Thursday, December 30, 2010

பால்ய ஸ்னேகிதியும் சில மழை நாட்களும் ( புரை ஏறும் மனிதர்கள்-தொடர்ச்சி )

முந்தைய பாகம் 'இங்கு'

எந்தப் பயணமும் போல் இல்லாமல் இந்தப் பயணத்தில் எதிர்பார்ப்புகள் கூடி இருந்தன. மஹாவின் திருமணம் மட்டும் அன்று. பதிவுலகம் வந்த பிறகான முதல் பயணம்! எழுத்து மூலமாக தேடியடைந்த நண்பர்கள் சிலரின் முகம் பார்க்கப் போகிற ஆர்வம். எல்லோரையும் மஹாவின் திருமணத்தில் ஒரு சேர பார்த்துவிடவேணும் எனும் துடிப்பு. போக, லதா சொல்லிய பொய்யில் ( ப்ரபா லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன் ) தேங்கியிருந்த உண்மை எனும் அடி மண்டி.

வீடு சேர்ந்து ஐந்து நாள் வரையில் ப்ரபா கடிதம் குறித்து எந்தப் பேச்சும் எடுக்கவில்லை லதா. அவ்வப்போது கேட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. " அதான் கிழிச்சுப் போட்டேன்னு சொல்றேன்ல" என்பாள். பாவி, கடங்காரி என்று மனசுக்குள் சொன்னாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அப்படியெல்லாம் கிழித்து போடுபவள் இல்லை. மயில் தன் இறகை உருவிப் போடும் வரையில் எத்தனை பீடி குடிப்பது நான்? லதாவிடம் மிக உயர்ந்த குணம் (??) ஒன்று உண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பாக அவளை பெருமையாக பேசிவிட்டால் போதும், ஒற்றை ஆளாக ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடிவிடுவாள். பௌலிங்க் போட்ட கையோடு விக்கெட் கீப்பராகவும் பாய்வாள். "HOW IS THAT?" என்று கதறுகிற ஃபீல்டராகவும் மாறுவாள். "இல்லை" என்று தலையாட்டுகிற அம்ப்பயராகவும் நிற்பாள்! சரி..தற்சமயம் வீடு உள்ள சூழ்நிலையில் விருந்தினர்களுக்கு எங்கு போக?

வந்தான் மகராசன் செ. சரவணக் குமார். (ஊரில் இருந்த சரவணன் என்னை காண வந்திருந்தார்) லதாவின் கணித சாஸ்த்திரம் அறிந்திருந்த நான் கட்டையை உருட்ட தயாரானேன். (லதாவிற்கு கிரிக்கெட் எனில், நமக்கு, வை ராஜா வை! - லங்கர் கட்டை!) "சவுதியில் இருக்கும் போதே லதா சொல்லிட்டா சரவனா. லதா மட்டும் இல்லைன்னா ப்ரபாவை கண்டு பிடிக்க முடியுமா? லதா மட்டும் இல்லைன்னா இது சாத்தியமா?" இப்படி, லதா மட்டும், லதா மட்டும் என்று உருட்டிய உருட்டலில்...'கேப்டன்' கிளீன் போல்ட்!

கடிதம் கைக்கு வந்து விட்டது. வாங்கிப் பார்த்த போதுதான் தெரிந்தது, அது ஆனந்த விகடனில் இருந்து ரீ-டைரெக்ட் செய்யப்பட்ட கடிதம் என்று. (ஆனந்த விகடனுக்கு எப்படி போனாள் இவள்?) சரவணனுக்கு முன்பாக கடிதம் படிக்கிற திராணி கூட இல்லாமல் இருந்தது. சரவணனுக்கு கடிதத்தை படிக்க தந்துவிட்டு, சரவணன் போன பிறகு கடிதத்தை எடுத்துக் கொண்டு தனியனானேன்.

"நான் ப்ரபா. கோயம்பத்தூர். பதிமூன்று வருடங்கள் பின்பாக நகர்ந்தால் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்" என்பது மாதிரி என்னென்னவோ எழுதி இருந்தாள் லூசு. ஆம், பெண்கள் எல்லோருமே லூசுதான். அல்லது ஆண்கள் எல்லோரையும் லூசு என்று நினைக்கிற (லூசா இருந்தா தேவலை) என்று நினைக்கிற குழந்தைகள்! அல்லது லூசுக் குழந்தைகள்!

கடிதத்தில் அழை எண் இருந்தது. உடன் தொடர்பு கொண்டேன். "ஹல்லோ" என்ற ஒற்றைக் குரலில் என் டைம் மிஷின் பின்னோக்கி பாயத் தொடங்கியது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக...பதினான்கு வருடங்களுக்கு முன்பாக...பதினைந்து வருடங்களுக்கு முன்பாக...என தட்டி, தட்டி இறங்கியும் ஏறியுமாக இருந்து கொண்டிருந்தது. (பயல்கள் மூவரையும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விட்டது. ப்ரபாவை மட்டும் நேரில் பார்த்தது இல்லை. ஓரிருமுறை போனில் குரல் கேட்டதோடு சரி. பின்பெல்லாம் கடிதம் மட்டுமே.)

இன்னாரென்று சொன்னேன். ஒரு மூணு அல்லது நாலு செக்கேன்ட் பேரமைதி அந்தப் பக்கம். அவ்வளவுதான்!

இடையில் கிடந்த பதினேழு வருடங்களையும் மடியில் கட்டிக் கொண்டு ஒரே தாண்டாக தாண்டி இந்தப் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள் ப்ரபா. ஒரு களைப்பில்லை, ஒரு சலிப்பில்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பும் அப்பாவிடம் அன்றைய பொழுதை பேசுமே குழந்தை! அவ்வழகை தாண்டி ஒரு ஒரு பிசிறில்லை!

"நானும் தேடி தேடி பார்த்தேண்டா. என்னவோ பிரச்சினைன்னு மட்டும் தெரிஞ்சுது. என்னன்னு தெரியல. அட்ரஸ்தான் இருக்கே. ஊருக்கு கிளம்பி வந்து விசாரிப்போமான்னு கூட வந்தது. அவனே தேடல. அப்புறம் நான் என்னத்துக்கு தேடணும்ன்னு நினைச்சுக்குவேன். ஆனாலும் ஒன்னோட தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு போதும் தோணியதே இல்ல மக்கா. இன்னுமொரு இருபது வருடங்கள் கழிச்சு நீ கூப்பிட்டிருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என் மன நிலை!.. கல்யாணமா? என்னைக்குடா நான் அதை பத்தியெல்லாம் யோசிச்சிருக்கேன்? எப்பவோ எழுதி இருக்கேனே இதைப் பத்தியெல்லாம். உனக்கெங்கே இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது. இந்தாதான் நீ கிடைச்சுட்டியே. உன்னை வச்சு குமாரும் கிடைச்சுருவான். இனி உங்க குழந்தைகள்தாண்டா என் குழந்தைகளும். ஐயோ..மஹா குட்டிக்கா கல்யாணம்?" என்று கெக்களி போட்டு சிரிக்கிறாள்..

"திடீர்ன்னு பார்த்தா, நாகு வந்து சொல்றா மக்கா, (நாகு- ப்ரபாவின் தோழி!) உன் கவிதை விகடன்ல வந்திருக்குன்னு. ஆஃபீஸில் இருந்து நேரா நாகு வீட்டுக்குத்தான் போனேன். விகடனை வாங்கி உன் கவிதை பார்த்தேன். இனி எப்படியும் உன்னை புடிச்சிரலாம்ன்னு நம்பிக்கை வந்திருச்சு. விகடனுக்கு போன் பண்ணி கேட்டேன். அவுங்க, அட்ரசெல்லாம் தரமுடியாது. ஒண்ணு செய்ங்க, பா.ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒட்டி விகடனுக்கு ஒரு கவரிங் லெட்டர் வச்சு அனுப்பி வைங்க. அதை நாங்க அவர் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்ன்னாங்கடா. உடனே அனுப்பிட்டேன்.அனுப்பி ரெண்டு மூணு மாசம்தான் ஆகும் மக்கா. இது இவ்வளவு வொர்க்கவுட் ஆகுமாடா?...ஐயோ நம்பவே முடியல மக்கா!"

"ஒரு ஜிம்மி வளக்குறேன் மக்கா. ஃபீமேல் டாக். இதைத்தானே யாருமே வளக்க மாட்டாங்க. ஆஃபீஸில் இருந்து வந்துக்கிட்டு இருந்தேனா. நல்ல மழை. சாக்கடையெல்லாம் ரொம்பி ஓடுது. சாக்கடைக்குள்ள இருந்து ஒரு குட்டி நாய் சத்தம். பார்த்தா இந்த ஜிம்மிடா.. குட்டியூண்டு! சாக்கடைக்கு மேல மொகத்தை வச்சுக்கிட்டு மெதந்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கு மக்கா. வண்டியை நிறுத்தி, அதை தூக்கிட்டு வீட்டுக்கு வந்தனா. அம்மா கெடந்து கத்துது. குளிப்பாட்டி, கிளிப்பாட்டிப் பார்த்தா.. ஐயோ அவ்வளவு அழகுடா. நீ பார்க்கணுமே.. இப்ப நல்லா வளர்ந்துட்டாங்க" என்று சிரித்துக் கொண்டே இருந்தாள்.

இவள் சிரிக்க சிரிக்க எனக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. பார்வை கரைந்து நீராக இறங்கும் போது இருளத்தானே செய்யும்!..

அனாதரவான நெடுஞ்சாலையில் ஒரு மைல் கல் இருப்பது போலும், அக்கல்லில் மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பது போலும், போகிற வருகிற வாகனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டவே பிறவி எடுத்தது போலும், பிறகு அச்சிறுமியே மைல் கல்லாக சமைந்தது போலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் காட்சிகள் விரியத் தொடங்கியது- விழித்திருக்கும் போதே இழுத்துப் போகுமே கனவு.. அது போல!

காலங்காலமாய், அனாதரவான எல்லா மைல் கல்லிலும் ஏதாவது ஒரு சிறுமி அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளோ?

தொடரும்...

1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A

32 comments:

Unknown said...

அந்த சிறுமியோடு நானும் ...

க ரா said...

மாம்ஸ் !

வினோ said...

அப்பா :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க வாழ்க்கையே அழகானதொரு தொடர்கதை மாதிரி இருக்கு பா.ரா.

ப்ரபா!!!!

அந்த நாய்க்குட்டியை பற்றி விவரித்த இடம், உங்கள் கற்பனையில் விரிந்த மைல்கல் டாட்டா சிறுமி....

கண்கள் கலங்கிவிட்டன

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
Unknown said...

நேசன் என்ன எழுதறார்ன்னு படிக்க பின்னர் வருவோம்.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

கதை மிக நன்றாக இருந்தது .

நேசமித்ரன் said...

மருத்தோன்றி இலைகள்
யூகலிப்டஸ்,துளசி

கன்றுகுட்டியின் கண்
தொட்டிலுக்கு வெளியே
நீண்ட குழந்தையின் பாதம்
அப்பத்தாக்களின்
வெற்றிலை முத்தம்

கர்ணன் படம் பார்த்துவிட்டு வெளியேறியதும் மீதமிருந்த வேர் கடலையை கூப்பிட்டு கொடுத்த பிள்ளைமனசு

வாழ்வை அர்த்தப்படுத்த..
சகலரும் கைவிட்ட நோய்க்கு பிரார்த்தனைக் காசு முடிந்து வைக்க..

வேண்டியிருக்கிறது
கடவுளோ ..
கையசைக்கும் சிறுமியோ ..
தலை கோதும் நண்பனோ ..
எச்சில் தொட்டு நொண்டி ஆட்டத்தில்
வேண்டிக் கொண்டு வீசும் ஓட்டுச்சில் போல கவிதைகளோ

நேசமித்ரன் said...

காப்புக்கட்டின வண்டி மாட்டின் கொம்பு பூச்சூடிய பாவனை தரும்
தோண்டியெடுத்த கிழங்கில் எவ்வளவு கழுவினாலும் போகாத மண்வாசனை

புரையேறும் மனிதர்களில் பால்யம் கணுக்களில் ஒட்டின மண்

Mahi_Granny said...

சீக்கிரமே தொடர்ந்ததற்கு ஒரு சபாஷ் . பா. ரா. வின் பிரியத்திற்கு எததனை ஆண்டுகள் கழித்தாலும் பால்ய சிநேகிதி கிடைத்தது ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை.. ஆஹா விகடன் நல்ல வேலை செய்திருக்கிறது. எனக்கு நி ஜத்திலும் புரை ஏறும் முன் எழுதி விடுங்கள்.

rajasundararajan said...

'ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை' என்பதுபோல, ப்ரபாவைக் கண்டுபிடிக்க முடியாத வெறுமையில் என்னைக் கூடப் 'புரை ஏறும் மனிதர்கள்' பட்டியலில் இட்டு நிரப்பிவிட்டீர்கள். 'லூசா இருந்தாத் தேவலை'. லூசுதான் நாங்கள். நல்லா இருங்க மக்கா! லூசா இருந்தாலும் எங்களுக்கும் எழுத்தில் கொப்பளிக்கும் உற்சாகம் புரியும் இல்ல? ஆகச் சிறந்த எழுத்தாளர்தான் போங்க நீங்க. இப்படியே 'தொடரும்' போட்டுப்போட்டு ஒரு இருநூறு பக்கமாவது எழுதணும் கேட்டீங்களா?

ப்ரபா தங்கச்சி, நீ வாழ்க! எங்கே நம்ம பா.ரா. குட்டிக்குட்டிக் கவிதைகள் எழுதியே வாழ்நாளைக் கடத்திவிடுவாரோ என்று கவலையில் இருந்தேன். உன் காரணம் ஒரு நாவல் எழுதத் தொடங்கி இருக்கிறார். நன்றி தாயே.

நான் பிராந்திப் போத்தலைத் திறந்துவிட்டேன். எத்தனை பேரிடம்தான் ஏமாறுவது? (ச்சும்மா)!

சிநேகிதன் அக்பர் said...

எங்களையும், நினைவுப்பாதையில் பின்னோக்கி பல மைல்கற்கள் அழைத்துச்சென்றுவிட்டீர்கள் பா.ரா. அங்கும் எங்களுக்கான பிரபாக்கள் பிரபாக்களாகவே இருக்கிறார்கள்.

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

சுசி said...

அப்பாடான்னு இருக்குங்க..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மனதைத் தொடுகிறது உங்கள் எழுத்து.தொடருங்கள் ராஜாராம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பா.ரா.-உங்கள் மூக்குக்கண்ணாடி வழியாக உலகத்தைப் பார்ப்பது எத்தனை இதமாக இருக்கிறது?

பால்ய ஸ்நேகிதத்தைத் தொலைத்து இருபது வருஷத்துக்கப்புறம் மீட்ட பாவிகளில் நானும் ஒருவனாய் இருப்பதால் உங்கள் பாதையில் மூச்சிரைக்க ஓடிவரக் காத்திருக்கிறேன்.

//மயில் தன் இறகை உருவிப் போடும் வரையில் எத்தனை பீடி குடிப்பது நான்? //

//அலுவலகத்தில் இருந்து திரும்பும் அப்பாவிடம் அன்றைய பொழுதை பேசுமே குழந்தை! அவ்வழகை தாண்டி ஒரு ஒரு பிசிறில்லை!//

//காலங்காலமாய், அனாதரவான எல்லா மைல் கல்லிலும் ஏதாவது ஒரு சிறுமி அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளோ?//

ஏற்றப்பட்ட ஊதுவத்தியாய்க் கரைந்து உயரம் குறையக் குறைய சுகந்தத்தை விசிறியடிக்கிற இந்த எழுத்தில் நான் அமிழ்ந்து முக்குளிக்கிறேன் பா.ரா.

தலைப்பு ”புரை ஏற்றும் மனிதர்கள்” என்பது சரியாய் இருக்குமோ?

Ashok D said...

:)

சிவாஜி சங்கர் said...

படிக்க படிக்க புரை ஏறத்தான் செய்கிறது..!
இந்த வருடப்பயணம் இனிதாக வாழ்த்துக்கள் மாமா... :)

அம்பிகா said...

நெகிழவைக்கும் நினைவலைகள். தொடருங்கள்; காத்திருக்கிறோம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாராண்ணா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பா ரா:)!

சிநேகிதன் அக்பர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

a said...

மைல் கல் ஓரம் நானும்...............
புத்தாண்டு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

எங்களையும்அந்த சிறுமியோடு பின்னோக்கி பல மைல்கற்கள் அழைத்துச்சென்றுவிட்டீர்கள்.

happy New year chithappa.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

யாத்ரா said...

பாராண்ணே கண்கலங்க வைக்கறீங்க

பா.ராஜாராம் said...

நன்றி செந்தில்!

இரா மாப்ஸ், நன்றி!

வினோ, நன்றிடா!

நன்றி அமித்தம்மா!

சேது, மிக்க நன்றி!

வாங்க அருள் சேனாபதி, மிக்க நன்றி!

நேசா! அருமை மக்கா! நன்றியும் பயலே!

oops! பார்த்தீங்களா அக்கா, விகடனுக்கு நன்றி சொல்ல விட்டுப் போயிற்று. மிக்க நன்றி அக்கா!

ரொம்ப நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே! டானிக் மாதிரி அண்ணே உங்க குரல்! என்னை விட்டுட்டு போத்தலை திறந்துட்டீங்களா? கடவுளே.. ஏறவே கூடாது அண்ணனுக்கு. :-))

எல்லா இடத்திலும் ப்ரபாக்கள் ஒரே மாதிரியாகவே இருப்பார்களோ அக்பர்? :-) அந்த ப்ரபாவிற்கும் (ப்ரபாக்கள்?) என் அன்பு! நன்றியும் அக்பர்!

நன்றி சண்முக குமார்! இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்!

நன்றி சுசி மக்கா!

நன்றி ஜெஸ் மக்கா!

ரொம்ப நன்றி சுந்தர்ஜி! மிக நெகிழ்வு!

மகன்ஸ், உடல் நலம் தேவலையா? நன்றி அசோக்!

நன்றி மாப்ள சிவாஜி! புத்தாண்டு வாழ்த்துகளும்!

நன்றிடா அம்பிகா! புத்தாண்டு வாழ்த்துகளும்!

நலமா ஸ்ரீ? மிக்க நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்!

ஜனா, நலமா? மிக்க நன்றி! புத்தாண்டு வாழ்த்துகள் ஜனா!

ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி! இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்பர்ஜி!

நன்றி யோகேஷ்! புத்தாண்டு வாழ்த்துகளும்!

குமார் மகன்ஸ்! நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்!

புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும் சிவகுமாரன்!

நன்றி செந்தில்!

vasan said...

உங்க‌ள் எழுத்தை, இவ்வள‌வு நாட்க‌ள் பிரிந்திருந்த‌ எங்க‌ளுக்கே எப்ப‌டியோ இருக்கு,
உங்க‌ளுக்குள் இருந்த‌ பிரிவு எப்ப‌டி இருந்திருக்கும் என்ப‌தையும், நாய் குட்டி மட்டும் வ‌ளர்க்கும்...வார்த்தை சிக்குகிற‌து..தொண்டைக்குழியில்..

பா.ராஜாராம் said...

வாசன்ஜி! நலமா? ரொம்ப சந்தோசம்! மிக்க நன்றியும்!

Jerry Eshananda said...

அப்பு..எப்பிடி இருக்கீக..ஒரே மூச்சில் எல்லாத்தையும் வாசிச்சு புட்டு அடுத்த பதிவுக்கு தவிச்சுட்டு இருக்கேன்...ராஜசுந்தர் ராஜன் அண்ணே சொல்லறது மாதி புத்தகமாவே போட்டுறலாம்.

பா.ராஜாராம் said...

//அப்பு..எப்பிடி இருக்கீக?// மண் மணக்குது வாத்யார்! :-) ஜெரி சாரே நலமா? நன்றி சார்!