சரியாய் 20-வது வயது தொடக்கத்தில் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். கல்லூரி முடித்த கையோடு கல்யாணத்திற்குள் நுழைய நேரிட்டது. கல்லூரியில், மூன்று வருடமும் 400 மீட்டர், 110 மீட்டர், தடை தாண்டும் ஓட்டத்தில்(hurdles), மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சாம்பியன். இதைக் கொண்டு, அழகப்பா பிசிகல் எஜுகேசன் கல்லூரியில் சீட் வாங்கலாம் என அப்பாவும், கோச் வேலாயுதம் சாரும் வற்புறுத்தினார்கள். "நாலு பொம்பள புள்ளைகளை வளர்த்தவண்டா. ஒரு புள்ளையை பார்க்க மாட்டனா? லதாபாட்டுக்கு வீட்ல இருக்கட்டும். நீம்பாட்டுக்கு படி" என்றார் அப்பா.
"நல்ல விளையாட்டாவுல இருக்கு" என்று கிருஷ்ணா மெடிக்கல்சில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அப்பாவின் நண்பர் கணேசன் மாமாவிடம் கடனுக்காக போய் நின்ற போது, "ஒங்கப்பன் சம்பளம் வாங்கி வட்டியை கொடுத்துர்ராண்டா. திருப்பி வட்டிக்கு வாங்கி சம்பளம் மாதிரி கொண்டு வர்றான்" என்றார். போக, மனைவிக்கு வாங்கும் பூ என் காசாக இருக்க வேணும் என்பதும்தான்.
விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்...
சரி, வந்த விளையாட்டை பார்ப்போம்..
"வாங்கப்பு... வந்து பொறுப்பெடுங்க" என சீனா சார் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தை நம்மிடம் தருகிறார். (வலைச்சரத்தில் எழுதப் போறான்கிறத என்னா பில்டப் கொடுக்குறான்யா என்று மாது-காமு மாதிரியான அம்ப்பயர்கள் தேர்ட் அம்ப்பயரிடம் கட்டம் கட்டுவார்கள், பாவிகள்! :-)
எடுத்துட்டாப் போச்சு சீனா சார். அப்புறம், ரொம்ப நன்றியும் சார்!
ஆக, இந்த வாரம் நம்ம டாப் வலைச்சரத்தில் மக்கள்ஸ்! so, அங்க வந்துருங்க. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்.
அட, வாங்க மக்கா..."இந்தா" இருக்குற தூரத்திற்கு வண்டி எடுத்துக்கிட்டு. காலாற பேசிக்கிட்டே நடக்கலாம்...
***
Sunday, June 27, 2010
Monday, June 21, 2010
மகள் மகன் கதைகள்

(Picture by cc licence, Thanks cliff1066)
வெயிலடித்துக் கொண்டே
மழை பெய்தால்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்றாள்
மகள் ஒரு நாள்.
கேட்க நன்றாக இருந்ததால்
ஆகா எனக் கேட்டுக் கொண்டேன்.
ஊற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.
கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.
**
மொட்டை மாடியில்
படுத்திருந்த நாளொன்றில்
மகனுக்கு நிலாக் கதையை
தொடங்கியிருந்தேன்.
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருப்பதால்
நிலாக் கதையொன்றும்
வேண்டாம் என்றான்.
சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...
மகனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.
Subscribe to:
Posts (Atom)

