Sunday, February 5, 2012

இலையுதிரும் சத்தம் - ஏழு

ஏழுகடைக் கதைகள்- ஐந்தின் தொடர்ச்சி -1

கார்த்தியோட சேர்ந்து எட்டுப் பத்து பயலுகள் உள்ள போய்ட்டாங்க. இதுல சித்தப்பா ராமச்சந்திரத்தேவர் அடக்கம். (ராமச்சந்திர தேவர் - முத்து, கார்த்தி சித்தப்பா) பீஸ் புடுங்குனது போல ஆகிப் போச்சு.

p.c ரவி அண்ணே வேற சர்ர்ரக்குன்னு ஜீப்ப ப்ரேக் அடிச்சு, 'டேய்..ஸ்டேசன்ல நோட்டட் பாய்ன்ட் ஏழுகடை இப்ப. எந்த நேரமும் வருவாய்ங்கடி.. முங்கி நடந்துக்குங்க' ன்னு சொல்லிட்டுப் போனாரு. ரவி அண்ணே சொன்னது மாதிரிதான் நடந்துச்சு. ஆஊ ன்னா வண்டி வந்து நிக்கும். 'என்ன இங்க கூட்டம்? எதுக்கு உக்காந்திருக்க? நீ கடக்காரனா? ன்னு ஜீப்ல உக்காந்துக்கிட்டே எஸ்.ஐ. பேசுவாப்ல. பயலுகள் டக்குன்னு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.

தலவாசல்ல நாங்கபாட்டுக்கு சரக்கடிச்சிட்டு இருப்போம். மாறி, ஏழுகடைக்குப் பின்னாடி, வேலிக்கருவைக்கு நடுவுல ஒரு எலெக்ட்ரிக் போஸ்ட் சாஞ்சு கிடக்கும். எலக்ட்ரிக் வயர்ல உக்காந்திருக்கிற சிட்டுக்குருவிகள் மாதிரி அதுல உக்காந்து சரக்கத் தொடங்க ஆரம்பிச்சிருந்தாய்ங்க பயலுகள். 'இப்டி வெளிச்சத்த சாச்சுப்ட்டானே கார்த்தி' ன்னு தோணும். 'வா மாமா' ன்னு வேற கூப்டுவாய்ங்க.

'இல்லடா. நான் தண்ணிய விட்டுட்டேன்' ன்னு வீட்டுக்குப் போறது போல சூ காட்டிட்டு சந்துக்குள்ள விழுந்து தொண்டி ரோடப் பிடிப்பேன்.

பிடிச்சு.. ஒரு முறுக்கு முறுக்கி பஸ் ஸ்டாண்ட் ஒயின்ஸ் ஷாப். ஒரு குவாட்டர வாங்கி பேண்ட் பாக்கட்ல போட்டுக்கிட்டு நேர லதாமங்கேஷ்கர் வீடு . (லதா மங்கேஷ்கர் -நம்ம லதாதான். லதாவின் முழுப் பெயர் அரியநாச்சி (எ) லதாமங்கேஷ்கர். ஹிந்திப் பாட்ல மயங்கக் கூடாதாங்க என் மாமனார்?)

'ஆத்தாடி.. ஏம் புள்ள இன்னைக்கு சீக்கிரம் வந்துருச்சே. சுத்தி வைக்கணும்'ன்னு லந்தக் கொடுப்பாள் லதா.( நம்ம டர்ர்ரு மேட்டர பொண்டாட்டிட்ட காட்ட முடியுமா..காட்டுனா கிரீடம் இறங்கிறாது?) 'இவனைப் போன்ற நல்லார் ஊரில் யாரும் இல்லார்' ரேஞ்சில் லதா முட்டைப் பொரியலோ, உப்புக்கண்டம் வறுவலோ சைடுக்காக அளித்து, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவாள்.

வீட்டில், மொட்டை மாடிதான் சரக்கடிக்கிற ஸ்பாட். அடிச்சிட்டு, குண்டா எதுனா நட்சத்திரம் தெரியுதான்னு மல்லாந்து தேடிக்கிட்டு இருப்பேன்.

திருச்சி ஜெயிலில் இருந்தான் கார்த்தி.

'வாய்தாவுக்கு கூட்டிட்டு வர்றாய்ங்க மாமா கார்த்திய. பாக்க வர்றியா?' ன்னு ஊடால கேப்பாய்ங்க. 'இல்லடா' ன்னு சொல்லிருவேன். போய்ட்டு வந்து, 'ஒன்னத்தான் மாமா கேக்குறான். வந்துருக்லாம்ல' ம்பாய்ங்க. ரெண்டு வாய்தாவுக்கு பல்லக் கடிச்சிக்கிட்டுப் பாக்க போகாமத்தான் இருந்தேன். மூணாவது வாய்தாவுக்கு கார்த்தி அம்மா கூப்ட்டு விட்டாங்க. கார்த்தி உள்ள போனதுக்கு அப்புறம் வீட்டுப்பக்கம் கூட எட்டிப் பாக்கல. சும்மாவே, 'நீ சொல்லக் கூடாதாடா..திருந்த மாட்டேங்கிறானடா' ன்னு சொல்லிட்டே இருப்பாங்க.' இந்த டயத்துல போயி எப்டி அம்மாவப் பாக்க?'ன்னு போகாம இருந்ததுதான்.

கூப்ட்டுட்டா போகாம இருக்க முடியாதுல்ல?.. போனேன்.

கண்றாவியா இருந்தாங்க அம்மா. 'நாளைக்கு வாய்தாவுக்கு வர்றானாம்லடா. என்னையும் கூட்டிட்டுப் போங்கடா' ன்னு கன்னத்தைப் பிடிச்சிக்கிட்டு கெஞ்சுனாங்க. 'என்ன கொடுமடா?' ன்னு இருந்தது அந்த நேரத்தில் அந்த முகம். 'சரி கெளம்பி இருங்கம்மா. 'வண்டிக்கு சொல்லிறட்டா' ன்னு கேட்டேன். (அம்மாவால ஸ்லாங்கமா நடக்க முடியாது)

'சொல்லிரு. சமைச்சு எடுத்துக்கிறவாடா.. சாப்ட விடுவாங்களா கோர்ட்ல?' ன்னு கேட்டாங்க. அதுலாம் விடுவாங்கம்மா. நீங்க எடுத்துக்குங்க'ன்னு சொல்லிட்டு, அன்றிரவு டைட்டா சரக்கப் போட்டுக்கிட்டேன்.

சிவகங்கை கோர்ட்ல,'பயபுள்ளைகள் எம்புட்டு நேரம் உக்காந்திறப் போறாய்ங்க'ங்கிற மாதிரி ஆல மரம் நல்லா விரிஞ்சு கிடக்கும். செத்த நேரத்துக்கு நாங்களும் உக்காந்திருந்தோம். வேனுக்குள்ள அம்மா தங்கச்சிகள் இருந்தாங்க. கங்கு கங்கா பயலுகள் சிகரெட் குடிச்சிட்டு நின்னாய்ங்க. ஆட்டோ ஸ்டாண்டுலருந்து வேற கெடைப் பயலுகள் வந்துருந்தாய்ங்க.

தாடி கீடில்லாம் வச்சு கார்த்தி மொறட்டு ஆளா வந்திறங்கினான். பார்த்ததும்,'அண்ணே' ன்னு கையப் பிடிச்சுக்கிட்டான். கையப் பிடிச்சுக்கிட்டே சுத்திமுத்தி பார்வைய வீசி பயலுகளுக்கும் கைய தூக்கி காட்டிட்டு இருந்தான்.

'அம்மா தங்கச்சிகள்ல்லாம் வந்திருக்காங்கடா..வேன்ல உக்காந்திருக்காங்க' ன்னு வேனக் காட்டினேன். படக்குன்னு வேன திரும்பிப் பார்த்தவன்'அவய்ங்கலல்லாம் எதுக்குண்ணே கூட்டிட்டு வர்றே. ஒப்பாரி வப்பாய்ங்களேண்ணே' ன்னு சொன்னான். சொன்னாலும், மினுங்குச்சு முகம்.

'நா எங்கடா கூட்டிட்டு வந்தேன்?' ன்னு சொல்லிட்டு வேனுக்கு நகர்ந்தோம்.

'ஓந் தல எழுத்தாடா?..இப்டி ஒருத்தனா பெறந்து, போகாத இடத்துக்கு போயி செய்யாத காரியமெல்லாம் செஞ்சு..இந்தக் கொடுமையெல்லாம் என்னப் பாக்க வச்சுட்டு எனக்கென்னன்னு போய் கிடக்கானே அந்த மனுஷன் ' ( கார்த்தி அப்பா மலேசியாவில் இருக்கிறார்ன்னு கேள்விப் பட்டிருந்தேன்) ன்னு வாய்ல புடவ தலைப்ப வச்சுக்கிட்டு அழுதாங்க.

'சொன்னேன்ல' ன்னு என்னை திரும்பிப் பார்த்தான் கார்த்தி. 'சரிம்மா. அவனுக்கு சாப்பாடப் போடுங்க. மத்தவங்களையும் கூப்டுடா' ன்னு கார்த்திட்ட சொன்னேன். எல்லாரு வீட்லருந்தும் சாப்பாடு வந்திருக்கும்ண்ணே.ஆத்தா.. நீ ஓன் சங்க நிறுத்திட்டு சாப்பாடப் போடுறியா . கூப்ட்ருவாய்ங்க'

மீன் குழம்பு.

பெரிய பெரிய உருண்டையா உருட்டி வாய்ல வச்சுக்கிட்டே, 'நாக்கு செத்துப்போயி கெடந்துச்சுண்ணே'ன்னு லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சான். அவனோட பெஸ்டு சிரிப்பு எதுன்னு எனட்ட கேட்டா அதத்தான் சொல்லுவேன். மயிரு..சிரிக்கும் போது கண்ணு கலங்க எங்க எந்த மயிராய்ங்களால முடிஞ்சிருக்கு? சூடு தாங்க முடியாம முகத்த திருப்பிக்கிட்டேன்.

நூத்தி சொச்ச நாளாச்சு கார்த்திக்கு ஜாமின் கிடைக்க..

ஏழுகடைல பட்டுத் திருந்துனவனும் இருந்தாய்ங்க. பாத்துத் திருந்துனவனும் இருந்தாய்ங்களா... அப்படித்தானே இருக்கணும் இவனும். சொல்லப் போனால் இவன் ஏழுகடைக்காரனே இல்லையோன்னு தோணியிருக்கு நிறையத் தடவ.

இங்கிட்டு (சவுதி) வந்தப்புறம் பயலுகள்ட்ட பேசும் போதெல்லாம்,' ஸ்டாண்டுலதான் மாமா கெடக்கான். என்னத்த அவன் திருந்தி?..'ன்னு மகாத்மா கணக்கா ஸ்டேட்மெண்ட் கொடுப்பாய்ங்க.

'கேஸ் என்னடா ஆச்சு?'

'ட்ரையல் போயிட்டிருக்கு மாமா'

முதல் பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

ரெண்டாவது பயணம். மூணு மாச லீவு. மூணு மாசமும் ஏழுகடைலதான் கிடந்தான்.

'நீங்கதாண்டா அவன சரியாத் தூக்கல.. இப்ப மட்டும் எப்டி வர்றான்..இங்கயே கிடக்கான்? இதுக்குதானடா அலையிறான்' ன்னு மப்பு கூடுன ஒரு டயத்துல பயலுகள்ட்ட காரசாரம் பண்ணேன்.

'இதுக்குன்னு எதை சொல்ற?' ன்னு கேட்டாய்ங்க.

'இந்த இதுதாண்டா'ன்னு எதையோ தேடுனேன். ஒண்ணும் கிடைக்கல.. 'போங்கடா நீங்களும் ஒங்க ஏழு கடையும்' ன்னு தள்ளாடி நடந்து வீட்டுக்கு போயிட்டேன். போயும் விடலயே, 'இந்தப் பயலுக சரியில்ல புள்ள' ன்னு லதாட்ட தொடங்குனனா..'சாப்ட்டு வந்துட்டீகளா..சாப்டணுமா?' ன்னு சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமில்லாத கேள்வியக் கேட்டாள். 'அய்யய்யே.. வீட்டுக்கு வந்துட்டமா?' ன்னு தெளிஞ்சுட்டேன்.


ரெண்டாவது பயணத்தப்போ 'அவுட்டர்ல போயி தண்ணி அடிச்சுட்டு வருவோமாண்ணே?' ன்னு கார்த்தி ஒரு நாள் கூப்ட்டான். 'ஏண்டா?' ன்னு கேட்டதுக்கு, 'கொஞ்சம் பேசணும்ண்ணே'ன்னு சொன்னான்.

நம்புவீங்களா.. இந்தக் கார்த்தி காதல் வயப்படுவான்னு?

-தொடரும்

*******

இலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,66 comments:

Unknown said...

p.c ரவின்னு எழுதியிருக்கிறதுல உங்க குறியீட்டை ரசிச்சேன் பெரியப்ஸ்..

:))

Unknown said...

என்னதான் நீங்க பஸ்ஸு ப்ளஸ்ஸுன்னு இந்தப் பதிவை வெளியிட்டிருந்தாலும், அண்ணன் கண்ணனின் கை வண்ணத்துல ப்ளாக்ல வரும்போதுதான் பெரியப்ஸ் இதுக்கு ஒரு லட்சணமே வந்துருக்கு.

இரசிகை said...

vittathaiyellam vaasichen rajaram sir..

santhosham.
:)

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku... rasichchu padichcheaan Siththappa.

பா.ராஜாராம் said...

மாப்சு :-)

மகன் தினேஷ், அருவாளை தீட்டிக் கொண்டு இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டு கண்ணன் உங்களை தேடிக் கொண்டிருப்பான். சூதானமா இருந்துக்குங்க :-))

ரசிகை நன்றி!

நன்றி மகன் குமார்!

ஸ்ரீ அப்பா said...

அப்படியே சிவகங்கையில இருக்கற மாதிரி ஒரு உணர்வு..