பொன்னுச்சாமி (எ) செல்லப்பா பெரியப்பா
"பெரியப்பா பயணம் சொல்லிக்கிற ஆரம்பிச்சிட்டார்டா. மூணு நாளாய் தண்ணி மட்டும்தான் இறங்குது. கனடாவில் இருந்து மதி, கண்ணனும், அமெரிக்காவில் இருந்து பிரசாத்தும் பேசிட்டான்கள். நீயும் பேசிரு. நல்லபடியா போய்ட்டு வாங்க பெரியப்பான்னு சொல்லிரு" என்று அண்ணாத்துரை சித்தப்பா அழை பேசினார்கள். போன் வரும்போது வேலையில் இருந்தேன். வேக வேகமாய் நடந்து கொண்டிருக்கும் போது, சட்டை நுனி, ஆணியிலோ தாழ்பாளிலோ மாட்டி விக் என சுண்டி நிற்போமே, அப்படி நின்றேன்.
போனில் தொடர்பு கொண்டேன்.மங்கை அக்கா எடுத்தார்கள்.
"பெரியப்பாவோட பேசனும்க்கா" என்றேன்.
"பெரியப்பா பேசுற கண்டிசன்ல இல்லைடா" என்றார்கள் மங்கை அக்கா. மூழ்கிக் கொண்டிருக்கிற அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கிற மகளின் குரல் அது.
"தெரியும்க்கா. சித்தப்பா சொன்னார். மொபைலை பெரியப்பா காதில் வைங்க. கொஞ்சம் பேசனும்க்கா"என்றேன்.
"பேசுடா"என்ற மங்கை அக்காவின் குரலுக்கு பிறகு ஒரு மௌனம் தட்டுப் பட்டது. நான் சந்தித்ததிலேயே ஆக கொடுமையான மௌனம் அது.
"பெரியப்பா..பெரியப்பா"என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சும்மாவே இருந்தார் பெரியப்பா. பத்துப் பதினைந்து பெரியப்பாவிற்கு பிறகு என்ன பேசுவது என தெரியவில்லை. கண்கள் நிறைந்து வழிய தொடங்கியது...
வேறு வழி இன்றி..
"சமர்த்தா போய்ட்டு வாங்க பெரியப்பா" என்று திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டே இருந்தேன். "சரிடா ராஜா. தைரியமாய் இரு" என்று மங்கை அக்காவின் குரல் கேட்பது வரையில்.
பிறகு போன் வரும் போதெல்லாம் உசும்பி, உசும்பி விழித்துக் கொண்டிருந்தேன். மறு நாள் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் மாப்ள சிவா அழைத்தான். விஷயம் கேள்விப் பட்டதும் சித்தப்பா குரல் கேட்கணும் போல் இருந்தது. அறை வந்து மீண்டும் சிவாவைக் கூப்பிட்டேன். "சித்தப்பாவுடன் பேசனும்டா" என்றேன். "அண்ணன் புறப்பட்டார்டா. ஒவ்வொருத்தராய் டாட்டா காமிக்கிறாங்க" என்று தழுதழுத்தார்.
தூர தேசத்தில் இருக்கான்கள். வார்த்தைகளில் பயமுறுத்த வேணாம் என இரண்டு கைகளில் விளக்கை பொத்தியபடி இருக்கும் எல்.ஐ.சி.லோகோ போல பாதுகாப்பாய் பேசினார் சித்தப்பா. ஆனாலும் சுடர் ஆடத்தான் செய்தது. அப்படியான பெரியப்பா இவர்.
அணிலின் கோடுகளைப் போன்ற அண்ணன் தம்பிகள்.
பெரியப்பா, அப்பா, சித்தப்பா மாதிரியான அண்ணன் தம்பிகளை என் வாழ் நாளில் சந்தித்தது இல்லை மக்கா.
அப்படி ஒரு புரிதலோடும்,பிரியத்தோடும் இருக்கிற அண்ணன் தம்பிகள்!"
அண்ணன் தம்பியாடா நீங்கள்லாம்? மாமன் மச்சினன் மாதிரி பேசி சிரிச்சிக்கிறீங்க"என்று ராக்காயி அம்மாயி மாதிரி மனுஷிகள் பேசி பார்த்திருக்கிறோம், குழந்தையாய் இருக்கிற நாங்கள்.
நிதானத்தை சட்டைப் பைக்குள் வைத்திருப்பது போல எப்பவும் அமர்த்தலாய் இருப்பார் பெரியப்பா. அப்பா சென்சிட்டிவ் எனில், சித்தப்பா ஆக சென்சிட்டிவ். எதுக்குடா இம்புட்டு உணர்ச்சி என்பது போல் சமனாய் இருப்பார் பெரியப்பா.
ஊண்டி கவனித்தோம் எனில் அணிலின் மேல் உள்ள மூன்று கோடுகளில் நடுக்கோடு போல இருப்பார் பெரியப்பா. மற்ற இரு கோடுகளுக்கு நெறுக்கமாகவும், தீர்க்கமாகவும்.
அவரின் எட்டு குட்டிகளை தூக்குகிற அதே தராசு கைகளில்தான் அப்பா, சித்தப்பா, அத்தைமார்களின் அத்தனை குட்டிகளையும் தூக்குவார். ஐந்து அத்தைமார்களில் இருவர் உள்ளூரிலேயே வாக்கப்பட்டிருந்தனர். புஸ்பமத்தைக்கு ஏழு. அம்சமத்தைக்கு நாலு குழந்தைகள். அப்பாவிற்கு அஞ்சு, சித்தப்பாவிற்கு மூணு. ரைஸ்மில் மாதிரியான வாணியங்குடி வீட்டில் நெல் மணிகளைப் போன்று குழந்தை குழந்தைகளாக குவிந்து கிடந்தோம்.
சாப்பாடு நேரத்தில் அவரவர் வீட்டிற்க்கு போக வேணும் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு தெரியுமா? எல்லோரும் ஒரே வீட்டில் அமர்வோம். சுடு கஞ்சியோ, வெண்ணிப் பழையதோ அள்ளி வைக்கிற பெரியம்மாவின் கைகளுக்கு பின்புறம் மறைந்திருக்கும் பெரியப்பாவின் மனசு.
பொக்லைன் மாதிரி முரட்டு கைகள் பெரியப்பாவுடையது. ஆழத்தில் இருந்து குழந்தைச் செடிகளை அதன் பிறந்த மண்ணோடு அள்ளுவார். உச்சி முகர்வார். பதியனிடுவார். மனசில் இருந்து நீளும் போது கைதானே மனசு.
வளர்ந்து பக்குவப்பட்ட காலங்களில், பெரியம்மாவும்,பெரியப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று அறிய நேர்ந்தது. சொந்தத்திற்குள்ளேயே காதலிப்பதில் ஒரு சௌக்கர்யம் இருக்கிறது என்பதை பெரியப்பாதான் எங்களுக்கெல்லாம் சொல்லித் தந்தாரோ என்னவோ...
இவ்வளவு பெரிய குடும்பத்தை தாங்கிய, காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் முன்பாக பேசிக் கொள்வது கூட சூசகமாய்த்தான் இருக்கும். அடுக்களைக்கு என வீட்டின் பின்புறம் உள்ள கூரை வீட்டிலோ, கொல்லையில் நின்ற புளிய மரத்தடியிலோ தள்ளி, தள்ளி நின்றபடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்.
"ஒண்ணிஸ்பாய் ... ரெண்டிஸ்பாய்" என கத்தியபடி ஓடி வரும் எங்களை பார்த்ததும்,"வரும்போது கீரை கட்டு வாங்கிட்டு வாங்க"என்று பெரியம்மாவோ,"ஸ்ரீ ராம்ல நல்ல படம் போட்டுருக்கான்க காந்தி.பத்து ரூபா கொடு. படம் பார்த்துட்டு வர்றேன்"என்று பெரியப்பாவோ பேசி கேட்டிருக்கிறோம். தனியறை இல்லாத, தனிமை வாய்க்காத, குழந்தைகள் நிரம்பிய வீடொன்றில் எங்கு முக்குளித்து எங்களை எல்லாம் கண்டெடுத்தார்கள், இந்த பெரியப்பா, அப்பா, சித்தப்பா? என்று யோசிக்கையில் கண்ணும் மனசும் நிறைஞ்சு போகுது.
இப்படியான நிறைவோடையே இதை முடிக்கிறேன் பெரியப்பா...
பெரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறீர்கள்!
பத்ரமாய் போய்ட்டு வாங்க.
அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க...