'எல்லாப் பயலுகளையும் சேத்துப் பாக்கும் போது நல்லாத்தாண்டா இருக்கு..சரி கதிரேசன் பாருக்கு விடுங்க' ன்னு சொல்லிட்டு வண்டிச் சாவியை கார்த்திட்ட கொடுத்துட்டு நான் பின்னாடி உக்காந்துக்கிட்டேன். ஒத்தையும் ரெட்டையுமா பயலுகள் எல்லோருமா வண்டிகளை விட்டோம்..
வண்டியை ஓட்டிக்கிட்டே, 'நைட்டு கொஞ்சம் ஓவராத்தான் போச்சோண்ணே.. ஃபார்மாலிட்டியால்லாம் பேசுன?' ன்னு கேட்டான்.
'என்னடா பேசுனேன்?'
'எனட்டப் போயி உதவி கிதவின்னு புலம்பின'
'ஞாபகம் வச்சுருக்கியா?'
'அப்ப தெரிஞ்சுதான் கேட்டியா..என்னண்ணே, தனியா பேசுவமா?'
'தனியா எதுக்குடா? பயலுகளுக்கு தெரியாம என்ன இருக்கு ..கடைலயே எல்லோருமா பேசுவோம்'
கதிரேசன் பார்ல எல்லோருமா ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டோம்.
முத்துராமலிங்கமும், செட்டியும் குவாட்டர்களை கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தான்கள். (பொதுவா எங்க செட்டு
ஷேர் போட்டு சரக்கு வாங்கிட்டு வந்தாலும் ஹாஃபாவோ ஃபுல்லாவோ வாங்கிட்டு வர மாட்டாய்ங்க. பிரிச்சு ஊத்தும் போது,' சொத்தை சரியாப் பிரி..நூலு கூடிருச்சு பாரு இந்த க்ளாஸ்ல' ன்னு குரல் விடுவாய்ங்க . இந்தப் பஞ்சாயத்து எதுக்குன்னு அவன் அவன் சொத்தை அவன் அவனே பிரிச்சு ஊத்திக்குவோம்)
'ஏ.. வழக்கம் போலதாம்ப்பா..தலைக்கு குவாட்டர்தான் கணக்கு. கார்த்தி மட்டும் இன்னைக்கு எவ்வளவு குடிக்கிறானோ குடிச்சுக்கிறட்டும். ரெண்டு வருஷத்துக்கு தண்ணிய நிறுத்தப் போறான்டா கார்த்தி. அடுத்த பயணம் நான் வர்றது வரையில் இனி தண்ணி அடிக்க மாட்டான். வரப் போற இந்த ரெண்டு வருஷத்துக்கு கார்த்திக்கு இதான் கடைசிக் குடி' ன்னு சொன்னேன்.
டக்குன்னு ஒரு அமைதி பரவுச்சு. கார்த்தியப் பாத்தேன். கார்த்தியும் என்னையப் பாத்துக் கொண்டிருந்தான். எல்லோரும் என்னையவும் கார்த்தியவும் பாத்துக் கொண்டிருந்தான்கள்.
எதிரில் உக்காந்திருந்த கார்த்தி கைய இழுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன். 'அண்ணே மேல சத்தியமா கார்த்தி' ன்னு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருட்டுன்னு கைய உருவிக்கிட்டான்
'இதான் கார்த்தி நேத்துக் கேட்ட உதவி. அண்ணன உண்மையிலேயே அண்ணனா நெனைச்சு வச்சுருந்தா எந்தலைல கை வச்சு இந்த ரெண்டு வருஷத்துக்கு இதான் கடைசிக் குடின்னு சொல்லணும் நீ. சொல்லலைன்னா எந்திருச்சுப் போயிருவேன். ஒருத்தன ஒருத்தன் சாகுறவரை பாத்துக்கிற வேணாம். ரொம்ப கேக்கலடா. ரெண்டு வருஷம்தான் நிறுத்தச் சொல்றேன். ரெண்டு வருஷங்கிறது சுண்டி ஓடிப் போகும்'
திடீர்ன்னு செட்டி 'கெக் கெக் கெக்' ன்னு அவனோட பிராண்டட் சிரிப்பைப் போட்டு அமைதிய கலைச்சான். 'சத்தியம் வாங்குற இடத்தப் பாரு' ன்னு திருப்பித் திருப்பி சிரிச்சுக்கிட்டே இருந்தான்.
'செட்டி எந்திருச்சு வெளிய போய்ட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா. போகலைன்னு வை..செருப்பு பிஞ்சு போகும்'
'சரி..சரி..பேசு பேசு இனிமே சிரிக்கல' ன்னு வாயைப் பொத்திக் கொண்டும், தலையக் குனிந்து கொண்டு, குலுங்கிக் கொண்டுமிருந்தான். 'இப்ப வெளிய எந்திருச்சு போறியா என்னடா?' ன்னு எழுந்தேன். குனிஞ்சு கைலிய எடுத்து வாயில் திணித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வெளியில் ஓடினான்.
'எல்லாத்தையும் வச்சுக்கிட்டு அசிங்கப்படுத்தணும்னு கிளம்பி வந்தியாண்ணே? ன்னு கார்த்தி கேட்டான். ரொம்பக் கலங்கலா இருந்தது முகம்.
'இது அசிங்கமாடா கார்த்தி..அப்டியா புரிஞ்சு வச்சுருக்க? ன்னு சொல்லிட்டு பர்ஸ் எடுத்து முத்துராமலிங்கம் கைல கொடுத்து, 'பயலுக எல்லோரும் குடிச்சதுக்கு அப்புறம் செட்டில் பண்ணிட்டு வந்து சேர்ரா நான் கெளம்புறேன்' ன்னு எந்திரிச்சேன்.
'எதுக்குண்ணே சீரியசாவுற? ..இது ஒரு மேட்டரா? சரி குடிக்கல விடு'
'நீயா ஏந்தலைல கை வச்சு சொல்லணும் கார்த்தி. மத்தபடி நம்ப மாட்டேன்'
'ஏ..லூசா நீய்யி? அவன்தான் குடிக்கலன்னு சொல்றான்ல. அப்றம் என்ன மயித்துக்கு தலைலல்லாம் கை வைக்க சொல்ற?' ன்னு முத்து கேட்டான்.
'கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இருக்கியா நீ?' ன்னு முத்தை அமட்டினேன்.
'இந்தா பாரு ஓந்தலைல கை வச்சு சொல்லிட்டு குடிச்சான்னு வையி நம்ம ரெண்டு பேரும் வாவு சாவு அத்துக்கிற வேண்டியதுதான்' ன்னு முத்து கோபமானான்.
கொஞ்ச நேரம் தலை குனிந்தபடியே உக்காந்திருந்தான் கார்த்தி.
தட்டி, 'கார்த்தி குடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா. ஊருக்கு கிளம்பி வர்ற சந்தோசங்கள்ல இதுவும் ஒண்ணு. டெய்லி குடிக்கப்போறோம்ன்னு நினைக்கவே சந்தோஷமா இருக்கும். ஒருவேளை நீ சொல்லலைன்னு வையேன். இப்டியே எந்திருச்சுப் போறவன்தான். ஏழுகடைப் பக்கம் கூட வர மாட்டேன். சவுதில குடிக்க முடியாது தெரியும்ல. என்ன.. இந்த மூணு மாசமும் சவுதிலதான் இருக்கிறேன்னு நம்பிக்கிற வேண்டியதுதான். உனக்காக இந்த சந்தோசத்தை விட்டேன்னு நான் நெனைச்சுக்கிட்டாப்போகுது'
ரயில் புறப்பட்டுப் போனதுக்கு அப்புறம் ரயில்வே ஸ்டேசன் கெடக்குமே..அப்டி திடு திம்முன்னு இருந்தான். வறட்சியா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டான். எல்லோர் முகத்தையும் ஒரு ரவுண்டு சுத்தி வந்தான். பிறகு எழுந்தான். என் தலையில் கை வச்சு 'ஓம் மேல சத்தியம்ண்ணே. இதான் கடைசிக் குடி' ன்னான்.
'இங்க பாருடா' ன்னு கார்த்தி முகத்துக்கு நேர விரல் நீட்டி என்னவோ சொல்ல வந்தான் முத்து.
'அப்பா நீ நிறுத்து' ன்னு சொல்லிட்டு 'செட்டியக் கூப்புடுங்கடா தொடங்குவோம்' ன்னேன்.
'நான் எங்க போனேன்.. ஒளிஞ்சு நின்னு சீரியல் பாத்துகிட்டுருந்தேன்'ன்னு 'கெக் கெக் கெக்' குடன் வந்தான் செட்டி
தொடங்கினோம்.
பிறகு ரயில் வந்து நின்ன களை.
எல்லோரும் குடிச்சது போலவே குடிச்சான். எல்லோரும் நிறுத்தும்போது நிறுத்திக்கிட்டான்.'
டேய் உனக்கு ஃபுல் பெர்மிட்டா. இன்னைக்கு விட்டா ரெண்டு வருஷம்டி' ன்னு சொன்னேன்.
'போதும்ண்ணே'
நைட்டு ஏழு கடைக்கு வந்தான் கார்த்தி.
'நல்லா பூப்போல இறங்குதுடா கார்த்தி நெப்போலியன். என்னா டேஸ்ட்டுன்ற..தொண்டைக்கு வெளிய எதாவது பூ சிந்துதான்னு பாரேன்' ன்னு தொண்டைய கிட்டக்க கொண்டு போய் காட்டினேன்.
'பேசுண்ணே.. ஏம் பேச மாட்ட?' ன்னு சிரிச்சுக்கிட்டான்.
காலைல வெள்ளனமா எந்திருச்சேன். நேரா கார்த்தி வீடு. வாசப்படில காப்பி குடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தான்.
'என்னண்ணே?' ன்னான்
'என்னடா' ன்னுட்டு வீட்டுக்குள்ள போனேன். அம்மாவை, ரம்யாவை கூப்பிட்டு,'ரம்யா இது இங்க நம்பர். இது சவுதி நம்பர். நேத்தோட கார்த்தி தண்ணிய விட்டுட்டான். அவன் எப்ப தண்ணி அடிச்சாலும் எனக்குத் தெரியணும். ஒரு மிஸ்
கால் பண்ணு போதும்' ன்னு பேசிக்கிட்டு இருக்கும் போதே,'இப்டில்லாம் கொற வேஷம் போடுவாண்டா..இதை வச்சு நம்பிறாத'ன்னாங்க அம்மா.
'அம்மா அவன் தண்ணி அடிச்சா உங்களுக்கு தெரியாம இருக்காதுங்குறதுக்காக உங்கட்ட வந்து சொல்ல வந்தேன். அவ்வளவுதேன். மத்தபடி அவன் மேல நம்பிக்கை இருக்கு.. சரிம்மா' ன்னுட்டு கிளம்பும் போது வாசலில் இருந்தவன், 'தீயாத்தானே வேலை பாக்குற' ன்னு சொன்னான்.
மூணு மாசமும் எங்களோட உக்காந்து, நாங்க குடிக்கிறதப் பாத்துக்கிட்டு, சீச்சிகளை கொறிச்சிக்கிட்டு இருந்தான்.
அப்றம் இங்க வந்துட்டேன்.
'கார்த்தி இன்னும் 23 மாசந்தாண்டா இருக்கு நாம குடிக்க..இன்னும் 22 மாசம் கார்த்தி. 21 மாசம்டா' ன்னு மாசம் ஒரு தடவையாவது கார்த்தியை கூப்ட்டுக் கொண்டிருந்தேன்..
இந்த நேரத்துல கார்த்தி விஷயமா ரெண்டு மூணு நல்ல விஷயங்கள் காதில் விழுந்தன. '
மாமா கார்த்தி நம்ம சரவணன் (ஏழுகடைகாரனில் ஒருத்தன்னு இப்போதைக்கு வைங்களேன்..ஸ்டீல்ஸ் மற்றும் சிமென்ட் வியாபாரம் பார்க்கிறான்) கடைக்கு வேலைக்கு போறான் மாமா' ன்னு முத்துராமலிங்கம் கூப்ட்டிருந்தான்.
'கார்த்தி திருந்திருச்சு போல. பழனிக்கு போய்ட்டு வந்தேன், திருச்செந்தூருக்கு
போய்ட்டு வந்தேன்னு ரெண்டு தடவ வீட்டுக்கு வந்து பிரசாதம் கொடுத்துட்டுப் போச்சுங்க. யாராரோ திருந்துதுக.நாமதான் அப்டியே இருக்கோம்' ன்னு லதா பாட்டைத் தட்டி விட்டாள். சுமாராப் பாடுவாள் லதா. வேற ச்சாய்ஸ் இல்லைங்கிறதால அவள் எப்படிப் பாடினாலும் எனக்குப் பிடிச்சுதான் வரும்.
'மாமா ரம்யாவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு மாமா. மாப்ள யாருன்ற?.. நம்ம யூஸ் மச்சாந்தான் 'ன்னு முத்து சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது .
யூஸ் என்கிற U.செந்தில், (முத்து - கார்த்திக்கு அத்தை பையன்) ஏழுகடைக்காரரே. வக்கீல். நான் செந்தில்'ன்னு கூப்ட்டுருக்கேன். அவரும் அண்ணே'ன்னு கூப்ட்ருக்கார். விஷயம் கேள்விப்பட்டதும் செந்திலை அழைத்தேன். ,'என்ன மச்சான்?' ன்னு தொடங்கினேன்...
'ராஜாண்ணனா?..என்னண்ணே புதுசா மச்சான் போடுறீங்க?' ன்னு சிரித்தார் செந்தில்.
'எங்க வீட்டுப் புள்ளைய எடுக்கப் போறீங்கல்ல மச்சான். இனிப் பேரப் போட முடியுமா?'
'அட..என்னண்ணே நீங்க போயி' ன்னு கொஞ்ச நாள் வரைக்கும் 'அண்ணே' தான் போட்டுக் கொண்டிருந்தார்.
'எப்டி வேண்ணாலும் கூப்ட்டுக்குங்க மச்சான். நமக்கு இனி மச்சான்தான் நீங்க' ன்னு நெனைச்சுக்கிட்டே ஒரு எண்டிலிருந்து மச்சான் போட்டுக் கொண்டே இருந்தேன். விடாம நடந்தா பாதை பறிவது போல, மறு எண்டும் ஒரு நாள் மச்சான் போடக் கேட்டேன். இப்ப ரெண்டு பேருமே மச்சான்னுதான் கூப்ட்டுக்குறோம்.
கூப்பாடுபாட்டுக்கு இங்கனயே கெடக்கட்டும்..எங்க போயிறப்போது? நாம கார்த்திக்கு போவோம்..
'இன்னும் இருபது மாசம்தான் இருக்கு கார்த்தி நாம சரக்கடிக்க'
'இன்னும் பத்தொம்பது மாசந்தாண்டா'
' பதினெட்டுடா' ன்னு மாதந்தவறாம கூப்பிட்டு வந்தேன் கார்த்திய.
'அட என்னண்ணே நீ வேற?' ன்னு சவுண்டால்லாம் சிரிக்கப் பழகியிருந்தான் பய.
மாதங்கள் குறைந்து கொண்டே வந்தன...
இடையில் முத்துராமலிங்கத்திடம் பேசும் போது,' என்னடா இவன் உண்மையிலேயே நிறுத்திட்டானா? எதுக்கும் ஸ்டாண்டு பயலுகட்ட விசாரி மாப்ள. ஆச்சரியமா இருக்கு' ன்னு கேட்டேன்.
'இல்ல மாமா. சுத்தமாத்தான் இருக்கான். அடிச்சான்னா எனக்குத் தெரியாமப் போகாது. நானும் பயலுகட்ட கேட்டேன்ல. கேக்காமயா இருப்பேன்?.. அவரு அண்ணன் மேல சத்தியம் பண்ணி இருக்காராம். துதிக்க மாட்டாராம்ன்னு பயலுக சொன்னாய்ங்கல்ல..ஓந்தலை இது வரைக்கும் தப்பி இருக்கு மாமோய்' ன்னு சிரித்தான்.
'இன்னும் ஆறு மாசந்தாண்டா இருக்கு கார்த்தி' ன்னு கூப்பிட்டு பத்துப் பதினஞ்சு நாள் முடிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன்...கார்த்தியிடமிருந்து போன் வந்தது' என்னடா கார்த்தி?' ன்னு கேட்டேன்.
'மன்னிச்சுருண்ணே. சரக்குப் போடப் போறேன்'
'என்னடா கார்த்தி ஏண்டா?' ன்னு சொல்லிக் கூட முடிக்கலை. போனை கட் பண்ணிட்டான். திருப்பிக் கூப்பிட்டுப் பாத்தேன். போனை க்ளோஸ் பண்ணி வச்சுட்டான். ரெண்டு மணிநேரம் போயிருக்கும்..ரம்யாவிடமிருந்து மிஸ்கால் வந்தது. கூப்பிட்டேன்.
'அண்ணே, கார்த்திண்ணே திருப்பி தொடங்கிருச்சு போலண்ணே..'
'தெரியும்த்தா..எனட்ட சொல்லிட்டுத்தான் அடிச்சான். இவ்வளவு நாள் நிறுத்தியிருந்தான்ல.. விடுங்கத்தா ஒரு நாள் அடிச்சுட்டுப் போறான். நான் திருப்பி கூப்ட்டேன். போன க்ளோஸ் பண்ணி வச்சுட்டான்'
'இல்லண்ணே..பஸ் ஸ்டாண்ட்ல சலம்பிக்கிட்டு நிக்குதாம். அம்மா என்னயக் கூப்ட்டு உங்களுக்கு சொல்லச் சொன்னாங்க' (ரம்யா திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருந்தது)
'அய்யயே.. இது தெரியாதேத்தா.. சரி நான் முத்தை கூப்பிடுறேன்' ன்னு முத்துராமலிங்கத்தை கூப்பிட்டேன்.
'இந்தா போன்லாம் பண்ணிட்டுத் திரியாத..காதுக்கு வந்துருச்சாக்கும்?' ன்னு கேட்டான்
'ரம்யா சொன்னுச்சுடா. செரி..நீ அவனப் போயி தூக்கிட்டு வந்து வீட்ல விட்ருடா. எழவக் கூட்டிரப் போறான்'
'ஒனக்கும் எனக்குமே அத்துப் போச்சு. இனி அவன் யாரு?'
'செரி விட்றா வெண்ண. ஒண்ணரை வருஷமா நிப்பாட்னான்ல்ல. ஓந்தலைல நா அடிச்சிருந்தாலும் ஏந் தலைல நீ அடிச்சிருந்தாலும் பத்து நாளுக்கு நிறுத்திருப்பமா? ஒரு அலைன்மெண்ட்ல போயிட்டு இருக்கானே..பத்து நாளைக்கு நிறுத்துனாக் கூட தெளிஞ்சுருவானேன்னு நெனைச்சதுதான். இதுல போயி ரூல்ஸ புடிச்சுப் பாத்துக்கிட்டு இருக்க?'
'போன வய்யி மாமா. வாய்ல வந்துரும்'
'இப்ப என்னடா சொல்ற?..போவியா மாட்டியா?' ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும் போதே கட் பண்ணிட்டான்.
பத்து நிமிஷம் அவனக் கூப்டுவமா இவனக் கூப்டுவமான்னு யோசிச்சிக்கிட்டே இருந்துட்டு. திருப்பியும் இவனயே கூப்ட்டேன்.
'போய்ட்டுத்தேன் இருக்கேன் மாமா. முத்துமஹாலை தாண்டிட்டேன்.அஞ்சு நிமிஷம் கழிச்சு நீயே கூப்டு மிஸ்கால் பண்ணக் கூட போன்ல காசு இல்ல. ஓம் போன் வந்தோன்ன அவன்ட்ட கொடுக்குறேன். நீந்தானா பேசு. எனக்கு அவன்ட்ட பேச ஒண்ணுமில்ல' என்றான்.
பண்ணேன்.
'என்னண்ணே?' என்றான் கார்த்தி. நான் பேசத் தொடங்குவதற்கு முன்னாலேயே, 'சரக்கெல்லாம் விட்டுட்டு ஸ்ட்ரைட்டா இருக்கணும்னு நெனைச்சா தொண்ணையா நெனக்கிறாய்ங்கண்ணே. வா..ந்தா நிக்கிறேன்ல. தனியாத்தானே நிக்கிறேன். பொருதிப் பாரு. பொட்டை மாதிரி சாட பேசுற. க்காளி கார்த்திடா' ன்னு கார்த்தி குரல் கேட்டது.
'கார்த்தி.. கார்த்தி' எனக் கொஞ்ச நேரம் கூப்ட்டுக் கொண்டே இருந்தேன். அவம்பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தான்.
'சொல்லுண்ணே..கேக்குது..தொண்ணையா நெனைச்சுப்புட்டாய்ங்கண்ணே'
'போன முத்துட்ட கொடு'
'ந்தா ஒனட்டப் பேசணுமாம்'
'யாருடா..என்ன பிரச்சினைடா?' ன்னு முத்துட்ட கேட்டேன்.
'ஊறுகா மாமா. அவம் போதைக்கு நீ நால்லாம் ஊறுகா' என்றான்.
'இவன் ஒருத்தன்'னு நெனைச்சுக்கிட்டே 'அவன்ட்ட கொடுடா' என்றேன்.
'அண்ணே' என்றான்.
'முத்து வண்டில ஒக்கார்றீங்களா கார்த்திப்பா' என்றேன்
'என்னண்ணே சொன்ன திருப்பி சொல்லு?
'வண்டில ஒக்காருங்க கார்த்திப்பா. போதும். வீட்டுக்குப் போலாம்'
'கார்த்திப்பா இல்ல.. கார்த்திப்பா இல்ல..கார்த்திப்பா இல்ல' எனக் கொஞ்ச நேரம் கார்த்தி புலம்புவதும், முத்துவின் m-80 ஸ்டார்ட் பண்ணுகிற சத்தமும் காதில் விழுந்தன.
-தொடரும்
*******
இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6,7,8