Friday, February 19, 2010

பதின்ம வயதும் மீனாக்கா டைரி குறிப்பும்

தின்ம வயதுகளில் பெருபாலும் நான் பழைய டைரிகளையே பார்க்க நேர்ந்திருக்கிறது. அதுவும் வண்ணான் கணக்கு எழுதுகிற அம்மாவின் டைரியாக இருக்கும். ஒரே ஒரு சிவப்பு நிற டைரி மட்டும் புதுசு. என்னவோ, எதுவுமே எழுத தோணலை அதில்..ரொம்ப நாட்கள் பத்திரமாக வைத்திருந்த டைரி அது. மனிதர்களே தொலைகிறபோது டைரி எம்மாத்திரம்?

ன்றாலும் முல்லையின் இந்த தொடர் விளையாட்டும், இந்த தலைப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கடந்த வாரம் முழுக்க வேலைகளுக்கிடையே இந்த நினைப்பாகவே ஊறிக் கொண்டிருந்தேன். டைரி தொலைந்தால், பதின்ம வயது நினைவும், கிளர்வும் தொலையுமா என்ன? எல்லோரையும் போல் என்னையும் திரும்பி பார்க்க வைத்த முல்லைக்கு வந்தனம். அழைத்த ராகவனுக்கு நன்றி.

ர்ல உள்ள வெயிலெல்லாம் எம்புள்ளை தலையில்தான்" என்று தலையை தொட்டு பார்க்கிற அம்மாவின் கைகள் ஓய்ந்திருந்தது. அப்பாவிடம்,"நானே குளிசுக்கிறேன்ப்பா"என்று தொடங்கியிருந்தேன். பெயர் சொல்லி அழைக்கிற நண்பர்களை எல்லாம் "மாப்ள" போட தொடங்கி இருந்தேன். மாப்ளைகளும், "மாப்ள"எனும் போது பெருமையாக உணர்ந்தேன். இரண்டு அக்கா, இரண்டு தங்கைகள். ஒண்ணு, மண்ணா தூங்கிய காலங்கள் முடிவிற்கு வந்திருந்தது.

க்காக்கள் இருவரும் குசு,குசுவென பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் போனதும் நிறுத்திவிடுவார்கள். சோமு மாமா வங்கித் தந்த மர்பி ரேடியோவில் இருந்து "கோயில் மணி ஓசை தன்னை செய்ததாரோ" பாட்டு வந்ததும் அடுப்படியில் இருந்து குடுகுடுவென ஓடி வருகிற அக்காக்களை பார்க்கையில் எரிச்சலாக வரும்.

க்காக்கள் செய்கிற எரிச்சல்களை எல்லாம் மட்டுப் படுத்தியது மீனாக்காதான். "மாப்ள" சீனிவாசனின் அக்காதான் மீனாக்கா. சீனு போலவே நானும் மீனாக்கா என்றாலும் எனக்கு தனி வெளிச்சமாக இருந்தார்கள். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் மீனாக்கா. அவ்வளவு பெரிய நெற்றியில் பொட்டு எங்கு வைத்தாலும் நேர்த்தியாகவே இருக்கும்.
புருவ மத்தி, மூக்கு தொடங்கும் இடம் என எப்படித்தான் அளக்கிறார்களோ என்று இருக்கும்.

காத்தோட்டமான வெளித் திண்ணையில் வந்தாலும் சரி, பெருமாள் உற்சவ கூட்டத்தில் அக்கா நெருங்கினாலும் சரி, சொல்லி வைத்தது போல் மருதாணி வாசனை வரும். இப்பவும் மருதாணி வாசனை எங்கிருந்து வந்தாலும், "மீனாக்கா" என்றழைக்க முடியும். சதா நேரமும் மீனாக்கா வீட்டிலேயே கிடப்பேன். ராம்நகர் தெருவிற்கும் ரெட்டை அக்ரஹாரத்திற்கும் தூரம்தான். ஆனாலும் எட்டி நடக்க மீனாக்காதான் காரணம்.சீனுவை விட.

சீனு இப்பவும் என் நண்பன். மாப்ள. போன பயணத்தில் இருவருமாக தண்ணி அடித்த போது சீனுவின் முகத்தில் மீனாக்காவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சரி. விலக வேண்டாம்..

மீனாக்காவும் சீனுவைவிட என் மேல் ப்ரியமாய் இருப்பார்கள். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம் இருக்கு...
என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து, முகவரி கொடுத்து சேர்க்க சொன்னார்கள். அப்போ செல் போன் இல்லாத காலங்கள். லெட்டரை கொடுத்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து போகும். ஆளை எங்கு சந்திப்பது, எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதெல்லாம் சொல்லி தந்திருந்தார்கள்.

முகவரி, நாட்டரசன்கோட்டை. சிவகங்கையில் இருந்து சற்றேறக்குறைய ஏழு கி.மீ. வாடகை சைக்கிள் எடுத்துப் போய் தனியாக அவரை பார்த்தேன். இதை அந்த வயதில் எழுதி இருந்தால் அவனை பார்த்தேன் என்று எழுதி இருக்கலாம் நான். அவ்வளவு பிடிக்காத கண் கொண்டுதான் பார்த்தேன் அவரை. நெடு,நெடுவென சிகரெட் போல இருந்தாலும் குழந்தை முகம். (அப்ப பிடிக்காமல் இருந்தது. யோசிக்கையில் இப்ப பிடிச்சிருக்கு).

டிதத்தை நேர்மையாக சேர்த்த பிறகு அக்கா மிக நெருங்கினார்கள். "உனக்கு பிடிசிருக்காடா?" என்று கேட்டபோது, "சூப்பரா இருக்கார்க்கா" என்று சொன்னது அப்ப பிடிக்காமல் இருந்தது. இப்ப பிடிச்சிருக்கு.

க்கா வீடு, தலை வாசல் ஒரு தெருவில் இருக்கும். பின் வாசல் மற்றொரு தெருவில் இருக்கும். கொல்லையில்,கிணறை ஒட்டிய துவைக்கிற கல்லில்அக்காஅமர்ந்த படி,"டேய்..குட்டை" (என்னை,நண்பர்கள் அழைக்கிற பெயர்) என்று தொடங்கி "சிகரெட்" பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். என்னவோ எரிச்சலாக இருக்கும். என்னவோ சந்தோசமாகவும் இருக்கும்.

குட்டையா, வரலையா? பெருமாள் கோயில் பொட்டலுக்கு கிரிக்கெட் விளையாட போறோம்"என்று வருகிற சீனுவைக் கூட. "போடா", அவன் வரமாட்டான், அவனாவது படிக்கட்டும்" என்று இறுத்தி கொள்வார்கள்.

கொல்லையில் ஒரு சிறிய அறை இருக்கும். கட்டை, கட்டையான பைண்ட் செய்யப்பட்ட கதை புத்தகங்களுடன் அக்கா அங்கு அமர்ந்திருப்பார்கள். அறை வாசலில் ஒரு உலக்கை குறுக்க கிடக்கும். கும்பிட தோன்றும் அழகுடன் இருப்பார்கள் அக்கா என்று முன்பே சொல்லி இருக்கேன் இல்லையா? அது இந்த அறையில் அக்காவை பார்க்கிற போதுதான் ரொம்ப தோன்றும். அந்த அறை கற்ப கிரகம் போலவும், அக்கா தெய்வம் போலவும் இருப்பார்கள். என்னை பார்த்ததும் அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.

பார்த்ததும் கேட்பார்கள்,"அம்மா எதுனா சொன்னாளா?"

சொன்னாங்கக்கா. போமான்னு வந்துட்டேன்" என்பேன். அறை எதிரே உள்ள கல் திறுக்கையில் அமர்வேன். காப்பி ஆத்திகொண்டே வருகிற அம்மா, "சொன்னா கேட்க்கிறானாடி.கடங்காரன்" என்பார்கள். எல்லாத்துக்கும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள் மீனாக்கா. அம்மாவிடமிருது காப்பி டவராவை வாங்கி, ரெண்டு ஆத்து ஆத்தி டம்ளரை அக்கா எடுத்துக் கொண்டு டவராவை எனெக்கென அறை வாசலில் வைப்பார்கள்.

சீனு சட்டை, சீனு மாமாவோட பேன்ட் எல்லாம் போட்டு, திருப்பி திருப்பி காட்டி, "நல்லாருக்காடா குட்டையா?" என்று மீனாக்கா என்னிடம் விசாரிக்கிற தருணம் பெரும்பாலும் அந்த அறையில் இருக்கும் போதாகத்தான் இருக்கும். சிகரெட் பற்றி அதிகம் பேசுவதும் அப்பவே. மீனாக்கா பற்றி பேசுவது என்றால் பேசிக் கொண்டே இருப்பேன்.

காலம் ஒரே மாதிரியாகவா போகிறது?

வேறொரு மனுஷனை திருமணம் செய்து கொண்டு மீனாக்கா சந்தோசமாகவே இருக்கிறாள். கடைசியாக மீனாக்காவை பார்த்தது போன வருடத்து தேர் திருவிழாவில்தான். அப்பா இறந்ததால் "வருடம் திரும்பாமல் வடம் பிடிக்க கூடாது" என்று சொல்லி அனுப்பிய மனுஷிக்காக நானும், சசியும் தெரு ஓரத்தில் ஒதுங்கி இருந்தோம்.

குட்டையா" என்கிற பழைய கூவலில் விழித்துக் கொண்டு, "அக்கா" என்றேன். வெகுவாக மாறி இருந்தார்கள். கையில் மகள் வயிற்றுப் பேரன். சந்தோஷ்டா, புவனா பையன்" என்றார்கள். சந்தோசின் கை பற்றினேன். சின்ன சின்னதாக, பிஞ்சு பிஞ்சாக இருந்தது.

ராகவன், இந்த தொடரை எழுத சொல்லி கூப்பிட்டப்போ, மீனாக்காதான் கதவு தட்டினார்கள். இப்ப திறந்திருக்கிற இந்த கதவை...

ன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. டைரியில் எல்லாம் எழுதலை. தொலைஞ்சும் போகலை. சிவப்பு டைரி தொலைஞ்சு போச்சு. ஆனா,தொலைஞ்சா போச்சு? அது போல.

த்தொடரை தொடர இவர்களை அழைக்க விரும்புகிறேன்.

1.வித்யா
2.விக்னேஸ்வரி
3.பத்மா
4.பாலா சார்
5.அ.மு.செய்யது
6.ப்ரியமுடன் வசந்த்

52 comments:

Radhakrishnan said...

பிரமாதமான நினைவலைகள். மனிதர்களே தொலைகிறபோது டைரி எம்மாத்திரம்? திகைத்துப் போகின்றேன்.

Anonymous said...

எல்லாருக்கும் பதின்ம வயதில் காதலனோ காதலியோ இல்லாவிட்டாலும், ஒரு அக்காவோ அண்ணாவோ நிச்சயம் இருக்கிறார்கள்.

ஹேமா said...

அண்ணா நினைவலைகள் நெகிழ வைக்கிறது.அதுவும் உறவுகளை விட்டுத் தூரமாய் இருக்கும்போது அதன் வலி அதிகம்.

vasu balaji said...

மனசு இருக்கவே இருக்கு. டைரி எதுக்கு:)

Chitra said...

மன ஏட்டில், எழுதப்பட்ட அழியாத நினைவுகள். அருமையான பகிர்வு, சார்.

சைவகொத்துப்பரோட்டா said...

சுகமான மலரும் நினைவுகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

RRSLM said...

முதலாளி,
டைரி மட்டுமல்லாமல் என்னோட நினைவலைகளும் தொலைந்து போயிருந்த தருணத்தில் தங்களுடைய பகிர்வு என்னை 20 வருடம் பின்னால் இட்டு சென்றுவிட்டது.........

இன்றைய கவிதை said...

மனதை தொட்டது , பழைய நினைவுகள் எல்லோர் மன டைரியிலும் குறித்திருக்கும் அதை அழகாய் வடிவமைப்பது கடினம்,

நன்றாக இருந்தது,
என் மன டைரியை தேட வைத்து விட்டீர்கள்

நன்றி
ஜேகே

பத்மா said...

நல்ல ஒரு பகிர்வு பா ரா சார் .என்னை கூப்பிட்டு இருக்கிறீர்கள்,என்னால் எழுத இயலுமா தெரியவில்லை இருந்தாலும் என் முதல் முயற்சி உங்கள் அழைப்பால் ..ஞாயிறு வீட்டு வேலை எல்லாம் ஓரம் கட்ட வேண்டியது தான் ,அன்பிற்கு நன்றி

புலவன் புலிகேசி said...

நினைவுத்திரும்பலின் அசிபோடல் நல்லா இருக்கு

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அட!இப்படியும் பதிவு பண்ணலாமோ?

அகநாழிகை said...

வழக்கம்போலத்தான். ராஜாராம் எதையெழுதினாலும் ஒரு சுவாரசியம் கூடிப்போகிறது. பகிர்தல் அருமை.

Unknown said...

அருமையான பகிர்வு..

சந்தனமுல்லை said...

அப்பா..

என்னப்பா...

உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?...

:-)))) சீக்கிரம், அவங்கவங்க காதல் கதையை எழுத ஒரு தொடர்இடுகை ஆரம்பிங்கப்பா!


பைதிவே, வந்தனத்திற்கு பதில் வந்தனம்! இடுகை வெகு சுவாரசியம். /சீனு மாமாவோட பேன்ட் எல்லாம் போட்டு, திருப்பி திருப்பி காட்டி, "நல்லாருக்காடா குட்டையா?/ சோ ஸ்வீட்! :-)

நட்புடன் ஜமால் said...

என்னமோ மக்கா

இந்த நொடியில் இருக்கும் என் மனநிலையில் இதை படிக்கையில் ஏனோ அழத்தோனுது

எதுனா செய்துடுறீங்க மக்கா ...

ஈரோடு கதிர் said...

கண்முன்னே அசைகிறது உங்கள் பதின்ம வயது

மணிஜி said...

/ வானம்பாடிகள் said...
மனசு இருக்கவே இருக்கு. டைரி எதுக்கு:)//

என்னோட ஆல்டர் ஈகோ!

ஸ்ரீராம். said...

மனசுதான் பெரிய மாஸ்டர் டைரி. அதை விடவா? தோற்றுப் போன காதல்கள்தான் நினைவில் நிற்கின்றன..நினைவிலேயே நின்றால் தோற்றுப் போய் விட்டது என்றா அர்த்தம்? நெகிழ்ச்சியான நினைவுகள்.

ஜெய்லானி said...

///அப்ப பிடிக்காமல் இருந்தது. யோசிக்கையில் இப்ப பிடிச்சிருக்கு///

உண்மையான வார்தைகள்.

Vidhoosh said...

ரொம்ப பொத்தி வச்ச ரஹசியங்கள் எல்லாம் கிண்டி விட்டீங்க. என்ன ஆகப் போகுதோ.
:))

---வித்யா

Vidhoosh said...

உங்கள் பதின்மம் கடிதம் கொண்டு போய் சேர்த்ததோடு முடிந்தது என்பதையும் தாண்டியும் சில இருக்கும். அதை லாவகமாக மறைத்து கொண்டீர்களே அண்ணா. எனக்கு அது வருமான்னு தெரியலையே!

Jawahar said...

பதின்ம வயது என்பது நான் புதிதாகத் தெரிந்து கொண்ட பிரயோகம். சுவாரஸ்யமான ஆர்ட்டிக்கிள்.

http://kgjawarlal.wordpress.com

Rajan said...

//இன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. டைரியில் எல்லாம் எழுதலை. தொலைஞ்சும் போகலை. சிவப்பு டைரி தொலைஞ்சு போச்சு. ஆனா,தொலைஞ்சா போச்சு? அது போல.//

ம்ம்ம்ம் .... அற்புதம்

செ.சரவணக்குமார் said...

நேற்று இரவில் தூங்கப்போவதற்கு முன்பாக வாசித்தேன் அண்ணா. தூங்கியிருப்பேன் என நினைக்கிறீர்களா? உங்கள் பதின்மத்தின் மீனாக்கா மனம் முழுதும் நிறைந்திருக்கிறார். நன்றி மக்கா பகிர்வுக்கு.

Ashok D said...

ஓ.எஸ் அருனின் ‘யாதவா மாதவா’ பாடல்கள் ஓடிகொண்டிருக்கிறது இப்பதிவை படிக்கும்போது. மனசு, கன்னம், கைகள், உடம்பு எல்லாம் குறு குறுன்னு ஆகிடுச்சு. உங்கள் அன்பு என்னை நிலைகுலையவைக்கிறது. என்னஒரு ஆற்றொழுக்கான நடை. நீங்க இருக்கற திசைய பார்த்து கும்புடனும் சித்தப்ஸ். அன்பினால் ஹிருதயத்தை கிழித்துபோட உம்மால் முடிகிறது.

மீனாக்கா மனதில் ஒட்டிக்கொண்டார். போதும் முடித்துக்கொள்கிறேன்.

MJV said...

பதின்ம வயதும் டைரி பகிர்தலும் மிகவும் அருமை தலைவரே. என்னதான் இருந்தாலும் டைரிகள் ஒரு இடைப்பட்ட சேமிப்புதான். மொத்தமாக எடுத்து பார்க்க தான் நம் மனதும் அதன் நினைவலைகளும் இருக்கிறதே!!!!

Thenammai Lakshmanan said...

ஒரு அறையைத்தானே திறந்து இருக்கீங்க மக்கா மிச்சமின்னும் எவ்வளவு இருக்கு ... அதையெல்லாம் எப்ப சொல்வீங்க

iniyavan said...

பிரமாதமான நினைவலைகள்.

என்னையும் எங்கேயோ கூட்டிட்டு போயிட்டீங்க பா ரா.

Unknown said...

பதின்ம வயது நினைவுகள் - அழகு சார்.

SUFFIX said...

உணர்வுப்பூர்வமா, நல்லா எழுதியிருக்கீங்க பா.ரா.

சத்ரியன் said...

மாம்ஸ்,

இன்னும் நிறைய கதை வெச்சிருக்கீங்க போலிருக்கே.

இதுமாதிரி கதைகள் பெரும்பாலானோர்க்கு அனுபவமாக இருக்கிறது.

ம்ம்ம்ம்ம்.... எனக்கும் தபால்காரன் நெனப்பு வந்துருச்சி மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

ராகவன் said...

அன்பு ராஜாப்பா,

அழகாய் இருந்தது. இது இப்பொது முழுமை அடைந்து விட்டது. என் தேர்வுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்...காமராஜ், மாதவராஜ் மற்றும் உங்களின் இந்த பதிவு...

மீனாக்கா... என்ன சொல்றது பாரா!!!

அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி, வேதனையின்றி இருந்தேன்... நீங்க இந்த மாதிரி ஒரு பதிவை போட்டு... சன்னசன்னமா செதுக்குறீங்க...

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//அப்ப பிடிக்காமல் இருந்தது. யோசிக்கையில் இப்ப பிடிச்சிருக்கு).//

பல விசயங்கள் இப்படித்தாங்க... முன்னாடி பிடிக்காததெல்லாம் இப்ப அசைபோடும்போது பிடிச்சிப்போகும்... நினைவுகள் என்றுமே இனிமைதான்... நல்ல இடுகை...

அம்பிகா said...

நினைவலைகள் நெகிழ்ச்சி.
//இன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. டைரியில் எல்லாம் எழுதலை. தொலைஞ்சும் போகலை. சிவப்பு டைரி தொலைஞ்சு போச்சு. ஆனா,தொலைஞ்சா போச்சு? அது போல.//

அவ்வப் போது வெளிப்படும்.
அப்படித்தானே பா.ரா.

உயிரோடை said...

உங்க பதின்ம வயசு கதை நல்லா இருக்குங்க அண்ணா. என்னை பதிவுக்கு அழைத்தவர் பெண்பதிவர்களை மட்டும் தான் அழைக்கனும் என்று சொல்லி இருந்தாங்க. இல்லாட்டி உங்களை நான் அல்லவா அழைத்திருப்பேன். இன்னும் சிலரையும்..

HariV is not a aruvujeevi said...

type writing institute-il partha akka nenaivu vanthargal. Nadigai Revathi-yaiyei pontru srikum akka ennum kankalai(kannerai)vittum azhika mudiyavillai. kamalahasan-nin interview onru neinavu vanthathu. matravar purinthu koollum padi ennum eazhutha theriyathathal pinunntathil idavillai.

சிநேகிதன் அக்பர் said...

செல்லாது செல்லாது.

உங்களைப்பற்றி எழுத சொன்னா மீனாக்கா பற்றி சிறுகதை எழுதி மூடை மாற்றி விட்டீர்கள் அண்ணா.

உங்களைப்பற்றி கண்டிப்பாக ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்.

மதுரை சரவணன் said...

ayyaa maruthaani vasanai varuthu . nalla suvaiyana ninaivu.

rajasundararajan said...

நல்லாத்தேன் இருக்கு, ஆனா நம்ம சனங்களுக்கு இன்னும் பெரிய மனசு வரலைங்க. 'தமிழினி'யில 21 அத்தியாமா நான் எழுதுன 'நாடோடித் தடம்' எதிர்ப்புகளையும் வருத்தங்களையுந்தான் கொண்டு வந்திச்சு. ஒரு மாசத்துக்கு முந்தி ஒரு பழைய தோழி என் போன் நம்பரெக் கண்டு பிடிச்சுக் கூப்பிட்டு, "'ஒரு ராத்திரி முழுக்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தோம், அதுக்கு மேல ஒன்னும் இல்ல'ன்னு எழுதியிருக்கீங்க. அது உண்மைங்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும்; ஏதாவது நடந்திருக்கும்னுதான் படிக்கிறவங்க நினைப்பாங்க," என்றாள். சரிதானுங்களே? அந்த ராத்திரியெ நீக்கியாச்சு. புத்தகமா வர்றப்போ எல்லா சம்பவங்களும் பாத்திரங்களும் பெயர்களும் மாறி அது கற்பனைக் கதையாகித் தீரும்னுதான் தோணுது.

பெண் எழுத்தாளர்களை வேற களத்துல எறக்குறீங்க. பட்டதை வச்சுச் சொல்றேன், நாட்ல சுதந்திரம் இன்னும் வரலைங்க.

பா.ராஜாராம் said...

@ராஜசுந்தர்ராஜன்

அண்ணா,வணக்கம்.

மீண்டும் புண்ணியபூமி,கருவேலநிழல்!

// பட்டதை வச்சுச் சொல்றேன், நாட்ல சுதந்திரம் இன்னும் வரலைங்க.//

நாமளே மனசு விட்டால் எப்படி அண்ணா?

கொடைய வேணாமே அண்ணே,நம் சுயம் கொண்டே நம் சுதந்திரத்தை.

சுதந்திரம் பெரிசில்லையா?நம்மை விட.

தாராபுரத்தான் said...

மிகவும் அருமையான பதிவு.ஓரு எழுத்துக்கூட பிசிரவில்லை.கயிற்றின் மேல் நடந்ததைப்போல் பதிந்துள்ளீர்கள்.

rajasundararajan said...

தம்பி,

உண்மையில் சுதந்திரம் என்றால் என்னது என்றே எனக்குத் தெரியாது. தன் நிழலில் தானே இளைப்பாறுதல் ஆகலாம் அது. ஆனால் அது கூடுமோ?

'ஸ்வ-தந்த்ர' என்பதற்கு தன் பிழைப்புக்கான உபாயங்களுக்கு உரிமை தன்னிடமே இருத்தல் என்று பொருள் காண்கிறார் பாணினி.

விடுதல் என்பதிலிருந்து வந்த தமிழ் கூறும் விடுதலை துறவிகளுக்கு மட்டுமே கூடுவதாகலாம்.

"முத்தமிட்டீர், ஆனால் உம் வாய் நாறுகிறது," என்கிற காதலியின் முன் என் சுயம் என்ன? சுதந்திரம்தான் என்ன?

இன்றைய எழுத்தாளர்களில் the finest என்று என்னால் மதிக்கப் படுபவர் 'கூந்தப்பனை', 'வெண்ணிலை' எழுதிய சு.வேணுகோபால். அவரால் உணர்ந்து பாராட்டப் பெற்றதொரு situation-ஐ வெட்ட வேண்டி வந்த கட்டாயம் எனக்கு.

தம்பி, உங்கள் எழுத்தில் ஒரு குறையும் இல்லை. உங்கள் கூட்டுக் காரர்களும் என் எச்சரிக்கையால் discourage ஆக வேண்டிய வேலிவிளிம்பிலும் இல்லை என்றே வச்சித்த அளவில் நம்புகிறேன். என்றாலும் முள் தைத்தவன் நொண்டுகிறான் என்று புரிந்து, பிறகும் என்னை விஞ்ச உங்களுக்கு ஏலுமேல் என்னிலும் மகிழ்பவர் யார் இருக்கக் கூடும்?

நன்றி.

அ.மு.செய்யது said...

இதை ஒரு அனுவபமாக எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் என்னைப் பொறுத்தமட்டில்,ஒரு நல்ல சிறுகதையை படித்த திருப்தி ஏற்பட்டது.இதை படித்த மட்டில்,மதினிமார்கள் கதை நினைவுக்கு வந்தது.

திரும்ப திரும்ப அதையே தான் சொல்கிறேன்.நீங்கள் நிறைய சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம்.

( என்னையும் அழைத்தமைக்கு நன்றி !!! கால தாமதமானாலும் எழுத விருப்பமிருக்கிறது )

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜாராம்.

பா.ராஜாராம் said...

@ராஜசுந்தரராஜன்

மிகுந்த சோர்வாயிருச்சு அண்ணே.

என் இலக்கு வேறுவாக இருந்தது.தைத்த இடம் எதிர்பாராத இலக்கு.உடைத்து பேசுவது எனில்,
நர்சிம் தளத்தில் "நானெல்லாம் மறக்க வேண்டிய ஆள் இல்லையோ"என்பது மாதிரியான உங்கள் பின்னூட்டம் பார்த்து கண் கலங்கி இருக்கிறேன்.அங்கையோ,அதற்கு அப்புறமோ உங்களை தேற்றும் பொருட்டு "அப்படியெல்லாம் உங்களை விட்டுருவோமா?"என்பது மாதிரியான பின்னூட்டமிட்ட நினைவும் இருக்கு.(நர்சிம் தளத்திலேயே)

கிட்டத்தட்ட அதே மாதிரியான தேறுதல் வார்த்தை தாண்ணே இங்கயும் உபயோகப் படுத்தினேன். ."சும்மா கெடக்க மாட்டியளா?.பொண்டு பொருசுகளை பயமுறுத்திக்கிட்டு?"என்பது மாதிரி.

உங்களை கொஞ்சூண்டு வாசித்தால் கூட போதும் அண்ணே.உங்களை அதட்ட,உரிமை கொண்டாட.

கடந்த பதினைந்து வருடங்களாக வாசிப்பு குறைஞ்சு போச்சுண்ணே.ஆ.வி,குமுதம் தவிர மேற்கொண்டு போக முடியாத சூழ்நிலை.குண்டுச்சட்டி குதிரை ஓட்டம் என ஓடிக் கொண்டிருக்கு.இங்கு நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் குறித்துக் கொண்டு வாசிக்கலாம் நான்.இல்லாமலும் போகலாம்.

மற்றதை விடுங்கள்.எனக்கு இன்னொரு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.

//உண்மையில் சுதந்திரம் என்றால் என்னது என்றே எனக்குத் தெரியாது. தன் நிழலில் தானே இளைப்பாறுதல் ஆகலாம் அது. ஆனால் அது கூடுமோ?//

// தன் நிழலில் தானே இளைப்பாறுதல் ஆகலாம் அது. ஆனால் அது கூடுமோ?//

கூடாதா அண்ணே?

**

அண்ணே,
உங்கள் மின் முகவரியோ,அழை எண்ணோ கிடைக்கும்தான் எனக்கு.அதில் பேசுவதை விட,இந்த பின்னூட்டங்களில் பேசுவது நம் மக்களுக்கும் உதவியாக இருக்கும்.எல்லோரும் கேட்டு பெறட்டும்.

பேசுங்கண்ணே..

(என் உபயோகத்திற்கு அழை எண்ணும்,மின் முகவரியும் தெரியப் படுத்துங்கள்ண்ணே.)

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,
ராதா,
C,A,
ஹேமா,
பாலா சார்,
சித்ரா,
எஸ்.கே.பி,
டி.வி.ஆர்,
RR,
ஜேகே,
பத்மா,
புலவர்,
சாந்தி,
வாசு,
முகிலன்,
முல்லை,
ஜமால்,
கதிர்,
மணிஜி,
ஸ்ரீராம்,
ஜெய்லானி,
வித்யா,
ஜவஹர்,
ராஜன்,
சரவணா,
மகன்ஸ்,
காவிரி,
தேனு,
உலக்ஸ்,
ராஜா,
சபிக்ஸ்,
மாப்ஸ்,
ராகவன்,
பாலாஜி,
அம்பிகா,
லாவண்யா,
ஹரி.வி.
அக்பர்,
எம்.எஸ்,
தாராபுரத்தான்,(நல் வரவு ஐயா.)
செய்யது,
சுந்தரா,

'பரிவை' சே.குமார் said...

//மனிதர்களே தொலைகிறபோது டைரி எம்மாத்திரம்?//. உண்மைதான் உங்கள் டைரிக்குறிப்பு அருமை.

Thamira said...

கையில் மகள் வயிற்றுப் பேரன். // இதுவரை ஒழுங்காகத்தான் படித்துக்கொண்டு வந்தேன்.

ஹிஹி..

சுவாரசியமான பகிர்வு தாத்தா.!

சுந்தரா said...

என்னுடைய பதின்மத்தையும் திரும்பிப்பார்க்கவைத்த நினைவலைகள்.

அக்காக்கள் அநேகம்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்...பெயர்மட்டுமே மாறிப்போகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்னும் நிறைய பதின்ம வயது நினைவு இருக்கு. //

அதானே பார்த்தேன், நீங்க ஒரு அனுபவ சுரஙகமாச்சே :))))))

அனுபவிச்சு படிச்சேன். அந்த மருதாணி வாசம் ரொம்ப பிடித்திருந்தது. மருதாணின்னு சொன்னாலே ஒரு பச்சை வாசனை வருது இல்லையா பா.ரா.

இரசிகை said...

swaarasyam.........:)