Monday, December 27, 2010

புரை ஏறும் மனிதர்கள் - பதினொன்று

மஹா திருமணத்திற்காக நாடு திரும்ப ஒரு மாத காலம் இருந்த சமயம் அது. "ஏங்க..ப்ரபாவிடமிருந்து லெட்டர் வந்திருக்கு" என்றழைத்தாள் லதா ஒரு நாள். "என்ன புள்ள சொல்ற?" என்ற நான் ஆன்மா உதற எழுந்தமர்ந்தேன். ஒரு பெயரை கேட்டதும் ஆன்மா உதறுகிறது எனில், அது வெறும் பெயர் சம்பத்தப் பட்டது மட்டும்தானா? ஒரு பெயருக்கு பின்னால் எவ்வளவு, எவ்வளவு இருக்கிறது! எத்தனை வருடங்கள்! எவ்வளவு கடிதங்கள்! எத்தனையெத்தனை பரிமாற்றங்கள்!

கருவேலநிழல் என்னை கையில் எடுத்த புதிதில் 'ஜ்யோவ்ராம் சுந்தர்' என்ற பெயரில் எப்படி உதறி அடங்கினேன்! "மக்கா" என்ற ஒரு பின்னூட்டத்தில் தொலைந்த அத்தனை வருடங்களையும், அது சார்ந்த உணர்வுகளையும், குமார்ஜி-தெய்வாவையும், மீட்டெடுத்து விடவில்லையா? அப்படி எதுனா ஒரு சர்க்கஸ் நிகழ்ந்து விடாதா? இந்தப் புள்ளையை மட்டும்தானே இன்னும் காணோம்? என மறுகிக் கொண்டிருந்த பெயர் இல்லையா இந்த ப்ரபா!

(இங்கு, இந்த "ஐவரானோம்" என்கிற என் பழைய பதிவு ஒன்றை வாசித்து வருவீர்கள் எனில் இந்தப் பதிவு இன்னும் சுகப்படலாம். அட..சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லு மக்கா என்பவர்களுக்காக, இந்த 'புரை ஏறும் மனிதர்கள்' தொடரை என் அந்திம கால அசை போடலுக்கெனவே சேகரிக்கிறேன். என் சேர்மானத்தை உங்களிடம் பகிரும்போது என் பேச்சை கேட்டால்தான் என்ன மக்கா?)

ஆச்சா? லதா அழைத்தாளா?..

"லெட்டர்ல அட்ரஸ் இருக்கா? போன் நம்பர் இருக்கா?" என்றெல்லாம் லதாவிடம் படபடக்க தொடங்கினேன். "அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா சொன்னேன். கெடந்து பறக்காம ஒழுங்கா ஊர் வரப் பாருங்க" என்றும், என் அனத்தல் தாங்க மாட்டாது, "லெட்டர கிழிச்சுப் போட்டுட்டேன்" என்றெல்லாம் லதா சொல்லியதை நம்ப மறுத்தது மனம். (பொய் சொல்வதில் என்னளவு கெட்டிக்காரியில்லை லதா, கேட்டீர்களா?)

புரண்டு ஓடும் மழை நீரில், தலையாட்டி, தலையாட்டி மிதந்து போகும் தீப்பெட்டி போல "ப்ரபா" மிதக்க தொடங்கினாள். பதினேழு வருடங்களுக்கு முன்பு புரண்ட மழை, அப்ப மிதந்த தீப்பெட்டி... இன்னும் நனையக் காணோம், இன்னும் ஊறக் காணோம், இன்னும் அமிழக் காணோம்!

பால்ய ஸ்னேகிதியும், சில மழை நாட்களும்

ப்ரபா எனக்கு அறிமுகமான போது எனக்கு 29 வயது. ப்ரபாவிற்கு 23! (பால்ய ஸ்னேகம் என்கிற பதத்தில் குழம்பலாம் நீங்கள். எனக்கு 300 வருடம் வாழப் ப்ரியம். அப்படியானால் என் 29 எனக்கு பால்யம்தானே?) மகாவிற்கு 6-ம், சசிக்கு 1 1/2 வயதுகளும். (இங்கு, இந்த மஹா என்பவளின் திருமணத்திற்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை தயவு கூர்ந்து என்னைப் போலவே நீங்களும் மறந்துவிடுங்கள்)

பேனா நண்பனாக முதலில் குமார்ஜிதான் அறிமுகமானான். பிறகு தெய்வாவும், சுந்தராவும். பிறகுதான் இந்த ப்ரபா. ப்ரபாவிற்கு கோவை சொந்த ஊர். குமார்ஜி, தெய்வா, சுந்தராவிடம் பகிரும் சகல விஷயங்களையும் என்னால் ப்ரபாவிடமும் பகிர முடிந்திருக்கிறது. பரஸ்பரம் அவளும்! நட்பில் ஏது பாலின வேறுபாடுகள்?

பெரும்பாலும் வாசித்த புஸ்தகங்கள், கவிதைகள், கதைகள் என இருந்தவை, பிறகு குடும்ப விஷயங்களுக்கும் என பரிணாமம் பெற்றது. இலக்கிய பரிமாற்றங்களை விட குடும்ப விஷயங்களை பரிமாறிக் கொண்டதில் இன்னும் பாந்தமாக, ஒட்டுதலாக இருந்தன. குடும்பத்திற்கு அப்புறம்தானே இலக்கியமும் கருமாதியும். குடும்ப நட்பானாள் மற்ற மூவரையும் போன்றே ப்ரபாவும்.

கடிதங்களில் இச் என்றால் தும்மிக் கொள்வதும் இம் என்றால் இருமிக் கொள்வதுமாக இருந்து வந்தோம். ஒவ்வொருவரிடமிருந்தும் வாரம் இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வந்துவிடும். அப்பெல்லாம் ஞாயிற்று கிழமைகள் எரிச்சல் தரக் கூடிய நாட்களாகவே இருந்ததுண்டு. பயல்கள் மூவரிடமிருந்தும் வரும் கடிதங்களை லதா பிரிக்காமலே வைத்திருப்பாள். ப்ரபாவின் கடிதம் மட்டும் பெரும்பாலும் பிரிந்தே வீட்டிலிருக்கும். மனைவி என்பவள் மனுஷி என்பதை விட மனைவி என்பதுதானே முதல்!

ஒளிக்க எங்களிடம் எதுவும் இல்லாமல் இருந்ததால் ப்ரபாவின் எந்த ஒரு கடிதமும் என்னிடமிருந்து ஒளிந்து கொண்டதே இல்லை. என்றாலும், "என்ன பழக்கம் இது. பொம்பளை புள்ளைக்கெல்லாம் லெட்டர் எழுதிக்கிட்டு?" என்பாள் லதா, எப்பவாவது.

இப்படியாக, சற்றேறக்குறைய ஐந்து வருடங்கள்!

நாட்கள், மாதங்கள், வருடங்கள்,நண்பர்கள், நான், நீங்கள் என்பதையெல்லாம் விட விதி வலியதன்றோ!(இங்கு, வி..த்..தி வ..ல்..லி..ய..த..ன்..றோ.. என வாசிப்பீர்கள் எனில் என் உணர்வை சரியாக புரிகிறீர்கள் என ஏற்கிறேன்)

கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில், மகன் சசி திறந்திருக்கும் கழிவு நீர் தொட்டியில் வீழ்கிறான். நாட்கள் தட்டாமாலை சுற்றுகிறது. மனசு முழுக்க நிரம்பி இருந்த நண்பர்கள் 'அந்தளை சிந்தளை' ஆகிறார்கள். எப்படி என அறிய விரும்புகிறீர்களா? வேறு வழி இல்லை உங்களுக்கு. 'ஐவரானோம்' நுழைந்து வந்தால்தான் முடியும்.

குளுமை கூடிய நாளொன்றின் அதே பின் மதியத்தில்தான் ப்ரபாவும் கிடைக்கிறாள்! பதினேழு வருடம் முன்பு அறிமுகமாகி, ஐந்து வருடங்களில் என் குடும்பத்தில் ஒருவளாகி, கடுமை கூடிய நாளொன்றின் பின் மதியத்தில் தொலைந்து போனாளே, அந்த ப்ரபா!

எப்படி?

தொடர்ச்சியில் பார்ப்போம்...

புரை ஏறும் மனிதர்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10

28 comments:

க ரா said...

மாம்ஸ் படிச்சு முடிச்ச உடனே என்னவோ பண்ணுது மனச..

சுசி said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்..ம்.

வினோ said...

அப்பா பிரபா அக்காவா.. ஹ்ம்ம் சரி சரி :)

நேசமித்ரன் said...

தீராப் பிரியங்கள் நிரம்பிய பா.ரா.

முள்ளின் நுனி சுமக்கும் பனித்துளி இமைகளையும் நனைத்து கொண்டிருக்கிற வாழ்வின் நித்திய வேதனைகள் .அவசங்களில் இருந்து முற்றிலும் பெயர்த்துக் கொள்ள வியலாத பெருந்தீ தழும்புகள் .பிரியங்கள் தேடி கண்டடைந்த கணம்
வாழ்வின் மீதான பிடிமானங்களை சரியும் இடுப்புக் குழந்தையை மீண்டும் இடுப்பிலேற்றி கொள்வது மாதிரியான நிமிஷங்களை தருவதென்று நானும் உணர்ந்திருக்கிறேன் .
உன்னதமான பிரியம் ஆற்று மணல் மாதிரி வாழ்வின் பயணம் அலசி அலசி
காகப் பொன் மாதிரி ஒளிர்கிறது .வாழ்வு துரத்திய தூரம் தான் நண்பா நம்மை
தூர தேசிகளாய் வைத்திருக்கிறது ஏழு கடல் ஏழுமலை கடந்து மனசென்னவோ பால்யத்தின் வசந்தங்களையும் பிள்ளையின் பெருவிரல் நகத்திலும் அல்லவா கிடக்கிறது .
குமார்ஜி கவிதைகள் குயில் தன்னை குயில் என்பது உணரும் காகத்தின் கொத்தல்கல்கள் .

இரண்டுடிரங்குப் பெட்டி கடிதங்கள் என்னிடமும் உண்டு
:)
எந்த அறை என்று தெரியாமல் ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டு
விடாமல் தாய்க் கோழியை அழைத்துக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சு
இருக்கத்தான் செய்கிறது மனசில் எங்கோ...

*இது அன்று எழுதிய பின்னூட்டம்*

**********************

மிருதுவாய் சுவாசத்தால் கொலை செய்யும் கணிதமும் பயின்று வந்திருக்கிறது பழைய வேதாளம்
முதிர் வயதில் நெஞ்சேறி மிதிக்கும்
பேத்தியின் பாதத்தில்.., போகாதா உயிர்
என்றிருக்கும் கணம் போலே

பால்யத்தில் நமக்கும் காயத்தை
பிரித்து கரும் பக்கு
பெயர்த்து துளிர்க்கும் இரத்தம் பார்த்து மூடும் விரல்கள் பின்
பேப்பரோ குறுமணலோ தேடும்
போர்த்தி வைக்க
ஞாபகத்தணலூதி கொளுத்தி
தீக்காய்தல் தீர்ந்ததும்
அகலும் முகங்கள் தனித்தெரிய விட்டு


நெல் உலர்த்துகையில்
சாமையை கால் விரவுகையில்
ச்சை ‘ என்று துரத்தும் காகம்
தகப்பன் மரித்ததும் மகளுக்கு
கூவியழைத்து கோபமா தகப்பனே
என்றிறைஞ்சி காத்திருந்து
வந்ததும் பேருவகை
காகங்கள் எப்பவும் காகங்களாய் இருக்கின்றன

டிஷ் ஆண்டெனா தலை சாய்வில்
லேய் எடுபட்டப் பயலே
என்ற குரலுடன்

ஹேமா said...

ம் கொட்டியபடி கேட்கும்போதே தடைப்படும் குரலாய்...
சொல்லுங்கண்ணா !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எழுதிப் பழகின கையில்லையா? எங்க எழுதணும் எங்க நிறுத்தணும்னு சரியாத் தெரிஞ்சுருக்கு ஹேமா.

பா.ரா.வும் வேலைய முடிச்சுட்டு வந்துரட்டும்.


காத்திருப்போம்.

'பரிவை' சே.குமார் said...

படிக்கும் போது புரையேறவில்லை... முடிக்கும் போது புரையேறுகிறது சித்தப்பா.

taaru said...

//'அந்தளை சிந்தளை'//
யப்பே!! இதுக்கு என்னா அர்த்தம்?!! எங்க ஊர்லயும் இந்த வார்த்தை பயங்கர பேமஸ்.

சிநேகிதன் அக்பர் said...

கவிதையும், உரைநடையும் ஒன்னுக்கொன்னு போட்டி போடுது.

நேசத்தை வெளிப்படுத்துவது, அதுவும் எழுத்தில் என்பது உங்களைப்போன்றோரால்தான் முடிகிறது.

dheva said...

சித்தப்பா ஐவரானோம் படிச்சுட்டுதான் இதை படிக்கவே ஆரம்பிச்சேன்........

ஒரு மழை நாளில் ஜன்னலோரம் அமர்ந்து வெறுமையா நினைவுகளை அலசிப்பார்க்கும் சுகம் எனக்கு கிடைத்தது என்பதை அவ்வள்வு எளிதாக உங்களைபோல வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை எனக்கு....

ஒரு மாதிரி கனம் கூடியிருக்கிறது மனதில்.... வாசித்து முடிக்கையில்

வேறன்ன ... தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்...!

உடம்ப பாத்துக்கோங்க சித்தப்பா!

செ.சரவணக்குமார் said...

புரையேறும் மனிதர்களில் இந்த எபிசோட் ரொம்பவே ஸ்பெஷல். ப்ரபா பற்றி சிவகங்கை வீட்டு முற்றத்தில் சிகரெட் பிடித்தபடியே நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. நடுவில் நம் நேசமித்ரன் அலைபேசியில் அழைத்தபோது ஒரு 20 நிமிடம் அவரோடு பேசிவிட்டு வந்தேன். திரும்ப வரும்போது நீங்கள் பால்யத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தீர்கள். உணர்ச்சிவயப்பட்ட ஒரு நிலையில் முதல் முதலாக உங்களைப் பார்த்தது அப்போதுதான். போற்றுதலுக்குரிய அற்புதமான நட்பு உங்களுடையது.

ஊருக்குப் போய்விட்டு வந்தபின் எழுதிய இரண்டு இடுகைகளும் வழக்கத்தை விட மிகச் சிறப்பாக இருந்தன. பக்குவப்பட்ட, மெருகேறிய அற்புதமான உரைநடை.

நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். நினைவிருக்கிறதுதானே அண்ணா.

Mahi_Granny said...

.ரொம்பவும் காக்க வைத்து விடாதீர்கள்தம்பி. கனம் தாங்க முடியவில்லை

கமலேஷ் said...

கையில உள்ள எழுத்தால்தான் என்ன என்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தி காட்டுகிறீங்க

புதிய புதிய உறவுகளை உருவாக்குவதில் துவங்கி,
காலத்தால் தொலைந்து போனவர்கள் முதற்கொண்டு உங்களின் கூட்டுக்குள்
கொண்டு வந்து சேர்த்து விடுகிறீர்கள்.

எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தேகம்தாம்பா..
இறந்த போனவன் முகத்தில் உங்களின் சில கவிதைகளை தெளித்து
அவன் எழுத்து வர்றானான்னு பார்க்கணும். அவ்வளவுதான்.

Unknown said...

Welcome Back Pa. Ra.
Keep going please.

ஈரோடு கதிர் said...

கொஞ்சம் நெடிய இடைவெளிக்குப் பிறகு பா.ரா... ....
சுகமாய், கனமாய் உள்ளிறங்குகிறது, ம்ம்ம்ம்... காத்திருக்கேன்...

Thenammai Lakshmanan said...

இப்படித்தான் மக்கா சில சந்திப்புகளும் பிரிவுகளும் எப்படி என்று தெரியாமலே நிகழ்கின்றன..

Unknown said...

ம்ம். அன்பு, பாச மழை, வாஞ்சையோடு அழைக்கும் 'மக்கா' ---- இது தான் பா.ரா. வா! அருமை.

நேசரின் (நேசனின் என்று சொன்னா வார்த்தையில் மரியாதை குறைந்து விடும் என்று) அழகிய பின்னூட்டம், எல்லாம் அருமை.

a said...

மிகவும் ஆர்வமாய் படித்து, பிரபாவை சந்திக்க ஆர்வமாய்.........

Ahamed irshad said...

Some Words...., iam totally Surrender your Writing.. no chance..

Paleo God said...

நேரில் பேசியபொழுதும், இங்கே வாசிக்கும்பொழுதும் அதே உணர்வு! :)

vasu balaji said...

ம்ம்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பா.ரா.வைப் படித்தாலே ஒரு ஆசை.. நாமும் இப்படித் தான் எழுத வேண்டும் என்கிற ஆசை..ஒவ்வொரு வரியிலும் என்னமாய் ஜீவன் ஒளி(ர்)ந்து கொண்டு இருக்கிறது?

கயல் said...

:)

vinthaimanithan said...

தீராப்ரியங்கள் நிரம்பிய... நேசன் சரியாத்தான் சொல்லியிருக்கார். ததும்பிநிற்கும் மனம் எத்தனை பேருக்கு லபிக்கும்?

பா.ராஜாராம் said...

மாப்ஸ், இரா! மிக்க நன்றி!

நன்றிங்க சுசி! நல்லாருக்கீங்களா?

நன்றி டி.வி.ஆர். சார்!

நன்றி வினோ!

நேசா, அடிச்சு கொளுத்து! நன்றிடா பயலே!

நன்றிடா ஹேமா!

நன்றி சுந்தர்ஜி! :-)

நன்றி மகன்ஸ் குமார்!

நன்றி பெ.ப. அய்யனார்! :-)

நன்றி அக்பர்!

தேவா, மிக்க நன்றி மகன்ஸ்!

சரவனா, செய்யலாம் சரவனா. மிக்க நன்றி மக்கா!

இதோ இன்று போஸ்ட் பண்ணிரலாம் மஹிக்கா! நன்றியக்கா!

டேய் ராஸ்கல் கமலேஷ்! அற்புதம், உன்னுடைய 'கதவாயுதம்'. அடிக்கடி எழுதுனா என்ன? நன்றி பயலே!

நன்றி செ.ஜெ! நலமா?

கதிர், நலமா? நன்றி மக்கா!

தேனு மக்கா! எப்படி இருக்கீங்க? நன்றி மக்கா!

ரொம்ப நன்றி சேது!

மிக்க நன்றி யோகேஷ்!

சந்தோசம் அஹமது இர்ஷாத்! மிக்க நன்றியும்!

நன்றி ஷங்கர் தம்பு!

நன்றி பாலாண்ணா!

ஆர்.ஆர்.ஆர்! நலமா? மிக்க நன்றி மக்கா!

கயல், நன்றிடா!

மிக்க நன்றி விந்தை மனிதா!

Sugirtha said...

//ஒரு பெயரை கேட்டதும் ஆன்மா உதறுகிறது எனில், அது வெறும் பெயர் சம்பத்தப் பட்டது மட்டும்தானா? ஒரு பெயருக்கு பின்னால் எவ்வளவு, எவ்வளவு இருக்கிறது!//

நிஜம் தான்! அருமை...

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றிங்க சுகிர்தா!