Thursday, April 8, 2010

பிராப்தம்


(Picture by cc license Thanks William)

போதும் என்பதை
சொல்லத் தெரிவதில்லை.
வேணும் என்பதும்
அது போலவே.

ரு மூக்கு துவாரத்தில் நுழைந்து
மறு மூக்கு துவாரத்தில்
வருகிறதெப்போதும்
கயிறுகள்.

லையாட்டல்களில்
ப்ரியங்களை விட
பயிற்சி உதவுகிறது.

ப்புறம் பழகிப் போகிறது.

டிங் டிங் ஓசையும்
தட்டில் விழும் அரிசி மணிகளும்.

49 comments:

rvelkannan said...

நிசமாகவே மாற்றுக்கவிதை தான் பா.ரா
//அப்புறம் பழகிப் போகிறது.//

என்ன செய்ய வழக்கமாகி போகிறது
தலையாட்டும் அந்த பிராணியும்
அதனை ஓட்டி வந்த (அப்)பிராணியும் சில வேளைகளில்
கூடவே சிறு குழந்தையும் வரும் அதனை பார்ப்பதற்கு தான் மனம் பொறுக்காது
இறுதி வரி தாண்டிய பிறகும் டிங் டாங் கேட்கிறது பா.ரா

vasu balaji said...

பழகினாலும்...:(

Chitra said...

அருமையான கவிதை. கருத்தும் அருமை.

செல்வநாயகி said...

///அப்புறம் பழகிப் போகிறது///

நல்ல வரி. பல விடயங்கள் இப்படித்தான்.

காமராஜ் said...

காலையில் பாரா கவிதையில் முழிக்ககிடைத்தது இன்றைய
நாள்.ஒரு மனதுகிசைந்த பாடல்போல,ஒரு கள்ளப்பார்வை போல,கொமட்டில் லேசா வாங்கிய இடி போல.குதூகலமாய் கூட்டிச்செல்லும் கைபிடித்து.

இன்றைய கவிதை said...

பா ரா

அருமை இது எனக்கு வாய்த்த பிராப்தம்

நன்றி ஜேகே

க ரா said...

பா.ரா. சார் எனக்கு கிடைத்த பிராப்தம் இந்த கவிதை படிக்க கிடைத்தது. நன்றி.

தமிழ் said...

அருமை

DREAMER said...

ரசித்தேன்..! அருமை..!

-
DREAMER

இரசிகை said...

//அப்புறம் பழகிப் போகிறது.//


:(

சைவகொத்துப்பரோட்டா said...

புரிஞ்சா மாதிரியும் இருக்கு,
லைட்டா (எனக்கு) புரியவும் இல்லை :))

Unknown said...

நல்ல கவிதை..

:((

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். விருப்பமிருந்தால் தொடருங்கள், கவிதையாக இருப்பினும்.

http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_09.html

சந்தனமுல்லை said...

செம செம செம!

மணிஜி said...

பழக்க தோஷமா தெரியவில்லை.. தலையை ஆட்டிக்கொள்கிறேன்..

சத்ரியன் said...

//டிங் டிங் ஓசையும்
தட்டில் விழும் அரிசி மணிகளும்.//

மாமா,

இது ‘டிங் டிங்’-கா?
’ஞ்ஜைஞ் சக்’-க்கா?

சாந்தி மாரியப்பன் said...

//தலையாட்டல்களில்
ப்ரியங்களை விட
practice உதவுகிறது.//

என்ன செய்ய.. இப்படித்தான் போகிறது வாழ்க்கை.

na.jothi said...

டிங் டிங் மணிகளும்
தட்டில் விழும் அரிசிமணிகளின் ஓசைகள்
பழக்க தோசத்தில்
தலையாட்டி வைத்ததால் என்னவோ
வேணும் என்ற சுவாசத்தில்
கரைந்து போகின்றன

Vidhoosh said...

நல்ல காலம் பொறக்குது

ராகவன் said...

அன்பு பாரா,

அருமையான கவிதை தளம்... பெரிதாய் பொருந்தி போகிறது அது பூம் பூம் மாடாய் இருந்தாலும் சரி நான், நீங்களாய் இருந்தாலும் சரி. பிரியங்களே ஒரு பழக்கம் தானே பாரா. தெருவில் அசைந்து வரும் அந்த அலங்கார மாட்டுக்கும் கொட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் பொலி காளைக்கும், வண்டி இழுக்கும் காளைக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது பாரா. முன்னங்கால்களை தூக்கும் சிறு நாய்க்குட்டிஎன பழக்கிய காளை, தலையாட்ட பழகிவிடுகிறது... இந்த வீட்டில் சுப காரியங்கள் நடக்கபோகுது, அய்யாவுக்கு யோகம் வருது, படிக்கிற புள்ளைங்க எல்லாம் பாசாக போகுது என்று விடுமுறை காலங்களில் வரும் இந்த மாட்டுக்காரனும், மாடும் தலையாட்டி கொண்டு நல்வாக்கு சொல்லி பசியாறுவார்கள். காலில் சலங்கையுடன், தன் மூதாதையரின் தோலில் இழுத்து கட்டிய உருமியில் உராயும் வளைந்த குச்சி எழுப்பும் நரம்புகள் முறுக்கும் இசைக்கு, ஜதி தப்பி ஆடும் இந்த மாடு (தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதால் இருக்கலாம்). எங்கள் தெருவை கடந்து எல்லார் வீட்டுக்கும் சுபசெய்தி சொல்லிப்போகும். இரண்டு இடத்தில் practice என்றும் அப்புறம் பழகி விடுகிறது என்பதும் கொஞ்சம் மாற்ற முடியுமா என்று பாருங்களேன் பாரா... இன்னொரு இடத்தில் எதிர்ப்பார்ப்பு கயிறுகள் என்று இல்லாமல் வெறும் கயிறுகள் என்று மட்டும் இருந்தாலே போதுமானது என்று தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் இந்த உவமானம், உவமஆருபு, உவமேயம் ஏதும் இல்லாமலே எல்லா விஷயங்களையும் சொல்லிவிடும் என்பதால் இது தேவையில்லை என்று எனக்கு படுகிறது.
ரொம்ப பிடித்திருந்தது பாரா...

அன்புடன்
ராகவன்

rajasundararajan said...

ராகவன் அருமை! நான் சுட்டிச்சொல்ல நினைத்த இரண்டு புள்ளிகளையும் தொட்டுவிட்டார்.

practice என்று மனசில் வந்ததை அப்படியே போட்டுவிட்டீர்களா, அல்லது பயிற்சி பழக்கம் இரண்டுக்கு சேர்த்து அந்த ஆங்கிலச்சொல் என்று இட்டீர்களா? skill என்பதையும் உள்ளடக்கிய ஒரு சொல்லைத் தேடியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

'எதிர்பார்ப்பு' என்பது abstract. 'கயிறு' என்பது concrete. இரண்டும் அவ்வளவு இணக்கமாக ஒட்டாது. நம்மவர்கள் ஒட்டுகிறார்கள் என்பதும் உண்மை. இந்த அருவ x உருவ வில்லங்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்; அனுப்பி வைக்கிறேன். rajaram b.krishnan@gmail என்று போட்டால் வந்து சேரும்தானே?

செ.சரவணக்குமார் said...

பா.ரா அண்ணா எப்படியிருக்கீங்க. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன். கவிதை அசத்தலா இருக்கு. உங்க பதிவுகள்ல இடம்பெறும் ராகவன் சாரோட பின்னூட்டத்தப் பத்தி ஏற்கனவே உங்ககிட்ட விரிவா பேசியிருக்கேன். இதிலும் அசத்தல். அடுத்த வாரம் அங்க வர்றேன் கருவேல‌ நிழல் புத்தகத்தோட.

க.பாலாசி said...

//டிங் டிங் ஓசையும்
தட்டில் விழும் அரிசி மணிகளும்.//

பிராப்தம்.........

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை அருமை

Vidhoosh said...

ராகவன் ரசிகர் மன்றத்தின் தலைவி என்கிற முறையில், ஏகபோகமாக ராகவனுக்கு நன்றீஸ் :))

விக்னேஷ்வரி said...

:)

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு பா.ரா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்.

அப்படியே ராஜசுந்தர்ராஜன் அனுப்பற கட்டுரையை எனக்கும் ஃபார்வர்ட் செய்யவும்.

Unknown said...

நல்லாயிருக்கு பா.ரா.

ராஜசுந்தர்ராஜன் அனுப்பற கட்டுரையை எனக்கும் ஃபார்வர்ட் செய்யவும்.
(sjegadhe@tebodinme.ae)

அம்பிகா said...

நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு. நானும் தலையாட்டுகிறேன்;
practice ல் இல்லை,
பிரியத்தில்.

Ashok D said...

புரியும் பொழுது சடாரென திறந்தது கதவு :)

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு ஜி

Radhakrishnan said...

சின்ன சின்ன வரிகளில் ஆயிரம் காவியங்கள் படைக்கும் திறன் உங்களுக்கு உண்டு. ராகவன் அவர்களின் பின்னூட்டமும் மிகவும் ரசித்தேன்.

கவிதன் said...

பழகிப்போகிறது ஒரு விதமான வலியும்....... அருமை பா.ரா அண்ணா!

Shangaran said...

nice lines...

~shangaran~
http://shangaran.wordpress.com

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்குங்க அண்ணா

பத்மா said...

இந்த மூக்கணாங்கயிறு மட்டும் இல்லாவிட்டால் எத்தனை விடுதலை ?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

மாதவராஜ் said...

ரசித்தேன்.
practice மட்டும் இடறுகிறது.
கவிதையை உறிஞ்சியபடி, ராகவனின் பின்னூட்டம்.

rajasundararajan said...

அன்பின் ஜ்யோவ்ராம் சுந்தர், செல்வராஜ் ஜெகதீசன், எனது இக் கட்டுரை கட்டுரைபோலவே இருக்காது, எதையும் விவாதிக்கவும் செய்யாது. வருகிற கேரக்டர்களைப் பிரித்துச் சேர்த்துப் புரிந்துகொள்ளப்படக் கோரும். 'தமிழினி' 17-ஆவது இதழ் வாசித்தவர்கள் இதை வாசித்திருக்கக் கூடும்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மேலான அன்பிற்கும்,பின்னூட்டங்களுக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்.

@ராகவன்,ராஜசுந்தரராஜன் அண்ணன்

அண்ணன் சொல்வது போல் நுண்ணிய பார்வை ராகவன்.

.இலக்கணம் தெரிந்து கொள்ளாமல்,வாசிப்பனுபவம் கொண்டு நேரிடையாக கவிதை எழுத வந்த குறையாக இருக்கலாம்.என்றாலும் அறிந்து கொள்ளும் பொருட்டு அல்லது இந்த கவிதையை நான் அணுகிய விதத்தை பகிர்ந்தால் விளக்கம் தர உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தோனுகிறது...

எதிர்பார்ப்பு கயிறுகள் என்பதற்கு பதிலாக வெறும் கயிறு என்பதில் கவிதை இரண்டு தளத்தில் இயங்க மறுக்கிறதோ என்று தோணியது/தோனுகிறது.பிரதானமாய்,இங்கு மாடு,என்பது மாடும்தான்,குறியீடு/படிமமும்-தான்.இல்லையா?வெறும் கயிறு என்பதில் இரண்டாவது தளத்தை பலஹீனமாக அணுகுவது போல் உள்ளதே அண்ணே,ராகவன்.அல்லது இப்படியெல்லாம் நினைத்து கொள்கிறேன். :-)

இரண்டாவது,இந்த practice.

practice இடத்தில் பயிற்சி(பழக்கம் என்பதைவிட)பொருந்துகிறதுதான்.ஆனால் அந்த பயிற்சியைக் கூட உபயோகம் செய்ய தோணலை.பயிற்சியைவிட practice வசதியாக இருந்தது/இருக்கிறது.ஆங்கில பிரயோகத்தை உபயோகம் செய்தது கூட வசதி கருதியே.பிராக்டிஸ் என்று கூட பொருத்திப் பார்த்தேன்.பிராக்டிசை விட practice, creats actual pitty என்று தோணியது/தோனுகிறது.மொழியை handicap பண்ணியாவது எனக்கு தேவையான pitty-யை எடுப்பது ஒரு cruelity-யே.என்றாலும் இப்படி நிகழ்ந்தது.

any how,

இது நல்ல தொடக்கம்,அண்ணன்,ராகவன்.

கவிதை எழுதும் பயிற்சிக் களத்தில்தான் இருக்கிறேன்.(வசதி கருதி,இப்படியே இருந்தாலும் இருப்பேனும் கூட. :-))

இந்த மாதிரியான நுணுக்கங்கள் மிகுந்த உதவி அண்ணே,ராகவன்..எனக்கு மட்டுமன்றி கவிதை எழுத விரும்புகிற எல்லோருக்கும்.

அவசியம் கட்டுரை அனுப்பி வையுங்கள் அண்ணே.அனுமதிப்பீர்கள் எனில் நானோ,சுந்தரோ தளத்தில் பதிகிறோம்.எல்லோருக்கும் பார்க்க கிடைக்கட்டும்.

@சுந்தரா & செ.ஜெ,
அவசியம் அனுப்பி வைக்கிறேன் மக்கா.

கே. பி. ஜனா... said...

கவிதைக்கு என்னுடைய தலையாட்டலைக் கவனியுங்கள். அது practice உதவியால் வருகிறதல்ல.

rajasundararajan said...

யாருக்கு இலக்கணம் தெரியும்? சும்மா பாவ்லாதான். அப்புறம் எப்படி எழுதினாலும் தமிழ்க்கவிதை இலக்கணம் தப்பாது (என்று சற்றண்மையில் நர்சிம் தளத்தில் ஒரு பின்னூட்டம் இட்டேன்). நான் சொல்ல வந்த 'அருவம் x உருவம்' ஒரு மேலை இலக்கிய விமர்சனக் கோட்பாடு. (கட்டுரையை நேற்றே அனுப்பிவிட்டேன்)

இங்லீஷ் வார்த்தையெல்லாம் போடக்கூடாது என்பதும் இல்லை. எண்ணிய பொருள் மெய்ப்படுமேல் எல்லாமே சரிதான். சில வார்த்தைகள் நாம் நினைத்தது போலல்லாமல் வாசகன் அறிவையொட்டி வேறுபொருள் கூட்டிவிடக் கூடும். நல்லவேளை இந்த வார்த்தை அப்படி இல்லை. ஆனால் //தலையாட்டல்களில் ப்ரியங்களை விட practice உதவுகிறது// இது இங்லீஷ் அறிந்த ஒருவருடைய நோட்டமா அல்லது மாட்டினுடைய (குறியீட்டு மாட்டினுடையதும்) நோட்டமா என்பதைப் பொறுத்தே பொருத்தம்.

'மாடு' என்றொரு சொல் வரவே இல்லை. மூக்கணாங் கயிறுதான் மாடாகிறது. That's the beauty! ஆனால், 'எதிர்பார்ப்பு' எதையோ explain பண்ணுகிறது. என்றால் அந்த இடத்தில் அது கவிதை இல்லை; உரை. 'சுண்டு கயிறு', 'கொளுவு கயிறு', 'கோழைவழி கயிறு' என்று இப்படி ஏதோ ஒன்று, அது இதனைப் படைத்த கவிஞருக்குத்தான் தெரியும்.

வாசித்து வளர்பவர்களுக்காகவே இந்த வழக்கு. மற்றபடி, ஒரு பறவையின் சிறகுக்கு அடைகாக்க மடங்குவது இழுக்கு ஆகாது.

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே அப்படித்தானே பா.ரா.
ஆரம்பத்தில் யோசிக்க வைத்தாலும் பின்னர் பழகிவிடுகிறது.

நல்ல கவிதை.

பா.ராஜாராம் said...

// இது இங்லீஷ் அறிந்த ஒருவருடைய நோட்டமா அல்லது மாட்டினுடைய (குறியீட்டு மாட்டினுடையதும்) நோட்டமா என்பதைப் பொறுத்தே பொருத்தம்.//

கொட்டு அண்ணே.. :-)))

// மற்றபடி, ஒரு பறவையின் சிறகுக்கு அடைகாக்க மடங்குவது இழுக்கு ஆகாது.//

எப்பேர்பட்ட சிறகு அண்ணே!மடங்குதல் பாக்கியமல்லோ...

மற்றொரு தெளிவு விரும்பி..

//'எதிர்பார்ப்பு' எதையோ explain பண்ணுகிறது//

yes!

இங்கு இந்த explain முக்கியம் இல்லையா அண்ணே?கவிதை உரையாய் இருக்கலாகாதா?ஆகாது எனில் எப்படி?

பா.ராஜாராம் said...

@ராஜசுந்தரராஜன்

நேற்றிரவே கட்டுரை கிடைத்தது அண்ணே..சுந்தர்,செ.ஜெ.வுக்கு அனுப்பிட்டேன்.(கூடுதலாக,என் விருப்பத்தின்பாற் நேசமித்ரனுக்கும்)

கட்டுரை குறித்தான என் பகிரலையும் மின் மடல் செய்திருக்கிறேன்.

பிறகு,பதிலுக்கு.

*இயற்கை ராஜி* said...

அருமை

rajasundararajan said...

//இங்கு இந்த explain முக்கியம் இல்லையா அண்ணே? கவிதை உரையாய் இருக்கலாகாதா? ஆகாது எனில் எப்படி?//

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதிறுவேன், ஆமா. கேள்வி கேட்கிறது ஈஸி தெரியும்ல? என்னோட பின்னூட்டங்கள்ல நான் உங்களெக் கேள்வி கேட்டிருக்கேனா? ஏன் என்னெத் தெருவுல இழுத்து விடுறீங்க?

சரி, demand வைத்தால் supply செய்தாக வேண்டும். பிறகும் நீங்கள் எல்லாம் என்னிலும் இளையர்கள். செய்துதான் ஆக வேண்டும். முயல்கிறேன்:

//கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

(பரிமேலழகரும் 'வளைந்த மாலை' என்று உரைஎழுதி இருப்பது கண்டு நொந்தேன்). ஆண்மகன் ஒரு கண்ணி சூடுதல் அந்தக் காலத்து வழக்கம். அது இந்தக் காலத்து id card போல. அந்தக் கண்ணிதான் கோட்டுப்பூ. முக்கியமாக, போருக்குப் போவதற்காகச் சூடுவது அது. இப்போது பாருங்கள், அர்த்தம் என்னவாய் எகிறுகிறது என்று.//

இது நர்சிம் பதிவு ஒன்றுக்காக நான் இட்ட பின்னூட்டம்.

நான் எழுதி இருப்பது உரை. வள்ளுவர் சொன்னது கவிதை. அதில் வரும் 'கோட்டுப்பூ' விளக்கப்படாமல் நிற்கிறது. அந்தக் காலத்து மக்களுக்கு அதில் விளக்கம் தேவை இல்லை. பிற்காலத்துப் பரிமேலழகர் 'கோட்டம் கண்ணியும்' என்னும் புறநானூற்றுப் பாடல் அடி (275) மேற்கோள் காட்டிய பிறகும், கோடுதலைச் செய்யும் மாலை என்று உரை வகுப்பது கவிதைப் பாய்ச்சல் இன்னதென்று அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை.

கவிஞன் இப்படித்தான் எழுதவேண்டும் என்று வழிமுறை வகுப்பதில் எனக்குக் கூச்சம் உண்டு. அவன் தெய்வக்ஞன் (தானே கண்டடைபவன்). கவிதை எழுதும் அக் கணமேனும் விடுதலையில் மிதப்பவன். அதனால்தான் சொன்னேன், 'ஒரு பறவையின் சிறகுக்கு அடைகாக்க மடங்குவது இழுக்கு ஆகாது,' என்று.

பா.ராஜாராம் said...

அருமை அண்ணே!

கேள்விகள்,

பேச வைத்து கேட்கவும்,தெளியவும்தான்.அறிவீர்கள்என்றும் தெரியும். :-)

எதிர்பார்ப்பு கயிறுகள் -கயிறுகள்

practice-பயிற்சி

என்றும் மாற்ற சொல்லி தம்பிக்கு மெயில் செய்திருக்கிறேன்.மாற்றுவான்.

மிகுந்த நன்றி அண்ணே!