Friday, January 27, 2012

இலையுதிரும் சத்தம்- ஆறு

ஏழுகடைக் கதைகள்- ஐந்து

ஏழுகடை செட்லயே குண்டு கார்த்தியத்தான் சுத்த வீரன் என்பேன். எங்க யாரையும் எதிர் பார்க்க மாட்டான். தனியாப் போவான். நெத்திக்கு நெத்தி முட்டுவான். அடுத்த சீன்ல ஆஸ்பத்திரியிலோ போலீஸ் ஸ்டேசன்லயோ இருப்பான்.

ஒரே மாதிரி இருந்தது இல்லை ஏழுகடை. ஒரு நாள் சிரிப்பும் கூத்துமா போனால் ஒரு நாள் குய்யோ முறையோன்னு எழவு வீடு மாதிரி ஆயிரும். 'அவன தொட்டுப்டாய்ங்க இவன தொட்டுப்டாய்ங்க' ன்னு உசும்புவாய்ங்க பாருங்க . எனக்கு அல்லயப் பிடிக்கும்.

'டேய்.. இருங்கடா சூரி அண்ணே வரட்டும். பேச சொல்லலாம்'ன்னு கொஞ்சம் தண்ணி தெளிப்பேன்.

'என்ன பேசச் சொல்ற?.. ரத்தத்தோட வந்துருக்கான். எதா இருந்தாலும் ரத்தம் பாத்துட்டு பேசலாம். நீ ஓம் பிள்ளமகன் வேலைல்லாம் பாக்காத' ன்னு சாதில கொண்டு போய் சாத்திருவாய்ங்க. அப்புறமெல்லாம் பதட்டத்தோட வேடிக்கை பாக்குறது மாதிரிதான் இருக்கும் .

பொருளெல்லாம் அள்ளி வண்டில போட்டுட்டு கிளம்பும் போது கேப்பாய்ங்க, 'வர்றியா என்ன?'

'இருங்கடா இந்தா வர்றேன்' ன்னு என் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன். ஒரு முறுக்கு. நேர ஆஞ்சநேயர் கோயில். பார்ட்டி ஸ்டாண்ட்டட்டிஸ்ல நின்னுக்கிட்டு இருப்பாப்ல. 'யய்யா.. இவய்ங்களோட போறேன். போலீஸ் கேஸ்ன்னு வராம பாத்துக்கிறது ஓம் பொறுப்பு' ன்னு 'அட்டேஏஏஏன்சன்' பண்ணிட்டு வருவேன்.

இப்டி எல்லாப் பயலுகளும் அட்டேஏன்சன் பண்ணினாய்ங்களான்னு தெரியாது. ஆனா சாயல வச்சு சொல்ல முடியும். பய நம்மளவிட டர்ர்ர்ரா இருக்கான்னு. அப்படி, சாயல மோந்ததுல கார்த்திதான் சுத்த வீரன். எங்களோட வந்தாலும் சரி, ரத்தம் ஒழுக வாங்கிக் கட்டிக்கிட்டு வந்தாலும் சரி சும்மா கல்லு மாதிரி இருக்கும் அவன் முகம். கல்லுல போயி என்னத்தப் படிக்க?

இங்க ஒரு கட் கொடுத்து டாப் ஆங்கிள்ல இருந்து குண்டு கார்த்திய ஜூம் பண்ணலாம்.

குண்டு கார்த்தி முத்துராமலிங்கம் தம்பி. (சித்தி மகன்) ஆனா, எனக்குதான் தம்பியாப் பிறந்தது போலவே இருந்தான். (சுத்த வீரன் மேட்டரை தவிர) இவய்ங்க எல்லோரும் என்னை மாமான்னு கூப்ட்டா லதாவை அய்த்தைன்னு சரியா முறை வச்சு கூப்டுவாய்ங்க. கார்த்தி மட்டும்தான் என்னைய அண்ணன்னு கூப்டுக்கிட்டே லதாவையும் அக்கான்னு கூப்டுவான்.

பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட்ல இருந்த கார்த்திய நாந்தான் ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தேன்.

'ஓந் தொம்பி பஸ் ஸ்டாண்ட்ல சலம்பிக்கிட்டு இருக்கானாம். ரம்யா போன் பண்ணுச்சு (ரம்யா- குண்டு கார்த்தி தங்கச்சி) போய் கூட்டிட்டு வா' ன்னு முத்துராமலிங்கம் ஒரு நாள் சொன்னான்.

நம்மட்டதான் எப்பவும் ஒரு டி.வி.எஸ்-50 இருக்குமே. போனா, 'வோத்தா வாங்கடா..' ன்னு சட்டை பட்டன்லாம் கழண்டு தொங்க சலம்பிக்கிட்டு இருந்தான். வண்டிய அவன ஒட்டி நிறுத்தி,'வண்டில ஏறுடா'ன்னு ஏழுகடைக்கு கூட்டிட்டு வந்தது நேத்து நடந்தது போலவே இருக்கு.

வந்த சோர்ல..'எங்க யாருக்காவது கேஸ் இருக்காடா? போறமா நலுக்குப் படாம வந்துர்றம்ல' ன்னு சொன்னேன். அவனும் சொன்னான்,' போனா கொத்தணும்ண்ணே. குசு போடவா போறது?'

அப்புறப்புறம் கள்ளு இறக்க ஏறுகிறவனின் கவட்டையில் தொங்குற சுரக் குடுக்கை மாதிரி ஆகிப் போய்ட்டான் எனக்கு...

'வீட்ல வந்து இறங்கிட்டு ஆட்டோவுக்கு காசு கொடுக்கிறேன்..வேணாம்க்கான்னு ஆட்டோக்காரன் போய்ட்டான்' ன்னு லதா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

'பய ஆட்டோ ஸ்டாண்டுல இருக்கான் போல' ன்னு நினைச்சுக்குவேன்.

'அப்பா கார்த்திண்ணே மஜீத் ரோட் முக்குல சிகரெட் குடிச்சிட்டு இருந்தாங்களா... என்னப் பார்த்தோன்ன, சிகரட்ட கீழ போட்டுட்டு என்னத்தா..எங்க போறன்னு கேட்டாங்க. என்னப்பா எனக்குப் போயி பயப்படுறாங்க?' ன்னு மஹா பேசி கேட்டிருக்கிறேன்.

'அதுக்குப் பேரு பயம் இல்லடா' ன்னு நினைச்சுக்குவேன்.

பேண்ட் போட்டுட்டு வந்தான்னா கார்த்தி, வாய்தாக்கு போறான்னு அர்த்தம். 'மாச முச்சூடும் பேண்ட் போட வாச்சிருக்கில்லடா கார்த்தி?' ன்னு ஊடால ஊடால கேப்பேன். தச்சிர மாட்டாதான்னு கேக்குருதுதான். லைட்டா சிரிப்பான். கார்த்தி அப்டியே ரைட் ஆப்போசிட் செட்டிக்கு. அதிர்ந்து பேச மாட்டான். சிரிக்க மாட்டான்.

'இங்க சிரிக்கணும்டா கார்த்தி...எல்லாப் பயலுகளும் சிரிக்கிறாய்ங்கல்ல..அப்ப ஏதோ சிரிப்பு இருக்கத்தான் வேணும்' ன்னு எழுப்பணும் . 'சரி சிகரட்டக் கொடு' ன்னு குடிச்சுக்கிட்டு இருக்கிற சிகரெட்ட கேப்பான்.

எப்ப சிகரெட் பத்த வச்சாலும் பாதிய தாண்டிட்டா,'அதுல என்ன இருக்குன்னு இப்டி சுண்ற .தா' ன்னு கை நீட்டுவான். 'மூர்த்தி இவனுக்கு ஒரு சிகரெட் கொடுடா. முழு சிகரெட்ட குடிக்க விட மாட்டேங்குறான்' ன்னு மூர்த்திட்ட ஒரு தடவ சொல்லிட்டேன். 'டேய் கார்த்தி டேய் கார்த்தி'ன்னு கூப்டக் கூப்ட எந்திரிச்சுப் போய்ட்டான்.

முத முதல்ல நான் கார்த்திக்கு ஒரு செருப்புதான் வாங்கிக் கொடுத்தேன். வாங்குதோங்கா பேண்ட்லாம் போட்டுக்கிட்டு செருப்புப் போடாம வர்ற ஆள யாரையாவது பார்த்திருக்கீங்களா? அப்படிப் பார்த்தா நீங்க குண்டுக் கார்த்தின்னு எடுங்க. எடுக்காட்டி, 'டேய் ராஜா டேய் ராஜான்னு' நீங்களும் கூப்ட கூப்ட நானும் எந்திரிச்சுப் போயிருவேன்.

நம்ம என்ன செய்யப் போறோம்ன்னு அவன்ட்ட காட்டக் கூடாது. காட்டினா வண்டில ஏற மாட்டான். திடு திப்புன்னு 'கார்த்தி வாடான்னு கூப்பிடணும் எல்லாப் பயலுகளும் 'எங்க மாமா?'ன்னு கேப்பாய்ங்க. இவன் ஒண்ணுமே கேக்க மாட்டான். எம்பாமலை மாதிரி எந்திரிச்சு காலை வீசி பின்னாடி உக்காருவான். 'ஏண்டா எங்க போறோம்ன்னு கேக்கவே மாட்டியாடா ?' ன்னு ஒரு தடவ கேட்டேன்.

'நீம் போயி எங்கண்ணே கூட்டிட்டுப் போப் போற? ஒண்ணு பாரா (Bar) இருக்கும். இல்லாட்டி ஆஞ்சநேயர் கோயில்' ன்னு சொன்னான். கேக்காமையே இருந்திருக்கலாம்ன்னு சில கேள்விகளை கேட்ட பிறகுதானே தெரிஞ்சு தொலைக்குது.

'இவன் சைசுக்கு செருப்பெடுங்க அத்தா' ன்னு ரஃபீக் அத்தாட்ட சொன்னப்போ, ' ஏண்ணே?' ன்னு கேட்டான். 'இருக்கட்டும்டா' ன்னு சொன்ன ஞாபகம். வெறும் ஸ்லிப்பர்தான்.சொளகு மாதிரியான காலின் சூட வெறும் ஸ்லிப்பர் தாங்குனாப் போதாதா?

ரெண்டு மூணு நாளைக்குதான் போட்டுட்டு இருந்தான் அந்த ஸ்லிப்பர. திருப்பி வெறுங்காலும், வாங்கு தோங்கு நடையும். காலப் பாத்ததுமே அவனே சொல்லிட்டான். 'தொலைச்சிட்டண்ணே'

'செரி விட்றா செருப்புதானே' ன்னு சொன்னாலும் வலிச்சது. அடுத்த நாள் (உடனே கூப்ட்டா சுதாரிச்சிருவான்) வழக்கம் போல தாக்காட்டி ரஃபீக் அத்தா கடைய்ல வண்டிய நிறுத்தியதும், 'என்னைய அசிங்கப் படுத்துறியா?' ன்னு வண்டிலருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். பஸ் ஸ்டாண்ட் பக்குதுலதான் ரஃபீக் அத்தா கடை. அத்தாவும் கொஞ்சம் கெட்டிக்காரரு.

'கார்திக்குதானே அத்தா. தொலைச்சுப்ட்டானா?'ன்னு கேட்டாரு.

'ஆமத்தா இவனோட அழக் கொடுக்க முடியல'

'கார்த்தி என்ன வேணும்த்தா'

'தம்பி அத்தா'

'அவுங்க மற வீடுல்லத்தா'

'ஆம அத்தா நீங்க செருப்பெடுங்க..சைஸ் தெரியும்ல?'

'இது சரியா வரும்..இப்பதானேத்தா வாங்கிட்டுப் போனீங்க. நமக்கு ஆளப் பாத்தோன்னயே சைச சொல்ல வரும்த்தா'

ஆட்டோ ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவன,'ஏறுடா' னு வண்டில கூட்டிட்டு வந்து வண்டிப் பெட்டிய திறந்து, செருப்ப எடுத்து கீழ போட்டு,'நீ எத்தனை தடவ தொலைச்சாலும் திருப்பித் திருப்பி வாங்கிட்டுத்தாண்டா இருப்பேன். செலவுதானடா அண்ணனுக்கு?' ன்னு சொல்லிட்டு அவன் முகத்தப் பார்த்தேன்.

அவனும் கொஞ்ச நேரம் முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னவன் திடீர்னு நெத்தியிலையே சொத்'ன்னு சத்தம் கேக்குறது மாதிரி ஒரு அடி அடிச்சுக்கிட்டு செருப்பெடுத்துப் போட்டுக்கிட்டான். ஓடாத் தேயுற வரைக்கும் போட்டுக்கிட்டு திரிஞ்சான். அப்புறம் செருப்பு இல்லாம கார்த்தியப் பாத்தது இல்ல. இந்த செருப்பு மேட்டரைப் போயி பருப்பு மேட்டர் மாதிரி பேசுறேன்னா அதுக்கு காரணம் இல்லாமையா இருக்கும்?

'உனக்கும் ட்ரீட்மெண்ட் வருதேடா'ன்னு எனக்கும் ஒருத்தன் ட்ரீட்மெண்ட் தர்றானா அதை நான் பேசித்தானே ஆவணும்.

அல்ல சில்ல, வெத்து சவுண்டு, கீர்றது வைக்கிறது, பீர் பாட்டில் உடைசல் இப்டி பெட்டிக் கேசா போயிட்டிருந்த கார்த்தி ஊணி நின்னான் ஒரு 302 -வில் (பிரபலமாக அறியப்பட்ட வக்கீல் தியாகராஜன் கொலை வழக்கு)

பாடி டெம்ப்பரு பேஸ்மெண்ட் வீக்குங்கிறதால குலுங்கிப் போச்சு ஏழுகடை...


-தொடரும்


*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5


6 comments:

Ashok D said...

ஒரு மார்க்கமாதான் போயிட்டுயிருக்கு...

ம்ம்.. மனிதர்கள் பலவிதம்

சிநேகிதன் அக்பர் said...

காமெடியா போயிட்டிருக்குன்னு பார்த்தா கடைசிலே இலையதிரும் சத்தமா முடிச்சிட்டிகளே மக்கா!

நிலாமகள் said...

ந‌ல்ல‌ குண‌ம் நெறைஞ்ச‌வ‌ங்க‌ கிட்ட‌யிருக்கிற‌ கெட்ட‌தை தோண்டியெடுக்குற‌ மாதிரி கெட்ட‌ குண‌மிருக்குற‌வ‌ங்க‌கிட்ட‌யிருக்கிற‌ ந‌ல்ல‌தையும் துருவியெடுக்க‌ வேண்டியிருக்கு எழுத்துல‌... இதெல்லாம் தாண்டின‌ விஷ‌ய‌மா அன்பிருக்க‌ற‌தால‌... ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் க‌ல‌ந்த‌வ‌ங்க‌ தானே ம‌னுச‌ங்க‌ எல்லாரும்...

ஓலை said...

Kesaa? Ezhukadai mattumenna ! Naangalum thaan. Aduththu enna aachchu pa.rs !

Mahi_Granny said...

சுத்த வீரன் கதையை ஜூம் பண்ணி பார்க்கச் சொல்லி விட்டு, ஆஞ்சநேயர் கோயிலுக்கோ பார் பக்கமோ( எனக்கு அறவே பிடிக்காத ஓன்று, பா. ரா. தம்பி என்பதினால் சகித்துக் கொள்கிறேன்) போய் உட்கார்ந்திடாமல் சீக்கிரம் தொடருங்கள்.

பா.ராஜாராம் said...

மகன்ஸ், அக்பர், நிலாமகள், சேது, மஹிக்கா நன்றி!

எவ்வளவு எளிதாக இருக்கிறது இப்பல்லாம் நன்றி சொல்வது!