சவுதி வாழ்வின் மற்றொரு நாட்காட்டி தாள் யார் கையும் படாமலேயே லாந்தலாக விழுந்தது இன்று.
வெகு நாளாக வைத்திருந்த நேர்ச்சையை குலசாமி வந்து கனவில் சொல்லுவது போல் எல்லாமே யதார்த்தகமாக நிகழ்ந்தது. சரவணாவின் குரல் கேட்கமுடியாத குற்ற உணர்ச்சியை வெற்றி சார் என்கிற குலசாமி குரலால், மனசாட்சியின் வெட்டுக் கத்தியில் இருந்து என் குரல்வளை தப்பிக் கொண்டது இன்று.
ஆம்!..அந்த செ புள்ளி சரவணக்குமார் என்ற என் சரவணாவை இன்று சந்தித்து விட்டேன். கூடுதலாக தேனு மக்கா தேடித்தந்த வெற்றி சாரையும்தான். அவர்களை இதில் பதியவில்லை எனில் அப்புறம் எதுக்கு மக்கா இருக்கு இந்த புரை ஏறும் மனிதர்கள்?
ஆயிரத்தில் ஓர் இருவர்..(ஹி..ஹி..சீசன் தலைப்பு..)
வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஒரு போன் வந்தது. ஒரு போன் சும்மா வரும். ஒன்னு எல்லாம் தாங்கி. மற்றொன்னு, எதிர் பாரா கொக்கிடம் இருந்து நகத்தில் விழுகிற கோடிச்சட்டை போலான குரலாக இருக்கும் இல்லையா? அப்படி இருந்தது அந்த குரலும்.
"ஜெத்தாவில் இருந்து வந்திருக்கேன். பெயர் வெற்றி. ரெண்டு நாள் இருப்பேன். சந்திக்க இயலுமா?" என்பது மாதிரியான ஒரு குரல். முன்னதாக தேனு மக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தபோது இவர் குறித்தும் அறிந்திருந்தேன். தேனு தளத்தில் இருந்த இவரின் பின்னூட்டம் மூலமாக இவர் தளம் போய் வாசித்து அடையாளம் பண்ணிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். "பக்கத்தில் இருக்கிற சரவணாவை போயே பார்க்க முடியலையே..எதுக்கு சக்திக்கு மீறியதான ஆசை" என்பது போல்.
இந்த குரலை கேட்ட பிறகு ஏற்கனவே இருந்த நேர்த்தி கடனையும் சேர்த்து முடித்துவிட்டால் என்ன? என தோன்றியது. சரவணாவை கூப்பிட்டேன். ஆகட்டும் என்றார். பரபரவென சம்பவங்கள் நிகழ தொடங்கியது. மறு நாள் மாலை சந்திப்பதாக பேசிக் கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் என் சாளர மனிதர்களை சந்திக்க கிளம்பினேன்.
சிக்னலுக்கு நிற்கிற டாக்ஸ்சியை உந்தித் தள்ளனும் போல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. "அட..போப்பா.சும்மா சும்மா நின்னுக்கிட்டு" என்று டிரைவரிடம் சொல்ல விரும்பினேன். இப்படி விரும்ப மட்டுமே செய்கிற எவ்வளவோ விஷயம் என்னிடம் இருப்பதால் எப்பவும் போல் இதையும் சொல்லவில்லை. மேலும் பாக்கிஸ்தானி டிரைவர். ஏற்கனவே இரு நாட்டிற்கும் உள்ள பிரச்சினைகள் போதும்.
சரவணன் கோல்டன் ஜூஸ் கார்னரில் நிற்கிறார். வெற்றிசார் மதினா ஹோட்டல் வாசலில். இருவருக்கும் நாப்பது,ஐம்பது அடிகள் தூரம்தான் இருக்கும். இணைக்கத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என உணரும் போது மனசு பறந்து கொண்டிருந்தது.
இறங்கி சரவணாவை கூப்பிட்ட போது அவரும் மதினா வாசலில் நிற்கிறார். முன்ன பின்ன பார்க்காத மனிதர்களை ஆனால் பார்க்க விரும்புகிற மனிதர்களை, பார்க்க நெருங்கி விட்ட தருணத்தை அனுபவித்து இருக்கிறீர்களா மக்கா? ஆம்,எனில் தயவு செய்து அந்த இடத்தில் வந்து நில்லுங்களேன். ஏனெனில் என்னால் அந்த மனநிலையை விவரிக்க இயலவில்லை.
சரவணன் ஓடி வந்து கட்டிக் கொண்டதை, அப்படி ஒரு சிரிப்பு சிரித்ததை,கண்களில் இருந்த புகை போல கிளம்பி வந்த பிரியத்தை எதிர் கொள்ள இயலாத பலஹீனனாக இருந்தேன். இருவரும் சேர்ந்து வெற்றிசாரை தேடிப்போனோம்.
மொபைலை எடுத்து அவரை கூப்பிடலாம் என தோன்றியபோது அந்த முகத்தை பார்த்தேன். ஏற்கனவே அவர் தளத்தில் புகைப்படத்தில் பார்த்த முகம்தான். இன்னும் கொஞ்சம் மலர்த்தி வைத்திருந்தார். இப்ப மலர்ந்தது போல.
காரை திறந்து இறங்கிய வேகத்திலும், கைகளை பற்றிக் கொண்ட வாஞ்சையிலும் மின்சாரம் இருந்தது மக்கா. வெற்றி சார் இல்லையா? மின்சாரம் இருக்கத்தானே செய்யும்! வெற்றிக்கே உரித்தான மின்சாரம் அது. தோல்வி இடத்தில் இருந்து இதைக் கொஞ்சம் உள் வாங்க முயற்சி செய்யுங்களேன். இப்ப நீங்கள் இதன் தாக்கத்தை உணர்ந்து விட்டீர்கள் இல்லையா? நானும் இப்படியே உணர்ந்தேன்.
பிறகு நாங்கள் அந்த வீதியையும் சுற்றி இருந்த மனிதர்களையும் மறக்க தொடங்கினோம். எட்டு வருடமாக நான் இந்த இடங்களில் புழங்கி வருகிறேன். வாய் நிறைய தமிழ் பேசியது இன்றுதான். அதுவும் மண்ணில் இருந்து ஈரம் குழைத்த தமிழ். பிசைந்து பிசைந்து ஊட்டிக் கொண்டோம். இன்னதென்று இல்லாமல் குடும்ப தொடங்கி, இலக்கியம், சினிமா, அரசியல்,இணைய எழுத்தாளர்கள் (வாழ்க,அகநாழிகை வாசு..), சவுதி வாழ்வின் அன்றாட பிரச்சினைகள் என்று எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னங்கால்களை உதைத்து,பிடி கொடுக்காமல் ஓடுகிற கண்டுக் குட்டியை ஒத்திருந்தது பேச்சு. விரட்டி பிடிக்க இயலாமல், சிரிப்பும் சந்தோசமுமாக பின்னாலையே ஓடிக் கொண்டிருந்தோம்.
வெற்றி சாரும் சரவணனும் நிறைய வாசிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். தி.ஜா.தொடங்கி சாரு வரையில் புட்டு புட்டு கடை விரிக்கிறார்கள். பதினைந்து வருடங்களாக வாசிப்பற்ற பள்ளத்தில் கிடந்த நான் சறுக்கி சறுக்கி ஏறிக்கொண்டிருந்தேன். குனிஞ்சு தூக்கியும், ஏந்தி தள்ளிக் கொண்டும் இருந்தார்கள்.
இவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதே தேனு,staarjan,அக்பர் இவர்களின் குரல் கேட்டுக் கொண்டதும் அவ்வளவு பாந்தமாக இருந்தது.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு மகனுக்கு போன் பண்ணேன். படிச்சிக்கிட்டு இருக்கேன்ப்பான்னு சொன்னான். மனுசனாடா நீ? வேர்ல்டு கப் புட்பால் நடந்துக்கிட்டு இருக்கு நீ படிச்சிக் கிட்டு இருகேன்ற? மூடி வச்சுட்டு போய் மேச் பாருடா..காலைல ரிசல்ட் சொல்லணும்" என்று சிரிக்கிற ரசனையான தகப்பன் முகம் கொண்ட வெற்றி சாரையும்....
"அப்படியே ரைட் ஆப்போசீட்ண்ணே தம்பி அருமையாய் படிப்பான். எந்த பழக்கமும் இல்லை. உதாரணம் சொல்றதுக்கு வெளீல இருந்து ஆள் தேட மாட்டாங்க வீட்ல. இந்தா அவனை பாரு..ஒடனொத்த புள்ளைன்னு எதுகெடுத்தாலும் தம்பியை இழுத்துருவாங்க.." என்று பளீரென சிரிக்கிற சகோதர முகம் கொண்ட சரவணனையும்..
இப்படி எழுத்தில் படிக்க கூடாது மக்கா. நேரில்தான் பார்க்கணும்!
மிஸ் பண்ணிட்டீங்களே மக்கா..
உற்சாகமான மனிதர்களிடம் இருந்து ஒரு போதும் விடை பெற்றுக் கொள்ள இயல்வதில்லை. அவர்களையும் நினைவிலாவது கூட்டிக் கொண்டுதானே நாம் நம் வாழ்விற்குள் நுழைகிறோம். அப்படித்தான் நுழைந்திருக்கிறேன் நானும்...
புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3 , 4, 5
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
இப்படி எழுத்தில் படிக்க கூடாது மக்கா. நேரில்தான் பார்க்கணும்!//
நேரில் பார்ப்பதைவிட எழுத்தில்
உங்களைவிட யதார்த்தம் பூண்டு
இழைத்திட யாரால் முடியும் மக்கா.
உங்களுள் நாங்களும் இருந்ததுபோன்ற
உணர்வை தந்துள்ளீர்கள்...
நெகிழ்ச்சி நிறைய....
ஒரு மனுஷன் தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம் என்ற உங்கள் வார்த்தைகள் மனசுக்குள் நிழலாடுகிறது மக்கா நட்புக்கு இதைவிட ஒரு மரியாதை கிடைக்க முடியாது பாரா..
நன்றி சொல்லி நானும் உங்களனைவரையும் விட்டு விலகிப் போகப் போவதில்லை ..
நம் அனைவருக்கும் நடுவிலே எதற்கு நன்றியும் மற்றொன்றும்
நேரில் பார்க்காத குறையைத்தான் உங்கள் எழுத்து தீர்த்திடுச்சே பா.ரா.
இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா வந்தாச்சு.தேடிப்போய் நண்பர் பார்க்கிற மனசும் காலமும் மிகமிக அற்புதமானாது.இப்போது அலைபேசியில் கிடைக்கிற பரவசத்தை இன்னும் அதிகரிக்கும்.
காலை வணக்கம் பாரா.அங்க எப்டி மதியமா ?.
மனுசன்களை எப்படி சம்பாதிக்கனும்னும், உணர்வுகளை வரிகளில்
எப்படி எழுதனும்னும் உங்க கிட்டதான் அண்ணா கத்துக்கணும்...
அண்ணா பக்கதுலதான் இருக்கீங்க நாடுமட்டும் தான் பிரிச்சு வச்சிருக்கு... 200 கிலோமீட்டர்தான்..ஆனாலும் பாக்கமுடியாது...ஊருக்கு எப்போ போறீங்க...? ஊர்லயும் 200 கிலோமீட்டர் வித்யாசம்தான் ஆனா பார்க்க முடியும்...
அண்ணா வர வர மனசில
பொறாமை வரப் பண்றீங்க !
பிரியமுடன்...வசந்த் said...
அண்ணா பக்கதுலதான் இருக்கீங்க நாடுமட்டும் தான் பிரிச்சு வச்சிருக்கு... 200 கிலோமீட்டர்தான்..ஆனாலும் பாக்கமுடியாது...ஊருக்கு எப்போ போறீங்க...? ஊர்லயும் 200 கிலோமீட்டர் வித்யாசம்தான் ஆனா பார்க்க முடியும்.//
இது பயங்கரமா புரை ஏறுதே..::))
சவுதிக்கு ஒரு நடை வந்துரனும்தான்...:))
பா.ரா நீங்க புரை ஏறுகிற நண்பர்களையெல்லாம் சந்தித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி ... ஆனால் எங்களுக்கும் புரை ஏறிக்கொண்டு இருக்கிறது ... பார்த்து மனசு வச்சு ஒரு நடை வரும்போது சொல்லுங்க .. ஓடி வந்திருவேன் !
வாழ்த்துக்கள்
இன்னிக்கி படத்துக்கு கொஞ்சம் முன்னாடியே வரிசைல வந்து டிக்கெட் வாங்குனதுல கூடுதல் சந்தோசம் மக்கா ;-))
ஏன் தான் மனுஷங்க மேல இவ்ளோ பைத்தியமா இருக்கீங்களோ போங்க.. நீங்க இப்படி தான்
சாளர மனிதர்கள் //
அழகான வார்த்தைப்பிரயோகம்.
நிறைய புரை ஏறுதுப்போல, சவுதி போனதுக்கப்புறம் ;)))))))))
வாழ்த்துக்கள்
ஆகா வடை போச்சே.
எல்லாரும் ஒன்னா இருக்கும்போது ஒரு போன் பண்ணியிருக்கலாமே மக்கா. அட்லீஸ்ட் ஆடியோ கான்ஃபெரன்ஸ்லயாவது கலந்துகிட்டு சந்தோசப்பட்டடிருப்பேன். சரி எங்கே போயிடுவீங்க. எல்லாத்துக்கு சேத்துமாத்து வச்சிக்கிறேன்.
//முன்ன பின்ன பார்க்காத மனிதர்களை ஆனால் பார்க்க விரும்புகிற மனிதர்களை, பார்க்க நெருங்கி விட்ட தருணத்தை அனுபவித்து இருக்கிறீர்களா மக்கா? ஆம்,எனில் தயவு செய்து அந்த இடத்தில் வந்து நில்லுங்களேன். ஏனெனில் என்னால் அந்த மனநிலையை விவரிக்க இயலவில்லை.//
:)
அன்பின் பா.ரா அண்ணா..
மிக நெகிழ்ச்சியாக உணர்கிறேன். சந்திப்பிற்குப் பின்னர் இரவில் நான் எனது அறைக்குத் திரும்பும் வரை "பத்திரமாக அறைக்குச் சென்று சேர்ந்துவிட்டீர்களா?" என்று அலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தீர்களே அந்தக் குரலுக்கு சொந்தக்காரரின் அன்பான புன்னகை தவழும் முகம் கண்ட மகிழ்ச்சியே போதும்.
\\இணைக்கத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என உணரும் போது மனசு பறந்து கொண்டிருந்தது.\\
\\கமலேஷ் said...
மனுசன்களை எப்படி சம்பாதிக்கனும்னும், உணர்வுகளை வரிகளில்
எப்படி எழுதனும்னும் உங்க கிட்டதான் அண்ணா கத்துக்கணும்...\\
உன்மை தான். மிக நெகிழ்ச்சியான பதிவு
படித்துக் கொண்டு வருகையிலேயே உற்சாகம் எங்களையும் பற்றிக் கொள்வது போல நடை. சரவணக்குமார் நல்லா வாசிப்பாளர் என்று அவர்தம் தளத்து எழுத்துக்களைப் பார்க்கும்போதே தெரிகிறதே...
மிக நெகிழ்ச்சியான பதிவு
ம்ம்ம் அடிக்கடி புரையேறட்டும்!
நல்ல பகிர்வு.
இனிய சந்திப்பின் வர்ணனை எங்களையும் உங்களுடன் பேச வைத்தது.
இது என்ன எழுத்து நடை.கனவில் கூட கட்டிப்போடுகிற அழகான மனதைத்தொடும் எழுத்து நடை.என்னைய மாதிரி ஆளுகள பின்னூட்டம் போடுறதுக்குக்கூட இப்புடி மிரட்டுவீகளா? மக்கா! பொறுத்துப்பொறுத்துப் பாத்துட்டு இன்னிக்கு பின்னூட்டம் போட்டே ஆகிவிட்டது.
அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்
நட்பு வாழ்க!
புரை ஏறும் நட்பு தொடர வாழ்த்துக்கள்.
அழகா எழுதி இருக்கீங்க.. இந்த சாளரமனிதர்கள் வார்த்தை எனக்கும் பிடிச்சிருக்கு..
சவூதியில் அனைத்து நாட்களும் ஒரே வர்ணத்துடன் தான்.எந்த வித மாற்றங்களும் இல்லாமல்...18 வருடங்களில் ஒரு கை விரல் விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே வானவில்லை தரிசனம் பண்ணியுள்ளென்.18ந்தேதி அப்படி ஒரு வானவில் தரிசனம்.அந்த ஒரு தரிசனத்திலேயே சொர்க்க வாசல் திறந்தது போன்ற ஒரு பதிவு..நெகிழ்ச்சியான பதிவு...அழகான நடை தஙகளிடம் அடிமை ஆகியுள்ளது..வாழ்த்துக்கள்.
//நன்றி சொல்லி நானும் உங்களனைவரையும் விட்டு விலகிப் போகப் போவதில்லை ..
நம் அனைவருக்கும் நடுவிலே எதற்கு நன்றியும் மற்றொன்றும்//
அதுவே எனது விருப்பமும்.
நான் வரவில்லை என்ற கவலையை போக்கியது உங்கள் எழுத்து நடை.
சரவணன் அழைத்திருந்தார் வேலை பளு காரணமாக வர முடிய வில்லை.
அந்த ஏக்கம் உங்கள் இடுகையால் தீர்ந்தது.
சில பேருக்கு உங்களைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கிறது.
அது வாய்க்காத என்னைப் போன்ற பலருக்கு உங்கள் எழுத்துக்களை வாசிக்க கொடுத்து வைத்திருக்கிறதே..அது போதும் !!!
தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள் பா.ரா
இப்படியே எழுதி கொன்னது போதும் சீக்கிரம் ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டு போங்க
உங்கள பாத்து வச்சுகுறோம் மாம்ஸ் . எழுத்துதரும் உங்க முகம் எப்படி இருகேன்று . அந்த கைகளையும்
எப்படி சார் எழுதுறீங்க... இலக்கியநயம் வார்த்தைகளில் விளையாடுகிறது. சான்சே இல்ல.
இது போன்ற சந்திப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் சார்....
\\கிளம்பி வந்த பிரியத்தை எதிர் கொள்ள இயலாத பலஹீனனாக இருந்தேன்\\
\\உற்சாகமான மனிதர்களிடம் இருந்து ஒரு போதும் விடை பெற்றுக் கொள்ள இயல்வதில்லை. அவர்களையும் நினைவிலாவது கூட்டிக் கொண்டுதானே நாம் நம் வாழ்விற்குள் நுழைகிறோம். \\
உண்மையான, உணரக்கூடியதும் எப்போதாவது உணர்ந்திருக்கக்கூடியதுமான நெகிழ்ச்சியான வரிகள் பா.ரா..மிக அருமை...
ரெண்டு நாளா வந்துட்டு போறேன் என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியல மக்கா
ஒரு மாதிரி வெட்ட வெளியில கொட்டுற மழையில் நனையுற மாதிரி
எல்லாருக்கும் அன்பைத் தாருங்கள் மக்கா
நீங்கள் மூவரும் சந்தித்ததை உன் எழுத்தில் வாசிக்கும் போது நான் உன்னை முதலில் சந்தித்தது தான் ஞாபகம் வருகிறது..
ப்ரியங்கள் நிறைந்த என்,
சங்கர்,
தேனு,
சுசி,
காமு,
கமலேஷ்,
வசந்த், :-)
ஹேமா,
ப.ப.சங்கர்,
வித்யா,
ஜெனோ,
மோகன்,
அமித்தம்மா,
நவாஸ்,
அசோக்,
சரவனா,
அம்பிகா,
ஸ்ரீராம்,வாங்க மக்கா.
குமார்,
அருணா,
ஸ்ரீ,
ராதா,
சாந்தி,வாங்க மக்கா.
கோமதி,
முத்து லெச்சுமி,
வெற்றி சார்,
அக்பர்,
செய்யது,
சேகர்,
பாலா மாப்ள,
பிரதாப்.வரணும் பிரதாப்.
குட்டிப்பையா,ரொம்ப பிடிச்சிருக்குங்க இந்த பெயர்.
நேசா,
தெய்வா பயலே,
எல்லோருக்கும் நன்றியும் அன்பும் மக்கா!
எழுத்துக்களில் கட்டி போட்டு விடுகிறீர்கள் பா.ரா, சந்திப்பில் கலந்து கொண்ட நிறைவு!!
பதினைந்து வருடங்களாக வாசிப்பற்ற பள்ளத்தில் கிடந்த நான் சறுக்கி சறுக்கி ஏறிக்கொண்டிருந்தேன். குனிஞ்சு தூக்கியும், ஏந்தி தள்ளிக் கொண்டும் இருந்தார்கள்.
pidichchirukku.... :)
ithai ippadi ungalaal mattum thaan solla mudiyumnu thonuthu rajaram sir..
Post a Comment