இது நம்ம அமித்தம்மா கூப்பிட்ட தொடர். நன்றி அமித்தம்மா!
தீபாவளி கொண்டாடுவதில்லை, மக்காஸ். சேலைக்காரி அம்மன், வீட்டு தெய்வம். இந்த அம்மனை குல தெய்வமாக கும்பிடுபவர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கொண்டாடுவதில்லை என்பது, எண்ணெய்க்குளியலும், சமையலும் இல்லை. மற்றபடி டிரஸ் எடுத்து, தைச்சு, நனைத்து வைத்து விடுவோம். "ஒன்னும் கோடியாக அணியலையே..." என நைசாக அம்மனை ஏமாற்றி விடுவோம்.
"மகள் கொண்டாட மாட்டாளே" என வீராயீ அம்மாச்சி வீட்டில் இருந்து வருகிற முறுக்கு, அதிரசம், வாசனை நிரம்பிய வெள்ளாட்டுக்கறி நாக்கு தாண்டி இன்னும் புத்தியில் இருக்கு. அம்மாச்சி இடத்திற்கு, பிறகு சரசத்தை வந்தார்கள். (லதாவின் அம்மா!) முறுக்கு, அதிரசம், வெள்ளாட்டுக்கறி பாரம்பர்ய வரத்து போல!
தீபாவளி அன்று பார்க்கிற அம்மா, லதா, அழகாய் இருப்பார்கள். எண்ணைச்சட்டி இல்லாமல், அடுக்களை நுழையாமல், வருகிற பலகாரங்களை பகிர்ந்து கொண்டு... லதா வந்த பிறகு தீபாவளியில் சற்று மாற்றம். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே "சேம் பின்ச்" பண்ண, சேம் அதிரசம், முறுக்கு செய்து வைத்துக்கொள்வாள். கேட்டால், "பலகாரம் கொடுத்துட்டு வெறும் தட்டோடு அனுப்ப வேணாமே" என்பாள். "சரி..திருப்பி கொல்லு.." என்பேன். பழிக்கி பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்கிற லதா! சரி மேட்டருக்கு போவோம்..
1.உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?
குறிப்பு, பா.ராஜாராம்-தான். சிறு குறிப்பு என்பதால், நீங்கள் ப்ரியமாய் தரும் பா.ரா-வும்!
2.தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
மற்றொரு சம்பவம்தான் நினைவுக்கு வருது. ஆனால், அமித்தம்மா, "பால்யத்தில் உங்கள் தீபாவளி பற்றி.." என விரும்புகிறார்கள். சரி,.. அதையே பார்ப்போமே.
ஆறேழு வயதிருக்கும் என நினைவு... தீபாவளி மதியம் அது. பட்டாசெல்லாம் தீர்ந்து போய் விட்டது. எப்பவும் கடைசியாக மிஞ்சுவது கலர் தீப்பெட்டி மத்தாப்பே. அதை தொடுகிறோம் எனில் அவ்வளவுதான் தீபாவளி என ஒரு வலி வரும் பாருங்கள் .. சொல்லி மாளாது..
வானியங்குடி குடிசை வீடு. வாசலில் நின்றபடி தீப்பெட்டி மத்தாப்பு கொளுத்தி மேலே வீசினால் ராக்கட் மாதிரி போய் திரும்புகிற விளையாட்டை கற்றுக்கொண்டிருந்தேன். ராக்கட், லேண்டிங்கில் பிரச்சினை ஆகி, கூரையில் சொருகிக்கொண்டது! கொஞ்சம் நேரம் ஒன்னும் புரியலை... புகை இருந்தால் நெருப்பிருக்கிற கிசு கிசு மாதிரி கூரையும் பற்றிகொண்டது. ஊர்ஜிதம்!
இனி, பிழைப்பில்லை என்று அறிந்ததும் நலுக்குப்படாமல் வீட்டிற்குள் போய்விட்டேன் (உச்சி கொப்பில் அமர்ந்து கொண்டு அடிக்கொப்பை வெட்டுகிற சாதுர்யம் எனக்கு ஆதியிலேயே இருந்திருக்கு என இவ்வரலாறு எழுதும்போது உணர வாய்க்கிறது..). கூரை வீட்டு ஹாலில் ஒரு மூலை இருக்கும். அங்கு அமர்ந்து விட்டேன் எனில் ’சரண்டர்’ என்று அர்த்தம். இதை அம்மாவும் அறிந்திருப்பாள் போல.
கை வேலையாக வந்த அம்மா பொசிசன் பார்த்து, "என்னடா?" என்றாள். "ஒன்னுமில்லையே..." என்பதாக மண்டையை உருட்டினேன். இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!... "என்ன பண்ணிட்டு வந்த?" என்று அம்மா கேட்பதற்கும், வெளியில் இருந்து "குய்யோ முறையோ" என குரல் வருவதற்கும் சரியாக இருந்தது.
நாலைந்து ஓலையோடு வீடை காப்பாத்தி விட்டார்கள், ஊர்க்கார்கள். எள் என்றால் எண்ணையாக நிற்கிற ஊர்க்கார வெண்ணைகள்! அமளியோடு, அமளியாக " கூண்டோடு கொளுத்த தெரிஞ்சுச்சே, தலையுருட்டி" என்று அம்மா, தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.
3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
சவுதியில்.
4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
பேஷா! வழக்கமாக வருகிற போன் கால்கள் கூட வரலை. நானும், யாரையும் கூப்பிடலை. நண்பர் நவாஸ், சரவணகுமார் இங்கிருந்து கூப்பிட்டார்கள்!, நல்ல நாள், பெரிய நாளுக்கு வீட்டில் இருக்க முடியாத அழுத்தம் சற்று கூடுதலாக இருந்தது. வேலையை இழுத்து போட்டுக்கொண்டேன். its gone. போயே போச்சு!
5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
புத்தாடைகள் இல்லை.
6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
இங்கிருப்பதால் பலகார நிலவரம் தெரியவில்லை. சுற்றி, உறவுகள் நண்பர்களுக்கு குறை இல்லை... அதனால், குறை இல்லாமல் இருந்திருக்கலாம்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
சாதாரணமா தொலை பேசிதான்.இந்த வருஷம் யாருக்கும் கூப்பிடலை.
8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
ஊரில் இருந்திருந்தால், எல்லா நண்பர்கள் வீட்டுக்கும் போய் புகைப்படம் எடுத்து கொடுத்திருப்பேன். (புகைப்பட தொழிலும் பண்ணிக்கொண்டு இருந்ததால்..) அன்று எல்லோருமே புது ட்ரெஸ் போட்டு வாசனையாக இருப்பதை பார்க்க ரொம்ப பிடிக்கும். மதியம் வரைக்கும் இந்த சுத்து. பிறகு நண்பர்களுடன் தண்ணி. மாலையில் குழந்தைகளுடன் மிச்ச பட்டாசு வெடிப்பு... ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.
9.இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
சிவகங்கையில் ஒரு அரசு பார்வையற்றவர்களுக்கான பள்ளி உண்டு. சவுதி வரும் முன்பிலிருந்தே அங்கு தொடர்பு இருக்கிறது.. நண்பர் கபிலனின் உதவி இதில் மிக பெரியது. அவர் அரிசி கொண்டு வருகிறார். நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டு பேரும் ஊதி, ஊதி திங்கிறோம்!
10.நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அது எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரி "தீபாவெளிதான்!"அதனால் மண்ணில் இருந்து இந்த வருடம் தீபாவளி எப்படி என கேட்க்கலாம்...
அன்புடன்,
பா. ராஜாராம்

