரு மனிதர்கள் எனவே உள் வாங்குகிறேன் எப்பவும். அப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் சேகரித்திருக்கிறேன் இப்போது!

பின்னூட்டமிட்டது ஒரு 10% மனிதர்கள் என அனுமானிக்கலாமா? என்று அறுதியிடும் இணையம் சம்பந்த பட்ட பார்வை என்னிடம் இல்லை. ஆனால்..

"எத்தனையோ ஆயிரம் கண்கள் என் கவிதையை வாசித்திருக்கும் என்றும் எத்தனையோ ஆயிரம் மனங்கள் என் கவிதையில் இடறி இருக்கும்" எனவும் நினைத்து கொள்ள பிடித்திருக்கிறது.

"ஒன்னுக்கு பத்தாக நினைத்து கொள்வதே இந்த பயலுக்கு பொழைப்பா போச்சு" என்று குறுக்கிடுகிற உங்கள் மன ஓட்டம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. எனினும், எனக்கு பிடித்த மாதிரி நினைத்து கொள்ளும் என மன ஓட்டத்தை பகிரத்தானே வேணும்.

பாருங்கள் பேச்சு சுவராஸ்யத்தில் நூலை விட்டு விட்டேன். ஆங்..இப்படியாக போய் கொண்டிருந்த ஒரு நிறை நாளில், உயிரோடை லாவண்யா ஒரு மின் மடல் பண்ணுகிறார்கள்,

"உங்கள் கவிதைகளை தொகுக்க விருப்பமா பா.ரா.?" என்று. நம்ப முடியாத திருப்பம் அது.

(கட்டு கட்டாக எழதிய கத்தைகளை" தேர்வு பெற்றால்..எங்கள் பதிப்பக செலவிலேயே தொகுப்பு வரும்" என்று விளம்பரம் செய்த சிந்து அறக்கட்டளை(என நினைவு)க்கு அனுப்பிய முயற்சியும்,.. பிறகு தெரிந்த ஒரு பதிப்பகத்தில் "பத்தாயிரம் இருந்தால் அச்சு கோர்த்துருவோம்" வார்த்தையை கேட்டு தொகுப்பு கனவை குழி தோண்டி புதைத்து, சம்மணம் கூட்டி மேலே உட்கார்ந்து கொண்டதும் நினைவாடுகிறது...இத்தருணத்தில்.)

லாவண்யாவிடம், "சரி" சொல்லி, நண்பர்களுக்கு அந்த மெயிலை பார்வர்ட் பண்ணி, இருவரும் தயார் ஆவதற்குள் லாவண்யாவே தளம் நுழைந்து, கவிதைகளை வாரி சுருட்டி கொண்டு போகிறார்கள்.

வீட்ல எந்த ஒரு நல்லது, கெட்டது என்றாலும் கௌரி, கவிதா, சீதா என்ற எதிர் வீட்டு மூன்று மருமகள்களும் இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள். "எதுக்குண்ணே சமையக்காரருக்கு கொண்டு போயி காசு கொடுக்கிறீக" என்று உரிமையாய் கடிவார்கள்.

அவர்களை பார்த்தது போல் இருந்தது சகோதரி லாவண்யா வருகை. லாவண்யா கொண்டு போன இடம் அகநாழிகை!

"அட, நம்ம வாசு!" என்று நிமிர்வதற்குள்,..

"உங்கள் கவிதைகள் அச்சுக்கு போயிருச்சு, அட்டை தயார், புத்தக சந்தைக்குள் வந்துவிடும்" என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டே இருப்பார் வாசு.
"சரி, எல்லாம் தயார். முன்னுரை எழத தொடங்குங்கள்" என்று வாசு சொன்ன போது துணுக்குற்றேன். நம்ம கவிதைக்கு நம்மளே என்னத்தை முன்னுரை எழதுவது என, "நண்பன் நேசனை விட்டு ஒரு விமர்சனம் போல் எழுத சொல்வோமா, வாசு?" என்று கேட்ட போது..

"சரி. ஆகட்டும். சீக்கிரம்.."என்றார்.

நேசனிடம் கொண்டு போனேன். "நட்பை விலக்கி விட்டு நேர்மையான விமர்சனமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்" என கேட்டுக்கொண்டேன்.

நேசனிடம் ஒரு அதீத குணம் உண்டு. கவிதைகளை சார்பற்று அணுகும் திறன்! குறையை நேர்மையாக உணர்த்தும் பக்குவம். என் தளத்தில் பின்னூட்டம் வாயிலாக சொல்லி சென்றதை விட, பிரதி மாதம் ஒரு குடும்பம் பிழைக்கிற அளவு தொலை பேசிக்கு செலவு செய்து பக்குவ படுத்துவது அதிகம். கோமணத்தை வரிந்து கட்டிக்கொண்டு உழுது தீர்த்து விட்டான் நண்பன்! என் அன்பும் விலகாத படிக்கு. அவன் நேர்மையும் பிசகாத படிக்கு.

ஆக, இந்த ஆறு மாத காலத்தில் ஒரு விஷயத்தை தீர்க்கமாக உணர்கிறேன். இந்த வலை உலகம் என்பது சற்றேறக்குறைய ஒரு முழு குடும்பமாக இயங்குகிறது என்பதே அது!

எந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை? அல்லது பிரச்சினைகள் இல்லாத குடும்பம், குடும்பமா என்ன?

உயிருக்கு போராடும் சக பயணிக்காக ஒன்று சேர்வது தொடங்கி, சக பதிவரின் குடும்பத்தில் ஒரு விலை மதிப்பற்ற உயிர் இழப்பு ஏற்படும்போது, அவரின் மனசிற்கு நெருக்கமாக தன்னை அர்பணித்து கொள்வது வரையில் என..

யோசியுங்களேன்..

எப்பேர்பட்ட குடும்பம் மக்கா, நம் குடும்பம்!அந்த குடும்பத்தில் இருந்து, இன்று ஐந்து புத்தகங்கள் வெளியீடு ஆகிறது. அடுத்த புத்தகை சந்தைக்கு இது ஐநூறு, ஐயாயிரமாக பெருகட்டும் என்பதே விருப்பம். வேண்டுதலும்.

லாவண்யா, வாசு, நேசா, மற்றும் என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி வரும் உங்கள் யாருக்கும் நன்றி சொல்ல போவதில்லை. யாருக்கு யார் நன்றி சொல்வது?

நினைவு கூர்கிறேன், அவ்வளவே!

வேலையோடு, வேலையாய் நம் விசேஷத்திற்கு ஒரு எட்டு போயிட்டு வந்திருங்க மக்கா...

நிறைய அன்பும், சந்தோசங்களும்!



Tuesday, December 8, 2009

கடனுக்கு கவிதைகள்


(Picture by CC licence, thanks B. Sandman)

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

துக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

ந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

Saturday, December 5, 2009

கேள்விதான் பதில்.


(picture by CC licence, thanks Just Taken Pics' )

வளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?

நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?

சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?

ண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?

பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?

வியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...

சம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?

Tuesday, December 1, 2009

ஜீபூம்பா


(picture by CC licence, thanks Wrote )

ப்பா அம்மா
நடுவில் படுத்தே
கதை கேட்க்கிறான்.

வனுக்கு பிடிக்காத
மந்திரவாதி கதை.

ழு ஏழுகடல்,ஏழுமலை தாண்டி
கிளிக்குஞ்சில் உயிர் இருக்கும் மந்திரவாதி
பனைமரத்தளவு கை கொண்டு
இளவரசியை அபகரிக்கிறான்.

சிக்கு இவனைப் போன்ற
குழந்தைகளை உண்கிறான்.

ப்பா மாதிரி நல்லவர்களை
துவம்சம் செய்கிறான்.

வ்வளவையும் கூட
பொறுக்கலாம்

விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.

ம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.

குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).