Friday, March 8, 2013

புரை ஏறும் மனிதர்கள் - இருபது


புரை ஏறும் மனிதர்கள் - இருபது


இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை.

கேவிஆர் வீட்டிற்கு போக முடியாததும், திருவாலர் (ப்ரபா வந்து, 'லூசு சனியனே அது 'திருவாளர்'. திருவாலர்'ன்னா 'வால் உடைய மதிப்பிற்குரியவர்' ன்னு அர்த்தம். திருந்தவே மாட்டியா?' ன்னு சொல்லுவாள் பாருங்களேன்..) R. கோபி அவர்களை சந்திக்க முடியாததும் ஏமாற்றமாகிவிட்டது.

இப்படியெல்லாம் ஏமாற்றம் தோணாது முன்பெல்லாம். வயசாகிற காரணமா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். நாளை கோபார் கிளம்ப வேணும்.

பேத்திகளுக்கு என கொஞ்சம் டேட்ஸ் ஒதுக்கி வைத்திருக்கிறேன் என முந்தைய டைரிக்குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன் இல்லையா?.

.'சரி அதையாவது அனுப்பி வைப்போம். நம்ம பொழப்ப சொல்ல முடியாது' ன்னு சுதாரித்தேன். 'கூப்புட்றா சலாலுதீன் சேட்டாவ' ன்னு கூப்பிட்டு விஷயம் சொன்னேன்
.
'அதுக்கென்னடா செஞ்சுருவோம்' என்றார். இந்த சலாலுதீன் சேட்டா ஒரு ஆச்சரியம் . எல்லோருக்கும் உதவி செய்யவே பிறவி எடுத்தது போலவே துறு துறுன்னு (துருவா துறுவா ப்ரபா?) அலைவார். எனக்கு மட்டும் இல்லை. ரியாத் பேலஸில் எல்லோரிடமும் இப்படி ஒரு பெயர் எடுத்து வச்சிருக்கிறார்.

ராஜாவையும் சலாலுதீன் சேட்டாவையும் கனெக்ட் (கனெக்ட்டா கணெக்ட்டா ப்ரபா?) பண்ணேன். ராஜாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது,

'மாம்ஸ் ஒரு சின்ன விஷயம்..மீன் குழம்பு வச்சிருக்கேன். அதை சேட்டாட்ட கொடுத்தனுப்பலாமா?' ன்னு கேட்டார்.( இது சின்ன விஷயமா? நாக்கு செத்துப் போய் கெடக்கு)

'ஆஹா கொடுத்தனுப்புங்க'

டேட்ஸ் போய் மீன் குழம்பு வந்தது டும் டும் டும் டும்.
.
சேட்டா கொண்டு வந்து மீன் குழம்பை தந்தபோது சுப்ராவில் (டைனிங் ஹால்) இருந்தேன். முதலாளிக்கான மதியச் சாப்பாடு செட்டிங்கில் இருந்தோம் எல்லோருமா.

பிளாஸ்டிக்பை ரெண்டு மூடிய டப்பாக்களுடன் சுப்ரா நுழைந்த போது ஃபிலிப்பினோ நண்பன்கள் சூழ்ந்து கொண்டான்கள்.

ஆளுக்கு அவ்வஞ்சு ரியால் போட்டு புரட்டா கறி வாங்குகிற அளவிற்கு அவன்களை பழக்கி வைத்திருக்கிறேன். அவன்கள் சிக்கன் அடபோ எனக்கும் பிடிக்கும். பழக்கி வைத்திருக்கிறான்கள். எனவே பிளாஸ்டிக்பை, மூடிய டப்பான்னு வந்துட்டாலே சாப்பாடுன்னு ஜெனரலா தெளிவாகி விடுவோம். இப்படியான கூட்டங்களின் நடுவேதான் இந்த மீன்குழம்பும் மீன் வறுவலும் வந்திறங்கியது.

மீன் வறுவல் சாப்பாட்டிற்கு முன்பே முடிந்தது. மீன் குழம்பை எல்லோருமாக சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டோம். சுர்ருன்னு இருந்தது எனக்கு காரத்தைச் சொல்லவில்லை. ருசி.

ராஜாவை அழைத்து, 'மீன் குழம்பை நெருப்புக்குத்தி வைக்கிறீங்களா மாப்ஸ்? லதா வைக்கிற மீன் குழம்பு போலவே இருந்தது'

'சும்மா மண் சட்டியில் வைத்ததுதான் மாம்ஸ்'

'இல்ல ராஜா..லதா மீன் குழம்பு ஆயிட்டு இருக்கும் போதே ஒரு கங்கை எடுத்து உள்ள போட்டுட்டு மூடி வைப்பாள். அந்த மாதிரி எதுவும் செஞ்சீங்களா?'

'இல்லை மாம்ஸ். கங்குக்கு எங்க போறது. வெறும் மண்சட்டிதான்'

'வீட்டில் கேஸ் வந்த பிறகு, கரியை கேஸ் அடுப்பில் தீ எடுக்கியில் நீட்டி முன்னையும் பின்னையும் வாட்டியபடி நின்னுக்கிட்டு இருப்பாள். கங்கானதும் வைத்து இறக்கப் போற மீன் குழம்பில் போடுவாள். எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறாள் மீன் குழம்புக்குப் போயி' ன்னு எத்தனையோ தடவை வந்திருக்கிறது.

சேட்டன்மார்கள் ஈரிழை வெள்ளைத்துண்டை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு தேங்காய்ப் பொடி வறுத்தும் ,மிக்ஸ்சியில் பொடித்தும் தும்மிக் கொண்டும் ஒரு மீன் குழம்பு வைத்து வருகிறார்கள்.

'ரைட்டு. தும்மிட்டார்கள். இன்னைக்கு மீன் குழம்பு' ன்னு ஹாலில் காய்கறியோ சாலட்டோ வெட்டிக் கொண்டிருக்கிற செம பிரில்லியண்ட் ஆன எனக்குப் புரிந்து விடும்.

பாருங்க.. மீன் குழம்பு இதுக்குள்ளயெல்லாம் சிக்காது. எப்பனா சிக்கும். அன்னைக்கு நாமளாப் பாத்து 'இதாண்டா மீன் குழம்பு' ன்னு வாரி குடிச்சிக்கிற தோணும்.

அப்படியான மீன் குழம்பை ராஜா அனுப்பித் தந்திருந்தார். வாரிக் குடிக்க முடியலை. அஞ்சு பேர்களை விட்டுட்டு எப்படி வாரிக் குடிப்பது?

மனுஷன் பிரியாணி செய்கிறார். மண் சட்டியில் மீன் குழம்பு செய்கிறார், டெர்ரர் கும்மி போட்டியில் முதலாவதாகவும் வருகிறார்..ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நல்லது ஆகாதுங்குறேன். என்ன நான் சொல்றது?

இவர் நம்ம செட்டுக்கு ஆகமாட்டார். மரியாதையா தள்ளி நின்னுக்கிற வேண்டியதுதான். பொண்ணக் கொடுத்திருக்கோம். நேக்குப் போக்காத்தானே நடக்கணும்.

ரியாத் வந்துட்டு ரெண்டு தடவ கோபியை அழைத்திருந்தேன். அதில் ஒரு தடவ,'ப்ளஸ்ல என்ன விசேஷம்?' ன்னு விசாரித்தேன்

'நம்ம கபீஷ் இருக்காங்கல்ல அவங்கள ஜெமோ குழுமத்தில் சேர்த்துக்கலயாம். ஒரு ப்ளஸ் விட்டுருந்தாங்க' என்றார்.

'ஆக்கா..நான் இல்லாமப் போய்ட்டனே..செம ஓட்டம் ஓடியிருக்குமே கமண்ட்டெல்லாம்'

'ஆமா. செம ஜாலியா இருந்தது' ன்னு சொன்ன கையோடு,'என்ன சேர்த்துக்கிட்டாங்க. போன மாசம்தான் சேர்ந்தேன்'

ரெண்டையும் ஒரே டயத்துல சொல்ல கோபியால்தான் முடிகிறது. (கபீஷ்க்கு இந்த விஷயம் தெரிய வேணாம் நண்பர்களே ப்ளீஸ்)

'கோபி வேல சரியா இருக்கு. ஒரு சாப்பாடு கேன்சல் ஆனாலும் புறப்பட்டு ஓடி வந்துர்றேன்'

'வேலைய பாருங்க பாரா. எங்க போயிறப் போறோம். இந்தத் தடவ இல்லைன்னா அடுத்த தடவ' என புத்தர் போல பேசினார். இவரும் நம்ம செட்டுக்கு ஆக மாட்டாரோ என வருத்தமாக வந்தது. (புத்தர் குரல் போல ட்ரையாக இல்லாமல் குழந்தையின் குரல் போல ரொம்ப உற்சாகமாக இருந்தது கோபியின் குரல்)

எரிச்சலுக்கு மேல் எரிச்சலாக வந்து கொண்டிருந்தது.

சனி மாலை 6.45 இருக்கும். சுப்ராவில் இருந்து இதை எழுதிக் கொண்டிருந்தேன். 7.30 க்கு எங்க வேலை ஸ்டார்ட் ஆவும். ஒரு ஃபோன் வந்தது பேலஸ் ஃபோன். சாப்பாடு கேன்சல் என்கிற தகவல்.
'நல்ல கருத்து நன்றி' ன்னு ராஜாவை அழைத்து விபரம் சொன்னேன்.

'ம்ம்ம்..வெளியில் இருக்கேனே மாம்ஸ்
'
'சரி பாருங்க மாப்ஸ். அடுத்த தடவ ட்ரை பண்ணலாம்'

'இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எட்டு மணிப்போல கூப்பிடறேன் . சரியாகி வந்தால் வந்துர்றேன்' என்றார்.

'எல்லாம் சரியாகி வந்துடும்' ன்னு நினைத்துக் கொண்டு யூனி ஃபார்ம் அவுத்து எறிஞ்சுட்டு குளித்து சிவிலுக்கு மாறினேன்.

திருவிழாவிற்கு கிளம்பி இருக்கிற குடும்பஸ்திரி மாதிரி மேக்கப்லாம் ஏத்தி மேலேறி வந்து ராஜாவின் ஃபோனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். (ரியாத் பேலஸில் எங்க ரூம் அண்டர் கிரவுண்டில் உள்ளது. மேலேறி வந்தால்தான் சிக்னல் கிடைக்கும்)

7.35 க்கு ராஜா அழைத்தார்
.
'மாம்ஸ் சாரி.. டயத்துக்கு வரமுடியாது போல இருக்கு. தப்பா நினைச்சுக்காதிக..வேறொண்ணுமில்ல' ன்னுட்டு ஒரு சந்தோஷமான விஷயம் சொன்னார். (லயாவிற்கு தம்பி வரப் போறான் என நீங்க யோசிப்பீங்கன்னு தெரியும். இல்லை. இது வேற சந்தோசம். பகிர எனக்கு ரைட்ஸ் இல்லை. அவரா பகிர்ந்து கொண்டால் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. கேட்டீங்களா?)

'அடப் பாருங்க மாப்சு எங்க போயிறப் போறோம் ' ன்னுட்டு ஆப்பரேசன் - 2 வை தேர்ந்தேன். (ஏத்துன மேக்கப்ப வேஸ்ட்டாக்க யாருக்குதேன் மனசு வரும்?)

கோபியை அழைத்தேன். சலாலுதீன் சேட்டாவை அழைத்தேன். சரியா வந்தது. கிளம்பிட்டேன்.

ஒரு விதமான பதட்டம் தொற்றிக்கொண்டது. கருவேலநிழல் ப்ளாக் திறந்த பிறகு இந்த புரை ஏறும் மனிதர்களுக்கென நான் தேடிக் கொண்டிருக்கிற மனிதர்களைப் பார்க்கப் போகிற பதட்டம்.

முதன்முதலாக நவாசுதீனை ஜெத்தாவில் வைத்து பார்க்கப் போன பதட்டம் போலவே இருந்தது. 'நான் அப்படியேதான் இருக்கிறேன். நாளுதான் மாறுது போல ன்னு என்னை எனக்கே பிடித்து வந்தது.வெளி தேசம் வந்த பிறகு நம்மை நமக்கே பிடிப்பது சும்மா இல்ல.. வெலகுங்க.. பிடிச்ச மாதிரி இருந்துட்டுப் போறேன்.

கோபாருக்கு வெல்கம் ஜூஸ் செண்டர்னா ரியாத்துக்கு அஜீசியா பண்டா என பழகி வருகிறது. (நிலாவை அங்குதான் பார்த்தேன். ராஜாவை முன்னாடியே பார்த்துட்டேன்)

கோபியை அஜீசியா பண்டா மெக்டொனாட்ல்ஸ் வாசலில் வைத்துப் பார்த்தேன்.

ஆறாப்பு படிக்கும்போது எனக்கு R.V. சரவணன் என்ற நண்பன் 'குட்டையா'ன்னு பெயர் வைத்தான். இப்ப கப்பலில் கேப்டனாக இருக்கிறான். ஆறாப்பு தொடங்கி டிகிரி முடிக்கிறது வரையில் இந்தப் பயபுள்ள கூடயே வந்துட்டு இருந்துச்சா.
நண்பர்கள் வீட்டிலும் (அம்மாப்பா முதற்கொண்டு) 'டே குட்டையன் வந்திருக்காண்டா' ன்னு உருப்படிக்கு அழைப்பார்கள். அப்ப அவ்வளவு கஷ்டம் தெரிந்ததில்லை.அப்ப எந்தக் கஷ்டம் தான் தெரிந்திருக்கு? சந்தோஷமாகக்கூட இருந்திருக்கு. உரிமையாய் அழைக்க ஒரு வேவ் லென்த் வேணும். அது நண்பர்களிடமிருந்தானே தொடங்கும்.

'ஏங்க கப்பல்சரவணன் உங்கள தேடிட்டு வந்துச்சே. பாத்துட்டீங்களா?'ன்னு எங்களுக்கு குழந்தைகள் வந்த பிறகு லதா கேட்டாள்.

'இல்லையே புள்ள என்ன சொன்னான்?'

'குட்டையன் இருக்கானாத்தான்னு கேட்டு வந்துச்சு '

'என்ன சொன்ன?'

'அங்கிட்டுதானே வந்தாப்ல.என்னைக்கு வீடு தங்கியிருக்காரு ஒங்க குட்டயருன்னு சொன்னேன்'

சில நேரங்களில்,'குட்டையா என்னப்பெத்தாரு ரேஷன்கடை வரைக்கும் போயிட்டு வந்துறேன்' ன்னு லதாவை சர்வ சாதாரணமா செல்லம் கொஞ்சுற அளவுக்கு இந்தப் பெயரை பழக்கி வைத்திருந்தான்கள். நானும் கூட குட்டயன்னா அது நான் மட்டும்தான்னு நம்பியே வந்திருக்கிறேன்.

அந்த நம்பிக்கையெல்லாம் ஈசியா தகர்த்தார் கோபி.

'ஏ.. இங்க பாருடா நம்ம விட குட்டயரு' ன்னு ஓடிப் போய் கட்டிக் கொண்டேன் அவர் அளந்தாரான்னு தெரியலை. நான் அளந்த வகையில் மில்லி மீட்டர் நான் உயரமாக இருந்தேன்.

நானும் 'குட்டையா' ன்னு அழைக்க ஒரு நாள் ஆள் வரும் என கனவிலும்கூட நினைச்சது இல்லை. அதா வாச்சது பாசு .

கோபிக்கு காரோட்டிக் கண்ணனாக வந்த அஸ்லாம் பாயிடம்,' வணக்கம் சார். நான் ராஜாராம்' என அறிமுகமாகிக் கொண்டேன். எனக்கு காரோட்டி வந்த சலாலுதீன் சேட்டாவை,' சேட்டா ரொம்ப நன்றி' என கை பற்றினார் கோபி.

சில விஷயங்கள் பாத்துத்தான் படிக்க வேண்டியதாகிறது. பிறகு நானும் சாரை தூக்கிப் போட்டுட்டு அஸ்லாம் பாயை அஸ்லாம் பாய் என்றே அழைத்தேன்.

கார்ல உக்காந்ததுமே 'கோபி சாப்ட்டுப் போயிருவோமா?' ன்னு கேட்டேன். பெரிய அன்னவெறி ஹசாரேவேவா இருப்பான் போலயேன்னு அவர் யோசித்திருக்கலாம். யோசிச்சா யோசிச்சுக்கிறட்டும். இதுக்குலாம் பயந்தா முடியுமா?

'வீட்டுக்கு போயிட்டு ஆர்டர் பண்ணலாம் பாரா. வீட்டுக்கு வந்துரும். வீட்டை குப்பையா போட்டு வச்சுருக்கேன்' ன்னு லைட்டா சீனப் போட்டாரு. 'அப்படி இல்லாட்டி அதெப்படி பேச்சிலர் வீடு' ன்னு நானும் ஒரு ஹெவி சீனைப் போட்டுக் காட்டினேன்.

கலகலன்னு பேசிக் கொண்டு கோபி வீடு சேர்ந்தோம். உள்ள போறதுக்கு முன்னால வாசலில் ஒரு கேபின். அதில் இருந்த ஆளிடம் என் இக்காமாவை கொடுக்கச் சொன்னார் கோபி.

இக்காமான்றது நம்ம ஓட்டர் ஐ.டி மாதிரின்னு வைங்களேன். ஓட்டர் ஐ.டியை நம்ம நாட்ல ஓட்டுப் போடப் போற நாள் அன்னைக்கு மாத்திரம் எடுத்து பர்சில் வைப்போம்.

இல்லாட்டியும் பிரச்சினை இல்லை. யாராவது நம் ஓட்டைப் போட்ருவாங்க. என்ன.. 'அண்ணே ஒங்க ஓட்டப் போட்டுட்டேன். வெட்டியா அலையாதீங்க' ன்னு ஒரு அழுத்து சைக்கிளில் வந்து சொல்லிட்டால் நமக்கும் திருப்தியா இருக்கும். (இப்படியான சிறு சிறு குறைகள் வளர் ஜனநாயக நாட்டில் யதார்த்தமே )

வக்காளி இங்கு வேற மாதிரி வச்சுருக்காய்ங்க. இக்காமா இல்லாமல் கக்கூஸ்கூட போக முடியாது.

இப்படியான இக்காமாவை கொடுக்கச் சொல்றாரே என சற்று யோசனையாக வந்தது. கொடுத்த ஆளிடம் மச்சம், மரு வகைகளை அடையாளப் படுத்தி வைத்துக் கொண்டு கோபி வீட்டிற்குள் நுழைந்தேன்.

ரொம்பப் பிடிச்சிருந்தது கோபி வீடு. கிளிக் கூண்டு மாதிரி லெச்சணமா இருந்தது. கிச்சனில் இருந்த டைனிங் டேபிளில் துவைத்த துணிகள் கிடந்தன. (ஒரு மனுஷனுக்கு எதுக்கு இம்புட்டுத் துணிகள்?)

டைனிங் டேபிளில் துணிகள் கிடந்தால், வாஷிங் மிஷினுக்குள் அமர்ந்து சாப்பிடுவாரா இருக்கும் கோபி என நினைத்துக் கொண்டேன். நினைக்க நல்லாருந்தது. அதிலும் வாஷிங் மிஷினை ஆன் பண்ணி சுத்திக் கொண்டே சாப்பிடுவாரா இருக்கும் என நினைப்பை நீட்டிப் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போது 'இணையத்தில் எழுதுபவர்களை பத்துப் பேர்களைத்தான் நல்லா எழுதுறாங்கன்னு சொல்ல முடியும்..ஹேண்ட்ஸ் ஃபுல் ஆஃப்ன்னு சொல்வாங்க இல்லையா.?' என ஒரு சுவீப் ஸ்டேட்மென்ட் விட்டார்.

'ஆமாவா'ன்னு அவரயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஆறு பேர்கள் வரைக்கும் விரல் மடக்கினார். அதில் என் பெயர் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் சூழத் தொடங்கியது.
மிச்சம் நாலு பெயர்களை அதுசமயம் அவருக்கு ஞாபகம் வரலை

. 'மிச்ச நாலு பேர்கள் யாரு கோபின்னு?' ன்னு மனசு விட்டு கேட்டுறலாமான்னு தோணியது. பயமாகவும் இருந்தது.

இதில் இரண்டு விதமான ஆபத்துகளை சந்திக்க நேரலாம். ஒண்ணு மிச்ச நாலு பேர்களிலும் என் பெயர் இல்லாமலேயே போய்விடலாம். ரெண்டு கோபி பெயர் இருந்தாலும் இருந்துவிடலாம். முன்னதை விட பின்னது மிகுந்த ஆபத்தானது என சைலண்ட் ஆயிட்டேன்.

நான் எதிர்பார்த்த அளவெல்லாம் கோபி இலக்கியம் பேசவில்லை. என்னைக் குஷிப்படுத்த விரும்பி மொக்கையாக அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் என ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன். பார்த்ததும் சலாலுதீன் சேட்டாவை சேட்டா என அழைக்கிற ஒரு மனுஷனுக்கு என்னைக் குளிப்பாட்ட இம்மி நேரம் ஆகுமா? நான் சும்மாவே சிரிப்பேன். கோபி பேசப் பேச சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கோபி துணுக்கு தோரணங்களாக கட்டி ஆடுகிறார் மனுஷன். ரெண்டு தோரணங்களை மட்டும் இங்கு தொங்க விடலாம்.

கோபி வீட்டிற்குள் போனதுமே ஃப்ரிட்ஜில் இருந்த லபானை ஒரு டம்ளரில் ஊத்திக் குடித்தார். 'பாரா லபான் குடிக்கிறீங்களா?' என வேறு கேட்டார். இன்னும் பால்குடியே மறக்காத பாலகனைப் பார்த்து தயிர் குடிக்கிறீங்களா என கேட்கிறார். இவரை பதிலுக்கு அசிங்கப்படுத்தாமல் விடக்கூடாது எனக் கறுவி வைத்துக் கொண்டேன். சந்தர்ப்பமும் வாய்த்தது.

டம்ப்ளரில் ஊத்தி கடைசி சொட்டு வரையில் விழணும் என தலையை அண்ணாந்தார். இப்பத்தான் அண்ணாக்க இருக்கார்
இதுதான்டா சமயம்ன்னு

'கோபி நீங்க CA ல்ல?. CA கஷ்டமான கோர்ஸ்ன்னு சொல்வாங்களே. எப்படி பாஸ் பண்ணீங்க.. அதுவும் நீங்க போயி?' என்றேன்.

'டூ தவுசனில் Y2K ன்னு ஒரு ப்ராப்ளம் வந்தது பாரா'

'ஆமாமா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் கம்ப்யூட்டருக்கெல்லாம் எதோ பிரச்சினை வரப்போதுன்னு'

'அதேதான். கம்ப்யூட்டர் கோளாறா எனக்கு மார்க் அள்ளிப் போட்டிருக்கும் போல பாஸ் பண்ணிட்டேன்'

#

நமக்காக மொக்கையாக அடித்து தள்ளிக் கொண்டிருக்காரே அவருக்காக நாம் ஏன் அவருக்குப் பிடித்த இலக்கியம் பேசக் கூடாதுன்னு மனசு இறங்கி வந்தது.

'தி.ஜா கும்பகோணம் தானே கோபி?'

'பின்னே. தி.ஜா, எம்.வி வெங்கட்ராம், குடந்தை R.கோபி ராமமூர்த்தி எல்லோரும் கு,கும்பகோணம் தான்'

முதல் ரெண்டு ஆளுகளை வாசித்திருக்கிறேன். மூணாவது ஆள் மட்டும் பிடிபடாமல் கோபியைப் பார்த்தேன்.

'என்ன பாக்குறீங்க? நான்தான்' என்றார்.

ஏழாவது விரலையும் மடக்கிட்டாரே என எனக்கு வயித்தெரிச்சலாக வந்தது.

#

இப்படி கூட இருந்த நேரம் முச்சூடும் தான் சிரிக்காமல் எதிராளியை சிரிக்க வைக்கிற டேலண்ட் கோபிக்கு இருக்குங்குறேன்.

'பாலராஜன் கீதா சார் நீங்க வந்தா தகவல் சொல்லச் சொன்னார் பாரா' ன்னு இடையில் சொன்னார்.

'ஐயோ..கேவிஆர் வீட்டுக் போயிருந்தப்பவே இவரை சந்திக்க விட்டுப்போச்சு கோபி. கேவிஆர் வீட்டுக்கு பக்கத்துலதான் என் வீடும். தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்னு எனக்கு மெயில் கூட செய்திருந்தார்'

'நீங்களே பேசுங்க' என அவர் மொபைலில் இருந்து கால் பண்ணி எனக்கு கொடுத்தார்.

'வணக்கம் கோபி' எனத் தொடங்கினார் பாலராஜன் கீதா சார்.

'சார் வணக்கம். நான் ராஜாராம் பேசுறேன்'

'பாரா..நல்லாருக்கீங்களா? தொப்ளான் நல்லாருக்காரா? மஹா சசி நல்லாருக்காங்களா?' என ஒரு சொடுக்கலில் வீட்டில் உள்ள எல்லோர்களையும் விசாரித்தார். லதாவை விசாரிக்கவில்லை. (இது லதா தகவலுக்காக)
தொப்ளானை ஒரு லேண்ட்மார்க் ஆக்கி வைத்திருக்கிறேன். இனி அவனைப் பிடிச்சுதான் நம்ம இடத்துக்கு வரணும் என்பது போல. ரொம்ப சந்தோஷமாக இருந்தது /இருக்கிறது.

கோபி போனை வாங்கி,'கிளம்பி வாங்க. சாப்பிடுறதுக்கு இங்க வந்துருங்க' ன்னு கம்ப்பெல் பண்ணினார்.

அவரும் ஒரு டாக்ஸியைப் போட்டுக் கொண்டு கிளம்பி வந்துட்டார்.

பாலராஜன் கீதா சார் வந்தப்போ தம்மடிக்கிறதுக்காக கோபி வீட்டு காம்பவுண்டு வெளியில் வந்து பேசிட்டு நின்னுட்டிருதோம். கோபி சிகரெட் குடிப்பதில்லை. லபான் மட்டும்தான் குடிக்கிறார். (என்னைக்கு திருந்தி என்னைக்கு நல்லா வரப்போராறோ )

செம சிரிச்ச முகம் பாலராஜன் கீதா சாருக்கு. இவர ரெண்டு தடவ கட்டி இறுக்கிக் கொள்ளலாம் போலயேன்னு வந்தது. ஒரு தடவதான் வாய்த்தது. அடக்க மாட்டாமல், 'ஸ்மைலிங் ஃபேஸ் சார் உங்களுக்கு' ன்னு சொன்னேன். அவரும் நன்றி சொன்னார்.

பிறகுதான் ஞாபகம் வந்தது.கோபியை பார்த்தப்போ இந்த மாதிரி கமண்ட் எதுவும் வைக்கலையேன்னு.

சரி.. ஒரு பொய்யை வீணாக்க வேணாம் நாளப்பின்ன உதவும்ன்னு என்னை சமாதானம் செய்து கொண்டேன் .

பாலராஜன் கீதா சார், கோபி, நான் மூவருமாக கோபி வீட்டிற்குள் நுழைந்தோம். வந்து சற்று நேரத்திற்கெல்லாம் பாலராஜன் சார் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் படங்களை கோபிக்கும் எனக்கும் பரிசளித்தார்.

பச்சை பார்டர் வைத்த வெள்ளைப் பட்டில் அம்மன் மின்னினார்கள். (எனக்கு ஏன் இன்னும் இந்தப் பழக்கம் வரமாட்டேங்குது? யாரையாவது பார்க்கப் போனால் நம் ஞாபகமாய் எதாவது கொடுத்து வரவேணும் என்பது. சரி..டைனோஜி மாதிரி டீனேஜ்தானே எனக்கும். போகப் போக எல்லாம் தானா வந்துரும்)

'சரஸ்வதிக்கு எங்கும் தனி ஆலயம் இல்ல பாரா. அந்த ஏரியாவில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. வருஷம் தவறமால் போய்ட்டு இருக்கேன்' -பாலராஜன் சார்.

'சரஸ்வதில்லாம் கும்புடுறீங்க சரியா எழுத்து வரமாட்டேங்குதே?- கோபி

அவர் கொஞ்சம் ஷாக்காகி என் முகத்தைப் பார்த்தார்.

'என்ன சார் என்னைய பாக்குறீங்க. சொன்னது அவரு. வந்ததிலிருந்து வெளு வாங்கிக்கிட்டுருந்தேன் . நீங்க இப்பத்தானே வந்தீங்க. வாங்குங்க' ன்னு இரக்கமில்லாமல் நினைத்துக் கொண்டேன்.

அடி தாங்க முடியாமல் போகும்போதெல்லாம்,' அய்யோ அம்மா' ன்னு ஊரக் கூட்டி நம்ம ஆளுகளை வரவைத்து, அடியைப் பகிர்ந்து வாங்க வைப்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் - 1

ரொம்ப வாடிட்டாரே பாலராஜன் சார்,' என்ன கோபி இப்படி சொல்லிட்டீங்க. நானும்தேன் ஆஞ்சநேயர் பக்தன். அதுக்காக என்னை தைரியசாலின்னு சொல்லிற முடியுமா?' என மடக்கலாமா என ஒரு ஐடியா வரத்தான் வந்தது.

'நீங்க ஆஞ்சநேயர் பக்தனா பாரா. அதான் அதே சாயலா இருக்கீங்க' என பூமராங் திரும்பினாலும் திரும்பலாம்.

ஒருத்தரைப் பத்தி புரிஞ்சுக்கிட்டா அப்புறம் வால் நீட்டக் கூடாது என்பது ஏழுகடை ராஜதந்திரம் நம்பர் -2.

பாலராஜன் சார் ஒரு கேமரா கொண்டு வந்திருந்தார். சின்னதா, அழகா, செப்பு போல. எனக்கு கேமராவைப் பிடிக்கும்.

கேமராவிற்கு பின்னால் நிற்க. (ஒரு காலத்தில் கேமரா மேனாக்கும்) முன்னால் நிற்பது என்றால் ஜெயிண்ட் வீலில் சுற்றுவது போல வயிறெல்லாம் கூசி வரும். இப்ப இப்ப பழகி வருகிறேன். (உதுத்துட்டேன்)

கட கடவென ஃபோட்டோ சூட் நடத்தினார் பாலராஜன் சார். நானும் கோபியும் மாத்தி மாத்தி போஸ் கொடுத்தோம். கேமராவில் உள்ளதுதான் வரும் என்று தெரியும். இருந்தாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை. வலிமையும் . என்ன கோபி?

'எங்கட்டையும் கேமரா இருக்கு. நாங்களும் எடுப்போம்ல' என கோபி ரூமிலிருந்து ஒரு கேமராவைத் தூக்கிக் கொண்டு வந்தார். மொரட்டுத்தனமான கேமரா அது. கூலிக்கு ஆள் வைத்துத்தான் தூக்கிட்டு போகணும் வரணும் போலான கேமராவாக இருந்தது. ஜிம்முக்கெல்லாம் போவாராக இருக்கும் கோபி. அசால்ட்டா சொந்த சத்துலயே தூக்கிக் கொண்டு வந்தார். வந்தவரால் கேமரா மூடியைத்தான் கழட்ட முடியவில்லை.

கொஞ்சம் முக்கினார். கொஞ்சம் முண்டினார். பிறகு நிறையவும் முக்கினார். நிறையவும் முண்டிப் பார்த்தார். ம்ஹூம். கேமரா வாய்ப்பு தரவில்லை. (அவர் குற்றமன்று)

'இப்படி கழட்டணும் கோபி' என பாலராஜன் சார் கவரின் இரு பக்க காதுகளை ப்ரெஸ் பண்ணியபடி கழட்டிக் காட்டினார். 'இவரை கூப்பிட்டுருக்கவே வேணாமோ' என கோபி யோசித்திருந்திருக்கலாம். யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே..

கோபி ஆர்டர் செய்த சாப்பாடு வந்தது. ரொட்டி, ரைஸ், தால், கடாய் வெஜிடேரியன், இன்னும் என்னென்னவோ.. சாப்பாடு விஷயங்களில் சரியாக ஞாபகம் வைத்திருப்பேன். இப்ப வரமட்டேங்குது. இப்படித்தான் புத்தியை பலநேரங்களில் கடன் கொடுத்து விடுகிறோம்... இல்லீங்களா வித்யா சந்திரசேகரன்? (இந்த விஷயத்தில் புத்தியை கடன் கொடுக்கவே மாட்டார்கள் வித்யா சந்திரசேகரன்- குசும்பன்)

ரூம் ரம்மியமான வாசனைகளால் நிறையத் தொடங்கியது(வாய் ஊறியது என்பதை எவ்வளவு டீசண்டாக சொல்ல வேண்டியதிருக்கிறது)

பாலராஜன் சார் சாப்பிட்டு வந்துட்டதாக மல்லுக் கட்டினார்..

'அட..உக்காருங்க சார். சும்மா கை நனைங்க'

உக்காந்து விட்டார்.

மூவரும் ஃ - னா போல தரையில் சம்மணம் கூட்டி அமர்ந்து கொண்டோம்.

தட்டு எடுக்க உள்ள போன கோபி, ;' ஆஹா ஒரு தட்டுதானே இருக்கு..இப்ப என்ன செய்றது?' என வந்தார்.

'ஆமாங்க இது ஒரு பிரச்சினை. இதுக்கு ரெண்டு அனாசின் சாப்பிட்டா சரியாகிடும்' ன்னு சொல்லத் தோணியது. சொல்ற நேரத்திற்கு சாப்பாட்டைப் பிரித்து விடலாம் என்பதால் செவ்வக சோத்து டப்பாவைத் திறந்தேன். சோத்து டப்பா மூடி கிட்டத்தட்ட ஒரு தட்டு போல மலர்ந்தது. ' கோபி இந்த மாதிரி தேவைகளை கால்குலேட் பண்ணித்தான் இப்படி ஒரு பாக்ஸ் போடுறாங்க போல. பாருங்க இப்ப இது தட்டாயிருச்சு' என்றேன்.

அரையரைக்கா புன்னகையை டெலிவெரி செய்த கோபி, 'என்னத்தையாவது சொல்லுங்க' என்றார்.

எப்பனாத்தான் சயிண்டிஃபிக்கா ஜிந்திப்பேன். அது பெரும்பாலும் இப்படித்தான் தோல்வியில் முடிகிறது. முருங்கை மரம் பிதுக்கும் பிசினிலிருந்து சாம்பிராணி ஃபேக்டரி தொடங்க முடியும் என்பது என் பழைய ப்ராஜக்ட். பதினோரு வயதில் ஜிந்திச்சது. இப்ப வரையில் கை கூட இயலவில்லை.. அப்ப செல்வராஜ். இப்ப இந்த கோபி. நண்பர்கள்தானே எதிரி.

பாதி ரொட்டி சாப்பிட்டு தள்ளி உக்காந்துகொண்டார் பாலராஜன் சார். (கை நனைச்சுட்டாராமாம்)

என் வண்டி போய்க் கொண்டிருந்தது. ஊறுகாய் இருந்தால் இன்னும் ரெண்டு கவளம் சாத்தலாம் போல வந்தது.

'ஊறுகாய் வாங்கி வச்சுக்குங்க கோபி. நம்ம ஊர் ஊறுகாயெல்லாம் இங்க கிடைக்குது'

'ஊறுகாய் வேணுமா பாரா? ஃபிரிட்ஜ்ல இருக்கு' என எழப் போனார் கோபி.

'நீங்க சாப்பிடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்' ன்னு பாலராஜன் சார் எழுந்து போனார். ஃப்ரிட்ஜ் திறக்கிற சத்தம் கேட்டது. மீண்டும் ஃபிரிட்ஜ் மூடும் சத்தம் கேட்கவே காணோம். அந்த சத்தமும் வந்தால்தானே ஊறுகாய் வரும். இதுதானே லாஜிக்.

ஒரு கட்டத்தில் 'ரொம்பத் தடவுறாரே ஊறுகாய்க்குப் போயி பாலராஜன் சார்' ன்னு நான் எழுந்து போனேன்.

பல்லில் விரல் வைத்தபடி மலர்ந்து சிரிக்கிற எம்.ஜி.ஆர். ஃபோட்டோவை எல்லா அதிமுக காரர்கள் வீட்டிலும் பார்க்கலாம். அந்த ஃபோட்டோ இல்லையெனில் அது அதிமுகக்காரர்கள் வீடில்லை என அடித்துச் சொல்லலாம். அவ்வளவு பிரசித்தம் எம்.ஜி.ஆரின் அந்தப் புகைப்படம்.
( அந்த புகைப்படத்து எம்ஜியார் போலவே, பல்லில் கை வைத்தபடியும், திறந்த ஃபிரிட்ஜின் கதவு தானாக மூடிவிடாதபடிக்கு ஒரு கையில் தாங்கிக் கொண்டும் தேடிக் கொண்டிருந்தார் பாலராஜன் சார். ஊறுகாயை. (நெற்றியில் கோடுகள் கூட ஓடியது)

'அய்யயே இம்புட்டு சிந்திக்கிறாரே.. தள்ளுங்க சார்' ன்னுட்டு நான் ஊறுகாயைத் தேடத் தொடங்கினேன்.

ஃபிரிட்ஜின் மேல் தட்டில் வெள்ளரிக்கா கட்டு ஒண்ணு பிளாஸ்டிக் பிரிக்கப்படாமல் இருந்தது. இரண்டாவது தட்டில் ஒரு சதுர டப்பாக்குள் நாலஞ்சு சப்போட்டாப் பழங்கள் கிடந்தன.பக்கத்தில் கோபி குடிச்சுட்டு வச்ச லபான் கேன்
.
மூன்றாவது தட்டில் சில ஐட்டங்கள் இருந்தன. அவை யாவும் ஊறுகாய்க்கு பொருந்தாத சாயலில் இருந்ததால் என் நெற்றியிலும் கோடுகள் ஓடத் தொடங்கின.

எங்கள் குடும்பம் பாரம்பரியமான திமுக குடும்பம் என்பதால் பல்லில் கை வைக்கவும் யோசனையாக இருந்தது. யோசிக்க எல்லோருக்கும் உரிமை இருக்குதானே. தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, (பாரம்பரிய திமுக குடும்பத்திலிருந்து வந்ததால்) 'இதுல எங்க சார் ஊறுகாய் இருக்கு?' என்றேன் பாலராஜன் சாரைப் பார்த்து.

'அதானே..பக்கத்து வீட்டு ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாரோ?' என்றார் சார்.

வெடித்துத் சிரித்தேன்.

நாங்களாக பேசுவதும் சிரிப்பதையும் கண்ட கோபி விடு விடுவென எழுந்து வந்தார். 'இதென்ன ஊறுகாயா ஒங்க மண்டையா?' என்பது போல சப்போட்டாப் பழ சதுர டப்பாவை தூக்கிக் கொண்டு சாப்பிடட்ட இடத்திற்குப் போய் விட்டார். முழு முழு எலுமிச்சை ஊறுகாய். ஊறி உணங்கி சப்போட்டாவாக எங்களுக்கு காட்சி அளித்திருக்கிறது. காட்சிப் பிழேய். (பிழை ஊறியதால் பிழேய்)

'இது ஊறுகாயா? நான் சப்போட்டாப் பழம்னுள்ள நெனைச்சேன்" - பாலராஜன் சார்.

wise men thinks alike.

#

ஆச்சு. பாலராஜன் சார் கிளம்பும் நேரம் வந்துட்டது.'சரி கோபி,பாரா' ன்னு சார் கிளம்பியப்போ எதையோ பறிகொடுத்தது போல இருந்தது. சரி சார்ன்னு கூடவே கிளம்பி வந்தேன்.கோபி வீட்டின் சைடு சந்தில் பாலராஜன் சார் வந்த காருக்குள் தலை அண்ணாந்து தூங்கிக் கொண்டிருந்தார் ட்ரைவர். சார் அந்தப் பக்கத்து கண்ணாடி ஜன்னலை தட்டினார். உசும்பி விழித்த பிறகு நான் இந்தப் பக்கத்து ஜன்னலை தட்டினேன். திரும்பிப் பார்த்தார். கும்பிட்டேன் ..

பாலராஜன் சார் புறப்பட்ட கொஞ்சநேரத்தில் நானும் கிளம்ப நேரிட்டது. கோபி அஸ்லாம் பாயை அழைத்தார். பேலஸ் வந்துட்டது. பேலஸ் வாசலில் இறங்கி கோபியும் நானுமாக கட்டி அணைந்து கொண்டோம். கண்ணாடி வழியாக அஸ்லாம் பாயைப் பார்த்தும் ஒரு கும்பிடு வைத்தேன்.நேராக எட்டி என் ரூமிற்கு நடை வைத்துக் கொண்டிருந்தேன்.

சலாலுதீன் சேட்டாவை அழைத்து,' சேட்டா பேலஸ் வந்துட்டேன். கோபியே கொண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டார் ரூமிற்கு நடந்து போய்ட்டு இருக்கேன்' ன்னு கூப்பிட்டேன். (கெளம்புற நேரத்துல கூப்பிட்றான்னு சேட்டா சொல்லி வைத்திருந்தார்)

'நீ அங்கயே நில்லு. நா இந்தா வர்றேன்'ன்னு சலாலுதீன் சேட்டா கிளம்பி வந்தார்.

கையில் கோபி பரிசளித்த ஸ்ரீலங்கா டீ பாக்கெட்டுகள் இருந்தன.

ரெண்டு பாக்கட்டுகளை எனக்கு வைத்துக் கொண்டு ரெண்டு பாக்கெட்டுகளை சலாலுதீன் சேட்டாவிற்கு பரிசளித்தேன்.

#

'எதுக்கு வேற யாருக்காவது கொடுக்கலாம்ல" என டீ பாக்கட்டுகளை எனக்கு கொடுத்தது போல பாலராஜன் சாருக்கும் கொடுத்தப்போ பாலராஜன் சாரின் கமண்ட் இது.

'அதான் உங்களுக்கு கொடுக்கிறேன்" ராஸ்கல் கோபியின் கமெண்ட் இது.


***

புரை ஏறும் மனிதர்கள்:

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14,15,16,17,18,19


8 comments:

ஓலை said...

Welcome back to blog.

vasu balaji said...

ரெம்ப நாளாச்சே புரையேறி:))

நிலாமகள் said...

அருமையான மனிதர்கள்... கலகலக்கும் எழுத்து!

பால் புரைக்குத்தியதுண்டு. மீன் குழம்பில் நெருப்பு குத்துவதை இப்பத்தான் கேள்விப் படுகிறேன். (நாங்க சுத்த சைவம்)

உயிரோடை said...

நல்ல பதிவு. கவிதை பகிர்ந்து நாளாச்சே அதையும் கொஞ்சம் கவனிங்களேன்

சிவகுமாரன் said...

மீன் குழம்பில கரித்துண்டா ? நெசம்மாவா ?
சுவாரசியமான பதிவு

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு சித்தப்பாவின் எழுத்துக்களை ரசனையோடு படிக்க முடிந்தது...

அருமை...

தொடர்ந்து எழுதுங்கப்பா...

உடல் நலம் எப்படியிருக்கிறது...?

Anonymous said...

அருமையா எழுதுறீங்களே....
வாழ்த்துக்கள்!!
I read almost all your posts, In fact i was reading all your posts forgetting my work.

Please accept ..iam also your friend living in kuwait.

S.Ravi
Kuwait

இரசிகை said...

naan inga vanthu yeppo blog varap poreengannu kekka vanthen...

vanthaal..semayaiyaana pathivu.

vizhunthu vizhunthu sirithen.paa.raa rocks.
pakka va irunthuchu.

adaikkorukka yezhuthunga paa.raa.

anbum..vaazhthukalum.