Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, August 1, 2009

ஐவரானோம்...



காலங்களுக்கு பிறகு மீண்டும் குமார்ஜியிடமிருந்து முதல் கடிதம் வந்திருந்தது. இதைவிட இந்த நண்பர்கள் தினத்தில் வேறு எந்த கருமாந்திரத்தை நான் பதிவு செய்துவிட இயலும்.
------------------------------------------------------------
அன்புள்ள ராஜாராம்...நலம்தானே.

திடீரென சுந்தர் மூலமாக உன் இருப்பிடம் தெரிந்து தொலை பேசியில் உன்னை தொடர்பு கொண்ட அந்த வினாடி அற்புதமானது. எப்போதாவதுதான் இது போன்ற சாத்தியங்கள் நிகழும், நம்மிடமிருக்கும் கடைசி நூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்குள் சம்பளம் வந்து விடுவது போல.

சரியாக சொன்னால் பதினாலு வருடங்களுக்கு முன் நாம் செந்தமிழ் நகர், சிவகங்கையில் சந்தித்ததும், லதா மற்றும் குழந்தைகளுடன் (நீ வரவில்லை) ஒரு சினிமா பார்த்ததும், நேற்று போல் இருக்கிறது. அப்போது அரவிந்த் குட்டி பையன், சசி போல. கால நகர்த்தலில் நாம் எங்கெங்கோ சென்று, எப்படி எப்படியோ வாழ்வை இறந்து கொண்டிருந்தாலும், இரந்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் நாம் அப்படியே திருந்செந்தூர் நாழி கிணற்று தண்ணீர் போலத்தான் இருந்திருக்கிறோம்.

வேறு என்ன... நிறைய பேச வேண்டியுள்ளது ... அல்ல... எழுத வேண்டியுள்ளது. நான் எதையுமே எழுதுவதில்லை. எழதிய இரண்டு கவிதைகளையும் (அரவிந்த்...ஆர்த்தி) வாசித்து கொண்டிருக்கவே வாழ்க்கை சரியாயிருக்கிறது.

நீ எப்படியிருக்கிறாய்.... L.I.C. agent வேலை என்னாச்சு? எது உன்னை வளைகுடா நாடு வரையில் வளைகாப்பு வைத்து அழைத்து சென்றது?... மகாலெட்சுமி என்ன படித்தாள்... எப்படியிருக்கிறாள்... சசிக்கு என்ன உடம்பு... (தெய்வா சொன்னான்) லதாவுக்கு என்ன...
நீ எவ்வளவு நாளாய் அங்கேயிருக்கிறாய்... எப்பெப்போ வந்து போனாய்... தினம் வீட்டிற்கு பேசுவாயா... உன் தொழில் என்ன... வாழ்க்கையின் துரத்தல்கள் பற்றி என்னை விட மிகவும் அழகாக நீ எழுதுவாய். நிறைய கேள்விகள்தான் தற்போது இருக்கின்றன. எனக்கு ஈ.மெயில், பிளாக்ஸ்பாட் எல்லாம் தெரியாது. தெரிந்தது சிறிது எழுதவும் நிறைய படிக்கவும் மட்டும்தான். அந்த சிறிய எழுத்துதான் உன்னையும் சுந்தரையும் பெற்று தந்தது. எனவே தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி அஞ்சு பக்கம் எழுது.

கடிதமோ, பிளாக்ஸ்பாட்டோ, ஈ.மெயிலோ கருத்துக்கள் ஊடகங்களிலில்லை மனங்களில் மருகிகொண்டிருக்கிறது.ஊடகங்கள் வேகம் தாங்கிகள் .மனதை விட சற்றுகுறைந்த வேகத்திலான...

எழுது.

என்றும் உன்
குமார்ஜி
அன்புடன்.
-----------------------------------------------------------

ன்னால், என் நண்பர்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை. என் நண்பர்கள் என்னை தேடுவது போல் நான் அவர்களை தேடவில்லையோ என்கிற குற்ற உணர்வு எப்பவும் என்னிடம் உண்டு. ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, இன்று ஞாயிற்று கிழமை என்பது போல் சாதாரணமாக தொடங்கியது குமார்ஜியின் பேனா நட்பு. கால கிரமத்துள், தெய்வா, சுந்தரா (ஜீவராம் சுந்தர். இப்ப, ஜ்யோவ்ராம் சுந்தர்) கோவை சிநேகிதி ப்ரபா என்று மணி மணியான நான்கு நண்பர்களை பெற்று தந்தது. வாரம் இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வரும்-ஒவ்வொருவரிடமிருந்தும்!.. கடிதம் வராத நாள் இல்லை எனலாம். குடும்பத்தில் எது நிகழ்ந்தாலும் மற்ற நால்வரும் அறிந்திருந்தார்கள். போலவே..அவர்களிடமிருந்தும்.

தினம் விடியும் நாள் போல தினம் தினம் விடிவதில்லைதானே. சசி என்கிற என் இரண்டாவது மகன், ஒரு நாள் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான். அவன் விழுந்த நொடி முதல் சற்றேறக்குறைய மூன்று வருடங்கள் முன்பு வரையில் சட்டியில் வைத்து சவ்வாக கரைக்க தொடங்கியது வாழ்வு என்னை-திரிந்தும் விடாது...நீர்த்தும் விடாது பதமான சவ்வாகா... எல்.ஐ.சி.முகவர் வருமானமே பிரதானம் அப்போது. அது எங்கள் நாலு பேரின் உணவுக்கு சரியாக இருந்தது. உறவுகள், நண்பர்கள் "கை" உதவி கொண்டு சசி எழும்பி உட்கார தொடங்கினான். பிள்ளையை காப்பாத்தியாச்சு என மூச்சு விட்டு கொள்ள கடவுள் என்னை அனுமதிக்க காணோம். திடீர், திடீர் என சசிக்கு வலிப்பு வர தொடங்கியது. தூக்கிக்கொண்டு மதுரை ஓடுவோம். முறை வைத்து கொண்டு நானும், லதாவும் தூங்கிய காலங்கள் எங்களிடம் இருந்தது. தொட்டியில் விழுந்த அதிர்ச்சியில் மூளையில் ஒரு நரம்பு சுருண்டு கொண்டு விட்டதாகவும், தொடர் சிகிச்சையில்தான் சரி செய்ய இயலும் என மருத்துவர்கள் சொன்னார்கள். சிகிச்சை தொடங்கியது. உணவிற்கு இணையாக அவன் மாத்திரைகள் சாப்பிட தொடங்கினான். மருத்துவ செலவிற்கான என் பண தேவைகள் என் சக்திக்கு மீறியதாகவே இருந்தது. சக்தியை விட என் சசி தேவையாக இருந்தான். சிவகங்கையின் சகல தெருக்களிலும் கடன்காரர்கள் தோன்றலானார்கள் எனக்கு. ஒரு தெருவில் நுழையும் முன்பாக, கடன்காரர்களின் வீடரிந்து மாற்று வழியில் அழைத்து செல்ல என் TVS50 படித்திருந்தது. முதலாளியின் அசிங்கம் அதற்கும் ஒவ்வாமையாக இருந்திருக்க வேணும். இப்பவும் கூட அந்த காலங்களை திரும்பி பார்க்க மனசுக்கு திராணி இல்லாமல்தான் இருக்கிறது.

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கிற ஒரு சாதாரண போராட்டத்தில் அசாதாரணமான நாலு நண்பர்கள் மனசமிழ்ந்து போயினர். "என்னாச்சுடா ஏன் பதிலே காணோம்" என்று வெகு காலம் வரையில் நண்பர்களிடமிருந்து கடிதம் வந்து கொண்டே இருந்தது கடிதத்தை எடுத்து வைத்திருக்கிற லதாவிற்க்கும், கடிதத்தை படிக்கிற எனக்கும் கண்கள் கலங்கும். உதறி வாழ்வை சந்திக்க தயாராவோம். பிறகு அவர்களை தேட நேரம் கிடைக்க காணோம் எனக்கு. ஓட்டமும் நடையும்... ஓட்டமும் நடையுமாக நான் சவுதி அடைய நேரிட்டது. இதோ...சசி தத்தி தத்தி ஒன்பதாம் வகுப்பு வரையில் வந்து, ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறான். ஜீவ மரண போராட்டத்தில் ஜெயித்திருக்கிரானே... யாருக்கு வேணும் அவன் வகுப்பு தோல்வி?.. மகள் திருமணத்திற்கு நிற்கிறாள்.

ப்படியான ஒரு தருணத்தில், எப்பவோ முகர்ந்த என் எழுத்து வாசனை கொண்டு சுந்தரா என்னை தேடி அடைந்தான். சுந்தர் மூலமாக, குமாரும், தெய்வாவும்! இன்னும் ப்ரபாவை மட்டும் காணோம்... ப்ரபா.. .மக்கா... எங்கிருக்கிறாய்?.. குழந்தைகள் உண்டா.. கணவர் பெயர் என்ன... சீக்கிரம் நீயும் வாடா...பிட்டுக்கள் வைக்கிற தேங்காய் பூ வாசனை மாதிரி என் வாழ்வு அவித்த வாசனையை நீயும் உணர்ந்து ஏற்றுக்கொள். மீதியை வரும் காலங்களில் பார்க்கலாம்.

அன்புடன்,
பா.ராஜாராம்

குமார்ஜி எழுதியனுப்பிய கவிதைகள்:

பழைய கவிதை ஒன்று

முக்கியம்
ப்படித்தான் இருக்க வேண்டும்
என்று எதுவும் இல்லை.
எப்படியும் இருக்கலாம்
என்றும்
எல்லாமும் இல்லை.
எப்படியும் இருக்க வேண்டும்.
இருத்தல் என்பது அவ்வளவு
முக்கியம்.
முக்கியம் என்பது
இருத்தல் மட்டும் தானா?

சுந்தருக்கு பிடித்த ஒரு பழைய...
வனை நகர்த்தி
தானும் நகரும்
சப்பரத்தெய்வம் .

புதிது (உனக்காக)
நாமாக எதையும் தேர்ந்தெடுப்பதில்லை.
நாம் தேர்ந்தெடுக்க பட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்கும். எப்பொழுதும். எப்போதாவதும்.
பயனற்று போகின்றன
நிறைய பயன்கள்.