தடவி அறிந்த ப்ரைலி முகங்கள்- மூன்று
ஒன்று, இரண்டு.
தூங்கிக் கொண்டிருந்த கட்டிலை யாரோ உலுக்கிக் கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டு விழித்தேன். கட்டிலைச் சுற்றி எட்டுப் பத்து ஆட்டுக் குட்டிகள்!.. உதறி எழுந்து வட்ட சம்மணம் கூட்டி அமர்ந்தேன். "அறிவண்ணனுக்கு பலிக்கொடை தர வந்திருக்கோம்" என்றதுகள் குட்டிகள் கோரசாய்.
"அவர் வீட்ல இல்லை. வேட்டைக்குப் போயிட்டாரு" என்றேன். "வந்தா இந்த கார்டை கொடுங்க. வரச் சொல்லுங்க" என்று விசிட்டிங் கார்டு மாதிரி ஒரு கார்டை கொடுத்தது ஒரு குட்டி.. 'தல'க்குட்டி போல! "கோழிகளெல்லாம் வந்தாலும் வருங்க. வந்தா எங்கட்ட பாலிசி எடுத்துட்டாரு அண்ணன்னு சொல்லிருங்க" என்றதுகள். 'ஆகட்டும்' என்றேன் அவசரமாய். விடை பெற்றதுகள் குட்டிகள். ஒரு குட்டி மட்டும் போகாமல் பாவமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. "உனக்கென்ன?" என்றேன்.
உற்சாகம் பெற்ற குட்டி, கட்டிலுக்கு தாவி, அருகில் அமர்ந்து கொண்டது. சற்றுப் பயமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், "கட்டிலுக்கெல்லாம் வரக் கூடாது" என்றேன். முகம் சோம்பி, அழும் தருவாயில், " எண்ட அப்புப்பாவுக்கு ஒரு ஆடு உண்டாயிருண்ணு" என்ற குட்டியின் குரல் நம்பியார் சேட்டாவின் குரலை ஒத்திருந்தது.
"நீ சவுதியில் வேலை பார்த்தியா?" என்றேன். பதில் சொல்லாமல், " அண்ணே, அண்ணே" என பிராண்டத் தொடங்கி விட்டது குட்டி. மீண்டும் விழித்த போது, " அண்ணே, அண்ணே" என விடாமல் பிராண்டிக் கொண்டிருந்தான் சுரேந்தர். என்ன எழவுக் கனவுடா இது! "நல்லவேளை.. எழுப்பின சுரேந்தர்" என்றேன்.
" அண்ணே.. நீங்க திடீர்ன்னு கவிஞராயிட்டீங்கலாம்ல?" என்றான் கொட்டிக் கவுத்தியது போல்.
" யார்டா சொன்னா?"
" முத்தண்ணந்தான் சொன்னுச்சு"
" திடீர்ன்னு சொன்னானா?"
"இல்லைண்ணே. ஆற அமரத்தான் சொன்னுச்சு. அப்ப நீங்க தூங்கிட்டுருந்தீங்க"
" திடீர்ன்னு கவிஞர் ஆயிட்டதா சொன்னானாடான்னா?"
"அதை விடுங்கண்ணே. ஒரு கவிதை சொல்லுங்கண்ணே" என்றான் நடுச்சாமத்தில், சற்றும் இரக்கம் இல்லாமல். முத்துராமலிங்கத்தைப் பார்த்தேன். முன் இருக்கையில் இருந்தவன், 'இருக்கிறேன்' என்பதாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். "அண்ணே கவிதைண்ணே" என்ற சுரேந்தரை 'திடீர்'ன்னு ஏனோ பிடித்து வந்தது. ஏமாற்ற மனமில்லை.
"முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
குறட்டை பிரிந்து கொண்டிருந்தது
தூங்க முடியவில்லை" என்று சுரேந்தரைப் பார்த்தேன்.
"இது கல்யாண்ஜி கவிதைண்ணே. கடைசியில் கூட தாங்க முடியலைன்னு முடியும்" என்றான்.
சுத்தமாய் தூக்கம் விலகி விட்டது எனக்கு. 'ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோமோ?' வென கவலை பிடித்துக் கொண்டது. நாளைக்கு, எனக்குப் போக கூடுதலாக ஒரு குவாட்டர் வாங்க வேணுமே என யோசனையும் தோன்றியது.
"அண்ணே, உங்க கவிதையை சொல்லுங்கண்ணே" என்ற சுரேந்தரை முதல் முறையாக ஊன்றிக் கவனித்தேன். இருட்டாகத்தான் இருந்தான். 'இவனை பாம்புன்னு தாண்ட முடியல. பழுதுன்னு மிதிக்க முடியலையே' வென நினைத்த படியே, "தலை வலிக்குதுடா. அடுத்த ஊரில் நிறுத்தச் சொல்லி, டீ சொல்லு" என்றேன்.
" நல்லாருக்குண்ணே. ஆனா, ஓவர் யதார்த்தமா இருக்குண்ணே. இதையே,
" ஒரு டீ சொல்லு
நிறுத்திய ஊரில்
அடுத்த தலைவலிக்கு" ன்னுசொல்லிப் பாருங்களேன். புதுசா இருக்கும்" என்றான்.
"டேய் முத்து, எந்திரிடா" என்று உலுக்கி எழுப்பினேன், முத்துராமலிங்கத்தை. " நாலஞ்சு கிலோ தேறும் மாப்ள. யாரும் பாக்குறதுக்கு முன்னால டிக்கியில் தூக்கிப் போடு" என்று எழுந்த பிறகும் சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பினான். ' சரித்தான்! அறிவு படத்தைத்தான் இவனும் ஓட்டிக் கொண்டிருந்தான் போல' என்று நினைத்துக் கொண்டேன்.
" மாமா, சிங்கப்பூர் வழியா போயிருவோமா? ஏழு கிலோமீட்டர் குறையும்" என்றான் அறிவு இடையில்.
" சிங்கப்பூர் வழியாவா?"
" சிங்கம்புனரி வழியா மாமா!"
" என்னவோ செய்ங்கடா. முதல்ல டீ சாப்பிடனும். ஒரு இடத்தில் நிறுத்து" என்றேன். " இதையேண்ணே.." என மீண்டும் தொடங்கினான் சுரேந்தர், விடாமல். " சுரேந்தர்! உன்னையும்தான். நிறுத்து!" என்றேன். டீயெல்லாம் வாங்கிக் கொடுத்து, ' சிவகங்கை நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்கிற போர்டை கண்ணில் காட்டி விட்டான்கள் பயல்கள்.
கார்க் கண்ணாடியை திறந்து விட்டேன். என் மண்ணுக்கே உரிய கருவேலம் பூ வாசனை!
மார்கழி மாத அதிகாலை பூஜைக்கு அப்பாவுடன் போகிறது போல் இருந்தது. ஒரு வாசனை இழுத்துச் சென்று சேர்க்கிற இடம் ஒரு மனிதமாக இருக்கிற போது... அம்மனிதம், இல்லாத நம் அப்பாவாக இருக்கிற போது, கண்ணில் நீர் துளிர்த்து விடுகிறது.
" அப்பா" என்றேன் சிவகங்கையை!
"ஏழு கடையில் நிறுத்து மாப்ள. ஒரு தம் போட்டுட்டு போகலாம்" என்றேன் அறிவிடம். இந்த எழுகடை, என் வாழ்வின் மிகப் பிரதானம் வகிக்கும் ஒரு இடம். வீட்டில் இருப்பதற்கு இணையாக இந்த ஏழு கடையிலும் இருப்பது உண்டு நான். மனசு ஒன்றிப் போகிற எந்த இடமும் வீடுதானே!
இறங்கி, ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு, " வந்துட்டேன் மக்கா" என்றேன் ஏழு கடையைப் பார்த்து. பொம் என்கிற அதிகாலை மூச்சை விட்டபடி படுத்துக் கிடந்தது ஏழுகடை. " பொறவு வர்றேன்..கேட்டியா?" என்றபடி அங்கிருந்தும் கிளம்பினேன்.
தெருத் திரும்பினோம். வீட்டில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரை பிடித்தபடி தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் மஹாவும் சசியும். கார்க் கதவைத் திறந்து இறங்கியபோது வாயெல்லாம் பல்லாக குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டார்கள். " புதுப் பெண்ணே" என்றேன் மஹாவைப் பார்த்து. " போங்கப்பா" என்று புதுச் சிரிப்பு சிரித்தாள்!
வாசலை அடைத்து கோலம் போட்டு, தலையில் , ' velkame' என்று எழுதி இருந்தாள் லதா. (இந்த இரண்டு வருடத்தில் ஃபிரன்ச் கற்றுக் கொண்டாளோ என்னவோ?) "கவிதா, சீத்தா, வாங்கடி. வந்துட்டாரு" என குரல் கொடுத்தாள். எதிர் வீட்டிற்கு. " நில்லுங்கண்ணே" என சிரித்தபடி ஓடி வந்தார்கள் எதிர் வீட்டுக் கவிதாவும், சீத்தாவும்.
ஆரத்தி!
இது நாலாவது ஆரத்தி. இந்த நாலு பயணங்களிலும் மூணு ஆரத்தி. (அப்பா இறந்து போன பயணம் ஒண்ணு). ஒரு ஆரத்தி ரொம்ப பழசு. முதல் ஆரத்தியும் கூட!.. மாலையும் கழுத்துமாக மணமகனாக இருந்த போது...
பழைய மணமகளை பார்த்தேன். பழைய சிரிப்பு சிரித்தாள்!
மிக கூச்சமான தருணங்களில், இந்த ஆரத்திக்கு மனுஷனாக நிற்கிற தருணமும் ஒன்று. சிரிப்பு சிரிப்பாக வரும். அடக்கிக் கொண்டு நிற்க வேண்டியது வரும். வலம், இடமாக சுற்றி வெற்றிலை நீரை வாசலுக்குக் கொண்டு போய் கொட்டப் போனார்கள் கவிதாவும், சீத்தாவும்.
"பொட்டு?" என்றேன் அவர்களை திரும்பிப் பார்த்து. " ஐயோ...சாரிண்ணா, மறந்துட்டோம்" என சிரித்து, தட்டைத் தொட்டு பொட்டு வைத்துத் தந்தது கவிதா. "இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆரத்தி காசு கொடுங்க அவள்களுக்கு" என சிரித்தபடி,..
"ஆல்-ரியல்ஸ்" பந்துகளின் முதல் பந்தை தொடங்கியிருந்தாள்- மனுஷி.
--தொடரும்
***
புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13
Wednesday, February 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
என்ன சொல்றதுன்னு தெரியல பா.ரா.
ஆட்டுக்குட்டிகளோட கனவு-நடுராத்திரி கவிதை கேட்ட சுரேந்தர்-ஹ்யூமரின் சகல பரிமாணங்களோட இந்தமாதிரி ஃபுல் ஃபார்ம்ல நீங்க எழுதி நான் படிக்கலைனு நினைக்கிறேன்.
மொத்த்ப் பத்தியையுமே ஹைலைட் பண்ணீடலாம் போங்க.
ரொம்பப் ப்ரமாதம் பா.ரா.இது ஒங்க மாஸ்டர் பீஸ்.
முக்கியமான வேலை நிக்கிது.என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு வர்ற என் மனைவிகிட்டயும் சொல்லத்தான் நினைக்கிறேன் ஒரு முக்கியமான வேலையை முடிச்சுட்டேன்னு.
இது மாதிரி நிறைய எழுதப் போறீங்க.
அப்படியே பாதிலேர்ந்து தான் படிச்சேன். அற்புதம் பா.ரா. வேறென்ன சொல்ல!! ;-)
// " எண்ட அப்புப்பாவுக்கு ஒரு ஆடு உண்டாயிருண்ணு" என்ற குட்டியின் குரல் நம்பியார் சேட்டாவின் குரலை ஒத்திருந்தது// ஹா..ஹா...
அபாரம்!
சித்தப்பா...
நகைச்சுவையுடன் சிவகெங்கை பேச்சு வழக்கும் கலக்க ஒரு அருமையான இரவுப் பயணத்தை கவிதை, கனவு என கலந்து கட்டி ஆடியிருக்கிறீர்கள்....
நீங்கள் அனுபவித்த சந்தோஷம் உங்கள் எழுத்தில் எழுந்து நிற்கிறது... தொடருங்கள்.
ஒரு டீ சொல்லு
நிறுத்திய ஊரில்
அடுத்த தலைவலிக்கு" ன்னுசொல்லிப் பாருங்களேன். புதுசா இருக்கும்" என்றான்.
சூப்பர்ப்ண்ணா
பழைய மணமகளை பார்த்தேன். பழைய சிரிப்பு சிரித்தாள்!
::))))
//" திடீர்ன்னு சொன்னானா?"
"இல்லைண்ணே. ஆற அமரத்தான் சொன்னுச்சு. அப்ப நீங்க தூங்கிட்டுருந்தீங்க"//
இன்னமும் நினச்சு சிரிக்குறேன்....ன்..ன்...ன்....ன்....ன்....ன்...ன்.....
கலந்து கட்டி ஆடி இருக்கீங்க அப்பேவ்....!!!!!!
அண்ணா,
ஊருக்கு போயிட்டு வந்ததும் ஃபுல்ஃபார்ம் ல இருக்கீங்க போல. சிரித்துக் கொண்டே படித்தேன்.
அறிவு கூட நிறுத்தாம அழகாக வண்டி ஓட்டுறாரு. நீங்க ஏண்ணே அடிக்கடி பிரேக் போடுறீங்க. இன்னும் கொஞ்ச தூரம் ஓட்டிட்டுத்தான் நிறுத்துங்களேன் இடையில...
சோக்கா அட்ச்சி எழுதற நைனா நீ.. இன்னா சொல்றது... ஸ்ர்ச்சிஸ்ர்ச்சி ஒரே பேஜாரா பூட்சீப்பா...
ஒன்ன பாக்கசொல்ல யனக்கும் குட்டி ஆடுமாத்ரியே... இர்துச்சி நைனா...
(சித்தப்பூ இது சென்னை நேட்டிவிட்டி)
சூப்பர்........ :))))))
அருமையா இருக்கு....
அற்புதம்
அருமையா எழுதி இருக்கிங்க.
'செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்' என்பது போல, நேர்த்தியான எழுத்தாக்கங்களைப் பாராட்டித் திரிகிறேன், இதுபோல இயல்பான எழுத்தூற்றுகள் குமிழியடிக்காததினால்.
அருமையிலும் அருமை
படிக்கபடிக்க தித்திக்குது மக்கா.
எத்தன தரம் தான் எடுத்து ஒத்திக்க.
ஒரு தரம் ஆடித்தீர்த்திருக்கலாம் எனக்கும் உனக்கும் கொடுத்துவய்க்கல.
வரிக்கு வரி தொற்றிக்கொள்கிறது சுவாரஸ்யம்... கலக்குறீங்க...
///' velkame' என்று எழுதி இருந்தாள் லதா. (இந்த இரண்டு வருடத்தில் ஃபிரன்ச் கற்றுக் கொண்டாளோ என்னவோ?//
மக்கா...சிரிச்சு மாளலை:-)))
பூங்கொத்து!
அடடா!
அபாரம்ணே!
எல்லாத்தையும் சொல்லிப்போடனும்னு மெனக்கிடறது புரியுது....
அதிலயும் சொந்த அனுபவத்த சொல்லுறத முழுசா புரிஞ்சுக்கவேனுமேன்னு ஆதங்கமும் கூட...
தனக்கு வந்தாத்தான் தெரியும் தலவலியும் திருகுவலியும்னு சொல்லிக்குவாங்க ஊரில...
தலவலி தெரியும் திருகுவலிக்கு இன்னமும் அர்த்தம் தெரிஞ்ச பாடில்ல...
வலிக்குன்னு ஒரு நியாயம் இருக்கு...
அதை ஏத்துக்கவும் ஆளுக இருக்கு....
ஆனா....
வலி உறைக்கிறாப்போல இந்த அன்பை உணர வைக்கிற சுகம்தான் மனசு கலங்குது....
காசு பணம் தேவையில்ல...
பதவி சுகம் ஆசையில்ல....
உறவும் ஒட்டும்..
அதுக்கான எதிர்பார்ப்பும்...
கடமையும் சகிக்கவில்ல....
மனசு பூரா மனுச வாடதான்....
தன் வாட அடங்குற வரைக்கும் தேடல்தான்......
யாத்தே! பொரையேறிப்போச்சு எனக்கு.இவ்ளோ யதார்த்தமா பின்றீங்களே சாமீய்ய்ய்... பெரியவுக பெரியவுகதான். சுண்டுவெரல புடிச்சிக்கிட்டு நடக்கணும்போல தோணுது.
செம பார்ம்ல இருக்கீங்கண்ணே.. அப்படியே அடிச்சி விளையாடுங்க.
இந்த velkame க்கு கொடுத்து வச்சிருக்கனுமே . இதில கிண்டல் வேறயாக்கும் .
"velkame"...அண்ணா...ஃபிரஞ்சுமா !
அன்பு பாரா,
ரொம்ப நல்லாயிருந்தது பாரா... சுரேந்தரின் கவிதை நல்லாயிருந்தது... யதார்த்தமாக உங்கள் அணுபவமாக இருந்தாலும்... சுவாரசியத்திற்காய் சேர்த்த விஷயங்கள்... இயல்பு
கும்க்கி, திருகுவலின்னா கழுத்துவலி... இது நான் கேள்வி கேட்டு கிடச்ச பதில் என் அப்பாவிடம்.
மணிஜீ! சொன்னது போல அருமையா இருந்தது.. அந்த velkame... ரொம்ப பிடித்தது.
அன்புடன்
ராகவன்
இப்படியான மனிதர்களை விட வேறு என்ன பெரிதாக சம்பாதித்து விடப் போகிறோம் இந்த வாழ்வில்..!! மனசை நிறைகிறது... கண்களையும்... எழுதும் கைகளும், எண்ணிய நெஞ்சமும் வளம் சேர்ந்து வாழட்டும்! நாங்களும் ஒண்டிக் கொள்கிறோம் உங்க நிழலில்.
தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் - தலைப்பு நல்லா இருக்கு
Arathi eduththu varaverkkum namathu mannin pazhakkam, ulagil entha moolaiyilum ariyaatha onru. Yeppidi uruvaagiyirukkum.
Anbu manitharukku oru anbaana varaverppu. Anubavi raasa anubavinga.
அண்ணே தொடர் பதிவு போட்டுட்டேன். கூப்பிட்டதுக்கு ரொம்ப சந்தோசம்ணே
//" நல்லாருக்குண்ணே. ஆனா, ஓவர் யதார்த்தமா இருக்குண்ணே. //
இதுதான் என் கமெண்டும் ...
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
வேலைப் பளுவில் தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. நிறைய வாசிக்கவும் விட்டுப் போயிருக்கு. ஓரிரு தினங்களில் வந்து சேர்ந்து கொள்கிறேன் மக்கா. நடந்து கொண்டிருங்கள்..
எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும்!
பா.ரா,
//" அப்பா" என்றேன் சிவகங்கையை!// ம்ம், :)
//தெருத் திரும்பினோம். வீட்டில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரை பிடித்தபடி தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் மஹாவும் சசியும். கார்க் கதவைத் திறந்து இறங்கியபோது வாயெல்லாம் பல்லாக குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டார்கள். " புதுப் பெண்ணே" என்றேன் மஹாவைப் பார்த்து. " போங்கப்பா" என்று புதுச் சிரிப்பு சிரித்தாள்!//
ஆஹா, என்ன அழகு வெட்கம், எப்படியான தருணம்...! :)
//வாசலை அடைத்து கோலம் போட்டு, தலையில் , ' velkame' என்று எழுதி இருந்தாள் லதா. //
அருமை! :) உணர்வை சொல்லத்தானே மொழி, இந்த 'Velkame' ஐக் காட்டிலும் வேறெது உங்களை இத்தனை அழகாய் வரவேற்றிருக்க முடியும்?
சுவாரஷ்யமான பயணம், வேறென்ன சொல்லப் போறேன், தொடருங்க பா.ரா... :)
நன்றி சுகிர்தா! :-)
Post a Comment