Tuesday, March 30, 2010

கவிஞனில் திரியும் மனிதன்


(Picture by cc license Thanks runran)

திட்டமிடலைப் போன்றே
சோர்வேற்படுத்துகிறது
தொலைத்த பொருளின் நினைவு.

துக்கம் பிதுக்கி
திகைக்க வைக்கிறது
பின் மதியத்தில் கூவும்
ஒற்றைக் குயில்.

மலைக்க வைக்கிறது
விளக்கு பொருத்தி, திரியையும் தூண்டி
எண்ணையில் மூழ்கி
காத்திருக்கும் தீக்குச்சி.

"பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என
பேருந்தில் பாடி வருகிற
கூலிங்கிளாஸ் காரரின் குரல் மட்டும்
ஏனோ பழகி விடுகிறது.

Sunday, March 28, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 3


(Picture by cc license Thanks mckaysavage's)

தாத்தா பெயர் கொண்ட தம்பியை
சின்னவனே என்றழைக்கிற பாட்டி
என்னை வடுவா என்பாள்.

தண்ணி தர
மாத்திரை எடுக்க
கால் அமுக்க
கதை சொல்ல
எல்லாத்துக்குமே
சின்னவனேதான்.

தாத்தாவின் கதை சொல்லிக் கொண்டிருந்த
நாளொன்றில் பாட்டியிடம் கேட்டான்
தம்பியும்,
"தாத்தா ஓடிப் போயிட்டாரா பாட்டி?"

பிறகெப்போதும்
கதை சொல்லி பார்க்கலை பாட்டியை.

தம்பியைக் கூட
சின்ன வடுவா என்றழைத்தாள்.