Tuesday, April 26, 2011

காலம் வரையும் கடிதம்

'காலங்களை வரைந்த கடிதங்கள்' என்றுதான் இருக்க வேணும் இத்தலைப்பு. பொசுக்குன்னு என்னவோ போல முடிக்க விருப்பமில்லாமல் இருக்கிறது. மேலும், நான் இருக்கிறது வரையில் இந்த காலங்களும் என்னுடன் வரத்தான் போகிறது. . வேறு வேறு வயதில், வேறு வேறு தினுசில், வேறு வேறு அனுபவங்களுடன். முன்பு நான் எழுதிய கடிதங்களே இதோ இப்ப வேறொரு அனுபவமாக இருக்கிறதைப் போல.

இந்தப் பயணத்தில் என் சினேகிதி ப்ரபாவை சந்தித்த போது அவளுக்கு நான் எழுதிய கடிதங்களின் கோப்பை கொண்டு வந்து தந்தாள் என்று 'சொன்னேன்' இல்லையா? அக்கடிதங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மக்கா.

***

ப்ரபாவுடனான என் முதல் கடிதத்தை இப்படித்தான் தொடங்கியிருக்கிறேன்...

சிவகங்கை
07.06.'93

ப்ரபா.

வணக்கம். நான் ராஜாராம். சிவகங்கைக்காரன். என்னைப் பற்றி குமார் எதுவும் சொல்லியிருக்கிறானா என்று தெரியவில்லை. உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான்.

நலமா எல்லோரும்?

வெகு நாட்களாகவே உங்களுக்கு எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். முடியாமல் போய் விட்டது. முடியாமல் போய்விட்டது என்று கூட இல்லை. 'உங்களுக்கு சூழல் எப்படி உள்ளதோ?' என நினைத்து விட்டிருப்பேன் போல. குமாரிடம், ' ப்ரபாவிற்கு நான் எழுதட்டுமான்னு கேட்டுச் சொல்லுடா' எனக் கேட்டிருந்தேன். திருமண நெருக்கடிகளில் மறந்திருக்கவேணும் குமார். போக, உங்கள் அனுமதி இல்லாமல் எழுத யோசனையாக இருந்ததும்தான்.

குமார் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தோவாளையில் குமார் வீட்டு மொட்டை மாடியில், நான், குமார், தெய்வா மூவருமாக வெற்றுடம்புகளுடன் அண்ணாந்து கிடந்தோம். குமாரை நடுவில் கிடத்தி, நானும் தெய்வாவும் அவனைக் கேலி பண்ணி சிரித்துக் கொண்டிருந்தோம். அனேகமாய் மூன்று மணிக்கு மேல் இருக்கும். ஊர் அடங்கி விட்டது. விடிகிற இருட்டு. திடுமென குமார், 'நம்மைத் தவிர இன்னுமொரு ஒரு உயிரும் தூங்காம கெடக்கும்லே' என்றான்.

தெய்வா, 'ஜோதியா?' என்றான். 'அது ஏழு மணிக்கே தூங்கியிருக்கும். ப்ரபாடே' என்றான் குமார். அவன் கேட்கும் போதே எனக்கு பதில்
தெரிந்திருந்தது. அதை குமாரே சொல்லும் போது அழகாய் இருந்தது. பிறகு வெகு நேரம் வரையில் எதுவுமே பேசாமல் கிடந்தோம்.
குமார் ஒரு தனிமையான அன்பில் முழுமை அடைந்து கொண்டிருப்பதாகப் பட்டது எனக்கு. தெய்வாவிற்கு என்ன தோன்றியதோ?

சந்தோசமோ, துக்கமோ அடர்த்தியாய் நம் மீது படரும்போது மௌனமான இறுக்கம் நமை அறியாது தோன்றி விடுகிறது. அது புனிதமான இடம். உயர்வான பொழுது. நானும் தெய்வாவும் அதை கலைக்காமல் விட்டு விட்டோம். குமரன் கிடந்தான்.

அந்தக் கிடக்கைதான், 'ஊர் போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாய் ப்ரபாவை தொடர்பு படுத்திக் கொள்ள வேணும்' என்று தோன்றியது எனக்கு. தெய்வாவிடம் முகவரி வாங்கி உங்களுக்கு எழுதுகிறேன்.

குமார் ' ஜோதி' யில் ஐக்யமாகி விட்டதாக தெய்வா எழுதி இருந்தான். தெய்வாவிற்கும், லக்ஷ்மிம்மாவிற்கும் நீங்கள் எழுதிய கடிதம் குறித்தும் தெய்வா எழுதி இருந்தான். குமார் லெட்டர் எழுதினானா? தெய்வா, லக்ஷ்மி எழுதியதுகளா? புதுசா எதுவும் வாசித்தீர்களா?

சமீபமாய் மோகமுள் வாசித்து விட்டு எழ முடியாமல் இழுத்துக் கொண்டு கிடந்தேன்.

ஏதோ வெகு நாள் சிநேகிதம் போல் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமலே இந்தக் கடிதம் முடிவிற்கு வந்து விடுகிறது. என்னைப் பற்றிச் சொல்லவென என்ன இருக்கிறது என்றும் படுகிறது. என்றாலும் உள்ளதைச் சொல்லி தொடங்கலாம்.

நான்- ராஜாராம்

படிப்பு- b.sc.,phy

வேலை- எல்.ஐ.சி ஏஜன்ட்

லதா- wife

மஹா (மகாலக்ஷ்மி)- ஆறு வயது மகள்

சசி (சசிதரன்)- ஒண்ணரை வயது மகன்

பாலகிருஷ்ணன்- அப்பா

அசோக் குமாரி - அம்மா

அக்கா- இரண்டு பேர்

தங்கை- இரண்டு பேர்

எல்லோருக்கும் திருமணமாகி சிதறிக் கிடக்கிறார்கள்.

மற்றவை வெள்ளித் திரையில் காண்க.

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பின்குறிப்பு (அ) இன்று
---------------------------------

இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?

***

மெட்ராஸ் - சிவகங்கை
02.10.'96
இரவு 8.10

ப்ரியங்கள் நிறைந்த என் ப்ரபா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய மனப் பக்குவத்துடன் வாய்த்திருக்கிற பொழுதாகிறது இன்று.

ஓடித் தேய்ந்த தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது ரயில் வண்டி. இப்படி ரயில் வண்டி என்பது கூட பிடித்து வருகிறது. நிறைய காற்று மக்கா. மூச்சு நின்று விடும் போல் இருக்கிறது. நிற்கட்டும். கதவடைக்க முடியுமா அதுக்காக?

சிந்து மடியில் கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். குளிர்கிற காற்றாக தெரியக் காணோம். சற்றுக் கழித்து என் லுங்கியை எடுத்து போர்த்தி விடணும் சிந்துக்கு. ஆக்ரோஷமும் வேகமும் நிறைந்த இந்தக் காற்று தேவையாகிறது போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.

நேற்றைக்கு முந்தைய நாள் சென்னை புறப்பட்டு வந்தது. சிந்துவிற்கு சர்ஜரி முடிந்து, மூன்று மாதம் கழிந்த follow-up-க்காக. ஆப்பரேசன் நல்லபடியா முடிஞ்சாச்சு மக்கா. சர்ஜரி மாதிரி இல்ல. coil-embolization என என்னவோ சொல்கிறார்கள். சர்ஜரிக்கான தழும்பு எதுவும் இருக்காதாம். (பெண் குழந்தை இல்லையா?). அடுத்த செக்-அப் ஆறு மாதம் கழித்து. வரணும்.

சரி..நீ எப்படி இருக்க? அனேகமாக உன் கடிதம் வீட்டில் காத்துக் கொண்டிருக்கலாம். நாகு வந்துச்சா?

சேது எக்ஸ்பிரஸ் 5.55-க்கு சென்னையை விட்டுக் கிளம்பியது. ராமேஸ்வரம் ஸ்கூலில் இருந்து ஸ்கௌட் boys & girls 30-40 பேர்கள் இருக்கிறார்கள் பெட்டிக்குள். ஒரே ஆட்டமும் பாட்டமுமாக கம்பார்ட்மென்டே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுனில் & சுசிலா என்று இரண்டு take-carrer கள். இவ்வளவு நேரத்திற்குள் அறிமுகமாகி இட்லி புளியோதரை சாப்பிட்டாச்சு.

இருவரும் குழந்தைகளை தூங்கச் செய்துவிட்டு அருகமர்ந்து cards போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'வர்றீங்களா சார்? பயப்படாதீங்க. காசுவச்சு இல்ல' என்று சுசிலா அழைத்தார்கள். 'வேணாம் மேடம். நீங்க ஆடுங்க. எனக்கு கொஞ்சம் எழுதணும்' என்றுதான் இதை எழுத உட்கார்ந்தேன்.. திண்டிவனத்தைத் தாண்டி விட்டது வண்டி.

என்ன செய்து கொண்டிருப்பாய் நீ? சாந்திக்கா, நளினி, நீ, அம்மா, சக்திக் கண்ணம்மா எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். இப்படி நினைச்சுக்கப் பிடிச்சிருக்கு.

கும்மிருட்டு மக்கா வெளிய. கூடவே நெளிந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது ஜன்னல்லைட். ரயில்வே லைனை ஒட்டிய வயல்க்காரர்கள் எல்லோரும் சந்தோசமானவர்களாகத்தான் இருக்க முடியும். அதுவும் சற்று முன்பு ஒரு ஒற்றைக் குடிசையைக் கண்டேன். வயலின் நடுவே. உச்சியில் ஒரு குண்டு பல்ப். சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது குடிசை வீடும் எலெக்ட்ரிக் பல்பும்.

பின்னால ஒரு வயல் வாங்கணும் ப்ரபா. புள்ள குட்டியெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அந்த வயலுக்கு வந்து குடிசை போட்டுக்கிட்டு செட்டில் ஆயிரணும். மறக்காம ஒரு பல்பு போடணும் உச்சியில். மஹா, சசியோட குழந்தைகள் ஏன் உன்னோட குழந்தைகள் எல்லோருமாக, 'ராஜா தாத்தாவோட வயல் வீட்டுக்கு' லீவுக்கு வந்துரணும்

'அடுத்த வண்டி எப்போ தாத்தா? அடுத்த வண்டி எப்போ தாத்தா?' என்கிற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கணும். 'அடக் கிடுவுட்டிகளா...செத்த நேரத்துல வரும் பக்கிகளா' எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது வண்டி வந்து விடாதா என்ன?

சரி மக்கா..எல்லாம் எங்கே போய் விடப் போகிறது?

நிறைய அன்புடன்
பா.ராஜாராம்.

***

பி.கு (அ) இன்று
================

சிந்து, சுதா மகள். சுதா லதாவின் தங்கை. (அப்ப லதா யாரு? என்று கேட்டால் உதை) இந்த சிந்துவை ஒரு மெடிக்கல் செக்- அப்-பிற்காக சென்னை அழைத்துப் போய் திரும்பும் போது இந்தக் கடிதம் புகை வண்டியில் எழுதி இருக்கிறேன். அப்ப ரயில் வண்டியாகத்தான் இருந்திருக்கிறது- இந்தப் புகை வண்டி. சிந்து தற்சமயம் திருமணத்திற்கு நிற்கிறாள்.

இன்னும் நான் வயல் வாங்க வில்லை. இப்போதைக்கு ஒரு பல்பு வாங்கிவிட முடியும். ஒவ்வொன்றாகத்தானே செய்ய முடியும் எதையும்?

***


சிவகங்கை
25.12.'96
இரவு 12.20

மக்கா,

என் லெட்டர் இன்று உனக்கு கிடைத்திருக்கலாம். இன்று ரொம்ப relaxed-ஆன நாள் போல இருக்கிறது. ஆனா எதுவும் எழுத ஓடலை. எப்பவும் போலான கிறிஸ்துமஸ்-சாய் இல்லாமல் போய் விட்டது- இந்த கிறிஸ்துமஸ். போன வருடம் மாதிரி, பீட்டர் வீடு, ஜோசப் அண்ணன் வீடு, விண்ணரசி வீடு, ஆல்ஃபிரட் சார் வீடு என எல்லோர் வீட்டின் விழாக்கால முகம் காண முடியாமல் போய் விட்டது.

போகாவிட்டாலும் வந்து கூட்டிச் செல்கிற ஜோசப் அண்ணனக் கூட ஏனோக் காணோம். யாரும் கூப்பிட முடியாத தூரத்திற்கு வந்து விட்டேனோ என்னவோ? வீட்டில் ஆள் இல்லாத தனிமை வேறு... m.c.விஸ்கி கால் போத்தல் வாங்கி வைத்துக் கொண்டு (சிறுகச் சிறுக எனத் தொடங்கி) உன் கடிதங்களை எல்லாம் முதலில் இருந்து தொடங்கி என வாசித்துக் கொண்டு இருந்தேன்.

அப்பா..

எவ்வளவு எழுதி இருக்கிறாய் மக்கா? எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமா ப்ரபா? நம் குழந்தைகள் காலம் வரையில் வச்சு இதையெல்லாம் காப்பாத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? 'தாத்தா அவர் ஃபிரெண்டுக்கு எழுதியது' என்று குழந்தைகளுக்கு, குழந்தைகள் காட்டும்படி நேர்ந்து விடாதா?

சரி..இதெல்லாம் எப்போ முடியும்? சரி..இதெல்லாம் எதுக்கு? சரி..இதில்தான் என்ன?சரி..இதில்தான் எவ்வளவு!

verygood! எல்லாமே very good தான் !

கெறக்கம் தொடங்கியாச்சு. (ஐயே..வா?) புரட்டா கட்டி எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்பிட வர்றியா மக்கா?
'துன்னுட்டு' முடிஞ்சா தொடர்வேன். உருண்டுட்டா நாளை.

***

பி.கு. (அ) இன்று
----------------------

உருண்டுட்டேன் போல. பிறகு தொடரக் காணோம். 'நிறைய அன்புடன்-பா.ராஜாராம்' என்பது கூட இல்லாமல் ஒரு கடிதம்.

பீட்டர் ஆக்சிடெண்டில் இறந்து போனான். சொல்லப் போனால் மறந்தும் போய் விட்டேன் பீட்டரை. எப்படி பீட்டர்? ஜோசப் அண்ணன் ஏன் அந்த வருடம் கூப்பிடக் காணோம்? கிறிஸ்துமஸ்க்கு இருதயராஜ் வீட்டிற்கும்தானே போயிருக்கிறேன். ஏன் எழுதல? விண்ணரசி எப்படி இருப்பாள் இப்போ? ஆல்ஃபிரட் சார் இப்போ எங்கே? காலச் சுழற்சியில் வரலாறுகள் மாறி விடுவது உண்டு. அப்படித்தான் மாறினேனா... m.c. விஸ்கியில் இருந்து நெப்போலியன் பிராந்திக்கு?

தெரியல.

- தொடரும்

***

30 comments:

நசரேயன் said...

ம்ம்ம்

ஓலை said...

நானும் தளபதி மாதிரி படிக்காம ம்ம்ம்ம் போடலாமா? படிச்சிட்டு வரேன்.

ஓலை said...

நல்ல பதிவு பா.ரா. (படிச்சாச்சு)

காமராஜ் said...

ஞாபகங்கள் அழகானவை,கடித ஞாபகங்கள் இனிப்பானவை.

CS. Mohan Kumar said...

//இப்போதைக்கு ஒரு பல்பு வாங்கிவிட முடியும். ஒவ்வொன்றாகத்தானே செய்ய முடியும் எதையும்?//

:)) Agmark Rajaram !

க ரா said...

மாம்ஸ் ! அழகான நினைவோடை... எம்.சி , நெப்ஸ் எல்லாம் ஒன்னுதான மாம்ஸ் :)

Kumky said...

அடேங்கப்பா....

இவ்வளவுக்கும் பாத்திரம் ரொம்பாமையா....

பெரிய கிணறு உங்களது பா.ரா...

ரொம்ப கஷ்டம் நிறைக்கறது.....


திரும்ப திரும்ப வாசிக்கனும்...

எட்டாத வாழ்வையும்..கிட்டாத அன்பையும்....

என்னென்னவோ சொல்லனும்னு தோனுறது...ஒரு ஓரமா போயி யாருக்கும் தெரியாம கண்ண கசக்கி விட்ட கண்ணீருல கரைஞ்ச மஹா கல்யாணமாட்டம் ஆகிப்போகுது காலம்....

சிநேகிதன் அக்பர் said...

//இந்த ஜூன் ஏழு வந்தால் பதினெட்டு வருடம் முடிகிறது இக் கடிதம் எழுதி. மஹாவிற்கு ஆறு வயது அப்போ. 'ஆறு மாதமாக' இருக்கிறாள் மஹா இப்போ. என்னக் கொடும சார் இது?
//

வாழ்த்துக்கள் அண்ணே.

இது சந்தோசக்கொடுமை.அல்லது கடுமையான சந்தோசத்துல இருக்கீங்க போல.

நீங்க நிறைய சம்பாதிச்சி வச்சிருக்கிங்க பார்க்க பொறாமையா இருக்கு.

Ashok D said...

அன்புள்ள சித்தப்ஸ்

சந்தோசமா இருக்கனும்.. சும்மா நெகிழ்ச்சியா எழுதி மனச பாராமாக்கிட கூடாது... அப்புறம் நாங்களும் உங்கள படிச்சு ரொம்ப நல்லவங்களா மாறிட்டா இந்த ஒலகத்த யாரு காப்பாத்தறது.. :)

இப்படிக்கி(என்றும் அன்புடன்னு போடனுமோ)

மகன்ஸ்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கடிதங்களில் உறைந்து கிடக்கிறது காலங்களின் சாயம் தோய்த்த அழியா ஓவியங்கள்!

காற்றில் பரவிய சுகந்தமாய் அணைந்த பின்னும் நினைவூட்டும் அமர நினைவுகள்தான் நம்மை முன்னே தள்ளிச் செல்கின்றன பா.ரா.

இரசிகை said...

ada.....ponga rajaram sir yennennavo ninaikku varuthu.

santhosham....

vaazhthukal...:)

மணிஜி said...

...................................................................................................................................................................


இப்படிக்கு ....

மணிஜி

சுசி said...

அப்பப்பப்பா.. வரம் வாங்கி வந்தவங்க நீங்களும் ப்ரபாவும்..

நானும் என் நண்பியும் இப்படித்தான் எழுதிட்டு இருந்தோம்.. இப்போ ஃபோன்லவே பேச்சு முடிஞ்சு போய்டுறதாலை அந்த வழக்கம் போய்டிச்சு.. :((

எங்களோட கடிதங்களில என்னது போரோடும், அவளது சுனாமியோடும் போச்சு :((((

அன்புடன் அருணா said...

மஹாவுக்குப் பூங்கொத்து!!

ராகவன் said...

அன்பு பாரா,

எதையுமே பத்திரப்படுத்த தெரியலை...பாரா எனக்கு. மனுஷங்களையும், மனசுகளையும்... எங்கே தூக்கி வாரி கொட்டிட்டேன்... வரிஞ்சு, வரிஞ்சு எழுதிய காகிதங்கள் எல்லாம் எங்கே போச்சு? என்று குட்ட குட்ட எதுவுமே நினைவுக்கு வரலை...

இது போல வாய்க்க என்ன செய்றது பாரா? நானும் ஒரு போத்தல் எம்சி விட்டுட்டு வானத்த பார்த்துக் கிடக்கவா... உருளவா பிரளவா... ஆனாலும் ஒட்டுறது தாம்லே ஒட்டும்னு... ஏதோ அசிரிரீ கேக்கு...

என்ன ஒரு எழுத்து பாரா... இது... கடிதங்கள், இது போல பதிவா போடுறதுக்கு முன்னால, ப்ரபாவிடம் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்...மாதவராஜ் சொல்றது போல மனுஷா மனுஷா...

அன்புடன்
ராகவன்

சத்ரியன் said...

நான் பிறகு வாரேன் மாமா.

ரிஷபன் said...

அந்த நாள் கடிதங்களைப் பத்திரப்படுத்தி பரணில் வைத்திருக்கிறேன்.. முன்பு அடிக்கடி எடுத்துப் படிப்பேன். இப்போது ஏனோ எடுக்க முடியாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.. உங்க்கள் கடிதங்கள் பார்க்க என் மனம் பரணுக்கு தாவி விட்டது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்னக் கொடும சார் இது?//
நல்ல விஷயம் தானே?
'அன்றும் இன்றும்' போல் மாறி மாறி சொல்லி இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது

ஈரோடு கதிர் said...

இன்னிக்குத்தான் ஒரு இன்லேண்ட் லெட்டர் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்!

நினைவுகள் அழகு!

:)

sakthi said...

ப்ரபா மேம் என்னோட தோழியும் கூட என்பதை நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கு பா ரா அண்ணா

அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி ::)))

sakthi said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடணும் போல இருக்கா????

சத்ரியன் said...

இன்னைக்கு நேரம் கிடைச்சது மாமா. படிச்சேன். கடிதங்கள், கடிதங்கள்தான் மாமா.

உங்க வரலாறு மாறின (எம்.சி டு நெப்) கதைதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு மாமா.

நிலாமகள் said...

அன்பின் பா.ரா. அண்ணா...

கடிதங்கள் எழுதுபவர்க்கும் எழுதப்படுபவர்க்குமான ஏகாந்தம் எனினும், மு. வ., நேரு, வண்ணதாசன் கடிதங்களின் பொக்கிஷ வரிசையில் சேர்ந்து கொள்வதென்பதென்ன சாதாரண விஷயமா? அசாதாரணங்கள் நிறைந்த அற்புத மனிதராவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நெகிழ்த்தி நெகிழ்த்தி கரைத்து காணாமல் செய்து விடுங்கள் சகோ எங்களை...

பா.ராஜாராம் said...

நன்றி நசர்!

சேது நன்றி!

நன்றி காமு!

நன்றி மோகன்!

மாப்ஸ் இரா, நன்றி!

நன்றி தோழர்!

அக்பர், நன்றி!

என்றும் அன்புடன் d.r.அசோக், நன்றி!

ரொம்ப நன்றி சுந்தர்ஜி!

அடப் போங்க ரசிகை. சும்மா வாழ்த்து மட்டும் சொல்லிக்கிட்டு. ஒங்களோடு டூ. நன்றியெல்லாம் இல்லை.

------------மணிஜி!

சுசி மக்கா, //எங்களோட கடிதங்களில என்னது போரோடும், அவளது சுனாமியோடும் போச்சு// எதுவுமே போகாதுன்னு தோணுது சுசி.. போகும். ஆனா போகாது. இங்க ஸ்மைலி போட விருப்பம் சுசி. சரி. நன்றி!

மஹாட்ட சொல்லிட்டேன். நன்றி டீச்சர்!

ராகவன், //இது போல பதிவா போடுறதுக்கு முன்னால, ப்ரபாவிடம் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்// இல்லை ராகவன். சமீபமா ப்ரபாதான் என் பதிவுகளின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பாக்குறா. அப்படித்தான் இந்தப் பதிவையும் அனுப்பினேன். திருத்தி அனுப்பினாள். (ஸ்பெல்லிங் மிஸ்டேக்சை மட்டும்) நன்றி ராகவன்!

மாப்பு சத்ரி நன்றி! :-)

நன்றி ரிஷபன்!

நன்றி நாய்க்குட்டி மனசு!

கதிர், நன்றி!

ப்ரபா மேம்? சக்தி, கோபப்படப் போறா ப்ரபா. :-) (ப்ரபா, ஓவர் பாஸ் இந்த சக்தி) என்றாலும் நன்றி மேம் சக்தி! :-)

மாப்பு சத்ரி, :-))

சகோ நிலாமகள், ரொம்ப நன்றி!

Anonymous said...

பாரா ,கடிதங்கள் மசியிநாலா எழுதப்பட்டன?மனசினால் அல்லவா ?காலம் தின்றது கடிதங்களை மட்டுமல்ல,அதனோடான ஈரமான வாழ்க்கையையும் அல்லவா ?

பா.ராஜாராம் said...

பனி, (என் அழைப்பு சரிதானா?) நன்றி!

Anonymous said...

பாரா , சரிதான்.நலமா ?

இரசிகை said...

vilaiyaattuk kooda sandai podaatheenga rajaram sir...

yen kooda pazham vidungalen......plz

இரசிகை said...

nantrilaam venaam......:)

vaangannu mattum sonna pothum.
ennoda vaazhthai accept pannikkittu.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கேன் இந்து. நீங்க நலமா? மெயில் செய்றேன். நன்றி!

ரசிகை இப்பதான் உங்க கமண்ட் பார்த்தேன். பழம் விடனும்னா பூட்டான்லருந்து ஒரு லாட்டரி டிக்கட் வாங்கிட்டு வாங்க. 007- ல முடியுற நம்பரா இருக்கட்டும். நன்றி மக்கா! :-)