Monday, January 10, 2011

பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும்--மூன்று

ஜ்யோவ்ராம் சுந்தரின் கடிதம்

jeevaram sudhar,
102-lingi chetti street,
2nd floor,
chennai 600001,
5/02/1997


ப்ரியமுள்ள ராஜாராம்,

உங்களோட லெட்டரைப் படிக்க ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்கள் கவிதை எழுதுவதை விட கடிதம் நன்றாக எழுதுகிறீர்கள் போல. அதனால் கதை கிதை என்று ஏதாவது செய்து பார்க்க வேண்டியதுதானே.. பழகப் பழக வந்துவிட்டுப் போகிறது. முனைப்புதான் வேண்டும்.

உங்களுடைய அந்த 'பழகிய கிளிக் குஞ்சேயானாலும்' கவிதை ரொம்ப நல்லாருக்கு ராஜாராம். உங்களுடைய வழக்கமான கடைசி வரிகளில் திருப்பம் என்ற காலாவதியாகிப்போன சிறுகதைப்பாணி கவிதைதான். ஆனால் evocative வகையில் மிக உயர்ந்த தளத்தில் இயங்குகிறது கவிதை.

'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' -கநாசு / நகுலன் -அப்படியே அற்புதமாய் பொருந்துகிறது உங்கள் கவிதைக்கு. அளவு முக்கியமில்லைதான். ஆனால் இதைப் போன்று நான்கு - ஆறு சின்னஞ்சிறு வரிக் கவிதைகள் , துணுக்குகள் ஆகிவிடக் கூடிய அபாயத்தை உணர்கிறீர்கள்தானே... சிந்தனை சிதறல்களாக கவிதைகள் ஆகி விடக் கூடாதல்லவா?..

எனக்கு மிகப் பிடித்த நம் குமார்ஜி கவிதை, "இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்" இது நன்றாக இருந்தாலும் ஒரு துணுக்காக Quotation-க்கு உபயோகப் படும் சில வரிகளாகவே மாறிவிடுகிறது அல்லவா...இப்போது நான் சொல்ல வருவது புரிகிறதுதானே...

over a period of time, உங்களுக்கு கவிதை என்பது அழகாக கை கூடி வந்துவிட்டது. இனி, பழகிய பாணியை விட்டு விட்டு தைரியமாக நீங்கள் வேறு விதங்களில் முயற்சி செய்யலாம். நான் குறிப்பிடுவது -evocative (உணர்ச்சி மயமாக்கல்) மற்றும் கடைசி வரிகளில் திருப்பம்) எனக்கு தெரிந்து உங்களது எல்லாக் கவிதைகளிலும் இதுவே பிரதானமாக இருக்கிறது.

கவிதையைப் பற்றி விமர்சனம் செய்தே கன்றாவியாய்ப் போனேன் நான். உங்களுக்கு பிடிக்காவிட்டால் எல்லாவற்றையும் ஒதுக்கி விடுங்கள். சும்மா, பொழுது போகாமல் கண்டதைப் படிச்சுட்டு கண்டபடி விமர்சனம் பண்ணிக்கிட்டிருப்பேன்.

சசி, மஹா நல்லா இருக்காங்களா? அவர்கள் பொக்கிஷங்கள் மக்கா... அவர்களை நீங்கள் சரியானபடி ஆளாக்கிவிட்டால் அதுவே பெரிய விஷயம். கவிதையெல்லாம் பிறகான படைப்புகள்தான். அதெப்படி மக்கா ஆண் குழந்தைக்கு பெண் பெயரும், பெண் குழந்தைக்கு ஆண் பெயரும் வைத்தீர்கள்? குழந்தைகள் ஓவியமாக இருக்கிறார்கள் என் கண்ணுக்குள் அப்படியே. ஆனா திருப்பி உங்க வீட்டுக்கு வந்தா அடையாளமே கண்டு பிடிக்க முடியாது. சின்ன வயதில் வளர்ச்சி என்பது அதிகமிருக்கும்தானே...இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். அதைத் தக்க வைத்து கொள்வது அவரவர் பாடு.

நீங்கள் போக்கு காட்டி ஓடுவதில் சமர்த்தர் என்றால் லதா மன்னி துரத்திப் பிடிப்பதில் வல்லவராயிருப்பார். இப்படியேதான் சமாதானப் பட்டுக் கொண்டிருக்கிறது உலகம் : நாமும்.

கடந்த பத்து நாளாக ஒரே தலைவலி. டாக்டரிடம் பார்த்ததில் அவர் b.p இருக்கிறது, ecg எடுங்கள், blood, urine test எடுங்கள் என்றார். ecg-ல் problem இருக்கிறது. அதனால் cardiologist ஐ பாருங்கள் என்றுவிட்டார். வீட்டில் அம்மாவும் ஒரே ரகளை. இன்று cordiologist ஐ பார்த்தேன். முந்தா நேற்றைவிட இன்று b.p அதிகம். ஆனால்- i dont want to jump into conclusions. இந்த வயதில் இதெல்லாம் இருக்கக் கூடாது என்று மருந்து மாத்திரைகள் இஷ்டத்திற்கு எழுதினார்.

என் அம்மா, எனக்கு ஒரே பையன் டாக்டர் என்று சென்டிமென்டலாக ஏதோ சொன்னார். மக்கா, நான் ஒரே பையனாக இருந்தால் என்ன, ஒன்பதாவது பையனா இருந்தா டாக்டருக்கு என்ன- ஆனால் அவரும் பொறுமையாக கேட்டுக் கொன்டார். இனிமேல் சிகரெட் பிடிக்க கூடாதாம். தண்ணி- கூடவே கூடாதாம். சரி டாக்டர் என்று சொல்லிவிட்டு வந்து உடனே bottle ஐ open பண்ணிவிட்டேன்.

ஆனால் அம்மா அழுவதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஏன் அழவேண்டும்- இது என் வாழ்க்கை ; அதைத் தீர்மானித்துக் கொள்ள எனக்கு உரிமை இல்லையா...when i say that i don't bother for all these and i'm even ready to die, why should they worry about these? எனக்கு குடிப்பது பிடித்திருக்கிறது.- அதனால் சில பிரச்சினைகள் வந்தால் வந்து விட்டுப் போகட்டுமே. அந்தப் பிரச்சினையா அல்லது குடியா என்பது நான் தீர்மானிக்கவேண்டிய விஷயமல்லவா..? அம்மா சண்டை போடும் போதும், கத்தும் போதும் கோபம் வருகிறது. அழும்போது கஷ்டமாக இருக்கிறது. ஒரு பையனை இழந்துவிட்டு, என்னை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்...புரிகிறது- ஆனால் இது என் choice இல்லையா ராஜாராம்?

b.p யையோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளையோ குறைத்துக் கொள்ள மாத்திரைகள் இருக்கின்றன எனும் போது இதை ஒரு பிரச்சினையாக்க வேண்டாம்தானே. இப்போது கூட சமயலறையில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

அப்புறம் ...வேறு ஏதாவது எழுதுனீங்களா...

உங்களது கவிதை ஆனந்த விகடனில் வந்தது எனக்கு தெரியவே தெரியாது. atleast நீங்களாவது ஒரு post card அனுப்பியிருக்கக் கூடாதா ராஜாராம்? ஆ.வி. போன்ற ஒரு popular magazine-ல் நல்ல கவிதை வருவதென்பது (இப்போது கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளிலும் கவிதைகளை அங்கீகரிக்க துவங்கி விட்டார்கள்) மகிழ்ச்சியான விஷயமல்லவா...அதுவும் உங்கள் கவிதை வந்திருக்கு என்றால் எனக்கு தெரியப் படுத்தி இருக்க வேணாமா ராஜாராம்...

அப்புறம் மக்கா...அடுத்த தடவை ப்ரபாவிற்கு கடிதம் எழுதும் போது please convey my sincere apologies- அவரது கடிதத்திற்கு நான் பதில் எழுதாதற்கு. Actual-ஆ, நான் ஒரு பதில் எழுதி கிழித்து போடும்படி ஆகிவிட்டது.- வேறு சில காரணங்களால். அவங்க இப்போ எங்கே work பண்றாங்க...? அவங்க madras லயா வேலை செய்யறாங்க? இல்லை madras வராங்களா? நான் அவங்களுக்கு வேலை விஷயமாகச் சொல்றேன்னு சொன்னது அப்படியே மறந்து போய்விட்டது. உங்களது கடிதத்தில் ப்ரபா என்ற வார்த்தையை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

ப்ரபாவிற்கு madras-ல் யாராவது உறவினர் இருந்தால்-அவர்களிடம் ஒருவாரம் போல் தங்கலாம் என்றால் சென்னை வரலாம். கண்டிப்பாக அதற்குள் நான் வேலை பார்த்துத் தருகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க மக்கா- அவங்க விஷயம் அப்படியே மறந்து போச்சு...நீங்க எழுதுங்க- மறக்காமல். நான் நடவடிக்கை எடுக்கிறேன்.

போன முறை அவங்களுக்கு கடிதம் எழுதாதற்கு அப்போதைய GM திடீரென்று வேலையை விட்டு சென்றதும் ஒரு காரணம்தான்.

vadhyar என்னை ஓடு காலி என்றெல்லாம் திட்டாது மக்கா. நாந்தான் ரொம்ப feel பண்ணினேன். வேலையை விட்டு வந்த அன்று, ஒருவர்கூட என்னை atleast வாசல்வரை வரை கூட வந்து வழியனுப்பவில்லை. M.D. 'சரி' என்று கை குலுக்கி விட்டுப் போய்விட்டார். ஆனால்..இப்போது மறுபடியும் நான் வந்து சேரமுடியுமா என அடுத்தவர்கள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சான்சே இல்லை- என்பது என் பதில்.

நீங்க எழுதுங்க ராஜாராம்..

அன்புடன்
சுந்தர்.

***

சற்றேறக் குறைய பதினான்கு வருடங்கள் முன்பு சுந்தர் எழுதிய கடிதம் இது. ஜீவராம் சுந்தராக இருந்தவன், ஜ்யோவ்ராம் சுந்தராக மாறியிருக்கிறான்!

சுந்தர், ப்ரபா, குமார்ஜி, தெய்வா-இந்த நான்கு நண்பர்களிடையே பேனா நட்பாக தொடங்கிய சினேகம்-என்ற நினைவாக மீந்த ஒரு கடிதம்... ஒரே ஒரு கடிதம்! இந்த ஒரு நண்பனின், ஒரே ஒரு கடிதத்தில் எவ்வளவு விஷயங்களை பகிர்ந்திருக்கிறான்! இவனிடமிருந்தே இன்னும் எத்தனை கடிதங்கள்!

மிகுதி மூன்று பேரிடமிருந்து இன்னுமின்னும் எத்தனையெத்தனை கடிதங்கள்! மலைப்பாக இருக்கிறதுதான்!

ஆக, சுந்தரின் இந்த கடிதத்தின் மூலமாக, இந்த பதினான்கு வருடங்களிலும் என் கவிதைகள் எந்த மாற்றமும் அடையவில்லை (evocation, கடைசி வரிகளில் திருப்பம்) என்பதை உணரும்படியே இருக்கிறது.

வாசிப்பு நின்று போனதே என் கவிதைகளின் தேக்க நிலைக்கு காரணமாகலாமோ என என்னை சமன் செய்து கொள்ளவும் இயலாமல் இருக்கிறது. இதற்கு நண்பன் நேசமித்திரன் காரணமாகிறான்.

இணையத்தில் எழுத தொடங்கிய பிறகு இணைய வெளியே என் வாசிப்பு களமாக இருந்து வந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

"இணையத்தில் நிறைய வாசிக்கிறீங்க போலயேண்ணே. உங்கள் வாசிப்பிற்கு முன்பாக வந்த கவிதைகளில் உள்ள அடர்த்தி, வாசிப்பிற்கு பின்பாக காணோமே அண்ணே" என்று முந்தைய வருடத்தில் குழப்பினான்.

ஒரு மாதிரி ரெங்கலாக வந்தது.

கவிதை எழுதுவதை விட பருத்திப்பாலோ, பட்டை சாராயமோ காய்ச்சுவது சுளுவோ என குழம்பியதும் / குழம்புவதும் உண்டு.

தற்சமயம் இந்த ப்ரபா வேறு, "அதென்ன சினேகிதியை மழை நாளோடும், சினேகிதனை வெயில் நாளோடும் பொருத்துகிறாய்?" என அழை பேசி குழப்புகிறாள்.

கவிதையைக் கொண்டு போய் பருத்திப்பாலோடும், பட்டை சாராயத்தொடும் பொருத்தும் போது நண்பர்களை கொண்டு போய் வெயிலோடு பொருத்தினால் என்ன? மழையோடு பொருத்தினால் என்ன?

யோவ்..பஞ்சாயத்தை விடுங்கய்யா... காய்ச்சப் போகணும்.. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்..

(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)

26 comments:

ராஜவம்சம் said...

இத்தனை வருடமாக பாதுகாத்து வைத்திறுந்த பொக்கிஸமா இது.

ஆழமான நட்புதான்.

செ.சரவணக்குமார் said...

நீங்க ஊருக்கு வந்து கிட்டத்தட்ட பதினைஞ்சு நாளைக்கு மேலாகப்போகுது. இன்னும் உங்களை வந்து பார்த்து கைபிடிச்சுப் பேச எனக்கு வாய்க்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத தனிமைத்துயர் வாட்டியெடுக்கிறது இப்போது. இதற்கு இந்த 7 டிகிரி குளிரே தேவலாம் போலயே.

சுந்தர் அண்ணாவை சென்னை ஏர்போர்ட்டில் சந்தித்தது நினைவு வருகிறது. நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது நானும் உடனிருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் அப்போது நான் இருந்திருக்கக்கூடாதோ என்றும் தோன்றுகிறது. நந்தி போல என்பார்கள் நம் ஊர்ப்பக்கங்களில். நந்தி போல நின்றுகொண்டிருந்தாலும் அன்பின் வீச்சைக் காண வாய்த்தது என் பேறு. சுந்தர் அண்ணாவோடு நிறைய பேச நினைத்தும் அப்போதைய உற்சாகம் முழுவதும் நீங்கள் கொண்டுவந்த அந்த பொன் நிற திரவத்திலேயே இருந்தது. பதிவிற்கு சம்மந்தமில்லாமல் ஏதோ உளறிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் காய்ச்சிக்கொண்டே இருங்கள் பருத்திப்பாலாக இருந்தால் என்ன? பட்டைச்சாராயமாக இருந்தால் என்ன? அருந்துவதற்கு நாங்கள் தயார்.

ஐவருக்கும் எனது அன்பு.

சுசி said...

//(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)//

ஹஹாஹா..

Chitra said...

கவிதையைக் கொண்டு போய் பருத்திப்பாலோடும், பட்டை சாராயத்தொடும் பொருத்தும் போது நண்பர்களை கொண்டு போய் வெயிலோடு பொருத்தினால் என்ன? மழையோடு பொருத்தினால் என்ன?


......உங்களுக்கென்றே இருக்கும் தனி முத்திரையுடன் எழுதி இருக்கிறீங்க... சூப்பர்!

வினோ said...

அப்பா இந்த மாதிரி கால நெகிழ்வுகளை கொட்டி போறீங்க.. அள்ள முடியாமல் தவிக்கிறது இந்த பிஞ்சு விரல்...

க ரா said...

பெருமூச்சுதான் விட முடியுது மாம்ஸ்..
மிச்ச எத விடயும் நட்புதான் பெரிசு இல்லயா மாம்ஸ்.. சாரயத்துலல்லாம் இல்லாத ஒரு வித போதை நட்புல இருக்கற மாதிரி ஒரு உணர்வு மாம்ஸ் எனக்கு.. ஒரு விதமான ஏக்கத்த உருவாக்கீட்டிங்க மனசுல.. ஒரு நாள் போன்ல பேசுனதெல்லாம் போதாது மாம்ஸ்... நிரைய பேசனும் உங்க கூட... சாவகாசமா உடகார்ந்து ஏதானும் ஒரு மரத்தடில ஒரு பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உங்க பக்கத்துல உட்கார்ந்து கிட்டு பேசனும் மாம்ஸ்.. பேசுவோம் என்னிகாது ...

கவி அழகன் said...

என்ன ஒரு பொக்கிஷம் நினைவுகள் என்றும் சந்தோசம்தான்
கனத்த நெஞ்சை இறக்கி வைத்து போல் இருக்குமே

Unknown said...

Cheers to your friendship. Paasamalar sivaji thaan neenga!

Anonymous said...

காதலிடமும் காணப் பெறாத உண்மை நட்பிடம் மட்டுமே.. நெகிழ்ச்சி அண்ணா..

CS. Mohan Kumar said...

சுந்தரின் கடிதம் அருமை. நிறைய்ய்ய விஷயங்களை சொல்லி செல்கிறது. கடிதம் என்பது தற்போது காலாவதியாகி விட்ட நிலையில் இத்தகைய கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் தான்

Ashok D said...

...........

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

சிநேகிதன் அக்பர் said...

என் மனதில் பதிந்திருக்கும் உங்கள் பிம்பம் மேலும் மேலும் அழகாகிக்கொண்டே செல்கிறது.

அன்புடன் அருணா said...

(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)
நீங்களுமா???!!

சி.பி.செந்தில்குமார் said...

LETTER LITERATURE IS ALWAYS SWEET.

>>>
(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)

HAA HAA

சாந்தி மாரியப்பன் said...

//கவிதையைக் கொண்டு போய் பருத்திப்பாலோடும், பட்டை சாராயத்தொடும் பொருத்தும் போது நண்பர்களை கொண்டு போய் வெயிலோடு பொருத்தினால் என்ன? மழையோடு பொருத்தினால் என்ன?//

நல்ல ஒப்புமை :-)))

//(அப்பாடி!.. பதிவுலகத்திற்கே உரித்தான இந்த அவ்வ்வ்வவ் -வை உபயோகம் செய்யாத குறை வெகு நாளாக இருந்தது... தீர்ந்தது!)//

உங்களுக்குமா!!.. ஹையோ..ஹைய்யோ :-))))))

அம்பிகா said...

பொக்கிஷமாய் கடிதமும், நட்பும், உங்கள் பகிர்வும்...

காமராஜ் said...

நினைந்து நினைந்து உருக நட்பு ஒரு நல்ல தித்திப்பு.

நந்தாகுமாரன் said...

அருமை ... இதனால் தான் எனக்கு ஜ்யோவைப் பிடிக்கிறது ... நன்றி ... ஆனால் பெர்சனல் கடிதத்தை பிரசுரிப்பதற்கு அவரிடம் பெர்மிஷன் வாங்கினீர்களா :) ...

ஹேமா said...

அண்ணா...உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதிஷ்டசாலிகள்.

பா.ராஜாராம் said...

@நந்தா

நன்றி நந்தா!

//ஆனால் பெர்சனல் கடிதத்தை பிரசுரிப்பதற்கு அவரிடம் பெர்மிஷன் வாங்கினீர்களா//

ஆம் நந்தா. வாங்கினேன். :-)

Toto said...

ஜீவ‌னுள்ள‌ ஒரு க‌டிதமும், அந்த‌ ந‌ட்பும் ரொம்ப‌ ந‌ல்லாயிருக்குங்க‌.

-Toto

'பரிவை' சே.குமார் said...

உங்கள் நட்பின் ஆழத்தை இந்த கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் உங்கள் மனசு சொல்லுது சித்தப்பா.


தனி முத்திரையுடன் எழுதி இருக்கிறீங்க... சூப்பர்.

ராகவன் said...

அன்பு பாரா,

நல்லாயிருந்தது இந்தப் பதிவு. அழகான கடிதம். சுந்தர் என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாமே இப்படித்தானோ தெரியலை. எனக்கும் ஒரு சுந்தர் இருக்கான்... எல்லாமுமாய் அவுஸ்திரேலியாவில்.

கடிதத்தின் பின்னுரை அழகாய் இருந்தது. வாய்க்கப்பெற்றவர்கள் நீங்கள் பாரா. பிரவாக அன்பு.

அன்புடன்
ராகவன்

கோநா said...

சிலருக்கு மட்டுமே ஆழமான நட்புகள் கிட்டுகின்றன, வாழ்த்துக்கள் பா.ரா

tt said...

எத்தனை தொழிநுட்ப வசதிகள் வந்தாலும் கடிதம் எழுதுவதும், வாசிப்பதும் தனி சுகம்..