Showing posts with label மனிதர்கள்-ஆறு. Show all posts
Showing posts with label மனிதர்கள்-ஆறு. Show all posts

Wednesday, January 20, 2010

புரை ஏறும் மனிதர்கள்-ஆறு

சவுதி வாழ்வின் மற்றொரு நாட்காட்டி தாள் யார் கையும் படாமலேயே லாந்தலாக விழுந்தது இன்று.

வெகு நாளாக வைத்திருந்த நேர்ச்சையை குலசாமி வந்து கனவில் சொல்லுவது போல் எல்லாமே யதார்த்தகமாக நிகழ்ந்தது. சரவணாவின் குரல் கேட்கமுடியாத குற்ற உணர்ச்சியை வெற்றி சார் என்கிற குலசாமி குரலால், மனசாட்சியின் வெட்டுக் கத்தியில் இருந்து என் குரல்வளை தப்பிக் கொண்டது இன்று.

ஆம்!..அந்த செ புள்ளி சரவணக்குமார் என்ற என் சரவணாவை இன்று சந்தித்து விட்டேன். கூடுதலாக தேனு மக்கா தேடித்தந்த வெற்றி சாரையும்தான். அவர்களை இதில் பதியவில்லை எனில் அப்புறம் எதுக்கு மக்கா இருக்கு இந்த புரை ஏறும் மனிதர்கள்?

ஆயிரத்தில் ஓர் இருவர்..(ஹி..ஹி..சீசன் தலைப்பு..)


வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஒரு போன் வந்தது. ஒரு போன் சும்மா வரும். ஒன்னு எல்லாம் தாங்கி. மற்றொன்னு, எதிர் பாரா கொக்கிடம் இருந்து நகத்தில் விழுகிற கோடிச்சட்டை போலான குரலாக இருக்கும் இல்லையா? அப்படி இருந்தது அந்த குரலும்.

"ஜெத்தாவில் இருந்து வந்திருக்கேன். பெயர் வெற்றி. ரெண்டு நாள் இருப்பேன். சந்திக்க இயலுமா?" என்பது மாதிரியான ஒரு குரல். முன்னதாக தேனு மக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தபோது இவர் குறித்தும் அறிந்திருந்தேன். தேனு தளத்தில் இருந்த இவரின் பின்னூட்டம் மூலமாக இவர் தளம் போய் வாசித்து அடையாளம் பண்ணிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். "பக்கத்தில் இருக்கிற சரவணாவை போயே பார்க்க முடியலையே..எதுக்கு சக்திக்கு மீறியதான ஆசை" என்பது போல்.

இந்த குரலை கேட்ட பிறகு ஏற்கனவே இருந்த நேர்த்தி கடனையும் சேர்த்து முடித்துவிட்டால் என்ன? என தோன்றியது. சரவணாவை கூப்பிட்டேன். ஆகட்டும் என்றார். பரபரவென சம்பவங்கள் நிகழ தொடங்கியது. மறு நாள் மாலை சந்திப்பதாக பேசிக் கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் என் சாளர மனிதர்களை சந்திக்க கிளம்பினேன்.

சிக்னலுக்கு நிற்கிற டாக்ஸ்சியை உந்தித் தள்ளனும் போல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. "அட..போப்பா.சும்மா சும்மா நின்னுக்கிட்டு" என்று டிரைவரிடம் சொல்ல விரும்பினேன். இப்படி விரும்ப மட்டுமே செய்கிற எவ்வளவோ விஷயம் என்னிடம் இருப்பதால் எப்பவும் போல் இதையும் சொல்லவில்லை. மேலும் பாக்கிஸ்தானி டிரைவர். ஏற்கனவே இரு நாட்டிற்கும் உள்ள பிரச்சினைகள் போதும்.

சரவணன் கோல்டன் ஜூஸ் கார்னரில் நிற்கிறார். வெற்றிசார் மதினா ஹோட்டல் வாசலில். இருவருக்கும் நாப்பது,ஐம்பது அடிகள் தூரம்தான் இருக்கும். இணைக்கத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என உணரும் போது மனசு பறந்து கொண்டிருந்தது.

இறங்கி சரவணாவை கூப்பிட்ட போது அவரும் மதினா வாசலில் நிற்கிறார். முன்ன பின்ன பார்க்காத மனிதர்களை ஆனால் பார்க்க விரும்புகிற மனிதர்களை, பார்க்க நெருங்கி விட்ட தருணத்தை அனுபவித்து இருக்கிறீர்களா மக்கா? ஆம்,எனில் தயவு செய்து அந்த இடத்தில் வந்து நில்லுங்களேன். ஏனெனில் என்னால் அந்த மனநிலையை விவரிக்க இயலவில்லை.

சரவணன் ஓடி வந்து கட்டிக் கொண்டதை, அப்படி ஒரு சிரிப்பு சிரித்ததை,கண்களில் இருந்த புகை போல கிளம்பி வந்த பிரியத்தை எதிர் கொள்ள இயலாத பலஹீனனாக இருந்தேன். இருவரும் சேர்ந்து வெற்றிசாரை தேடிப்போனோம்.

மொபைலை எடுத்து அவரை கூப்பிடலாம் என தோன்றியபோது அந்த முகத்தை பார்த்தேன். ஏற்கனவே அவர் தளத்தில் புகைப்படத்தில் பார்த்த முகம்தான். இன்னும் கொஞ்சம் மலர்த்தி வைத்திருந்தார். இப்ப மலர்ந்தது போல.

காரை திறந்து இறங்கிய வேகத்திலும், கைகளை பற்றிக் கொண்ட வாஞ்சையிலும் மின்சாரம் இருந்தது மக்கா. வெற்றி சார் இல்லையா? மின்சாரம் இருக்கத்தானே செய்யும்! வெற்றிக்கே உரித்தான மின்சாரம் அது. தோல்வி இடத்தில் இருந்து இதைக் கொஞ்சம் உள் வாங்க முயற்சி செய்யுங்களேன். இப்ப நீங்கள் இதன் தாக்கத்தை உணர்ந்து விட்டீர்கள் இல்லையா? நானும் இப்படியே உணர்ந்தேன்.

பிறகு நாங்கள் அந்த வீதியையும் சுற்றி இருந்த மனிதர்களையும் மறக்க தொடங்கினோம். எட்டு வருடமாக நான் இந்த இடங்களில் புழங்கி வருகிறேன். வாய் நிறைய தமிழ் பேசியது இன்றுதான். அதுவும் மண்ணில் இருந்து ஈரம் குழைத்த தமிழ். பிசைந்து பிசைந்து ஊட்டிக் கொண்டோம். இன்னதென்று இல்லாமல் குடும்ப தொடங்கி, இலக்கியம், சினிமா, அரசியல்,இணைய எழுத்தாளர்கள் (வாழ்க,அகநாழிகை வாசு..), சவுதி வாழ்வின் அன்றாட பிரச்சினைகள் என்று எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னங்கால்களை உதைத்து,பிடி கொடுக்காமல் ஓடுகிற கண்டுக் குட்டியை ஒத்திருந்தது பேச்சு. விரட்டி பிடிக்க இயலாமல், சிரிப்பும் சந்தோசமுமாக பின்னாலையே ஓடிக் கொண்டிருந்தோம்.

வெற்றி சாரும் சரவணனும் நிறைய வாசிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். தி.ஜா.தொடங்கி சாரு வரையில் புட்டு புட்டு கடை விரிக்கிறார்கள். பதினைந்து வருடங்களாக வாசிப்பற்ற பள்ளத்தில் கிடந்த நான் சறுக்கி சறுக்கி ஏறிக்கொண்டிருந்தேன். குனிஞ்சு தூக்கியும், ஏந்தி தள்ளிக் கொண்டும் இருந்தார்கள்.

இவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதே தேனு,staarjan,அக்பர் இவர்களின் குரல் கேட்டுக் கொண்டதும் அவ்வளவு பாந்தமாக இருந்தது.

"என்னடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு மகனுக்கு போன் பண்ணேன். படிச்சிக்கிட்டு இருக்கேன்ப்பான்னு சொன்னான். மனுசனாடா நீ? வேர்ல்டு கப் புட்பால் நடந்துக்கிட்டு இருக்கு நீ படிச்சிக் கிட்டு இருகேன்ற? மூடி வச்சுட்டு போய் மேச் பாருடா..காலைல ரிசல்ட் சொல்லணும்" என்று சிரிக்கிற ரசனையான தகப்பன் முகம் கொண்ட வெற்றி சாரையும்....

"அப்படியே ரைட் ஆப்போசீட்ண்ணே தம்பி அருமையாய் படிப்பான். எந்த பழக்கமும் இல்லை. உதாரணம் சொல்றதுக்கு வெளீல இருந்து ஆள் தேட மாட்டாங்க வீட்ல. இந்தா அவனை பாரு..ஒடனொத்த புள்ளைன்னு எதுகெடுத்தாலும் தம்பியை இழுத்துருவாங்க.." என்று பளீரென சிரிக்கிற சகோதர முகம் கொண்ட சரவணனையும்..

இப்படி எழுத்தில் படிக்க கூடாது மக்கா. நேரில்தான் பார்க்கணும்!

மிஸ் பண்ணிட்டீங்களே மக்கா..

உற்சாகமான மனிதர்களிடம் இருந்து ஒரு போதும் விடை பெற்றுக் கொள்ள இயல்வதில்லை. அவர்களையும் நினைவிலாவது கூட்டிக் கொண்டுதானே நாம் நம் வாழ்விற்குள் நுழைகிறோம். அப்படித்தான் நுழைந்திருக்கிறேன் நானும்...

புரை ஏறும் மனிதர்கள் - 1, 2, 3 , 4, 5