Sunday, January 30, 2011

காதல் படிக்கட்டுகள்

இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டது எனக்கு. அவளுக்கும்தான். எப்போதாவது 'கல்யாணம் கார்த்தி' களில் பார்த்துக் கொள்ளவென கிடைத்துக் கொண்டிருக்கிறாள்.

"அக்கா வரலையா மாமா?" என்கிறாள். அவுகளுக்கு வயல்ல வேலைன்னு வரலை" என்கிறாள். சுண்டு விரலை பிடித்து வருகிற பெரியவளை தலை தடவி பெயர் சொல்லி அழைக்கிறாள். தோளில் சாய்ந்து, வர முரண்டுகிற சின்னவனை கன்னத்தை நிமிண்டி தன்னை " சித்திடா" என்று அறிமுகமாகிக் கொள்கிறாள். இருக்கிறமாதிரி இருந்து கொண்டே ..இல்லாமல் ஆனதை சொல்கிறாள். எனக்கும், இதுகளுக்கும், ஏன் தனக்கும் கூட!

வேறு வேறு மாதிரியாகி விட்டது எல்லாம். ஆயினும் அவர்களை நான் அவள் என்று நினைக்கவும் தீர்மானிக்கவும்தான் ப்ரியமாக இருக்கிறது. எத்தனையோ 'வாங்கி வந்த வரங்'களை எத்தனை வருடம் கழிந்தாலும் மாற்ற முடியாது. மாற்றவும் பிடிக்காது!

ஒரு திருமண நாளும் மற்ற 'காரிய' நாட்களும் ஒரு நாளுக்கான அவகாசமாக இருப்பது போதாமல் இருக்கிறது. விசேஷ நாளுக்கு முந்திய நாள் வந்து, கழிந்த பிந்திய நாள் போகப் பிடித்திருக்கிறது. உறவுகள் சூழ வாழவென கிடைக்கிற 'மூச்சாரல்' மட்டும்தான் காரணமா?

எல்லாம்தான்! எதை இல்லை என்று சொல்லிவிட முடியும்?

இப்போதெல்லாம் மிக கூட்ட நெரிசலான முகங்களிடையே இருந்துதான் அவளின் முகத்தை பொறுக்கி எடுக்க முடிகிறது என்னால். ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளில், சினிமா இடைவெளியில், தனியான நடையில், அயர்ச்சி தெரியாதிருக்கவென அவளின் மின்னொளி வீசும் கண்ணை, சிரிக்காமல் சிரிக்கிற முகத்தை, தேடி அடைகிறது உண்டுதான் நான்.

மூன்று நான்கு வருடத்தின் முந்தியதொரு நாள்...

உறவுப் பையனொருவனின் திருமண நாள் அது. அவளுடைய அவர் இன்றியும் என்னுடைய இவள் இன்றியும் போயிருந்திருக்க நேர்ந்தது- எப்பவும் போல்! (உறவினர்கள் எனக்கும் அவளுக்குமான உறவினர்கள்தானே? இவளுக்கும், அவருக்குமான உறவினர்களா என்ன?)

முந்திய விசேஷ நாட்களில் பார்த்தது போலெல்லாம் இல்லை. குழந்தைகள் வேறு வளர்ந்து வருகிறார்கள் இல்லையா? மற்ற எல்லா உறவினர்களைப் போலவே அவளும் நானும் ஆகிக் கொண்டிருந்தோம். எதையெதையெல்லாமோ கருதி எது எதுவெல்லாமாகவோ ஆகிக் கொண்டிருக்கிற எத்தனையோ பேர் போல.

திருமணமெல்லாம் முடிந்து புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புகைப் படத்துக்காக நின்று கொண்டிருந்தவள் நினைத்துக் கொண்டாற்போல் ஓடோடி வந்து என் சின்னவனை அள்ளியெடுத்து, ஓடோடிப் போய் மீண்டும் அந்த ' குரூப் போட்டா'வுக்காக நின்று கொண்டாள்.

நைந்த பலவீனமான இழைகளை முட்ட அறுந்துவிடாதபடிக்கான நெய்தல் அது!

அப்புறம், அன்றைய இரவு...

என்னுடைய மூத்தவள், அவளுடைய மூத்தவளுடனும், மற்ற சேக்காளிகளுடனும் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாள். விடிந்தால் 'அவரவர் வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு' என்று புறப்பட்டாக வேணும். அடுத்தது யார் வீட்டுத் திருமணமோ? யார் வீட்டுக் காரியமோ?

சின்னவனை தூக்கிக் கொண்டு, வாசலில் இருந்த திருமணக் கொட்டகை தாண்டி, விரிந்த வேம்பின் கரிய நிழலில், சாய்ந்து கிடக்கும் மாட்டு வண்டியின் முகட்டுக் கட்டையில் வந்து அமர்ந்து கொள்கிறேன்.

வாசலுக்கு வருகிறாள் அவள். திசையெங்கும் விரிந்து பரவிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். இடுப்பில் இருக்கிற அவளின் சின்னவனுக்கு ஊட்டியபடியும், அவனுடனே பேசியபடியும் அசங்கி, அசங்கி வந்து கொண்டிருக்கிறாள். வருவாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறதின் நீட்சியில்,

"மாமாவா?" என்கிறாள், நெருங்கி.

"இவனை சாப்பிட வைக்கிறதுக்குள் போதும் போதுமுன்னு ஆயிரும்" என்கிறாள் தொடர்ந்தாற்போல்... எப்போதுமே இப்படித்தான் அவள்!.. எது ஒன்றையும் தொடங்க சிரமப் பட்டவள் இல்லை.

பேசிக் கொண்டே ஊட்டிக் கொண்டிருக்கிறாள்- மடியில் இருக்கிற என்னுடைய இவனுக்கும், இடுப்பில் இருக்கிற அவளுடைய அவனுக்கும். பேச எனக்கொன்றுமில்லை. கேட்க நிறைய இடம் இருக்கிற இடத்தில், பேச என்ன இருக்கிறது? அட, பேசித்தான் என்ன?

"சந்தோசமா இருக்கிறீர்களா மாமா?"

நேரடியான எந்தக் கேள்வியும் எனக்கு தூக்கிவாரிப் போடக் கூடியதானது. குரல் கட்டி, ஆம் என்றோ இல்லை என்றோ அல்லது இரண்டுமில்லாத ஒரு குரலிலோ தோய்ந்து பலவீனப் படுகிறேன். மடியில் இருக்கிற குழந்தையின் மென் மயிரை முகர்ந்தபடி கீழே குனிந்திருக்கிறேன். பேச்சரவமற்ற தீவிர அமைதி...

சோற்றீரத்துடைய கை கொண்டு என்னை நிமிர்த்துகிறாள் அவள்.

"நான் சந்தோஷமா இருக்கிறேன் மாமா" துருதுருவெனும் கருமை மின்னும் கண்களுடனும், சிரிக்காமல் சிரிக்கும் முகத்துடனும்.

குழந்தைகளிடமிருந்து மீந்த அந்த கடைசிச் சோற்று உருண்டையை எனக்கு ஊட்ட நீட்டுகிறாள்.

வாங்கிக் கொள்கிறேன் நான்.

போய்க் கொண்டிருப்பவளின் இடுப்பிலிருந்த குழந்தை என்னை திரும்பிப் பார்த்தபடி போய்க் கொண்டிருக்கிறது

பி. கு.

இப்பொழுதெல்லாம் திருமணத்திற்கு, காரியத்திற்கு அவளுடைய அவர் மட்டும் பார்க்க கிடைக்கிறார். நான் இவளையும் அழைத்து செல்ல தீர்மானித்திருக்கிறேன்.

--நன்றி 1997' பிப்ரவரி, ஜூனியர் விகடன்!


***

1997' பிப்ரவரி ஜூனியர் விகடனில் பிரசுரமான என் முதல் பத்தி எழுத்து இது. வழக்கம் போல இதையும் தொலைத்திருந்தேன்.. சுகுணா நண்பரான பிறகு, இதை விகடன் அலுவலகத்திலிருந்து தேடி தர இயலுமா சுகுணா என்று கேட்டிருந்தேன். 2000-மாவது வருடத்தில் இருந்துதான் விகடன் கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது என்றும், வருடம் நினைவில் இருக்கா? என்றும் கேட்டிருந்தார்.

எனக்கு வருடம் நினைவில் இல்லை. பிறகு சுகுணாவிற்கு ஒரு நினைவூட்டல் மெயில் செய்திருந்தேன். இதை செய்திருக்க வேணாம் என்பதை பிறகுதான் உணர்ந்தேன். ஏனெனில், சுகுணா இப்படி ஒரு மெயில் செய்து, பதில் நினைவூட்டல் செய்திருந்தார்.

"முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவசியம் வாங்கி அனுப்புகிறேன். ஆனால் இப்போது உங்களுக்கு படிக்கட்டுகளில் இருந்து இறங்கும் வயது ((- "

நல்லாரும் ஓய் என கப்சிப் ஆகி விட்டேன். நாம் சும்மாருந்தாலும், இருக்க அனுமதிக்க மாட்டார்கள் நம் நண்பர்களும் இந்த காதலும்!.. இல்லையா? இந்த பயணத்தில், நண்பர் ரவி, இதை அவர் கோப்பில் இருப்பதாக கூறி தந்து உதவினார். சற்று முன்பு இவர் இதை செய்திருக்கலாம். சுகுணாவிடம் இவ்வளவு பேச்சு வாங்கியிருந்திருக்க வேணாம் என நினைத்துக் கொண்டேன்.

மூன்று காரணங்களுக்காக இதை தொடர் பதிவாக செய்ய விருப்பம். ஒன்று, படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதில் குதூகலித்து மகிழ்ந்த சுகுனாவிற்காக. இரண்டு, எனக்கும் மனைவிக்குமான தூரம் சற்றேறக்குறைய 4000 கி. மீ. இருப்பது. மூன்று, இன்னும் இரண்டு வார தூரமே இருக்கிற இந்த வருட காதலர் தினத்துக்காக!

இந்த தொடர் பதிவிற்காக ஒருவர் ஐந்து நண்பர்களை மட்டுமே அழைக்க வேணும் என்கிற ஒரே ஒரு ரூல் மட்டும் வச்சுக்கலாம். மற்ற நண்பர்களை, மிச்ச நண்பர்களுக்காக விட்டுத் தரலாம். சரியா நண்பர்களே?..

அப்படி, நான் இந்த ஐந்து பேரை அழைக்க விரும்புகிறேன்.

1. அனுஜன்யா

எவ்வளவு நாள் ஆச்சு சுவராசியம் ததும்பும் இவரின் எழுத்து வாசித்து.

2. மணிஜி.

காவன்னா என்கிற அட்சரமே காதலுக்குதான் என்கிற நண்பன்! பிறகு நீர் இல்லாமலா ஓய்!

3. செ. சரவனக்குமார்.

சும்மாவே ஆடுவீர். சலங்கைய வேறு கட்டி விட்டால் கேட்கவா வேணும் என அக்பர்ஜி ஒரு பின்னூடம் இட்டார் இவர் தளத்தில். சும்மா,..ஜல்..ஜல்..ஜல்..

4. அக்பர்ஜி

அதே சலங்கை பார்ட்டிதான்! சலங்கைகளுக்கு வேறு வேறு ஜல்ஜல்- ஆ இருக்கிறது?

5. சமுத்ரா

சுவராசியமான பதிவராக இருக்கிறார். இவரை, இதையும் பேச வைத்து கேட்க விருப்பம்.

***

இதென்ன,.. பெண் பதிவர்கள் இல்லையா என்கிற கேள்விதானே? விருப்பம் உள்ளவர்கள் தொடரட்டும்! அழைக்கிற நண்பர்கள் அவர்களிடம் முன் அனுமதி பெறுவது நலம். எல்லாவற்றுக்கும் ஏன் என்றெல்லாம் என் மகள் மாதிரி கேள்வி கேட்காதீர்கள். அவளுக்கு சொல்கிற பதில்தான் உங்களுக்கும்.

"எல்லா ஏன்களுக்கும் என்னிடம் பதில் இல்லை!"

***


Sunday, January 23, 2011

மிதக்கும் வெளியில் நீந்தும் தோணி


(Picture by cc licence, Thanks Heavenhated)

வளுக்கு ஆறேழு வயது
அதிகமிருக்கும் என்னைவிட.

சாதாரண நாளின்
அசாதாரண இருள் போல இருந்தவள்
நல்ல பசிண்ணா என தொடங்கினாள்.

ன்னிடம் நுரைகளற்ற மூணு அவுன்சிற்கான
காசு இருந்தது.

போதும்தான்.
வைத்து ஓட்டிவிடலாம்.

ட்லி புரட்டாவை பிசைந்து உருட்டி
எறிந்ததில் எந்த விவேகமும் இல்லை.
பசியின் வேகம்
அப்பேற்பட்டதுதானே எப்போதும்.

ருந்துபோக நேரம் இருக்குமா
என்றாள் இடையில்.

ன்றி காட்டுகிறாள் போல.

ருந்து போக முடிவெடுத்து
சைக்கிளில் வைத்து ஊருக்கு வெளியே
ரயில்வே லைனை தாண்டி வந்தாகிவிட்டது.

டை கட்டுகிற நேரமாய்
பேசமாட்டாது மூசு மூசென்று
அழுதபடி சொன்னாள்

"நீங்கதாண்ணா மனுஷியா நடுத்தியிருக்கீக"

நானாவது நடுத்தினேனே என்பதைவிட
உனையாவது நடத்தினேனே
என்றிருந்தது எனக்கு.

--கவிதாசரண்
(வருடம் மாதம் குறிப்பில் இல்லை. நன்றி ப்ரபா!)

Monday, January 17, 2011

குழந்தைக் குருவி


(Picture by cc licence, Thanks Sfllaw )

ழையின் வேகம் பொறுக்க மாட்டாது
புறப்பட்டு வந்த சிட்டுக் குருவியொன்று
எனைப் பார்த்ததும் புறப்பட்டும்
போய்விட்டது.

நொடி நேரம் இருக்குமா
புறப்பட்டு வந்ததிலிருந்து
போனது வரையில்?

னக்கொன்றும் ஆட்சேபனை இல்லை
வந்த சனியன் சற்று இருந்து
நனையாமல் போக.

ன்றாலும் வாஸ்த்தவம்தான்..

நாளையோ மறுநாளோ
நான் கிடைப்பேன்.

ழை கிடைக்குமா?


--கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி

Thursday, January 13, 2011

பயணக் கட்டுரை


(Picture by cc licence, Thanks indi.ca)

நாலு பத்து வண்டிக்கு
நாலு மணிக்கு கிளம்பினால்
போதாதா என்றாள்.

நாலு பத்துக்கு வந்த போது
நாலு பத்து வண்டி
நாலு மணிக்கே போனதாம்.

நாலு மணி வண்டியை
நாலு பத்து வண்டியாக சொன்னேனென
அஞ்சு முப்பது வரையில்
பேசிக் கொண்டிருந்தாள்.

ஞ்சு நாப்பது வண்டியை
அஞ்சு முப்பதுக்குதான் இனி
வண்டியென சொல்ல
அனுபவம்தான் கற்றுத் தந்தது.

போக,

ஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்
இவள் பேசாமல் இருந்ததும்
அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்
ஆச்சரியமாக வேறு இருந்தது.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
Monday, January 10, 2011

பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்--மூன்று

ஜ்யோவ்ராம் சுந்தரின் கடிதம்

jeevaram sudhar,
102-lingi chetti street,
2nd floor,
chennai 600001,
5/02/1997


ப்ரியமுள்ள ராஜாராம்,

உங்களோட லெட்டரைப் படிக்க ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்கள் கவிதை எழுதுவதை விட கடிதம் நன்றாக எழுதுகிறீர்கள் போல. அதனால் கதை கிதை என்று ஏதாவது செய்து பார்க்க வேண்டியதுதானே.. பழகப் பழக வந்துவிட்டுப் போகிறது. முனைப்புதான் வேண்டும்.

உங்களுடைய அந்த 'பழகிய கிளிக் குஞ்சேயானாலும்' கவிதை ரொம்ப நல்லாருக்கு ராஜாராம். உங்களுடைய வழக்கமான கடைசி வரிகளில் திருப்பம் என்ற காலாவதியாகிப்போன சிறுகதைப்பாணி கவிதைதான். ஆனால் evocative வகையில் மிக உயர்ந்த தளத்தில் இயங்குகிறது கவிதை.

'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' -கநாசு / நகுலன் -அப்படியே அற்புதமாய் பொருந்துகிறது உங்கள் கவிதைக்கு. அளவு முக்கியமில்லைதான். ஆனால் இதைப் போன்று நான்கு - ஆறு சின்னஞ்சிறு வரிக் கவிதைகள் , துணுக்குகள் ஆகிவிடக் கூடிய அபாயத்தை உணர்கிறீர்கள்தானே... சிந்தனை சிதறல்களாக கவிதைகள் ஆகி விடக் கூடாதல்லவா?..

எனக்கு மிகப் பிடித்த நம் குமார்ஜி கவிதை, "இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்" இது நன்றாக இருந்தாலும் ஒரு துணுக்காக Quotation-க்கு உபயோகப் படும் சில வரிகளாகவே மாறிவிடுகிறது அல்லவா...இப்போது நான் சொல்ல வருவது புரிகிறதுதானே...

over a period of time, உங்களுக்கு கவிதை என்பது அழகாக கை கூடி வந்துவிட்டது. இனி, பழகிய பாணியை விட்டு விட்டு தைரியமாக நீங்கள் வேறு விதங்களில் முயற்சி செய்யலாம். நான் குறிப்பிடுவது -evocative (உணர்ச்சி மயமாக்கல்) மற்றும் கடைசி வரிகளில் திருப்பம்) எனக்கு தெரிந்து உங்களது எல்லாக் கவிதைகளிலும் இதுவே பிரதானமாக இருக்கிறது.

கவிதையைப் பற்றி விமர்சனம் செய்தே கன்றாவியாய்ப் போனேன் நான். உங்களுக்கு பிடிக்காவிட்டால் எல்லாவற்றையும் ஒதுக்கி விடுங்கள். சும்மா, பொழுது போகாமல் கண்டதைப் படிச்சுட்டு கண்டபடி விமர்சனம் பண்ணிக்கிட்டிருப்பேன்.

சசி, மஹா நல்லா இருக்காங்களா? அவர்கள் பொக்கிஷங்கள் மக்கா... அவர்களை நீங்கள் சரியானபடி ஆளாக்கிவிட்டால் அதுவே பெரிய விஷயம். கவிதையெல்லாம் பிறகான படைப்புகள்தான். அதெப்படி மக்கா ஆண் குழந்தைக்கு பெண் பெயரும், பெண் குழந்தைக்கு ஆண் பெயரும் வைத்தீர்கள்? குழந்தைகள் ஓவியமாக இருக்கிறார்கள் என் கண்ணுக்குள் அப்படியே. ஆனா திருப்பி உங்க வீட்டுக்கு வந்தா அடையாளமே கண்டு பிடிக்க முடியாது. சின்ன வயதில் வளர்ச்சி என்பது அதிகமிருக்கும்தானே...இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். அதைத் தக்க வைத்து கொள்வது அவரவர் பாடு.

நீங்கள் போக்கு காட்டி ஓடுவதில் சமர்த்தர் என்றால் லதா மன்னி துரத்திப் பிடிப்பதில் வல்லவராயிருப்பார். இப்படியேதான் சமாதானப் பட்டுக் கொண்டிருக்கிறது உலகம் : நாமும்.

கடந்த பத்து நாளாக ஒரே தலைவலி. டாக்டரிடம் பார்த்ததில் அவர் b.p இருக்கிறது, ecg எடுங்கள், blood, urine test எடுங்கள் என்றார். ecg-ல் problem இருக்கிறது. அதனால் cardiologist ஐ பாருங்கள் என்றுவிட்டார். வீட்டில் அம்மாவும் ஒரே ரகளை. இன்று cordiologist ஐ பார்த்தேன். முந்தா நேற்றைவிட இன்று b.p அதிகம். ஆனால்- i dont want to jump into conclusions. இந்த வயதில் இதெல்லாம் இருக்கக் கூடாது என்று மருந்து மாத்திரைகள் இஷ்டத்திற்கு எழுதினார்.

என் அம்மா, எனக்கு ஒரே பையன் டாக்டர் என்று சென்டிமென்டலாக ஏதோ சொன்னார். மக்கா, நான் ஒரே பையனாக இருந்தால் என்ன, ஒன்பதாவது பையனா இருந்தா டாக்டருக்கு என்ன- ஆனால் அவரும் பொறுமையாக கேட்டுக் கொன்டார். இனிமேல் சிகரெட் பிடிக்க கூடாதாம். தண்ணி- கூடவே கூடாதாம். சரி டாக்டர் என்று சொல்லிவிட்டு வந்து உடனே bottle ஐ open பண்ணிவிட்டேன்.

ஆனால் அம்மா அழுவதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஏன் அழவேண்டும்- இது என் வாழ்க்கை ; அதைத் தீர்மானித்துக் கொள்ள எனக்கு உரிமை இல்லையா...when i say that i don't bother for all these and i'm even ready to die, why should they worry about these? எனக்கு குடிப்பது பிடித்திருக்கிறது.- அதனால் சில பிரச்சினைகள் வந்தால் வந்து விட்டுப் போகட்டுமே. அந்தப் பிரச்சினையா அல்லது குடியா என்பது நான் தீர்மானிக்கவேண்டிய விஷயமல்லவா..? அம்மா சண்டை போடும் போதும், கத்தும் போதும் கோபம் வருகிறது. அழும்போது கஷ்டமாக இருக்கிறது. ஒரு பையனை இழந்துவிட்டு, என்னை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்...புரிகிறது- ஆனால் இது என் choice இல்லையா ராஜாராம்?

b.p யையோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளையோ குறைத்துக் கொள்ள மாத்திரைகள் இருக்கின்றன எனும் போது இதை ஒரு பிரச்சினையாக்க வேண்டாம்தானே. இப்போது கூட சமயலறையில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

அப்புறம் ...வேறு ஏதாவது எழுதுனீங்களா...

உங்களது கவிதை ஆனந்த விகடனில் வந்தது எனக்கு தெரியவே தெரியாது. atleast நீங்களாவது ஒரு post card அனுப்பியிருக்கக் கூடாதா ராஜாராம்? ஆ.வி. போன்ற ஒரு popular magazine-ல் நல்ல கவிதை வருவதென்பது (இப்போது கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளிலும் கவிதைகளை அங்கீகரிக்க துவங்கி விட்டார்கள்) மகிழ்ச்சியான விஷயமல்லவா...அதுவும் உங்கள் கவிதை வந்திருக்கு என்றால் எனக்கு தெரியப் படுத்தி இருக்க வேணாமா ராஜாராம்...

அப்புறம் மக்கா...அடுத்த தடவை ப்ரபாவிற்கு கடிதம் எழுதும் போது please convey my sincere apologies- அவரது கடிதத்திற்கு நான் பதில் எழுதாதற்கு. Actual-ஆ, நான் ஒரு பதில் எழுதி கிழித்து போடும்படி ஆகிவிட்டது.- வேறு சில காரணங்களால். அவங்க இப்போ எங்கே work பண்றாங்க...? அவங்க madras லயா வேலை செய்யறாங்க? இல்லை madras வராங்களா? நான் அவங்களுக்கு வேலை விஷயமாகச் சொல்றேன்னு சொன்னது அப்படியே மறந்து போய்விட்டது. உங்களது கடிதத்தில் ப்ரபா என்ற வார்த்தையை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

ப்ரபாவிற்கு madras-ல் யாராவது உறவினர் இருந்தால்-அவர்களிடம் ஒருவாரம் போல் தங்கலாம் என்றால் சென்னை வரலாம். கண்டிப்பாக அதற்குள் நான் வேலை பார்த்துத் தருகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க மக்கா- அவங்க விஷயம் அப்படியே மறந்து போச்சு...நீங்க எழுதுங்க- மறக்காமல். நான் நடவடிக்கை எடுக்கிறேன்.

போன முறை அவங்களுக்கு கடிதம் எழுதாதற்கு அப்போதைய GM திடீரென்று வேலையை விட்டு சென்றதும் ஒரு காரணம்தான்.

vadhyar என்னை ஓடு காலி என்றெல்லாம் திட்டாது மக்கா. நாந்தான் ரொம்ப feel பண்ணினேன். வேலையை விட்டு வந்த அன்று, ஒருவர்கூட என்னை atleast வாசல்வரை வரை கூட வந்து வழியனுப்பவில்லை. M.D. 'சரி' என்று கை குலுக்கி விட்டுப் போய்விட்டார். ஆனால்..இப்போது மறுபடியும் நான் வந்து சேரமுடியுமா என அடுத்தவர்கள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சான்சே இல்லை- என்பது என் பதில்.

நீங்க எழுதுங்க ராஜாராம்..

அன்புடன்
சுந்தர்.

***

சற்றேறக் குறைய பதினான்கு வருடங்கள் முன்பு சுந்தர் எழுதிய கடிதம் இது. ஜீவராம் சுந்தராக இருந்தவன், ஜ்யோவ்ராம் சுந்தராக மாறியிருக்கிறான்!

சுந்தர், ப்ரபா, குமார்ஜி, தெய்வா-இந்த நான்கு நண்பர்களிடையே பேனா நட்பாக தொடங்கிய சினேகம்-என்ற நினைவாக மீந்த ஒரு கடிதம்... ஒரே ஒரு கடிதம்! இந்த ஒரு நண்பனின், ஒரே ஒரு கடிதத்தில் எவ்வளவு விஷயங்களை பகிர்ந்திருக்கிறான்! இவனிடமிருந்தே இன்னும் எத்தனை கடிதங்கள்!

மிகுதி மூன்று பேரிடமிருந்து இன்னுமின்னும் எத்தனையெத்தனை கடிதங்கள்! மலைப்பாக இருக்கிறதுதான்!

ஆக, சுந்தரின் இந்த கடிதத்தின் மூலமாக, இந்த பதினான்கு வருடங்களிலும் என் கவிதைகள் எந்த மாற்றமும் அடையவில்லை (evocation, கடைசி வரிகளில் திருப்பம்) என்பதை உணரும்படியே இருக்கிறது.

வாசிப்பு நின்று போனதே என் கவிதைகளின் தேக்க நிலைக்கு காரணமாகலாமோ என என்னை சமன் செய்து கொள்ளவும் இயலாமல் இருக்கிறது. இதற்கு நண்பன் நேசமித்திரன் காரணமாகிறான்.

இணையத்தில் எழுத தொடங்கிய பிறகு இணைய வெளியே என் வாசிப்பு களமாக இருந்து வந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

"இணையத்தில் நிறைய வாசிக்கிறீங்க போலயேண்ணே. உங்கள் வாசிப்பிற்கு முன்பாக வந்த கவிதைகளில் உள்ள அடர்த்தி, வாசிப்பிற்கு பின்பாக காணோமே அண்ணே" என்று முந்தைய வருடத்தில் குழப்பினான்.

ஒரு மாதிரி ரெங்கலாக வந்தது.

கவிதை எழுதுவதை விட பருத்திப்பாலோ, பட்டை சாராயமோ காய்ச்சுவது சுளுவோ என குழம்பியதும் / குழம்புவதும் உண்டு.

தற்சமயம் இந்த ப்ரபா வேறு, "அதென்ன சினேகிதியை மழை நாளோடும், சினேகிதனை வெயில் நாளோடும் பொருத்துகிறாய்?" என அழை பேசி குழப்புகிறாள்.

கவிதையைக் கொண்டு போய் பருத்திப்பாலோடும், பட்டை சாராயத்தொடும் பொருத்தும் போது நண்பர்களை கொண்டு போய் வெயிலோடு பொருத்தினால் என்ன? மழையோடு பொருத்தினால் என்ன?

யோவ்..பஞ்சாயத்தை விடுங்கய்யா... காய்ச்சப் போகணும்.. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்..

(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)

Thursday, January 6, 2011

பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்-- இரண்டு


(Picture by cc licence, Thanks Sahlgoode)

வெங்கடேஸ்வரய்யர்
செத்துப் போனார்.

கோமதி மாமிக்கும்
நடை உடை போச்சு.

செங்கல் உதிர்த்து எளிதாச்சு
கால் பதித்து ஏறும் மூலைச் சுவர்.

குழந்தைகளுக்கும் கையொன்றும்
நீளமில்லை நமக்கு போல்.

காலத்தை கேலி செய்தும்
வாயூர வைத்தும்
கடந்து போய் விடுகிறதுடா
கிளி மூக்கு மாங்காய்.

ப்போ எங்கிருக்கிறாய்
செல்வராஜ் நீ?

***


Tuesday, January 4, 2011

பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று


(Picture by cc licence, Thanks Ryemang)

ண்முக பவன் வாசலில்தான
அவனைப் பார்த்தேன்.

டையாளமே தெரியவில்லையாம் நான்.

ன்னை நான் இல்லாவிட்டால்
என்ன செய்வது என்று
யோசனையாய் இருந்ததாம்.

ல்லவேளை நான் நான்தானாம்.

முன்போல் இல்லையாம் ஊரும்.

ருக்மணி மில்ஸ் வந்ததில் இருந்தே
ஊர் மினுக்கிக் கொண்டு விட்டதாம்.

டேவிட் வாத்தியார் செத்துப் போனாராம்.

வனும் நானும் வைத்த வில்வங்கன்று
மரமாகி விட்டதாம்.

ல்லாம் பேசி மீள்கையில் சொன்னான்
நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேனாம்
ஒரேயடியாய்.

வன் இல்லையாம் ஸ்ரீதர்
இவன் தம்பியாம்.

- '94- பிப்ரவரி கணையாழி.

***

பி.கு.

இந்தப் பயணத்தில், நண்பர் G.ரவி, கணையாழியில் வந்த உங்கள் கவிதை ஒன்றும், ஜூனியர் விகடனில் வந்த 'காதல் படிக்கட்டுகள்' கட்டுரை ஒன்றும் என் கோப்பில் இருக்கு ராஜா" என்று கொடுத்து உதவினார்...நான்தான் எல்லாவற்றையும் தொலைக்கிறேன் போல. நண்பர்கள் முதற்கொண்டு! நண்பர்கள் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறார்கள் . எனை முதற்கொண்டு! நன்றி ரவி!

**


Saturday, January 1, 2011

பால்ய சினேகிதியும் சில மழை நாட்களும்--மூன்று

முந்தைய பதிவுகள் :- 'ஒன்று','இரண்டு'

அங்கு தொட்டு, இங்கு தொட்டு நம்மையும் தேட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு எவ்வளவு பாதுகாப்பு உணர்வை தருகிறது!

ப்ரபாவுடன் அழை பேசிய அன்று இரவு முட்டக் குடித்தேன். சாதாரணமாகவே முட்டக் குடிப்பவன்தான் என்றாலும் அன்று saturation point வரையில் குடிக்க தேவையாக இருந்தது. நினைவு தப்பவேணும், தப்பவேணும் என விரும்புகிற நாட்களில்தான் நினைவு தப்புவதே இல்லை.

ப்ரபாவிடம் பேசிய சகலத்தையும் லதாவிடம் அன்றிரவு பகிர நேர்ந்தது. இங்கு, இந்த பகிர என்கிற வார்த்தை கூட எவ்வளவு பாதுகாப்பான வார்த்தையாக இருக்கிறது. சரி,.. அனத்த அல்லது புலம்ப என்று உங்கள் வசதிப் படியே எடுங்களேன். ஏனெனில் லதாவும் அப்படித்தான் எடுத்திருப்பாள்.

"நாற்பது வயசாச்சு புள்ள. இப்ப தெரியாது. இன்னுமொரு எட்டுப் பத்து வருஷம் போய்ட்டா, இவள் தனிமை உணர தொடங்கி விடுவாள். அப்பா அம்மாவிற்கு பின்னால யார் இருக்கா இவளுக்கு? ந்தா நளினி கூட திருமணம் ஆகிப் போய்ட்டா (நளினி, ப்ரபா தங்கை). என்ன விளையாட்டுத்தனமா இருக்கு? குமாரிடம் பேசியிருக்கிறேன். மஹா திருமணம் முடிந்ததும் இங்கு வருவதாக சொல்லியிருக்கிறான். ப்ரபாவையும் வரச் சொல்லி சீரியஸா பேசணும் புள்ள. சவுதிக்கு போவதற்கு முன்பாக இதற்கு ஒரு முடிவு கட்டிட்டுத்தான் போகணும்" என்றேன்.

"சரி,..படுங்க காலையில் பேசலாம்" என்றாள் லதா. தரமான குடிகாரனை, "எதா இருந்தாலும் காலையில் பேசலாம்" என்பது மாதிரியான வார்த்தைகள் சுட்டெரித்து விடாதா?

"இல்ல புள்ள. இத இப்பவே முடிவு செஞ்சுட்டா பரவால்ல" என்பது மாதிரி என்னவோ சொன்ன நினைவு. (ஒரு இரவில்தானே சுதந்திரமே பெற்றோம் என்கிற வில்லங்க நினைப்போ என்னவோ?

"சரி..சரி..விடுங்கப்பா. அதாவது நிம்மதியா இருக்கட்டுமே" என்று முடித்து விட்டாள் லதா. நினைவு தப்பவேணும் என்று விரும்பி குடித்ததாக முன்பே சொல்லியிருந்தேன் இல்லையா? லதாவின் இந்த வார்த்தைக்கு பிறகு நினைவு தப்பி விட்டது. ஆக, நினைவு தப்பும் ரசாயனம் சரக்கில் இல்லை போல.

மஹாவின் திருமணத்திற்கு பிறகு, மகன் "வினோ", கோவையில் வீடு கட்டி கிரஹப்பிரவேசம் வைத்திருந்தான். பத்திரிக்கை வைக்க சிவகங்கை வந்திருந்தான். எனக்கும் பத்திரிக்கை வைத்து, மஹா வீட்டிற்கும் போய் தனியாக பத்திரிக்கை வைத்திருந்தான்.(இதை, மற்றும் இந்த பயணத்தில் சந்தித்த என் நண்பர்கள் அனைவரையும் குறித்து ஒரு பயணக் கட்டுரையாக தொகுக்க விருப்பம். அதில் விரிவாக இதை பேசுவோம்) ப்ரபாவும், குமாரும் சிவகங்கை வருவதாகவும் சொல்லி இருந்தார்கள். அதற்குள்ளாக கோவை போகும் சந்தர்ப்பம் இது. கோவை போகும் போது இனி ப்ரபாவை பார்க்காமல் திரும்ப முடியுமா?

அப்படி, ப்ரபாவை, என் சினேகிதியை, என் பால்ய பருவத்தின் மழை நாட்களாக இருந்த தோழியை சந்தித்தேன்!

என்ன அருமையான தருணங்கள் அவை! மன்னிக்கணும் நண்பர்களே, அந்த தருணங்களை என்னால் அப்படியே பகிர இயலவில்லை. பகிரவும் இயலாது. எல்லா உணர்வுகளையுமா பகிர்ந்து விட முடிகிறது?

மஹா பிறந்த அன்று உன் மன நிலையை மூன்றில் ஒரு பங்காக சுருக்கி வரையவும் என்று சொன்னால் எப்படி முடியாதோ அப்படி இதையும் பகிர இயலவில்லை. கோவையில் நண்பர் வடகரை வேலணை சந்தித்தேன். (இவர் குறித்தான பகிர்வையும் பிறகு பயண கட்டுரையில் பார்ப்போம்) சந்தித்த சில நிமிஷங்களிலேயே ஒரு கேள்வி கேட்டார். "மகளின் கழுத்தில் தாலி ஏறப் போகும் அந்த தருணத்தில் உங்க மன நிலை எப்படி இருந்தது ராஜாராம்?" என்றார். வேலனும் பெண் குழந்தையின் தகப்பன்.. இல்லையா?

நான் சற்று யோசித்து, (அந்த தருணத்திற்குள் மீண்டும் நுழைய வேணும் இல்லையா?) "ஐயர் தாலியை கையில் எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்த சமயம், மஹா நிமிர்ந்து என்னை ஒரு பார்வை பார்த்தாள் வேலன்" என்று சொல்லிக்கொண்டே வந்தவனால், மேற்கொண்டு பேச முடியாமல், "அந்த உணர்வை சொல்லத் தெரியலையே வேலன்" என்று முடித்து விட்டேன்.

அப்படியாகவே இப்பவும் இருக்கிறது. இப்படியாக பகிர முடியாத உணர்வுகள் என எவ்வளவு இருக்கிறது. சரி! அதது அப்படியே இருக்கட்டும். அப்படியே இருந்து விடுவதில்தான் அததற்கு அழகும் கூட!

மறுநாள், வினோ வீட்டு விசேஷத்திற்கு ப்ரபாவும் வருவதாக இருந்தது. வினோ, ப்ரபாவிற்கும் பத்திரிக்கை அனுப்பியிருந்தான். அது சமயம் ப்ரபா ஒரு ஃபைல் கொண்டு வந்து தந்தாள். 'raja makkaa' என்று தலைப்பிட்ட ஃபைல் அது. ஐந்து வருடங்களாக அவளுக்கு நான் எழுதிய கடிதங்கள் அதில் இருந்தன. இப்படியே குமார் கடிதங்களையும் வைத்திருக்கிறாளாம். ஃபைலை புரட்டினேன். இன்றிரவும் முட்டக் குடிக்கிற சந்தர்ப்பத்தை தர போதுமான காரணங்கள் அவற்றில் இருந்தன.

அதில் நம் ஜ்யோவ்ராம் சுந்தரின் கடிதம் ஒன்றும் இருக்கக் கண்டேன். "இது எப்படி இங்கு வந்தது ப்ரபா? என கேட்டேன்." நீதாண்டா அனுப்பி தந்த.எனக்கு வேலை விஷயமா சுந்தரிடம் கடிதம் எழுதி இருந்தேல்ல. அதுக்கு சுந்தர் பதில் எழுதிய கடிதம் இது. அதுனால எனக்கு அனுப்பி இருந்த" என்றாள்.

சுந்தருக்கு போன் பண்ணி, " '97-ல் நீ எனக்கு எழுதிய கடிதம் ஒண்ணு கிடைச்சிருக்குடா" என்றேன். "ஏன்? நீங்க எனக்கு எழுதிய எல்லா கடிதங்களும் என்னிடமும் இருக்கு ராஜாராம்" என்றான். நண்பர்கள் எழுதிய கடிதங்களில் ஒன்று கூட தற்சமயம் என் கைவசம் இல்லாத குற்ற உணர்வு பெரிதாக தோன்றியது எனக்கு.

"நீங்களும் கடிதங்களை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்களாடா? என்று குமார்ஜியிடமும், தெய்வாவிடமும் கேட்க பயமாக இருந்தது. அவன்களும் 'ஆமாம்' என்று சொல்லிவிட்டால்? போங்கடா பயல்களா.. நீங்களும் உங்க லெட்டரும்!

காலங்களுக்கு பிறகு, இதோ ப்ரபா லெட்டர் எழுத தொடங்கி விட்டாள். நம்புங்கள் மக்களே, இன்னும் காகிதத்தில் கடிதம் எழுதுகிற மனிதர்களும் இருக்கிறார்கள்தான் போல...

"இருக்கிறேன்" என்று ப்ரபாவிடம் காட்டிக் கொண்ட மூன்றாவது நாளில் இந்த கடிதம் வந்தது...

***

கோயம்பத்தூர்
08-10-2010
9.35 pm

அவசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்.

ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித் திண்ணையில்
காலணி இடும் இடத்தில்

நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்.

மறந்த மயிலிறகின் பீலியைப் போல்
கிடைக்கிறாதாவென பாருங்கள்.

கிடைக்காது போகிறபோது
மட்டுமே இறைஞ்சுகிறேன்.

என் பிரியமானவர்களே
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை.

- நன்றி.. பா.ராஜாராம்.

ராஜா மக்காவுக்கு,

என்னுடன் பேசுவதை தவிர்பதற்கு உனக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறதுதான்.. எனக்கும் கூட பேச்சில் தெளிவாய் வெளிப்பட முடிவதில்லை.

ஏதோ ஒன்றாய் வெளிப்பட இருந்து
வேறு ஏதோ ஒன்றாய்
உருவம் கொள்ளும்
நான் மற்றும் என் வார்த்தைகள்
எப்போதும்
பூரணத்துவம் பெறுவதில்லை.

so..எழுத்துதான் எனக்கு சரியான களம். உன்னிடம் எல்லாமும் பகிர...

நிறைய மாறியிருக்கிறாய் மக்கா நீ! ஆனால் இந்த மாற்றம் அழகாய்த்தான் இருக்கிறது.இன்னுமே ஒரு நல்ல வாழ்க்கை தோழனாய், நல்ல தகப்பனாய், என மிகவும் அழகாக ஆகி விட்டாய் நீ. சந்தோசமாயிருக்கிறது மக்கா.. நாகுவிடம் கூட இதை பகிர்ந்து கொண்டேன்...லதா, குழந்தைகள் என உன் நேசிப்பின் ஆழம் குறித்து!

அப்புறம்?..நிறைய பேச இருக்கிறது. என்ன.. எப்படி பேசன்னுதான் தெரியலை..நீயும் கேட்க விருப்பமற்றுதான் இருக்கிறாய்! உன் பாஷையில் சொன்னால், "உனக்கென்ன பாடோ?"

இந்த 13 வருடங்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எதுவும் இல்லாமலும் இருக்கிறது மக்கா! நான் ஏற்கனவே சொன்னது போல் இவ்வளவு நாட்கள் உன் தொடர்பு எல்லைக்குள் வருவதை ஒத்திப் போட்டு வைத்திருந்தனே தவிர , என் பிற்பகுதி வாழ்க்கை உங்களுடனான நட்புடனும், நேசிப்புடனும் தான் முடிவடையும் என்பதில் எனக்கு எப்போதும் எந்த விதமான சந்தேகமும் இருந்ததில்லை.

மக்கா, அதாவது இது என் நிலை மட்டும்தான். உன் மேலான நேசிப்பு, 'பாலின நிலைகளுக்கு' அப்பாற்பட்டது. அதை எப்படி உணர வைக்கன்னு தெரியலை எனக்கு. இருந்தும் கூட சில சமயம், நான் பையனாய் பிறந்திருக்க கூடாதான்னு தோணும். அல்லது நீ பெண்ணாய். இன்னும் தெளிவாய் சொல்லனும்னா...suppose இப்ப நீ eligible person- ஆ இருந்திருந்தா கூட, that means if you are a spinster as such as me..அப்பவும் என் வெளிப்பாடு இதே நிலையில்தான் இருந்திருக்கும். நீ என் மிக மிக நேசிப்பிற்குரிய நண்பனாய்! ok?

என்னிடம் கேட்க உனக்கு ஒன்ற்மில்லாவிடாலும், எனக்கு நிறைய இருக்கு மக்கா...உன்னிடம் கேட்கவும்..பேசவும்..

மிக முக்கியமாய் எனதன்பு சசி பையன் குறித்து! அந்த தருணம் லதாவும் நீயும் எதிர் கொண்ட அந்த தருணங்கள்..நான் அப்பவெல்லாம் உங்களுடன் இல்லாமல் போனேனே என்கின்ற வருத்தமும் , வேதனையும் இனி, சாகும் வரையில் எனக்குள் இருக்கும். வேறென்ன சொல்ல?

'தகப்பனாய் இருப்பது ' கவிதையும் அது சார்ந்த உன் எழுத்தும் அந்த காலகட்டத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது ராஜா மக்கா! அதே தெருக்களில் சந்தோசமாய் திரிந்த காலங்கள் போய் ..எவ்வளவு கொடுமையான தருணங்களை எதிர் கொண்டு இருந்திப்பாய் நீ! மனசு வலிக்குதுடா..நினைச்சுப் பார்த்தா.. நினைக்கவே முடியலை..

சந்தோசமான காலங்களில் உன்னுடன் இருந்துவிட்டு, உன் கஷ்ட்டமான தருணங்களில் உன்னிலிருந்து விலகி இருந்து விட்டேனென்ற வேதனை... நான் முன்பே சொன்னது போல், நான் சாகும் வரையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்தான்! நாகுதான் சொல்லும், " என் சந்தோசமான நேரங்களில் நீ பங்கெடுத்துகாட்டாலும்..என் கஷ்டங்களின் போது நீ கண்டிப்பா என் கூட இருப்பாய். இதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை" என்று.

அப்படிப்பட்ட ஒரு மன நிலையை உனக்கு நான் தர முடியாமல் போய் விட்டதுதான்! என்னுடைய மீட்டெடுக்க முடியாத வேதனை ராஜா மக்கா இது. இதற்கு உனக்கு நான் ஏதாவது பண்ணி விட முடியாதான்னு இருக்குடா. எனக்கு என் உணர்வுகளை சரியாக சொல்ல தெரியலை..இந்த நேரம்.

நான் இது வரையில் இரண்டு தருணங்களில்தான் பணம் குறித்த அருமையை(?!) அறிதலை முழுமையாக உணர்ந்திருக்கேண்டா. முதலாவது, பிராணிகளுக்காக ஒரு trust மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி... தெருவில்..சாப்பாட்டுக்கு, நோயினால் கஷ்டப்படுகிற உயிரினங்களுக்காக--நாய், பூனை, "மதம்" பிடித்த மனிதனால் கோவில் போன்ற இடங்களில் சிறைப் பட்டு கிடக்கும் யானைகள், பயன் தரும் வரையில் உபயோகப் படுத்தி விட்டு இறைச்சிக்காக கொல்லப் படுகிற மாடுகள், ஆடு, என எல்லாமும்--ஒரு பெரிய சரணாலயம் போன்ற அமைப்பை ஆங்காங்கே ஏற்படுத்த வேணும், இந்த பூமி முழுதும்! அதற்கு தேவைப் படும் கோடிக் கணக்கான பணம் என்னிடம் இருந்திருக்க கூடாதான்னு தோணும். ( அவ்வப்போது pocket ல் பைசா இல்லாமல் திரிகின்ற யதார்த்தம் வேறு விஷயம்)

கடவுள் என்கின்ற விஷயத்தை பற்றிய கேள்வியும், வெறுப்பும் எனக்கு ஏற்படுவது, அதுக கஷ்டப் படுவதை..நிவர்த்தி செய்ய இயலாத..அந்த தருணங்களை எதிர் கொள்ளும் சமயம்தான். doctor கை விட்ட பிறகு 2 நாய், ஒரு பூனை என அதுகளை mercy killing க்கு உட்படுத்தியது கூட அப்படிப் பட்ட ஒரு தருணத்தில்தான். (அந்த நேரத்து வலியும், வேதனையும்..வார்த்தைகளால் சொல்ல முடியாதவை மக்கா)

நம்மை சுற்றி நாம் பார்க்க ஆரம்பித்தோம்னா, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் பல நேரங்களில் ஒரு விஷயமாகவே கூட தோணாது மக்கா. (அப்புறம் அதற்க்கு உபரியாக தண்ணியடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் கூட தோணாது!) எல்லா நேரமும் நீ உனக்குள்ளேயே அமிழ்ந்து போய் விடாதே மக்கா! அதைத்தான் சொல்ல முடியும். உனக்கு தெரியாதது இல்லை!

அப்புறம்...இரண்டாவதாக பணம் என்பதன் அந்த அசுர சக்தியை அறிய நேர்ந்தது சசி பற்றி கேள்விப் பட்ட அந்த தருணம்!.. நான் பணக்கார பெண்ணாக இருந்திருக்க கூடாதான்னு இருந்தது ராஜா மக்கா.. வாழ்க்கையில் முதன் முறையாய்! மிக உண்மையான வார்த்தைகள் இது! என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால் இப்படி எந்த கஷ்டமும் பட்டிருக்க வேணாம். இப்ப நீ சவுதிக்கு கூட போக வேணாம்...இல்லையே மக்கா என்னிடம்! என்ன செய்ய?.. இருந்தும் கூட ஆறுதல்தான்..எல்லா கஷ்டங்களுக்கும், வேறொரு நல்ல தீர்வு நிச்சயம் உண்டுதான்.

உனக்கு இப்போது கிடைத்திருக்கிற மிக அருமையான நண்பர்கள்! எவ்வளவு பெரிய விஷயம் இது! நம்மை சுற்றி இவ்வளவு அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்கின்ற உணர்தல் தரும் சந்தோசம்..அதற்கு ஈடு எதுவும் உண்டா மக்கா? நீ அப்படிப் பட்ட மனிதர்கள் மத்தியில் இருக்கிறாய் என்பதுதான் இப்போதைய என் பெரிய சந்தோசம் ராஜா மக்கா! வேறன்ன சொல்ல இருக்கு?..

சரிடா.. வேறென்ன? இந்த நேரம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுத்தாகி விட்டதா? லதாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா? மஹா, சசியை விசாரித்ததாக சொல்! சரி மக்கா..நான் பிறகு எழுதறேன்..ஏனோ தெரியலை வலிதான் மிஞ்சுகிறது கடைசியில்!

தோழமை

என் தனித்திருக்கும் பொழுதுகள்
வருகையில் எல்லோரும்
சந்தோஷமாகத்தான் வருகிறார்கள்.

இவ்வளவு நாட்கள்
'உன்னை இழந்திருந்தது எப்படி?'
எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

தன் வாழ்நாளின்
தவிர்க்க இயலாத நட்பென
கொண்டாடுகிறார்கள்.

என் துக்கங்களையெல்லாம்
தாங்கிக் கொள்ளவும் செய்கிறார்கள்.

நட்பின் முழுமையானதொரு
சார்ந்திருத்தலுக்கு நான் ஆட்படும்
பிறிதொரு பொழுதில்
சந்தோஷமாகவே போயும் விடுகிறார்கள்..
மற்றுமொரு தனித்த பொழுதில்
என்னை இருத்தி விட்டு!

மனித உறவுகளுடனான
எல்லை வகுக்க
எப்போதும் தெரிவதில்லை
எனக்கும்..
(என் நாய் குட்டிக்கும்)

அன்புடன்
ப்ரபா..

***

பி.கு.
-------
இங்கு மூன்று கண்ணிகள் மிக முக்கியமானவை. எந்த ஒரு கண்ணி முறிந்திருந்தாலும், இந்த ப்ரபாவை இந்த பயணத்தில் பார்த்திருக்க இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமை ஆகிறது.

நன்றி விகடன், நாகலெக்ஷ்மி, லதா!

***


புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B