Sunday, January 30, 2011

காதல் படிக்கட்டுகள்

இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டது எனக்கு. அவளுக்கும்தான். எப்போதாவது 'கல்யாணம் கார்த்தி' களில் பார்த்துக் கொள்ளவென கிடைத்துக் கொண்டிருக்கிறாள்.

"அக்கா வரலையா மாமா?" என்கிறாள். அவுகளுக்கு வயல்ல வேலைன்னு வரலை" என்கிறாள். சுண்டு விரலை பிடித்து வருகிற பெரியவளை தலை தடவி பெயர் சொல்லி அழைக்கிறாள். தோளில் சாய்ந்து, வர முரண்டுகிற சின்னவனை கன்னத்தை நிமிண்டி தன்னை " சித்திடா" என்று அறிமுகமாகிக் கொள்கிறாள். இருக்கிறமாதிரி இருந்து கொண்டே ..இல்லாமல் ஆனதை சொல்கிறாள். எனக்கும், இதுகளுக்கும், ஏன் தனக்கும் கூட!

வேறு வேறு மாதிரியாகி விட்டது எல்லாம். ஆயினும் அவர்களை நான் அவள் என்று நினைக்கவும் தீர்மானிக்கவும்தான் ப்ரியமாக இருக்கிறது. எத்தனையோ 'வாங்கி வந்த வரங்'களை எத்தனை வருடம் கழிந்தாலும் மாற்ற முடியாது. மாற்றவும் பிடிக்காது!

ஒரு திருமண நாளும் மற்ற 'காரிய' நாட்களும் ஒரு நாளுக்கான அவகாசமாக இருப்பது போதாமல் இருக்கிறது. விசேஷ நாளுக்கு முந்திய நாள் வந்து, கழிந்த பிந்திய நாள் போகப் பிடித்திருக்கிறது. உறவுகள் சூழ வாழவென கிடைக்கிற 'மூச்சாரல்' மட்டும்தான் காரணமா?

எல்லாம்தான்! எதை இல்லை என்று சொல்லிவிட முடியும்?

இப்போதெல்லாம் மிக கூட்ட நெரிசலான முகங்களிடையே இருந்துதான் அவளின் முகத்தை பொறுக்கி எடுக்க முடிகிறது என்னால். ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளில், சினிமா இடைவெளியில், தனியான நடையில், அயர்ச்சி தெரியாதிருக்கவென அவளின் மின்னொளி வீசும் கண்ணை, சிரிக்காமல் சிரிக்கிற முகத்தை, தேடி அடைகிறது உண்டுதான் நான்.

மூன்று நான்கு வருடத்தின் முந்தியதொரு நாள்...

உறவுப் பையனொருவனின் திருமண நாள் அது. அவளுடைய அவர் இன்றியும் என்னுடைய இவள் இன்றியும் போயிருந்திருக்க நேர்ந்தது- எப்பவும் போல்! (உறவினர்கள் எனக்கும் அவளுக்குமான உறவினர்கள்தானே? இவளுக்கும், அவருக்குமான உறவினர்களா என்ன?)

முந்திய விசேஷ நாட்களில் பார்த்தது போலெல்லாம் இல்லை. குழந்தைகள் வேறு வளர்ந்து வருகிறார்கள் இல்லையா? மற்ற எல்லா உறவினர்களைப் போலவே அவளும் நானும் ஆகிக் கொண்டிருந்தோம். எதையெதையெல்லாமோ கருதி எது எதுவெல்லாமாகவோ ஆகிக் கொண்டிருக்கிற எத்தனையோ பேர் போல.

திருமணமெல்லாம் முடிந்து புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புகைப் படத்துக்காக நின்று கொண்டிருந்தவள் நினைத்துக் கொண்டாற்போல் ஓடோடி வந்து என் சின்னவனை அள்ளியெடுத்து, ஓடோடிப் போய் மீண்டும் அந்த ' குரூப் போட்டா'வுக்காக நின்று கொண்டாள்.

நைந்த பலவீனமான இழைகளை முட்ட அறுந்துவிடாதபடிக்கான நெய்தல் அது!

அப்புறம், அன்றைய இரவு...

என்னுடைய மூத்தவள், அவளுடைய மூத்தவளுடனும், மற்ற சேக்காளிகளுடனும் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாள். விடிந்தால் 'அவரவர் வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு' என்று புறப்பட்டாக வேணும். அடுத்தது யார் வீட்டுத் திருமணமோ? யார் வீட்டுக் காரியமோ?

சின்னவனை தூக்கிக் கொண்டு, வாசலில் இருந்த திருமணக் கொட்டகை தாண்டி, விரிந்த வேம்பின் கரிய நிழலில், சாய்ந்து கிடக்கும் மாட்டு வண்டியின் முகட்டுக் கட்டையில் வந்து அமர்ந்து கொள்கிறேன்.

வாசலுக்கு வருகிறாள் அவள். திசையெங்கும் விரிந்து பரவிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். இடுப்பில் இருக்கிற அவளின் சின்னவனுக்கு ஊட்டியபடியும், அவனுடனே பேசியபடியும் அசங்கி, அசங்கி வந்து கொண்டிருக்கிறாள். வருவாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறதின் நீட்சியில்,

"மாமாவா?" என்கிறாள், நெருங்கி.

"இவனை சாப்பிட வைக்கிறதுக்குள் போதும் போதுமுன்னு ஆயிரும்" என்கிறாள் தொடர்ந்தாற்போல்... எப்போதுமே இப்படித்தான் அவள்!.. எது ஒன்றையும் தொடங்க சிரமப் பட்டவள் இல்லை.

பேசிக் கொண்டே ஊட்டிக் கொண்டிருக்கிறாள்- மடியில் இருக்கிற என்னுடைய இவனுக்கும், இடுப்பில் இருக்கிற அவளுடைய அவனுக்கும். பேச எனக்கொன்றுமில்லை. கேட்க நிறைய இடம் இருக்கிற இடத்தில், பேச என்ன இருக்கிறது? அட, பேசித்தான் என்ன?

"சந்தோசமா இருக்கிறீர்களா மாமா?"

நேரடியான எந்தக் கேள்வியும் எனக்கு தூக்கிவாரிப் போடக் கூடியதானது. குரல் கட்டி, ஆம் என்றோ இல்லை என்றோ அல்லது இரண்டுமில்லாத ஒரு குரலிலோ தோய்ந்து பலவீனப் படுகிறேன். மடியில் இருக்கிற குழந்தையின் மென் மயிரை முகர்ந்தபடி கீழே குனிந்திருக்கிறேன். பேச்சரவமற்ற தீவிர அமைதி...

சோற்றீரத்துடைய கை கொண்டு என்னை நிமிர்த்துகிறாள் அவள்.

"நான் சந்தோஷமா இருக்கிறேன் மாமா" துருதுருவெனும் கருமை மின்னும் கண்களுடனும், சிரிக்காமல் சிரிக்கும் முகத்துடனும்.

குழந்தைகளிடமிருந்து மீந்த அந்த கடைசிச் சோற்று உருண்டையை எனக்கு ஊட்ட நீட்டுகிறாள்.

வாங்கிக் கொள்கிறேன் நான்.

போய்க் கொண்டிருப்பவளின் இடுப்பிலிருந்த குழந்தை என்னை திரும்பிப் பார்த்தபடி போய்க் கொண்டிருக்கிறது

பி. கு.

இப்பொழுதெல்லாம் திருமணத்திற்கு, காரியத்திற்கு அவளுடைய அவர் மட்டும் பார்க்க கிடைக்கிறார். நான் இவளையும் அழைத்து செல்ல தீர்மானித்திருக்கிறேன்.

--நன்றி 1997' பிப்ரவரி, ஜூனியர் விகடன்!


***

1997' பிப்ரவரி ஜூனியர் விகடனில் பிரசுரமான என் முதல் பத்தி எழுத்து இது. வழக்கம் போல இதையும் தொலைத்திருந்தேன்.. சுகுணா நண்பரான பிறகு, இதை விகடன் அலுவலகத்திலிருந்து தேடி தர இயலுமா சுகுணா என்று கேட்டிருந்தேன். 2000-மாவது வருடத்தில் இருந்துதான் விகடன் கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது என்றும், வருடம் நினைவில் இருக்கா? என்றும் கேட்டிருந்தார்.

எனக்கு வருடம் நினைவில் இல்லை. பிறகு சுகுணாவிற்கு ஒரு நினைவூட்டல் மெயில் செய்திருந்தேன். இதை செய்திருக்க வேணாம் என்பதை பிறகுதான் உணர்ந்தேன். ஏனெனில், சுகுணா இப்படி ஒரு மெயில் செய்து, பதில் நினைவூட்டல் செய்திருந்தார்.

"முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவசியம் வாங்கி அனுப்புகிறேன். ஆனால் இப்போது உங்களுக்கு படிக்கட்டுகளில் இருந்து இறங்கும் வயது ((- "

நல்லாரும் ஓய் என கப்சிப் ஆகி விட்டேன். நாம் சும்மாருந்தாலும், இருக்க அனுமதிக்க மாட்டார்கள் நம் நண்பர்களும் இந்த காதலும்!.. இல்லையா? இந்த பயணத்தில், நண்பர் ரவி, இதை அவர் கோப்பில் இருப்பதாக கூறி தந்து உதவினார். சற்று முன்பு இவர் இதை செய்திருக்கலாம். சுகுணாவிடம் இவ்வளவு பேச்சு வாங்கியிருந்திருக்க வேணாம் என நினைத்துக் கொண்டேன்.

மூன்று காரணங்களுக்காக இதை தொடர் பதிவாக செய்ய விருப்பம். ஒன்று, படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதில் குதூகலித்து மகிழ்ந்த சுகுனாவிற்காக. இரண்டு, எனக்கும் மனைவிக்குமான தூரம் சற்றேறக்குறைய 4000 கி. மீ. இருப்பது. மூன்று, இன்னும் இரண்டு வார தூரமே இருக்கிற இந்த வருட காதலர் தினத்துக்காக!

இந்த தொடர் பதிவிற்காக ஒருவர் ஐந்து நண்பர்களை மட்டுமே அழைக்க வேணும் என்கிற ஒரே ஒரு ரூல் மட்டும் வச்சுக்கலாம். மற்ற நண்பர்களை, மிச்ச நண்பர்களுக்காக விட்டுத் தரலாம். சரியா நண்பர்களே?..

அப்படி, நான் இந்த ஐந்து பேரை அழைக்க விரும்புகிறேன்.

1. அனுஜன்யா

எவ்வளவு நாள் ஆச்சு சுவராசியம் ததும்பும் இவரின் எழுத்து வாசித்து.

2. மணிஜி.

காவன்னா என்கிற அட்சரமே காதலுக்குதான் என்கிற நண்பன்! பிறகு நீர் இல்லாமலா ஓய்!

3. செ. சரவனக்குமார்.

சும்மாவே ஆடுவீர். சலங்கைய வேறு கட்டி விட்டால் கேட்கவா வேணும் என அக்பர்ஜி ஒரு பின்னூடம் இட்டார் இவர் தளத்தில். சும்மா,..ஜல்..ஜல்..ஜல்..

4. அக்பர்ஜி

அதே சலங்கை பார்ட்டிதான்! சலங்கைகளுக்கு வேறு வேறு ஜல்ஜல்- ஆ இருக்கிறது?

5. சமுத்ரா

சுவராசியமான பதிவராக இருக்கிறார். இவரை, இதையும் பேச வைத்து கேட்க விருப்பம்.

***

இதென்ன,.. பெண் பதிவர்கள் இல்லையா என்கிற கேள்விதானே? விருப்பம் உள்ளவர்கள் தொடரட்டும்! அழைக்கிற நண்பர்கள் அவர்களிடம் முன் அனுமதி பெறுவது நலம். எல்லாவற்றுக்கும் ஏன் என்றெல்லாம் என் மகள் மாதிரி கேள்வி கேட்காதீர்கள். அவளுக்கு சொல்கிற பதில்தான் உங்களுக்கும்.

"எல்லா ஏன்களுக்கும் என்னிடம் பதில் இல்லை!"

***


35 comments:

Chitra said...

அசத்தல் பதிவர்கள்! தொடரட்டும்!

சக்தி கல்வி மையம் said...

Nice.,

சமுத்ரா said...

நன்றி பா.ரா...

sakthi said...

மனசை அப்படியே நெகிழ வைத்தது உங்களால் மட்டுமே வார்த்தைகளால் கட்டிப்போட இயலும் பா ரா அண்ணா
தொடருங்கள். அழைத்துள்ள பதிவர்களும் தொடர்ந்து பயணிக்கட்டும் காதல் படிக்கட்டுகளில்

சிநேகிதன் அக்பர் said...

எல்லோருடைய ஃபீலிங்கும் ஒரே மாதிரிதான்னே இருக்கு. ஜெயித்த காதலைவிட தோற்ற காதல் மனசில் வாழ்வதுதான் அதிகம்.

என்னையும் கூப்பிட்டதுக்கு நன்றி அண்ணே. உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சி :)

உயிரோடை said...

காதல் படிக்கட்டுகள் நல்லா இருக்கு.

தோழி:

ஒரே பையில் பயணிக்கும் அஞ்சலட்டைகள் நாம்....
ஏதோ ஒரு திருமண விழா முடிந்த பின் உன் கணவன் பின் நீ
அடுத்த விழா எப்போது என்கிற நினைவோடு நான்

இது நான் ரொம்ப வருசங்களுக்கும் முன்ன எழுதினது என்னுடைய தோழி ஒருத்திக்காக இங்கே மிகச்சரியாக பொருந்தி வருது

taaru said...

//நைந்த பலவீனமான இழைகளை முட்ட அறுந்துவிடாதபடிக்கான நெய்தல் அது!//
யப்பே!!!! மூர்ச்சையாகிய எழுத்து!!! இன்னும் மீளவில்லை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை....

நேசமித்ரன் said...

நன்றி பா.ரா

:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நாம் போடும் கணக்குகளும் காலம் போடும் கணக்குகளும் வேறு வேறு திசைகளில் இருக்க வாழ்க்கை கயிறுஇழுக்கும் போட்டியின் மைய விசையில் சிக்கித் திணறுகிறது.

யார் யாரோடோ பழகி
யார் யாரோடோ விலகி
யார் யாரோடோ வாழ்ந்து
யாருமேயற்ற ஒரு நாளில் பிரிந்து
எல்லோரின் நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
இந்தப் பேரவஸ்தைக்கு
வாழ்க்கை
என்ற பெயரிட்டவன் எவன்?

சொல்லும் தைர்யம் சிலருக்கும் சொல்லாமலே மருகும் வேதனைமுள் பலருக்கும் என்க் கரைகிறது காலத்தின் திரி உறிஞ்சும் தைலம்.

வேறென்ன செய்ய பா.ரா.?

க ரா said...

மாம்ஸ் கலக்குங்க...

நன்றி பா.ரா

:)
---
அப்பாடா நல்லவேள நம்மள் இந்த ஆளு மாட்டி விடலன்ற மாதிரியாண்ணா இது :)

கோநா said...

நெகிழவைக்கிறது. வாழ்த்துக்கள் பா.ரா

சுசி said...

அவ்வளவு எளிமை..

அவ்வளவு ஆழம்..

VELU.G said...

காதல் ஒரு வித வலி தான்

காலம் அதை சரி செய்யலாம் அல்லது அதை அதிகப்படுத்தக்கூட முடியும்

செ.சரவணக்குமார் said...

பால்ய சினேகிதன் பதிவுல சொன்னேனே.. இப்பிடி எம்புட்டு பொக்கிஷத்த தொலைச்சிருக்கீகளோன்னு? இதோ ஒரு பொக்கிஷம். ஆனா உண்மையான பொக்கிஷம் தொலைஞ்சாலும் திரும்பக்கெடச்சிரும் போல. படிக்கக்கொடுத்த உங்கள் நண்பருக்கு முதல் நன்றி.

கடைசி வாய்ச் சோறு வரைக்கும் நெகிழ்ச்சியா இருந்ததுண்ணே. ரொம்ப ரசிச்சு படிச்சுட்டே வந்தேன். கடைசியில நம்மளயும் கோர்த்துவிட்டீங்களே..

ஜு.வியில் காதல் படிக்கட்டுகள் தொடராக வந்தபோது வாசித்திருக்கிறேன். விகடன் வெளியீடாக புத்தகம்கூட வந்திருக்கிறது. உங்கள் காதல் படிக்கட்டுகள் அந்த நூலில் இடம்பெற்றிருந்த கட்டுரைகளைவிட சுவையாக இருந்தது. உணர்ந்ததை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.

இது உங்கள் முதல் கட்டுரையா? முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் ஆளய்யா நீங்கள்.

தொடர்ந்து உரைநடை வடிவங்களையும் எழுதிக்கொண்டே இருங்கள் அண்ணா.

பயணக்கட்டுரை எப்போது துவங்கப்போகிறீர்கள்?

பா.ராஜாராம் said...

இந்த பதிவு குறித்து ப்ரபா இன்று மெயில் செய்திருந்தாள். இதை பின்னூட்டத்தில் சேர்த்துரட்டுமா என்று கேட்டேன். 'சேரேன், என்ன பயமா?' என்றாள். சேர்தாச்சுங்க ரௌடி!

***

மக்கா ...

தளும்பி நிட்கிறேன்டா வேறென்ன சொல்ல...

குமார் ஆரம்பத்தில் உன்னை அறிமுகப்படுத்தும்போது .. ' ஒருவரது எழுத்தை தாங்க முடியாமல் நானாக போய் பார்த்த ஆட்கள் .. வண்ணதாசன் அப்புறம் ராஜாராம் ' என்று எழுதியிருந்தது . எவ்வளவு பாதிப்பு இருந்திருந்தால் இப்படி சொல்லி அறிமுகப்படுத்த முடியும் .. இல்லையா இந்த நெகிழ்வை , உணர்வை வெறும் அறிவு ஜீவித்தனமான எழுத்து தந்து விட முடியுமா மக்கா ..

அதென்ன காதல் குறித்தான பார்வை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது . (காதல் படிக்கட்டுகளில் இறங்கும் வயது - சுகுணா )


சட்டுன்னு எபபடி இந்த உணர்வை உடல் சார்ந்து சிந்திக்க முடிகிறது . இந்த இடத்தில் இளமை சார்ந்து சிந்திக்கிறார்கள் என்றால் இளமையின் பொருள் அதுதானே !

' உனக்கு நான் , எனக்கு நீ என்று கடைசியில் தெளியும் தோழமை தான் காதலின் உண்மை ஸ்வரூபமோ ' - லா. சா. ரா.

' ........ மன முதிர்ச்சியினால் சகித்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் செல்லும் தோழமை மட்டுமே இயலும் . அந்த முதிர்ச்சி முதுமையின் முதல் நெற்றி சுருக்கங்களின் போதுதான் வரும் .......' - Oriyaana Felaachi

இப்படியிருக்க .. காதல் படிக்கட்டுகளில் ஏறும் வயது 20 ஆ 40 ஆ மக்கா?

அதாவது காதல் என்பது ஆத்மார்த்தமான நேசிப்பு .. இல்லையா அப்படியிருக்க அந்த நேசிப்பின் வெளிப்பாடு முழுவதும் சாத்தியமாகக்கூடிய காலம் இளமையா முதுமையிலா? ....

நம் நேசிப்பை நாமே பரிபூரணமாய் உணர்வதற்கு காலமும் சூழ்நிலைகளும் பல சமயங்களில் தேவையாய்தான் இருக்கு மக்கா . ஏனென்றால் இவை இரண்டையும் கடந்து ஒரு விஷயம் நிற்கிறது என்றால் அங்குதான் உண்மையை உணர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது என்று தோணுது.

மற்றபடி இளமை எப்படி சந்தோஷமயமானதும் வேகமானதுமோ முதுமை
நிறைவானதும் விவேகமானதும் .. இல்லையா. காதல் படிக்கட்டுகளில் ஏற இதில் எது தடையாய்
இருக்குன்னு தெரியலை எனக்கு . Infact படிக்கட்டுகளில் ஏற மிதமான வேகமும் நிதானமும் .. கூடுதல் plus தானே .

so, sorry suguna sir!

***

இனி, சுகுணா பாடு, ப்ரபா பாடு.

ராஜவம்சம் said...

சித்தப்பு மலரும் நினைவுகள் அருமை அதைவிட சூப்பர் நீங்கள் அழைத்த ஐவரும்.

வினோ said...

அப்பா ஆள இப்படி ஒரே பிடியில் இறுக்கி விடுகிறீர்களே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நைந்த பலவீனமான இழைகளை முட்ட அறுந்துவிடாதபடிக்கான நெய்தல் அது!//

AAHA>>AAHA

'பரிவை' சே.குமார் said...

எழுத்துக்களால் கட்டிப் போட்டுவிட்டீர்கள் சித்தப்பா.
ரசனையான மண்வாசனை எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Very nice Rajaram.

R. Gopi said...

பா.ரா. சார், இந்த மேட்டரை வைத்து நான் இரண்டு சிறுகதை தேத்தி இருக்கேன்ல, # நாங்களும் ரௌடிதான்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_28.html

CS. Mohan Kumar said...

அருமை. அழைத்தவர்களுக்கு சொன்ன வரிகளும்.

அனுஜன்யா !! அவசியம் எழுதுங்க

காமராஜ் said...

1997 ல் எழுதினதா.கடந்து போன சில மணித்துளிகளில் தெறித்ததுபோல முகத்திலடிக்கிறது பாஸ்.

இறங்கவும் முடியாமல் ஏறவும் இயலாமல் நடுவிலே கிடக்கிறேன்.

நல்ல கை பாரா.

மணிஜி said...

அன்று நானும் , நீயும் அரங்கில்
பார்த்த திரைப்படங்கள்

இன்று நானும் , அவளும்
தொலைகாட்சியில்
பார்த்துக்கொண்டிருக்கிறொம்

நானும் , அவனும் என்றும்
வாசிக்கலாம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வீட்டின் வலது மூலை கௌரவத்துக்கு உங்கள் மனது பூராவும் நிரம்பித்ததும்பும் அன்பன்றி வேறேன்ன காரணமாய் விடும் பா.ரா.?

தொலைவிலிருந்து உங்கள் தோள்களில் கைபோட்டுக்கொள்கிறேன் நன்றி பாராட்ட.

Thenammai Lakshmanan said...

ஐயையோ கடைசி பாராவை நான் பார்க்கவே இல்லை படிக்கவேயில்லை.. :))

Sugirtha said...

மிக நெகிழ்ச்சியான பதிவுங்க பா ரா.. ரசிச்சு படிச்சேன்...

//எல்லாவற்றுக்கும் ஏன் என்றெல்லாம் என் மகள் மாதிரி கேள்வி கேட்காதீர்கள். // :))) நானும் என் அப்பாகிட்ட அப்படிதான் சண்டை போடுவேன்.

//எல்லா ஏன்களுக்கும் என்னிடம் பதில் இல்லை!// ஸ்ஸ்... இந்த அப்பாக்களே இப்படிதான் பா... :))

ஆனா உண்மை அதான் இல்லே.. எல்லா ஏனுக்கும் நம்மகிட்ட பதில் இருக்கா என்ன?

இன்னொரு விஷயம் பிரபாவோட எழுத்து, தெளிவு... இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.... வியப்பா இருக்கு... அவங்ககிட்ட சொல்லிடுங்க :)

பா.ராஜாராம் said...

நன்றி சித்ரா!

கருன்-நன்றி!

நன்றி சமுத்ரா!

நன்றிடா சக்தி!

சொல்லுங்க, சொல்லுங்க அக்பர்ஜி. காத்துட்ருக்கோம். நன்றி அக்பர்!

// ஒரே பையில் பயணிக்கும் அஞ்சலட்டைகள் நாம்// அருமை லாவன்ஸ்! பகிர்விற்கும் சேர்த்து நன்றி!

நன்றி பெ.ப.அய்யனார்!

நன்றி நாஞ்சில் மனோ!

நேசா, நலமாடா பயலே? நன்றி மக்கா! :-)

//காலத்தின் திரி உறிஞ்சும் தைலம்// எங்கேருந்து இந்த வார்த்தைகள் எல்லாம் வருது, சுந்தர்ஜி? சூப்பர்! நன்றிஜி!

உம்மை மாட்டி விட்ருக்கணும், இ.ரா ஓய்! சரி..யாராவது மாட்டாமலா விடுவார்கள்? நன்றி மாப்ள! :-)

நன்றி கோநா!

சுசி, மிக்க நன்றி மக்கா!

ஆம், இல்லையா வேலுஜி! நன்றி ஜி!

விரைவில் பயணக் கட்டுரை தொடங்கிருவோம் சரவனா. இந்த ஜல்.ஜல்..லை மறந்துற வேணாம். நன்றி சரவனா!

ப்ரபா, சுகிர்தா வந்துட்டாப்ல சப்போர்ட்டுக்கு. :-) நன்றி மக்கா!

மகன் ராஜவம்சம், எப்ப, என்ன போட்டாலும் வணக்கம் சித்தப்புன்னு ஒரு சலாம்! எதிர்பார்ப்புகளற்ற சலாம், எவ்வளவு அழகு! அலைக்கும் சலாம் மகனே! நன்றியும்!

வினோ பயலே, நன்றிடா!

நன்றி டி.வி.ஆர் சார்!

ராஜவம்சம் போல இதோ இன்னொரு மகன், எதிர்பார்ப்புகள் அற்ற மகன்! நன்றி சே. குமார்!

மிக்க நன்றி ஜெஸ் மக்கா!

கோபி, வந்து வாசித்தேன். கலக்கல்! பின்னே ரௌடி இல்லாமல்? :-) நன்றி கோபி!

நன்றி மோகன்ஜி!

நாமெல்லாம் நடுவில்தான் கிடப்போம் காமு மக்கா! இதுதான் நம் இடம் என தெரிஞ்சே கிடப்போம். பிழிஞ்சு, பிழிஞ்சு வாழ பிடிக்கிறதே. இது போதும் என கிடப்போம். இல்லையா? நன்றி காமு டியர்!

மணிஜி, சூப்பர்! தொடரும்.. மிக்க நன்றி ஓய்! :-)

ஆகட்டும் சுந்தர்ஜி. தோளில் இருந்த கை எடுத்து கைக்குள் வைத்துக் கொண்டேன். நன்றிஜி!

இங்க நீங்க வரவே இல்ல, தேனு மக்கா! :-) நன்றி தேனு!

really she is great சுகிர்தா! அண்ணாந்து பார்க்கும்படியே நின்று கொண்டிருப்பாள். ராட்சசி! அப்புறம், ரொம்ப ஏன்' களை போடாதீர்கள். அப்பாக்கள் எல்லாம் பாவம். நன்றி சுகிர்தா!

vasan said...

/இப்போது உங்களுக்கு படிக்கட்டுகளில் இருந்து இறங்கும் வயது ((- "/
வாழ்க்கையில் ஏறிய‌ தூர‌த்திலிருந்து, வ‌ழுவாம‌ல், ச‌ருக்காம‌ல் லாவ‌க‌மாய் இறங்கி வ‌ந்து "வீடு" சேர(பெற‌)வேண்டும். பேஸ் பாலில் (ப‌ந்தை அடித்து விட்டு) ஹோம் ர‌ன் ஓடுவ‌து போல். அருமையான த‌த்துவ‌ வார்த்தை. ஏறி, ஏறி உச்சாணி கொப்பு போன பின்பும், திரும்பி இறங்குத‌ல் முறைதானே? சூரிய‌ உதய‌த்திலிருந்து, ம‌றைவ‌த‌ற்குள் எவ்வ‌ள‌வு முடியுமோ, அவ்வ‌ள‌வு நில‌த்தை வ‌ளைத்துவிட்டு தொடங்கிய‌ புள்ளிக்கு வ‌ந்துவிட வேண்டும். இல்லையெனில் எல்லாம் வீண். "ப‌டிக்க‌ட்டில் இருந்து இற‌ங்கும் நேர‌ம்" வாவ்... ப‌தினோராம் க‌ட்ட‌ளை ம‌க்கா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

காதல் படிக்கட்டில் இறங்கி இப்போ வெற்றி படிக்கட்டில் ஏறிக்கிட்டு இருக்கீங்க பா.ரா!

வாழ்த்துக்கள்

இதழ் இதழாக சேரும் பூ // முந்தின தலைப்பை ரொம்ப நேரமாக மனதில் அசைப்போட்டுக்கொண்டிருக்கிறேன் கூடவே இந்தப் பதிவின் கடைசி பாராவையும் பா.ரா.

ஆனாலும் ரொம்பத்தான் ஓரவஞ்சனை மக்கா ;)

பா.ராஜாராம் said...

beautiful வாசன்ஜி! சிலிர்க்கும் பின்னூட்டம்! நன்றிஜி!

நன்றி அமித்தம்மா! சரி..நீங்கதான் தொடுருங்களேன். (உங்களுக்கென்ன நீங்க தொடரலாம்..ஜெயிச்ச மகராசி) :-) really, தொடருங்க அமித்தம்மா. உங்க வாயால சொல்ல கேட்கணும்/ கேட்கலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

காதல் படிக்கட்டுகள் எழுத வயசாகிடுச்சு ப்பா.ரா. ;)

பா.ராஜாராம் said...

என்னா குத்து அமித்தம்மா! சுகுணா, நீங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் திரியுறீங்க.

ப்ரபா, சுகிர்தா-ட்ட சொல்லிக் கொடுத்துருவேன். பாத்துக்கிடுங்க. :-)