முந்தைய பதிவுகள் :- 'ஒன்று','இரண்டு'
அங்கு தொட்டு, இங்கு தொட்டு நம்மையும் தேட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு எவ்வளவு பாதுகாப்பு உணர்வை தருகிறது!
ப்ரபாவுடன் அழை பேசிய அன்று இரவு முட்டக் குடித்தேன். சாதாரணமாகவே முட்டக் குடிப்பவன்தான் என்றாலும் அன்று saturation point வரையில் குடிக்க தேவையாக இருந்தது. நினைவு தப்பவேணும், தப்பவேணும் என விரும்புகிற நாட்களில்தான் நினைவு தப்புவதே இல்லை.
ப்ரபாவிடம் பேசிய சகலத்தையும் லதாவிடம் அன்றிரவு பகிர நேர்ந்தது. இங்கு, இந்த பகிர என்கிற வார்த்தை கூட எவ்வளவு பாதுகாப்பான வார்த்தையாக இருக்கிறது. சரி,.. அனத்த அல்லது புலம்ப என்று உங்கள் வசதிப் படியே எடுங்களேன். ஏனெனில் லதாவும் அப்படித்தான் எடுத்திருப்பாள்.
"நாற்பது வயசாச்சு புள்ள. இப்ப தெரியாது. இன்னுமொரு எட்டுப் பத்து வருஷம் போய்ட்டா, இவள் தனிமை உணர தொடங்கி விடுவாள். அப்பா அம்மாவிற்கு பின்னால யார் இருக்கா இவளுக்கு? ந்தா நளினி கூட திருமணம் ஆகிப் போய்ட்டா (நளினி, ப்ரபா தங்கை). என்ன விளையாட்டுத்தனமா இருக்கு? குமாரிடம் பேசியிருக்கிறேன். மஹா திருமணம் முடிந்ததும் இங்கு வருவதாக சொல்லியிருக்கிறான். ப்ரபாவையும் வரச் சொல்லி சீரியஸா பேசணும் புள்ள. சவுதிக்கு போவதற்கு முன்பாக இதற்கு ஒரு முடிவு கட்டிட்டுத்தான் போகணும்" என்றேன்.
"சரி,..படுங்க காலையில் பேசலாம்" என்றாள் லதா. தரமான குடிகாரனை, "எதா இருந்தாலும் காலையில் பேசலாம்" என்பது மாதிரியான வார்த்தைகள் சுட்டெரித்து விடாதா?
"இல்ல புள்ள. இத இப்பவே முடிவு செஞ்சுட்டா பரவால்ல" என்பது மாதிரி என்னவோ சொன்ன நினைவு. (ஒரு இரவில்தானே சுதந்திரமே பெற்றோம் என்கிற வில்லங்க நினைப்போ என்னவோ?
"சரி..சரி..விடுங்கப்பா. அதாவது நிம்மதியா இருக்கட்டுமே" என்று முடித்து விட்டாள் லதா. நினைவு தப்பவேணும் என்று விரும்பி குடித்ததாக முன்பே சொல்லியிருந்தேன் இல்லையா? லதாவின் இந்த வார்த்தைக்கு பிறகு நினைவு தப்பி விட்டது. ஆக, நினைவு தப்பும் ரசாயனம் சரக்கில் இல்லை போல.
மஹாவின் திருமணத்திற்கு பிறகு, மகன் "வினோ", கோவையில் வீடு கட்டி கிரஹப்பிரவேசம் வைத்திருந்தான். பத்திரிக்கை வைக்க சிவகங்கை வந்திருந்தான். எனக்கும் பத்திரிக்கை வைத்து, மஹா வீட்டிற்கும் போய் தனியாக பத்திரிக்கை வைத்திருந்தான்.(இதை, மற்றும் இந்த பயணத்தில் சந்தித்த என் நண்பர்கள் அனைவரையும் குறித்து ஒரு பயணக் கட்டுரையாக தொகுக்க விருப்பம். அதில் விரிவாக இதை பேசுவோம்) ப்ரபாவும், குமாரும் சிவகங்கை வருவதாகவும் சொல்லி இருந்தார்கள். அதற்குள்ளாக கோவை போகும் சந்தர்ப்பம் இது. கோவை போகும் போது இனி ப்ரபாவை பார்க்காமல் திரும்ப முடியுமா?
அப்படி, ப்ரபாவை, என் சினேகிதியை, என் பால்ய பருவத்தின் மழை நாட்களாக இருந்த தோழியை சந்தித்தேன்!
என்ன அருமையான தருணங்கள் அவை! மன்னிக்கணும் நண்பர்களே, அந்த தருணங்களை என்னால் அப்படியே பகிர இயலவில்லை. பகிரவும் இயலாது. எல்லா உணர்வுகளையுமா பகிர்ந்து விட முடிகிறது?
மஹா பிறந்த அன்று உன் மன நிலையை மூன்றில் ஒரு பங்காக சுருக்கி வரையவும் என்று சொன்னால் எப்படி முடியாதோ அப்படி இதையும் பகிர இயலவில்லை. கோவையில் நண்பர் வடகரை வேலணை சந்தித்தேன். (இவர் குறித்தான பகிர்வையும் பிறகு பயண கட்டுரையில் பார்ப்போம்) சந்தித்த சில நிமிஷங்களிலேயே ஒரு கேள்வி கேட்டார். "மகளின் கழுத்தில் தாலி ஏறப் போகும் அந்த தருணத்தில் உங்க மன நிலை எப்படி இருந்தது ராஜாராம்?" என்றார். வேலனும் பெண் குழந்தையின் தகப்பன்.. இல்லையா?
நான் சற்று யோசித்து, (அந்த தருணத்திற்குள் மீண்டும் நுழைய வேணும் இல்லையா?) "ஐயர் தாலியை கையில் எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்த சமயம், மஹா நிமிர்ந்து என்னை ஒரு பார்வை பார்த்தாள் வேலன்" என்று சொல்லிக்கொண்டே வந்தவனால், மேற்கொண்டு பேச முடியாமல், "அந்த உணர்வை சொல்லத் தெரியலையே வேலன்" என்று முடித்து விட்டேன்.
அப்படியாகவே இப்பவும் இருக்கிறது. இப்படியாக பகிர முடியாத உணர்வுகள் என எவ்வளவு இருக்கிறது. சரி! அதது அப்படியே இருக்கட்டும். அப்படியே இருந்து விடுவதில்தான் அததற்கு அழகும் கூட!
மறுநாள், வினோ வீட்டு விசேஷத்திற்கு ப்ரபாவும் வருவதாக இருந்தது. வினோ, ப்ரபாவிற்கும் பத்திரிக்கை அனுப்பியிருந்தான். அது சமயம் ப்ரபா ஒரு ஃபைல் கொண்டு வந்து தந்தாள். 'raja makkaa' என்று தலைப்பிட்ட ஃபைல் அது. ஐந்து வருடங்களாக அவளுக்கு நான் எழுதிய கடிதங்கள் அதில் இருந்தன. இப்படியே குமார் கடிதங்களையும் வைத்திருக்கிறாளாம். ஃபைலை புரட்டினேன். இன்றிரவும் முட்டக் குடிக்கிற சந்தர்ப்பத்தை தர போதுமான காரணங்கள் அவற்றில் இருந்தன.
அதில் நம் ஜ்யோவ்ராம் சுந்தரின் கடிதம் ஒன்றும் இருக்கக் கண்டேன். "இது எப்படி இங்கு வந்தது ப்ரபா? என கேட்டேன்." நீதாண்டா அனுப்பி தந்த.எனக்கு வேலை விஷயமா சுந்தரிடம் கடிதம் எழுதி இருந்தேல்ல. அதுக்கு சுந்தர் பதில் எழுதிய கடிதம் இது. அதுனால எனக்கு அனுப்பி இருந்த" என்றாள்.
சுந்தருக்கு போன் பண்ணி, " '97-ல் நீ எனக்கு எழுதிய கடிதம் ஒண்ணு கிடைச்சிருக்குடா" என்றேன். "ஏன்? நீங்க எனக்கு எழுதிய எல்லா கடிதங்களும் என்னிடமும் இருக்கு ராஜாராம்" என்றான். நண்பர்கள் எழுதிய கடிதங்களில் ஒன்று கூட தற்சமயம் என் கைவசம் இல்லாத குற்ற உணர்வு பெரிதாக தோன்றியது எனக்கு.
"நீங்களும் கடிதங்களை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்களாடா? என்று குமார்ஜியிடமும், தெய்வாவிடமும் கேட்க பயமாக இருந்தது. அவன்களும் 'ஆமாம்' என்று சொல்லிவிட்டால்? போங்கடா பயல்களா.. நீங்களும் உங்க லெட்டரும்!
காலங்களுக்கு பிறகு, இதோ ப்ரபா லெட்டர் எழுத தொடங்கி விட்டாள். நம்புங்கள் மக்களே, இன்னும் காகிதத்தில் கடிதம் எழுதுகிற மனிதர்களும் இருக்கிறார்கள்தான் போல...
"இருக்கிறேன்" என்று ப்ரபாவிடம் காட்டிக் கொண்ட மூன்றாவது நாளில் இந்த கடிதம் வந்தது...
***
கோயம்பத்தூர்
08-10-2010
9.35 pm
அவசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்.
ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித் திண்ணையில்
காலணி இடும் இடத்தில்
நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்.
மறந்த மயிலிறகின் பீலியைப் போல்
கிடைக்கிறாதாவென பாருங்கள்.
கிடைக்காது போகிறபோது
மட்டுமே இறைஞ்சுகிறேன்.
என் பிரியமானவர்களே
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை.
- நன்றி.. பா.ராஜாராம்.
ராஜா மக்காவுக்கு,
என்னுடன் பேசுவதை தவிர்பதற்கு உனக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறதுதான்.. எனக்கும் கூட பேச்சில் தெளிவாய் வெளிப்பட முடிவதில்லை.
ஏதோ ஒன்றாய் வெளிப்பட இருந்து
வேறு ஏதோ ஒன்றாய்
உருவம் கொள்ளும்
நான் மற்றும் என் வார்த்தைகள்
எப்போதும்
பூரணத்துவம் பெறுவதில்லை.
so..எழுத்துதான் எனக்கு சரியான களம். உன்னிடம் எல்லாமும் பகிர...
நிறைய மாறியிருக்கிறாய் மக்கா நீ! ஆனால் இந்த மாற்றம் அழகாய்த்தான் இருக்கிறது.இன்னுமே ஒரு நல்ல வாழ்க்கை தோழனாய், நல்ல தகப்பனாய், என மிகவும் அழகாக ஆகி விட்டாய் நீ. சந்தோசமாயிருக்கிறது மக்கா.. நாகுவிடம் கூட இதை பகிர்ந்து கொண்டேன்...லதா, குழந்தைகள் என உன் நேசிப்பின் ஆழம் குறித்து!
அப்புறம்?..நிறைய பேச இருக்கிறது. என்ன.. எப்படி பேசன்னுதான் தெரியலை..நீயும் கேட்க விருப்பமற்றுதான் இருக்கிறாய்! உன் பாஷையில் சொன்னால், "உனக்கென்ன பாடோ?"
இந்த 13 வருடங்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எதுவும் இல்லாமலும் இருக்கிறது மக்கா! நான் ஏற்கனவே சொன்னது போல் இவ்வளவு நாட்கள் உன் தொடர்பு எல்லைக்குள் வருவதை ஒத்திப் போட்டு வைத்திருந்தனே தவிர , என் பிற்பகுதி வாழ்க்கை உங்களுடனான நட்புடனும், நேசிப்புடனும் தான் முடிவடையும் என்பதில் எனக்கு எப்போதும் எந்த விதமான சந்தேகமும் இருந்ததில்லை.
மக்கா, அதாவது இது என் நிலை மட்டும்தான். உன் மேலான நேசிப்பு, 'பாலின நிலைகளுக்கு' அப்பாற்பட்டது. அதை எப்படி உணர வைக்கன்னு தெரியலை எனக்கு. இருந்தும் கூட சில சமயம், நான் பையனாய் பிறந்திருக்க கூடாதான்னு தோணும். அல்லது நீ பெண்ணாய். இன்னும் தெளிவாய் சொல்லனும்னா...suppose இப்ப நீ eligible person- ஆ இருந்திருந்தா கூட, that means if you are a spinster as such as me..அப்பவும் என் வெளிப்பாடு இதே நிலையில்தான் இருந்திருக்கும். நீ என் மிக மிக நேசிப்பிற்குரிய நண்பனாய்! ok?
என்னிடம் கேட்க உனக்கு ஒன்ற்மில்லாவிடாலும், எனக்கு நிறைய இருக்கு மக்கா...உன்னிடம் கேட்கவும்..பேசவும்..
மிக முக்கியமாய் எனதன்பு சசி பையன் குறித்து! அந்த தருணம் லதாவும் நீயும் எதிர் கொண்ட அந்த தருணங்கள்..நான் அப்பவெல்லாம் உங்களுடன் இல்லாமல் போனேனே என்கின்ற வருத்தமும் , வேதனையும் இனி, சாகும் வரையில் எனக்குள் இருக்கும். வேறென்ன சொல்ல?
'தகப்பனாய் இருப்பது ' கவிதையும் அது சார்ந்த உன் எழுத்தும் அந்த காலகட்டத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது ராஜா மக்கா! அதே தெருக்களில் சந்தோசமாய் திரிந்த காலங்கள் போய் ..எவ்வளவு கொடுமையான தருணங்களை எதிர் கொண்டு இருந்திப்பாய் நீ! மனசு வலிக்குதுடா..நினைச்சுப் பார்த்தா.. நினைக்கவே முடியலை..
சந்தோசமான காலங்களில் உன்னுடன் இருந்துவிட்டு, உன் கஷ்ட்டமான தருணங்களில் உன்னிலிருந்து விலகி இருந்து விட்டேனென்ற வேதனை... நான் முன்பே சொன்னது போல், நான் சாகும் வரையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்தான்! நாகுதான் சொல்லும், " என் சந்தோசமான நேரங்களில் நீ பங்கெடுத்துகாட்டாலும்..என் கஷ்டங்களின் போது நீ கண்டிப்பா என் கூட இருப்பாய். இதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை" என்று.
அப்படிப்பட்ட ஒரு மன நிலையை உனக்கு நான் தர முடியாமல் போய் விட்டதுதான்! என்னுடைய மீட்டெடுக்க முடியாத வேதனை ராஜா மக்கா இது. இதற்கு உனக்கு நான் ஏதாவது பண்ணி விட முடியாதான்னு இருக்குடா. எனக்கு என் உணர்வுகளை சரியாக சொல்ல தெரியலை..இந்த நேரம்.
நான் இது வரையில் இரண்டு தருணங்களில்தான் பணம் குறித்த அருமையை(?!) அறிதலை முழுமையாக உணர்ந்திருக்கேண்டா. முதலாவது, பிராணிகளுக்காக ஒரு trust மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி... தெருவில்..சாப்பாட்டுக்கு, நோயினால் கஷ்டப்படுகிற உயிரினங்களுக்காக--நாய், பூனை, "மதம்" பிடித்த மனிதனால் கோவில் போன்ற இடங்களில் சிறைப் பட்டு கிடக்கும் யானைகள், பயன் தரும் வரையில் உபயோகப் படுத்தி விட்டு இறைச்சிக்காக கொல்லப் படுகிற மாடுகள், ஆடு, என எல்லாமும்--ஒரு பெரிய சரணாலயம் போன்ற அமைப்பை ஆங்காங்கே ஏற்படுத்த வேணும், இந்த பூமி முழுதும்! அதற்கு தேவைப் படும் கோடிக் கணக்கான பணம் என்னிடம் இருந்திருக்க கூடாதான்னு தோணும். ( அவ்வப்போது pocket ல் பைசா இல்லாமல் திரிகின்ற யதார்த்தம் வேறு விஷயம்)
கடவுள் என்கின்ற விஷயத்தை பற்றிய கேள்வியும், வெறுப்பும் எனக்கு ஏற்படுவது, அதுக கஷ்டப் படுவதை..நிவர்த்தி செய்ய இயலாத..அந்த தருணங்களை எதிர் கொள்ளும் சமயம்தான். doctor கை விட்ட பிறகு 2 நாய், ஒரு பூனை என அதுகளை mercy killing க்கு உட்படுத்தியது கூட அப்படிப் பட்ட ஒரு தருணத்தில்தான். (அந்த நேரத்து வலியும், வேதனையும்..வார்த்தைகளால் சொல்ல முடியாதவை மக்கா)
நம்மை சுற்றி நாம் பார்க்க ஆரம்பித்தோம்னா, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் பல நேரங்களில் ஒரு விஷயமாகவே கூட தோணாது மக்கா. (அப்புறம் அதற்க்கு உபரியாக தண்ணியடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் கூட தோணாது!) எல்லா நேரமும் நீ உனக்குள்ளேயே அமிழ்ந்து போய் விடாதே மக்கா! அதைத்தான் சொல்ல முடியும். உனக்கு தெரியாதது இல்லை!
அப்புறம்...இரண்டாவதாக பணம் என்பதன் அந்த அசுர சக்தியை அறிய நேர்ந்தது சசி பற்றி கேள்விப் பட்ட அந்த தருணம்!.. நான் பணக்கார பெண்ணாக இருந்திருக்க கூடாதான்னு இருந்தது ராஜா மக்கா.. வாழ்க்கையில் முதன் முறையாய்! மிக உண்மையான வார்த்தைகள் இது! என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால் இப்படி எந்த கஷ்டமும் பட்டிருக்க வேணாம். இப்ப நீ சவுதிக்கு கூட போக வேணாம்...இல்லையே மக்கா என்னிடம்! என்ன செய்ய?.. இருந்தும் கூட ஆறுதல்தான்..எல்லா கஷ்டங்களுக்கும், வேறொரு நல்ல தீர்வு நிச்சயம் உண்டுதான்.
உனக்கு இப்போது கிடைத்திருக்கிற மிக அருமையான நண்பர்கள்! எவ்வளவு பெரிய விஷயம் இது! நம்மை சுற்றி இவ்வளவு அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்கின்ற உணர்தல் தரும் சந்தோசம்..அதற்கு ஈடு எதுவும் உண்டா மக்கா? நீ அப்படிப் பட்ட மனிதர்கள் மத்தியில் இருக்கிறாய் என்பதுதான் இப்போதைய என் பெரிய சந்தோசம் ராஜா மக்கா! வேறன்ன சொல்ல இருக்கு?..
சரிடா.. வேறென்ன? இந்த நேரம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுத்தாகி விட்டதா? லதாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா? மஹா, சசியை விசாரித்ததாக சொல்! சரி மக்கா..நான் பிறகு எழுதறேன்..ஏனோ தெரியலை வலிதான் மிஞ்சுகிறது கடைசியில்!
தோழமை
என் தனித்திருக்கும் பொழுதுகள்
வருகையில் எல்லோரும்
சந்தோஷமாகத்தான் வருகிறார்கள்.
இவ்வளவு நாட்கள்
'உன்னை இழந்திருந்தது எப்படி?'
எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.
தன் வாழ்நாளின்
தவிர்க்க இயலாத நட்பென
கொண்டாடுகிறார்கள்.
என் துக்கங்களையெல்லாம்
தாங்கிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
நட்பின் முழுமையானதொரு
சார்ந்திருத்தலுக்கு நான் ஆட்படும்
பிறிதொரு பொழுதில்
சந்தோஷமாகவே போயும் விடுகிறார்கள்..
மற்றுமொரு தனித்த பொழுதில்
என்னை இருத்தி விட்டு!
மனித உறவுகளுடனான
எல்லை வகுக்க
எப்போதும் தெரிவதில்லை
எனக்கும்..
(என் நாய் குட்டிக்கும்)
அன்புடன்
ப்ரபா..
***
பி.கு.
-------
இங்கு மூன்று கண்ணிகள் மிக முக்கியமானவை. எந்த ஒரு கண்ணி முறிந்திருந்தாலும், இந்த ப்ரபாவை இந்த பயணத்தில் பார்த்திருக்க இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமை ஆகிறது.
நன்றி விகடன், நாகலெக்ஷ்மி, லதா!
***
புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B
Saturday, January 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
வாழ்கையில் உண்மை பேசுபவர்கள் மிக குறைவு..
பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
பா.ரா சார் : தங்களின் முகம் என் கண்முன் தெரிகிறது இந்த கடிதங்களின் மூலம்...
//தரமான குடிகாரனை, "எதா இருந்தாலும் காலையில் பேசலாம்" என்பது மாதிரியான வார்த்தைகள் சுட்டெரித்து விடாதா?//
வார்த்தைகள் அதன் போக்கில் அணி சேர்ந்து.. சிரிக்க வைத்து .. சீரியஸாய் யோசிக்க வைத்து.. கண்களில் திரைப் படலமும் தந்து.. அருமை.. அருமை..
இதுல வர்ற கவிதைங்க ரெண்டும் யாரோடது?
சித்தப்பா...
எத்தனை துக்கங்கள் உங்கள் மனதுக்குள்... அத்தனையும் அமுக்கி வைத்து பாசமாய் மக்கா என்றழைக்கும் நீங்கள் உயரத்தில்...
நட்பின் வெளிப்பாடுதான் எத்தனை அழகு. அது பிரபா அவர்களின் கடிதத்தில் கொட்டிக்கிடந்து படிக்க முடியாமல கண்களை மறைத்துக் கொண்டது கண்ணீர்த்துளி.
எல்லாருக்குள்ளும் இது போன்ற வாழ நினைத்து இழந்த நட்புக்கள் ஏராளம், எனக்குள்ளும்தான்... மீண்டும் கிடைத்த நட்பு உங்கள் வாழ்க்கையின் பாதையில் சீராக பயணிக்கட்டும்.
பா.ரா,
எத்தனை அழகான நட்பு, எத்தனை அருமையான தருணங்கள், எத்தனை ஆழமான எழுத்து!!! உண்மையில் மிக மிக நெகிழ்ச்சியாய் இருந்தது!
@ராஜசுந்தரராஜன் அண்ணன்
//இதுல வர்ற கவிதைங்க ரெண்டும் யாரோடது?//
ப்ரபாவின் கவிதைகள்தான் அண்ணே!
பிரபா நிஜமாகவே ஒரு அற்புதமான பெண் ராஜா அண்ணா அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி :)
ஒரே கருத்துள்ளவர்களுடன் ஏற்படும் நட்பு எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்பதை உங்களது இந்த இடுகைகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
//மணிபர்சை தேடிக்கொண்டிருக்கிற போது முன்பு எப்பவோ தொலைத்த பேனா கிடைக்குமே அது போல! இன்னும் ஒரு கவிதை பாக்கி. ப்ரபா என்கிற பெண் கவிதை.
ப்ரபாவையும் தேட போவதில்லை. தேடியா கிடைத்தார்கள் இந்த மூன்று பேரும்? வழக்கம் போல தேவைக்கு தீப்பெட்டியை தேடினால் போதும், தொலைத்த பென்டார்ச் கிடைத்தாலும் கிடைக்கும். பார்க்கலாம்..//
கிடைத்தே விட்டது பா.ரா அண்ணே
மாம்ஸ்,
உங்கள இப்பவே நேர பார்த்து பேசனுன்னு தோனுது மாம்ஸ்...
அப்படியே கட்டி போடுது உங்க எழுத்து...
பிரபா மேடம் ரொம்ப உசந்து நிக்கிறாங்க என் மனசுல...
இன்னும் நிரைய சொல்லுங்க மாம்ஸ்...
அன்புடன்,
இராமசாமி.
மனுஷா/மனுஷி
தாங்க முடியல!
நான் இப்போ எது எழுதினாலும் அது குப்பைதான் இந்த அன்புக்கு முன்னாடி.வாசிக்குற ஒவ்வொருத்தம் மனசிலையும் பிரபா அடையப் போற உசரம்.அவங்க பால்யத்தோழிய நினைச்சுப் பாத்து கண்ணோரம் தொடைக்கப் போற ஈரம் அதை விட என்ன ...ர எழுதிக் கிழிக்கப் போறேன்.
என் வீட்டிலும் இரண்டு நாய் குட்டிகள் கால் முகர்ந்து வீடடைந்தவை
ஒரு தொட்டி மீன்கள்
நான்கைந்து வயதில்
ரேகை படிய
குழந்தைமை தொலைந்த
என்னிடத்தில் வைத்து கழுவி
பராமரிக்கிறாள் அம்மா
தீவனம் போட வந்து போகிறாள்
இன்றும் சிநேகிதி
சிநேகிதியாய் மட்டுமே இருக்கப் பிடித்த சிநேகிதி
(இந்த வரிகள் ரொம்ப அபத்தமா நிறைவில்லாம இருக்கு .ஆனா என்னால இப்போ இதுதான் முடியுது .நெகிழ்ந்து...)
பாதிக்குமேல் படிக்கமுடியாமல் உதடுகள் கோணிக்கொள்ள அவசரமாய் ஸ்குரோல் செய்து பின்னூட்டப் பகுதிக்கு... இன்றிரவு நான் தூங்கினாற்போலத்தான்!
நல்ல நட்புகள், அதுவும் அறிவு பூர்ந்தமையாக கிடைப்பது அரிது.
உடன் ஞாபகத்திற்கு வருவது 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற வரிகள். நீங்கள் எல்லாம் மானிடராய் உயர்ந்து நிக்கறீங்க. உங்கள் அருமையான நட்பிற்கு ஒரு வணக்கம்.
//அங்கு தொட்டு, இங்கு தொட்டு நம்மையும் தேட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு எவ்வளவு பாதுகாப்பு உணர்வை தருகிறது!//
ஆமாங்க்ணா !
அண்ணா...எங்களோடும் கை கோர்த்த அற்புதமான நட்பு !
பிரபாவின் கடிதம் தவிர மற்றவை பா. ரா. வுடன் பக்கத்தில் உட்கார்ந்து பேசக் கேட்பது போல ஒரு பிரமை. இரண்டு வருடத்திற்கான matter ரெடியாக இருக்கு கருவேல நிழலில். சந்தோசம் தான்.
அருமையான எழுத்து மட்டும் இல்லை. ஆழமான நட்பும்!
கவிஞர் ப்ரபாவுக்கு வாழ்த்துகள். இரண்டு கவிதைகள் என்றுவிட்டேன்.
//ஏதோ ஒன்றாய் வெளிப்பட இருந்து
வேறு ஏதோ ஒன்றாய்
உருவம் கொள்ளும்
நான் மற்றும் என் வார்த்தைகள்
எப்போதும்
பூரணத்துவம் பெறுவதில்லை.//
இதுவும், ஏன் மொத்தக் கடிதமும் கவித்துவம் ததும்புவதாகவே இருக்கிறது. வாழ்க!
பணம் இல்லாமை குறித்த ஏலாமை உணர்வு புரிகிறது, ஆனால் பணம் ஒருங்கிணைப்பதை விட்டு உறவுகளைப் பிரிக்கிற காரியத்தை என்ன சொல்ல? ஒருவகையில் இல்லாமல் இருப்பதும் நல்லதுதான். நட்பு புரிந்துகொள்ளும்.
முதல் கவிதையில்,
//கிடைக்காது போகிறபோது
மட்டுமே இறைஞ்சுகிறேன்.
என் பிரியமானவர்களே
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை.//
என்பதில் இறுதி அடி, /ஒருமுறைகிருமுறை யோசியுங்கள், 'சரி விட்டுத்தள்ளு' என்பதற்கு முன்பாக'/ என்பது போல் வரவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. முன் அடி, ‘கிடைக்காது போகிறபோது’ என்று வருவதால் இப்படி.
இரண்டாவது கவிதையில், ‘(என் நாய்க் குட்டிக்கும்)’ என்னும் இடத்தில் அது அப்படி ஒரு statement-ஆக அமையாமல், நாய்க்குட்டிக்கு மனித உறவுகளோடு எல்லை வகுக்கத் தெரியாத காட்சி ஒன்று அமையவேண்டும். அதுவும் அடைப்புக்குறிகளுக்குட் படாமல். அதுதான் நாய்களுக்கு நாம் செய்கிற மரியாதையும் கூட.
அக்கறை உள்ளவர்களையே விமர்சிக்கிறாம். இதையும் கவிஞர் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
குமார்ஜியும் கடிதங்களைச் சேமித்து வைத்திருப்பவர்தான். ஒரு முறை அவருக்கு வந்த பழைய கடிதங்களைக் காட்டியிருக்கிறார். தெய்வா கறாரான ஒழுங்குகளைக் கடைபிடிப்பவர். அவர் வைத்திருக்காமலா இருப்பார் :)
அன்பு பாரா,
எழுத்தில் சந்திப்பது தான் அலாதி சுகம்.
பால்ய சிநேகிதியும் சில மழை நாட்களும் இன்னும் மிச்சமிருக்கும் குளிர்காலத்தில் கிறுக்கிய நாட்குறிப்புகள். அழகாய் இருக்கிறது. மனசுக்குள் திரும்ப திரும்ப இது போல சித்திரம் வரைய ஆசை வருகிறது... கித்தானை வெறித்துக் கொண்டு நிற்கிறேன்... ஏதும் தோன்றாமல்... வெற்றிடத்தின் சூனியங்கள் வறையும் வண்ணங்கள் அற்ற சித்திரங்களில் மிச்சமிருக்கும் நினைவுகள்... கடைசி வரை இருத்தி வைத்திருக்க முயலும் ஐஸ்கட்டியின் திண்மை மாதிரி...
மற்றபடி வாழ்த்துக்கள்... தமிழ்மணம் விருதிற்காய்...
ரொம்ப ரொம்ப பொறாமையா இருக்கு பாரா... உங்களப் பாக்கையிலே...
அன்புடன்
ராகவன்
நன்றிங்க சக்தி ஸ்டடி செண்டர்!
நன்றி யோகேஷ்!
நன்றி ரிஷபன்!
நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணன்!
குமார் மகன்ஸ், மிக்க நன்றி!
நன்றி அசோக்!
நன்றிங்க சுகிர்தா!
நன்றிடா சக்தி!
ஆம் அக்பர்ஜி! மிக்க நன்றி! அப்புறம் அந்த எண்ணெய்... :-)
நன்றி மாப்ஸ் இரா! குரல் கேட்டதில் மிகுந்த சந்தோசம்!
நன்றி நேசா மக்கா!
ரொம்ப நன்றி விந்தை மனிதன்!
நன்றி மகன்ஸ் ராஜவம்சம்!
நன்றி சேது!
நன்றி ஜனா!
நன்றி ஹேமா!
நன்றி மஹிக்கா!
நன்றி சீதா!
நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணன்! முதல் கவிதை என்னுடையது அண்ணன்! என் கையைக் கொண்டு என் கண்ணை குத்தனுமாம் ப்ரபாவிற்கு! :-) (நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்கிறேன் அண்ணே!) கடிதம், கவிதைகள் நல்லா எழுதுவாள். ஒரு ப்ளாக் திறந்து எண்ணங்களை பதிந்து வா என்று சொல்லி வந்திருக்கிறேன். என்ன செய்கிறாளோ? (நாம் சொல்வதை எல்லாம் கேட்டால் அவள் கொம்பு முறியுமோ என்னவோ?) :-)
நன்றி சுந்தரா! நல்லாருங்கடே! :-)
நன்றி ராகவன்! //எழுத்தில் சந்திப்பது தான் அலாதி சுகம்.// ஆம் ராகவன்! மிகுந்த சந்தோசம்! உங்களின் சிறுகதை தொகுப்பு சீக்கிரம் வரவேணும் மக்கா!
மூன்றாவது பத்தியை மிகுந்த படபடப்புடன் எதிர்கொண்டேன் பா.ரா.
பின்னணி தெரிந்த பின் படிக்கப்படும் கடிதங்கள் மிகவும் உக்கிரமான உணர்வுள்ளவையாகத் தோன்றுகின்றன.இதுவும் அப்படித்தான்.
ப்ரபாவின் கவிதையைப் படித்ததும் சிறிது தண்ணீர் குடித்து என் அழுத்தத்தைச் சரிசெய்து கொண்டேன் பா.ரா.
உறவுகளின் மேன்மையால் வதைத்து எடுத்த ஒரு காலைநேரத் திரைக்காட்சிக்குப் பின் கசிந்த கண்களோடு வெளியில் வந்து கண்கலை இடுக்கிக் கொண்டு கும்பலில் கலந்து போன உணர்வு மிஞ்சுகிறது.
பின்னூட்டத்தை எவ்வளவு ரசிச்சு செய்கிறீர்கள் சுந்தர்ஜி! நன்றி மக்கா!
உங்களை போன்ற பிரியங்கள் வாய்க்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கு அண்ணா.
இதோ இப்போ நீயும்தானே என் குடும்பம் அல்லது நீ விரும்பும் பிரியம் லாவண்யா. எல்லோருமே உள்ளுக்குள்தாண்டா இருக்கோம் லாவன்ஸ்!
Post a Comment