ஆயிற்று.
இன்றுடன் நம் கருவேலநிழலின் முதல் ஆண்டு நிறைவுறுகிறது. எவ்வளவு நிறைவான, நெகிழ்வான முதல் வருடம்!
வேலை விட்டால் அறை. கொஞ்சம் டி.வி. நிறைய வீட்டு நினைவு. கொஞ்சம் அலை பேசும் சந்தோசம். கொண்டு, நிறைவுறும் குரல்வழி குடித்தனம்...இப்படியான பொழுதாக போய்க் கொண்டிருந்த போதுதான், இந்த கருவேல நிழலை தொடங்கி தந்தார்கள் தம்பியும், நண்பரும்.
தேற்றும் முகமாக, இங்குள்ள நண்பர்கள் சொல்வார்கள், "நாலு வெள்ளி முடிஞ்சால், சம்பளம். இருப்பத்தி நாலு சம்பளம் எடுத்துட்டா ஒரப்பாயிட்டு வீடுதான்" என்று.
இந்த பனிரெண்டு மாதமாக இது நிகழலை மக்கா.வெள்ளி வந்ததும் தெரியல. சம்பளம் வந்ததும் தெரியல. மாதாந்திர காலண்டரில், அனிச்சையாக நாட்களின் மேலாக குறிக்கிற இன்டு குறியீடு கூட இல்லை. (அனேகமாக இங்கு வந்தேறிகள் எல்லோரிடமும் இது உண்டு..இப்படி ரெண்டு காலண்டரை கிழித்தால் வீடு என்பதாக ஐதீகம். :-))
"என்னண்ணே என்ன பண்றீங்க?
"மக்கா நலமா?"
"மாமா நல்லாருக்கியளா?"
"சித்தப்ஸ்?"
"குரல் கேட்கணும் போல் இருந்தது, ராஜா சார்"
"யோவ்..என்ன மயிறு கவிதை எழுதுற?"
"நலமா பாரா?"
"வணக்கம் தோழர்"
"மகளுக்கு நிச்சயமாயிட்டுன்னு கேள்விண்ணே. என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? எதையும் யோசிக்க வேணாம்ண்ணே. கூடப் பிறந்த தங்கையா எடுத்துக்கோங்க. என்ன தேவைன்னாலும் கூப்பிடனும். கடன் வாங்கக் கூடாது. சரியா?"
என்றெல்லாம் திகைக்க வைக்கிற, நண்பர்கள் மற்றும் சகோதரிகள் குரல்கள்.
ஆம்,
நம் மகாவிற்கு ஒரு வரன் வந்தது.அவர்களுக்கு பெண் பிடித்து போயிற்று. நமக்கும், குடும்பம் பிடித்துப் போனது. மாப்பிள்ளையோ சிங்கப்பூர். குறிப்பிட்ட தேதிக்குள் நம் சம்மதம் தெரிவிக்க வேண்டிய சூழல்.( மாதம், நாள்,கிழமை இப்படியாக) கையும் காலும் ஓடாத சூழல். மாப்பிள்ளையை நாமும் பார்க்க வேணும். இல்லையா? சிங்கையில் உறவினர்கள் இருந்தார்கள்.
அவர்களை கூப்பிட்டு, நிலை விளக்கி பொருந்துவதற்குள் பொருந்தினார்கள் நம் பதிவ நண்பர்கள்.
முறை வச்சு, மாமாவென அழைக்கும் கண்ணன் என்ற மனவிழி சத்ரியன் மற்றும் சி. கருணாகரசு!
"மாமா, இது எங்க டூட்டி மாமா. எதுக்கு வருந்துரீறு?" என்று மறுநாளே போய் மாப்பிள்ளையை பார்த்து வந்தார்கள். சம்மதம் சொன்னார்கள்.சம்மதம் சொன்னோம். நிச்சயதார்த்தம் முடிந்தது.
விலை மதிப்பற்ற எவ்வளவோ நண்பர்களையும் உறவுகளையும் இந்த ஒரு வருடத்திற்குள் தேடி தந்திருக்கிறது, கருவேல நிழல்!
கவிதை எல்லாம் சும்மா மக்கா.
எவ்வளவோ உன்னதமான கவிஞர்களை இதே பதிவுலகில் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். போடா மயிறு என்று முகத்தில் அறைகிறார்கள், கவிதையில்.
பொறவு,
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?
அன்புதானே மக்கா?
எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதி பலன் கருதாத நண்பர்களை/ உறவுகளை தேடி தந்திருக்கிறது கருவேல நிழல் என்ற பதிவுலகம்!
வெறும் கோபமும், துவேஷமும் மட்டும் நிரம்பியதில்லை இப்பதிவுலகம் என இச்சூழலில் பதிய விரும்புகிறேன்.
***
முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்.
***
இப்படியாக இரண்டாவது வருடத்தை தொடங்குகிறேன். அதாவது, தொடங்குகிறோம்!..
நன்றியும் அன்பும் மக்களே!
***