Tuesday, November 3, 2009

தொடர் பதிவு5: தீபாவெளியில்..

து நம்ம அமித்தம்மா கூப்பிட்ட தொடர். நன்றி அமித்தம்மா!

தீபாவளி கொண்டாடுவதில்லை, மக்காஸ். சேலைக்காரி அம்மன், வீட்டு தெய்வம். இந்த அம்மனை குல தெய்வமாக கும்பிடுபவர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கொண்டாடுவதில்லை என்பது, எண்ணெய்க்குளியலும், சமையலும் இல்லை. மற்றபடி டிரஸ் எடுத்து, தைச்சு, நனைத்து வைத்து விடுவோம். "ஒன்னும் கோடியாக அணியலையே..." என நைசாக அம்மனை ஏமாற்றி விடுவோம்.

"கள் கொண்டாட மாட்டாளே" என வீராயீ அம்மாச்சி வீட்டில் இருந்து வருகிற முறுக்கு, அதிரசம், வாசனை நிரம்பிய வெள்ளாட்டுக்கறி நாக்கு தாண்டி இன்னும் புத்தியில் இருக்கு. அம்மாச்சி இடத்திற்கு, பிறகு சரசத்தை வந்தார்கள். (லதாவின் அம்மா!) முறுக்கு, அதிரசம், வெள்ளாட்டுக்கறி பாரம்பர்ய வரத்து போல!

தீபாவளி அன்று பார்க்கிற அம்மா, லதா, அழகாய் இருப்பார்கள். எண்ணைச்சட்டி இல்லாமல், அடுக்களை நுழையாமல், வருகிற பலகாரங்களை பகிர்ந்து கொண்டு... லதா வந்த பிறகு தீபாவளியில் சற்று மாற்றம். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே "சேம் பின்ச்" பண்ண, சேம் அதிரசம், முறுக்கு செய்து வைத்துக்கொள்வாள். கேட்டால், "பலகாரம் கொடுத்துட்டு வெறும் தட்டோடு அனுப்ப வேணாமே" என்பாள். "சரி..திருப்பி கொல்லு.." என்பேன். பழிக்கி பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்கிற லதா! சரி மேட்டருக்கு போவோம்..

1.உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?
குறிப்பு, பா.ராஜாராம்-தான். சிறு குறிப்பு என்பதால், நீங்கள் ப்ரியமாய் தரும் பா.ரா-வும்!

2.தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
மற்றொரு சம்பவம்தான் நினைவுக்கு வருது. ஆனால், அமித்தம்மா, "பால்யத்தில் உங்கள் தீபாவளி பற்றி.." என விரும்புகிறார்கள். சரி,.. அதையே பார்ப்போமே.

ஆறேழு வயதிருக்கும் என நினைவு... தீபாவளி மதியம் அது. பட்டாசெல்லாம் தீர்ந்து போய் விட்டது. எப்பவும் கடைசியாக மிஞ்சுவது கலர் தீப்பெட்டி மத்தாப்பே. அதை தொடுகிறோம் எனில் அவ்வளவுதான் தீபாவளி என ஒரு வலி வரும் பாருங்கள் .. சொல்லி மாளாது..

வானியங்குடி குடிசை வீடு. வாசலில் நின்றபடி தீப்பெட்டி மத்தாப்பு கொளுத்தி மேலே வீசினால் ராக்கட் மாதிரி போய் திரும்புகிற விளையாட்டை கற்றுக்கொண்டிருந்தேன். ராக்கட், லேண்டிங்கில் பிரச்சினை ஆகி, கூரையில் சொருகிக்கொண்டது! கொஞ்சம் நேரம் ஒன்னும் புரியலை... புகை இருந்தால் நெருப்பிருக்கிற கிசு கிசு மாதிரி கூரையும் பற்றிகொண்டது. ஊர்ஜிதம்!

இனி, பிழைப்பில்லை என்று அறிந்ததும் நலுக்குப்படாமல் வீட்டிற்குள் போய்விட்டேன் (உச்சி கொப்பில் அமர்ந்து கொண்டு அடிக்கொப்பை வெட்டுகிற சாதுர்யம் எனக்கு ஆதியிலேயே இருந்திருக்கு என இவ்வரலாறு எழுதும்போது உணர வாய்க்கிறது..). கூரை வீட்டு ஹாலில் ஒரு மூலை இருக்கும். அங்கு அமர்ந்து விட்டேன் எனில் ’சரண்டர்’ என்று அர்த்தம். இதை அம்மாவும் அறிந்திருப்பாள் போல.

கை வேலையாக வந்த அம்மா பொசிசன் பார்த்து, "என்னடா?" என்றாள். "ஒன்னுமில்லையே..." என்பதாக மண்டையை உருட்டினேன். இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!... "என்ன பண்ணிட்டு வந்த?" என்று அம்மா கேட்பதற்கும், வெளியில் இருந்து "குய்யோ முறையோ" என குரல் வருவதற்கும் சரியாக இருந்தது.

நாலைந்து ஓலையோடு வீடை காப்பாத்தி விட்டார்கள், ஊர்க்கார்கள். எள் என்றால் எண்ணையாக நிற்கிற ஊர்க்கார வெண்ணைகள்! அமளியோடு, அமளியாக " கூண்டோடு கொளுத்த தெரிஞ்சுச்சே, தலையுருட்டி" என்று அம்மா, தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சவுதியில்.

4.த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பேஷா! வழக்கமாக வருகிற போன் கால்கள் கூட வரலை. நானும், யாரையும் கூப்பிடலை. நண்பர் நவாஸ், சரவணகுமார் இங்கிருந்து கூப்பிட்டார்கள்!, நல்ல நாள், பெரிய நாளுக்கு வீட்டில் இருக்க முடியாத அழுத்தம் சற்று கூடுதலாக இருந்தது. வேலையை இழுத்து போட்டுக்கொண்டேன். its gone. போயே போச்சு!

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
புத்தாடைகள் இல்லை.

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
இங்கிருப்பதால் பலகார நிலவரம் தெரியவில்லை. சுற்றி, உறவுகள் நண்பர்களுக்கு குறை இல்லை... அதனால், குறை இல்லாமல் இருந்திருக்கலாம்.

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
சாதாரணமா தொலை பேசிதான்.இந்த வருஷம் யாருக்கும் கூப்பிடலை.

8.தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
ஊரில் இருந்திருந்தால், எல்லா நண்பர்கள் வீட்டுக்கும் போய் புகைப்படம் எடுத்து கொடுத்திருப்பேன். (புகைப்பட தொழிலும் பண்ணிக்கொண்டு இருந்ததால்..) அன்று எல்லோருமே புது ட்ரெஸ் போட்டு வாசனையாக இருப்பதை பார்க்க ரொம்ப பிடிக்கும். மதியம் வரைக்கும் இந்த சுத்து. பிறகு நண்பர்களுடன் தண்ணி. மாலையில் குழந்தைகளுடன் மிச்ச பட்டாசு வெடிப்பு... ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.

9.இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
சிவகங்கையில் ஒரு அரசு பார்வையற்றவர்களுக்கான பள்ளி உண்டு. சவுதி வரும் முன்பிலிருந்தே அங்கு தொடர்பு இருக்கிறது.. நண்பர் கபிலனின் உதவி இதில் மிக பெரியது. அவர் அரிசி கொண்டு வருகிறார். நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டு பேரும் ஊதி, ஊதி திங்கிறோம்!

10.நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அது எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரி "தீபாவெளிதான்!"அதனால் மண்ணில் இருந்து இந்த வருடம் தீபாவளி எப்படி என கேட்க்கலாம்...
மாதவன், காமராஜ், தண்டோரா, தீபா... எழுதுங்க மக்கா.

அன்புடன்,
பா. ராஜாராம்


24 comments:

இன்றைய கவிதை said...

தங்கள் கவிதைகளைப்
போலவே
தங்கள் தீபாவளியும்
தனித்தன்மையாத்தானேயிருக்கு!

-கேயார்

சந்தான சங்கர் said...

அன்பு பா.ரா
அமித்தம்மா
கூப்பிட்ட
நிமித்தமாய்
உரைத்திட்ட
பத்தில்
பத்தியது இரண்டாவது.
அணைந்து பின்
அலைந்து அணிந்தது சவூதி.
எட்டும் ஒன்பதும் அருமை
நானும் புகைப்பட தொழில் இருந்து
வந்தவன்தான்..

நன்றி பா.ரா

கவிதாசிவகுமார் said...

இப்பதிவில் கொஞ்சம் குறும்பு, காமெடி, நையாண்டி, கொஞ்சம் சரவெடி அனைத்தையும் கலந்து கொடுத்து தீபாவளிப் பலகாரம் அனைத்தும் சாப்பிட்டதுபோல் உள்ளது. கொஞ்சம் 'தீபாவளி லேகியமும்' தந்திருக்கலாம். சிரிச்சு சிரிச்சு ஏற்பட்ட வயிறு வலி சரியாயிருக்கும்.

Kannan said...

தொடர் பதிவு பார்த்தவுடன், "ஆரம்பிச்சுடாங்கையா...ஆரம்பிச்சுடாங்க" ன்னு அடுத்த பகுதிக்கு விரையும் என்னை தடுத்து நிறுத்துகிறது உனது இயல்பான எழுத்தோட்டம்.

Ashok D said...

சித்தப்ஸ் எனக்கு ’வெள்ளாட்டுக்கறி’ மட்டுமே நியாபகத்தில இருக்கு.

velji said...

தாமதமாகி விட்டது...'தொப்ப்ள் வீட்டை' பார்த்தேன்.வழக்கம் போல் அருமை.தொப்புள்கொடியை பிடித்து போனால் ஆதிமனிதனையே அடைந்து விடலாம் என இளையராஜா ஒருமுறை சொன்னது நினைவிலாடுகிறது.உறவுகளில் திளைக்கும் உங்கள் கவிதைகள் வலைஉலகையும் அப்படி ஒரு கொடியாக உணரச்செய்கிறது.

தீபாவளி...தொலைவில் இருக்கும் கவலையை இலகுவாக சொல்லியிருக்கிறீர்கள்.'அம்மாவுக்கு தொடைக்கறின்னா உசுரு...'அருமை.

என் வரிகளை கவர்ந்ததற்கு மிக்க நன்றி.

பிரபாகர் said...

அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிங்க...

பிரபாகர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

(உச்சி கொப்பில் அமர்ந்து கொண்டு அடிக்கொப்பை வெட்டுகிற சாதுர்யம் எனக்கு ஆதியிலேயே இருந்திருக்கு என இவ்வரலாறு எழுதும்போது உணர வாய்க்கிறது..). கூரை வீட்டு ஹாலில் ஒரு மூலை இருக்கும். அங்கு அமர்ந்து விட்டேன் எனில் ’சரண்டர்’ என்று அர்த்தம். //

இப்படி உங்கள் எழுத்து மழையில் நனைவதற்குத்தான் பால்யத்தின் தீபாவளி பற்றி எழுதச்சொன்னது.

நனைஞ்சுட்டேன், நன்றி பா.ரா.

அ.மு.செய்யது said...

//தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு//


ஹா ஹா.....

முழுதும் ரசிக்க முடிந்தது பா.ரா..உங்கள் பால்ய தீபாவளி நினைவுகளை !!!

விஜய் said...

மலர்ந்த நினைவுகள்
எப்பொழுதும் பசுமை

வாழ்த்துக்கள்

விஜய்

S.A. நவாஸுதீன் said...

//இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!...//

//தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.//

ஹா ஹா ஹா. இதுதான்யா பா.ரா. மக்கா அடுத்து எப்போ ஜித்தாஹ் வருவதா உத்தேசம். மொட்டைமாடி காத்துகிட்டு இருக்கு.

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
//இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!...//

//தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.//

ஹா ஹா ஹா. இதுதான்யா பா.ரா. மக்கா அடுத்து எப்போ ஜித்தாஹ் வருவதா உத்தேசம். மொட்டைமாடி காத்துகிட்டு இருக்கு//

கூட்டான்ஜோறா என்னையும் சேர்த்துக்குங்கப்பா!!

மணிஜி said...

மக்கா..என்னைய அழைச்சதுக்கு நன்றி..ஆனா வழக்கமான தீபாவளிதான்..எல்லோரின் பால்யங்கள் போலவே..பால்யத்தில் சுயநலம் அதிகம்.இப்ப அது இல்லை.உதவிகள் தீபாவளி என்று இல்லை .எப்பவும் தேவையறிந்து இயன்றால் நிச்சயம்.தீபாவளி கழிந்து 10 நாள் பிறகு மீந்து போன பலகாரத்தை தானம் செய்வது போல் இல்லை.பெரிசா எழுத ஒன்னும் இல்லை.அன்புக்கு நன்றி.இங்கனயே ஷார்ட்டா முடிச்சுக்கறனே..தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்பிகிறேன்..அப்புறம் மகா கல்யாணத்துல கச்சேரியை வச்சுகிடுவோம்.அன்னிக்கு தீபாவளிதான்

ஆரூரன் விசுவநாதன் said...

இனிமையான பதிவு....பா.ரா.


வாழ்த்துக்கள்

இரசிகை said...

//"சரி..திருப்பி கொல்லு.." என்பேன். பழிக்கி பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்கிற லதா//

yenna paadu paduththureenga avungalai..:)

//ராக்கட், லேண்டிங்கில் பிரச்சினை ஆகி, கூரையில் சொருகிக்கொண்டது!//

inga irunthey sirikka aarambichchutten..rajaram sir..!

//தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு//

inga varaikkum ore siripputhaan...
(kannam thaadai laam valikku)

kalakku kalakkunnu kalakkeetteenga...:)))

கவிதாசிவகுமார் said...

நகைச்சுவைக்காக 'அம்மாவுக்கு தொடைக்கறின்னா உசுரு'ன்னு எழுதியிருக்கீங்க. ஆனால் இந்த அன்பு மகன்தான் 'அப்பத்தாவிற்கும் தாத்தாவிற்கும் அம்புட்டு உசுரு'ன்னு எங்களுக்கு தெரியும் சித்தப்பா.

ராகவன் said...

அன்பு பாரா,

மிகத் தாமதமான பின்னூட்டம், கொஞ்சம் வேலையாய் இருந்துவிட்டேன், படிக்க முடியவில்லை. லாவகமான வார்த்தை, விலாவில் குத்தி சிரிப்பு மூட்டும் விடலைக்காதலியின் சுவாரசியம் இந்த பதிவை மேயும் போது, அடிவரை.

எல்லா இடங்களிலும் வெள்ளந்தியான அன்பை தோய்த்து தரும் திண்பண்டங்கள் பாரா, உங்கள் பதிவு. பண்டிகை தினங்களில் மட்டும் அழகாய்த் தெரிவது?! கூடுதல் அழகாக என்று திருத்தி வாசிக்கிறேன் பாரா.

உங்களுக்கு அழகாய் வருகிறது நகையுணர்வு, என்னைப் போன்ற சீரியஸ் ஆசாமிகள் எப்போதும் கடுவன் பூனையாய் உலாத்தும் பதிவுலகில், புருபுருவென கோழியிறகில் மெதுவா காது குடைவது போல எழுதுவது சாத்தியமே இல்லை எனக்கு.

இது போன்ற பதிவு தொடர்களிலும் ஒரு முத்திரைப் பதிவு உங்களுக்கு மட்டுமே இலகுவாய் வருகிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

கோமதி அரசு said...

//தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள்
தொடைக் கறின்னா அம்மாவிற்கு உசுரு//

எல்லா அம்மாவுக்கும் தொடை பிடிக்கும் போல, என் அம்மா தொடையில் கிள்ளி
நிமிட்டபழம் நினைவு இருக்கட்டும்
என்பார்கள்.

நினைவுகள் என்றும் அருமை.

கோமதி அரசு said...

நிமிட்டாம் பழம் நினைவு இருக்கட்டும்
என்பார்கள்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
கேயார்,
சங்கர்,
கவிதும்மா,
கண்ணா,
அசோக்,
வேல்ஜி,
பிரபாகர்,
அமித்தம்மா,
செய்யது,
விஜய்,
நவாஸ்,
சபிக்ஸ்,
மணிஜி,
விஸ்வா,
ரசிகை,
ராகவன்,
கோமதி அரசு (நல்வரவுங்க..) :-)

மிகுந்த அன்பும் நன்றியும்!

கல்யாணி சுரேஷ் said...

//கை வேலையாக வந்த அம்மா பொசிசன் பார்த்து, "என்னடா?" என்றாள். "ஒன்னுமில்லையே..." என்பதாக மண்டையை உருட்டினேன். இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!... "என்ன பண்ணிட்டு வந்த?" என்று அம்மா கேட்பதற்கும், வெளியில் இருந்து "குய்யோ முறையோ" என குரல் வருவதற்கும் சரியாக இருந்தது.

நாலைந்து ஓலையோடு வீடை காப்பாத்தி விட்டார்கள், ஊர்க்கார்கள். எள் என்றால் எண்ணையாக நிற்கிற ஊர்க்கார வெண்ணைகள்! அமளியோடு, அமளியாக " கூண்டோடு கொளுத்த தெரிஞ்சுச்சே, தலையுருட்டி" என்று அம்மா, தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.//

சூப்பர்ண்ணா. :)

//சிவகங்கையில் ஒரு அரசு பார்வையற்றவர்களுக்கான பள்ளி உண்டு. சவுதி வரும் முன்பிலிருந்தே அங்கு தொடர்பு இருக்கிறது.. நண்பர் கபிலனின் உதவி இதில் மிக பெரியது. அவர் அரிசி கொண்டு வருகிறார். நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டு பேரும் ஊதி, ஊதி திங்கிறோம்!//

ரொம்ப நல்ல விஷயம். வாழ்த்துகள் அண்ணா.

பா.ராஜாராம் said...

நன்றி கல்யாணி!

Deepa said...

அழைப்புக்கு மிக்க நன்றி ராஜாராம் ஸார்! தாமதத்துக்கு மன்னிகவும். ரொம்ப ஆணி! :-)

இப்பதிவில் கேட்டிருக்கும் கேள்விகள் சுவாரசியமாக இருக்கின்றன!
விரைவில் எழுதுகிறேன்.

பி.கு: நான் தீபாவளி என்ற தலைப்பில் எற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன்.
http://deepaneha.blogspot.com/2009/10/blog-post_19.html

cheena (சீனா) said...

அன்பின் பா.ரா

அருமையான மலரும் நினைவுகள்
நல்லாவே இருக்கு - - அம்மாவுக்குப் பிடித்தது சூப்பர் - சும்மா சொல்லக் கூடாது - அனுபவிச்சிருக்கீங்க

நானும் ஒண்ணு எழுதி இருக்கேன் - படிங்களேன்

http://cheenakay.blogspot.com/2009/10/00.html

நல்வாழ்த்துகள் பா.ரா
நட்புடன் சீனா