Thursday, March 24, 2011
நல்லவங்களுக்கான சோதனை
(Picture by cc licence, Thanks OneVillage Initiative)
நடப்பதுபோல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க’
என்றிவள் வந்து சொன்னாள்.
வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்
'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Thursday, March 17, 2011
மூன்று தலைமுறை சாவி
(Picture by cc licence, Thanks Stevendepolo)
அம்மா மாதிரியே
சாவி வைத்திருக்கிறாள் இவளும்
அம்மா திறந்த
கதவையே திறக்கிறாள்
நெட்டுப் பத்தி, பட்டாசாலை
என்பாள் அம்மா
ரேழி, ஹால்
என்கிறாள் இவள்
மற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
கதவைப் பூட்டிக்கொள்கிறாள்
என்ன ஒன்று
திண்ணையில் தூங்கிய அப்பத்தா
சாவியைத் திறகுச்சி என்றாள்
சாவியை சாவி என்றாள் அம்மா!
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Sunday, March 13, 2011
புரை ஏறும் மனிதர்கள்- பதினாறு
தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக் கட்டுரை- ஐந்து
ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு
இந்தப் பயணத்தில் பிரதானமாக மூன்று காரியங்கள்தான் பார்த்தேன் எனலாம். மகளுக்கு திருமணம் நடத்தியது, ஒரு நாய்க் குட்டி வளர்க்க முயன்றது, அப்புறம் நாள் தவறாமல் குடித்தது.
முதலும் கடைசியும் முன்பே திட்டமிட்டதுதான். இரண்டாவது காரியம் மட்டும் எதிர் பாராமல் நிகழ்ந்தது. ஒரு நாய்க் குட்டியை வளர்ப்பது என்பது என் வரலாற்றில் பதிய வேண்டிய விஷயமாகவே எனக்குப் படுகிறது. ஏனெனில்,..
அம்மா காலத்திலும் சரி, லதா காலத்திலும் சரி என்னால் ஒரு நாய்க் குட்டியை நாய் வரையில் வளர்க்க முடிந்தது இல்லை. ஒரு வாரமோ, பத்து நாளோ தங்கும். பிறகு குட்டி இறந்தோ தொலைந்தோ போய் விடும். " நாய் வளர்ப்பது நம் குலசாமிக்கு ஆவதில்லை" என அம்மா தொட்டு லதா வரையில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அம்மா சொன்னாள் என்றால் அதில் ஒரு நியாயம் இருந்தது. ஒரு அம்மாவிற்கு இரண்டு குட்டிகள்தான் ஆவரேஜ் என்று எடுத்துக் கொண்டால் கூட, நாங்கள் ஐந்து குட்டிகள் இருந்தோம். அதாவது, எக்ஸ்ட்ராவாக மூன்று குட்டிகள்! இதில் நாய்க் குட்டிகள் வேறு என்றால் எந்த அம்மா ஒத்துக் கொள்வாள்? ஆனால், இந்த லதாவிற்கு என்ன வந்தது? இரண்டு ஆவரேஜ் குட்டிகள் போக, ஒரு நாய்க் குட்டிக்கு எவ்வளவு மெனக்கெட்டு விடுவாள்?
"குழந்தைக் குட்டிகள் மட்டும்தான் வளர்ப்பேன். நாய்க் குட்டிகளெல்லாம் வளர்க்கணும்ன்னா முன்னாலேயே சொல்லிரு. அப்பா வீட்லயே இருந்துக்குறேன்" என்று வருதியுறுதி வாங்கி வந்தது போலவே இருந்து வந்தாள் லதா. இதெல்லாம் ஒரு மனுஷி சொன்னால்தானா? உருட்டுகிற விழி அசைவில் கண்டு பிடித்து விட முடியாதா ஒரு கணவனால்?
எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை நான். கேட்டீர்களா? சில நேரங்களில் குடும்பத் தலைவனாகி விடுவதும் உண்டு. குடும்பத் தலைவன் என்கிற பதத்திற்கு ஆணாதிக்கவாதி என்கிற அர்த்தமும் வருகிற விஷயமெல்லாம் நான் சமீபமாக அறிந்ததே. குறிப்பாக, பதிவெழுத வந்த பிறகு.
என்றாலும், இக்கதையை நான் இரண்டு பிரிவாக பிரிந்து நின்று பேசினால்தான் உங்களுக்குப் புரியும். பதிவுலகமே மூச்சாக இருக்கிற நமக்கு, அந்த வழியில் வந்தால்தான் பேச்சு பேச்சாக இருக்கும். அதாவது, நான் குடும்பத் தலைவனாக இருந்த காலத்தில் ஒரு நாய்க் குட்டி வளர்க்க முயன்றேன். அதன் பெயர் வீரா என்று எடுங்களேன். இதோ, இப்போ ஆணாதிக்கவாதியாக ஒரு நாய்க் குட்டி வளர்க்க முயற்சி செய்கிறேன். அதன் பெயர் நெப்போலியன்! இப்ப உங்களுக்கு சுளுவாக புரிந்திருக்கும். இல்லையா?
பெயருக்கெல்லாம் காரணம் கேட்காதீர்கள். வீட்டில் ஒருவனாவது வீரனாக வரட்டும் என்று கூட ஒரு பெயர் பிடித்துப் போய் விடலாம். அல்லது, மறுநாள் தலை வலிக்கக் காணோமே என்கிற சந்தோசத்தில் வைக்கிற பெயர் நெப்போலியனாகக் கூட இருக்கலாம். திட்டமிட்டா எதையும் செய்கிறோம்? வாச்சான் போச்சான்தானே?..
இந்த நெப்போலியனை நான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது. ஏழு கடையில் வளர்க்கவே திட்டமிட்டேன். என்ன என்னால் இயலுமோ, அதை திட்டமிட்டதாகச் சொல்வது எனக்குப் பிடிக்கும். என்ன எனக்கு பிடிக்கிறதோ, அதை கேட்கிற சித்தம் உங்களுக்கும் வந்துவிட்டால் ஒத்த அலை வரிசை கொண்டவர்கள் ஆகிறோம். பரஸ்பரம் நானும் நீங்களும். இல்லையா? கேட்கவே நல்லாருக்கு பாருங்க.
பிறகு, இரக்கமற்றவன், கொடுங்கோலன், அருவருக்கதக்கவன், ஒரு நாய்க் குட்டியை வீட்டில் வளர்க்க துப்பற்றவன் என்றெல்லாம் எனை நீங்கள் எடை போடுவது எதற்கு? இதற்காகவா மக்கா என அன்பொழுக உங்களை அழைக்கிறேன் மக்கா? இந்த நெப்போலியனை வீட்டிற்கு அழைத்துச செல்ல முடியாததற்கு அந்த வீராதானே காரணம்? அதை முதலில் சொன்னால்தான் உங்களுக்கு என் நியாயம் புரியும்.
"சற்றேறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் முன்பு.." (சரி..விடுங்கள். இப்படி எப்படியாவது தொடங்கத்தானே வேணும் ஒரு ஃபிளாஷ் பேக்கை..) வீராவை லைப்ரரி முன்பாக கண்டெடுத்தேன். குட்டியென்றால் குட்டி, அப்படி ஒரு குட்டி! வெள்ளை வெளேரென்று. நெற்றியில் மட்டும் கொழுந்து வெத்தலை சைசுக்கு ஒரு கருமை. அல்லது மச்சம்.
'எங்கப்பன் வீட்டு ரோடாக்கும்' என்பது போல ரோட்டை கடந்து கொண்டிருந்தான் வீரா. குட்டியோட கலரா, கொழுந்து வெத்தலையா எதில் மயங்கினேன் என்று நினைவில்லை. வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டேன். தையல் மிஷின் ஊசி மாதிரி வெகு நேரம் வரையில் குதித்துப் பார்த்தாள் லதா. தையல்காரர் மாதிரி, "சட்டை முக்கியம் தோழரே" என பொறுமையாக இருந்து விட்டேன் நான்.
மகன் சசிக்கு அப்போ தவழ்கிற வயது. ஆப்போசீட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர் மாதிரி, ஆப்போசீட் கலரும் அட்ராக்ட்ஸ் ஈச் அதரும் போல. அப்படி, அட்ராக்ட்ஸ் ஆகிக் கொண்டார்கள் சசியும் வீராவும்.. ஏழெட்டு நாட்கள் கடந்து விட்டன . சசி என்றால் வீராவும், வீரா என்றால் சசியும் திரும்பிப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
ஒரு நாள் நேர் என்றால் ஒரு நாள், கோணல்! வெறும் நாள்தானே? என்ன செய்யும் பாவம்?..அந்தக் கோணல் நாளின் மதியம் அது...
உணவருந்திக் கொண்டிருந்தோம் நானும் லதாவும். சசி, எங்களுக்கு முதுகு காட்டியபடி வாசல்படியில் அமர்ந்திருந்தான். சாப்பிட்டுக் கொண்டே சசியைப் பார்த்தேன். உட்கார்ந்தபடியே ஒரு மாதிரி ஆடிக் கொண்டிருந்தான். அதை ஆட்டம் என்று சொல்வதற்கில்லை. மணலில் காந்தத்தை பிரட்டி, ஒட்டிய இரும்புத் துகள்களை, பேப்பரில் கொட்டி, பேப்பருக்கு அடியில் காந்தத்தை பிடித்து ஆட்டம் காட்டுவோமே. அப்படியான தினுசாக இருந்தது அவனின் ஆட்டமும்.
"என்னன்னு பாரு புள்ள. ஒரு மாதிரி ஆடுறான்" என்றேன் லதாவிடம். அவளும் பெருமையாக," ஒங்க மகன் டான்ஸ் ஆட கத்துருக்கு புதுசா" என்றாள். லதா ஒரு மர பீரோவிற்கு இணையானவள். நல்ல உபயோகம்தான். எனினும் அவசரத்துக்கு நகட்ட இயலாது.
அவசரமாக எழுந்து சசியின் அருகில் போன போதுதான் வீராவைக் கண்டேன். மேல் படியில் அமர்ந்திருந்தான் சசி. இரண்டாவது படியில் நின்ற வீரா, மேல் படியில் முன்னங்கால்களை வைத்துக் கொண்டு, சசியை தாயாக வரித்து, பசியாறிக் கொண்டிருந்தது.
தூக்கி வாரிப் போட்டது எனக்கு. சட்டென குனிந்து வீராவைத் தூக்க முற்பட்டேன்.(இப்படி ஒரு சூழலில் முதலில் யாரை தூக்குவது என்பதெல்லாம் அப்போது நமக்கு பிடிபடுவதில்லை) விடாக் கொண்டனான வீராவும் சசியின் ரப்பர் பாண்ட்டை, சாட்சாத்
ரப்பர் பாண்டாகவே பாவித்து சற்று தூரத்துக்கு இழுத்து, அறுவதற்கு முந்தைய நொடியில் 'டொப்' என விட்டது.
விட்ட விடுவில், பூச்சி பறந்திருக்கும் போல சசிக்கு. வீரிட்டு அழத் தொடங்கி விட்டான். சும்மாவே ஊரைக் கூட்டுவான். லதாவினாலும் கூட எல்லா நேரமும் மர பீரோவாக இருக்க முடிவதில்லை. "நா என்ன செய்யட்டும்" என்றபடி துள்ளி எழுந்தாள். ஒரே எட்டில் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். பெற்ற தாய்க்குத்தான் சரியான நேரத்தில் சரியான பொருளைத் தூக்க வருமோ என்னவோ?
இப்பவும் தையல் காரரைப் போன்றே பேசாமல் இருந்திருக்கலாம் நான். "பாவம் இதுக்கென்ன தெரியும். பால்குடி மறப்பதற்குள் ரோட்டுக்கு வந்துருச்சு. ரோட்டுக்கு வந்ததை வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ஆத்தைக் கண்டுச்சா, அழகரை கண்டுச்சா? தொங்குறதெல்லாம் பாலா நினைச்சுக்கிட்டு இருக்கோ என்னவோ? முதல்ல அவனுக்கு ஒரு ஜட்டியைப் போட்டு விடு" என்றேன் சமாதானம் செய்யும் பொருட்டு. அவ்வளவுதான்.. இந்த அவ்வளவுதான் என்பதில் உங்களால் முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது இல்லையா?. பிறகு எதற்கு டீட்டைல்ஸ்?
என் கட்சிக்காரனைப் பார்த்தேன். செய்வதெல்லாம் செய்துவிட்டு "என்ன செஞ்சேன்?" என்கிற பார்வையை என்னிடமிருந்து கற்று வைத்திருந்தான், மகா சூட்டிகைக் காரனான வீரா. சூட்டிகை காரன்களுக்குதானே சோதனையும்.."இனி, பிரயோஜனம் இல்ல மக்கா. சும்மா ஆர்டினரியா முழி போதும்" என்று நினைத்தபடி லதா தந்த கூடையைக் கைப் பற்றினேன்.
அந்த கூடைக்குள் பழைய துணி இருந்தது. அந்த துணிக்குள்தான் வீரா இருந்தான். " போய்யா.. போ" என இடது கையைத் தூக்கி திசை காட்டும் இளம் நடிகையைப் போல இருந்து கொண்டே இருந்தாள் லதாவும். புறப்படும் வரையில் இறங்காது போல கை காட்டி
என புறப்பட்டோம் நானும் வீராவும்.
இருபது நிமிட சைக்கிள் பயணத்தில் நான் இருதயராஜ் தோட்டத்தில் இருந்தேன். நண்பர்களிலேயே எளிதாக ஏமாற்றக் கூடிய நண்பன் இந்த இருதயராஜ்தான். நண்பர்கள் எல்லோருக்கும் வயதில் இரண்டு வருட சீனியர் இவன். புத்திக் கூர்மையை கணக்கில் கொண்டு எல்லோருமே சப்-ஜூனியராக இவனைப் பாவித்து வந்தோம்.
பி.ஏ.,எக்கனாமிக்ஸ் படித்து, அத்தலடிக்ஸ்-ல், மூன்று வருடமும் யுனிவர்சிட்டி அளவில் முதலாவதாக வந்து, பிறகு m.p.ed., பயின்று, விவசாயியாக இருந்தான் இருதயராஜ். இந்த இருதயராஜை அழித்துப் பண்ணினோம் எனில், கூலி சேதாரம் போக, என்னை மாதிரி மூன்று உருப்படிகள் செய்யலாம். அவ்வளவு ஆஜானுபாகுவான ஆகிருதியை, குட்டிச்சுவராக உருவகித்து, கழுதைகளான நாங்கள் முதுகு சொரிந்து வந்தோம். இந்த இருதயராஜ் தோட்டத்தில்தான் வீராவை விடத் தீர்மானித்தேன்.
கூடையும் கையுமாக வருகிற என்னைப் பார்த்ததும் உற்சாகமாகி "மாப்ள" எனக் கூவினான் இருதயராஜ். நான் என இல்லை. யார் வந்தாலும், " ஐ! மனுஷய்ங்க" என்பது போல கூவுவான். அவ்வளவு அடர் கானகம் அவன் தோட்டம். கையில் இருந்த, கூடைக்குள் இருந்த, துணிக்குள் இருந்த வீராவைத் தூக்கி, இருதயராஜிடம் காட்டி," டொண்ட..டொய்ங்" என்றேன்.
சொன்ன கையோடு, "ராஜபாளையத்தில் இருந்து மாமா வந்தார் மாப்ள. ஆயிரம் ரூபாய்க்கு மேல போற ப்ரீட், முன்னூர் ரூபாய்க்கு வந்தது. வேனுமாடான்னாரு. வாங்கிட்டு வீட்டுக்கு போனா, குலசாமி, அது இதுன்னு லதா கெடந்து கத்துறா..நீயும் தோட்டத்துல கெடக்கியா?..உனக்கு ஆகுமேன்னு கொண்டு வந்தேன்." என்றேன்.
எதை சொன்னாலும் ஆரம்பத்தில் நம்பாத பார்வை பார்ப்பான் இ. ராஜ். அந்தப் பார்வை பார்த்தான் எனில் சீக்கிரத்தில் நம்பப் போகிறான் என நம்பி விடுவோம் நாங்கள். பார்த்துக் கொண்டே இருந்தவன் வீராவைக் காதைப் பிடித்து தூக்கி ஊஞ்சலாட்டினான். ஜெயின்ட் வீலில் சுற்றுகிற ஜென்டில் மேன் மாதிரி கண்களை இறுக மூடிக் கொண்டு தேமேயென தொங்கியது வீராவும்.
"இது ராஜபாளையம் இல்லையே மாப்ள. எந்த மாமா கொண்டு வந்தாரு?" என்றான் முகத்தைப் பார்த்து. "ராஜபாளையம்தான் மாப்ள. கொஞ்சம் அவுட்டர். எக்ஸ்டென்சன் ஏரியா" என்றேன் மாமாவை கழட்டி நானாகவே. "இல்ல மாப்ள..ராஜபாளையம்னா ஒனக்கு.." என்று என்னவோ சொல்ல வந்தவனை இடைமறித்தேன் நான்.
அங்கு கட்டியிருந்த பசு மாட்டைக் காட்டி, " நீ மட்டும் அன்னைக்கு அந்த பசுவைக் காட்டி சிந்துன்னு சொன்ன? நான் நம்பலயா? சிந்துன்னு சொன்னா, ஹிந்துவான நான் நம்பணும். ஒரு ஹிந்து ராஜபாளயம்ன்னு சொன்னா கிருஸ்துவனான நீ நம்பக் கூடாதா? என்னடா மத தர்மம் இது?" என்றேன் அவசரம் அவசரமாக.
"எதுக்குப் போய் என்ன பேசுற மாப்ள? என்றான் உதடு துடித்து. எனக்கு சற்று சங்கடமாகத்தான் இருந்தது. என்றாலும், பதிலுக்கு நானும் உதடு துடித்து.." இல்ல மாப்ள. முந்தி மாதிரி இல்ல நீ. மத துவேசம் பார்க்க ஆரம்பிச்சிட்ட" என்றேன் விடாமல். சங்கடத்தைப் பார்த்தால் காரியம் பார்க்க முடியுமா?
"மாப்ள..அம்மா சத்தியமா அது சிந்துதான் மாப்ள" என்றான்.
"அதைவிடு. ஹிந்து, கிறிஸ்தவ பிரச்சினைக்கு வா"
இப்படி தள்ளு முள்ளான நேரத்தில்தான் அவன் வந்தான். அவன் என்றால் ஒரு பொடியன். பிறந்த மேனிப் பொடியன். நாலைந்து வயதொத்தவன். சமீபமாக, இந்த பிறந்த மேனிப் பொடியன்கள் எனக்கு சற்று அசூசையை ஏற்படுத்தி இருந்தான்கள். வந்தவனின் காதைப் பிடித்துத் திருகி, " போடா.. போய் ஜட்டி போட்டுட்டு வாடா " என்றேன் பதட்டமாகி.
"டேய்..நம்ம ஜோசப் மாப்ள. அதட்டாத. அப்புறம் ஒன்ட்ட ஒட்ட மாட்டான்" என்றான் இ.ராஜ்.
ஒரே தட்டில் அவிந்த இட்லி மாதிரி, ஒண்ணு சொன்னார் போல் ஏழெட்டு குட்டிகள் இவனுக்கு உண்டு. ஜோசப், அந்தோணி, விண்ணரசி, கன்னி மேரி, என்று எப்படி அடையாளம் காண்கிறான் என்று ஆச்சர்யம் ஏற்படும். ஜட்டி போட்டிருந்தால் பெண் குட்டிகள் எனவும், போடாவிட்டால் ஆண் குட்டிகள் எனவும் கண்டுபிடிப்போம் நண்பர்களான நாங்கள்.
"என்னடா இது? நாலஞ்சு வயசு வரைக்குமா ஜட்டி போடாமத் திரிவான்?" என்றேன் கடுப்பாகி.
"நீ வேற மாப்ள..களை எடுக்க பொம்பளை புள்ளைகள் வந்திருக்குதுகள். இல்லாட்டி நானும் இவன மாதிரிதான் திரிவேன்" என கெக்கே பிக்கே என்று அசிங்கமாக சிரித்தான் ராஸ்கல். 'கிளியை வளர்த்து பூனைகள் கையில் கொடுக்கிறோமோ?' என்று கை நடுக்கம் கொண்டது எனக்கு.
"போதா, பொதுக்கி" என்று ஒரு மண் கட்டியை எடுத்து எனை நோக்கி எறிந்த படி ஓடிய ஜோசப்பின் கைகளில் வீரா இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். "என்ன சொல்றான் பார்த்தியா? என்ன சொல்றான் பார்த்தியா?" என மீண்டும் கெக்,கெக்,கெக்.. என சிரித்தவன்" சரி..பயபுள்ளைக்கு புடிச்சிருச்சு போல மாப்ள. ரெண்டு மிதில போய் பழைய கிரேப்வாட்டர் பாட்டிலும், மாட்டுறாப் போல ரப்பரும் வாங்கிட்டு வா" என்றான்.
"அதுலாம் தேவை இல்ல மாப்ள" என்றேன் சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்தபடி.
"டேய்.. பாங்குட்டிடா. பாவம்" என்றான்.
"ஜோசப் பால் குடிப்பான்ல?"
"அவன் டம்ளர்ல குடிப்பாண்டா"
"போதும். அவன்ட்ட இது குடிச்சுக்கும்" என சைக்கிளைத் தட்டினேன், ஒரு தட்டு..
-தொடரும்
***
புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15

Thursday, March 3, 2011
புதிர்ப் பொழுது
புதிர்
(Picture by cc licence, Thanks FontFont)
கடைசியில் ஒரு கேள்வி
மிஞ்சியது.
பதிலை மாற்றி அமைத்துப்
பார்த்தேன்.
ஒரு பதில் மிஞ்சியது.
கேள்வியை பதிலாகவும்
பதிலை கேள்வியாகவும்
பொருத்திப் பார்த்தேன்.
அப்பவும்
ஒரு கேள்வி பதில்
மிஞ்சியது.
பேசாமல் அக்கேள்விக்கு
அப்பதிலை திருமணம் செய்து
வைத்து விட்டேன்.
கேள்வி மிஞ்சும் போதெல்லாம்
பதில் தானாகவே பொருந்திப்போய் விடுகிறது.
***
பொழுது
(Picture by cc licence, Thanks Orange tuesday )
வாசலில்
சைக்கிள் நிற்கிறது.
சைக்கிள் நிழல் சரிந்து
வாசலில் கிடக்கிறது.
நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்
சைக்கிளுக்கு வந்து விடுகிறது.
சரிந்து சரிந்து சைக்கிளையும்- பின்
வாசலையும்கூட தாண்டுகிறது நிழல்.
பிறகு சைக்கிள் மட்டுமே
வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)