Monday, June 29, 2009
பா.ராஜாராம் கவிதைகள்
எனக்கு இணையாக உனக்கு
யார் பிடித்திருந்தாலும்
அவர்களுக்கு தரும் புன்னகையில்
சின்னதாய் ஒரு வலி
இருக்குமானால்
அந்த வலியில்
உயிர்க்கும்
என் காதல்
***********
Thursday, June 25, 2009
தொட்டிலில் இட்டு உயிரை கிள்ளிய உனக்கு...
காதலுக்கு
அர்த்தம் கேட்டார்
கடவுள்.
என்னை காட்டினேன்.
காரணம் கேட்டார்
உன்னை காட்டினேன்.
நீ அழகாய்
இருக்கிற ரகசியம்
கண்கள்ள்ள்ள்ள்...
சம்பந்தபட்டதன்று
வெறும்
கண்கள்
சம்பந்தப்பட்டது.
ஆழ்ந்து சுவாசி
உணர முடியும்
முற்பிறவியில்
நீ வாழை மரம்.
நான் பக்ககன்று.
நீ விரும்பி
விளையாடும் பொம்மை
என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என்னை.
மனைவி குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வேன்.
கணவன் குழந்தைகள்
தூங்கிய பின்பு
விழித்து கொள்வாய்
சொல்...
பாவமில்லையா
இது மட்டும்?...
நீ நடந்த
தடங்களின்
அடியில்தான்
கிடக்கிறது
நம் மணல்.
மணல் என்றால் மணல்.
மனசென்றால் மனசு.
என் தூக்கத்தை
திறக்கும் சாவியும்
திறக்காத சாமர்த்தியமும்
உன்னிடமிருந்தது.
காலாகாலத்திற்கும்
சொல்லி சிரிக்கும்தானே
ஆமையின் தூக்கமின்மையை
முயல்கள்.
கும்மிருட்டின் மின்மினி
ஓவியம் நீ.
தூக்கணாங்கூட்டின்
குஞ்சு பறவை நான்.
இணைக்காது போனதேடி
இயற்கை.
உன்னை தேடி அடைய
எனக்கு பிடிக்கிறது.
என்னை தொலைத்து விளையாட
உனக்கு பிடிக்கிறது.
ஆட்களற்ற திருவிழாவில்
தொலைத்தாய் என்னை
அழுது புலம்புவது
தொலைந்தற்க்கன்று
நீ தேட மறந்தது கண்டு.
உனை போன்றே
செய் நேர்த்தியாக
இருந்தது.
என் நெஞ்சு குழியில்
நீ பாய்ச்சிய
நெளி கத்தியின்
கூர்மை.
உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.
உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்.
கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.
Friday, June 19, 2009
காத்திருப்பு
இருக்க மரம் இருந்தும்
உச்சிபொழுதில் ஒரு காகம்.
புழுதியை எற்றி விளையாடியபடி
அப்பளப்பூ வாங்கி போய் கொண்டிருக்கிறாள்
செம்பரட்டை சிறுமி ஒருத்தி.
பூவரச மரத்தடியிலமர்ந்தபடி
புடைத்தோ சலித்தோ பொழுதடைத்துகொண்டிருக்கிறாள்
ராக்காயி அப்பத்தாவை
போன்றொரு அப்பத்தா.
சிவனே என்று நின்று கொண்டிருந்த
கோயில் காளையொன்றை
சிறுநீர் விட்டழைத்து
கொண்டு போய் கொண்டிருக்கிறது
செவலை பசு.
இருக்கசொல்லி போனவருக்காக
இருந்துகொண்டிருக்கிறேன்...
முதலில் சில்லென்று இருந்த
திண்ணை ஒன்றில்!
பன்னீர் மரம்
Wednesday, June 17, 2009
மூன்று காலங்கள்
காலம் ஒன்று
நீ தினம் நடக்கிற
சாலையில் இருந்ததென் மரம்.
எதிர்படும் எல்லாவற்றையும்
கடப்பதுபோல் என் நிழலை
நீ தாண்டுவது இல்லை.
ஒரு புன்முறுவல்...
ஒரு உடல் சிலிர்ப்பு...
ஒரு ஆசுவாசம்...
நடக்கிறபோதும்
கடக்கிறபோதும்
தந்து செல்வாய்.
மழை குறித்த நினைப்பு
பெரிதொன்றும் இல்லாது
பஞ்சம் பிழைத்து
கொண்டதென் மரம்!
காலம் இரண்டு
நிறம் மங்கிய ஐஸ் குச்சி...
சிணுங்கி உடைத்த கண்ணாடி வளையல்...
தங்கி சுகித்த லாட்ஜ் ரசீது...
பாதிகிழித்த திரையரங்கு நுழைவுசீட்டு...
குறுஞ்சி மலையாண்டவரின்
குங்கும பிரசாதம்.... என,
கைபையில் சேகரித்த எல்லாவற்றையும்
"நல்லவேளை மறக்க தெரிஞ்சேன்" என்றபடி
கைகளில் திணிச்சு செல்வாய் நீ!
விடை பெரும்போது தரும்
வலி மிகுந்த சிரிப்பையும் சேகரித்து
பத்திரபடுத்த திரும்புவேன் நான்!
காலம் மூன்று
தூரம் அதிகமாகி போச்சு.
தவறு உனதா எனதா
அருதியிடமுடியவில்லை.
வேண்டவும் வேண்டாம்.
சொல்லிற்கும் பேச்சிற்க்கும்
அப்பாற்பட்டதான ஒரு விஷயம்
இடையோடுவதை யறிவாய் நீ.
நானும்தான்.
நீயும் அறியும்படி
அல்லது
உணரும்படி
பொய்யொன்றும் இல்லை
என்னிடம்.
என்றாலும்...
தவறு நேர்ந்ததற்காக
ஏழு ஜென்மத்து ஏக்கங்களும் உள்ளது.
ஒரே ஒரு ஜென்மமும்
ஒரே ஒரு வாழ்வும்
போதுமென பேசியிருந்திருக்கலாம்
வசந்த காலங்களில்
நாம்!
Tuesday, June 16, 2009
ஞாபகங்கள்
(கல்கியில் பிரசுரமான எனது படைப்பு)
எல்லாம் நாம் மறந்திருப்போம்...
ஒரு நாள்
உன் தலையில் இருந்த
ரோஜாவை பிடுங்கி
தெருவில் எறிந்தேன்.
நீ அழுது புரண்டாய்.
உன் அம்மாவும் என் அம்மாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.
எல்லாம் நாம் மறந்திருப்போம்...
பிறகொரு நாள்
என் தோட்டத்தில் மலர்ந்த
ரோஜாவை பிடுங்கி
உன் கூந்தலில் சூட்டினேன்.
நீ அழவுமில்லை புரளவுமில்லை.
ஆனாலும்
உன் அப்பாவும்
என் அப்பாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.
எல்லாம் நாம் மறந்திருப்போம்...
நேற்று
என் மகள் வந்து
அழுது புரண்டாள்
உன் மகன் ரோஜாவை
பிடுங்கி தெருவில்
எறிந்ததற்காக.
என் மனைவியும்
உன் கணவனும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டு பட்டது.
நீயும் நானும்
விட்டேத்தியாய் வேடிக்கை
மட்டுமே பார்த்தோம்.
நாம் என்ன
எல்லாமுமா மறந்துவிட்டோம்?...
Monday, June 15, 2009
இலையுதிர்காலம்
ஊர் வேறு மாதிரியாக இருந்தது.
பருகி துய்த்த வெயில்
பார்வைக்கு கிடைக்கவில்லை.
பழகிய தெருக்கள்
புறந்தள்ளியது.
செங்கொன்றை மரங்களில்
இலை கூட இல்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இலங்தம்பழம் விக்கிற எவரையும்.
Subscribe to:
Posts (Atom)