Saturday, April 2, 2011

மாற்றுப் பாதைக்கான கை காட்டி



தனிமை படுத்தப்பட்ட
மிக புராதன குரலோசையில்
விழித்துக் கொள்கின்றன புலன்கள்

கிளி கொஞ்சிய குரலுடனும்
பதை பதைப்புடனும்
இழுத்துச் செல்கின்றன தெருக்கள்.

பசும் மரங்களிடை
ஆழ் சுழியிடை
பழகிய வழியிடை

ஓட்டம் காட்டி சற்று
கை பிடித்து சற்று
பின் தங்கி சற்று

நடு நடுங்கி, ஒடுங்கி
சாகப் பிடித்தும்
பிழைத்துக் கொள்ளும்படியே
வாய்த்து விடுகிறது.

இதையெதையும் அறியாது,

பார்க்காமல் போகச் சொல்லி
இந்த முறையும் இறைஞ்சுகிறது
அக்குரலுக்கான பார்வை.

----கல்கி (இந்த வாரம்)
நன்றி கதிர்பாரதி, கல்கி

Thursday, March 24, 2011

நல்லவங்களுக்கான சோதனை


(Picture by cc licence, Thanks OneVillage Initiative)

நடப்பதுபோல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க’
என்றிவள் வந்து சொன்னாள்.

வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்

'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!