11-06-2009-யில் தளம் தொடங்கியது. 11-12-2009-யில் கருவேலநிழல் முதல் தொகுப்பு வெளியாகிறது. சரியாய் ஆறு மாதம் அதே தேதி. நம்ப இயலாமல் வருகிறது. நண்பர்
மோகன் குமார் ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டார், "இந்த 2009-ன் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நிகழும், இவ்வளவு நண்பர்களை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று நினைத்திருப்பீர்களா?" என்று.
எவ்வளவு சத்தியமான வார்த்தை!
கணையாழியில், ஆனந்த விகடனில் ஒரு கவிதை பிரசுரமானால் போதும். அப்பா, அந்த புத்தகத்தை ஒரு குழந்தையை போல இடுக்கி கொள்வார். உறவினர்கள் வீடெல்லாம் போய் திரும்பும் குழந்தை. ஒரு வாரம், பத்து நாள் வரையில் புத்தகத்தை திருப்பமாட்டார். திருப்பும் போது பத்து நூறு வருடம் வாழ்ந்தது போல் தளர்ந்திருக்கும், முன்பு பச்சை வாடை வீசும் குழந்தையாய் இருந்த புத்தகம். பச்சை வாசனை மறைந்து, அப்பா வாசனை, உறவுகள் வாசனை வரையில் புத்தகத்தின் பக்கங்களில் உணர வாய்க்கும்.
இன்று ஒரு முழு கவிதை தொகுப்பு! அப்பாவை காணோம்.
"எதையாவது இழந்து தாண்டா எதையாவது பெற முடியும்" என்று அப்பாதான் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பார். அந்த அப்பாவிற்குத்தான் இந்த முதல் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அப்பாவை இழந்து பெற்ற முதல் தொகுப்பை.
அப்பா மாதிரி நிறைய மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு கூறவே இப்பதிவு.
"டேய் பழசெல்லாம் நினைவு படுத்தி எழுது. உனக்கு ஒரு பிளாக் திறக்கலாம்" என்று தொடங்கினான் கண்ணன்.
எழுதி அனுப்பிய முதல் கவிதையை பார்த்த நண்பர், " ரொம்ப நல்லா இருக்குங்க. பின்னால தொகுப்பாய் வர கூட வாய்ப்பிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்" என்று நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் வாய் வைத்தார். என் அண்ணன் மகள் கவிதாவும், நண்பர்
அ.மு.செய்தும், "தொகுப்பு, தொகுப்பு" என்று தொண தொணத்து கொண்டு இருந்தார்கள். இந்த சமயத்தில் அவர்களையும் நினைத்து கொள்ள பிடிச்சிருக்கு. கவிதா என்ற தமிழ் என்ற உதிரா, மற்றும் என்
செய்யது, இனி, தூங்குவீர்கள்தானே?
"அழுத்தமான கவிதை.பாராட்டுக்கள்!" என்று முதல் பின்னூட்டத்தை குழைத்து ஊட்டினார்,
கோவி.கண்ணன் சார்! கவனியுங்கள் அவர் வாழ்த்துக்கள் என்று சொல்லவில்லை. பாராட்டுகள் என்றார்!. அது ஒருவேளை நண்பருக்கும் கண்ணனுக்கும் பிடித்து
பாரா-ட்டிவிட்டார்கள் போல..
இப்படியாக தத்தி, தத்தி போய் கொண்டிருந்த தளத்தின் ஓட்டத்தில் ஒருநாள் "நீங்கள் சிவகங்கை பா.ராஜாராமா?" என்று புயல் போல் நுழைந்தான் என்
சுந்தரா என்ற உங்கள்
ஜியோவ்ராம் சுந்தர். அன்று ஒரு நாள் மட்டும் கிட்ட தட்ட பதினைந்து பின்தொடர்பாளர்கள் சேர்ந்தார்கள். "எங்கிட்டு கிடக்கிறான்களோ" என்று நினைத்து கொண்டிருந்த பழைய உயிர் நண்பர்கள் மூன்று பேர், ஒரே நாளில் கிடைத்தார்கள்! உசும்பி உட்க்கார்ந்த மறக்க முடியாத நாள் அது!
சிறுக சிறுக பேச்சும், அரவமும், சிரிப்பும், சந்தோசமுமாக என் வீடு நிறைய தொடங்கியது. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ஒரு மனிதர்கள் எனவே உள் வாங்குகிறேன் எப்பவும். அப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் சேகரித்திருக்கிறேன் இப்போது!
பின்னூட்டமிட்டது ஒரு 10% மனிதர்கள் என அனுமானிக்கலாமா? என்று அறுதியிடும் இணையம் சம்பந்த பட்ட பார்வை என்னிடம் இல்லை. ஆனால்..
"எத்தனையோ ஆயிரம் கண்கள் என் கவிதையை வாசித்திருக்கும் என்றும் எத்தனையோ ஆயிரம் மனங்கள் என் கவிதையில் இடறி இருக்கும்" எனவும் நினைத்து கொள்ள பிடித்திருக்கிறது.
"ஒன்னுக்கு பத்தாக நினைத்து கொள்வதே இந்த பயலுக்கு பொழைப்பா போச்சு" என்று குறுக்கிடுகிற உங்கள் மன ஓட்டம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. எனினும், எனக்கு பிடித்த மாதிரி நினைத்து கொள்ளும் என மன ஓட்டத்தை பகிரத்தானே வேணும்.
பாருங்கள் பேச்சு சுவராஸ்யத்தில் நூலை விட்டு விட்டேன். ஆங்..இப்படியாக போய் கொண்டிருந்த ஒரு நிறை நாளில்,
உயிரோடை லாவண்யா ஒரு மின் மடல் பண்ணுகிறார்கள்,
"உங்கள் கவிதைகளை தொகுக்க விருப்பமா பா.ரா.?" என்று. நம்ப முடியாத திருப்பம் அது.
(கட்டு கட்டாக எழதிய கத்தைகளை" தேர்வு பெற்றால்..எங்கள் பதிப்பக செலவிலேயே தொகுப்பு வரும்" என்று விளம்பரம் செய்த சிந்து அறக்கட்டளை(என நினைவு)க்கு அனுப்பிய முயற்சியும்,.. பிறகு தெரிந்த ஒரு பதிப்பகத்தில் "பத்தாயிரம் இருந்தால் அச்சு கோர்த்துருவோம்" வார்த்தையை கேட்டு தொகுப்பு கனவை குழி தோண்டி புதைத்து, சம்மணம் கூட்டி மேலே உட்கார்ந்து கொண்டதும் நினைவாடுகிறது...இத்தருணத்தில்.)
லாவண்யாவிடம், "சரி" சொல்லி, நண்பர்களுக்கு அந்த மெயிலை பார்வர்ட் பண்ணி, இருவரும் தயார் ஆவதற்குள்
லாவண்யாவே தளம் நுழைந்து, கவிதைகளை வாரி சுருட்டி கொண்டு போகிறார்கள்.
வீட்ல எந்த ஒரு நல்லது, கெட்டது என்றாலும் கௌரி, கவிதா, சீதா என்ற எதிர் வீட்டு மூன்று மருமகள்களும் இடுப்பில் சேலையை சொருகிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள். "எதுக்குண்ணே சமையக்காரருக்கு கொண்டு போயி காசு கொடுக்கிறீக" என்று உரிமையாய் கடிவார்கள்.
அவர்களை பார்த்தது போல் இருந்தது சகோதரி
லாவண்யா வருகை.
லாவண்யா கொண்டு போன இடம்
அகநாழிகை!
"அட, நம்ம
வாசு!" என்று நிமிர்வதற்குள்,..
"உங்கள் கவிதைகள் அச்சுக்கு போயிருச்சு, அட்டை தயார், புத்தக சந்தைக்குள் வந்துவிடும்" என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டே இருப்பார்
வாசு.
"சரி, எல்லாம் தயார். முன்னுரை எழத தொடங்குங்கள்" என்று வாசு சொன்ன போது துணுக்குற்றேன். நம்ம கவிதைக்கு நம்மளே என்னத்தை முன்னுரை எழதுவது என, "நண்பன்
நேசனை விட்டு ஒரு விமர்சனம் போல் எழுத சொல்வோமா,
வாசு?" என்று கேட்ட போது..
"சரி. ஆகட்டும். சீக்கிரம்.."என்றார்.
நேசனிடம் கொண்டு போனேன். "நட்பை விலக்கி விட்டு நேர்மையான விமர்சனமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்" என கேட்டுக்கொண்டேன்.
நேசனிடம் ஒரு அதீத குணம் உண்டு. கவிதைகளை சார்பற்று அணுகும் திறன்! குறையை நேர்மையாக உணர்த்தும் பக்குவம். என் தளத்தில் பின்னூட்டம் வாயிலாக சொல்லி சென்றதை விட, பிரதி மாதம் ஒரு குடும்பம் பிழைக்கிற அளவு தொலை பேசிக்கு செலவு செய்து பக்குவ படுத்துவது அதிகம். கோமணத்தை வரிந்து கட்டிக்கொண்டு உழுது தீர்த்து விட்டான் நண்பன்! என் அன்பும் விலகாத படிக்கு. அவன் நேர்மையும் பிசகாத படிக்கு.
ஆக, இந்த ஆறு மாத காலத்தில் ஒரு விஷயத்தை தீர்க்கமாக உணர்கிறேன். இந்த வலை உலகம் என்பது சற்றேறக்குறைய ஒரு முழு குடும்பமாக இயங்குகிறது என்பதே அது!
எந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை? அல்லது பிரச்சினைகள் இல்லாத குடும்பம், குடும்பமா என்ன?
உயிருக்கு போராடும் சக பயணிக்காக ஒன்று சேர்வது தொடங்கி, சக பதிவரின் குடும்பத்தில் ஒரு விலை மதிப்பற்ற உயிர் இழப்பு ஏற்படும்போது, அவரின் மனசிற்கு நெருக்கமாக தன்னை அர்பணித்து கொள்வது வரையில் என..
யோசியுங்களேன்..
எப்பேர்பட்ட குடும்பம் மக்கா, நம் குடும்பம்!அந்த குடும்பத்தில் இருந்து, இன்று ஐந்து புத்தகங்கள் வெளியீடு ஆகிறது. அடுத்த புத்தகை சந்தைக்கு இது ஐநூறு, ஐயாயிரமாக பெருகட்டும் என்பதே விருப்பம். வேண்டுதலும்.
லாவண்யா,
வாசு,
நேசா, மற்றும் என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி வரும் உங்கள் யாருக்கும் நன்றி சொல்ல போவதில்லை. யாருக்கு யார் நன்றி சொல்வது?
நினைவு கூர்கிறேன், அவ்வளவே!
வேலையோடு, வேலையாய் நம் விசேஷத்திற்கு ஒரு எட்டு போயிட்டு வந்திருங்க மக்கா...
நிறைய அன்பும், சந்தோசங்களும்!