தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் (அ) பயணக்கட்டுரை
நூறு நாள் விடுமுறை! யோசித்துப் பாருங்கள் மக்கா, நூறு நாள்!
மகள் திருமணம், மகனின் சிரிப்பு, மனைவியின் அருகாமை, உறவுகளின் சூழல், புதிதென, எழுத்து மூலமாக சம்பாதித்த என் மனித முகங்களையும் தடவி அறியப் போகிறேன். இந்த நூறு நாளும் இந்த ஒரு வேலைதான் எனக்கு. எல்லா வேலைகளையும் ஒரே வேலையாக பார்க்க எது அனுமதிக்கிறது? சந்தோஷமா? விடுதலையா? இவ்விரண்டுமா? யாருக்குத் தெரியும்!
யோசிச்சிட்டீங்களா? எவ்வளவு சந்தோஷமா இருக்கு! இல்லையா?
ஊரில் இருந்து திரும்பிய பிறகுதான் இதை எழுத தொடங்குகிறேன். ஆயினும், இங்கிருந்து கிளம்பிய அன்று பறந்த பறத்தலில் பாதியாவது இப்பவும் பறக்க வாய்க்கிறது. நினைவு கிளர்த்தும் உணர்வு என்னே அலாதியானது!
பெட்டி படுக்கையெல்லாம் லக்கேஜில் சேர்த்துவிட்டு, போர்டிங் முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டேன் - ராஜா மாதிரி! இந்த ராஜாவை சொல்லவில்லை. அந்த ராஜாவை. ராஜாதி ராஜாவை!
என் நாடு, என் மண், என் மனிதர்கள், காற்று, ஊர், தெரு, வீடு, லொட்டு, லொசுக்கு, எல்லாம் என்னுடையதாகப் போகிறது. என்னுடைய எல்லாவற்றுக்குள்ளும் சொருகிக் கொள்ளப் போகிறேன். இனி, எவன் என்னைப் பிடிக்க முடியும்?
ஏர்ப்போர்ட்டில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த மனிதர்கள், ரொம்ப தாழ நடந்து கொண்டிருந்தார்கள். என் பறத்தலின் தாழ! "பறக்கப் பாருங்கடா..இன்னும் நடந்துக்கிட்டு.." என்கிற திமிர் கூட தானாக ஒட்டிக் கொண்டது.
விரையும் தரை, வயிற் கூச்சம், காதடைப்பு, தாழ மேகம், விரிந்த வெளி' யென ராஜகுமாரனை தூக்கிக் கொண்டு,..கொண்டு போய்க் கொண்டிருந்தது அலுமினியப் பறவை. அழகழகான பணிப்பெண்களை சகோதரிகளாகப் பார்க்கிற கிறுக்குத்தனம் வந்திருந்தது. அவர்கள் கண்களிலும் வழிந்த சகோதரத்துவத்தை பெரிய மனது கொண்டு ஏற்றுக் கொள்ள முடிந்தது.
"சாயா, காப்பி, முருக்கேய்... காப்பி, சாயா, முருக்கேய்.." என பணிப்பெண்கள் தலை தலையாக விசாரித்துப் போவதாக 'ஹோம்லியாக' நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. கால் மேல் கால் போட்டுக் கொண்டேன். 'யெஸ்..யுவர் ஹைனஸ்' என என்னை நானே சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
இப்படியாக, பாலை கடந்து, கடல் கடந்து, மலை கடந்து, ஜன்னலுக்கு வெளியே சதுரம் சதுரமான பச்சையம் அடைந்து விட்டேன். இந்த பச்சயத்தை இங்கு விட்டால் எங்கு பறிக்க முடியும்? பரந்த வெளி, தாழ மேகம், காதடைப்பு, வயிற் கூச்சம், மீண்டும் விரையும் தரை. நிலை குத்தியது அலுமினியப் பறவை!
பெட்டி படுக்கைகளை சேகரித்துக் கொண்டேன். ஜ்யோவ்ராம் சுந்தர், மணிஜி, வாசு, சரவணா, சிவாஜி ஷங்கர், ஆகியோரிடம் முன்பே அழை பேசியிருந்தேன். வருவதாக சொல்லியிருந்தார்கள். ஊரில் இருந்து முத்துராமலிங்கமும் நண்பர்களும் காரில் அழைத்துப் போக வருவதாக சொல்லி இருந்தார்கள்.
நண்பர்களை சந்தித்து, அவுன்ஸ் நெப்போலியனை இறக்கி, சட்டை பட்டனையும், கார் கண்ணாடியையும் திறந்து விட்டுக் கொண்டு, நிலவோடு பேசிக் கொண்டே வீடடையப் போகிறேன். 'கிடுக்கி..கிடுக்கி..கிடுக்கி' என ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தேன். மனசு சந்தோசமாய் இருக்கிற போது ட்ராலி கூட என்னமா கூவுது!
முதலில் சரவணனைத்தான் பார்த்தேன். சவுதியில் பார்த்த சரவணன்தான். பூ, பொட்டெல்லாம் வைத்து சும்மா கும்முன்னு வந்திருந்தது போல இருந்தது. சவுதியில் அவரை நான் பார்த்தாலும் அவர் என்னைப் பார்த்தாலும் கைம்பெண் களையில்தான் இருப்போம். இடம், மனசு சார்ந்துதானே பொழிவும்! 'வக்காளி..நீயும் தப்பிச்சு வந்துட்டியாண்ணே' என்பது போல் சுதந்திரமாக சிரித்தார்.
" ந்தா உங்க ஜ்யோவ் வர்றாப்ல" என சரவணா சுட்டிய திசையில் சுந்தர் வந்து கொண்டிருந்தான். ச்சின்ன ச்சின்னதாக குதிச்சு நடக்குற சுந்தர்! அதே நடை, அதே முகம், அதே இல்லாத தலை, அதுவே அதுவான சிரிப்பு! இவனைப் பார்க்காத இந்த பதினைந்து வருடங்களில் காலம் என்ன பெரிதாக கிழித்து விட்டது? குமுதத்தின் ஆறு வித்தியாசங்கள் போல சிற்சில மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தான்.
"என்னங்க, அப்படியே இருக்கீங்க?" என என்னை வேறு கட்டிக் கொண்டான். ஊன்றி கவனித்து, ஆறு வித்தியாசங்களை கண்டு பிடித்து விடுவானோ என அவசர அவசரமாகக் கட்டிக் கொண்டேன். கண்களிலும், சிரிப்பிலும் எங்கள் காலத்தின் வாசனை கசிந்து கொண்டிருந்தது.
மணிஜி, வாசுவை தேடினேன். 4000 கி.மீ அந்தப் பக்கம் இருந்தே இவர்களை நண்பர்களாகக் கண்டு பிடித்து விட்டேன். அங்கனைக்கு அங்கனையா கண்டு பிடிப்பது கஷ்டம்?
ட்ரிம் பண்ணிய ஃபிரன்ச் தாடி, T-சர்ட், கையில் சுழட்டிய சாவிக் கொத்துடன் அங்கனையேதான் நின்று கொண்டிருந்தார் மணிஜி! பெண்டு நிமிர்த்துகிற p.t. வாத்தியார் மாதிரியும், பாரில் இருந்து திரும்புகிற பள்ளிச் சிறுவனைப் போலவும் கடுமையும், ஏகாந்தமும் கலந்த சிரிப்புடன் கட்டிக் கொன்டார். (ராஸ்கல், எப்படிய்யா ரெண்டையும் சிரிப்பில் கலக்குற? காக்டைல் தடியா!) எழுத்தில் காட்டும் ரௌடித்தனத்தை மணிஜி முகத்தில் தேடினேன். 'நீ என்ன தேடினாலும் கிடைக்காதுடி' என்பதுபோல் வாசுவிற்கு அழை பேசிக் கொண்டிருந்தார்.
வழி தப்பிய ஆட்டுக் குட்டியானார் வாசு! "ரௌண்டானா தாண்டி லெஃப்ட்ல வா வாசு. அரைவலுக்கு எதிர்ல நிக்கிறோம். வந்துட்டார்" என வழி அறிவித்துக் கொண்டிருந்தார் வாசுக்கு மணிஜி. வந்திறங்கினார் வாசு! வழியிலேயே காரை நிறுத்தி, கார் கதவு திறந்து, கையைப் பற்றி, நெருக்கமாக இழுத்து, அணைத்துக் கொன்டார். 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' போல அவ்வளவு குறும்பும், சாந்தமும் கலந்த சிரிப்பு! பேசிக் கொண்டே சிரிப்பவர்களையும், சிரித்துக் கொண்டே பேசுபவர்களையும் பிடிக்குமா உங்களுக்கு? அப்ப, வாசுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!
எல்லோருமாக சேர்ந்து முத்துராமலிங்கத்தை தேடினோம். அவன் அங்கதான் நிற்பதாக சொல்லிக் கொண்டே இருந்தான். அந்த அங்கதான் எங்க என குழப்பமாக இருந்தது. கண்டுபிடித்த பிறகு ஓடி வந்து கட்டித் தூக்கி நிலத்தில் ஒரு குத்து குத்தினான் முத்துராமலிங்கம். இது ஊர்க் குத்து! இப்படி குத்தினால்தான் எங்களுக்கு குத்தினது மாதிரி. ரப்பர் ஸ்டாம்புக்கு பிறந்த பய புள்ளைகள்!
முத்துராமலிங்கம் ஒரு முரட்டுக் காரை கொண்டு வந்திருந்தான். "என்னடா, டாட்டா சியரால்லாம்?" என்றேன். "அட, வா மாமா?" என்றான். "யார்டா டிரைவர்?" என்றேன். "நம்ம அறிவுதான்" என்றான். எனக்கு திகீர் என்றது..
--தொடரும்
புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C
Friday, February 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
" ந்தா உங்க ஜ்யோவ் வர்றாப்ல" என சரவணா சுட்டிய திசையில் சுந்தர் வந்து கொண்டிருந்தான். ச்சின்ன ச்சின்னதாக குதிச்சு நடக்குற சுந்தர்! அதே நடை, அதே முகம், அதே இல்லாத தலை, அதுவே அதுவான சிரிப்பு! இவனைப் பார்க்காத இந்த பதினைந்து வருடங்களில் காலம் என்ன பெரிதாக கிழித்து விட்டது? குமுதத்தின் ஆறு வித்தியாசங்கள் போல சிற்சில மாற்றங்களுடன் அப்படியேதான் இருந்தான்"
-பா.ரா. மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை.
ஒருமாதத்திற்கு மேலாகியும் இந்தியா வந்து போனதை பற்றி எழுதவில்லேயே என்று நினைத்தேன். நூறு நாட்கள் எனவே பல நூறு செய்திகள்
இது ஊர்க் குத்து! இப்படி குத்தினால்தான் எங்களுக்கு குத்தினது மாதிரி. ரப்பர் ஸ்டாம்புக்கு பிறந்த பய புள்ளைகள்!
......நீங்கள் எழுதி இருக்கும் விதம், மிகவும் ரசித்து வாசிக்க வைத்தது... தொடருங்கள்!
annae.. asaththal.. maniji , vaasu , saravanan marakka mudiyaatha nanbarkal.. pakrivukku nanri.
ஒரு நெடும்பயணத்தின் தொடக்கம் பிடித்த மனிதர்களுடன் அமைந்தபின் வேறென்ன வேண்டும்??
enaku purai era vechute irukinga ovoru thadavai padikirapayum... eniku ongala santhika poreno theriyala.. ana epadiyum santhipom mams.. appuram nan ippa india kilampite iruken..
Arumainga.
Sethu(S)
தாழப்பறத்தல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு சுகமான
பதம்.அசத்துய்யா.
ம்ம் அப்புறம்? கேட்க தோணுகிறது... வெகு அழகாய் எழுதி இருக்கிறீர்கள், விவரணைகளில் அருகே இருந்து இதை எல்லாம் பார்த்ததைப் போல ஓர் உணர்வு...
// 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' போல அவ்வளவு குறும்பும், சாந்தமும் கலந்த சிரிப்பு! பேசிக் கொண்டே சிரிப்பவர்களையும், சிரித்துக் கொண்டே பேசுபவர்களையும் பிடிக்குமா உங்களுக்கு? அப்ப, வாசுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!// ம்ம் பாத்திருக்கேன் பாத்திருக்கேன்...
தொடருங்கள் பா.ரா :)
எப்படிப் பட்ட ஒரு சூழலில் நாமிருந்தால் ஒரு பயணம் இப்படிப்பட்ட ஒரு விடுதலை உணர்வை நமக்குக் கொடுக்க முடியும்?
அப்படிப்பட்ட ஒரு இறுக்கத்தில் பிறக்கும் உங்கள் எழுத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆனந்தத்தை பேரன்பை என்னால் உணரமுடியும்போது உங்களருகில் நிறைந்திருக்கும் ஒரு ஆளரவமற்ற காலின் கீழ் நிழலடையும் பகல்பொழுதுக்குரிய வெறுமையையும் பருக முடிகிறது.
இன்னும் எத்தனை நாள் தேசம் துறந்து பா.ரா.?
ம்ம் நான் சென்னை ஏர்போர்ட்டில் கூட இல்லாம போனதற்கு வருந்துறேன்
தொடருங்கள்..
இந்த உணர்வுகள் நான் அனுபவிக்காவிட்டாலும், என் தந்தையை பிரிந்திருந்த அனுபவம் உண்டு. இரண்டு வருடத்திற்கொரு முறை 2 மாத லீவில் வருவார். அவரது வாசனையே சிங்கப்பூர் வாசனை எனக்கும் என் சகோதரர்களுக்கும்.
அருமையான பகிர்வு.
சித்தப்பா .. ஊருக்கு வந்தச்சு உங்க கூட..ம்ம்ம்ம் தொடர்ந்து கூட்டிட்டுப் போங்க...!
செம ஜாலியா இருக்கு சித்தப்பா!
சித்தப்பா...
மண் வாசம் மறையாமல் ஒரு பயணக் கட்டுரையா?
அருமையான எழுத்தை நுகர இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி...
ஆரம்பிங்க உங்க ஆராவாரத்தை...!
கண்படும் {தி(ரு)ஸ்டி}அளவு புரையேறும் நட்புக்கள்.
வளைகுடாவில் அமங்களியாகவும் தாயகத்தில் சுமங்களியாகவும் உண்மை வரிகள் சித்தப்பு அருமை.
paaraa anne...
romba nallayirukku... anne... eppadi irukkeenga? maga kitta pesuneengalaa? eppadi irukkaapla?
anbudan
ragavan
ஆஹா
அழகான தொடர் பூத்துக் குலுங்கப்போகுது போல
ம்ம்ம். அசத்துங்கண்ணே
உங்க எழுத்து கல்யாண்ஜியை படிக்கும் உணர்வை தருகிறது. வெகு சுகம். வாழ்த்தும் நன்றியும்.
நன்றி கோநா!
நன்றி மஹிக்கா!
நன்றி சித்ரா!
ம. சரவணா, நலமா? நன்றி மக்கா!
அதான்னே, கௌரி! நன்றியும் மக்கா!
கண்டிப்பா சந்திப்போம் இரா மாப்ஸ்! நன்றி!
சேது, மிக்க நன்றி!
நன்றி காமு மக்கா!
நன்றி சுகிர்தா!
தெரியலையே சுந்தர்ஜி! இன்னும் ஒரு கடமை பாக்கி. பிறகு உதறி வரவேண்டியதுதான். நன்றி சுந்தர்ஜி!
கண்டிப்பா அடுத்த பயணத்தில் பார்க்கலாம் மோகன்ஜி! எங்கப் போயிரப் போறோம்? நன்றி மோகன்!
நன்றி சமுத்ரா!
நன்றி சிவகுமாரன்! நெகிழ்வு.
நன்றி மகனே, தேவா!
குமார் மகன்ஸ், நன்றி!
என்னங்கய்யா? மூணு மகன்களும் க்யு-வில்? நன்றி மகன், ராஜவம்சம்!
நல்லாருக்கேன் ராகவன். மகாவும் நலம். மின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். நன்றி ராகவன்!
நன்றி கதிர்!
ஐயோ, நிலாமகள்! நம் ஆதர்சர்களில் ஒருவர். பெரிய வார்த்தை. பெரிய நன்றி! ;-)
உணவின் சுவையில் ஒன்றறக் கலந்திருப்பது மூலப் பொருட்களின் மணமும் குணமும் தானே...! வண்ணதாசனும், தி.ஜா.வும், மீராவும் உள்ளிறங்கிய ரசாயன மாற்றம் தங்கள் எழுத்துகளை ஜொலிக்கச் செய்வதாய் கருதலாம். நிரம்பிய பொருளுக்கு ஈடாய் கலத்தின் பொருண்மையும்!
நிலா மகள், ரொம்ப நன்றி!
Post a Comment