Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, January 30, 2011

காதல் படிக்கட்டுகள்

இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டது எனக்கு. அவளுக்கும்தான். எப்போதாவது 'கல்யாணம் கார்த்தி' களில் பார்த்துக் கொள்ளவென கிடைத்துக் கொண்டிருக்கிறாள்.

"அக்கா வரலையா மாமா?" என்கிறாள். அவுகளுக்கு வயல்ல வேலைன்னு வரலை" என்கிறாள். சுண்டு விரலை பிடித்து வருகிற பெரியவளை தலை தடவி பெயர் சொல்லி அழைக்கிறாள். தோளில் சாய்ந்து, வர முரண்டுகிற சின்னவனை கன்னத்தை நிமிண்டி தன்னை " சித்திடா" என்று அறிமுகமாகிக் கொள்கிறாள். இருக்கிறமாதிரி இருந்து கொண்டே ..இல்லாமல் ஆனதை சொல்கிறாள். எனக்கும், இதுகளுக்கும், ஏன் தனக்கும் கூட!

வேறு வேறு மாதிரியாகி விட்டது எல்லாம். ஆயினும் அவர்களை நான் அவள் என்று நினைக்கவும் தீர்மானிக்கவும்தான் ப்ரியமாக இருக்கிறது. எத்தனையோ 'வாங்கி வந்த வரங்'களை எத்தனை வருடம் கழிந்தாலும் மாற்ற முடியாது. மாற்றவும் பிடிக்காது!

ஒரு திருமண நாளும் மற்ற 'காரிய' நாட்களும் ஒரு நாளுக்கான அவகாசமாக இருப்பது போதாமல் இருக்கிறது. விசேஷ நாளுக்கு முந்திய நாள் வந்து, கழிந்த பிந்திய நாள் போகப் பிடித்திருக்கிறது. உறவுகள் சூழ வாழவென கிடைக்கிற 'மூச்சாரல்' மட்டும்தான் காரணமா?

எல்லாம்தான்! எதை இல்லை என்று சொல்லிவிட முடியும்?

இப்போதெல்லாம் மிக கூட்ட நெரிசலான முகங்களிடையே இருந்துதான் அவளின் முகத்தை பொறுக்கி எடுக்க முடிகிறது என்னால். ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளில், சினிமா இடைவெளியில், தனியான நடையில், அயர்ச்சி தெரியாதிருக்கவென அவளின் மின்னொளி வீசும் கண்ணை, சிரிக்காமல் சிரிக்கிற முகத்தை, தேடி அடைகிறது உண்டுதான் நான்.

மூன்று நான்கு வருடத்தின் முந்தியதொரு நாள்...

உறவுப் பையனொருவனின் திருமண நாள் அது. அவளுடைய அவர் இன்றியும் என்னுடைய இவள் இன்றியும் போயிருந்திருக்க நேர்ந்தது- எப்பவும் போல்! (உறவினர்கள் எனக்கும் அவளுக்குமான உறவினர்கள்தானே? இவளுக்கும், அவருக்குமான உறவினர்களா என்ன?)

முந்திய விசேஷ நாட்களில் பார்த்தது போலெல்லாம் இல்லை. குழந்தைகள் வேறு வளர்ந்து வருகிறார்கள் இல்லையா? மற்ற எல்லா உறவினர்களைப் போலவே அவளும் நானும் ஆகிக் கொண்டிருந்தோம். எதையெதையெல்லாமோ கருதி எது எதுவெல்லாமாகவோ ஆகிக் கொண்டிருக்கிற எத்தனையோ பேர் போல.

திருமணமெல்லாம் முடிந்து புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புகைப் படத்துக்காக நின்று கொண்டிருந்தவள் நினைத்துக் கொண்டாற்போல் ஓடோடி வந்து என் சின்னவனை அள்ளியெடுத்து, ஓடோடிப் போய் மீண்டும் அந்த ' குரூப் போட்டா'வுக்காக நின்று கொண்டாள்.

நைந்த பலவீனமான இழைகளை முட்ட அறுந்துவிடாதபடிக்கான நெய்தல் அது!

அப்புறம், அன்றைய இரவு...

என்னுடைய மூத்தவள், அவளுடைய மூத்தவளுடனும், மற்ற சேக்காளிகளுடனும் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாள். விடிந்தால் 'அவரவர் வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு' என்று புறப்பட்டாக வேணும். அடுத்தது யார் வீட்டுத் திருமணமோ? யார் வீட்டுக் காரியமோ?

சின்னவனை தூக்கிக் கொண்டு, வாசலில் இருந்த திருமணக் கொட்டகை தாண்டி, விரிந்த வேம்பின் கரிய நிழலில், சாய்ந்து கிடக்கும் மாட்டு வண்டியின் முகட்டுக் கட்டையில் வந்து அமர்ந்து கொள்கிறேன்.

வாசலுக்கு வருகிறாள் அவள். திசையெங்கும் விரிந்து பரவிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். இடுப்பில் இருக்கிற அவளின் சின்னவனுக்கு ஊட்டியபடியும், அவனுடனே பேசியபடியும் அசங்கி, அசங்கி வந்து கொண்டிருக்கிறாள். வருவாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறதின் நீட்சியில்,

"மாமாவா?" என்கிறாள், நெருங்கி.

"இவனை சாப்பிட வைக்கிறதுக்குள் போதும் போதுமுன்னு ஆயிரும்" என்கிறாள் தொடர்ந்தாற்போல்... எப்போதுமே இப்படித்தான் அவள்!.. எது ஒன்றையும் தொடங்க சிரமப் பட்டவள் இல்லை.

பேசிக் கொண்டே ஊட்டிக் கொண்டிருக்கிறாள்- மடியில் இருக்கிற என்னுடைய இவனுக்கும், இடுப்பில் இருக்கிற அவளுடைய அவனுக்கும். பேச எனக்கொன்றுமில்லை. கேட்க நிறைய இடம் இருக்கிற இடத்தில், பேச என்ன இருக்கிறது? அட, பேசித்தான் என்ன?

"சந்தோசமா இருக்கிறீர்களா மாமா?"

நேரடியான எந்தக் கேள்வியும் எனக்கு தூக்கிவாரிப் போடக் கூடியதானது. குரல் கட்டி, ஆம் என்றோ இல்லை என்றோ அல்லது இரண்டுமில்லாத ஒரு குரலிலோ தோய்ந்து பலவீனப் படுகிறேன். மடியில் இருக்கிற குழந்தையின் மென் மயிரை முகர்ந்தபடி கீழே குனிந்திருக்கிறேன். பேச்சரவமற்ற தீவிர அமைதி...

சோற்றீரத்துடைய கை கொண்டு என்னை நிமிர்த்துகிறாள் அவள்.

"நான் சந்தோஷமா இருக்கிறேன் மாமா" துருதுருவெனும் கருமை மின்னும் கண்களுடனும், சிரிக்காமல் சிரிக்கும் முகத்துடனும்.

குழந்தைகளிடமிருந்து மீந்த அந்த கடைசிச் சோற்று உருண்டையை எனக்கு ஊட்ட நீட்டுகிறாள்.

வாங்கிக் கொள்கிறேன் நான்.

போய்க் கொண்டிருப்பவளின் இடுப்பிலிருந்த குழந்தை என்னை திரும்பிப் பார்த்தபடி போய்க் கொண்டிருக்கிறது

பி. கு.

இப்பொழுதெல்லாம் திருமணத்திற்கு, காரியத்திற்கு அவளுடைய அவர் மட்டும் பார்க்க கிடைக்கிறார். நான் இவளையும் அழைத்து செல்ல தீர்மானித்திருக்கிறேன்.

--நன்றி 1997' பிப்ரவரி, ஜூனியர் விகடன்!


***

1997' பிப்ரவரி ஜூனியர் விகடனில் பிரசுரமான என் முதல் பத்தி எழுத்து இது. வழக்கம் போல இதையும் தொலைத்திருந்தேன்.. சுகுணா நண்பரான பிறகு, இதை விகடன் அலுவலகத்திலிருந்து தேடி தர இயலுமா சுகுணா என்று கேட்டிருந்தேன். 2000-மாவது வருடத்தில் இருந்துதான் விகடன் கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது என்றும், வருடம் நினைவில் இருக்கா? என்றும் கேட்டிருந்தார்.

எனக்கு வருடம் நினைவில் இல்லை. பிறகு சுகுணாவிற்கு ஒரு நினைவூட்டல் மெயில் செய்திருந்தேன். இதை செய்திருக்க வேணாம் என்பதை பிறகுதான் உணர்ந்தேன். ஏனெனில், சுகுணா இப்படி ஒரு மெயில் செய்து, பதில் நினைவூட்டல் செய்திருந்தார்.

"முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவசியம் வாங்கி அனுப்புகிறேன். ஆனால் இப்போது உங்களுக்கு படிக்கட்டுகளில் இருந்து இறங்கும் வயது ((- "

நல்லாரும் ஓய் என கப்சிப் ஆகி விட்டேன். நாம் சும்மாருந்தாலும், இருக்க அனுமதிக்க மாட்டார்கள் நம் நண்பர்களும் இந்த காதலும்!.. இல்லையா? இந்த பயணத்தில், நண்பர் ரவி, இதை அவர் கோப்பில் இருப்பதாக கூறி தந்து உதவினார். சற்று முன்பு இவர் இதை செய்திருக்கலாம். சுகுணாவிடம் இவ்வளவு பேச்சு வாங்கியிருந்திருக்க வேணாம் என நினைத்துக் கொண்டேன்.

மூன்று காரணங்களுக்காக இதை தொடர் பதிவாக செய்ய விருப்பம். ஒன்று, படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதில் குதூகலித்து மகிழ்ந்த சுகுனாவிற்காக. இரண்டு, எனக்கும் மனைவிக்குமான தூரம் சற்றேறக்குறைய 4000 கி. மீ. இருப்பது. மூன்று, இன்னும் இரண்டு வார தூரமே இருக்கிற இந்த வருட காதலர் தினத்துக்காக!

இந்த தொடர் பதிவிற்காக ஒருவர் ஐந்து நண்பர்களை மட்டுமே அழைக்க வேணும் என்கிற ஒரே ஒரு ரூல் மட்டும் வச்சுக்கலாம். மற்ற நண்பர்களை, மிச்ச நண்பர்களுக்காக விட்டுத் தரலாம். சரியா நண்பர்களே?..

அப்படி, நான் இந்த ஐந்து பேரை அழைக்க விரும்புகிறேன்.

1. அனுஜன்யா

எவ்வளவு நாள் ஆச்சு சுவராசியம் ததும்பும் இவரின் எழுத்து வாசித்து.

2. மணிஜி.

காவன்னா என்கிற அட்சரமே காதலுக்குதான் என்கிற நண்பன்! பிறகு நீர் இல்லாமலா ஓய்!

3. செ. சரவனக்குமார்.

சும்மாவே ஆடுவீர். சலங்கைய வேறு கட்டி விட்டால் கேட்கவா வேணும் என அக்பர்ஜி ஒரு பின்னூடம் இட்டார் இவர் தளத்தில். சும்மா,..ஜல்..ஜல்..ஜல்..

4. அக்பர்ஜி

அதே சலங்கை பார்ட்டிதான்! சலங்கைகளுக்கு வேறு வேறு ஜல்ஜல்- ஆ இருக்கிறது?

5. சமுத்ரா

சுவராசியமான பதிவராக இருக்கிறார். இவரை, இதையும் பேச வைத்து கேட்க விருப்பம்.

***

இதென்ன,.. பெண் பதிவர்கள் இல்லையா என்கிற கேள்விதானே? விருப்பம் உள்ளவர்கள் தொடரட்டும்! அழைக்கிற நண்பர்கள் அவர்களிடம் முன் அனுமதி பெறுவது நலம். எல்லாவற்றுக்கும் ஏன் என்றெல்லாம் என் மகள் மாதிரி கேள்வி கேட்காதீர்கள். அவளுக்கு சொல்கிற பதில்தான் உங்களுக்கும்.

"எல்லா ஏன்களுக்கும் என்னிடம் பதில் இல்லை!"

***