Friday, July 17, 2009

காலத்தின் வாசனை

"டேய்...மாப்ள..."

குரல் கேட்டு அதிர்ந்து திரும்பினேன். கையில் கிளாசுடனும், முனை கிள்ள தயாராய் இருந்த தண்ணி பாக்கெட்டுடனும், கண்களில் தளும்பிய நீருடனும், சொல்லொண்ணா புன்னகையுடனும் நின்று கொண்டிருந்தான் அவன். மனசிற்கு பிடித்த எவ்வளோவோ இடங்களில் இந்த திருப்பதி ஓய்ன்சும் ஒன்று. தற்சமயம், டாஸ்மாக் கடைகள் என்று மாறி இருந்தாலும், பார்களை எல்லாம் பழைய அடையாளங்களுடன்தான் அழைக்க நேரிடுகிறது உள்ளூர் மனசுகளுக்கு!பிடிக்கிற இடங்களுக்கும், மனிதர்களுக்கும் காரணம் சொல்ல இயலாது. எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லைதான்.

அப்படியான ஒரு இடத்தில் இருந்து, பழைய வாசனை வீசும் ஒரு குரலும், முகமும், புன்னகையும்!...உள்ளிருந்த சாராயமா, வழக்கம் போலான என் ஞாபக குறைவா தெரியவில்லை. பார்த்தது போல் இருக்கிறது. ஆளை பிடிபடவில்லை. தயாரற்ற ஒரு நிலையில், அவன் தந்தது மாதிரியான ஒரு சிரிப்பை தர இயலாவிட்டாலும் சிரித்து,

"ஹலோ" என்றேன்... வேறு தோணாது.

"ஹலோவா.. வக்காளி மறந்திட்டில்ல" என்றான் என் நெஞ்சை தள்ளி.

தூக்கிவாரிபோட்டது. சற்று கூசினாலும், கயிறு வீசி சர சரவென மனசில் இறங்குகிற மனிதர்களை என்ன செய்துவிட முடியும், தவிப்போடும், இனி காட்ட இயலாத சூழலோடும், நானும்,

"டேய்...மாப்ள... அடையாளமே தெரியலைடா" என்று மார்போடு அணைத்து தோராயமாய் வலைக்குள் நுழைந்தேன். "வக்காளி...மறந்துட்டியோன்னு பயந்துட்டேன் மாப்ள..அப்பா இறந்ததுக்கு வந்திருந்தேண்டா. கல்யாணியும் வந்திருந்தாள். நீ சவுதியில் இருந்து கிளம்பிட்ட, இந்தா வர்ற, அந்தா வர்றன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. புள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வந்துருங்கன்னு சொல்லுச்சு. சரி அப்ப நீ கிளம்புன்னு பஸ் ஏத்தி அனுப்பிவிட்டேன். நல்ல கூட்டம் மாப்ள. காடு வரைக்கும் கூட்டத்தோடு வந்துட்டு, உன் கையை கூட பிடிக்க முடியாமல் போயிட்டேன். ரொம்ப பிடிச்சவுங்க இறப்புக்கு வர்ற மாதிரி கொடுமையான விஷயம் இல்லைடா மாப்ள"

கடவுளே!..என்றிருந்தாலும் காட்டிகொள்ளாமல்.."எத்தனை குழந்தைகள்டா மாப்ள?" என்றேன்.

"ரெண்டு பொம்பளை பிள்ளைகள்டா. மாமனார் பலசரக்கு கடையில்தான் நிக்கிறேன். மரியாதை குறைவுதான். வேறு போக்கிடம் இல்லை மாப்ள".

இவன் முகத்திலேயே குரலையும் வைத்திருந்தான். குரலுக்கேற்ப முகம் மாறுவது அவ்வளவு அழகாய் இருந்தது.

"பரமக்குடி வந்த வண்டியில, அப்பா காண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் பார்த்தேன். இந்தா, இந்த திருப்பதி ஓயின்சுலதான் அப்பாவை கடைசியாக பார்த்தது. ஏழெட்டு வருஷம் இருக்கும், ஆனாலும், முகம் மறக்கலை. டீ குடிச்சுட்டு வர்றேன்னு மாமனார்ட்ட சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து, புறப்புடு புள்ளைன்னு கல்யாணியையும் கூட்டிட்டு வந்தேன். சரி அதைவிடுசவுதி வாழ்க்கைல்லாம் எப்படிடா போகுது?”

"ம்...போகுது மாப்ள..."

ஏதோ தீர்மாணித்தவன் போல,"மாப்ள...எதுல வந்த?"என்று கேட்டான்.

"TVS-50 இருக்குடா"

"சரி அப்ப கட்டிங்கோட நிறுத்து. காலேஜ் கிரவுண்டு போய் மீதியை பேசுவோம். இரு, இந்த வாடகை சைக்கிளை விட்டுட்டு வந்திர்றேன்." என்று என்னை யோசிக்க விடாது போனான்.

எதிர்பாரா பொந்திற்குள் இருந்து, இவன் புறப்பட்டு வந்ததுபோல், அப்பா இறப்பிற்கு பிறகு, இழுத்து செல்லும் எந்த நதிக்குள்ளும் முகம் மேலே மலர்த்தியபடி நீரோட்டத்தோடு போய் கொண்டிருக்க எனக்கும் பிடித்திருந்தது. கல்லூரி மைதானம் வரையில் என்னென்னவோ பேசிக்கொண்டு வந்தான்.மைதானம் வந்ததும்,

"அந்த உதிய மரத்துல வண்டியை நிறுத்து" என்றான்.

விரும்பியோ,விரும்பாமலோ பிடித்த முதலாளி ஆகி இருந்தான் எனக்கு. வெயில் வேறு. தீபாவளி மதியத்தில் அருகில் தூங்குகிற மனைவி போல் இணக்கமாக இருந்தது. எவ்வளவு காலமாச்சு! இந்த மைதானத்தில் என் கால் படாத இடமே இல்லை என நான் யோசித்து கொண்டிருக்கும் போதே,

"பார்த்தியா, என்ன வாசைனைன்னு.... இந்த உதிய மர வாசனைக்காகவே, மாசம் ஒரு தடவையாவது இங்கு வந்துருவேன். பஸ் ஸ்டாண்டுல இறங்கி, வேலவன்னுல சைக்கிள் எடுத்து, திருப்பதி ஓயின்சுல ஒரு கட்டிங்கை போட்டுட்டு நேர இந்த உதிய மரம்தான்"

பேச்சு பேச்சாக இருந்தாலும், கை, மீதி குவளையை திறக்கவும், நீரை சரிக்கவும், ஊறுகாய், முறுக்கு பொட்டலங்களை பிரிக்கவுமாக இருந்தது.

"மீதி கட்டிங்கை இங்க போட்டேன்னா...பூரணமாயுரும்...இங்கதான் நீ ஓடிட்டு இருப்ப...அப்பா வாடகை சைக்கிளில் ஸ்டாண்டு போட்டு கேரியரில் உக்கார்ந்து இருப்பார்...உன் அப்பாதான்னு ரொம்ப நாள் வரையில் தெரியாதுடா. சுந்தர்தான் சொன்னான், ராஜா அப்பாடா அது, அவன் ப்ராக்டிஸ் செய்றதை பார்த்துக்கிட்டிருப்பார்ன்னு. வாடகை சைக்கிளில் உக்கார்ந்திருப்பவர்தானேன்னு, நானாதான் பேச்சு கொடுத்தேன். ராஜா கிளாஸ்மேட் தான் நானுமுன்னு...கை எடுத்து கும்பிட்டார்....ஆடி போயிட்டேன் அப்படியே. ஏழரை மணிக்குத்தான் பஸ்ஸு. அது வரையில் இப்படி உட்கார்ந்திருப்பேன் என்று தொடங்குச்சு. தினம் வருவாரு..தினம் பேசுவாரு... எனக்கும் அவருக்கும் பேச என்ன இருக்குண்ணே தோணாது. எனக்கும் ஏழரை வரையில் நேரம் போகணும்,அவருக்கும் உன்னை பார்த்துகிட்டே பேச ஒரு துணை மாதிரி இருக்கும்".

எனக்கு அரவம் தட்ட தொடங்கியது. கடைசி பெஞ்சில் சுந்தர் அருகில் உட்காந்திருப்பான். மனசின் ஆழத்தில் கிடந்த இவன் பெயரை மேலெழுப்பி கொண்டு வருவதில் தோற்று கொண்டே இருந்தேன்.

"நீ, sn, ஸ்ரீகண்டன் எல்லாம் ஒரு செட்டு. என்னோடல்லாம் அவ்வளவா பேச மாட்டீங்க. சுந்தர் மட்டும் உங்க செட்லயும் இருப்பான், என் செட்லயும் இருப்பான். என்ன அருமையான காலங்கள்டா மாப்ள. எவ்வளவு சந்தோசம். அம்மா சேலை வாசனை மாதிரி, இந்த உதிய மரத்து வாசனையும் மனசோடையே தங்கிப்போச்சு. தாயளி...சுந்தர் செத்ததை கூட யாரும் சொல்லலைய்டா நம்ம முத்து கிருஷ்ணன், இப்ப ரபீக் ராஜா லாரில டிரைவரா ஓட்றான்....பரமகுடியில எதார்த்தமா பார்த்தேன்....பத்து பதினஞ்சு நாள் ஆச்சு மாப்ளன்னான்....வீட்டுக்கு போய், கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு.....சுந்தர் கிளாஸ்மேட்... இப்பதான் தெரியுமுன்னு சொல்லிட்டு வந்தேன்."

காலத்தை தூக்கி மடியில் வைத்து கொண்டு படம், படமாக விரித்து காட்டி கொண்டிருந்தான். பரமக்குடியான் என்று இவனை கூப்பிடுவது வரையில் என் ஞாபகம் வலுபெற்று இருந்தது. இப்படியே இவன் போய் கொண்டிருந்தால் போதும். இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்புவதற்குள் இவன் பெயரை மீட்டெடுத்துவிட முடியும். உள்ளிருந்த சாராயம் பூ மாதிரி இளக்கிக்கொண்டிருந்தது ரெண்டு பேரையும்.

"மாப்ள...இரு...சரக்கு பத்தலை...வாங்கிட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டேன். "நானும் வரவாடா...?" என்றான் உதிய மரத்தை விட்டு வர மனசில்லாமல்.

"இல்லை மாப்ள இரு...ரெண்டு நிமிஷம்..." என்றபடி வண்டியை கிளப்பினேன். திரும்பி வருவதற்குள் இவன் பெயரை பிடித்து விட எனக்கும் தனிமை தேவையாக இருந்தது.

விரட்டிப்போகிற வண்ணத்து பூச்சி, விரல்களில் வண்ணத்தை ஈஷி, பூ பூவாய் நகர்ந்து கொண்டிருப்பது போல் இவனின் பெயரும் தட்டுப்பட்டு தட்டுப்பட்டு விட்டுப்போயிற்று. பேர் அவஸ்தையோடு திரும்பி வந்தேன். உதிய மரத்து வேரில் சாய்ந்தபடி, நெளிந்த சிரிப்பொன்றை தூரத்திலேயே வீசினான்.

"என்னடா பூரணமாயிட்ட போல" என்று சிரித்து அருகிலேயே உட்கார்ந்தேன்.

"போடு மாப்ள...எப்பவும் ஒரு குவாட்ட்டார்தான் நமக்கு கணக்கு...அதுவும் இங்கு வரும் போது மட்டும்தான்" என்றான்.

"அப்பாவை கடைசியில் திருப்பதி ஒயின்ஸில் பார்த்ததாக சொன்னியேடா" என்றேன், இவனை மேலும் நகர்த்த.

”ஆமாடா மாப்ள...ஏழெட்டு வருஷம் இருக்கும்...அப்பா மாதிரி ஆட்களை பார்ல பாக்கறதுக்கு கூச்சம். ஒளியவும் மனசில்லை, தண்ணிய வாங்கிட்டு அவர் எதிரிலேயே உட்கார்ந்தேன்." இங்கு அவன் எதிரில் இருந்த குவளையவும் முழுக்க ஒட்டுமொத்தமாக சரித்தான்...வார்த்தைகள் குழறி குழறி வர தொடங்கியது.

"எதில விட்டேன்?"

"அப்பா எதிரிலேயே உட்கார்ந்தாய்?"

"என்னை அடையாளம் தெரியலை அவருக்கு. அப்பான்னு கூப்பிட கூச்சம். ஐயா பாதி அடிக்கிறீங்கலான்னு கேட்டேன். அப்பா அப்படியேதான் இருந்தார். அதே கும்பிடு, வேணாம்ப்பு...சாப்பிடுங்கன்னாரு...ஒரு ரவுண்டு போனாதான் தைரியம் வந்துரும்ல்ல நமக்கு. அப்பா...நினைவிருக்கா என்னைன்னு கேட்டேன். இல்லேயப்பூ...வயசாயிருச்சுல்லன்னாரு. இன்னாருன்னு சொல்லி, உதிய மரத்தை சொன்னதும். நல்லா ஞாபகம் இருக்கு மாப்ள...ஆத்தீ..ஆத்தீ...ன்னு கையை பிடிச்சுகிட்டாரு. அப்ப நீ அவர் முகத்தை பார்த்திருக்கணும்டா. வேற எதுவுமே சொல்லலே திருப்பி திருப்பி அந்த ஆத்தீ ஆத்தீ தான். எனக்கு கண்ணுல்லாம் நெறஞ்சு போச்சு".

எனக்கும் கண்கள் நிறைந்து. அவன் அறியாமல் துடைத்து கொண்டேன். அசங்கினால் சம்பவம் உடை படுமோ என பயமாக இருந்தது.

"பேரனைப்போய் ஸ்கூல்ல பார்த்துட்டு வரும்போது அப்படியே கொஞ்சம் சாப்புட்டு போகலாமுன்னு வந்தேன்னாரு. பய சவுதியில இருக்கான் தெரியும்லப்பான்னு கேட்டாரு. தெரியும்பா..கேள்விபட்டேன்னு சொன்னேன். எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கீங்கண்ணு கேட்டேன். இல்லைப்பா, நானும் அம்மாவும், ஊருல கிராமத்துல இருக்கோம், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பக்கமுன்னு தம்பி டவுனுக்கு வந்துட்டான்...எங்க போய்ட்டான்...ரெண்டு கிலோ மீட்டர்...இந்தா ரெண்டு மிதியில வந்து பேரனை பார்த்துட்டேன். இந்த பய தான் காசுக்காக அம்புட்டு தூரத்துல கிடக்கான். பொம்பளை புள்ளையை வச்சுருக்கான், கரையேத்தட்டும், அப்புறம் எல்லாம் சரியா வந்துரும்ப்பான்னு பேசிக்கிட்டே வாடகை சைக்கிளை எடுத்தாரு...மாப்ள... அதே வசந்தி வாடகை சைக்கிள்.”

“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா..." என்று சற்றும் எதிர் பாராமல் வழியும் கண்ணீரை துடைத்த படியே....மூசு....மூசென்று மூச்சுவிட்டான்.

"மூணு வருசமா பரமகுடியான், பரமகுடியான்னு கூப்பிட்டு, கூப்பிட்டே....மூணு வருஷமும் என் பேரே எனக்கு மறந்து போச்சு...நீங்கல்லாம் என்னங்கடா மனுஷங்க... அப்பா, சுந்தர், கேன்டீன் ஜலாலுதீன் பாய் இந்த மூணு பேரும்தான் மனசு நெறஞ்சு பேர் சொல்லி கூப்பிடறது, போங்கடா நீங்களும் உங்க பரமக்குடியானும்.”

வார்த்தை தடித்திருந்தாலும் பிடித்திருந்தது. எழுந்து தடுமாறி. மண்ணை தட்டி நடக்க தொடங்கினான். நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணி "டேய்...வண்டியில ஏறுடா போகலாம்" என்றதுக்கு.

"போ...போ...போய்கிட்டே இரு..." நிமிடத்தில் காட்சி மாறிப்போனது. அழுகையும் பீரிடலுமாக கெஞ்ச கெஞ்ச, கேட்காமல் மெயின் ரோடு வந்து விட்டான். எனக்கு வண்டியை உருட்ட மூச்சு வாங்கியது.

"டேய்...வண்டியில ஏறு மாப்ள, பஸ் ஏத்தி விடுறேன்..."


"போ...மாப்ள...போ...போய்கிட்டே இரு..." என்று சொல்லி கொண்டே சற்றும் எதிர்பாராமல். ரெண்டு கைகளையும் விரித்து. எதிரில் வந்த பேருந்தை மறித்து, நின்ற பேருந்தில் ஏறியும் விட்டான்.

செய்ய ஏதுமின்றி,ஓட்டுனரை, "மன்னியுங்கள்" என்பதாக கை கூப்பினேன். அவரும் அப்பா மாதிரியான மனிதராக இருக்க வேணும். "பரவாயில்லை....நான் பார்த்துக்கிறேன்" என்று சைகையில் சிரித்தார். வண்டியை ஓரமாக சரித்து, ஓட்டுனர் ஜன்னலோரமாக வந்து, "பரமக்குடி வண்டியில் அவனை ஏற்றி விட வேணும்"என்று கேட்டு கொண்டேன்.

"தெரியும்..சண்முக அண்ணாச்சி மருமகன்தானே" என்று சிரித்தார்.

குனிந்து ஜன்னல் வழியாக இவனை தேடியபோது, கையை மேலே தூக்கி, "போ...போ..போய் கிட்டே இரு..." என்றான் உக்கிரம் மாறாமல்.

வீடு வந்து என் தடுமாற்றம் உணர்ந்த மகன், வண்டியை வாங்கி ஸ்டாண்டு போட்டு தந்தான். "வரும்போதே....தள்ளாடித்தான் வர்றது...சவுதியில் கிடைக்கலைங்கிறதுக்காக இப்படியா....வீடே தண்ணி நாத்தம்....போய் குளிச்சுட்டு வாங்க" என்று கதவு திறந்து தந்தாள் மனைவி.

குளிப்பதற்கு முன்பாக என் பீரோ திறந்து, துணிகளுக்கு அடியில் நியூஸ் பேப்பர் சுற்றியிருந்த அந்த புகை படம் எடுத்தேன். முகம் முகமாக இவனை தேடினேன்...இருந்தான்...அதே விரிந்த புன்னகையுடன்! மன்னர் துரைசிங்கம் நினைவு கலை கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவர்கள் இடமிருந்து வலமாக.....பெயர் பெயராக வாசித்து வந்ததில்...

"p. நடராஜன்!"

"டேய்.... மாப்ள...நடராஜா..."

என்று நான் பெயரை கூப்பிடுவதற்க்கும்...வெளிச்சத்திற்காக மகள் வந்து ஜன்னலை திறப்பதற்கும் சரியாக இருந்தது. மழை நின்ற பிறகு மரக்கிளைகளை உலுக்கி நனைவது போல் உதியமரத்து வாசனை சரம் சரமாக இறங்க தொடங்கியது!

51 comments:

நேசமித்ரன் said...

புல்லரிக்குது பா.ரா
மீதம் பின்னொரு பின்னூட்டத்தில்
-
எங்கையா இருந்தீங்க நீங்க எல்லாம் இவ்ளோ நாளா?

மனுநீதி said...

என்னமா எழுதுறீங்க சார். அப்படியே கதைகுள்ள கூட்டிட்டு போய்ட்டீங்க. தொடர்ந்து எழுதுங்கள் சார். கதையா இருந்தாலும் கவிதையா இருந்தாலும் உங்க நடை மற்றும் சிந்தனை ரொம்ப வித்தியாசமா இருக்கு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இத்தனை நாளும் உங்கள் கவிதைதான் படித்தேன். இது நான் படித்த உங்கள் முதல் கதை புல்லரிக்க வைத்து விட்டது. இதே போல் ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது. கடைசி வரைக்கும் அவரின் பெயர் எனக்குக் கண்டு பிடிக்கவே முடியாமல் போய் விட்டது பாருங்கோ!

anujanya said...

உங்கள என்ன செய்யலாம் ராஜா? இப்படி நெகிழ வைக்கிறீங்க. இதுக்கு மேல இப்ப எழுதும் மனநிலை இல்லை. எல்லாம் உங்களால்தான்.

இவ்வளவு நாள் என்னதான் செஞ்சீங்க. சரி விடுங்க. Better late than never.

அனுஜன்யா

கவிதாசிவகுமார் said...

பல்வேறு பரிமாணங்களில் பரிமளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.தாத்தாவைப் பற்றி படித்ததும் மனதைப் பிசைந்தது.எங்கே சென்றுவிட போகிறார்கள்? அரவமின்றி உருவமின்றி அருகிலேயே இருந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.இல்லையா சித்தப்பா...

அண்ணாதுரை சிவசாமி said...

டேய் ராஜா,
என்ன எழுதிறதுன்னு தெரியலடா.அருமையா இருக்குடா.ஒன்னு சொல்லனமுன்னா
கவிதை அற்புதம்ன்னா,உரைநடை அபாரம்.என்னடா பெரிய வைரமுத்து,சுஜாதா,மதன்,மேலாண்மை
பொன்னுசாமி?பலசரக்கு கடை மட்டும் நடத்தி கொண்டிருந்தால் மேலாண்மையை நமக்கு தெரிந்திருக்குமா?
அந்த சாதாரணமான மனிதரால் முடியும் போது 'Athletic Champion' ஆன உன்னால் நிச்சியம் முடியும்.
உன் அல்கோபார் சுல்தானுக்கு 'GOODBYE' சொல்லி விட்டு, பின்னூடங்களுக்கு 'நன்றி' என்ற ஒரு
வார்த்தையோடு நிறுத்திவிட்டு படைப்புகளுக்கு உன் நேரத்தைக் கொடு.சுஜாதாவுக்கு பின் உன் வார்த்தை
பிரவாகம் என்னை ஈர்த்திருக்கிறது.

Anonymous said...

இந்த கதைங்கற பட்டுத்துணியில ஒரு கத்திய ஒளிச்சுவச்சு சடார்னு நெஞ்சுல பாய்ச்சிட்டீங்க, இந்த ஒரு வரியில....

//“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா..." //

Kannan said...

உண்மையும் நேர்மையும் இருக்கும் எந்த படைப்பும் நெஞ்சை இறுக்கும்னு சொன்ன stella burce இன் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

அண்ணாதுரை சிவசாமி said...

நடராஜனின் கோபம் எதற்கென்று எனக்கு புரிந்தது.உனக்கு?

கவிதாசிவகுமார் said...

மிகவும் தத்ரூபமான நடை. நட்பு பற்றிய நெகிழ்வான வரைவு. தொடருங்கள் உங்களது இந்தப் பயணத்தையும்...

na.jothi said...

தொண்டையை அடைக்குதுண்ணே

ஹேமா said...

வணக்கம் பா.ரா.அருமையான கதை.ஒரு அவாவோடேயே கதை படித்து முடித்தேன்.
சிலசமயங்களில் நடக்கும் இயல்பான சம்பவமாய் அழகான வரிக்கோர்வைகளோடு எழுதியிருக்கிறீர்கள்.

மற்றும் முன்பக்கத்தில் இருந்த கவிதைகளும் படித்தேன்.பிடித்திருந்தது.இன்னும் வருவேன்.

பா.ராஜாராம் said...

நேசா,சிறுகதையில்(கதையல்ல என்றாலும்)
இது என் முதல் முயற்சி.என் மேல் கொண்டிருக்கும்
அன்பை மறந்த விமர்சனம்,உங்களை மாதிரியான
எழுதும் ஆட்களிடமிருந்து(கவனிக்கவும்:நண்பர் என குறிப்பிடவில்லை)
எனக்கு கிடைப்பது ஆக சிறந்தது.வேலை பளு இல்லாத
தருணங்களில் மீண்டும் வரவேணும்.நிதானமான விமர்சனத்துடன்...
அன்பு நேசா!

பா.ராஜாராம் said...

மிகுந்த அன்பும் நன்றியும் மனுநீதி...
ஆசுவாசமாக உங்கள் உள்ளத்தில் இருந்ததுக்கு வர
வேணும்.ஆசுவாசமாக வந்த பொறுமைக்கும்
அன்புக்கும்,உங்கள் கைகளை பிடித்து கொள்கிறேன்..

பா.ராஜாராம் said...

ஜெஸ்...
இது,நானும் படித்த என் முதல் கதையே.
நம்பிக்கை தருவது மற்றொருவகையான அன்பே.
அன்பிற்கு பேரன்பு ஜெஸ்!...

பா.ராஜாராம் said...

அன்புமிக்க அனு,
நீங்கள்,நேசன்,ஜெஸ்,எல்லோரும் உண்மையிலேயே
மிகுந்த நபிக்கையை தருகிறீர்கள்.மோதிர விரல் கொட்டுக்களை
நான் பத்திர படுத்த வேணும்.தொடர்ந்து தருகிற அன்பை தொடர்ந்தும்
தரவேணும்,அனு,அன்பு நிறைய!

பா.ராஜாராம் said...

ஆகட்டும்டா கவிதும்மா,
நம்பிக்கைதானே வாழ்க்கை,வலிமையும்!நீ சொல்வது போல்
தாத்தா கூடவே வரட்டும்..
நன்றிடா..

பா.ராஜாராம் said...

நன்றி சித்தப்பா,..
சிவகங்கை போனால்தான் உங்கள்
ராஜாவை தெரியும்தானே..ஆகவே
good bye வேண்டாம்.good boy-யாக
இங்கேயே இருக்கலாம் இப்போதைக்கு...
அன்பு சித்தப்பா!

பா.ராஜாராம் said...

வரணும் ஜெ,
உங்கள் சிறு புன்னகை என் அமைதிக்கான
விதையை வித்திடுகிறது!
நன்றியும் அன்பும் ஜெ..

பா.ராஜாராம் said...

அதே வணக்கமும் ஹேமா,
வணக்கம் சொல்கிற மனிதர்களுக்கு
வணக்கமாக "கும்பிடுகிற" அப்பாவை நினைவு
படுத்துகிறீர்கள்!நேரில் எனில், அப்பாவாக வாழ்திருக்காலாம்தான்
நொடி நேரம்..முதல் வருகை மிகுந்த கௌரவமான தருணம்!
நன்றியும் கூட!..

பா.ராஜாராம் said...

அன்புமிக்க அமிர்தம்...
தொடர் வருகையிலும்,உணர்வுபூர்வமான கருத்துக்களிலும்
மனதின் நான்கு மூலைகளிலும் நிரம்பியிருக்கிறீர்கள்...
சின்னதாய் நன்றி என சொல்லிவிட முடியாதுதான்...

கதிரவன் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ராஜாராம்

தெய்வா said...

Good going.. keep it up

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என் வலையத்துக்கு ஒரு முறை வாருங்கள். அங்கு ஒரு செய்தி உங்களுக்குக் காத்திருக்கிறது.

தமிழன்-கறுப்பி... said...

நெகிழ்தல், உணர்தல் என்பவை எல்லா எழுத்திலும் கிடைப்பதில்லை.

எழுதுறிங்கய்யா நீங்க!

கவிதாசிவகுமார் said...

மனதை உருக்கிவிட்டது. காலத்தின் வாசனை.......மழை வருவதற்குமுன் கிளம்பும் மண்வாசனை. முதல் கதைபடைப்பே அருமையாய்....

அடுத்த படைப்பை விரைவில் எதிர்நோக்கி.

பா.ராஜாராம் said...

கண்ணா...
ரொம்ப நன்றிடா பயலே...

கதிரவன்...
ஆகட்டும் கதிரவன்.அருமையான வரவும் கூட!அன்பு நிறைய கதிரவன்..

தெய்வா...
thanksdaa தெய்வா.....லக்ஷ்மி,சக்தி நலம்தானே?

ஜெஸ்...
காலாகாலத்திற்கும் மறக்க இயலாத அன்பை தந்திருக்கிறீர்கள்.காப்பாற்றுவேன் ஜெஸ்..

தமிழன்-கறுப்பி...
சந்தோஷமும்,நெகிழ்வான அன்பும் கறுப்பி!

தமிழ்...
உங்கள் அன்பும் மனதை உருக்குகிறது தமிழ்!
பேரன்பிற்கு பேரன்பு தமிழ்..

தெய்வா said...

இன்று ஸ்கைப் பேச வேண்டும்...
எத்தனை மணியானாலும்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதற்கு முன் உங்கள் கதைகளைப் படித்ததில்லை (எழுதியிருக்கிறீர்களா என்ன?). இந்தக் கதை நல்லாயிருக்கு ராஜாராம். தொடர்ந்து கதைகளும் எழுதுங்க.

இரசிகை said...

paarama irukku..

vazhkkaiyai tholachuttu irunthirukkiromnu vaazhumpothey purinthaal undaagum vali vilakkamudiyaathu

yennaththai sambaathiththaalum manitharkalai sambaathikkanum..unnathamaana unarvukal thaandiya vedangal illai:)

ungal kathaiyum nadaiyum azhagu:)

yezhuththukku font size maaththunga:)

niraya varikal pidiththathu..
(like kaalaththai thooki madiyil vaiththuk kondu..-arumai)

இரசிகை said...

appuram award kidachchirukku vazhththukal:)

Venkatesh Kumaravel said...

அட்டகாசமான மொழிநடை, நேர்த்தியான உரையாடல்கள். எப்படி சார்!?
சும்மா அடிச்சு போட்டாப்ல இருக்கு. காட்சிகளாய் விரியும் அந்த உதியமரத்து வாசம்... சலனமற்ற நதியில் கிளம்பும் வளையல்களாய்...
பின்னூட்டங்களிலும் மிளிரும் உங்கள் திறமை... ப்ரில்லியண்ட்!

Karthikeyan G said...

சார், மிகவும் அருமை.... நன்றிகள்..

நேசமித்ரன் said...

முதல் பிள்ளை ராமன் போல ராஜா- ராமன் போல ,தர்மன் போல
பெற்றிருக்கிறீர்கள் .சொற்களில் இழையும் ஈரமும் மயிர் கூச்செறிய வைக்கின்றன .மனசின் வேர்களில் இருந்து கசியும் உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகி இருக்கின்றன .

கதைக்கான கவிதை

வாதையின் வதை தகனப்பட முடியாமல்
மேகங்களில் தொற்றிகொண்டிருக்கும்
கைவிடப்பட்ட காலங்களை சுமந்தபடி...

குகனின் படகு யுகங்களை கடந்து மிதந்து
கொண்டிருக்கிறது கண்கள் அறியாமல்
கலக்கும் சரஸ்வதி நதியில்

அவசரத்தில் எழுதிய கவிதை
உங்கள் அன்பு மன்னிக்கும் என்றெனக்கு தெரியும்

நட்புடன் ஜமால் said...

பரமக்குடி

இந்த வார்த்தை எனக்கொரு மந்திரம்.

சமையம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்

---------------

எழுத்து நடை அற்புதம்

---------------


எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லைதான்.

கயிறு வீசி சர சரவென மனசில் இறங்குகிற மனிதர்களை என்ன செய்துவிட முடியும்

மரியாதை குறைவுதான். வேறு போக்கிடம் இல்லை மாப்ள"

விரும்பியோ,விரும்பாமலோ பிடித்த முதலாளி ஆகி இருந்தான் எனக்கு.


மழை நின்ற பிறகு மரக்கிளைகளை உலுக்கி நனைவது போல் உதியமரத்து வாசனை சரம் சரமாக இறங்க தொடங்கியது!


------------------

இவ்வரிகளில் என்னை தொலைத்தேன்.

மிகவும் இரசித்தேன் நண்பரே

------------------

உங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த

ஜெஸ்வந்திக்கும், அமித்து அம்மாவுக்கும் - நன்றிகள்

S.A. நவாஸுதீன் said...

காலத்தின் வாசம் நெஞ்சு முழுவதும் நிறைந்துவிட்டது பா.ரா. கதை முடியும்போது மனதை லேசாக்கியதுபோல தோற்றத்தை மட்டும் கொடுத்து நிஜமாகவே கனமாக்கியிருந்தது.

http//azutham.blogsot.com said...

Mr.ஜமால் எது எதெல்லாம் என் மனதை ஆக்கிரமித்ததோ அதெல்லாம்
உங்கள் மனதையும் தொட்டிருக்கிறது.சிலர் எண்ணங்களின் அலைவரிசை
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல.
ரமேஷ்,கண்ணா இக்கதையை vikatan.com க்கு அவசியம்
அனுப்பி வையுங்கள்.

நேசமித்ரன் said...

முதல் கதைக்கே விருது
வாழ்த்துக்கள் பா.ரா
:)
:)
:)

Nathanjagk said...

அன்பு ராஜாராம்..
வெளிச்சம் நகர்த்தி வந்த சிறு நிழல் ஒரு மரத்துக்கடியில் ஒளிந்து ​கொள்வதாய் இருக்கிறது உங்கள் வலைப்பூவுக்குள் நான் அடைவது! ஆனால், ஏனிந்த ஈர்ப்பு என்றொரு வினா​மயக்கம். மயக்கத்தைத் தெளிவாக்குகிறது - எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லை என்ற - வரி.
உதியமரத்து வாசனை மறந்து போயிற்றா.. அல்லது உதிய மரம் எதுவென தெரியாமல் ​போயிற்றா..? இனி உதியம் என்றால், இந்த கதை மட்டும்தானே என்னிடம் உதயமாகும்!
கயிறு வீசி சர சரவென மனசில் இறங்கி, விளிம்பு நிறைய நீர் மொள்ளும் கதைகளை என்ன செய்துவிட முடியும்?

கவிதாசிவகுமார் said...

பாத்தீங்களா சித்தப்பா, நீங்க இன்னும் தாத்தாவைபற்றியே சோகத்திலேயே இருக்கீங்கன்னு தாத்தா உங்களுக்கு இத்தனை உற்சாகமும் ஊக்கமும் பலமும் கொடுக்கும் உயரிய நண்பர்களை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் நிறைய எழுதுங்கள்,அதுவே உங்களுக்கு மிகச்சிறந்த வடிகாலாக இருக்கும். முதல் கதைக்கே விருது வாங்கியிருக்கும் உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தோழிகளுக்கு பின்னூட்டம் எழுதுவதற்காக 'தமிழ்' ஆக பெயர் மாறியுள்ளேன். ஏற்கெனெவே 'காலத்தின் வாசனை'யில் 'தமிழ்'ஆகவும் பின்னூட்டம் எழுதியுள்ளேன்.

அன்புடன்
'கவிதுமா'.........தொடர்ந்து இனி 'தமிழ்'ஆக.

பா.ராஜாராம் said...

சுந்தரா,..
--------------
இதுதான் என் முதல் கதை சுந்தரா.
எல்லோரும் நல்லா இருக்கு என சொல்லும்போது,
நிறைய கூச்சம் கலந்த சந்தோசம் இருக்கு.இன்று தூங்க சிரமபடுவேன்.(சரக்கு கிடைக்காத நாடு....)
நடராஜா உபயோகபடுத்திய வார்த்தைகளை ஊறுகாய் போல் தொட்டு கொண்டு தூங்க வேண்டியதுதான்..
நன்றிடா மக்கா!

ரசிகை,..
--------------
என்ன ஆளை காணோமேன்னு பார்த்தேன்.ரொம்ப நன்றி ரசிகை!

வெங்கிராஜா,..
------------------------
ரொம்ப நெகிழ்வாய் இருக்கு உங்கள் முதல் வருகையும்,மனசில் இருந்து தந்த அன்பான விமர்சனமும்.ஆட்களிடமிருந்து உதிரும் வார்த்தைகள் ஆட்கள் போலவே.எளிதில் மறக்க இயலாது,இரண்டையும்!

கார்த்திகேயன் G
-----------------------------
கார்த்திகேயன் G யா?... இல்லை கார்த்திகேயன்ஜி... யா?
அப்ப ராஜாராமை மட்டும் எதுக்கு சார்?உருவிரலாம் கார்த்திகேயன் ரெண்டையும்!
அன்பிற்கு நன்றி கார்த்திகேயன்!

நேசமித்ரன்.
------------------
"மனசின் வேர்களில் இருந்து கசியும் உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகி இருக்கின்றன"என்கிற வார்த்தைகளையே எடுத்து,உங்கள் அன்பிற்கு பதிலாக தர வேண்டியதாகிறது நேசா.உங்கள் சட்டை பையில் இருந்து,காசெடுத்து hotel cash கவுண்டரில் நான் நீட்டும் உரிமையோடு!அன்பும்,கண்ணீரும் நேசா..விருதுகளுக்கு வாழ்த்துக்களும் கூட!

பா.ராஜாராம் said...

நட்புடன் ஜமால்.
-------------------------
பரமக்குடியா ஜமால் நீங்கள்?...
அறிமுக வருகையில்,நெகிழ்வான மிக விசாலமான பின்னூட்டம் ஜமால்!என்ன சொல்லட்டும்...ரொம்ப நெகிழ்வாய்,மிகுந்த சந்தோசமாய் உணர்கிறேன்.மனசுக்கு நெருக்கமாய் பேசுகிற மனிதரை அறிமுகம் செய்ததுக்கு நான்தான் தோழிகள் இருவருக்கும்
நன்றி சொல்லியாக வேணும்.நன்றி ஜெஸ்!..நன்றி அமித்து அம்மா!..பரமக்குடி பற்றி பேச சீக்கிரம் சந்தர்பம் ஏற்படுத்தி கொள்ளுங்கள் ஜம்மல்!சொல்லொண்ணா அன்பும் நன்றியும்..

S.A.நவாசுதீன்
----------------------
வரணும் நவாஸ்...புதிது புதிதான,சிநேகம் ததும்பும் மனிதர்களை ப்ரைலி உணர்வில்(நன்றி சிநேகமித்ரன்!)உணர்ந்து,கொண்டாடுகிறது மனசு!..மிகுந்த அன்பும் நன்றியும் நவாஸ்...about me புகைப்படம் நீங்கள் யாரென கவிதையாக உணர தருகிறது!...

http//azhttham.blogspot.com.
-------------------------------------
அன்பும் நன்றியும் சித்தப்பா...

நேசமித்ரன்.
------------------
சந்தோசப்படும் மனிதர்களில் நீங்களும் இருப்பீர்கள் நேசா,எப்பவும்!இல்லையா?...

ஜெகநாதன்.
-----------------
நானும்தான் ஜெகன்...குடும்பம்,நண்பர்கள்,சுற்றித்திரிகிற சிவகங்கை தெருக்களின் நினைவுகள் அழுத்தும் போதெல்லாம்,ஒரு ஈச்ச்சம்பாயை சுருட்டி எடுத்துக்கொண்டு உங்கள் "காலடி"க்கு வந்துவிடுகிறேன்.பாயை உதறி அமர்ந்தால் போதும்...கண்சுழட்டும் வரையில் சிரித்து இளைப்பாற்றி அனுப்பி வைக்கிறீர்கள்.செவ்வந்தி பூக்களில் செய்த வீடு உங்கள் காலடி!வரவிற்கு அன்பும் நன்றியும் ஜெகன்!

தமிழ்
-----------
டேய்..ராஸ்கல் நீதானா அது! என்ன இப்படி மாறு வேஷமெல்லாம்!"கவிதும்மா" வில் இருந்து சித்தப்பாவிற்கு மாற நாளாகும்.அல்லது இயலாமல் கூட போகும்...விடு!எடுக்க,கொடுக்க எது வருதோ அதுவே இருக்கட்டும்...அன்பு நிறையடா குட்டிம்மா...

பா.ராஜாராம் said...

நண்பர் யாத்ரா தனி மின்மடலில் அளித்த comment:

"காலத்தின் வாசனை கதை என்னை மிகவும் பாதித்து விட்டது, என்னை கொன்றே போட்டு விட்டது எனலாம், இம்மாதிரி தருணங்களை நானும் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.நானும் பெயர் மறந்து விட்டு வீட்டிற்கு வந்து வருட இறுதியில் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆட்டோகிராப் புக்கை குற்றவுணர்வுடன் பார்த்திருக்கிறேன். எவ்வளவு நேசம் எவ்வளவு அன்னியோன்யம் எவ்வளவு உரிமை எவ்வளவு உண்மை உணர்வு மயமாக்கி விட்டீர்கள் அந்தக் கதையில் என்னையும் என் போன்ற பல வாசகர்களையும். நீங்கள் தொடர்ந்து இம்மாதிரி கதைகளையும் கவிதைகளையும் எழுத எங்கள் வாழ்த்துகள்.

இப்போது அந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை அது எனக்குள் ஏற்படுததிய உணர்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தது மிகவும் மகிழ்வளிக்கிறது.

என்றும அன்புடன்
யாத்ரா"

நட்புடன் ஜமால் said...

நான் பரமக்குடியல்ல நண்பரே

எனது நண்பன் பரமக்குடி, எனது திருமணம் நடத்தி
வைக்கப்பட்டது பரமக்குடி கார நண்பர்கள் மூலம்.

விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன் ...

பா.ராஜாராம் said...

யாத்ரா
-------------
ப்ரியங்கள் நிறைந்த யாத்ரா,
கடிதம் பார்த்தேன்...என்ன சொல்லட்டும்..மனிதர்களின் அன்பிற்கு முன்னாள் பலநேரம் செய்ய ஏதுமின்றி,கை பிசைந்து நிற்க நேரிடுகிறது.இந்த ஒன்னரை மாத காலமாக பல சந்தர்பங்கள் இப்படி!..மழையில்...ஈரத்தில்...சில நேரம் கடிதத்தின் முகவரிகள் பிசகி போவது உண்டு.ஆனாலும் விழி உள்வாங்கும் ஒளி கொண்டு,முகவரியை மீட்டெடுத்து...கடிதம் சேர்த்து விட வேணும் என்று கண்கள் இடுக்கி போராடும் போஸ்ட் மேன் மாணிக்க அண்ணாச்சியையும்,இப்போ சுந்தராவையும் நினைவு கூர்கிறது
உங்களின் என் தேடலும்...தேடி அடைந்தது என் பாக்கியம்தான் யாத்ரா.மற்றபடி,உங்கள் கவிதைகளின் தீவிர வாசகன் நான் என என்னை அடையாள படுத்திகொள்வதில் மிகுந்த சந்தோஷமும் எனக்கு.பிரபலங்களின் புகைப்படம் வைத்து கை ரேகை பார்க்கும் அரண்மனை ஜோஸ்யரை போல் களை கட்டியிருக்கிறது என் வீடு!நன்றி யாத்ரா...

பா.ராஜாராம் said...

ஆகா...எவ்வளவு சந்தோசமான ஞாபகங்கள் ஜமால்...
பட்டுச்சட்டை வாசனையும்,பரவசம் மின்னும் கண்களுமாக காட்சியாகுறீர்கள் ஜமால்...நீங்களும்,சகோதரியும்!...பரமக்குடி,நல்ல நண்பர்களை மட்டும்தான் பிரசவிக்கும் போல எப்பவும்... அன்பு நிறைய ஜமால்.

ஷங்கி said...

இதைப் படித்துப் பார்த்தவுடன் உங்கள் பின்னூட்டம் ஒரு தெள்ளோவியமாக! Class!
நன்றியும், நிறைந்த அன்பும்.

பா.ராஜாராம் said...

ஆகட்டும் சங்கா.உங்கள் எம்மியும் நல்லா வந்திருக்கு...எப்பவும் போல் நிறைய அன்பும் நன்றியும் மக்கா...

mathiyalagan said...

அன்பான அண்ணா

கதை இயல்பாக இருந்தது......

அடுத்த தளத்தை எதிர்பார்க்கிறேன்....

மதி

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையாக இருந்தது கதை

(இந்தக் கதைக்கு கமெண்ட் போட ரொம்ப நாளாக முயல்கிறேன். என்னுடைய கம்ப்யூட்டரில் இது போன்று அமைந்திருக்கும் கமெண்ட் பாக்ஸில் டைப் செய்து அனுப்பினால் அது வெளிவரவில்லை எதோ டெக்னிக்கல் ப்ரச்சினை போல கம்ப்யூட்டருக்கு. நல்லவேளையாக இது மற்றொருவரின் கம்ப்யூட்டர். இன்று இந்தக் கதைக்கு கமெண்ட் போட முடிந்தது. மகிழ்ச்சியே.

உங்களால் கமெண்ட் பாக்ஸை பொதுவாக இருக்கும் வடிவத்தில் தர முடிந்தால் மிக்க மகிழ்ச்சி)

பா.ராஜாராம் said...

mathiyazhagan
=============
ப்ரியங்கள் நிறைந்த என் மதி.எங்கடா இந்த பயலை காணோம் என்பதாகவே இருந்தது என் தேடல்.ஆகட்டும்டா.அவசியம் அடுத்த முயற்ச்சியில் மாத்திரலாம்.நன்றியும் அன்பும் மதி.

அமிர்தவர்ஷினி அம்மா
=======================
வணக்கம் அமித்து அம்மா.இந்த வார நட்சத்திரத்தில் ஜொலிச்சாச்சு!நண்பர் யாத்ராவிர்க்கும் இதே பிரச்சினை இருந்தது.விரைவில் இதற்கான தீர்வை எடுத்துரலாம்.மற்றபடி,எப்பாடு பட்டாவது சந்தோசங்களை பகிரவேனும் என்கிற உங்கள் முயற்சி நெகிழ்த்துகிறது.மிகுந்த நன்றியும் அன்பும் அமித்து அம்மா.