தடவி அறிந்த ப்ரைலி முகங்கள் - நான்கு
ஒன்று, இரண்டு,மூன்று
வீட்டையடைந்த நாளில் இருந்து சரியாய் முப்பது நாள் இருந்தது மஹாவின் திருமணத்திற்கு. ஒரே ஒரு பாட்டில் பிறந்து, வளர்ந்து, மனுஷனாகி, பழி வாங்கக் கிளம்புகிற எம்.ஜி.ஆர். மாதிரி ஆகி விடுகிறார்கள் இந்தப் பெண் குழந்தைகள்.
சுகுணா டாக்டரம்மா கிளினிக்கில், " ஒம்புள்ளைடா..ராஜாப் பயலே" என்று பழம் சேலையை விலக்கி மஹாவை காட்டினார்கள் நர்ஸ் சாந்தியக்கா.. பிஞ்சு, பிஞ்சு விரல்களையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு கருவண்டு போல கிடந்தாள் மஹா. என்ன பேசுவது எனத் தெரியவில்லை. என்ன பேசினால் என் மகளுக்குப் புரியும்?
கருவண்டு விரல்களை பிரித்து கருவண்டு விரலை திணித்தேன். பற்றிக் கொண்டாள். மகளும் அப்பனும் பற்றிக் கொண்டு எரிந்தது நேற்றோ, சற்று முன்போதான் நடந்தது போல இருக்கிறது. கண்மாயில் விடுகிற தவளைக்கல் மாதிரி எவ்வளவு இலகுவாய் தவ்வுகிறது காலம்..
தவழ்வதில் தவ்வி, நடப்பதில் தவ்வி, பள்ளியில் தவ்வி, கல்லூரியில் தவ்வி, இதோ, 'ப்ளங்' என கல்யாணத்திற்குள் தவ்வுகிறாள் மஹா. பார்த்துக்கொண்டிருக்கும் போதே பூத்துக் கொண்டிருக்கிறாள். பூத்துக் கொண்டிருக்கும் போதே காய்த்துக் கொண்டும் இருக்கிறாள்.
ஒரு ஊருக்குள்தான் எத்தனை சாலைகள். சாலையென்றால் திருப்பங்கள் இல்லாமலா?. திருப்பங்களில் திரும்பினால் மீண்டும் சாலைகள். மீண்டும் திருப்பங்கள். நடக்கவும் கடக்கவும் மயங்கி நின்றால் வாசலை அடைவது எப்படி? வீடு நுழைவதுதான் எப்படி?
அப்படி, ஒரு கல்யாணம் எனில், மொட்டு மொட்டாய் துளிர்க்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். நானும் மஹாவும் மட்டும் என்ன இறங்கியா வந்தோம்? பிறந்துதானே வந்தோம்?பிரச்சினைகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா. நம்ப முடியாமல் நடந்து கொண்டிருந்தான் ராஜாவும்.
மேலுதட்டில் அரும்பிய வியர்வையுடன் மூசு மூசென்று மூச்சு விட்டு நடக்கிற நிறை மாதக் கர்ப்பிணி போல நாட்கள் அசங்கி அசங்கி நடந்து கொண்டிருந்தன.
"அண்ணே, என்ன பண்ணி வச்சிருக்கீங்க? மருமகள் கல்யாணத்துக்குன்னு ஒரு இருபத்தையாயிரம் தனியா எடுத்து வச்சிருக்கண்ணே. இடத்தெல்லாம் கொடுக்காதீங்க. பின்னால வாங்க முடியாது. மலைக்க வேணாம்ண்ணே" என்று அழை பேசினார்கள் வித்யா(விதூஷ்).
"மஹா திருமணத்துக்கென கொஞ்சம் பணம் தரலாம்ண்ணா. கடனாத்தான். முடியுறபோது திருப்பித் தாங்க" என லாவண்யா அழைத்தது.
"ஒங்க மாதிரியேண்ணே அண்ணனும். எஸ்.ஐ- யா இருந்து இறந்துட்டார். அவர் மகள் கல்யாணம்ன்னு நினைச்சுக்கிறேன். அண்ணன் மகள் கல்யாணத்துல எனக்கும் பங்கிருக்குள்ளண்ணே. என்னண்ணே செய்யட்டும் நான்?" என விசாரித்தார் ரவிச்சந்திரன்.
"யோவ்..மயிறு, என்னய்யா செஞ்சு வச்சுருக்க? சும்மா கெடந்து யோசிக்காத. என்ன தேவைன்னாலும் கூப்பிடு" என அதட்டினார் மணிஜி.
"அப்பா, தங்கச்சி கல்யாணத்துக்கு எனக்கிட்டருந்து என்னப்பா எதிர் பார்க்கிறீங்க?" என்று என்னவோ நான் கொடுத்து வைத்திருந்ததை திருப்பி தருவது போல கேட்டான் வினோ.
" டேய், இவ்வளவு கைல இருக்குடா. கூடுதல் தேவைன்னா லோன் போடணும். முன்னாடியே சொல்லிரு. தயாராகணும்" என்றான் தெய்வா.
அண்ணாதுரை சித்தப்பா, காளியப்பன் அண்ணன், இளங்கோ அண்ணன், மங்கை அக்கா, கனடாவில் இருந்து தம்பிகள் பொருளாதார தேவைக்கென என்னை அவ்வப்போது தடவிக் கொண்டே இருந்தார்கள். என் உறவுகள் என் கைகளாக இருப்பது எனக்கு புதிதன்று. ம் என்றால் அங்குதான் போய் விழுவேன். தூக்கி நிறுத்தி விடுவார்கள்.
ஆனால், இவர்கள் எல்லாம் யார்? எப்படி இறங்கினார்கள் எனக்குள்? ஏழு கடல், ஏழு மலை தாண்டி இறங்க, என்ன ராஜாளிப் பறவைகளா இவர்கள்? 'இவனை நகர்த்தி தானும் நகரும் சப்பரத் தெய்வம்' என்கிற குமார்ஜியின் கவிதை போல், "எல்லாம் நடக்கும். சும்மா வீசி நடடா" என்று எல்லோரும் ஆண்டவனின் அசரீரிக் குரல்கள் போல எனக்குள் இறங்க என்ன செய்தேன் நான்?
சகோதரி என்றேன். பலநேரம் அதற்குக் கூட சோம்பல் பட்டு சகோ என்றேன். மகனே என்றேன். மக்களே என்றேன். பலநேரம் இதற்கும் கூட சோம்பல் பட்டு மக்கா என்று சொல்லிக் கொண்டே வந்தேன். சொல்லக் கூட செய்யவில்லை எழுதிக் கொண்டு வந்தேன். எழுத்தும் நாமும் ஒன்றாக இருக்கிற போது என்ன வேண்டுமானாலும் செய்யும் போல, எழுத்து!
மக்களே, நம்புங்கள்..என்ன வேண்டுமானாலும்!
என்றாலும் மஹாவின் திருமணத்திற்கான பொருளாதார தேடலில் தன்னிறைவுடனே இருந்தேன். இந்த இரண்டு வருட சேமிப்பாக இரண்டரை லட்சம் கையில் இருந்தது. ஐந்து லட்சத்திற்கு இடத்தை விலைபேசினேன். போதாதா ஒரு ஏழைக் குடியானவனின் மகள் திருமணத்திற்கு?
"பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கட்டுமா?" என செந்தில்(நம்ம மருமகன்) வீட்டில் கேட்டேன்.. " நல்லா ஓய்...போதாதற்கு மஹா வேறு வர்றாள்ள..யே..யப்பா போதாதா?" என்று நிறைந்து போனார்கள். போதாதா ஒரு கோடீஸ்வரனின் மகள் திருமணத்திற்கு?
இவ்வளவுக்கும் மேலாக, அன்பொழுக விசாரித்தவர்களிடமெல்லாம் உதவி பெற்று திருமணம் நடத்துவது எனில் எனக்கு இன்னொரு பெண் குழந்தைதான் பிறக்கவேணும். சரி..போதும்தான்!
மஹா குழந்தையுடன் சேர்ந்து கொண்டு என் குழந்தையும் என்னை தாத்தாவென அழைத்தால் நல்லாவா இருக்கும்?
மஹா திருமணதிற்கு முன்பாகவே சரவணனுக்கு(செ. சரவணக்குமார்) சவுதி திரும்ப வேண்டிய டிக்கட் இருந்தது. "அதற்குள்ளாகவே வந்து மஹாவை பார்த்துரண்ணே" என்று சிவகங்கை வந்தார். ஒரு நாள் முழுக்க என்னுடன் இருந்தார். "அண்ணன் மகள் திருமணம் பார்க்காது பிழைப்பைப் பார்க்க போகணுமே" என்பது போல பின்னிப் பின்னிக் கொண்டு நின்றார்.
சினிமாவில் கூட காதலி பின்னும் லவ் யூ எண்ணும் கைக் குட்டை எழுத்துதானே, பிறகு லவ்வாக மலர்கிறது. சினிமாவிற்கே அவ்வளவு திமிர் இருந்தால், நிஜத்திற்கு எவ்வளவு திமிர் இருக்கும்! அதுவும் பின்னிப் பின்னிக் கொண்டு நிற்கிற ஒரு சகோதரனின் அன்பான திமிருக்கு!
அப்படி அவரின் விசா சற்று நெகிழ்த்தித் தந்தது. "போடு டிக்கட்டை..மஹா கல்யாணம் முடிச்சு" என ஆணியை நாக்கில் தொட்டு போட்டார் ஒரு ஆக்கரை. தலை கால் தெரியாமல் சும்மா ரெங்கிப் போனது பம்பரம்...சிவகங்கையில் இருந்தே சவுதி திரும்பும் டிக்கட்டை தள்ளிப் போட்டார்.
"சரிண்ணே..கவலையை விடுங்க. நண்பர்களை டேக் கேர் பண்ற வேலைய நான் பார்த்துக்கிறேன். மத்த சோலிய பாருங்க நீங்க" என ஆறுதல் ஆனார். "அட ராஸ்கல்.. நீயும் பாதி கல்யாணத்தை நடத்திப் பிட்டியேடா" என என்னை நானே கட்டிக் கொண்டேன். சற்றுக் குளிராக இருந்தான் ராஜா.
"பெங்களூரில் வேலை கிடைப்பது போல இருக்குண்ணா. அப்படி வேலை கிடைச்சுட்டா மஹா திருமணம் முன்பாக ஜாயின் பண்ணுவது போல வரலாம். ஜாயின் பண்ணிட்டா மஹா திருமணம் வர முடியாமல் போகலாம். முன்னாடியே வந்து மஹாவை பார்த்துட்டு போயிர்றேண்ணா" என்று திருமணத்திற்கு முன்பாகவே சிவகங்கை வந்தார்கள் லாவண்யா.
இந்த லாவண்யாவால் சும்மாவே இருக்க முடியாது தெரியுமா? "உங்க கவிதைகளை தொகுக்க விருப்பமா பா.ரா?" என்று முன்பு தொடங்கினார்கள். தொகுப்பு வந்தது!.. பா.ரா.வாக இருந்த போதே அவ்வளவு உரிமை கொண்டாடிய லாவண்யா, சகோதரி ஆன பிறகு சும்மா இருப்பார்களா?
"மகாவிற்கு ஒரு வரன் வருதுண்ணா. பார்க்கலாமா?" என்றார்கள். ஆஹா..ராசியான வாயல்லோ. விட்டுவிடுவானா பெண் குழந்தையின் தகப்பன்? 'பாரேன்' என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையனுக்கு வேறு இடத்தில் முடிந்து விட்டது.
"தப்பிச்சோம்டா" என்று லாவண்யா பார்த்த பையன் யோசித்து முடிப்பதற்குள் " ஆப்ட்டோம்டா" என செந்தில் சிக்கிக் கொன்டார். தொகுப்பிற்கும் சரி. மகாவிற்கும் சரி. முகூர்த்தக் கால் ஊண்டியது என்னவோ இந்த லாவண்யாதான்.
பேக்கும் கையுமாக மதுரை பஸ்ஸில் இருந்து லாவண்யா இறங்கியபோது " அட..நம்ம இந்திரா!"( என் கடைசி தங்கை) என்று தோணியது எனக்கு. நடை, உடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படியே. ஒரு சகோதரி நின்னு நிரப்ப முடியாத ஒரு இடத்தை, மற்றொரு சகோதரி வந்து, நின்னு நிரப்புகிறாள்.
கையாலாகாத சகோதரனுக்கெனவே பிறக்கிறார்கள் போல பிறக்காத சகோதரிகள். அல்லது பிறந்த சகோதரிகள்தான் பிறக்க வைக்கிறார்களோ என்னவோ பிறக்காத சகோதரிகளையும்.
"போற வழில ஒரு கடைல நிறுத்துங்கண்ணா. தேங்கா பழம் வாங்கணும்." என்ற லாவண்யாவை, வீடு வந்ததும் கை காலெல்லாம் கழுவி, விளக்கேற்றி மகாவிற்கு திருநூறு பூசித் தந்த லாவண்யாவை, "வீட்டை சுத்தமா வச்சிருக்கீங்கண்ணி" என்று தன் பின்னலை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, பின்னிக் கொண்டே லதாவை ஐஸ் வைத்த லாவண்யாவை, கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு" சாரிண்ணா..எனக்கு ரசத்தை தூக்கி குடிச்சாதான் பிடிக்கும்" என்று தட்டோடு தூக்கி குடித்த லாவண்யாம்மாவை, என் இந்தும்மாவுடன் பொருத்திப் பார்க்காவிட்டால் என்ன சகோதரன் நான்? அல்லது எனக்கெதற்கு இக் கண்கள்?
ஆச்சா? லாவண்யா வந்துட்டு போயாச்சா? சரவணன் பயணத்தை தள்ளிப் போட்டாச்சா? மற்ற நண்பர்கள் எல்லோரும் திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக சொல்லியாச்சா? சரி..அது வரையில் என்ன செய்றது மக்கா? இன்னும் இருபது நாள் இருக்கே...
ஒண்ணு செய்யலாம்.. இந்த பயணத்தில் ஒரு நெப்போலியன் வளர்க்க முயன்றேன். அதைப் பார்த்துட்டு, நேர மேரேஜ் போயிறலாம்.. சரியா?
ஓஹ். . நெப்போலியனா? சொல்றேன்...
--தொடரும்
***
புரை ஏறும் மனிதர்கள்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8 ,9 ,10,11A,11B,11C,12,13,14
Sunday, February 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
அன்பால் நிரம்பித் ததும்பும் பாத்திரம் உங்களது பா.ரா.
வாழ்க்கை எனும் நதியில் மிதக்கும் சிற்றிலையாய் உணரவைக்கிறது நீங்கள் கடந்த நாட்களை வேடிக்கை காட்டும்போது.
காத்திருக்கிறேன் பா.ரா. மேலும் ஜாலங்களுக்காக.
முழுக்க வாசிக்க முடியலை பாரா. மனது நெகிழ்கிறது. எவ்வளவு அன்பு!! நீங்கள் கொடுத்து வைத்தவர்.
சந்தோஷமாக, நெகிழ்வாக, இருக்கிறது. தொடருங்கள் அண்ணா.
மனம் தாவும் குரங்குக்குட்டி எழுத்து. அப்படி ஒரு பிடி பிடிச்சிக்குது:)
நெகிழ்வான பதிவு!
சிலவற்றை சிலர் சொல்லுவதால் அது அலங்கரிக்கப்படும்.ஆனால் நிஜமான சந்தோசங்களை கை தேர்ந்தவர் சொல்லும்போது சந்தோசம் பலமடங்காகும். இப்போ அப்படியாகிறது பாரா.
பிறந்த குழந்தையின்
விரல் பிடிப்பை
குழந்தை பெண்ணாகி
தன் குடும்பத்தை
நடத்த தயாராகையில்
நினைவு கூறும்
தந்தையின் பிடிப்பு
வலையுலகையே
தன் வலைக்குள்
வளைத்திருக்கும்
ஒரு அருமை தந்தை
பா.ரா.
அனைத்தும் பெற்றுள்ள
இத்தந்தையைத் தவிர
வேறென்ன வேணும்
இப்பொன்னான மகளுக்கு.
மனித உறவுகள்
விலை மதிப்பற்றது
பணத்தால்
வாங்க முடியாது
உங்களால் மேலும்
உயர்ந்திர்க்கு பா.ரா.
நன்றி அண்ணா, பெண்குழந்தைகள் அளிக்கும் அற்புததருணங்களை அறியத்தந்ததற்கு..
Siththappa...
Negilnthean...
UNGAL URAVU VALAIYATHTHUKKUL NANGAL ELLAM MIKKA MAKILVAAi...
வாழ்கைல எப்படி நடக்கன்னும்னு கத்து தறிங்க மாம்ஸ் எனக்கு.. நன்றி
அப்பா :)
மனம் ஏங்கும் எழுத்து...மனம் நெகிழ்கிறது..
லாவண்யா என்னும் கேரக்டர் இந்த நாடகத்தில் வந்துபோகும் ஸீன் அபாரமாக வந்திருக்கிறது. அவரை முகம் தெரியுமாதலால் தங்கை இந்திராவையும் காண முடிகிறது, ஆனால் உங்கள் பாசம்... உடன் பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் அது உங்களுக்கு மட்டுமே வரும்.
உன்னை நான் வழக்கம் போல் கூப்பிட்டதாக நினைத்துக்கொள் ராசா..இது வரை நீங்கள் எழுதியதில் இதுதான் க்ளாஸ்....
ஆச்சா? லாவண்யா வந்துட்டு போயாச்சா? சரவணன் பயணத்தை தள்ளிப் போட்டாச்சா? மற்ற நண்பர்கள் எல்லோரும் திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக சொல்லியாச்சா?
.....அன்பு கடலில் நீங்களும் மூழ்கி, எங்களையும் மூழ்க வைத்து விட்டீர்கள். நெகிழ வைக்கும் பதிவுங்க.
லாவண்யா(இந்திரா) வந்து போனதை எழுதிய போது அண்ணா பொண்ணு கல்யாணமென்று அதிகம் குடிச்சி அமக்களம் பண்ணாம சமத்தா இருக்கனும் என்று சொன்னேன்ல அதை மட்டும் ஏன் செய்யாம வீட்டீங்க?
அண்ணா இப்படி சுனைநீர் போல மெல்ல பொங்கி பொங்கி எழுதி இருக்கீங்க ஆனா இவ்வளவு எழுதும் அளவு அதிகமொன்றும் செய்யலை எப்பது தானே உண்மை.
என்னாது நெப்போலியனா அது பன்னி குட்டி பிராண்ட் ஆச்சே....
கருவேல மரம்
பூக்கக் கண்டேன்
அதன் அழகாய் சொல்ல வார்த்தை இல்லை
அருகில் செல்ல வாய்க்கவில்லை,
நிழல் கண்டு நிஜம் உணர்கிறேன்..
நன்றி மக்கா.
இதை வெறும் எழுத்தாய் வாசிக்க முடியவில்லை
அந்த அன்பு கதகதப்பிற்குள் ஆழ்ந்து போகவே மனம் விழைகிரது
:)))
சிவகங்கை ஏழுகடையில் உங்களோடு இருந்த பொன்னான தருணம் கோல்டன் ஜுஸ் கார்னரின் ஏக்கங்களிலிருந்து விடுபட்ட ஒரு நிம்மதி பெருமூச்சை அளித்தது. இப்படி ஒரு சந்திப்பு சந்தோஷம் ஊரில் உங்களோடு...
வாழ்க்கை முழுதும் நினைவில் இருத்திவைக்க ஒரு சந்திப்பு.
உங்கள் எழுத்துக்களில் இதை வாசிக்கத்தான் இது நேர்ந்ததோ என்றும் தோன்றுகிறது.
மணிஜீ, வினோ, லாவண்யா... ஒப்பிட்டால் நான் ஒன்றுமேயில்லை. ஆயினும் உங்கள் சகோதரனானேன்.
நான் பாக்கியவான்.
இத்தளத்தில் அன்பு பாராட்டும் பதிவு எப்போது படித்தாலும் மிகுந்த வியப்பளிக்கிறது...
உண்மைதானோ என்றும் தோன்றும்.... அவ்வளவு ஆட்சரியம் தருகிறது....
Too good to know, much blessed :)
அழகு... :)
சொல்லில் சொல்ல முடியாத சந்தோசம். இந்த பா. ரா. என் தம்பி
வெதுவெதுன்னு விடியகாலையில ஓடுற ஆறு மாதிரி மனசு நெறஞ்சி ஓடுது!
:)
மிக அருமையாக இருந்தது பாரா
ஒவ்வொரு வரியும் அதன் இழையில் நீங்கள் சேர்க்கும் பகட்டும் அந்த பகட்டில் ஒரு விளிம்பில் ஜரிகையாய் வார்த்தை அலங்காரமும் எல்லாம் சேர்ந்து உங்கள் பாச நேசமும் அனுபவமும் மிக அருமை பாரா
முடிந்தால் எங்கள் பதிவுகளையும் கொஞ்சம் எட்டி பாருங்களேன் , தங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு ஊக்கமாக நல்ல படைப்பு தர ஆக்கமாக இருக்கும்
நன்றி பாரா
ஜேகே
உங்க கண்களால் இந்த உலகும் மனிதர்களும் ரொம்ப அம்சமாத் தெரியிறாங்க அண்ணா எங்களுக்கு!
எக்கச்சக்கமா புரை ஏறிப்போச்சு பாரா..
குற்றஉணர்வு..சுட்டுப் பொசுக்குதடா!தனியே..மெயில்
அனுப்புகிறேன்..
வழக்கம் போல. மிக நெகிழ்ச்சி!
:) வார்த்தைகளே இல்லை
பா ரா அண்ணா சிலருக்கு மட்டுமே எல்லோருடைய அன்பையும் பெற பிராப்தம் உண்டு அந்த வெகு சிலரில் நீங்களும் ஒருவர் ::)))))
வாழ்த்துக்கள்
எத்தனை அழகா கொண்டு போறீங்க கிளாஸ் ::)))
ரொம்ப நன்றி சுந்தர்ஜி!
மோகன் மக்கா, மிக்க நன்றி!
நன்றிடா அம்பிகா!
நன்றி பாலாண்ணா! :-)
ஸ்ரீஅகிலா, மிக்க நன்றி!
நன்றி காமு மக்கா!
ரொம்ப நன்றி சேது! :-)
சந்தோசம்டா சாரல்! நன்றியும்!
ஓகே மகன்ஸ்! நன்றி குமார்!
இரா மாப்சு, நானும் கத்துக்கிட்டுதான் இருக்கேன் ஓய். கற்றுக் கொண்டே இருப்போம். சரியா? நன்றி மாப்ஸ்!
தம்பு வினோ! நன்றிடா!
நன்றி நந்தா ஆண்டாள்மகன்!
ரொம்ப நன்றியும் சந்தோசமும் அண்ணே!
ஆகட்டும் மணிஜி. நன்றி மக்கா!
நன்றி சித்ரா!
லாவன்ஸ், சமர்த்தாதான் குடிச்சேன். சத்தம் பறியலையே. நன்றிடா! :-)
அவருக்குமா? :-)நன்றி மனோ!
சங்கர், ரொம்ப நன்றி மக்கா!
நன்றி கதிர்!
நன்றி மாப்ள, ஆண்ரூனா!
எனதன்பு சரவணா, மிக நெகிழ்ந்து போனேன். நன்றி தம்பி!
கீதா, நலமா? சந்தோசம். நன்றியும்!
நன்றி சுகிர்தா!
மஹிக்கா, நல்லாருக்கீங்களா? ரொம்ப சந்தோசம்க்கா! நன்றியும்!
ராஜாராமா, நன்றி! :-)
மகன் அசோக், நன்றி!
ஜே.கே, நலமா? அவசியம் வர்றேன். நன்றியும்!
நன்றிடா நிலாமகள்! :-)
தேனும் மக்கா, நன்றியும் அன்பும்!
அட..ஏன் சித்தப்பா? பேசுவோம் சித்தப்பா. நன்றி சித்தப்பாமக்கா! :-)
சீதா குட்டிப் பையா, நன்றி! :-)
நன்றி வித்யா!
ஆகட்டும்டா சக்திப் பயலே! நன்றியும்!
Post a Comment