(ஆனந்தவிகடனில் பிரசுரமான எனது படைப்பு)
முன்பொரு சமயம்
சரசு அத்தை கண் பொத்துவாள்
எல்லோரும் ஒளிந்துகொள்வோம்
இவள் உட்பட...
" பிச்சிபூவே பிச்சிபூவே மெல்ல வந்து கிள்ளி போ"
பிச்சிபூவும் கிள்ளாமல் கிள்ளிப்போகும் !
அது என்ன வகை என்று
அறியாது கழியும் காலாண்டு விடுமுறை.
குளியலறை, சமையலறை, சாமியறை,
மாடிப்படி தாழ்வாரம், என
எவ்வளவோ இருக்கிறது
இவளை சுவாசித்தபடி ஒளிந்த இடங்கள்!
அது என்ன வகை என்று
அறிந்தே கழியும் அரையாண்டு விடுமுறை.
முழு ஆண்டு விடுமுறை
அறுபது நாட்கள்
அத்தையின் வீடே
ஆடித்தான் அடங்கும்
பிறகுக்கு பிறகு
ஒரு பிறகு வந்தது...
அதில்...
அப்பாவும் மாமாவும் முறுக்கி கொண்டார்கள்.
அம்மாவும் அத்தையும் பேசுவதே இல்லை
எங்காவது, எப்பொழுதாவது
அத்தையை காண்கையில்,
சேலைத்தலைப்பை இழுத்துபோர்த்தியபடி
"வாங்க தம்பி" என்கிறாள்
சரசு அத்தை.
என்று நான் அத்தைக்கு
தம்பியானேனோ
அன்று தொலைந்தது
எல்லாம்!

